நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/அறத்துப்பால்
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஒரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று. 1
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.2
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும்ஏனை
வினைஉவப்ப வேறாகி வழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.3
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று. 4
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்திக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம். 5
இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை;-ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின், நாளைத்
தமீஇம் தழிஇம் தண்ணம் படும். 6
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துதும் நாளுண்ணும்; ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதா ரில். 7
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் எல்லில்
கருங்கொண்மு வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும். 8
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான்-கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான் என் றெண்ணப் படும். 9
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅது நல்லறமும் செய்யார்-கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர்; வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி. 10
நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார். 11
நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன; உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி. 12
சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும்-இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு. 13
தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டுன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும்-காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. 14
எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்;-தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்
டேகும் அளித்திவ் வுலகு. 15
வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல். 16
பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை-நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து 17
பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்றுவரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார். 18
மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு 19
ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. 20
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர்-நிலமிசைத் துஞ்சினார்
என்றெடுத்துத் துற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். 21
வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால்-வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல். 22
மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம். 23
சென்றே எறிப ஒருகால்; சிறுவரை
நின்றே எறிப பறையினை-நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் முடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து. 24
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை. 25
நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால். 26
படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்-தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். 27
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க;-யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும். 28
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை;-இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால். 29
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள்-வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து. 30
அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார். 31
ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ, அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே-ஓவாது
தின்றுளுற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய்வ துரை. 32
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை-நினைத்ததனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார். 33
அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க;-கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின் உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு. 34
கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர். 35
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.36
மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால்-தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப்படும். 37
உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்-கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும். 38
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார். 39
மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின். 40
மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை-யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல்ஆறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல். 41
தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால்-மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும். 42
தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே-எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல். 43
தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற-விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன். 44
முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற-விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன். 45
குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும்-இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். 46
ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப்-பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருத்தோலால் கண்விளக்கப் பட்டு. 47
பண்டம் அறியார் படுசார்ந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி. 48
கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி-ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து. 49
உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச்-செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர். 50
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம்-விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.51
நிலையாமை நோய்முப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார்-தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.52
இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம்-மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.53
துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார்-இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா
றடைவொழிந்தார் ஆன்றமைந் தார். 54
கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு முப்பும் வருமால்-துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு. 55
மாண்ட குணத்தோடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டான் கழித்தற் கருமையால்-பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார். 56
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை-வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர். 57
தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவது உம் சான்றோர் கடன். 58
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக்-கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும். 59
துன்பமே மீதுாரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார்-இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல். 60
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க-மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று. 61
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ-மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர். 62
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஒவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. 63
நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர்-ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்துண் முட்டுமாம் கீழ். 64
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் -எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை 65
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்-ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு. 66
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார்-ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று. 67
நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும்-அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம். 68
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். 69
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை-நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. 70
கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க-பேதை
உரைப்பிற் சிதைந் துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று. 71
நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்-றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும். 72
காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ-போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின். 73
அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து-பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது. 74
வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண்-உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல் 75
இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது-துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது. 76
பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ-அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர். 77
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க-அற்றம்
மறைக்குந் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார். 78
இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்கு இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை. 79
தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க-வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல். 80
அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால்-நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார். 81
அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா-பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி-பாவம்என்று
அச்சத்தோ டிந்நாற் பொருள். 82
புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல். 83
காணின் குடிப்பழியாம், கையுறின் கால்குறையும்
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; நீள்நிரயத்
துன்பம் பயக்குமால், துச்சாரி நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு. 84
செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ உம்மை
வலியாற் பிறர்மணைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார். 85
பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க-மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. 86
அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்ன துடைத்து. 87
பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓ!ஒ! கொடிதே;
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாது.உள் ஆறி விடும். 88
அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்;-வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும். 89
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்;-நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும். 90
இல்லா விடத்தும் இயைந்த அளவினால்
உள்ள விடம்போற் பெரிதுவந்து-மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்(கு)
அடையாவாம் ஆண்டைக் கதவு. 91
முன்னரே சாம்நாள் முனிதக்க முப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள;-கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. 92
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால். 93
இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின்-உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்(து)
அடாஅ அடுப்பி னவர். 94
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல்-வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும். 95
நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுதத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை. 96
பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும்-கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யு மாறு. 97
ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தாற்றாதார்க் கீவதாம் ஆண்கடன்-ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறிவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து 98
இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்
அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க-முறைப்புதவின்
ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும். 99
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல். 100
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு. 101
உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும்-ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்(பு) இட்டு
நின்றுவழ்ந் தக்க(து) உடைத்து 102
வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை,
அளந்தன போகம் அவர்அவர் ஆற்றால்
விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல். 103
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல். 104
தினைத்துணைய ராகிதத்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்,
நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பய னல்லாற் பிற. 105
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல்-கல்லாதார்!
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று. 106
இடும்பைசுடர் நெஞ்சத்தார் எல்லாருங் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம்-அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும். 107
அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல்-வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும். 108
ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது. 109
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு. 110
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை-நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து. 111
தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்: அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு. 112
காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர்; ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர். 113
வடுவிலா வையத்து மன்னிய முன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர். 114
நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறுஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லிரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். 115
இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;-தடங்கண்ணாய்!
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய். 114
தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க;
என்னை அவரொடு பட்டது?-புன்னை
விறற்பூங் கமழ்கானல் வங்குநீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும். 117
ஆவே றுருவின வாயினும், ஆபயந்த
பால்வே றுருவின வல்லவாம்;-பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு. 118
யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்?-யாஅர்
இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம்உய்த் தார்? 119
தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்
றியாங்கணும் தேரின் பிறிதில்லை;-ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே.
கூற்றங்கொண் டோடும் பொழுது. 120
துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு-தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு. 121
இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுட் சேர்வர்-சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். 122
அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே-அக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால் 123
நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும்-பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து 124
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும்-வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு. 125
சான்றோ ரெண்மதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து 126
யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர்-சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு. 127
உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை-தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும். 128
ஓக்கிய ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பது உம் மெய்யாகும்-ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு. 129
மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்துழி வாழ்தியோ நெஞ்சே-எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு. 130