நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருச்சந்தவிருத்தம்
- பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்
- தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்
- மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
- நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே. (1) 752
- ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய்
- ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
- வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
- ஊறொடோசை யாயவைந்து மாய ஆய மாயனே. (2) 753
- ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்
- ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே
- ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று
- ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே. (3) 754
- மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்
- மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
- தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
- ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே (4) 755
- நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோறும் ஆவியாய்
- ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று
- என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்
- அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே (5) 756
- நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை
- நாகமேந்து மாகமாக மாகமேந்து வார்புனல்
- மாகமேந்து மங்குல்தீயொர் வாயுவைந் தமைந்துகாத்து
- ஏகமேந்தி நின்றநீர்மை நின்கணேயி யன்றதே (6) 757
- ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்
- ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்
- ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
- ஒன்றிரண்டு கண்ணினானு முன்னையேத்த வல்லனே (7)
- ஆதியான வானவர்க்கு மண்டமாய வப்புறத்து
- ஆதியான வானவர்க்கு மாதியான வாதிநீ
- ஆதியான வானவாண ரந்தகாலம் நீயுரைத்தி
- ஆதியான காலநின்னை யாவர்காண வல்லரே (8)
- தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்
- நீதியால்வ ணங்குபாத நின்மலாநி லாயசீர்
- வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்
- நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே (9)
- தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
- தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
- நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்
- நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே. (10)