நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. கன்னையா
அந்ததசாவதாரம் நாடகத்திற்காக தான் சேர்த்த பொருள்களை எல்லாம் செலவழித்து காட்சிகளையும் நடிகர்களுடைய ஆடை ஆபரணங்களையும் பார்ப்பவர்களெல்லாம் பிரமிக்கும்படி செய்தார். இதன் பலனாக அந்த தசாவதாரம் நாடகம் நூற்றுக் கணக்கான தடவையாக சென்னையில் பீபில்ஸ் பார்க் வடமேற்கிலிருந்த கொட்டகையில் நடத்தப்பட்டது. காட்சிகள் முதலியன வெல்லாம் மிகவும் நன்றாகவும் பார்ப்பவர்களுடைய கண்களை கவருவனவாகவும் இருக்க வேண்டுமென்பது இவரது ஒரே கோரிக்கை. அவற்றிற்காக எவ்வளவு பொருள் செலவானாலும் அதை கவனிப்பதில்லை. அன்றியும் குறித்த காலப்படி நாடகங்கள் ஆரம்பிப்பதில் மிகவும் ஈடுபட்டவர், நடிகர்களையும் பாத்திரங்களுக்குத் தகுந்தபடி தேர்ந்தெடுப்பதில் மிகவும் நிபுணர். இப்படிப்பட்ட பல காரணங்களால் இவர் கையில் பொருள் அதிகமாய் சேர்ந்தது. இப் பெரும் பொருளை எல்லாம் செலவழித்து இதன் பிறகு பகவத் கீதை என்னும் நாடகத்தை புதிய முறையில் எழுதச் சொல்லி நடத்த ஆரம்பித்தார், இந் நாடகத்திற்காக லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்தார் என்று நான் சொல்வதானால் மிகையாகாது. இந் நாடகமானது பீபில்ஸ் பார்க் கொட்டகை யில் 1008 தடவை ஆடப்பட்ட தென்று எனக்கு அதில் கிருஷ்ண வேஷதாரியாக நடித்தவர் நேரில் சொல்லியிருக்கிறார். இம் மாதிரியாக ஐரோப்பா முதலிய கண்டங்களிலும் ஒரே நாடகம் 1008 தடவைக்கு மேல் நடத்தப்பட்டதாக நான் கேட்டதும் இல்லை. அப் பெருமை காலஞ் சென்ற கன்னையா அவர்கட்குத்தான் உரித்தாயது. முதலில் தினம் ஒரு முறை ஆட ஆரம்பித்து வரவர டிக்கட்டுகள் இல்லாமல் ஜனங்கள் காத்திருக்கிறார்கள் என்று அறிந்தவராய் சில தினங்களில் அவர்கள் சௌகர்யத்திற்காக இரண்டு முறையும் நடத்தி வந்தார். சென்னையில் இந் நாடகத்தைப் பாராத நாடகாபிமானி ஒருவரும் இல்லை என்றே கூற வேண்டும். இதைப் பார்க்க வேண்டுமென்று ஜனங்கள் மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிலிருந்தும் வந்தார்கள் என்பதை நான் அறிவேன், பலர் இதை மூன்று நான்கு முறை திருப்பி திருப்பிப் பார்க்க விரும்பி அப்படியே செய்தனர் என்பதையும் நான் அறிவேன். பகவத்கீதைக்கு அப்புறம் இவர் ஒரு பெரிய நாடகத்தையும் நடத்தியதாக எனக்கு ஞாபகமில்லை.
இவர் மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். தன்னை ஆண்டாள் குமாரன் என்று வேடிக்கையாய் கூறிக் கொள்வது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் கொடுத்த நாச்சியாருக்குப் பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஒரு பொன் குடத்தை தானமாகக் கொடுத்தார்.
இவர் மனம் போல் மாங்கல்யம் என்னும் தூய்மையான மனதுடையவர். இதற்கு ஒரு உதாரணத்தை மாத்திரம் இங்கு எழுதுகிறேன். ஒரு முறை யார் நாடகமாடுவது ஒரு கொட்டகையில் என்று இவரது கம்பெனிக்கும் ஆரிய கான சபா என்னும் மற்றொரு நாடக கம்பெனிக்கும் ஒரு வியாஜ்யம் சென்னை ஸிடி ஸிவில் கோர்ட்டில் நடத்தப்பட்டது. அதன் ஜட்ஜாயிருந்தவர் இதை நான் தீர்மானிப்பதைவிட நாடகங்களில் ஈடுபட்டிருக்கும் சம்பந்த முதலியாரை மத்யஸ்தராய் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருதரத்தாரையும் அதற்கிணங்கும்படி செய்து இந்த வியாஜ்யத்தை என்னிடம் அனுப்பினார். இருதரத்தாரும் ஒப்புக் கொண்டார்கள். நான் இரு தரத்தாரையும் நன்றாய் விசாரித்து கன்னையா அவர்களுக்கு விரோதமாக ஆரிய கான சபையார் பட்சம் தீர்மானம் செய்தேன். அப்படியே டிக்ரியும் ஆய்விட்டது. இப்படியிருந்தும் சில மாதங்களுக்குப் பின்பு தான் கொடையாளி கர்ணன் என்னும் நாடகத்திற்கு ஒத்திகை செய்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு, தான் நேரில் வந்து பார்த்து எனக்காக வென்று பொன் முலாம் பூசிய கவசகுண்டலங்கள் முதலிய ஆபரணங்களை செய்து கொடுத்ததுமன்றி அந் நாடகத்திற்கு வேண்டிய இரண்டு மூன்று குதிரைகள் பூட்டிய ரதங்களை தன் செல்வில் செய்து நன்கொடையாக சுகுண விலாச சபைக்கு கொடுத்தார். கடைசி ஒத்திகையில் தான் அருகிலிருந்து ரதங்களை நடத்தும் விஷயங்களை எங்களுக்குக் கற்பித்தார். திருவள்ளுவர் வாக்கின்படி இவர் செய்யாமற் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும். இப்போது எழுதுகிறேனே அதுதான் நான் செய்யக் கூடிய கைம்மாறு ஆகும். இவரது ஆன்மா ஆண்டாளின் திருவடியின் கீழ் என்றும் நிலைத்திருக்குமாக.