நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/39. கற்புடை மகளிர்

39. வாழ்க்கைத் துணை நலம்
(கற்புடைய மகளிர்)

கற்பின் பெருமை

எண்ணிப் பத்துக் காசு இட்டால் இந்திரன் மனைவியும் வெண்ணெய் உருகுவது போல அந்தக் காசு வீசும் கண்ணியவானிடம் செல்வாள் என்று சொல்வார்கள். பிறன் ஆடவன் எவனையும் நோக்காத சீரிய பெண்மை உடையவள் பத்தினி எனப்படுவாள். அத்தகையவளே மாட்சிமை நிரம்பியவள். அவளே மனைவி என்பதற்குத் தகுதி பெறுகிறாள். வாழ்க்கைத் துணைவி என்று கூறிக் கொள்ள அவளுக்கு அருகதை உண்டு. மற்றையவர்கள் ஏதோ ஒட்டி உறவாடுவார்கள் என்றுதான் மதிக்கப்படும். கற்பே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது. அத்திண்மை வாய்க்கப் பெறின் பெண்களுள் அவளைவிடச் சிறந்தவள் வேறு ஒருத்தி உளர் என்று உரைக்க இயலாது.

சிக்கனம்

குடத்து அளவு நீர் மட்டும் இருப்பில் உள்ள வறுமை உற்ற காலத்தும் கடலே புரண்டு வருவது போலக் கிளைஞர்கள் சுற்றத்தினர் விருந்து என்று வந்தால் அவர்களை அருந்த வைக்கும் மனத் துணிவும் செயற்பாடும் மிக்கவள் மனைவி அவள் மதிக்கப்படுவாள்.

வீட்டுக்குச் சுவர் வைத்தான்; அது வீண் என்று இடிந்து விழுகிறது. இலைகளை வைத்துக் கூரை வேய்ந் தான். அவை வலைகளாகக் கிழிபட்டுச் சிதறிவிட்டன. ஒழுகல் கூரை அழுகல் சுவர்கள்; வழுக்கல் தரை, இதில் எங்கே படுப்பது; எப்படி உடுப்பது சமைப்பது எப்படி? எப்படி நடத்துவது குடித்தனம்; இங்கு இருப் பது மடத்தனம் என்று தன் துரைத் தனத்தைக் காட்டாமல் சாமர்த்தியமாக ஒன்றி வாழ்வது அது மனை வாழ்வு; ஒட்டை சட்டிதான்; கொழுக்கட்டை வேகும் என்று கொழுநனிடம் உரைப்பவளே பழமுதிர்சோலை; மற்றவர்கள் பாலைவனச்சாலை ஆவர்.

மாண்புகள்

அவன் எப்படி அவளைத் தேர்ந்து எடுத்தான்? அவள் தகுதிகள் யாவை? பார்க்க லட்சணமாக இருக்கிறாள்; அவள் கணவனை மகிழ்விக்கவே உடுத்துகிறாள். அச்சம், நாணம் இவை அவளிடம் பிச்சை கேட்டு இடம் பெறுகின்றன; ஊரார் மெச்ச அவள் வாழ்க்கை அமைத்துக் காட்டுகிறாள். வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்ன அவனிடம் வேடிக்கையாகப் பேசுகிறாள்; ஊடலும் கொள்கிறாள்; உப்புக்கரிக்காமல் பின் உபகாரியாக மாறுகிறாள். கொஞ்சிப் பேசி குலவ இடம் அளிக்கிறாள்; காதல் செய்கிறாள். இவள்தான் அவன் தேர்ந்தெடுத்த பெண்; அவள் அன்று மணப்பெண்; இன்று குணப் பெண். வீட்டு மனைவி.

மனைவியின் கூற்று

‘என்றைக்கும் என் கணவர் எனக்குப் புதியவர்தான்; பழகியவர் என்பதால் உடனே குழைந்து அவர் அழைப்புக்கு இழைவது இல்லை. 'வெட்கம்' அது என்னைவிட்டுக் கெடுவது இல்லை. நாணம் அஃது என்னை விட்டு விலகுவது இல்லை. ஐயா இந்தப் பரத்தையர் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லை. கண்டவுடன் கருத்து இழப்பர். பொறுத்துப் பழகார். இழுப்புக்கு இழைவார். அவர் அழைப்புக்கு அலைவார். வெட்கக்கேடு இல்லை இவர்களுக்கு மானம் சூடு.

கணவனின் கூற்று

நாணம் மிக்கவள் அவள்; என் நா அவள் நலம் எடுத்துரைக்கிறது. உள்ளத்தில் காதல் உணர்வு உடையவள்; நூல் கற்ற அறிஞர்களின் பேரறிவாக அவள் திகழ்கிறாள். வள்ளல்கள் வாரி இறைக்கும் ஒண்பொருளாக உயர்கிறாள். இன்பத்தை அள்ளித் தருகிறாள். வீரனின் கை வாளாகக் கூர்மைமிக்கவள்; எதையும் திறம்படச் செயலாற்றுகிறாள்.

பாணனும் தலைவியும் உரையாடுதல்

பாணன் ஒருவன் தலைவியை நாடிச் சமாதானம் செய்விக்க வருகிறான். அவன் பாணன்; பண்ணொடு பாடவல்லவன்; இயையாதவரை இயையும்படிச் செய்வது அவன் தொழில். ஊடல் தணிக்க அவன் தூதுவன்; தலைவன் வேண்டுகோளுக்கு தலைவியை இயையும்படிப் பேசி அசைய வைக்க முயல்கிறான். அதற்குத் தலைவி கூறுகிறாள்.

“ஐயா திறமைசாலி, கறுப்புக் கொள்; சிவப்புக் கொள்; அவற்றின் நிற பேதம் பார்க்காமல் இரண்டையும் சமவிலைக்குப் பேசி வாங்கிக் கொண்டு வந்து விட்டதாக ஒருவன் பெருமை பேசினால் இவன் வியாபாரம் செய்யத் தக்கவன் என்று யார் மதிப்பார்கள்?”

“கொள் சிவப்பாக இருக்கிறதே என்று அதனையும் கொள்முதல் செய்துவிட்டேன்” என்கிறான். பரத்தையையும், சிரத்தையையும் ஒன்றாக மதிக்கிறார் உம் தலைவர். சிரத்தையோடு வாழ்க்கை நடத்தும் எனக்குத் தரும் மதிப்பையே அவளுக்கும் தருகிறார். இவர் புத்தி அந்த வியாபாரியின் புத்தி என்றுதான் கூற முடியும். நிறம் இவரை மயக்கி விட்டது. கறுப்புக்கொள் விருப்பத்திற்கு உரியது. சிகப்புக் கொள் தூர ஏறிய வேண்டியது. இந்தப் பேதம்கூட அறியாத வேதம் உம் தலைவரது. இந்த நாதம் நம்மிடம் இசையாது; அசையாது என் மனம்.

“பாணனே நீ வீணன்தான்; அளக்கின்றாய்; வளமான வார்த்தைகள் கொண்டு, ‘அவள் காட்சிக்கு இனியள், யான் மாட்சிக்கு உரியள்’ என்றெல்லாம் பேச்சுக்குச் சொல்கிறாய். உடுக்கை அதற்கு இரு கை; இடக்கை, வலக்கை; வலக்கைதான் ஓசை பெறுகிறது. தட்டுவது அங்கே முட்டுவது இங்கே, உறவாடுவது அங்கே. ஒட்டுவது இங்கே. பாணனே! தேவாரம் பாடி மகிழ்வது அங்கே. வீட்டுத் தாழ்வாரம் தேடுகிறார் இங்கே. நிறுத்து உன் ஆரவாரம்; சென்று வருகிறார் அங்கு வாரா வாரம்; அதை மறுத்துப் பலனில்லை. நிறுத்து உன் துது; இதை அவரிடம் ஒது.

“வளம் மிக்க வயல்களை உடைய ஊரன் அவன் என் தலைவன். ஈ வந்து அவனைத் தொட்டாலும் உடனே அதை ஓட்டி விட்டு மறு வேலை பார்ப்பேன். இன்று தீ பறப்பது போல் வெம்முலையால் அவள் அதுதான் அந்தப் பரத்தை அவரை தழுவிக் கொண்டு இருக்கிறாள். இதை எப்படி நான் தட்டிக் கேட்காமல் இருக்க இயலும்? பாணனே அவள் தோள் தழுவிய என் கோனைக் ‘கேள்’ என்று எப்படிக் கொள்வேன். இது முறையா? அவரைக் கேள்.

“வண்டு மொய்க்கும் மலரினான்; அவன் என்னைக் கண்டு கொள்வதே இல்லை. அவன் எனக்கு அருளும் என்று கூறுகிறாய். அது வெறும் மருளே. இன்று நான் அவனுக்கு நுனிக் கரும்பு. பரத்தை அடிக் கரும்பு. அவள் அடியை அவன் விரும்புகிறான். அவள் அவன் மடியைப் பிடித்துவிட்டாள். இனி நீ இடை வந்து இணைக்க வந்தால் அமையும் உனக்கே வசை. வெல்க பாண செல்க அவரிடம் சென்று இசை. இவை தலைவி கூற்று.