நாடகத் தமிழ்/தமிழ் நாடகமாடுபவர்களும் நாடகக் கூட்டங்களும்

தமிழ் நாடகமாடுபவர்களும் நாடகக் கூட்டங்களும்

இனி தமிழ்நாடகம் ஆடினவர்களையும், நாடகங் கூட்டங்களையும் பற்றி சிறிது ஆராய்வோம். சிலப்பதிகார காலத்தில் மாதவியைப் பற்றிக் கூறுமிடத்து "நாடகக் கணிகை" எனக் கூறப்பட்டிருக்கிறதை முன்பே குறித்திருக்கிறோம். அக்காலத்தில் நிருத்தம், நாட்யம், நாடகம் எல்லாம் கூத்தின் வகையாகக் கருதப்படடிருந்தது கவனிக்கற்பாலது. இவள் பாரதியாகவும், கிருஷ்ணனாகவும், முருகனாகவும் காமனாகவும், துர்க்கையாகவும், அயிராணியாகவும், அவரவர் அணியுடன், அவரவர் கொள்கையின், நிலையும் படிதமும் நீங்காமரபில், ஆடினதாக அறிகிறோம், அன்றியும் கொடுகொட்டிக் கூத்தை, கூத்தச் சாக்கையனாடியதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இதன்பிறகு சுமார் தொள்ளாயிரம் வருஷங்களுக்குமுன் திருவாளன் விஜயராஜேந்திர ஆசாரியன் ராஜராஜேஸ்வர நாடகம் என்பதைத் தஞ்சாவூரில் நடத்தியதாக முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். இவனைப்பற்றிய கல்வெட்டுகள் முன்பே வரைந்திருக்கிறேன்; இக்கல்வெட்டுகளினால் நாம் இவனைக் குறித்த பல விஷயங்கள் அறிய இடமுண்டு; முதலில் இவனது பெயர் திருவாளன் திரு முதுகுன்றனை விஜயராஜேந்திர ஆசாரியன் என்றிருக்கிறது. தற்காலத்தில் பிராம்மணர் அல்லாதார் தங்கள் பெயரின் முன் திருவாளன் என்று எழுதிக்கொள்ளுகிற வழக்கம் நூதனமன்று போலும். இரண்டாவது இவனது ஊர் முதுகுன்றமாம். முதுகுன்றம் என்பது விருத்தாசலம் எனும் ஊராகும். மூன்றாவது இவன் பெயர் விஜய ராஜேந்திரன் என்றிருப்பதால், அக்காலத்திய பிரபலமான சோழ அரசர்களுடைய பெயரைக் குடிகளும் வைத்துக்கொள்வது வழக்கமென அறிகிறோம். ஆசாரியன் என்று இவன் பெயருடன் எழுதியிருப்பதால் நாடகக் கலையைப் பிறருக்கும் கற்பிப்பவன் என்கிற பொருள் விசிதமாகிறது. பிறகு இவன் பிராம்மணனல்லவென்று ஊகிக்கவும் இடங்கொடுக்கிறது, இவனுக்கும் இவன் வர்த்தகத்தார்க்கும் என்று கூறி இருப்பதினால், இவன் ஒரு நாடகக் கூட்டத் தலைவனாக இருந்திருக்கவேண்டுமென்று. புலப்படுகிறது, அன்றியும் மேற்சொன்ன நாடகம் வருஷத்திற்கொருமுறையே ஆடினபோதிலும் அதற்காக தினம் ஒரு துணி நெல் பெற்றதாகத் தெரிகிறது, இதனால் அக்காலத்தில், ஆடல் பாடல் முதலியவைகளை பயின்றவர் கள் மற்ற நாட்களில் உணவிற்கு கஷ்டப்படாதபடி, தினம் ஊதியம் பெற்றனரென்பதும் வெளியாகிறது, ஆயினும் இவ்வூதியமானது பெரிதல்ல என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும். நாடகமாடுவது மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டிருந்தால் இத்தனை கழஞ்சு பொன் என்று கொடுக்கப்பட்டிருப்பான். அதைவிட்டு தினம் தனக்கும் தன் வர்த்தகத்தார்க்கும் ஒரு தூணி நெல் பெற்றதினால் அக்காலத்தில் நாடகமாடுதல் அதிக மேம்பட்டதாகக் கருதப்படவில்லையென்று நாம் அனுமானிக்க இடம் கொடுக்கின்றது. இவனை சாந்திக் கூத்தனென்று அழைத்திருப்பதைப்பற்றி கவனித்துள்ளேன்.

பின்பு ஸ்ரீவல்லிஸ்வரத்தில் உய்யவந்தாள் அழகிய யசோதை என்னும் தாசியானவள் நாடகமாடியதாக அறிந்திருக்கிறோம்,

இதற்குப்பின், கடந்த நூற்றாண்டிற்குள் இருந்த நாடகங்களைப் பற்றியும் நாடகக் கூட்டங்களைப் பற்றியும் தான் கருதல் வேண்டும். இதற்கு இடையில் நடர்களும் நாடகக்கூட்டக் குழுக்களும் இல்லாமற் போகவில்லை, ஆங்காங்கு இருந்திருக்க வேண்டுமென்பது திண்ணம்; ஆயினும் மேற்கூறியபடி நாடகம் ஆடுதல் மிகவும் கீழ்ப்பட்ட ஸ்திதிக்கு வந்தபடியால், அந்த நாடகங்களை ஆடுபவர்கள் மதிக்கப்படாது அவர்களது பெயர் முன்னுக்கு வரக் காரணமில்லா மற்போயிற்றெனவே கருதவேண்டும், இவ்வாறு மிகவும் இழிந்த ஸ்திதிக்கு வந்தமையால் தமிழ்நாட்டில் நாடகமாடுபவர்களுக்குத் 'தெருக்கூத்தாடிகள்'; என்கிற பெயரே வந்துவிட்டது. இவர்கள் ஆடுவதற்கு ரங்கம் என்பதே கிடையாது. நடுத்தெருவில் அல்லது கோயில்களைச் சார்ந்த வெளி நிலங்களில் அல்லது களத்துமேடுகளில், இவர்கள் நாடகமாடுவது வழக்கமாயிற்று; இத்தெருக்கூத்தாடிகள் ஆடும் நாடகங்கள் மத சம்பந்தமான கதைகளாகத்தான் பெரும்பாலும் இருக்கும். இரணியவிலாசம், மார்க்கண்டேய நாடகம், ராம நாடகம், பாரதவிலாசம் முதலியன இவர்கள் சாதாரணமாய் ஆடுவார்கள்.

இத்தெருக்கூத்தானது அநேக நூற்றாண்டுகளாக நமது கிராமாந்திரங்களில் ஆடப்பட்டு வருகின்றது என்பதற்குச் சந்தேக மின்று; ஆயினும் தற்காலத்திய நாகரீகமானது கிராமங்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ, இத்தெருக்கூத்துகளிலுள்ள பழைய வழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன, அன்றியும் இன்னும் சில வருடங்களுக்குள் இவை முற்றிலும் அற்றுப்போகும் என்பதற்கு ஐயமில்லை. இதல்லாமல் பட்டண வாசிகளில் அநேகர் இத்தெருக்கூத்துக்களைப் பார்த்திருக்கமாட்டார்கள். இத்தகைய காரணங்களால் நமது தமிழ் நாட்டில் அநேக வருடங்களுக்குமுன் ஓர் கிராமத்தில் நடந்த தெருக்கூத்து ஒன்றின் விவரங்களை எடுத்துரைக்கின்றேன்.


இரவு ஒன்பது மணிக்கு இன்ன கூத்து இன்ன இடத்தில் நடக்கப்போகிறதென கிராம வெட்டியான் காலையிலே தமுக்கடித்துக் கொண்டு போனான். கிராம வீதிகளிலெல்லாம் சாயங்காலம் இருட்டுமுன் நாடகம் நடக்கும் இடத்தைச்சுற்றி கிராமத்திற்குரிய பட்சணக்கடைகள் ஏற்படுத்தப்பட்டன; இருட்டியவுடன் ஜனங்கள் ஒவ்வொருவராக வந்துசேர்ந்தனர். எல்லோரும் அவரவர்கள் அந்தஸ்துக்குக் தக்கபடி உட்கார்ந்தனர். கொஞ்சம் பணக்காரராயிருப்பவர்கள் பாய் தலையணை கொண்டுவந்து பாயைப்பரப்பி அதன் மீது உட்கார்ந்துகொண்டனர். கூத்து நடக்க ஏற்பட்ட இடம் நான் தங்கியிருந்த பெரிய மனிதருடைய வீட்டிற்கு அருகாமையிலிருந்தபடியால், நான் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன். இதற்குள்ளாக ஒரு பக்கமாக இருந்த பாழடைந்த சுவற்றிற்குப்பின் நாடகமாடுபவர்கள் வந்து சேர்ந்து வேஷம் கட்டிக்கொண்டிருந்தார்கள். நாம் சாதாரணமாக வேஷதாரிகள் வேஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள் என்று சொல்லுவோம்; கிராமங்களில் வேஷம் கட்டுதல் என்றுதான் உபயோகிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் வேஷதாரிகள் தரிக்கும் வேஷத்தைப் பற்றி பிறகு நான் கூறுவதைப் படிப்பின் தெரியும். பிறகு ஒன்பது மணியாகிவிட்டதென்று நான் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரும் என்னைக் கூத்துப்பார்க்க வரவழைத்தவருமான எனது நண்பரை, கூத்துபார்க்கவேண்டுமென வற்புறுத்தினேன். அவர் என்ன சொல்லியும் கேளாமல், அவரையும் அழைத்துக்கொண்டு ஒன்பது மணிக்கெல்லாம் சரியாக எங்களுக்கென்று ஓரிடத்தில் போட்டிருந்த நாற்காலிகளில் போய் உட்கார்த்தோம். அரை மணி யாச்சுது ஒருமணியாச்சுது, இரண்டுமணி ஆச்சுது! கூத்து ஆரம்பத்தையே காணோம் என்ன சமாசாரம் என்று மெல்ல என் நண்பரை வினவ அவர் 'ஒன்பது மணியென்றால் பத்து பதினொரு மணிக்குத்தான் ஆரம்பம் செய்வார்கள். நான் இதற்காகத்தான் பொறுத்துப் போகலாமென்று சொன்னேன்' என்றார், அன்றியும் கிராமவாசிகளான எல்லா பெரிய மனிதர்களும் வந்து சேர்ந்த பின் தான் ஆரம்பிப்பார்கள் என்று சொன்னார். அப்படியே பெரிய மனிதர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்த்பிறகு 11 மணிக்கு கூத்து ஆரம்பமானது. கூத்து பார்க்க வந்த கும்பலுக்குக் குறைவில்லை; ஏனெனில் டிக்கட்டென்பதே யில்லை! பார்க்க விரும்புகிறவர்களெல்லாம் வந்து பார்க்கக்கூடும்! முதலில் இரண்டு வண்ணார்கள் தீப்பந்தங்களைக் கையில் பிடித்துக்கொண்டுவந்து நின்றார்கள். இவர்கள் கிராம வண்ணார்களாம். தீப்பந்தம் நாடகம் நடக்கும்பொழுதெல்லாம் பிடிக்க வேண்டிய மிராசு இவர்களுடையதாம். இதற்காகக் கிராமப் பொதுவிலிருந்து இத்தனைபடி நெல் என்று கூலியாம். தங்களிடத்திலிருக்கும் கிழிந்த பழந் துணிகளேக்கொண்டு இவர்கள் தீப்பந்தங்கள் செய்துகொள்ளவேண்டுமாம். பிறகு இரண்டு பெயர் ஒரு வெள்ளைத்துணியைக் குறுக்காக எங்கள் எதிரில் பிடித்துக்கொண்டார்கள், அதன்பின் கூத்தாடிகள் வந்து தின்றுகொண்டு இரண்டு மூன்று நிமிஷ நேரம் தாளங்களைத் தட்டி பிறகு பாட ஆரம்பித்தார்கள், பாட்டு ஒரே கூச்சலாயிருந்தது. ஆயினும் ஆங்காங்கு கேட்ட சில பதங்களைக்கொண்டு விநாயகர் தேசத்திரம், சரஸ்வதி தோத்திரம் என்று அறிந்துகொண்டேன். பிறகு திடீரென்று இதுவரையில் பாட்டுக்குமேல் கூச்சல் போட்டுக்கொண்டிருந்த ஜனக்கூட்டம் சந்தடியற்றதாய்விட்டது, நான் மெல்ல என் பக்கலில் உட்கார்ந்து கொண்டிருந்த எனது நண்பரை என்ன காரணம் என்று கேட்க, இனிமேல்தான் கூத்து ஆரம்பம், கட்டியக்காரன் வரப்போகிறான் என்றார், உடனே குறுக்காகப் பிடிக்கப்பட்டிருந்த திரையின்யின் இருந்து 'கட்டியக்காரன் இதோவந்தான்' என்கிற பல்லவியைப் பாடிவிட்டு, திரையை நீக்கிக் கொண்டு கட்டியக்காரன் வேஷம் பூண்டவன், கையில் பிரம்பொன்றைப் பிடித்துக்கொண்டு தான் பாடும் பாட்டிற்கேற்றபடி அபிநயம் பிடித்து சுற்றி சுற்றி ஆட ஆரம்பித்தான். பிறகு தொப்பைக் கூத்தாடி இம்மாதிரியாகவே வந்து ஆடினான். இவர்களிருவருடைய பேச்சினால் பவழக்கொடி நாடகம் நடக்கப்போகிறதென நாங்கள் அறிந்தோம், அர்ஜூனன் வேடம் பூண்ட முக்கிய வேஷதாரி வந்தான். இவன் தான் இன்னானெனக்கூறி ஆடிவரும்பொழுது பக்கத்திலிருந்த வண்ணார்களும் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு இவனோடு சுற்றிவந்தனர். இவன் வருவதற்குமுன், திரைக்குப் பின் இருந்து ஒருவன் இவன் வருவதை அடியில் வருமாறு சபையோர்க்குத் தெரிவித்தான். "அகோதெப்படியென்றால்-ராஜாதி ராஜன்-ராஜசேகரன்-ராஜமார்த்தாண்டன்-அர்ஜூன ராஜன் வருகிறவிதம் காண்க, இவன் ஒவ்வொரு பிருதாகக் கூறும்பொழுதெல்லாம் கூட்டமாய் நின்ற மற்ற நடர்கள் ஹோ!-ஹோ! என்று குரலுக்குத் தக்கபடி கூச்சலிட்டார்கள். 'அர்ஜுனன் இதே வந்தான் ராஜாதிராஜன் அர்ஜூனன் இதே வந்தான்'; என்னும் பல்லவியாக, அர்ஜூனன் வேஷம் பூண்டவனே ஆடி அபிநயம் பிடித்தான். இங்வாறே ஸ்ரீகிருஷ்ணன், சுபத்திரை, அல்லி, பவழக் கொடி முதலிய முக்கியமான பாத்திரங்கள் வரும்பொழுதெல்லாம். தாங்கள் இன்னாரெனச்சொல்வி தாங்களே அபிநயம்பிடித்து ஆடி விட்டுத்தான் மறுவேலை பார்த்தார்கள். இப்படிச் செய்வதற்கு முக்கிய காரணம், அக்காலத்தில் நாடகக் கதையானது அச்சிடப்படாததாலும், வேஷத்தை மத்திரம் பார்த்து இன்ன நாடக பாத்திரம் என்று அறிவது கடினமாயிருந்ததாலும் போலும், இவ்வழக்கம் தொன்றுதொட்டு வந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. இந்த வேஷதாரிகளின் உடையைப்பற்றி நாம் அறிவது அவசியம், அர்ஜூனன், ஸ்ரீகிருஷ்ணன், தர்மராஜன், முதலிய ஆண் வேடம் தரித்தவர்கள் காலுக்கு ஜல்லடம் போன்ற உடையை உள்ளே கட்டி, அதற்குமேல் ஸ்திரீகள் அணியும் பாவாடை போன்றதைக் கட்டியிருந்தனர்; அவர்கள் சுத்றி வரும்பொழுது இதுவும் வட்டமாய்ச் சுழலும். புஜகீர்த்தி, கிரீடம், மார்பில் பதக்கம் முதலியன அணிந்திருந்தனர். இவைகளை மரத்தால் செய்து கண்ணாடிக் கற்கள் புதைக்கப்பட்டிருந்தன, இவை தஞ்சாவூரில்தான் இரண்டொருவரால் செய்யப்பட்டு வருகின்றன. ஸ்திரீ வேடம் தரித்த சுபத்திரை, அல்லி. பவழக்கொடி முதலியோர் ஸ்திரீகளைப்போல் புடவை அணிந்து, ஆபரணங்கள் மாத்திரம் மேற்கூறிய மரத்தில் கண்ணாடிகள் புதைத்த அணிகள்தான் அணிந்திருந்தனர். இவ்வேடம் தரித்தவர்களும் ஆண் மக்களாயிருந்தபடியால் தலைக்கு பெண்களைப்போல கேசம் தரிப்பதற்காக, தலையின்மீது கறுப்புத்துணியை இருக்கக்கட்டி, மரத்தாலாகிய முன்கூறிய தலை சாமான், ஜடை நாகம், சூரியப்பிரபை, சந்திரப் பிரபை முதலிய அணிகளை அணிந்திருந்தனர். கட்டியக்காரன் முதல் எல்லா நாடக பாத்திரங்களும் காலில் சலங்கை இல்லாதவர் கிடையாது, கூத்தாடுவதற்கு சலங்கை இன்றியமையாதாகக் கருதப்பட்டதுபோலும். பிறகு நாடகமானது சுமார் மூன்று மணிவரையில் நடந்தது. அப்பொழுதும் பாதிக்கதை முடியவில்லை. (கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கிற படியால் அதை நான் கூறவேண்டியது அவசியமில்லே.) நாடகம் முடியப் பொழுதுவிடியும் என்று எனது நண்பர் கூற, அதுவரையில் கேட்க வேண்டுமென்கிற ஊக்கமிருந்தும் , தூக்கத்தை தவிர்ப்பது கடினமென நான் வந்துவிட்டேன். மொத்தத்தில் தொப்பைக் கூத்தாடியின் அகஸ்யங்கள் கொஞ்சம் ஆபாசமாக இருந்தபோதி லும் நாடகமானது மனதிற்குக் கொஞ்சம் திருப்தியைக் கொடுத்ததென்றே நான் கூறவேண்டும். அர்ஜூனன் வேடம் பூண்டவனும் சுபத்திரை வேடம் பூண்டவனும் நன்றாகத்தான் பாடினார்கள். இத்தெருக்கூத்தின் பாட்டில் முக்கியமான விசேடம் என்னவென்றால் பின்பாட்டு என்பதாம். அதாவது ஒவ்வொரு வேஷதாரியும் ஒவ்வொரு அடியாகப் பாடுவான்; அது முடிந்ததும் அதே அடியை பின்புறம் நிற்கும் மற்ற வேஷதாரிகள் கும்பலாய் அதே மாதிரியாகப் பாடுவார்கள். இவ்வழக்கம் மிகவும் புராதனமானதென்பதற்குச் சந்தேகமில்லை. சிலப்பதிகாரக் காலத்திலும் தமிழ்நாடகங்களில் இது உண்டென்பதற்கு ஐயமில்லை. சுமார் இரண்டாயிரம் வருஷமாக நமது தமிழ்நாட்டிலிருந்த இவ் வழக்கம் இப்பொழுதுதான் கொஞ்சம் மாறத் தலைப்பட்டதெனக் கூறவேண்டும். இன்னும் நாடகமாடுவதையே தமது ஜீவனதாரமாகவுடைய நாடகக் கூட்டங்களுக்குள் (Professional Companies) இந்த வழக்கம் பெரும்பாலும் இருப்பதைக் காணலாம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் பாடும் வேஷதாரிக்கு சிரமத்தைக் குறைக்க வேண்டியிருக்கலாம்: பாட்டில் ஒவ்வொரு அடியாகப் பாடி நிறுத்தி மற்றவர்கள் அதே அடியை பாடுவதானால், முதலில் பாடுபவனுக்கு அவ்வப்பொழுது சிரமப்பரிகாரமாகும். இல்லாவிடின் தனியாக ஒரு இரவு முழுவதும் பாடுவதென்றால் பெருங்கஸ்டமே.

மறுநாள் காலை 8-மணிக்கு இரவில் வேஷம் தரித்தவர்களெல்லாம் அந்தந்த வேஷங்களுடன் நான் இறங்கியிருந்த வீட்டிற்கு வந்தார்கள். என்ன காரணம் என்று எனது நண்பரை வினவ; காலை நாடகம் முடிந்தவுடன், வேஷதாரிகள் கிராமத்தில் வீடுவீடாகபோய் நெல் பணம் முதலியன யாசகமெடுப்பது வழக்கமெனத் தெரிவித்தார்! ஓர் இரவு நாடகம் ஆடுவதற்கு அவர்களுக்கு கிராமப்பொதுவிலிருந்து தற்காலம் கொடுப்பது இரண்டு வராகன் அல்லது ஏழு ரூபாயாம்! அது போதாமையால், அவர்கள் வீடுகள் தோறும் யாசகம் செய்வது அவசியமாகிறதெனத் தெரிவித்தார். இதனில் தமிழ்க் கூத்துகளும் அதில் வேஷம் தரிப்பவர்களும் என்ன கீழ்ப்பட்ட ஸ்திதியிலிருக்கின்றனர் வென்பது புலப்படும். அநேகம் நூற்றாண்டுகளாக இப்படித்தானிருக்க வேண்டுமென்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இப்படியிருக்க நாடகத் தமிழ் அழிந்ததற்கும், பெரிய புலவர்கள் தமிழில் நாடகங்கள் எழுதாமைக்கும், வேறு காரணம் நாம் தேடவேண்டியதில்லை எனத் தோற்றுகிறதெனக்கு. வீட்டின் வாசலில் வந்து நின்ற வேஷதாரிகளுக்கு என் சத்தியானுசாரம் கொஞ்சம் பணம் கொடுத்து, அவர்களை என் அருகில் வரவழைத்து விசாரித்தேன். தங்களுக்கெல்லாம் பாட்டும் அபிநயமும் கற்பித்த ஒரு உபாத்தியாயர் இருந்ததாகவும் அவர் சில வருஷங்களுக்கு முன்பு தான் காலமாய் விட்டதாகவும் தெரிவித்தார்கள்; அன்றியும் அவர்கள் பாடிய பாட்டுகள் மாத்திரம் ஓலைச் சுவடியில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆங்காங்கு பாட்டுகளின் மத்தியில் அவர்கள் பேசிய வசனங்களெல்லாம் தாங்களாகக் கதையைத் தழுவிச் சேர்த்துக்கொண்டதாம். இதனால் பழைய தமிழ் நாடகங்களில் பெரும்பாலும் பாட்டுகள் மாத்திரம் இருப்பதின் காரணமும், வசன நடையானது ஏகதேசமாயிருப்பதின் காரணமும் தெரிந்து கொள்ளலானேன். இக்கூத்தாடுவதானது தங்கள் இரண்டு மூன்று குடும்பங்களில் பரம்பரையாக வருகிறதாகச் சொன்னார்கள். கூத்தாடும் காலம் தவிர, மற்ற காலங்களில் ஒவ்வொருவனும், பயிர்த்தொழில் முதலிய தொழிலைச் செய்வதாகத் தெரிவித்தார்கள். இவர்களை அருகிற்பார்க்கும் பொழுது, வேஷதாரிகளெல்லாம் முகத்திற்கு மாத்திரம் வர்ணம் பூசியிருந்தார்கள். இராத்திரி அவர்களை தூரத்திலிருந்து பார்த்தபடியால் அது அவ்வளவாகத் தெரியாமற் போயிற்று. என்ன வர்ணங்கள் உபயோகிக்கிறீர்கள் என்று வினவியதற்கு, சாதாரணமாக அரிதாரமும் செந்தூரமும், கறுப்புப்பொடியுந் தான் என்று தெரிவித்தார்கள். அரிதாரம் முகத்திற்கு மஞ்சள் வர்ணம் கொடுப்பதற்கு, கரிப்பொடியை அரைத்து, புருவத்திற்கு கறுப்பு தீட்டுவதற்கும் உபயோகிப்பதாகக் கூறினார்கள். இவர்கள் உபயோகிக்கும் அரிதாரமும் செந்தூரமும் பண்டைக்காலம் தொட்டு கூத்தாடுபவர்கள் உபயோகித்து வந்ததாகப் பழைய நூல்களிலிருந்து நாம் அறிகிறோம். அவர்கள் முகத்தில் திட்டிய வர்ணங்கள் பகலில் பார்ப்பதற்க்கு அருவருப்பாயிருந்தபோதிலும், இரவில் சுமாராகத் தானிருந்தது. அரிதாரமும் செந்தூரமும் பழைய காலம் தொட்டு வேஷதாரிகளால் உபயோகப்பட்டு வருவதற்கு சிலப்பதிகார உரையே போதுமான அத்தாட்சியாம் வேஷம் தரிப்பதில் பட்டன வாசிகளாகிய நாடகக்காரர்கள் அதிகமாய் விருத்தியடைந்திருந்தபோதிலும், ஒரு விஷயத்தில் மாத்திரம் இந்தத் தெருக்கூத்தாடிகள் மேம்பட்டிருந்தனர். அதாவது மீசை தாடி முதலியவற்றை ஒட்டும் விதத்தில்; தற்காலம் நாகரீகமடைந்துள்ள வேஷதாரிகள், ஸ்பிரிட்கம், (spirit gum) என்னும் பிசினை இதற்காக உபயோகிக்கிறார்கள், இத்தெருக்கூத்தாடிகள் இதற்காக உபயோகிப்பது அத்திப்பாலாம், இந்த அத்திப்பாலினால் மீசை முதலியன ஒட்டிவிட்டால், அந்த இடத்தைவிட்டு அகலாது, எவ்வளவு அருகிலிருந்து பார்த்தபோதிலும் சுயமாகவே வளர்ந்ததுபோல் தோன்றுமேயன்றி ஒட்டியதாகத் தெரியவே தெரியாது. இத்தெருக் கூத்தாடிகள் கல்வியறிவில்லாதவர்களாயிருந்தும் இவர்களில் சிலர் நாடகம் ஆடுவதில் முதிர்ச்சியடைந்தவர்களாயிருந்தார்கள், தெருக்கூத்துகளைக் குறித்துப் பேசுமிடத்து இரண்டு விஷயங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன, ஒன்று நான் நேரிற் கண்டது. மற்றொன்று நான் விசாரித்து உண்மையென அறிந்தது, ஒரு கிராமத்தில் மார்க்கண்டேயர் நாடகம் ஆடும்பொழுது யமன் வேஷம் பூண்டவன், தக்கபடி வேஷம் தரித்து, ஒரு எருமைக் காடாவின் மீது ஏறிக்கொண்டு, தப்பட்டைகள் முதலிய கோஷிக்க, தீவட்டிகள் இருபுறமும் பிடிக்க, நடுநிசியில் கிராமப் பிரதட்சிணம் செய்து கொண்டு பிறகு, கூத்தாடுமிடம் வந்து சேர்ந்தான். கருக்கிருட்டு தினத்தில் இதைக் காணும்பொழுது வாஸ்தவத்தில் எனக்கே கொஞ்சம் பீதியைக் கொடுத்தது. பிறகு விசாரிக்குமளவில் அநேக இடங்களில் மார்க்கண்டேயர் நாடகம் தெருக்கூத்தாடிகள் ஆடும்பொழுது இவ்வழக்கம் சாதாரணமாக உண்டெனவறிந்தேன். இத்தெருக்கூத்துகளைப்பற்றி விசாரித்துக்கொண்டு சில கிராமங்களுக்கு நான் செல்லுகையில் ஒர் ஊரில் வருஷ வருஷம் இரணிய விலாசம் நடப்பதாயும், சில வருஷங்களுக்குமுன் ஒரு சமயம் நரசிம்ம மூர்த்தி வேஷம் பூண்டவன் வாஸ்தவமாய்க் கொல்லத் துரத்திக்கொண்டு போனதாயும், பிறகு ஹிரணிய வேஷதாரியை ஓர் கிணற்றுக்குள் ஒளித்துவைத்து நரசிம்ம வேஷதாரியை சாத்தப்படுத்தினதாயும் கேள்விப்பட்டேன்; அவ்வூரிலுள்ள இரண்டு மூன்று பெரிய மனிதர்கள் இது வாஸ்தவம்தான் நாங்கள் நேரே பார்த்தோம் என்று கூறி, அக்கிணற்றையும் எனக்குக் காண்பித்தார்கள்; அவர்கள் என்னிடம் பொய்யுரைக்க ஏதும் காரணமில்லை. கோபாவேசத்தினாலோ அல்லது வேறு எக்காரணத்தினாலோ இப்படி நடந்திருக்கலாமென நான் நம்புகிறேன். தன் மெய்மறந்து ஒரு வேஷதசரி, ஆடுவானானால் அவன் இன்னது செய்வான் செய்யமாட்டான் என்று கூறலாகாது. தெருக்கூத்துகளைப்பற்றிப் பேசுமிடத்து சில கிராமங்களில் பிராம்மணர்கள் இக்கூத்தாடுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. தஞ்சாவூர் ஜில்லாவில் சூலமங்கலம் என்னும் ஒரு கிராமத்தில் விஷ்ணு ஆலயத்தில் வசந்தோற்சவ சமயத்தில் அக் கிராமவாசிகளாகிய சில பிராம்மணர்கள் மூன்று நாடகங்கள் பல வருஷங்களாக நடத்திவருகின்றனர். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் என்பவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொரு ஆடவனும் ஏதாவது வேஷம் இம்மூன்று நாடகங்களில் ஒன்றிலாவது போடவேண்டியது சம்பிரதாயமாம். இவர்கள் மார்க்கண்டேய நாடகத்தை நடத்தியதை நான் போய்ப் பார்த்திருக்கிறேன். இவ்வழக்கம் பரம்பரையாக அநேக வருஷமாக இக்குடும்பத்தில் நடந்துவருகிற வழக்கமெனக் கேள்விப்பட்டேன். சாதாரண தெருக்கூத்துகளைவிட இவர்கள் நாகரீகமாக நடத்தினர்.

நமது தேசத்தில் புராதனமான வழக்கங்கள் இன்னும் மாறாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக வருகின்றனவென்பதை யோசிக்கும் இடத்து முற்காலத்திலும் தமிழ் நாடகங்கள் ஏறக்குறைய இம்மாதிரியாகத்தான் நடந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கக்கூடுமெனத் தோன்றுகிறது,

இதன்பேரில் நாடகக்கொட்டகை ஒன்றை ஏற்படுத்தி, நாடக மேடையை நிர்மாணம் செய்து, அதில் காட்சிக்குக் காட்சி மாறும்படியான திரைகளைக்கட்டி தற்காலத்தில் வழங்கும்படியான முறையில் தமிழ் நாடகங்களை முதல்முதல் நடத்தியவர் காலஞ்சென்ற கோவிந்தசாமிராவ் என்பவர். இவர் தஞ்சாவூரைச் சார்ந்த ஓர் மஹாராஷ்டிரர், கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர். அப்படியிருக்கையில் பூனா நகரத்திலிருந்து "சாங்கிலி நாடகக் கம்பெனியார்” என்று ஒரு மகாராஷ்டிர நாடகக் கூட்டத்தார் தஞ்சாவூர் முதலிய இடங்களுக்குப் போய் சிலநாடகங்கள் நடத்தினார்கள். இதைப் பார்த்து நாடகமாடுவதில் உற்சாகம் பிறந்தவராய். கவர்ன்மெண்ட் உத்தியோகத்தைவிட்டு, தன்னுடன் மஹாராஷ்டிர வாலிபர்களைச் சேர்த்துக்கொண்டு தமிழ் நாடக கம்பெனி ஒன்றை ஏற்படுத்தி, அவ்வாலிபர்களையெல்லாம் நாடகமாடுவதில் பயிற்று வித்து தஞ்சாவூரில் சில நாடகங்களையாடி, பிறகு சென்னைக்கும் வந்து இங்கும் பலமுறை தமிழ்நாடகங்களை நடத்தினர்; இவரது நாடகக் கூட்டத்திற்கு "மனமோகன நாடகக் கம்பெனி' என்று இவர் பெயர் வைத்தபோதிலும், பெரும்பாலும் கோவிந்தசாமி ராவ் நாடகக் கம்பெனி என்றே பெயர் வழங்கலாயிற்று. இவர் நடத்திய முக்கிய தமிழ் நாடகங்கள். ராமதாஸ் சரித்திரம், தாராசசாங்கம், பாதுகாபட்டாபிகேஷம், கோபிச்சந்து, திரெளபதி வஸ்திராபஹரணம், கர்ணவதம், அபிமன்யு யுத்தம், ஸ்திரீசாஹசம், சிறுத்தொண்டர் புராணம் முதலியன, கோவிந்தசாமி ராவ் மற்றவர்களை நாடக மாடுவதில் பயில்விப்பதில் தேர்ச்சி பெற்றிருந்ததுமன்றி தானே வேஷம் தரித்து மேடையின் மீது வருவார், இவர் மேற்பூண்ட முக்கிய வேஷங்கள், ராமதாஸ் சரித்திரத்தில் நவாப்பும். தாராசசாங்கத்தில் பிரஹஸ்பதியும், பாதுகா பட்டாபிஷேகத்தில் பரதனுமாம். இவரது நாடகக் கூட்டத்தில் ஸ்திரீ வேஷம் பூணும் சுந்தர ராவ், குப்பண்ண ராவ் என்று இருவர் இருந்தனர்; சுந்தரராவினுடைய சங்கீதம் மதுரமாயிருக்கும். குப்பண்ணராவுக்குப் பாடத் தெரியாது. ஆயினும் ஸ்திரீ வேடம்பூண்டு நடிப்பதில் வெகுசமர்த்தர் அகஸ்ய பாகத்திற்காக பஞ்சநாத ராவ் என்றொருவன் இருந்தான் இவனை பஞ்சண்ணா, என்று செல்லப்பெயரால் அழைப்பார்கள். இவன் சமயோசிதமாக ஆஸ்யம் செய்வதில் வெகு சமர்த்தன். கோனேரி ராவ் என்பவன் முக்கிய ராஜவேஷம் தரிப்பவன். இதற்கு அயன் ராஜபார்ட் என்று பெயர். இவர்கள் காலத்தில் நாடகமாடும் விதம் கவனிக்கத்தக்கது. ஒரு நாடகம் ஆடுவதென்று தீர்மானித்தவுடன், அன்றைத்தினமோ அல்லது முந்தியதினமோ, கோவிந்த சாமி ராவ் இன்னின்னர் இன்னின்ன வேடம் தரிக்கவேண்டுமென்று தீர்மானித்துவிடுவார். அதன்பேரில் அந்தந்த நாடக பாத்திரங்களுக்குத் தக்க பாட்டுகளை பழைய கீர்த்தனங்களிலிருந்தாவது, அல்லது புதிதாய்க் கற்பித்துக்கொண்டாவது, பாட்டுக்களெல்லாம் ஒத்திகைப் பார்ப்பார்கள், (ஒத்திகை என்பது ஆங்கிலேய பாஷையில் rehearsal என்பதாம். ஒத்திருக்கை என்னும் பதத்தின் மருவாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. சரிபார்க்கை என்று அர்த்த முடையதாம்.) அவ்வளவுதான் பேசவேண்டிய வசனங்கள் கதைக்கிசைந்தபடி அந்தந்த வேஷதாரி பேசவேண்டும் புஸ்தகம் ஒன்றில் எழுதி அதை மனனம் செய்து நடிக்கும் தொல்லையேயில்லை! நாடக பாத்திரங்களெல்லாம் தஞ்சாவூரிலிருந்த தமிழ் உணர்ந்தவர்களாதலால், சாதாரணமாகத் தமிழ் நன்றாய்ப் பேசுவார்கள். இவர்கள் பேசுவது மற்ற நாடகக் கம்பெனியாரைப்போல் கொச்சையாயிராது. இலக்கணமுடையதாகவே யிருக்கும். கோவிந்தசாமி ராவ் என்பவர் தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி, மகாராஷ்டிரம், முதலிய பாஷைகளில் தாராளமாய்ப் பேசுவார், இக்கூட்டத்தார் ஆடிய 'ஸ்திரி சாஹசம்' எனும் நாடகமே நான் முதல்முதல் பார்த்த தமிழ் நாடகம் காலஞ்சென்ற என் தந்தையாராகிய விஜயரங்கமுதலியார், என்னை இந்நாடகத்தைப் பார்க்க, என் வேண்டுகோளின்படி தன்னுடன் அழைத்துச் சென்றார், நாடகம் நடந்ததை மிகவும் கவனமாய் உற்றுக் கேட்டிருந்து, மறுநாள் அக்கதையை 'புஷ்பவல்லி’ என்கிற பெயரிட்டு ஒரு நாடகமாக எழுதினேன். இதுதான் நான் முதல் முதல் தமிழில் எழுதிய நாடகம். அந்த வயதில் எனக்கு ஞாபகசக்தி நன்றாயிருந்தமையால் அன்று நடித்த வேஷதாரிகள் பேசிய வார்த்தைகளில் சில பாகம் அப்படியே பெயர்த்தெழுதியிருக்ககக்கூடும் என்று நினைக்கிறேன். இந்த கோவிந்தசாமி ராவுடைய நாடகக் கம்பெனியில் நாடக ஆரம்பம் சமஸ்கிருத சாம்பிரதாயத்தை ஒத்திருக்கும். அதற்குக் காரணம் அவர் வடக்கிலிருந்து வந்த நாடகக் கம்பெனியைப் பார்த்து அதைப்போலத் தாமும் நாடக ஏற்பாடுகளைச் செய்ததே போலும். ரங்கத்தின் திரைக்குப்பின் வினாயகர், சரஸ்வதி, அவர் வழிபடு கடவுளாகிய நீராமர் முதலியோருடைய ஸ்தோத்திரம் ஆனபின் அவரே சூத்திரதரகை திரைக்கு வெளிவருவார்; பிறகு பஞ்சதாதன் எனும் முன்பு கூறப்பட்டவன் விதுரவடிகளாக வந்து, வேப்பிடையைத் தலையிற் கட்டிக்கொண்டு ஆடுவான். ஆடியபிறகு இவர்களிருவர்களுடைய தர்க்கத்தினால், இன்ன நாடகம் நடக்கப்போகின்றதென்றும். அதன் கதை இன்னதென்று சபையோர்கள் அறிவார்கள், பிறகு நாடகம் ஆரம்பமாகும். நடர்களை 'குடி முதலிய துர்வழக்கங்கள் இல்லாமலும். துன்மார்க்க வழியில் செல்லாமலும், மேடையின்மீது ஆபாசமான வார்த்தைகளை உபயோகியாமலும், சீர்திருத்திக்கொண்டு வந்தவர்களில் இவரை முதலாகச் சொல்லலாம். இவருக்கு வயதான பிறகு, இந் நாடகக் கூட்டத்தில் பிரிவுண்டாகி, கோனேரிராவ் என்பவர் ஒரு நாடகக் கம்பெனியும், சுந்தர ராவ் என்பவர் வேறொரு நாடகக் கம்பெனியும் ஸ்தாபித்து நடத்தி வந்தார்கள். பிறகு இவ்விரண்டு கம்பெனிகளும் சில வருஷங்களுக்குள் அற்றுப்போயின. நம்முடைய தேசத்தில் ஐக்கியம் அழிந்து, பிரிவு உண்டாவதினால் எல்லாம் கெட்டுப்பேகின்றது என்பதற்கு இந்நாடக சபைகளும் உதாரணமாயின.

சற்றேறக்குறைய இதேகாலத்தில் சுப்பராயாச்சாரி நாடகக் கம்பெனி என்று ஒன்றிருந்தது. இதற்குத் தலைவர் சுப்பராயாச்சாரி எனும் கம்மாளர், இவர் பெங்களுரிலிருந்த அப்பாவு பிள்ளை என்பவருடைய சிஷ்யர். இவர் பெரும்பாலும் தன் ஆசிரியரால் இயற்றப்பட்ட சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம் எனும் நாடகத்தைத் தான் நடத்துவார். இவர் சனிக்கிழமைதோறும்தான் நாடகம் நடத்துவார். ஹரிச்சந்திரவிலாசம் ஆரம்பித்தால் ஏழு அல்லது எட்டு சனிக்கிழமைகளில் ஒவ்வொரு பாகமாக நடத்தி, கடைசியில் ஹரிச்சந்திரன் பட்டாபிஷேகம் என நடத்துவார். இவர் சபையில் துரைசாமி என்பவன் சந்திரமதியாக நடிப்பான், இவர்களிருவரும் ஹரிச்சந்திரன் சந்திரமதி வேஷத்தில் நிகரற்றவர்களெனப் பெயர்பெற்றிருந்தனர், அக்காலம் இவர்கள் சாதாரணமாக நாடகம் நடத்திய கொட்டகை, இப்பொழுது தான் வசிக்கும் வீட்டிற்கு சுமார் நூறு கஜத்திற்குள் இருந்தது. இரவில் பத்துமணிக்குமேல் இரண்டு மூன்று மணிவரையில் சனிக்கிழமைகளில் இவர்கள் பாடும் பாட்டுகள் எனக்கு நன்றாய்க் கேட்கும். இச்சபையார் நடத்திய நாடகங்களில் முக்காலே அரைக்கால் பாகம் சங்கீதமும் அரைக்கால் பாகம் வசனமுமிருக்கும். இந்த சுப்பராயாச்சாரி காலஞ்சென்றபொழுது, சவத்திற்கு ஹரிச்சந்திரன் வேஷம்தரித்து ஸ்மசானத்திற்குக் கொண்டுபோயினர். இவருக்குப் பிற்காலம் இவருடன் மந்திரி சத்தியகீர்த்தி வேஷம்தரித்த சுந்தராச்சாரி என்பவர் ஒரு நாடக சபையையும், தோட்டி வேஷம் தரித்த நாராயணசாமி பிள்ளை ஒரு நாடக சபையையும் ஸ்தாபித்தனர். இச்சபைகளில் பெரும்பாலும் மேற்சொன்ன அப்பாவுபிள்ளை இயற்றிய அரிச்சந்திர நாடகம், இத்திரசபா, பவழேந்திரி சபா, முதலிய நாகங்களே நடிக்கப்பட்டு வந்தன. இந் நாடகங்கள் அக்காலத்திலேயே அச்சில் வெளிவந்தன. அக்காலத்தில் சில வருஷங்கள் நாடகமேடையெங்கும் இந்திரசபா மயமாயிருந்தது. அதை ஆடாத நாடகக் கம்பெனி கிடையாது. நாடகத்தின் கதை, இந்திரன் சபையில் நடனஞ் செய்த ஊர்வசியாகிய அப்சரஸ்திரீ, சந்தண மஹாராஜன் எனும் அரசனைக்கண்டு அவன்மீது இச்சைகொண்டதாம், இந்நாடகம் பல வருடங்களுக்குமுன் ஒரு பாரசீக சபையாரால் சென்னையில் நடிக்கப்பட்டதைக்கண்டு, தமிழில் அப்பாவு பிள்ளையால் எழுதப்பட்டது. அக்காலத்தில் தெருக்களில் சாதாரண ஜனங்கள் இதிலடங்கிய சில முக்கிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு போவார்கள். இந்நாடகமானது சாதாரண ஜனங்களின் மனதைக் கவர்ந்தமையால் இதினின்றும் கடல் இந்திர சபா, பர்வத இந்திரசபா, அக்னி இந்திர சபா, கமல இந்திர சபா, என்னும் நாடகங்கள் கிளம்பின. நம்மவர்கள் புதிதாய் ஒன்றை கற்பனை செய்யும் சக்தி பெரும்பாலும் இல்லாதவர்களாயிருந்தும், ஒன்றைப் பார்த்து அதுபோல் எழுதுவதில் வல்லவர்களாகவே யிருந்தார்கள். மேற்சொன்ன நாடகசபைகளெல்லாம் தெருக்கூத்துகளைப்போலன்றி, நாடகக் கொட்டகைகளில் நாடகமேடையின்மீது, திரைகள் முதலியவைகளுடன், தமிழ் நாடகங்களே நடத்திவந்தன. இவைகளில் புஜகீர்த்தி முதலியன உபயோகப்படுத்தாமல் ஒழிக்கப்பட்டன, வேஷங்களையும் ஒழுங்காகவே தரிக்க ஆரம்பித்தனர். கட்டியக்காரன். தொப்பைக் கூத் தாடி முதலிய பாத்திரங்கள் நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாக ஆங்கிலேய பப்பூன் (buffoon) வேடம் தரித்தவன் வரலானான். இவனை சமஸ்கிருத நாடகத்து விதூஷகனுக்கு ஒருவாறு ஒப்பிட்டுக் கூறலாம்; இவ்வேடம் தரித்தவன் நாடக ஆரம்பமுதல் கடைசி வரையில் நாடகமேடையிலிருந்து சமயோசிதமாக ஹாஸ்யம் செய்துவருவான். இதை நான் சரியென்று ஒப்புக்கொண்டவன் அன்று. ஆயினும் அக்காலத்தில் இருந்ததை உள்ளபடி உரைக்க வேண்டியது என் கடமையாதல் பற்றி இதை இங்கு கூறலானேன். ஜீவனத்திற்காக ஆடிவரும் நாடகசபைகளில், தமிழ் நாடகங்கள் நடக்கும்பொழுதும் இன்றுவரை, ஆங்கில உடை தரித்த இந்த பப்பூன்பார்ட் என்னும் ஆபாசம் இருப்பதைக் காணலாம். ஒரு முக்கியமான விஷயத்தில் மாத்திரம் இக்காலத்து நாடக கம்பெனிகளெல்லாம், புராதனமான தெருக்கூத்துகளை ஒத்திருந்தன; அது என்னவென்றால், இந்நாடகக் கம்பெனிகளிலும் பின்பாட்டு என்பது இருந்தது; தற்காலம் வரையிலும் இருக்கின்றது. இப்பொழுது தான் கொஞ்சங்கொஞ்சமாக விடப்படுகின்றது. இக்காலத்தில் இந்த நாடகசபைகளிலெல்லாம் நாடக பாத்திரங்கள் ஆண் மக்களாகவே யிருந்தார்கள். முதல் முதல் ஸ்திரீகள் நாடகசபையைச் சேர்ந்து ஆடியது பாலாமணியெனும் பெண்பாலின் சபையிலேயே. அதற்குமுன் ஏகதேசமாக எப்பொழுதாவது டம்பாச்சாரி விலாசத்தில் மதனசுந்தரி வேஷம் மாத்திரம் பரத்தையர் போட்டதுண்டு, இந்த பாலாமணி கம்பெனியில் நாடகபாத்திரங்களெல்லாம் பெரும்பாலும் ஸ்திரீகளாலேயே தரிக்கப்பட்டன. இவர்கள் ஆடிய தமிழ் நாடகங்களில் பெரும்பாலும் சங்கீதமே நிறைந்திருந்தது என்று கூறாமலே தெரிந்துகொள்ளலாம். அன்றியும் குல ஸ்திரீகள் இவர்கள் ஆடிய நாடகங்களைப் பார்க்க அக்காலத்தில் அருவருப்புடையவர்களாயிருந்தனர் என்றே கூறவேண்டும்.

1891 வருஷம் தமிழ் நாடக மடந்தைக்கு ஒரு முக்கியமான வருடம் என்று கூறவேண்டும். இந்த வருஷம்தான் காலஞ்சென்ற தமிழ் அபிமானியாகிய சுந்தரம் பிள்ளை அவர்கள் புதிய முறைப்படி "மனேன்மணியம்" எனும் தமிழ் நாடகத்தை அச்சிட்டு வெளியிட்டதாகக் கூறியுள்ளேன். அன்றியும் இவ்வருஷம் தான், ஜீவனத்தின் பொருட்டன்றி, தமிழ் பாஷையினிடத்துள்ள அன்பின் பொருட்டு தமிழ் நாடகங்களை நடத்த, சுகுணவிலாச சபை முதலிய சபைகள் பிறந்தன. இதுவரையில் கலாசாலையில் வாசிக்கும் சிறுவர்கள் எப்பொழுதாவது ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் முதலிய நாடகாசிரியர்களுடைய நாடகங்களே ஆடும் வழக்கமுண்டு. தமிழில் நாடகம் ஆட வேண்டுமென்று அவர்கள் கனவிலும் நினைத்தவர்களல்ல என்று உறுதியாய்க் கூறலாம். அதற்கு சில முக்கியமான காரணங்கள் இருந்தன; அவற்றுள் முதலாவது, தமிழ் நாடகங்கள் ஜீவனத்திற்காக அவைகளை ஆடுபவர்கள் கையிற்பட்டு, ஹீனஸ்திதியையடைந்ததாகும். அவர்களில் பெரும்பாலர் நன்னடக்கையில்லாதவர்களாயும் கல்வி அறிவு இல்லாதவர்களும் துர்மார்க்கர்களாயுமிருந்தபடியால் நாடகமாடுவதே நிந்தைக்கு ஆளாயது. ஒருவனை இழித்துச் சொல்ல வேண்டியிருந்தால் அவன் கூத்தாடியாயிருக்கிறான்" என்று சொல்லத்தக்க ஸ்திதிக்கு வந்துவிட்டது. அக்காலம் ஏகதேசமாய் நடத்தப்பட்ட தமிழ் நாடகங்கள், குலஸ்திரீகள் பார்க்கத்தக்க வகையாய் நடத்தப்படவில்லை என்று உறுதியாய்க் கூறலாம். அன்றி மற்றொரு முக்யமான காரணம், கற்றறிந்தவர்கள் நடத்தத்தக்க நாடகங்கள் இல்லாமையே. மேற்குறித்த குறைகளையெல்லாம் போக்க ஆதிகாரணமாயிருந்தது காலஞ்சென்ற பல்லாரி கிருஷ்ண மாசசர்லு என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட சரசவினோத சபை எனும் தெலுங்கு நாடகசபையே என்று கூறலாம். இச்சபையானது, இதைப்போன்ற தமிழ் நாடக சபைகள், சென்னையிலும், நமது தமிழ் நாட்டிலும் ஸ்தாபிக்கப்படக் காரணமாயிருந்தபடியால் இதைப் பற்றி சில விவரங்கள் இங்கு கூறுவது அவசியமாகிறது. காலஞ் சென்ற கிருஷ்ணமாசார்லு என்பவர் பல்லாரியில் வக்கீல் வேலையைப் பார்த்திருந்தார்; ஆங்கிலம், தெலுங்கு பாஷைகளில் விற்பன்னர்; மேற்சொன்ன சரசவினோதினி சபையை ஸ்தாபித்து அதற்காக, அநேகம் தெலுங்கு நாடகங்களை இயற்றி தெலுங்கு பாஷாபி மானிகளால் 'ஆந்திர நாடக பிதா மகன்' என்கிற பெயரைப் பெற்றவர்; அதுவரையில் தெலுங்கில் தமிழ் தெருக்கூத்துகளுக்கொப்பாக, 'சென்சு நாடகமு' என்பதுதான் இருந்தது. இக்குறையைத் தீர்க்கவேண்டி ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் இருந்த சிறந்த நாடகங்களுக்கொப்பாக, தெலுங்கு நாடகங்களை இவர்தான் எழுதத்தொடங்கி, சாவித்திரி, விஷாத சாரங்கதரன், சித்ர நளீயம், பாதுகா பட்டாபிஷேகம், சிரகாரி, பிரமேளா, பிரஹந்நளr, பாஞ்சாலி சுயம்வரம், முக்தாவளி முதலிய நாடகங்களே இயற்றினர். இந்நாடகங்களையெல்லாம் இவர் ஏற்படுத்திய சரசவினோத சபையாரைக்கொண்டு ஆடுவித்தனர். தானும் வேஷம் தரித்து அரங்கத்தில் வந்து ஆடினர். இச்சபையைச் சார்ந்தவர்களெல்லாம் கற்றறிந்தவர்கள்; வேறு உத்யோகமுடையவர்கள்: பாஷையிலுள்ள அபிமானத்தின்பொருட்டும், நாடகச்சாலையில் அவர்களுக்கிருந்த அபிருசியின் பொருட்டுமே அவர்கள் மேற்கண்ட நாடகங்களை ஆடி வந்தனர். மேற்கண்ட சபையார் 1891இல் ஜூன் மாதம் முதல் முதல் சென்னைக்குவந்து விக்டோரியா பப்ளிக்ஹால் என்னும் இடத்தில் தெலுங்கு நான்கைந்து நாடகங்கள் நடத்தினார்கள். சென்னையிலும் அனேகம் கனவான்கள் இவற்றைக்கண்டு மகிழ்ந்தனர். இதனால் இதுவரையில் நாடகத்துக்கிருந்த இழிவும், நாடகமாடுந் தொழிலுக்கு இருந்த தாழ்மையும், ஒருவிதத்தில் நீங்கியதெனவே கூறலாம். மேற்கண்ட சபையார் சென்னைக்கு வந்து நாடகங்கள் நடந்தியதின் முக்கிய பலன் யென்னவெனின். இதைப்போன்ற தமிழ் நாடகசபைகள் சென்னையில் உண்டானதே யாம். அப்படிப் பிறந்த சபைகளில் முக்கியமானதாகச் சுகுண விலாசசபையை எடுத்துக்கூறலாம். இச்சபை 1891-ம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி ஸ்தாபிக்கப்பட்து.


முற்றிற்று.