நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. T. R. ராமச்சந்திரன்
சென்னை மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் ஒரு குடியானவர் இருந்தார், அவருக்கு ஒரு பிள்ளை. அப்பிள்ளையின் பெயர் ராமச்சந்திரன், அந்த பிள்ளையை ஐந்து வயதானவுடன் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார். அவன் சரியாக பள்ளிக் கூடத்திற்குப் போவதுமில்லை. சரியாக படிப்பதுமில்லை. அவன் விளையாட்டிலும் வினோதத்திலுமே காலங்கழித்தால் படிப்பு எப்படி வரும்? தகப்பனார் அவனைக் கண்டித்துப் பார்த்தார், திட்டிப்பார்த்தார்; 'அடித்தும் பார்த்தார்' எதிலும் பயனில்லை. ஒருநாள் அப்பிள்ளை, தகப்பனாரிடம் போய் "என்னை ஏன் அப்பா அடிக்கிறீர்கள், எனக்கென்னமோ படிப்பு வராது, நான் பால நாடகக் கம்பெனி ஒன்றில் போய் சேரப் பிரியப்படுகிறேன்” என்றான், தகப்பனார் என்ன செய்வார்! “உன் பாடு நான் சொல்லவேண்டியது சொல்லியாயிற்று. உன் தலைவிதியின்படி நடக்கட்டும்” என மொழிந்து அவன் இஷ்டப்படியே விட்டார். பிள்ளை சில நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து சில பாகங்களை நடிக்க ஆரம்பித்து பல கஷ்டங்களை அனுபவித்தான். ஆயினும் தெய்வாதீனத்தால் அவனுக்கு ஒரு நல்ல நாள் பிறந்தது, அதை இனி எழுதுகிறேன். சென்னையில் ஒரு பிரபல பேசும் பட தயாரிப்பாளரான A. V. M. செட்டியார் என்னிடம் வந்து 'சபாபதி' என்னும் எனது நாடகத்தை பேசும் படமாக மாற்ற ஏற்பாடு செய்தார். அவர் கேட்டபடி உத்தரவு கொடுத்த பிறகு அவரிடம் "இந்த படத்திற்கு சபாபதி முதலியாருக்கும் வேலைக்கார சபாபதிக்கும் இரண்டு தகுந்த நடிகர்களை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எப்படி இருந்தாலும் பெரிதல்ல, இரண்டு சபாபதிகளும் நன்றாய் நடித்தால் பிறகு படம் நன்றாய் ஓடும்” என்று சொன்னேன். அந்த செட்டியார் அவர்கள் தான் ஒருநாள் அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் தக்க நடிகர்களை பரீக்ஷித்துப் பார்த்து வரும்போது ஒருநாள் ராமச்சந்திரனை சந்தித்தார். அந்நாள் தான் ராமச்சந்திரனுக்கு நற்காலம் பிறந்தநாள். இவன் தான் சபாபதி முதலியாருக்கு தக்க நடிகன் என்று அவனை எனக்குக் காண்பித்தார், நானும் அவனைப் பரிசோதித்துப் பார்த்து எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது என்று உத்தரவு கொடுத்தேன். அதன் மீது ராமச்சந்திரன் சபாபதி முதலியாராக அப்படத்தில் நடித்து நல்ல பெயர்பெற்றான். கொஞ்ச நாளைக்கு முன்பாக பேசும்படம் இன்னதென்று தெரியாதிருந்த ராமச்சந்திரன் ஒரு நட்சத்திரமாக மாறினான், இது தான் ராமச்சந்திரன் கதை. இதன்பிறகு பல பேசும் படங்களில் நடித்து வருகிறான். இன்னும் சில வருடங்களில் பேசும்படரங்கமாகிய ஆகாயத்தில் பெரிய நட்சத்திரமாக மாறுவான் என்று நினைக்கிறேன்.