நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. M. G. ராமச்சந்திரன்

திரு. M. G. ராமச்சந்திரன்

இவர் பால்யத்திலேயே கிருஷ்ணசாமி பாவலர் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். பாவலரால் நன்கு தேர்ச்சியடையப் பெற்றார். ஒரு சமயம் நான் ஒரு தமிழ் நாடகக் கம்பெனி கூட்டத்தில் தலைமை வகித்த போது இவர் அடியில் வருமாறு பேசினார், “நான் கிருஷ்ணசாமி பாவலருடைய சிஷ்யன். கிருஷ்ணசாமி பாவலர் கந்தசாமி முதலியாருடைய சிஷ்யர் கந்தசாமி முதலியார் பம்மல் சம்பந்த முதலியாருடைய சிஷ்யர். ஆகவே அவர் என் உபாத்தியாயருக்கு உபாத்தியாயருக்கு உபாத்தியாயர்” என்று வேடிக்கையாய் சொன்னார். இவர் கிருஷ்ணசாமி பாவலர் சபையில் ஆடியதை நான் பார்த்ததில்லை. பிறகு பெரியவரான பிறகு பல பேசும் பட கம்பெனிகளில் இவர் நடித்ததை நான் பார்த்திருக்கிறேன். இவர் பலவிதமான வேஷங்களில் நடித்து சபையோரை சந்தோஷப்படுத்தி யிருக்கிறார். இவர் பிரபலமான பேசும் படங்களில் ஒரு முதன்மை பெற்றவர் என்று நான் கட்டாயமாய் கூற வேண்டும். இதற்கு ஒரு ஆதாரம் கூறுகிறேன் இவரை எங்களிருவருக்கும் சிநேகிதரான திரு. K. சுப்பிரமணியம் என்னிடம் ஒரு நாள் அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப் படுத்தினார், அப்போது நான் "நீங்கள் தற்காலம் எந்த பேசும்படத்தில் நடிக்கிறீர்கள்?" என்று ராமச்சந்திரனைக் கேட்ட போது அருகிலிருந்த சுப்பிரமணியம் சிரித்துக் கொண்டே “அவரை அப்படி கேட்காதீர்கள், நீங்கள் எந்த பேசும்படத்தில் நடிக்க வில்லை என்று கேளுங்கள், ஏனென்றால் அவர் முக்கிய பாத்திரமாக நடிக்காத பேசும்படமே தற்காலம் இல்லை" என்று வேடிக்கையாய் சொன்னார்கள்.

இவருடைய ஒரு முக்கியமான போற்றத்தக்க நற்குணம் என்ன வென்றால் இவர் மேற் சொன்னபடி அநேக பேசும் படங்களில் நடித்துப் பெற்ற பொருளை ஏறக்குறைய எல்லா தர்ம விஷயங்களிலேயே விநியோகித்து வருகிறார் என்பதாம். ஏழைகளாய் போன வயோதிக நடிகர்கள் யார் வந்து இவர் உதவியை நாடிய போதிலும் அவர்களுக்கு உதவி செய்வதற்கு மறுப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவருக்கு மதுரையில் ஒரு முறை பேசும்பட அபிமானிகள் பதினாயிரம் ரூபாய் பெறும்படியான தங்கவாள் ஒன்றை வெகுமதியாகக் கொடுத்தார்கள், இவர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு சுமார் 75000 ரூபாய் கொடுத்ததாகக் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டேன். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பல பேசும் படங்களிலும் நாடகங்களிலும் நடித்து தமிழ் நாடகத்தை முன்னுக்குக் கொண்டு வருவது மன்றி வறிஞர்களான நடிகர்களுக்கு உதவி செய்து புண்ணியம் பெறுவாராக என்று ஈசன் அருளைப், பிரார்த்திக்கின்றேன், சென்னை நகராண்மைக் கழகத்தார் எனக்கு வெள்ளிப் பேழையை அளித்தபோது அன்று என்னை ஊர்வலமாகக் கொண்டு போனதற்கு எல்லா செலவுகளையும் இவர் ஒருவரே மேற்கொண்டார் என்று கேள்விப் பட்டேன். அவ்வாறாயின் ஈசன் தான் இவருக்குக் கைம்மாறு செய்யவேண்டும் நான் செய்வதற்கில்லை.