நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சுப்பிராய ஆசாரி
ஒரு நாள் நான் தெரு திண்ணையில் நின்றுகொண்டு என் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு கிழவனார் கையில் தடியுடன் நடந்துபோனார். என் நண்பர் இவர்தான் சுப்பிராய ஆசாரி என்று சுட்டிக் காட்டினார். அப்போது நான் இவர் தானா அரிச்சந்திரனாக நடிப்பவர்? என்று ஆச்சரியத்துடன் சொன்னேன். பிறகு கொஞ்ச காலம் பொறுத்து இவர் நடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று என் வீட்டருகில் அக் காலத்திலிருந்த ஓர் வெளியில் மூங்கிலால் போட்டிருந்த நாடகக் கொட்டகைக்குப் போனேன். அன்று சுப்பிராய ஆசாரி மயான காண்டத்தில் அரிச்சந்திரனாக நடித்ததைப் பார்த்த போது நான் அன்று பார்த்த கிழவனரா என்று ஆச்சரியப் பட்டேன். மிகவும் முடுக்காயும் நடுவயதுடையவராயும் அச் சமயம் தோன்றினார். அப்போதுதான் மாறுவேடம் பூணுவதின் மகிமையைக் கண்டேன். இவர் நன்றாகப் பாடினார். ஆயினும் மயானத்தில் தோட்டியாக இருந்த இவர் தலையில் ஒரு சரிகை பேட்டணிந்த குட்டையையும் தோளில் விலையுயர்ந்த பனாரஸ் சால்வையும் மாட்டிக் கொண்டு கையில் ஒரு வெள்ளித்தடியும் பிடித்துக் கொண்டிருந்தார். இது அக் காலத்திய ஓர் வழக்கம் என்பதற்கு சந்தேகமில்லை. இருந்தாலும் தவறு தவறுதான். இவர் அரிச்சந்திரன் வேடம் தவிர வேறு பாத்திரங்களில் நடித்ததாக எனக்குத் தெரியவில்லை. இவர் பெங்களூர் அப்பாவு பிள்ளையை தன் குருவாகக் கொண்டவர்.