நாடகத் தமிழ்/புதிய நடையில் எழுதப்பட்ட நாடகங்கள்

புதிய நடையில் எழுதப்பட்ட நாடகங்கள்

இனி காளிதாசர் பவபூதி முதலிய நாடகாசிரியர்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாடகங்களையும். ஷேக்ஸ்பியர் ஷெரிடன் முதலிய நாடகாசிரியர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நாடகங்களையும் தழுவி தமிழில் எழுதப்பட்ட தற்காலத்திய நாடகங்களைக் கருதலாம். இவைகளில் பொதுவாகத் தெய்வ வணக்கம் தவிர பழைய தமிழ் நாடகங்களில் நாம் முன்பு குறித்தபடி, விநாயகர் ஸ்துதி, சரஸ்வதி துதி, அவையடக்கம், மங்களம், தோடயம் முதலியன கிடையாதென்றே கூறலாம். அன்றியும் சூத்திரதாரன் நடி முதலியவைகளும் கிடையா ; கட்டியக்காரன் என்பது கிடையவே கிடையாது. சம்ஸ்கிரத நாடகங்களைப்போல் அங்கங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அங்கமும் ஆங்கில நாடகங்களைப் போல், களம் அல்லது காட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவைகளில் பொது வசனமாவது, பொது விருத்தங்களாலது கிடைக்கா. பழைய நாடகங்களில் ராக தாளங்கள் அமைத்த பாட்டுகள் அதிகமாய் இருந்தது போலல்லாமல், அப்படிப்பட்ட பாட்டுகள் ஆங்காங்கு சிலவாகப் புலப்படும். அன்றியும் பெரும்பாலும் வசன நடையில், அல்லது ஏறக்குறைய வாசக நடைக்குச் சமானமான அகவற்பாவில் எழுதப்பட்டுள்ளன.

மேற்கூறிய புதிய நடையில் எழுதப்பட்ட தமிழ் நாடகங்களுக்குள் முதலாக, காலஞ்சென்ற ம-ள-ள-ஸ்ரீ ராமசாமி ராஜூ என்பவர்கள் இயற்றிய 'பிரதாபசந்திர விலாசம்’ என்பதைக் கூறவேண்டும். இது 1877-ஆம் வருஷத்தில் எழுதப்பட்டது. இது தற்காலத்திய ஜன சமூக நாடகமெனக் கொள்ளலாம். இந்நூலாசிரியர் சம்ஸ்கிரதத்திலும் சிறந்த பாண்டித்யமுடையவரா யிருந்தமையால், ஆரம்பத்தில் சம்ஸ்கிருத நாடகங்களிருப்பதுபோல் சூத்திரதாரன், சூத்திர தாரன் மனைவி என்கிற இரண்டு பாத்திரங்களை அமைத்து அவர்கள் வார்த்தையின் முடிவில் நாடகத் தொடக்கத்தைச் சேர்த்திருக்கிறார். நான் இதுவரையில் ஆராய்ச்சி செய்ததில் இந்த நாடகத்தில் தான் முதல் முதல் அங்கம் களம் என்னும் பிரிவுகள் உபயோகப்பட்டிருக்கின்றன. இது 12 அங்கங்கள் அடங்கிய ஓர் நாடகமாம். இந்நாடகமானது சில சமயங்களில் ஆடப்பட்டிருக்கிறது. இதன் பின் 'நந்திதுர்க்கம்” என்னும் ஒர் நாடகத்தைப் பார்த்துள்ளேன். இது காலஞ்சென்ற டிஸ்டிரிக்ட் முன்சிபு T.T ரங்காசாரியார் பி.ஏ.பி.எல். அவர்களால் ஒரியன்டல் டிராமாடிக் சொசைடியாருக்காக எழுதப்பட்டது. இது இதுவரையில் நடிக்கப்படவில்லையென்பது என் அபிப்பிராயம், இது பெரும்பாலும் வசன நடையில் எழுதப்பட்டது. சில பாட்டுகளும் அடங்கியது.

இதன் பிறகு, காலஞ்சென்ற, தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்ற பி. சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய மனோன்மணியம்’ என்னும் நாடகத்தைத் கூறவேண்டும். இதை ஷேக்ஸ்பியர் மகா நாடககவி ஆங்கிலத்தில் பிளாங்க்வர்ஸ் (Blankverse) என்பதில் எழுதியது போல் தமிழில் அகவற்பாவால் இதை எழுதியுள்ளார். இது கற்றோர்களாலே மிகவும் சிலாகிக்கப்பட்ட நூல் என்றால் இதன் பெருமையைப்பற்றி நாம் அதிகமாய்க் கூற வேண்டிய நிமித்தியமில்லை. சென்னைக் கலாசாலைச் சங்கத்தாரால் இந்நாடகம் உயர்தரப் பரீட்சைகளுக்குப் படிக்க வேண்டி புஸ்தக்மாகப் பன்முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நாடகக் கதைக்கு முதனூல் ஆங்கிலத்தில் 'தி சீக்ரெட்வே' எனும் ஆங்கிலக் கதையாகும். இந்த ஆசிரியர் இயற்றியது தமிழ் நாடக வகுப்பில் இது ஒன்றேயாகும். தமிழ் பாஷையை மிகவும் பாராட்டிச் சீர்தூக்கி வந்தப் இப்புலவர் பெருமான், தனது 42 ஆவது வயதிலேயே எம்பெருமானடி சேர்ந்தது தமிழ் அகம் செய்த துர்ப்பாக்கியமே யாம், இன்னும் சில வருஷங்கள் உயிரோடிருந்திருப்பாராயின் இதுபோன்ற பல சிறந்த நாடகங்களையும் தமிழில் எழுதியிருப்பாரென எண்ணுவதற்கு இடமுண்டு. இந்நூலாசிரியர் தமது நூலின் முகவுரையில், ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த நாடகங்கள் இருப்பதுபோல், தமது தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் இல்லாக் குறையை ஒருவாறு தீர்க்கும் பொருட்டு இதை எழுதிய தாகக் குறிப்பிட்டிருக்கிறார், இந்நூலாசிரியர் காலஞ் சென்ற என் தந்தையாருக்கு மிக்க நண்பர். நான் இப்பொழுது வசிக்கும் வீட்டில், இவர் எம்.ஏ. பரீட்சைக்குப் போனபோது சில நாட்கள் வசித்திருந்தார். அக்காலம் நான் சிறிய வயதுடையவனுயிருந்தும் இவருடன் வார்த்தையாடும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன். ஒரு முறை, இப்புஸ்தகம் அச்சிட்ட 1891 வருஷம், நானும் எனது நண்பர்களும் ஸ்தாபித்த சுகுண விலாச சபை எனும் நாடக சபையில், இதை ஆடக்கூடாதா என்று கேட்டனர். அதற்கு நான் இந்நூல் அகவற்பாவினால் புனையப்பட்டிருப்பதால் நாடகமேடையில் சாதாரண ஜனங்கள் நடிப்பதற்கும், நடிப்பதை பார்க்கும்போது ஜனங்கள் அர்த்தம் செய்து கொள்வதற்கும், கடினமாயிருக்குமே என்று பதில் உரைத்தேன். இக்கஷ்டத்தை முன்பே அறிந்தவராய்த் தான் அவரது முகவுரையில் வீட்டில் படிப்பதற்கே இந்நூல் எழுதப்பட்டது. நாடக மேடையில் ஆடுவதற்கன்று என்று எழுதியுள்ளார் போலும். இந்நாடகமானது நானறிந்த வரையில் மேடையின் மீது நாடகமாக ஆடப்பட்டிலது.

மேற்குறித்த 1891 வருஷம்தான் நான் முதல் முதல் தமிழ் நாடகங்கள் எழுத ஆரம்பித்தேன். நான் அறிந்த வரையில் வெறும் வசன நடையில் எழுதப்பட்டு அச்சிடப்பட்ட தமிழ் நாடகம் நான் இயற்றிய "லீலாவதி, சுலோசனை" எனும் நாடகமே. அவ்வருஷம் தொடங்கி இதுவரையில் எல்லாம்வல்ல இறைவன் அருளாலும் எனது தாய் தந்தையர்கள் கடாட்சத்தினாலும், இதுவரை (1959) ஏறக்குறைய 94 நாடகங்கள் தமிழில் வசன ரூபமாக எழுதியுள்ளேன் அவைகளைப்பற்றி தான் கூறுவது முறையன்றென விடுத்தனன். தமிழ் நாடகங்களைக் குறித்துக் கருதுமிடத்து ஒரு முக்கியமான வருஷமாக எண்ணத்தக்க 1891 வருஷம் முதல், அநேக தமிழ் அபிமானிகள், தமிழ் மடந்தை நாடகம் எனும் சிறந்த மணியில்லாக் குறையைத் தீர்ப்பதற்கு ஏற்பட்டு தமிழ் நாடகங்களை இயற்றியுள்ளார். அவர்களுள் முற்பட்டவராக காலஞ்சென்ற எனது நண்பரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவருமான, 'பரிதி மால் கலைஞன்” எனும் பெயர் பூண்ட, வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியாரைக் கூறல் வேண்டும். இவர் முதல் முதல் தமிழில் எழுதிய நாடகம் ரூபாவதி என்பதாம். பின்னர் கலாவதி என்பதை இயற்றினார். இவை இரண்டும் வசன நடையிலமைந்த நாடகங்கள். ஆங்காங்கு சில விருத்தங்கள் முதலியன உடையவை, பிறகு மானவிஜயம் எனும் நாடகத்தை எழுதினர். இது வசனமாயில்லாது அகவற்பாவால் அமைந்ததாம். கடைசியிற் கண்ட நாடகமானது ரங்கத்தின்மீது ஆடப்பட்டதாக எனக்கு ஞாபகமில்லை. ஆடுவதும் கொஞ்சம் கடினமென்றே கூறவேண்டும். மேற்கூறிய நாடகங்களை இயற்றியது மன்றி, தற்காலத்தில் நாடகத் தமிழுக்கு சூத்திரங்கள் இல்லாக் குறையைத் தவிர்க்கவேண்டி, தனது நுண்ணறிவைக்கொண்டு நாடகவியல் எனும் இலக்கண நூலையும் இயற்றினர். இவரிடத்திருந்த ஒரு அரிய குணம் என்னவெனில், தமிழ் பாஷைக்காகத்தான் உழைத்தது மன்றி,தன்னைச் சுற்றிலும் அநேகம் தமிழ் மாணவர்களைச் சேர்த்து அவர்களெல்லாம் மிகவும் ஊக்கத்துடன். உழைக்கும்படி அவர்களுக்கு உற்சாகம் உண்டாக்கியதேயாம். இப்படி அவரால் ஊக்கம் ஊட்டப்பட்ட அநேகம் தமிழ் மாணவர், பிற்காலம் தமிழில் பல நாடகங்களை இயற்றியிருக்கின்றனர். இவர் சிறு வயதிலேயே பரலோகஞ் சென்றது தமிழ் உலகத்தார் செய்த அபாக்கியமேயாம்! இக்காலத்தில் வெளிவந்த தமிழ் நாடகங்களுட் சில பெரும்பாலும் சம்ஸ்கிருத கவிகளாகிய காளிதாசர் பவபூதி முதலியோருடைய வழியைத் தழுவியும், பல ஷேக்ஸ்பியர் மஹாகவியின் வழியைத் தழுவியும் உள்ளன என்று முன்பே கூறினேன். தமிழ் மாணவர்கள் சர்வகலாசாலையில் பி.ஏ. முதலிய பட்டங்கள் பெறுவதற்கு சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படிக்காமற்போக முடியாது. உலகெங்கும் பெயர்பெற்ற அந்த நாடகக்கவியின் நோக்கங்களும், நாடகம் எழுதும் துறைகளும், நாடக பாத்திரங்களின் குணங்களை வெளிப்படுத்தும் திறனும், சந்தர்ப்பங்களால் அந்நாடக பாத்திரங்களின் குணங்கள் மாறும் வகையும், தமிழ் மாணவர்களுக்கு ஒரு பெரும் உற்சாகத்தையுண்டு பண்ணின என்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவி ஆங்கிலத்தில் வரைந்த பல நாடகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் காலக்கிரமத்தில் முற்பட்டது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த காலஞ்சென்ற வேணு கோபாலாச்சாரியார் மொழிபெயர்த்த "வெனிஸ் வர்த்தகன்” என்பதேயாம். ஒரு பாஷையில் ஒரு கவி எழுதிய நாடகத்தை மற்றொரு பாஷையில் மொழி பெயர்ப்பது மிகவும் கடினமான காரியம், நூலாசிரியர் ஒவ்வொரு சொற்றொடரிலும் அமைத்துள்ள அருமையான விஷயங்களையெல்லாம் ஒன்றும் விடாது, மற்ருெரு பாஷையில் அமைத்து எழுதுவது, மிகவும் கஷ்டமான விஷயம் என்று இம்முயற்சியை எடுத்துக்கொண்டவர்களுக்குத் தான் தெரியும். வேணுகோபாலாச்சாரியார் என்பவர் இம்முயற்சியில் ஏறக்குறைய முற்றிலும் சித்தி பெற்றார் என்பது அவரியற்றிய நூலைப் படித்தால் தான் தெரியும். நான் எனது சிற்றறிவைக்கொண்டு, ஷேக்ஸ்பியர் நாடகத்தைத் தழுவி, "வாணிபுர வணிகன்’ என்பதை எழுதியபொழுது, இந்நூலாசிரியர் முன்பு இயற்றிய மொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் சகாயமாயிருந்தது என்னுடைய சொந்த அனுபவம் என்னவெனின், புதி தாய் ஒரு நாடகத்தை எழுதுவதைவிட, பழைய நாடகமொன்றை தக்கபடி மொழிபெயர்ப்பது, மிகவும் கடினமென்பதே! இந்நாடக ஆசிரியர் என்தந்தையின் காலத்திலிருந்தவர். இவரைப்பற்றி காலஞ்சென்ற என் அருமைத் தந்தை மிகவும் சிலாகித்து என்னிடம் பன்முறை கூறியுள்ளார். அன்றியும் இந்த வெனிஸ் வர்த்தகன் எனும் நாடகமானது 1909 வருஷம் எஸ். வி. கண்ணபிரான் பிள்ளை என்பவராலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஷேக்ஸ்பியர் மஹாகவியின் "மிட்சம்மர் நைட்ஸ் டிரீம்" என்னும் நாடகத்தை ஸ்ரீ எஸ். நாராயணசாமி ஐயர் என்பவர் "நடுவேனிற்கனவு’ என்று பெயரிட்டு தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். இது 1893 ஆம் வருஷம் அச்சில் வெளியாயிருக்கிறது. இந்நாடகக் கவியின் 'ஒதெல்லோ' எனும் நாடகத்தை காலஞ்சென்ற அ.மாதவையா அவர்கள் வெகு அழகாய் மொழி பெயர்த்திருக்கின்றனர். இதே நாடகத்தை பெயர்களை மாத்திரம் மாற்றி பி. எஸ். துரைசாமி ஐயங்கார் என்பவர் தமிழில் அமைத்து 'யுத்தலோலன்' என்று பெயரிட்டிருக்கின்றனர். இக்கவி எழுதிய நாடகங்களிலெல்லாம் மிகச் சிறந்தது 'ஹாம்லெட்' என்பதாம். அதை கே. வெங்கடராம ஐயரவர்கள் மொழிபெயர்த்து 1917-ம் வருஷம் வெளியிட்டிருக்கின்றனர். இந்நாடகத்தின் அமலாதித்யன் எனும் பெயருடைய தமிழ் அமைப்பு, என்னால் 1908-ம் வருஷம் அச்சில் வெளிடப்பயிட்டிருக்கிறது. கிங் லீயர் எனும் மற்றொரு சிறந்த நாடகத்தை கே.ராமசாமி ஐயங்கார் அவர்கள் மொழிபெயர்த்திருக்கின்றனர். இதற்கு 'மங்கையர் பகட்டு' என்று பெயர் வைத்திருக்கின்றனர். 1921 வருஷம் இது வெளிவந்தது. இன்னும் காமெடிஆப் எர்ரர்ஸ் எனும் நாடகமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. "யுத்தலோலன்” என்பதை எழுதிய நூலாசிரியராகிய மேற்சொன்ன பி. எஸ்.துரை சாமி ஐயங்கார் ரோமியோ அண்டு ஜூலியெட் எனும் நாடகத்தை ரம்பனும் ஜொலிதையும், எனும் நாடகமாக மொழிபெயர்த்திருக்கின்றனர், இதை நான் வாசித்திருக்கிறேன், இது சுகுண விலாச சபையாரால் ஒருமுறை ஆடப்பட்டும் இருக்கிறது. ஆயினும் நான் அறிந்தவரையில் இது இன்னும் அச்சிடப்படவில்லை. "சிம்பலைன்' எனும் சரித்திர சம்பந்தமான நாடகத்தை காலஞ்சென்ற சரச லோசன செட்டியார் என்பவர் தமிழில் அமைத்து சரசாங்கி எனும் பெயரிட்டு 1897-வருஷம் அச்சிட்டிருக்கிறார். இதே நாடகத்தை "சிம்ஹளநாதன்' எனப்பெயரிட்டு நான் தமிழில் அமைத்து 1914 வருஷம் அச்சிட்டிருக்கிறேன். இதே நாடகத்தை ஜி.ஜோசெப் எனும் ரங்கூன்வாசி 1918 வருஷம் 'பாண்டியராஜன்'எனும் பெயருடைய தமிழ் நாடகமாக இயற்றியுள்ளார். மேற்குறிப்பிட்டவை களன்றி ஷேக்ஸ்பியர் மகாகவியின் நாடகங்களை நான் தமிழில் அமைத்துள்ளன மகபதி (Macbeth) விரும்பியவிதமே (As you like it) எல்லாதேசத்து நாடகக்கவிகளாலும் தமதுசிரோரத்தனமாகக்கொள் ளப்பட்ட இந்த ஷேக்ஸ்பியர் நாடக கவியின் மற்ற ஆங்கில நாடகங்களையும் தமிழில் அமைத்தாவது மொழி பெயர்த்தாவது வெளியிட்டால், தமிழ் நாடகாபிமானிகளுக்கு ஒரு பேருதவியாம் என்பதற்குச் சந்தேகமே யில்லை.

இனி ஷேக்ஸ்பியர் மஹாகவியைவிட்டு மற்ற ஆங்கிலகவிகளின் நாடகங்களின் தமிழ் அமைப்பைப்பற்றிக் கருதுவோம். 1902-வருஷம் என். ஆர்.கே.தாதாசாரியர் என்பவர் மில்டன் என்பவருடைய "கோமஸ்" எனும் கதையைத் தமிழில் நாடக ரூபமாக "குணமாலிகை"எனும் பெயரிட்டு வெளியிட்டிருக்கின்றனர். எனது நண் பருள் ஒருவராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் என்பவர், ஹென்றிவுட் (Henry Wood) துரைசாணி யவர்கள் இயற்றிய 'ஈஸ்ட்லின்' எனும் நவீனத்தைத்தழுவி "சபலா" எனும் நாடகத்தைத் தமிழில் இயற்றியுள்ளார்.

இனி சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்களைக் கருதுவோம். சமஸ்கிருத நாடகங்களிலெல்லாம் எல்லாவிதத்திலும் முற்பட்டது காளிதாச மகாகவி எழுதிய சாகுந்தலம் அல்லது காணாமற்போன கணையாழி என்னும் நாடகமே. இந்நாடகமானது அநேக ஐரோப்பிய பாஷைகளிலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, அன்றியும் எல்லாதேசத்தாராலும் மிகவும் புகழ்ந்து கொண்டாடப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடகாசிரியராகிய ஷேக்ஸ்பியருக்குச் சமானமாகச் சொல்லத்தக்க, கட்டெ (Goethe) என்பவர் இந்நாடகத்தின் அழகினையும் பெருமையும் மிகவும் வியந்து கூறியிருக்கின்றார். இந்நாடகமானது முதல் முதல் தற்காலம் மறைமலை அடிகள் என்றும் பூர்வாசிரமத்தில் வேதாசலம் பிள்ளை என்னும் பெயர் பூண்ட தமிழும் சமஸ்கிருதமும் நன்குணர்ந்த வித்வானால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதற்குப்பின்னர் ஸ்ரீ திவான் பஹதூர் எம்.எஸ்.பவாநந்தம் பிள்ளை அவர்களாலும் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இதை நானும் தமிழ் நாடகமேடைக்கு உதவும்படியாக தமிழில் அமைத்திருக்கிறேன். காளிதாச மஹா நாடககவியால் இயற்றப்பட்ட மற்றொரு நாடகமாகிய விக்கிரம ஊர்வசி எனும் நாடகம் எஸ்.ராஜா சாஸ்திரியாராலும், சருக்கை ராமசாமி ஐயங்காராலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நானும் தமிழில் இதை நாடகமாக ஆட விரும்புவோர்களுக்கு உபயோகமாகும்படி அமைத்திருக்கிறேன். இந்த சமஸ்கிருத நாடககவி இயற்றிய மூன்றாவது நாடகமாகிய மாளவிகாக்னிமித்ரம், வரகவி அ. சுப்பிரமணிய பாரதியாலும் என்னாலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய நாடகங்களையன்றி, வேணி சம்ஹாரம் என்னும் சம்ஸ்கிருத நாடகத்தை, எனது நண்பராகிய எஸ். ராகவாசாரியார் என்பவர் தமிழில் அமைத்திருக்கிறார். இது மஹாபாரதக் கதையை ஒருவாறு தழுவியதாம். அன்றியும் சம்ஸ்கிருத நாடகங்களில் வெகுபூர்வமானது என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.சூத்ரக கவியால் இயற்றப்பட்ட மிருச்சகடி என்னும் நாடகத்தையும் ராகவாசரியார் அவர்கள் தமிழில் அமைத்திருக்கின்றனர். இது இன்னும் அச்சிடப்படவில்லை, சீக்கிரம் அச்சுவாஹனம் ஏறுமெனக் கோருகிறேன். மேலும் பிரபோதசந்திரோதயம் எனும் மிகவும் கடினமான சமஸ்கிருத நாடகமும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அன்றியும் பாசகவியும் பவபூதி எனும் கவியும் சம்ஸ்கிருதத்தில் இயற்றியுள்ள பிரபல நாடகங்களைத் தமிழ் அபிமானிகள் மொழி பெயர்த்து, தமிழ் நாடகமானது புஷ்டியடையுமென இறைவன் அருளைப் பிரார்த்திக்கிறேன். தற்காலத்தில் அச்சிடப்படும் தமிழ் நாடகங்கள் பெரும்பாலும் இதிகாச புராணக் கதைகளைத் தழுவின வாயிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயமே இத்தகைய நாடகங்களுக்கு உதாரணமாக, அரிச்சந்திரன், பாதுகா பட்டாபிஷேகம், உத்தசை உஷாபரிணயம், கீசகன்,சீதா கல்யாணம், சாவித்திரி, தமயந்தி பீஷ்மஜன்னம், பாமாவிஜயம். மாருதிவிஜயம். ராமலிலா, ருக்மிணி கல்யாணம், வள்ளித் திருமணம், சகாதேவன் சூழ்ச்சி, யயாதி, காலவரிஷி, ஊர்வசியின் சாபம், சுபத்திரார்ஜுணா, கொடையாளி கர்ணன் முதலியவற்றைக் கூறலாம். இவையன்றி மிகுந்தவைகளில் பெரும்பாலும் பக்திரசமமைந்த நாடகங்களாயிருக்கின்றன. இவைகட்கு உதாரணமாக ராமதாஸ் சரித்திரம் மாணிக்கவாசக சரித்திரம். பட்டினத்தார் சரித்திரம், ஸ்ரீசங்கராச்சாரியார் நாடகம், ராமாநுஜாச்சாரியார் நாடகம், தொண்டரடிப்பொடி யாழ்வார் சரித்திரம், நந்தனர், பிரஹலாதன், மீராபாய், ஸ்ரீவீரராகவா, மார்க்கண்டேயர், சிறுத்தொண்டர் முதலியவற்றைக் கூறலாம்.

தற்காலத்தில் வெளிவந்திருக்கும் புதிய கற்பனை நாடகங்களுக்கு உதாரணமாக ரூபாவதி, கலாவதி, இரண்டு சகோதரர்கள், காந்தாமணி மாயாவதி, ராஜலட்சுமி, ராஜசேகரன். லீலாதரன், வாலந்திகை, லீலாவதி சுலோசணு, கள்வர் தலைவன், மனோஹரன், இரண்டு நண்பர்கள், நற்குலதெய்வம், சத்ருஜித், காதலர் கண்கள், பேயல்ல பெண்மணியே, மெய்க்காதல், புஷ்பவல்லி, வேதாள உலகம்,முதலியவற்றைக் கூறலாம். இவைகளே விசித்திரக் கதை நாடகப் பிரிவில் அடங்கினவாகக் கூறலாம்.

ஆங்கிலேய பாஷையில் சோஷல் டிராமா என்று சொல்லப்பட்ட ஜனசமூக நாடகம், அல்லது தற்காலத்திய நாகரீக நாடகப் பிரிவுள் தமிழில் சில நாடகங்கள்தான் வெளியாயுள்ளன; அவைகளுக்கு உதாரணமாக வனஜாட்சி, காலத்தின் கோலம்: கூட்டுறவு நாடகம், மகர பஞ்சாட்சரம், பொன் விலங்குகள், விஜயரங்கம், சபாபதி, பொங்கல் பண்டிகை, ஒரு ஒத்திகை, மனைவியால் மீண்டவன், தாசிப்பெண். இடை சுவர் இருபுறமும், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, விச்சுவின் மனைவி, என்பவைகளைக் கூறலாம்.

அன்றியும் தற்காலம் வெளிவ்ரும் தமிழ் நாடகங்களை ஆராயுமிடத்து சரித்திர சம்பந்தமான நாடகங்கள் மிகவும் சிலவென்றே கூறல் வேண்டும். இவைகளுக்கு உதாரணமாக, தஞ்சைநாயகர் தாழ்வு போஜசரித்திரம், பூதத்தம்பி விலாசம், பிரித்விராஜ், ரஜபுத்ர வீரன், புத்த அவதாரம், முதலியவற்றை ஒருவாறு இப்பிரிவுக்கு உதாரணமாகக் கூறலாம்.