3ம் திருமொழி கோழியழைப்பதன்
கன்னியரோடு கண்ணன் விளையாடல்
கோழி யழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்*
ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்!*
ஏழைமை யாற்றவும் பட்டோம் இனியென்றும் பொய்கைக்கு வாரோம்*
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே. 1
இதுவென் புகுந்ததிங்கு அந்தோ! இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?*
மதுவின் துழாய்முடி மாலே! மாயனே! எங்கள் அமுதே!*
விதியின்மை யாலது மாட்டோம் வித்தகப் பிள்ளாய்! விரையேல்*
குதிகொண்டு அரவில் நடித்தாய்! குருந்திடைக் கூறை பணியாய். 2
எல்லே! யீதென்ன இளமை எம்மனை மார்காணி லொட்டார்*
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந் தேறி யிருத்தி*
வில்லால் இலங்கை யழித்தாய்!நீ வேண்டிய தெல்லாம் தருவோம்*
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தரு ளாயே. 3
பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில்*
அரக்கநில் லாகண்ண நீர்கள் அலமரு கின்றவா பாராய்!*
இரக்கமே லொன்று மிலாதாய்! இலங்கை யழித்த பிரானே!*
குரக்கரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய். 4
காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவி*
வேலைப் பிடித்தெந்னை மார்கள் ஓட்டில் என்னவிளை யாட்டோ?*
கோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதே*
கோலங் கரிய பிரானே! குருந்திடைக் கூறை பணியாய். 5
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள்எம் காலைக் கதுவ*
விடத்தே ளெறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம் *
குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே!*
படிற்றையெல் லாம்தவிர்த்து எங்கள் பட்டைப் பணித்தரு ளாயே. 6
நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்*
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாம்உணர் வானே!*
ஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார்*
போர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே. 7
மாமிமார் மக்களே யல்லோம் மற்றுமிங் கெல்லாரும் போந்தார்*
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையி ராத்துயில் வானே!*
சேமமே லன்றிது சாலச் சிக்கென நாமிது சொன்னோம்*
கோமள ஆயர்கொ ழுந்தே! குருந்திடைக் கூறை பணியாய். 8
கஞ்சன் வலைவைத்த வன்று காரிரு ளெல்லில் பிழைத்து*
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் நின்றஇக் கன்னிய ரோமை*
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும்*
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மகிமையிலீ! கூறை தாராய். 9
கன்னிய ரோடெங்கள் நம்பி கரிய பிரான்விளை யாட்டை*
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன்பட்டன் கோதை*
இன்னிசை யால்சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம்போய்*
மன்னிய மாதவ னோடு வைகுந்தம் புக்கிருப் பாரே. 10
ஆண்டாள் திருவடிகளே சரணம்