நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/3. யாக்கை நிலையாமை
சாவுக்குப் பேதம் இல்லை; இளையவன், அரசன், ஆண்டி என்று பிரித்துப் பார்ப்பது இல்லை; கியூவில் சின்னவர் பெரியவர் எல்லாரும் நிற்கின்றனர்; குடை பிடித்துக் குவலயம் ஆண்ட மாநில மன்னர் எல்லாரும் அடை மழைக் காலத்தில் அடையும் இடம் சுடுகாடு தான்; அங்கேயும் அவர்கள் சுகவாசிதான்; “ஏ.சி. இல்லை” என்று சொல்வதே இல்லை; அவர்களே குளிர்ந்துவிட்டனர். பி.சி.யில் வாழ்ந்தவர் பலர்.
பத்திரிகைச் செய்தி தேதி முத்திரை பெற்று வெளிவருகிறது. “மணமகன் பிணமகனானான்; நேற்று
அடித்தது மண முழவு; இன்று அடிப்பது பிண இழவு: எதிர்பார்க்கவில்லை; கழுத்தில் கயிறு ஏறவில்லை; அதற்குள் இந்த அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது; செத்தவன் செத்தவன் தான். அவன் மனைவி பொட்டு கால் துட்டு தான்; அதனை அவள் அழிக்கவில்லை. எது எப்பொழுது நடக்கும் என்று முன் கூட்டி உரைக்க இயலாது.
மரணம் என்பது ஒன்று உண்டு; இதனை மறந்தே போகின்றனர்; அறிவிப்பு மணி தேவையாகிறது. செத்தவரை நாளை சாகின்றவன் சுமந்து செல்கின்றான். நேற்று இருந்தவன்; காற்று வாங்கச் சென்றான் இன்று காற்றோடு கலந்துவிட்டான். ‘யார் காயம் யாருக்கு நிச்சயம்?’ என்று தத்துவம் பேசுகின்றான். இவனைப் பற்றியும் மற்றவர் இப்படித்தான் பேசப் போகிறார்கள் பறை அடிப்பவன் வந்து சேர்கிறான்; வந்ததும் செத்தவனை எடுத்துப் பாடையில் வைக்கும்போது, அடிக்கிறான் ஒருமுறை; தூக்கிச் செல்லும்போது அடிக்கிறான் மறுமுறை; இறக்கி வைக்கும்போது மற்றும் ஒரு முறை. இப்படி மூன்றுமுறை ஏலம்போட்டு இந்தச் சவக் கோலத்தை அறிவிக்கிறான்; என்றாலும், இந்த ஈன ஜென்மங்களுக்கு எங்கே ஏறப்போகிறது; வாழ்வில் நேசம் வைக்கிறான். பாசம் காட்டுகிறான்; கோடி ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்களை விளைவிக்கிறார்கள்.
செத்த பிறகு இந்தப் பித்த மனிதன் சத்தமே செய்வது இல்லை; அவனைப் பற்றிப் பிறர் என்ன பிதற்றுகிறார்கள்? “நார் தொடுத்துக் கட்டுக” என்று அறிவிக்கின்றனர்; “நீர் மொடுத்துக் கொட்டுக” என்று பேசுகின்றனர்; “நன்கு ஆய்ந்து அடக்குக” என்று கூறி அடக்கம் செய்கின்றனர்; அவன் தான் செத்து விட்டானே; அவனைப் பற்றி ஏன் பழித்துப் பேசுகிறாய்; அவன் செவிகள் மறுத்துவிட்டன; எந்தக் கவிகளும் கேட்க அவனுக்கு இயலாது. இப்பொழுது அவன் வெறும் தோற்பை, அதனுள் இருந்த கூத்தன் ஆடி வெளியேறிவிட்டான்; நாடி அடங்கிவிட்டது; நாளும் முடிந்துவிட்டது.
“செத்தவன் என்ன ஆனான்? வாழ்வு என்பது இவ்வளவுதானா? இல்லை; அடுத்த பிறவி அவனுக்காகக் காத்துக் கிடக்கிறது! நல்லது செய்தால் உயர் பிறவி, அல்லது செய்தால் இழி பிறவி, ஆத்மாவுக்கு அழிவே இல்லை; இந்த உடம்புதான் அழிகிறது; உயிர் அழிவது இல்லை; இப்படித் தத்துவம் பேசித் தருக்கம் செய்கின்றனர்.
சுருக்கமாய்ச் சொல்வதாயின் வாழ்க்கை மழைநீர் மொக்குள், ‘இதுதான்; மழைநீரில் ஒருமுகிழ்ப்புத் தோன்றுகிறது, வெடிக்கிறது; காற்று வெளியேறுகிறது. நீரோடு நீராய் அந்தக் குமிழி மறைந்துவிடுகிறது. வாழ்வு நீரோட்டம் போன்றது; குமிழிகள் தோன்றி வெடிக்கும். தனி மனிதன் ஒரு நீர்க்குமிழி; அவன் சரித்திரமும் அதனோடு முடிகிறது. குமிழி தோற்றம், வடிவம், மாறிவிடுகிறது; நீர் நிலைத்து நிற்கிறது.
ஒருவன் போனால் இந்த உலகம் குடிமுழுகிப் போவது இல்லை. நேற்று அவன் தன் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றான்; இன்று அடுத்த ஆள் அங்கு வந்து புதுக்குடித்தனம் நடத்துகிறான். தடி ஊன்றி நடந்த முதியவர் அடியெடுத்து வைத்து நடந்தவுடன் அங்கே ஒரு புதிய ஆத்திச்சூடி ஆரம்பமாகிறது; “தாத்தா! நீ கவலைப்படாதே! மற்றொரு ஆத்தாள் காத்திருக்கிறாள் அந்த இடத்தை நிரப்பிக் கொடுக்க”.
மலைமீது மேகம் தவழ்கிறது; காற்றில் அசைந்து ஆடுகிறது; பின் மேகம் என்ன ஆயிற்று? கலைந்துவிட்டது; படிவது போலத் தோன்றிய மேகம் மடிந்தது’ என்று கூறமுடியாது; காற்றோடு காற்றாய்க் கலந்து விட்டது இந்த ஆராய்ச்சி நமக்கு ஏன்? அது மறைந்துவிட்டது; அவ்வளவுதான்.
“நீர்க்குமிழி யாக்கை, மலைமீது ஆடும் மேகம்; இன்னும் தெளிவாகக் கூறினால், “புல்நுனிமேல் பனிநீர்” இரவில் புல்நுனிமீது பனித்துளி படிகிறது; உடனே கதிரவன் ஒளிமுன் மறைகிறது. ஒளி உமிழ்ந்த பனித்துளி எங்கே? பசும்புல்லைக் குளிர்வித்த விண்துளி எங்கே! உடலையும் இயக்கித் தானும் உலவி வந்த உயிர் மறைகிறது.
சுற்றத்தவர் கடிதம் போட்டுவிட்டா வருகிறார்கள்? கேட்டுவிட்டா வருகிறார்கள்? அவர்கள் வருவதும் தெரிவது இல்லை; போவதும் தெரிவதில்லை. வந்தபோது கல கலப்பு: செல்லும் போது சலசலப்பு: அங்கு உள்ளபோது மிதமிதப்பு; சென்றபோது பரிதவிப்பு. கேளாதே வந்து சொல்லாதே செல்லும் சுற்றம்; அதுதான் நம் வாழ்வு; யாரைக் கேட்டும் பிறப்பது இல்லை; யார் சொல்லியும் இறப்பது இல்லை. வந்தோம்; போனோம்; வந்தவழி பார்த்துக்கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம்.