நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. குப்பி வீரண்ணா
இவர் மைசூரைச் சேர்ந்தவர். இவர் அங்கு பல வருடங்களுக்கு முன் குப்பி நாடகக் கம்பெனி என்று ஒன்றை ஏற்படுத்தி பல வருடங்கள் நன்றாய் நடித்து தியாதி பெற்றிருக்கிறார். இன்னும் இந்நாடகக் கம்பெனி ஆடிவருவதாக கேள்விப்படுகிறேன்.
வீரண்ணா அவர்கள் ஹாஸ்ய பாகங்கள் நடிப்பதில் மிகவும் கெட்டிக்காரர். இவரது சதாரம் நாடகத்தில் திருடன் வேடம் எப்போதும் ஹால் முழுவதும் ஜனங்கள் நிறையச் செய்யும். இவர் நடிப்புத் திறனுக்காக சங்கீத நாடக சபையார் பொற்பதக்கம் அளிக்கப் பெற்றவர்.
இவரது நாடக சபையில் முக்கியமாக நான் குறிக்க வேண்டிய விசேஷம் ஒன்று உளது. அதாவது ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் முக்கியமான ஆண்வேடமும் ஸ்திரீ வேடமும் தம்பதிகள் இருவர் எடுத்துக்கொண்டு நடிப்பதேயாம். இந்த வழக்கம் தற்காலத்திய நாடக சபைகளில் பெருகி வந்தால் அச்சபைகளைப் பற்றிய சிலர் கூறும்படியான தூஷணத்திற்கு இடமிராது. இவர்கள் இருவரும் நல்ல நடிகர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பாக அயன்ராஜபார்ட் நாயுடு அவர்கள் ஏதோ வியாதியால் பீடிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப் பட்டார். அங்கு மரிக்கவே அவரது உடல் அவருடைய வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதாம். அதைப் பார்த்தவுடன் மேற்சொன்ன அவரது மனைவி இருதயம் உடைந்தவராய் தானும் மரித்தார்களாம். அப்படி இருக்கவேண்டும் ஸ்திரீ புருஷர்களுடைய கற்பு நிலை! இவர்கள் இருவரும் நடித்த முக்கிய நாடகங்கள் ராஜ பக்தி, கோகர்ண லிங்கம், இவ்விரண்டையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். இவ்விரண்டு நாடகங்களிலும் நடிப்பதில் இத்தம்பதிகளுக்கு சமானமவர்கள் ஒருவரும் இல்லை என்றே நான் கூறவேண்டும்.