நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/8வது திருமொழி

 8 ம் திருமொழி  விண்ணீல மேலாப்பு

          மேகவிடு தூது 

         தரவு கொச்சகக் கலிப்பா 

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்!*
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே*
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை*
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?                  1

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள்!* வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே*
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்*
ஏமத்தோர் தென்றலுக்கிங்கு இலக்காய்நா னிருப்பேனே.                  2

ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்*
எளிமையால் இட்டென்னை ஈடழியப் போயினவால்*
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி* 
அளியத்த மேகங்காள்! ஆவிகாத் திருப்பேனே.                         3


மின்னாகத் தெழுகின்ற மேகங்காள்!* வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு*
என்னாகத்து இளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்*
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே.                  4


வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள்!* வேங்கடத்துத் 
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்!* 
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்* 
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.                    5


சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்!* மாவலியை 
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்!* 
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து*என்னை 
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே.                 6


சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள்!* வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்* 
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து*ஒருநாள் 
தங்குமேல என்னாவி  தங்குமென் றுரையீரே.                          7


கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள்!* வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி*
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை*
வார்காலத்து ஒருநாள்தம் வாசகம்தந்து அருளாரே.                     8


மதயானை போலெழுந்த மாமுகில்காள்!* வேங்கடத்தைப் 
பதியாக வாழ்வீர்காள்! பாம்பணையான் வார்த்தையென்னே*
கதியென்றும் தானாவான் கருதாது*ஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே.                 9


நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்* 
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்* 
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்* 
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே.                        10

          ஆண்டாள் திருவடிகளே சரணம்