நாடகத் தமிழ்/தமிழ் நாடகங்கள்

தமிழ் நாடகங்கள்

இனி பண்டைக்கால முதல் இன்னின்ன கதைகள் நாடகங்களாகத் தமிழில் ஆடப்பட்டன என்பதை ஆராய்வோம். பூர்வ காலத்தில் ஆடப்பட்ட நாடகங்கள் புராணக்கதை சம்பந்தமானவை என்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. அல்லியம் கொடுகொட்டி முதலிய ஆடல்களைப் பற்றி முன்பே கூறியுள்ளோம். கதை தழுவி நாடகமாக ஆடிய கூத்துகளில் 'வள்ளிக் கூத்து' என்பது ஒரு மிகப் பழமையானது என்று நாம் கூற வேண்டும். இதைப்பற்றித் தொல்காப்பியத்தின் உரையில் குறிப்பிட்டிருப்பதை முன்பே கவனித்திருக்கிறோம். முருகக் கடவுள் வள்ளியம்மையை மணந்த கதையே வள்ளிக் கூத்தாம். அக்காலத்தில் இதனை வள்ளி நாடகம் என்று பெயரிட்டழைக்காது வள்ளிக் கூத்து, என்று கூறப்பட்டிருக்கிறது இங்கு முக்கியமாய்க் கவனிக்கத்தக்கது. ஸ்ரீகண்ணபிரான் சிறு பருவத்தில் பலதேவரோடும் நப்பின்னைப் பிராட்டியோடு மாடிய ஆடல்கள் நாடகங்களாகப் பூர்வ காலத்தில் ஆடப்பட்டன என்பதும் தெரியவருகிறது. இவை 'பால சரிதை நாடகம்' என்று கூறப்பட்டுள்ளன. பால சரிதை நாடகம் என்பதற்கு பிள்ளைச் சரித நாடகம் என்று உரையாசிரியர் உரை எழுதியுள்ளார்.

இதற்குப் பின் நான் இதுவரையில் ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த தமிழ் நாடகத்தின் பெயர், "ராஜராஜேஸ்வர நாடகம்" என்பதாம். இது தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலின் வடக்குப் பிரகாரத்தின் வெளியிலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகத்தைத் திருவாளன் திருமுதுகுன்றான விஜய ராஜேந்திர ஆசாரியன் என்பவனைத் தலைவனாக உடைய சில நபர்களால் அக்கோயிலில் வைகாசி மாசம் திருவிழாவில் ஆடுவதற்காக இவ்வளவு தான்யம் கொடுக்கப்பட்டதென்று வரையப்பட்டிருக்கிறது. அதில் எழுதியிருப்பது அடியில் வருமாறு : "திருவாளன் திருமுது குன்றான விஜயராஜேந்திர ஆசாரியன் உடையார், வைகாசிப் பெரிய திருவிழாவில், ராஜராஜேஸ்வர நாடகமாட, இவனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும், காணிய கப்பங்கு ஒன்றுக்கும், ராஜகேசரி யோடொக்கும், ஆடவல்லான் என்னும் மரக்காலால் நித்த நெல்லுத் துணியாக நூற்றிருபதின் கல நெல்லும், ஆண்டாண்டுதோறும் தேவர் பண்டாரத்தே பெறச் சந்திராத்யர். . ...கல்வெட்டித்து', 'ஸ்ரீராஜராஜேஸ்வரமுடையார் கோயிலில் ராஜ ராஜேஸ்வர நாடகமாட நித்தநெல்லுத் தூணியாக நிபந்தம் செய்த, நம் வாய்க் கேழ்விப்படி, சாந்திக் கூத்தன், திருவாளன் திருமுதுகுன்றான விஜய ராஜேஸ்வர ஆசார்யனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் காணியாகக் கொடுத்தே பெற்றா............. ............ ......" இக் கல்வெட்டுகள் சோழராஜனாகிய ராஜேந்திர தேவர் காலத்தைச் சேர்ந்தன. இதனால் நாம் அறியத்தக்க விஷயங்கள் பல உள. முதலாவது ராஜேந்திரதேவர் காலமாகிய அக்காலத்தில், தமிழ் நாடகங்கள் வழங்கி வந்தனவென்பதாம். அவைகள் சாதாரணமாக கோயில்களின் உற்சவ காலத்தில் நடத்தப்பட்டன வென்பதும் வெளிப்படையாம் ; தற்காலமிருப்பதுபோல கிராமதேவதைகளின் கோயில்களில் மாத்திரமன்றி பெருங்கோயில்களிலும் உற்சவ காலத்தில் இவ்வழக்கம் இருந்திருக்க வேண்டும், அன்றியும் கோயில்களிலுள்ளே நாடகங்கள் அக்காலத்தில் நடத்தப்பட்டபடியால் அவை மிகவும் கீழ்ப்பட்டனவாக அக்காலத்தில் மதிக்கப்படவில்லை யென்பதும் புலப்படும். மேலும் தற்காலம் சில கோயில்களில் தாசிகள் நாடகம் நடத்துவது போலல்லாமல் ஆண்மக்களும் நாடக மாடினர் என்பது தெற்றென விளங்குகிறது. அன்றியும் அந்நாடகமாடுபவர்களில் முக்கியமானவனுடைய பெயரைச் சொல்லும் பொழுது திருவாளன் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; அவன் சாமன்யமானவனாய் இருந்தால் அப்பதம் அவனது பெயர் முன் வரையப்பட்டிராது என்பது திண்ணம். அல்லாமலும் அவனைச் சாந்திக்கூத்தன் என்று குறிப்பிட்டது நமக்கு மிகவும் உபயோகமாயிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வகுக்கப்பட்ட சாந்திக்கூத்தானது ராஜேந்திரதேவர் சோழன் காலமாகிய சுமார் ஆயிரம் வருஷத்திற்கு முன்னிலும் வழக்கத்திலிருந்தது என்று நன்றாய் நிரூபிக்கப்படுகிறது. ராஜராஜேஸ்வரன் ஆள ஆரம்பித்த காலம் கி.பி.884 ஆம். சாந்தி கூத்தாடுபவனே சாந்திக்கூத்தன் ஆவான்.

இவ்வளவாவது ஒரு பூர்வீகத் தமிழ் நாடகத்தைப் பற்றி நமக்கு விவரம் கிடைத்ததே என்று நாம் கொஞ்சம் சந்தோஷப்படுவதற்கு இடம் கொடுத்த போதிலும், அத்தமிழ்நாடகத்தின் பெயரன்றி, நாடகத்தின் கதை விவரம் ஏதும் கிடைத்திலதே என்று நாம் துக்கப்படக் காரணமாயிருக்கிறது. மேற்கூறிய கல்வெட்டுகளை வெளிப்படுத்திய கவர்ன்மென்ட் கல்வெட்டுப் பரீட்சகர், இந்த ராஜராஜேஸ் வர நாடகத்தின் கதையானது, ராஜராஜ சோழனால் தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயில் கட்டிய கதையென்பதற்குச் சந்தேகமில்லை யென்று கூறியிருக்கிறார், அவருடைய பேரறிவை மெச்சி, அவர் தமிழுலகத்திற்குச் செய்த பெரும் உதவியைச் சீர்தூக்கவேண்டியவ னாயினும், இந்நாடகக் கதையைப் பற்றி இவ்வாறு கூறியது சரியென என் சிற்றறிவிற்குப் புலப்படவில்லை யென்றே நான் கூறவேண்டும். ஒருகால் இந்நாடகக் கதை ராஜராஜ சோழன் கொண்ட வெற்றியைப் பற்றியதாயிருக்கலாம்; இன்னும் நமக்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கும் வரையில் கதை இன்னதென்று சொல்ல முடியாதென்று கூறுதலே தகுதியாம். இந்நாடகத்தைப் பற்றி ஏதேனும் வேறு விபரம் கிடைக்குமா என்று நான் தஞ்சைக்குச் சென்று எத்தனையோ பெயரைக் கேட்டும் ஒன்றும் கிடைத்திலது. கோயிலில் விசாரிக்குமிடத்து, தற்காலம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் அஷ்டக்கொடி உற்சவம் எனும் ஒரு தினத்தில் "சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்" எனும் ஓர் நாடகம் ஆடப்படுவதாக அறிந்தேன். இது ஒண்டபுரம் சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பட்டது. இந்நாடகம் தற்காலம் தாசிகளாலே ஆடப்படுகிறது. குறவஞ்சி என்பது பிற்காலத்தில் வந்த ஓர் நாடகப் பகுதியாகக் காண்கிறது. குறவஞ்சிகளைப் பற்றி பிறகு கூறுகிறேன்.

பூர்வ காலத்தில் கோயில்களின் உற்சவ சமயத்தில் தமிழ் நாட்டில் தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன வென்பதற்கு இன்னொரு உதாரணம் கிடைத்துள்ளது. திருநெல்வேலி ஜில்லாவில் பட்டமடை எனும் கிராமத்தில் ஸ்ரீவல்லீஸ்வரம் எனும் கோயில் கல்வெட்டுகளில் அக்கோயில் அதிகாரிகள் உய்யவந்தாள் அழகிய யசோதை எனும் தாசிக்கு, உற்சவ காலங்களில் நாடகமாடுவதற்காக, கொஞ்சம் பூமி மான்யமாகக் கொடுத்ததாக வரையப்பட்டிருக்கிறது. இதனால் நாம் அறியக்கூடிய விஷயங்கள், அக்காலத்தில் கோயில்களில் தாசிகள் நாடகமாடும் வழக்கம் உண்டென்றும், அவர்களுக்குப் பரம்பரையாக அவர்களனுபவித்து வர மான்யங்கள் விடப்பட்டனவென்பதுமாம். ஆயினும் நமது துர் அதிர்ஷ்டத்தால் இப்படி நடத்தப்பட்ட நாடகத்தின் பெயரும் நமக்குக் கிடைத்திலது. இச்சந்தர்ப்பத்தில் நாம் கவனிக்கத்தக்கது என்னவெனில், பூர்வ காலத்தில் அநேக ஸ்தலங்களில் அந்தந்த ஸ்தல புராணக் கதைகளே நாடக ரூபமாகத் தமிழில் அவ்வக்கோயில் தாசிகள் ஆடினர் என்பதாம்.

இதற்குப் பிறகு சுமார் பதினேழாம் நூற்றாண்டின் கடைசியில் 1695இல் முதல் சில நொண்டி நாடகங்கள் இருந்ததாக அறிகிறோம். திருக்கச்சூர் நொண்டி நாடகம் " என்பது ஒன்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நாடகக் கதை என்னவெனில், கதா நாயகன் துன்மார்க்கனாயிருந்து, வேசிகள் வலையிற் சிக்கி, பிறகு தண்டனைக்குட்பட்டு, அவயவங்களை இழந்தவனுகி, நொண்டியாய், பிறகு ஒரு தெய்வத்தை அனுசரித்து வழிபட, தன் கைகால்களேப் பெற்றான் என்பதே, எல்லா நொண்டி நாடகங்களும் சற்றேறக்குறைய இம்மாதிரியாகவே இருக்கும். தற்காலம் சென்னையில் ராஜாங்கத்தார் ஏற்படுத்தியுள்ள ஓலைப் புஸ்தகசாலையில், பழனி நொண்டி நாடகம், செய்தக்காதிபேரில் நொண்டி நாடகம் எனும் இரண்டு நாடகங்கள் தமிழ்ப் பாஷையில் ஓலையில் எழுதப்பட்டன வாயிருக்கின்றன. கடைசியில் கூறப்பட்ட நொண்டி நாடகமானது சுமார் இப்போதைக்கு 225 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும்.

பிறகு 'இராமநாடகம்' என்னும் ராமாயணக் கதையைத் தழுவிய தமிழ் நாடகம் உளது. இது 1712 முதல் 1779 வருஷம் வரையில் இருந்த அருணசலக்கவிராயரால் இயற்றப்பட்டது. இது சொற்சுவை, பொருட்சுவை முதலியன மிகவும் அமைந்தது. இதன் முழுப்பெயர் இராம நாடகக் கீர்த்தனை என்றிருந்த போதிலும் நாடக பாணியிலேயே எழுதப்பட்டதென்பதற்குச் சந்தேகமில்லை. மற்ற நாடகங்களிலிருப்பதுபோல் முதலில் கடவுள் வணக்கம், விநாயகர் ஸ்துதி முதலியனவும், முதலில் மங்களமும் தோடயமும் இருக்கிறதைக் காண்க. கட்டியம் வசனம் பொருந்தியது. இடையிடையே நாடகக் கதையைச் சொல்லுமிடத்து, விருத்தங்களை நாடக ஆசிரியர் உபயோகித்திருக்கிறார். இந்நாடக ஆசிரியர் இதைப் போலவே அசோமுகி நாடகம் என்னும் ஒரு நாடகத்தை இயற்றியுள்ளார்.

இராம நாடகத்தைப் போல். பாரதக் கதையை இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் 'பாரதவிலாசம்' என்று இயற்றியுள்ளார். இவரது காலம் அருணசலக் கவிராயருடைய காலத்திற்குப் பிற்பட்டதாகும். இவரியற்றிய மற்ற தமிழ் நாடகங்கள், இரங்கூன் சண்டை நாடகம், சகுந்தலை விலாசம், தாருகா விலாசம். இதிகாசப் புராணக் கதைகளே யன்றி சரித்திரக் கதையைக் குறித்து தமிழில் எழுதிய நாடகங்களில் இரங்கூன் சண்டை நாடகம்தான் முற்பட்டதென எண்ணவேண்டியிருக்கிறது. இவர் காலத்தில் தமிழ் நாடகங்களுக்கு விலாசம் எனும் பெயர் சாதாரணமாக வழங்கத் தலைப்பட்டதை இங்கு நாம் குறிப்போமாக.

இதற்கு முன்பாக "நீலி நாடகம்" என்ற ஒரு தமிழ்நாடகம் இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அதைப்பற்றி பெயர் அன்றி வேறொன்றும் தெரியவில்லை. இதற்குப் பிறகு தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜா சரஸ்வதி மஹாலில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் புத்தகசாலையில் ஏட்டுப் பிரதிகளாக சில தமிழ் நாடகங்கள் கிடைத்துள்ளன. அவைகளில் "மதன சுந்தர பிரசாத சந்தான விலாசம்" என்பது ஒன்று, இது அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இவர் ராமநாடகம் இயற்றிய அருணாசலக் கவிராயர் அல்லவென்றும் அப்பெயர் கொண்ட வேறொருவர் என்றும் எண்ணவேண்டியிருக்கிறது. வட மொழியில் காளிதாசர் கீர்த்தியடைந்த பிறகு அநேக காளிதாசர்கள் கிளம்பியதாக அறிகிறோம், அதுபோல் அருணாசலக் கவிராயர் புகழடைந்த பிறகு மற்றவர்கள் அவர் பெயரைப் பூண்டாவது, அல்லது தாம் இயற்றிய நூலுக்கு அவரை ஆசிரியராகவாவது ஆக்கியிருக்கலாம். இந்த நாடகமானது தஞ்சாவூரில் அரசு புரிந்த ஒரு சோழ அரசனுடைய மகள் சுகமாய் வாழ்ந்திருக்கவேண்டி மதன சுந்தரேஸ்வரரைப் பூசித்து வரம் பெற்றக் கதையை கூறுவதாம். இதில் "சித்தமகிழ்ந்து சிவாஜி ராஜேந்திரன் உத்திரவுபடி உலகினிலோங்கிட அருணசலக் கவி அன்புடன் உரைத்த திருவளர் நாடகம்" என்று எழுதியிருப்பதால், 1883 முதல் 1855 வரை அம்மன்னன் தஞ்சையில் ஆண்டமையால் இதன் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையெனக் கூறலாம்.

புரூரவ சக்கரவர்த்தி நாடகம்: இன்னொன்று, இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நாடகக்கதை பாரதக் கதையை தொடர்ந்ததாகும். சந்திர வம்சத்துதித்த புரூரவன் தன் அரசையும் மனைவி மக்களையுமிழந்து பல துன்பங்கள் அனுபவித்து கடைசியில், எல்லாவற்றையும் முன்போல் பெற்ற கதையைக் கூறுவதாம். காளிதாச மகாகவி எழுதிய விக்ரமோர்வசியம் எனும் நாடகத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. மற்றொன்று அரிச்சந்திர நாடகம் என்பது, இதன் ஆசிரியர் மறையவர்குல வீரலிங்க பாரதி என்று அறிகிறோம். இந்த ஆசிரியரே சிறுத்தொண்டர் நாடகம் ஒன்றும் இயற்றியதாக எண்ண இடமுண்டு. இதன்றி ஆசிரியர் பெயர் தெரியாத இன்னும் சில அரிச்சந்திர நாடகங்கள் ஏட்டுப் பிரதிகளாயிருக்கின்றன. சாரங்கதர நாடகத்திற்கு மூன்று ஏட்டுப் பிரதிகள் இருக்கின்றன. இவைகளின் ஆசிரியர் பெயர்கள் விளங்கவில்லை. பாண்டி கேளிவிலாச நாடகம் என்று ஒரு புஸ்தகமும் இருக்கின்றது. இதை இயற்றியவர் நாராயண கவி, தஞ்சாவூரை யாண்ட சிவாஜி மகாராஜா கேட்டுக்கொண்டபடி இந்நாடக ஆசிரியர் இதை இயற்றியதாக அறிகிறோம். இவைகளெல்லாம் இன்ன வருஷங் களில் இயற்றப்பட்டன என்று நிர்ணயிப்பதற்கு போதுமான ஆதாரமில்லை. சாதாரணமாக ஓலைப்புஸ்தகங்களில், அச்சிடப்பட்ட புஸ்தகங்களிலிருப்பதுபோல், இன்ன வருஷம் எழுதப்பட்டது என்று குறிப்பிடுவதில்லை. பாண்டி கேளிவிலாச நாடகம் தஞ்சாவூரையாண்ட சிவாஜி மகாராஜாவின் காலத்தில் இயற்றப்பட்டதால், இப்போதைக்கு சுமார் 150 வருஷங்களுக்கு முன் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்று நிச்சயிக்கலாம்.

மேற்குறித்த நாடகங்களன்றி, இத்தஞ்சை ஏட்டுப் பிரதிகளுள் "சுபத்திரைக் கல்யாணம்" என்பது அகவல், தரு, விருத்தம், சிந்து, முதலியன விரவி நாடகம்போற் செய்யப்பட்டுள்ளதென, அவ்வேட்டுப் பிரதிகளே மிகவும் பிரயாசைப்பட்டு பரிசோதித்த உலகநாத பிள்ளை எனும் தமிழ்ப் பண்டிதர் எழுதியிருக்கிறார். இதைச் செய்த ஆசிரியர் பெயர் நன்னிலம் நாரணன் என்பதாம்,

அன்றியும் சென்னை துரைத்தனத்தார் ஏற்படுத்தியிருக்கும் பழைய ஏட்டுப் புஸ்தகசாலையில், முப்பது தமிழ் நாடகங்களுக்கு மேல் இருக்கின்றன. அவையாவன :


(1) இரணிய சம்ஹார நாடகம் :- இது மிகவும் பழைய ஏட்டுப் பிரதியாகத் தோன்றுகிறது, மிகவும் சிதிலமாய்க் கிடக்கிறது, எடுத்துப் பார்க்கும்பொழுது ஏடுகள் துாள் தூளாகிப் போகின்றன, இதில் வசனமும் தருக்களும், விருத்தங்கள் முதலியனவும் அடங்கியிருக்கின்றன. இப்புஸ்தகத்தின் முதல் ஏடு இல்லை; நாடகத்தின் கதை மஹாவிஷ்னு நான்காவது அவதாரமெடுத்து, பக்தனாகிய பிரஹ்லாதாழ்வாருக்காகத் தூணில் தோன்றி ஹிரண்யாசுரனைக் கொன்றதாம். இப்புஸ்தகத்தில் மல்லர்கள் ஆயுதங்களைக்கொண்டு பிரஹ்லாதரை வருத்துகையில் அவர் மஹாவிஷ்ணுவைத் துதிக்கும் வரையில் தானிருக்கிறது. கடைசியில் வேறு சுவடியின் சில ஏடுகள் சில சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் கட்டியக்காரன் வருகிற தருவில், அவன் சல்லடம் பூண்டிருப்பதாயும், சால் வயிறுடையவனாகவும் வர்ணித்திருக்கிறது. கட்டியக்காரனே அகசியக் காரணுகவும் இதில் வருவது கவனிக்கத்தக்கது, செய்யுள் நடையும் வசன நடையும் மிகவும் பிழையுள்ளதாயிருக்கிறது; விருத்தம் என்பதற்கு விருற்றம் என்று எழுதியிருக்கிறது; இது ஆசிரியர் குற்றமோ அல்லது எழுதியவர் குற்றமோ கூறுவதற்கில்லை. இச் சுவடியில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றல் இதில் கண்டிருக்கும் தருக்களுக்கு தாளங்கள் குறிப்பிடவில்லை. இதே கதையை பிரஹ்லாத நாடகமெனப் பெயரிட்டு எழுதப்பட்ட இன்னொரு நாடகச் சுவடியும் இங்குள்ளது.

(2) இராம நாடகம்: இதைப்பற்றியும் இதன் ஆசிரியரைப் பற்றியும் முன்பே கூறியிருக்கிறேன். இந்தப் பிரதி சம்பூர்ணமாயிருக்கிறது. பெயர்த்து எழுதியவர் குறையாக இதில் பல எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் கவனித்து இதனை ம-ள-ள-ஸ்ரீ திவான் பஹதூர் பவானந்தம் பிள்ளை அவர்கள் அச்சிட்டிருக்கிறார். இந்த ஓலைக்கட்டின் கடைசியில் உத்தர ராமாயண நாடகமும், மைராவண நாடகமும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் வசனநடை கிடையாது.

(3) உத்தரராமாயண நாடகம்: இதில் வெண்பா, விருத்தம், முதலியனவும் ராக தாளங்களோடு கூடிய தருக்களும் இருக்கின்றன. வசனம் கிடையாது. செய்யுள் நடை அவ்வளவு சிறந்ததாகத் தோன்றவில்லை. இதை இயற்றியவர் சுமார் 108 வருடங்களுக்கு முன்பிருந்த அநந்தர் எனும் ஓர் விப்பிரர். இதை அரங்கேற்றியது கலி 4921இல் என இதிலுள்ள ஒரு பாட்டினால் தெரிகிறது.

(4) கந்தர் நாடகம்: ஸ்காந்த புராணக் கதையை ஒட்டி எழுதப்பட்ட நாடகம்; சுப்பிரமணியர் பிறந்தது முதல் வள்ளியம்மை மணம் வரையில் நாடக ரூபமாக எழுதியிருக்கிறது. இதை இயற்றியவர் பாலசுப்பிரமண்யக் கவிராயர் என்பவர்; அரங்கேற்றியது கலி 4905ல்; இயற்றியது சுமார் 114 வருடங்களுக்கு முன்பாம். இதில் தர்க்கப் பாட்டுகளும் அடங்கியிருக்கின்றன, அதாவது நாடக பாத்திரங்கள் ஒருவர்க்கொருவர் பாட்டுகளினாலேயே பதில் உரைப்பதாம்.

(5) காத்தவராய நாடகம்: இதில் கதாநாயகனை காத்தவராயன் என்பான், நாரதர் தூண்டுகோளின் மீது மூன்று அழகிய பெண்களை மணந்த கதையை நாடகமாக எழுதப்பட்டிருக்கிறது. இதில் கட்டியக்காரனை வர்ணிக்கிற தருவில் "கோணங்கி குல்லாய் போட்டு காலில் சிலம்பணிந்து வேடிக்கைக் கட்டியக்காரன்" வருவதாக வர்ணித்திருப்பது கவனிக்கத்தக்கது. இதில் வசனமும் உண்டு. தருக்களுக்கு ராக தாளங்கள் குறிப்பிடவில்லை. இதை நோக்குமிடத்து இதை இயற்றியவர் இசைஞான மில்லாதவரா யிருக்கலாம் எனத் தோன்றுகிறது. தற்காலத்திலும் சிலர் பாட்டுகளை எழுதிவிட்டு அவைகளுக்கு இசை வல்லாரைக்கொண்டு தக்க ராக தாளங்கள் அமைப்பது வழக்கமாயிருக்கிறது. கோவிந்த நாயக்கர் என்பவருடைய ஏட்டு பிரதிக்கிணங்க இது அச்சிடப்பட்டிருக்கிறது. இதிலுள்ள தருக்களுக்கு ராக தாளங்கள் அமைத்தவர் பொன்னரங்கம் முதலியார் என்பவர்.

(6) குசலவ நாடகம் : இதன் கதை உத்தரராம சரித்திரத்தின் கதையே. இது நாடகமாக ஆடப்பட்டதென்று கூறுவதற்கு, இதில் “சகல ஜனங்களும் பாருங்களேய்யா' என்று எழுதியிருக்கிறதே சான்றாகும். நடை பிழையுள்ளதாயிருக்கிறது. இஃதன்றி இன்னொரு குசலவ நாடகப் பிரிதியும் இருக்கின்றது.

(7) ஜமதக்னி நாடகம்: இது பரசுராமர் கதையை நாடக ரூபமாகக் கூறுவதாகும்.

(8) சவ்வருண நாடகம் : இது சவ்வருணன் எனும் அரசனுடைய புராணக் கதையைக் கூறும் நாடகமாம்.

(9) தக்க நாடகம் : தட்த யாகத்தின் கதையை நாடகமாகக் கூறுவதாகும். இதில் விருத்தங்களும் ராக தாளங்களோடு கூடிய தருக்களும், வசனமும், இருக்கின்றன. இதில் தர்க்கம் என்பதற்கு பதிலாக பாணி என்கிற பதம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. "மஹா விஷ்ணு பரமசிவனுக்கு சொல் "பாணி" என்று எழுதியிருக்கிறது.

(10) தேரூர்ந்த நாடகம் : இது வரதப்பைய குமாரர் பெருமாளேயர் என்பவரால் இயற்றப்பட்டது. திருவாரூரில் சோழ அரசன் ஒருவன் கன்றின்மீது தேரைச் செலுத்தின குற்றத்திற்காகத் தன் மகன்மீது தன் தேரைச் செலுத்தின கதையை நாடகமாகக் கூறுவது.

(11) பாண்டவர் சூதாட்ட நாடகம்: என்கிற ஒரு ஏட்டுப் பிரதியிருக்கிறது. இது நாடகம் எனும் பெயர் படைத்தாயினும், புஸ்தக அட்டவணையில் நாடகங்களின் கீழ் இதை குறித்திருந்தபோதிலும், இது நாடகமன்று என்றே கூறவேண்டும் புகழேந்திப்புவவரியற்றிய அல்லி அரசாணிமாலை புலந்திரன் தூது முதலிய நூல்களுடன் இதைச் சேர்க்கவேண்டும், இதை இசைப்பாட்டெனவே கூறவேண்டும். நாடக லட்சனங்கள் இதில் ஒன்றையும் காணோம். இது பாடப்பட்டிருக்கலாமேயொழிய ஆடப்பட்டிருக்க மாட்டாது. எனது சிறு வயதில் பெண்கள் இதை இசையுடன் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.

(12) துரௌபதி துகிலுரிதல் நாடகம்: இது பாரதக் கதையை ஒட்டியது.

(13) துளசிதாசர் நாடகம் : துளசிதாசரது சரித்திரத்தை நாடக ரூபமாய்க் கூறுவதாம்.

(14) மன்மத நாடகம் : இதற்கு மற்றொரு பெயர் ரதி புலம்பல்.

(15) மைராவண நாடகம் : தற்காலத்தில் பாகவதர்கள் மயில் ராவணன் கதை என்று சொல்லுகிற கதையை நாடக ரூபமாக உடையது. சமஸ்கிருதத்தில் 'மைராவணன்' என்றே கூறப்பட்டிருக்கிறது. இப்பெயர் மருவி மயில் ராவணன் என்று வழங்கியிருக்கலாம் எனத் தோற்றுகிறது.

(16) பாராங்குச நாடகம் : இது வைஷ்ணவ மதாசாரியர்களுள் ஒருவராகிய நம்மாழ்வார் சரித்திரத்தை கூறுவது. இதை இயற்றியவர் ஸ்ரீரங்கத்து கந்தாடை அண்ணன் என்பவருடைய சிஷ்யராகிய சேஷக்கவி என்பவர். இதில் தோடயமானது சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் கூறப்பட்டிருக்கிறது. தோடயத்துக் கப்புறம் மங்களம் எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும் நாடகங்களுக்குரிய மற்ற இலட்சணங்கள் இல்லாதிருக்கிறபடியால் இதை இசைப் பாட்டின் பகுதியிலேயே சேர்க்கவேண்டும்.

(17) சீங்கீஸ்வர ஸ்வாமியார் பாரிஜாத நாடகம்: இதை இயற்றியவர் பொன்னையா என்பவரின் புத்திரரான குமாரஸ்வாமி என்பவர். இதில் வசனத்தைக் கூறுமிடத்து, சபா வசனம் என்றும் பொது வசனம் என்றும் இரண்டு பிரிவுகளைக் காட்டியிருக்கிறது.

மேற்குறிப்பிட்டவைகள் அன்றி, ராஜகோபாலன் என்பவர் இயற்றிய சுக்கிரீவ விஜயம் எனும் நாடகமும், குமரபிள்ளை என்பவர் எழுதிய வள்ளியம்மை நாடகம் என்பதும், சுப்பிரமணிய விலாசம் அல்லது சுப்பரா விலாசம் என்பதும் இப் புஸ்தகசாலையில் இருக்கின்றன. இவைகளன்றி சாரங்கதார யட்சகானம், சிறுத்தொண்டர் யட்சகானம், கீலியட்சகானம், வல்லாளராஜன் யட்சகானம் என்று நான்கு யட்சகானப் பிரதிகளும் இவ்விடம் இருக்கின்றன. இவைகள் யட்ச கானம் எனும் பெயர் படைத்தவையாயினும் நாடகங்களின் பகுதியிலேயே சேர்க்கப்படவேண்டும்; இவைகள் நாடகங்களுக்குரிய உறுப்புகளைப் பெரும்பாலும் உடைத்தாயிருக்கின்றன. சிறுத்தொண்ட நாயனாருடைய கதையைக் கூறும் சிறுத்தொண்டர் யட்ச கானம் என்பது ஞானப்ரகாசம் என்பவரால் இயற்றப்பட்டது; வசனமுடைத்தாயிருக்கிறது. நீலியட்ச கானம் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த நீலன் நீலி என்னும் பேய்களின் சரித்திரத்தைக் கூறுவது; இதுதான் முன்பு கூறப்பட்ட நீலி நாடகம் என்பது போலும், வல்லாளயட்ச கானமானது வல்லாள ராஜன் கதையை நாடக ரூபமாகக் கூறுவது. இம்மாதிரியான யட்ச கானங்கள் தெலுங்கு தேசத்தில் ஆந்திர பாஷையில் அநேகம் இருக்கின்றன.


இதன் பிறகு, எனது ஆராய்ச்சிக்குக் கிட்டியவரையில், வள்ளி நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், என்னும் இரண்டைக் கூறவேண்டும். இவை இரண்டும் அநேக வருஷங்களுக்குமுன் காஞ்சீபுரம் கோயில் நட்டுவனான சுப்பராய நட்டுவன் என்பவனிடம் கண்டேன். இவை இரண்டும் பனை ஏட்டில் வரையப்பட்டன. அவனை விசாரிக்குமிடத்து நான்கு ஐந்து தலைமுறையாகத் தன் குடும்பத்தில் இவை காப்பாற்றப்பட்டு வந்தனவென்று தெரிவித்தபடியால், இவை சுமார் நூற்றிருபது. வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டன என்பதற்கு ஐயமில்லை. இவைகள் காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் சந்நிதியில் வசந்தோற்சவ முதலிய உற்சவகாலங்களில் சில சமயங்களில் ஆடப்பட்டன வென்றும் தெரிவித்தான்; அக்கோயில் தாசிகள்தான் இவைகளை ஆடுவது வழக்கமாம். இவைகளை நான் விலைகொடுத்து வாங்க முயன்ற பொழுது, தான் அவைகளைப் பூசித்து வருவதாயும், ஆகையால் அவைகளை விற்கக் கூடாதென்றும் கூறி வாங்கிக்கொண்டு போய் விட்டான். அந்நட்டுவன் அவைகளை அச்சிடவும் இடங்கொடுக்க வில்லை. இப்பொழுது இப் புஸ்தகங்கள் நசித்துப்போயினவோ இருக்கின்றனவோ அறிகிலேன். நாகரீகம் அடைந்திருக்கிறோமென நாம் கொஞ்சம் கர்வம் கொள்ளும் இக்காலத்திலேயே, நமது தமிழ்ப் புஸ்தகங்களின் கதி இப்படியானால், பூர்வீக காலத்திலிருந்த தமிழ் நாடகங்கள் பெரும்பாலும் நசித்துப்போனது ஓர் ஆச்சரியமன்று. மற்றவர்கள் அறிந்தால் அதன் மகிமை குறைந்து போய்விடும் எனும் எண்ணத்தினாலோ. அல்லது மற்றவர்கள் அதைக் கற்றால், அதனால் தங்களுக்கு வரும் ஊதியம் குறைந்துபோகும் எனும் எண்ணத்தினாலோ, மேற்கூறியவை போன்ற அநேகம் தமிழ் நாடகங்கள், இரகசியமாய் மற்றவர் கண்களுக்குப்படாமல் பாதுகாக்கப்பட்டு நாளாவர்த்தியில் நசித்துப்போயிருக்க வேண்டுமென்பதற்குச் சந்தேகமே யில்லை. இச்சந்தர்ப்பத்தில் வள்ளியின் கலியாணக் கதையானது வெகுநாளாய் நாடக ரூபமாக நமது தமிழ் நாட்டில் ஆடப்பட்டது என்பது கவனிக்கற்பாலது. சிலப்பதிகார உரையாசிரியர் காலத்திலேயே "வள்ளிக்கூத்து" என்று ஒரு தமிழ்க் கூத்து இருந்ததைமுன்பே குறித்திருக்கிறோம் முருகக்கடவுள் தமிழ் நாட்டிற்குரிய கடவுள் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே; அவர் வள்ளி நாயகியாரை மணந்த கதை ஆதிகாலம் தொட்டு நாடகமாக ஆடப்பட்டது ஆச்சரியமன்று. தற்காலத்திலும் அநேக சுப்பிர மணிய க்ஷேடித்திரங்களில் வள்ளி நாயகியின் மனத்தை உற்சவ காலங்களில் கோயில் தாசிகள் வேஷம் பூண்டு நடித்து வருவதைக் காணலாம். இன்றைக்கும் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோயில் உற்சவத்தில், ஒரு நாள் இக்கதையை நாடகமாக அக்கோயில் தாசிகள் "வேடர் பறி" எனும் உற்சவ தினத்தில் ஆடி வருகிறார்கள்.

முற்காலத்தில் ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும், அந்தக்ஷேத்திரத்தின் மஹாத்மியத்தை நாடக ரூபமாக ஆடுவதுண்டென்பதற்கு ஒரு உதாரணமாக புறம்பயம் என்னும் க்ஷேத்திரத்தில் ஆடப்பட்ட வன்னி நாடகம் எனும் ஒர் தமிழ் நாடகத்தைக் கூறலாம். புறம்பயம் எனும் க்ஷேத்திரம் கும்பகோணத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு சிவஸ் தலம். இந்த வன்னி நாடகமானது பல வருஷங்களுக்கு முன்பு வரையில், வருஷாவருஷம் இவ்வூரில் ஆடப்பட்டதாக ம-ள-ள- ஸ்ரீ திரு மலைக்கொழுந்து பிள்ளை அவர்கள் பி. ஏ. கூறியிருக்கிறார்,

திருக்கழுக்குன்றம் எனும் பாடல் பெற்ற க்ஷேத்திரத்தில் அநேக வருஷங்களுக்கு முன், கோயில் உற்சவகாலத்தில் அந்த க்ஷேத்திரத்தின் கதையை நாடகரூபமாக சுரகுரு-நாடகம்” என்று கோயில் தாசிகள் ஆடி வந்தார்கள், தற்காலத்தில் என்ன காரணம் பற்றியோ அது நின்று விட்டது. இந்த சுரகுரு நாடகத்தை தமிழில் எழுதியவர் பேறை தசாவதானம் ஜெகந்நாத பிள்ளை என்று அறிகிறேன்.

இதற்கப்பால் இதிகாச புராணங்களிலுள்ள கதைகளை ஒட்டி தமிழில் எழுதப்பட்ட நாடகங்கள் அநேகம் உள்ளன. உதாரணங்களாக கீசக நாடகம், வாணாசுர நாடகம், பதினெட்டாம் போர் நாடக அலங்காரம், சயிந்தவ நாடக அலங்காரம், இரணிய நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், சூரபத்ம நாடகம், குசலவ நாடகம், ருக்மாங்கத நாடகம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, முதலியவற்றைக் கூறலாம். இவைகளைப்பற்றி அனுபந்தத்தில் மற்ற விஷயங்களைத் தெரிவித்திருக்கிறேன். இக்காலத்தில் புராணக் கதைகளைத் தழுவாது, பூர்வீக கற்பனைக் கதைகளைத் தழுவிய நாடகங்கள், சில உண்டு; அவை: வீர குமார நாடகம், காத்தவராய நாடகம், மதுரைவீர நாடகம், நல்ல தங்காள் சரித்திரம், அலிபாதுஷா நாடகம், சந்திரஹாச நாடகம், அதிரூபவதி நாடகம், அலங்காரருபவதி நாடகம், ஜோகி நாடகம், முதலியனவாம். இவற்றைப்பற்றியும் மற்ற விஷயங்களை அனுபந்தத்தில் கண்டு கொள்க. மேற்கூறிய நாடகங்களில் நாம் முக்கியமாகப் பாராட்டத்தக்கது, நந்தனர் சரித்திரக் கீர்த்தனை என்பதேயாம். இது கீர்த்தனை என்று பெயர்படைத்தபோதிலும் நாடகமே. இது பழைய நாடகங்களைப்போல் வினாயகர் துதி, தோடயம், முதலில் மங்களம், பொதுவசனம் முதலியன உடைத்தாயிருந்தபோதிலும், சொற்சுவை பொருட்சுவையில் மிகவும் அழகும் அருமையும் வாய்ந்தது. இது கோபாலகிருஷ்ண பாரதி என்பவராற் செய்யப்பட்டது. இதிலுள்ள பாடல்கள் தென் இந்தியா முழுவதும் பரவி சாதாரண சங்கீதக் கச்சேரிகளில் மிகவும் உபயோகப்பட்டு வருகின்றன. இந்நாடக ஆசிரியரால் செய்யப்பட்ட மற்றொரு நாடகம் இயற்பகை நாயனார் சரித்திர கீர்த்தனை என்பதாம். இது அச்சிலிருப்பதாகத் தெரியவில்லை ஆயினும் அந்நூலாசிரியருடைய நெருங்கிய பந்து ஒருவர் இதிலுள்ள அநேகம் பாடல்களைப் பாட நான் நேரிற் கேட்டிருக்கிறேன். சொற்சுவை பொருட்சுவையிலும் ராக தாள அமைப்பிலும் நந்தனர் சரித்திரக் கீர்த்தனைக்குப் பிற்பட்டதன்று என்றே கூறவேண்டும். இக்காலத்தில் சில வித்வான்கள் தாங்கள் இயற்றிய நாடகங்களுக்கு நாடகம் என்று பெயர் வைக்காமல் கீர்த்தனை என்று பெயரிட்டது இங்கு கவனிக்கத்தக்கது. முத்துராம முதலியார் என்பவர் தாமியற்றிய நூலுக்கு பாரத கீர்த்தனம் என்றே பெயரிட்டிருக்கின்றனர். இதை நோக்குமிடத்து, நாடகமானது பாமரர்கள் கையிற்பட்டு மிகக் கீழ்ப்பட்ட ஸ்திதியையடைந்தமையால், கவிகளியற்றிய நூல்களுக்கு நாடகம் எனும் பெயரை வைக்காது கீர்த்தனை என்று பெயரிட்டிருக்கலாம் எனும் யோசனைக்கு இடங்கொடுக்கிறது.

தமிழில், இதிகாசப் புராணக் கதைகளையும், மதசம்பந்தமான விஷயங்களையும் தழுவாது, பொதுஜன விஷயத்தைத் தழுவிய நாடகங்களுள் (Social Drama) முற்பட்டது டம்பாச்சாரி விலாசம் எனும் நாடகமே. இந்நாடகத்தை இயற்றியவர் காசி விஸ்வநாத முதலியார் என்பவர்; இவர் ஆங்கிலம், தமிழ். சம்ஸ்கிருதம் மூன்று பாஷையும் நன்குணர்ந்தவர்; சென்னையில் வசித்திருந்தவர்; காலஞ்சென்ற என் அருமைத் தந்தையாருக்கு இவரை நன்றாய்த் தெரியும். இந்நாடகத்தின் ராகதாளங்களே அமைப்பதற்குத் துணையாயிருந்தவர் தாயுமான முதலியார் என்பவர். இவரை நான் நேரிற் பார்த்து இவருடன் இந்நாடகத்தைப் பற்றிய பல கதைகளைக் கேட்டிருக்கிறேன். அவைகளே விரித்துரைக்க இங்கு இடமுமில்லை, அவகாசமுமில்லை. ஆயினும் இந்நாடகத்தைப்பற்றி முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது, அஃதென்னயெனின், சென்னையைச் சார்ந்த சிந்தாதிரிப் பேட்டையில் முருகப்ப முதலியார் என்பவர், ஒருவர் இருந்தார், அவர் துளுவ வேளாள வம்சத்தைச் சார்ந்தவர். அவருடைய பிள்ளை அவர் வைத்துவிட்டுப்போன ஏராளமான ஆஸ்தியை அழித்து விட்டார் வஸ்தவமாக நடந்த இவரது கதையையே நாடகமாக எழுதி, அவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் புத்தி வரும்படியாக ஒர் சிறந்த எண்ணத்துடன், இந்நாடக ஆசிரியர் இந்நாடகத்தை எழுதினர். இன்றும் சிங்தாதிரிப்பேட்டையில் ஒரு வீட்டிற்கு டம்பாச்சாரி வீடு என்று வழங்குகிறது. இந் நாடகமானது சிறந்த புத்திமதியைப் புகட்ட எழுதிய நாடகம். ஆயினும் தற்காலம் இந்த நாடகமானது கல்வியறிவில்லாக் கீழ்ப்பட்ட பாமர ஜனங்களால் நடிக்கப்பட்டு மிகவும் ஆபாசமாக்கப்படுகிறது. நாடக ஆசிரியர் எழுதாத சில ஆபாசமான விஷயங்களை யெல்லாம் இதனுடன் சேர்த்து, கற்றுணர்ந்தோர் கடியும்படியான விஷயமாக் கப்பட்டுள்ளது. இந்த தமிழ் நாடக ஆசிரியராலியற்றப்பட்ட மற்ற இரண்டு நாடகங்கள்:- பிரம்ம சமாஜ நாடகம் என்பதும், தாசில்தார் நாடகம் என்பதுமாம். இவைகளும் பொதுஜன விஷயமாக, தமது நாட்டாரைச் சீர்திருத்தவேண்டி எழுதப்பட்டவைகளாம். பிரம்ம சமாஜ நாடகத்தில் தற்காலத்தில் தமிழ் நாட்டில் அதிக குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கும், பிராம்மணர்-பிராம்மணர் அல்லாதார் கட்சி, விதவா விவாகம், முதலிய பல விஷயங்களைப்பற்றி மிகவும் விமரிசையாய் நாடக ஆசிரியர் வரைந்திருக்கிறார்.

முன்னால் நாம் கவனித்த டம்பாச்சாரி விலாசம் என்பது மிகவும் கீழ்ப்பட்ட ஸ்திதிக்கு வந்ததைக்கண்ட காலஞ்சென்ற ம-ள-ள-ஸ்ரீ ராமஸ்வாமி ராஜு என்பவர் பிரதாபசந்திர விலாசம் என்று ஒரு தமிழ் நாடகத்தை 1877 வருஷத்தில் எழுதினார். இவர் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் எனும் மூன்று பாஷைகளிலும் தேர்ச்சி பெற்றவர். இங்கிலாந்துக்குப் போய்த் திரும்பி வந்தவர்; சங்கீதத்தில் தேர்ச்சியடைந்தவர்; தனது மேற்கூறிய நாடகத்துக்கு வேண்டிய பாட்டுகளைத்தானே கவனம் செய்து, ராக தாளங்களை அமைத் திருக்கிறர். நாடக நாயகனை, டம்பாச்சாரி விலாசத்திலிருப்பது போல் கல்வியறிவு இல்லாதவனாயல்லாது, கற்றறிந்தவகை ஏற்படுத்தியுள்ளார். இந்த நாடகமானது சில சமயங்களில் மேடையில் ஆடப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன், இந்நாடகத்தின் முதற்பதிப்பு சில வழிந்து போக ம-ள-ள-ஸ்ரீ திவான் பஹதூர் எம். எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்கள் இதை மறுபடியும் அச்சிட்டிருக்கிறார். இதற்குப் பிறகு அப்பாவு பிள்ளை என்பவர் சில தமிழ் நாடகங்களை இயற்றி அச்சிட்டிருக்கின்றனர். அவற்றுள் சத்திய பாஷா அரிச்சந்திர விலாசம் என்பது இந்நாள் வரையில் அந்நாடகத்தை ஆடுபவர்களுக்கு மிகவும் உபயோகப்பட்டு வருகிறது. கதை யானது பழைய மார்கத்தை ஒட்டியிருந்தபோதிலும், இவரால் இயற்றப்பட்ட புதிய வர்ணமெட்டுகளுள்ள பாடல்கள் நாடகாபிமானிகளால் சிலாகிக்கப்பட்டிருக்கின்றன. 1886 வருஷம் சோழ விலாசம் எனும் நாடகத்தை இவர் எழுதி அச்சிட்டிருக்கிறார். இவர் 1889 வருஷம் இந்திரசபா எனும் ஒர் நூதன நாடகத்தைத் தமிழில் இயற்றியுள்ளார். இது பல வருஷங்களுக்கு முன் சென்னைக்கு வந்த பாரசீக நாடகக் கம்பெனியார் ஆடிய கதையாகும்; அதைத் தழுவி தமிழில் இந்நாடகத்தை இயற்றியுள்ளார். 1894 வருஷம் இந்நாடக ஆசிரியர் "பத்மினி சபா' எனும் நாடகத்தை அச்சிட்டார்.

1892 வருஷம் ரத்னாவதி நாடக அலங்காரம் எனும் தமிழ் நாடகம் அச்சிடப்பட்டது. இதை இயற்றியது மகாலிங்க பாரதியார் குமாரத்தி ஆதிலட்சுமு அம்மாள் அவர்கள்; இதன் கதை திரிசிரபுரத்தில் தாயுமான சுவாமி கோயில் ஸ்தல மஹாத்மியமேயாம். இது தான் நான் அறிந்த வரையில் பெண்பாலால் முதல் முதல் இயற்றப்பட்ட தமிழ் நாடகம். இதுவும் பழைய மாதிரியைத் தழுவி எழுதப்பட்டதாகும்,

சற்றேறக்குறைய நாம் ஆராய்ந்து வந்த இக்காலத்தில் குறவஞ்சி நாடகம் எனும் ஓர் நாடகப் பிரிவு வழக்கத்திலிருந்ததை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. குறவஞ்சி நாடகத்தில், ஓர் அரசனோ அல்லது தேவதையோ பவனி வருங்கால் அவரைக் கண்ட ஒரு பெண் மணி அவர் மீது காதல்கொண்டு வருந்த, ஓர் குறத்தி வந்து நீ அவரையே மணம் புரிவாய் என்று சொல்ல, பிறகு அப்பெண்மணி தான் காதல் கொண்டவரை அவ்வண்ணமே மணம் புரிவதும் காணாமற் போன குறத்தியைத் தேடி அவள் புருஷனை குறவன் அவளைத் தேடி கடைசியில் கண்டுபிடித்து சுகமாய் வாழ்வதும் கதையாகும், என்று முன்பே குறித்துள்ளேன். சற்றேறக் குறைய எல்லாக் குறவஞ்சி நாடகங்களும் இம்மாதிரியாகத் தானிருக்கும். இக்குறவஞ்சி நாடகங்களுள் மிகச் சிறந்தது குற்றாலக் குறவஞ்சியாம். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலில் மராட்டிய மன்னர்கள் கால முதல் ஒரு குறவஞ்சி நாடகமானது ஆடப்பட்டு வருகிறது. முன்பு கூறியபடி அக்கோயில் பிரம்மோத்சவத்தில் அஷ்டக்கொடி எனும் உற்சவ தினம் கோயில் தாசிகளால் இன்றைக்கும் ஆடப்பட்டு வருகிறது. இக்குறவஞ்சி நாடகம் இரண்டாவது சரபோஜ மஹாராஜா காலத்தியது. இதை எழுதியவர் கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். இதன் ஏட்டுப் பிரதி தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மஹால் புத்தக சாலையிலிருக்கிறது. சுமார் 1840 வருஷம் பிரம்ம ஸ்ரீ கவிகுஞ்சரபாரதி அவர்கள் அழகர் குறவஞ்சி யெனும் தமிழ் நாடகத்தை எழுதியுள்ளார். இந்நாடகம் அவரது பேரப்பிள்ளையாகிய நா.கோடீஸ்வர ஐயரால் அச்சிடப்பட்டிருக்கிறது.