நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/2வது திருமொழி

2ம் திருமொழி நாமமாயிரம்

இடைப்பெண்கள் எங்கள் சிற்றில் சிதையேல் என வேண்டுதல்

கலி விருத்தம்

நாமமாயிர மேத்தநின்ற நாராயணா! நரனே!* உன்னை

மாமிதன்மக னாகப்பெற்றால் எமக்குவாதை தவிருமே*

காமன்போதரு காலமென்று பங்குனிநாள்கடை பாரித்தோம்*

தீமைசெய்யும் சிரீதரா!எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. 1


இன்று முற்றும் முதுகு நோவ இருந்திழைத்த இச்சிற்றிலை*

நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்*

அன்றுபாலக னாகி யாலிலை மேல்துயின்றவெம் மாதியாய்*

என்று முன்றனக் கெங்கள்மேல் இரக்கம் எழாததெம் பாவமே. 2

குண்டு நீருறை கோளரீ! மதயானை கோள்விடுத்தாய்! *உன்னைக்

கண்டு மாலுறு வோங்களைக் கடைக்கண்களா லிட்டு வாதியேல்*

வண்டல் நுண்மணல் தெள்ளியாம் வளைக்கைகளால் சிரமப்பட்டோம்*

தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 3


பெய்யு மாமுகில் போல்வண்ணா! உன்றன் பேச்சும் செய்கையும்* எங்களை

மைய லேற்றி மயக்க வுன்முகம் மாயமந்திரந் தான்கொலோ*

நொய்யர் பிள்ளைக ளென்பதற் குன்னை நோவநாங்கள் உரைக்கிலோம்*

செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 4


வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட* வீதிவாய்த்

தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன்மேல்*

உள்ள மோடி யுருகல் அல்லால் உரோடம் ஒன்றுமிலோங் கண்டாய்*

கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தன கண்க ளல்லவே. 5


முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலா தோமை* நாடொறும்

சிற்றில் மேலிட்டுக் கொண்டுநீ சிறிதுண்டு திண்ணென நாமது

கற்றிலோம்* கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்

செற்று* இலங்கையைப் பூசலாக்கிய சேவகா! எம்மை வாதியேல். 6


பேதம்நன்கறி வார்களோடு இவைபேசினால் பெரிதின்சுவை*

யாது மொன்றறி யாத பிள்ளைக ளோமை நீநலிந் தென்பயன்?*

ஓதமா கடல்வண்ணா! உன்மண வாட்டிமாரொடு சூழறும்*

சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. 7


வட்ட வாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும் மணலுங் கொண்டு*

இட்டமா விளையாடு வோங்களைச் சிற்றிலீடழித் தென்பயன்?*

தொட்டு தைத்து நலியேல் கண்டாய் சுடர்ச்சக்கரம் கையி லேந்தினாய்!*

கட்டியும்கைத் தாலின்னாமை அறிதியேகடல் வண்ணனே!. 8


முற்றத்தூடு புகுந்து நின்முகங் காட்டிப் புன்முறு வல்செய்து*

சிற்றிலோ டெங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ? கோவிந்தா!*

முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டளந்து கொண்டாய்!* எம்மைப்

பற்றி மெய்ப்பிணக் கிட்டக் காலிந்தப் பக்கம் நின்றவர் என்சொல்லார்? 9


சீதை வாயமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீசிதை யேல்என்று*

வீதிவாய் விளையாடு மாயர் சிறுமியர் மழலைச் சொல்லை*

வேத வாய்த்தொழி லார்கள்வாழ் வில்லி புத்தூர்மன்விட்டு சித்தன்றன்*

கோதை வாய்த்தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே. 10

ஆண்டாள் திருவடிகளே சரணம்