நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/உண்மைக்கும் ஒரு நிமிஷம்
54. உண்மைக்கு ஒரு நிமிஷம்
‘திடீரென்று காலமே முடமாகி இயக்கமற்றுப் போய் விட்டதா? சுற்றி இருக்கிற எல்லாரும், எல்லாமும், அலட்சியமாக, மந்தமாக மெல்லவும், சுறுசுறுப்பின்றியும் இயங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறதே. குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இந்த அறையில் கூட என் உடம்பிலும் நெஞ்சிலும், ஏன் இப்படி வெம்மை கனல்கிறது? சேசே! இப்படி எதனாலும் சமாளிக்க முடியாத ஒரு வறட்சி இதற்கு முன் ஏற்பட்டதே இல்லை. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் “திருமகள் புரொடக்ஷன்ஸில்’ இப்படி ஒரு பொருளாதார முட்டுப்பாடு வந்ததே கிடையாது. பொய்யோ, புரட்டோ, எதையாவது சொல்லி, எதையாவது செய்து பணம், எவ்வளவு பெரிய தொகையானாலும் தயார் செய்த சாமர்த்தியம் இன்று பலிக்க வில்லையே!’
உள்ளத்தில் எள்ளத்தனை இடத்திலும் நிம்மதியில்லாமல், இந்தக் கழிவிரக்க நினைவுகள் புரள இன்னும் சிறிது நேரத்தில் டெலிபோனிலும் நேரிலும் வந்து விரட்டப் போகிறவர்களுக்கு என்னென்ன பொய் சொல்லிச் சமாளிப்பது? எப்படி எப்படிச் சாக்குப்போக்குக் கூறி அனுப்புவது?-என்று சிந்தித்துக் கொண்டேகுறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார் திருமகள் புரொடக்ஷன்ஸ் அதிபர் பொன்னுரங்கம். நெற்றியில் வரி வரியாய்ச் சுருக்கங்கள். கண்களில் துக்கமும், அமைதியும் துறந்து சோர்ந்த கலக்கம். நெஞ்சின் ஏலாமையும், ஆற்றாமையும் நிழலாக வந்து படிந்தாற் போல் உணர்ச்சி செத்த முகம். அதில் களையும் இல்லை, ‘கலை’யும் இல்லை.
இந்தப் பன்னிரண்டு வருடங்களாகக் கை நிறையப் பிரமாதமான முதலீடு எதுவும் வைத்துக் கொண்டு படத் தயாரிப்புத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி விடவில்லை அவர். எல்லோரும் வெளியில் பேசிக் கொள்கிற மாதிரி அவர் ஒரு ‘சந்தர்ப்பவாதி’ (ஆபர்சூனிஸ்ட்), சமயோசித புத்தியும், சந்தர்ப்பம் தெரிந்து நடந்து கொள்ளும் திறமையும்தான் அவரை ஆளாக்கி வளர்த்தவை. சொந்தப் பொருள் பலம் என்று தனியாக எதுவும் எப்போதும், அவரிடம் இருந்ததில்லை. அவரிடம் இருந்த ஒரே பலம் பிரபலம்தான். அதனால்தானோ என்னவோ பிரபல சினிமா டைரக்டர், பிரபல திரைப்பட அதிபர் என்று அவர் பேருக்கு முன்னால் பிரபலம் பலமாக ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. பிற பலம், பிறர் பலம் என்று அதற்குப் பாட பேதங்கள் உண்டாக்கினாலும், பொன்னுரங்கத்துக்குப் பொருத்தமாக இருக்கும்தான்.
அங்கே இங்கே பணம் புரட்டி நிரந்து கொண்டு, படத்தை முடித்து விட்டு விட்டால் வசூல் தொகையில் பழைய கடன்கள் அடையும்; புதிய கடன்கள் உண்டாகும். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’-என்று பெரியவர்கள் பாடி இருந்ததைச் சற்றே மாற்றி 'என் பணி கடன் செய்து கிடப்பதே' - என்று கடைப்பிடித்துக் கொண்டிருந்தார் திருவாளர் பொன்னுரங்கம் அவர்கள். கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லப்போனால் இந்தப் பன்னிரண்டு வருட காலமாகச் சினிமாத் தொழிலை வெற்றிகரமாக நடத்தியது அவரல்ல. அவரது பொய் சொல்லும் திறமைதான். இலட்சுமி கடாட்சமும், நல்வினையும் துணையாக இருந்த வரை அவர் சொல்லிய பொய் புரட்டுக்களெல்லாம் உண்மைகளாக நம்பப்பட்டு வெற்றியை அமோகமாகத் தேடித் தந்தன. இலட்சுமி கடாட்சமும், நல்வினையும் கழிந்த பிறகு அவர் சொல்லிய உண்மைகளைக் கூடப் பொய்களாக நம்பி இன்று ஒவ்வொருவராக அவரைக் கைவிடத் தொடங்குகிறார்கள்.'அதிர்ஷ்டம்' என்று சொல்கிறார்களே, அது இப்படிப்பட்டதுதான் போலிருக்கிறது.
உலவுவதில் சலிப்புற்று நாற்காலியில் உட்கார்ந்தார் பொன்னுரங்கம். கைகள் தாமாகவே கன்னத்தில் ஊன்றிக் கொள்கின்றன. பெருமூச்சு வருகிறது. எதிர்ச் சுவரில் தாமரைப்பூமேல் நிற்கிறாற்போல் வரைந்த பெரிய இலட்சுமி படம். திருமகள் புரடெக்ஷன்ஸின் சின்னம் அது. படத்திலிருக்கிற திருமகளே தன்னைப் பார்த்து வாய் கொள்ளாமல் கேலி பண்ணிச் சிரிக்கிறாளோ எனப் பிரமை உண்டாகிறது அவருக்கு. பூவை மிதித்துக் கொண்டு நிற்கிற தெய்வம் அவர் மனத்தையே மிதிக்கத் தொடங்குகிறதா? என்ன? பூஜை போட்டுத் தொடங்கிய மூன்று படங்கள் அரைகுறையாக முடிக்கப் பொறாமல் பிலிம் சுருளாய் டப்பாக்களில் தூங்குகின்றன. முன்பணம் கொடுத்திருந்த டிஸ்டிரிபியூட்டர்கள் விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.நடிகர்களிடம் கால்வுட் கிடைக்கவில்லை. 'பைனான்ஷியர்' யாரும் கடன் பணத்துக்குச் சிக்கவில்லை. படங்களுக்கு விளம்பரம் செய்த 'பப்ளிசிடி' கம்பெனிக்காரர் 'பில்’ அனுப்பியிருக்கிறார். வெளியில் சொன்னால் வெட்கக் கேடு! சர்வீஸஸுக்குக் கொடுத்திருந்த காரை பில் கட்டித் திருப்பி எடுத்துக் கொண்டு வரக் கூடப் பணமில்லை அவரிடம் ஆள் மட்டும் சுகமாய் ஏர்கண்டிஷன் அறையில் இருக்கிறார்.
“கார் ரெடி! சர்வீஸ் முடிந்து தயாராயிருக்கிறது. ஆள் அனுப்பி 'பில் கட்டி எடுத்து கொண்டு போகலாம்” என்று மோட்டார்க் கம்பெனியிலிருந்து போனில் கூறிவிட்டார்கள். "எனக்குக் காரைப் பற்றியே நினைவில்லை சார்! படப்பிடிப்பில் மும்முரமா இருக்கிறேன். வெளிப்புறக் காட்சிகள் படமாக்க இன்று உதகமண்டலம் போகிறேன். அங்கிருந்து பெங்களுர் போக வேண்டும். நேரமே இல்லை. காருக்கு இப்போது என்ன அவசரம்? திரும்பியதும் பார்க்கலாம்” - என்று டெலிபோனில் பொய் சொல்லி மோட்டார் கம்பெனிக்காரனைச் சமாளிக்கிறார். படப்பிடிப்பாவது? வெளிப்புறக் காட்சியாவது? இங்கேதான் எல்லாம் வறண்டு போய்க் கிடக்கிறதே! பணத்தைப் பிடித்தால் அல்லவா படத்தைப் பிடிக்கலாம்?
'பொய் என்று ஒன்று இருக்கிறதே! என்னைப் போன்றவர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம் அது. இத்தனை காலமாக இந்தத் தொழிலுக்கு நான் போட்ட முதலீடு அதுதானே? என்று மனத்தில் அற்ப மகிழ்ச்சி சுரக்கிறது.பொன்னுரங்கம் நிமிர்கிறார். இலட்சுமி படம் சிரிக்கிறது.“பூவை மட்டும் மிதித்துக்கொண்டு நில்; போதும்.என் மனத்தையும் மிதிக்காதே!;'
குளிர் சாதன அறையின் கண்ணாடிக் கதவு திறக்கிறது. அவர் தலை மட்டும் நிமிர்கிறது. வேலைக்காரப் பையன் தலையை உள்ளே நீட்டுகிறான். சொல்கிறான் :
“சார் கலைச்சுடர் கந்தப்பன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். ஆள் ரொம்பக் கோபமாக வந்திருக்கிறார் போல் தெரியுது”
“இங்கே வரச் சொல்லு”
‘தெரிந்ததுதானே? நான் நேற்றுக் கொடுத்த 'செக்' 'டிஸ்ஆனர்' ஆகிப் பாங்கிலிருந்து 'ரெபர் டு டிராயர்’னு திரும்பி இருக்கும். என்ன பொய் சொல்லிச் சமாளிக்கலாம்? ஒரு கணம் சிந்தனை. இரசிகர்களிடம் கலைச்சுடர் பட்டம் பெற்ற நடிகவேள் கந்தப்பன் கோபமாக அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். நடிகரின் அழகு முகத்தில் ஒரே சீற்றம் காணப்படுகிறது.
“திருமகள் புரொடக்ஷன்ஸாமில்லே, பேரைப் பாரு பேரை! வாசல்லே இருக்கிற போர்டைக் கழட்டி எறிஞ்சிட்டு 'மூதேவி புரொடக்ஷன்ஸ்’னு எழுதி மாட்டுங்க.." வில்லன் போல் கொதித்து இரைகிறார் கதாநாயக நடிகர்.
'செக்' கசக்கி எறியப் படுகிறது; பொன்னுரங்கத்தின் மூஞ்சியில் வந்து விழுகிறது.
“ஏது ஒரேயடியாகக் கோபப்படlங்க கந்தப்பன்?. அதுலே பாருங்க. பாங்கிலே பணத்தைக் கட்டிப்பிட்டு அப்புறம் உங்களுக்குச் செக் போடச் சொல்லி இருந்தேன். இந்தப் பசங்க மெத்தனமா இருந்திட்டாங்க.”-பொன்னுரங்கம் சிரித்து மழுப்புகிறார். 'பொய்! பொய்! பன்னிரண்டு வருட அனுபவத்தில் பழுத்த பொய்!” - என்று அவருடைய மனச்சான்று உள்ளே இடிக்கிறது. வாய் சாமார்த்தியமாகப் பொய் சொல்லி வந்த ஆளைச் சமாளிக்கிறது.
“டேய் பையா கந்தப்பன் சாருக்கு நல்ல ஆப்பிள் ஜூஸா.”
“எனக்கு ஆப்பிள் ஜூஸ் வேண்டாம் செல்லுபடியாகிற மாதிரி என் பணத்துக்கு ஒரு 'செக்' தந்தால் போதும்.”
.
“அதுலே பாருங்க, கந்தப்பன்! நீங்க நம்ம தமிழ் நாட்டுக்கே புகழ் தேடித் தருகிற பெரிய நடிப்புச் செல்வர். அசந்தர்ப்பமா நம்ம புரொடக்ஷன்ஸ் ஆபீசிலே இருக்கிற பசங்க இப்படிப் பண்ணிட்டாங்களேன்னு எனக்கும் மன வருத்தம்தான்.”
"வருத்தப்பட்டு என்ன செய்யறதுங்க கலைஞனை மதிக்கணும். இது மாதிரி.”
"உண்மை! நீங்க சொல்கிறதைத்தான் நானும் இந்தப் பன்னிரண்டு வருஷமாச் சொல்லிக்கிட்டு வரேன். கலைஞனுக்குப் பணம் பெரிசில்லே. மதிப்பளிக்கணும்”
'அட பாவி! பேச்சை என்ன அற்புதமாக மாற்றிக் கொண்டு போகிறாய் என்று உள்ளே குமுறுகிறது மனச்சாட்சி அவருடைய மனச்சாட்சியேதான்.
அரைமணி நேரம் என்ன என்னவோபேசிச் சாக்குப் போக்குச் சொல்லி ஆப்பிள் ஜூஸையும் குடிக்கச் செய்த பின் நடிகர் கந்தப்பனை அனுப்பி வைக்கிறார் தயாரிப்பாளர் பொன்னுரங்கம். சமாளித்து அனுப்புகிற சாமார்த்தியத்தில் தான் மன்னாதி மன்னனாயிற்றே அவர்.
டெலிபோன் மணியடிக்கிறது. எடுத்துப் பேசுகிறார். “ஹலோ. வணக்கம் சார் பப்ளிசிடி பில்தானே? அதுலே பாருங்க... இன்னிக்கு வெள்ளிக்கிழமை. தம்பிடி காசானாலும் வெள்ளிக்கிழமையன்னிக்கி நான் செக் புஸ்தகத்தைத் தொடறதே இல்லை. வெள்ளிக்கிழமை வீட்டு லட்சுமி வெளியேறப் படாதுன்னு ஐதீகம். நாளைக்குச் சனிக்கிழமை; பாங்கு அரை நாள்தான். உங்களுக்குத் திங்கள் கிழமை 'செக்' அனுப்பிடறேன். ஒண்ணும் மனசுலே வச்சுக்காதீங்க. ரைட்டோ. திங்கள் கிழமை கண்டிப்பா.”
டெலிபோனை வைத்துவிட்டு நிமிர்கிறார். எதிரே இலட்சுமி படம். சே! சே! ஒரு நிமிஷம்கூட உண்மை பேசவிட மாட்டாங்க போலிருக்குதே! நல்ல கழுத்தறுப்பு இது. எங்காவது ஒடிப் போயிடலாம் போலல்ல இருக்கு? கார் இருந்தாலாவது பெங்களுர் போய் இரண்டு நாட்கள் நிம்மதியா இருந்துட்டு வரலாம். அதுவும் 'செர்வீசு'க்குப் போய் மாட்டிக்கிட்டிருக்குது; பெரும தொல்லையாப் போச்சு. இந்தத் தடவை கரையேற முடியாது போலிருக்கு' என்று மனம் தவிக்கிறது. கைவிரல்கள் தலைமயிரைக் கலைத்துவிட்டுக் கொள்கின்றன. மூக்குக்கண்ணாடியைக் கழற்றி மேஜை மேல் போடுகிறார். கண்ணாடி இருந்தபோதைவிட இப்போது இன்னும் அதிகமாகக் குரூரம் காட்டுகிறது முகம்.
எதிரே மேஜை மேலிருந்த பின் குஷனில் ஒவ்வொரு குண்டுசியாக இழுத்து இழுத்துச் சொருகுகிறார். அது அலுத்ததும் கட்டைவிரல் நகத்தைக் கடிப்பதில் சிறிது நேரம் கழிகிறது. சுவர்க்கடிகாரம் பதினொரு தடவை அடிக்கிறது. எத்தனை மணியானால் என்ன? 'ஏர்கண்டிஷன்' அறையில் வெயிலா உறைக்கப் போகிறது?
மறுபடியும் டெலிபோன்மணி."ஹலோ.யாரு. ஒ! ஹரிணி ஸ்டுடியோவா? உங்க 'பில்’தானே? 'மண்டே அன்னிக்கிச் 'செக்' அனுப்பறேன். என்னது? இன்னிக்கேயா... இல்லே.... இம்பாஸிபிள். முடியாது அர்ஜண்டா இன்னிக்கு நான் பெங்களுர் போகணும். செக் எழுதச் சொல்லலாம்னாக் கூட இங்கே ஆபீசிலே யாரும் இல்லே. எனக்காக ரெண்டு நாள்.... ரெண்டே நாள் பொறுத்துக்குங்க. மண்டே அன்னிக்கி ஷ்யூரா அனுப்பிடறேன். தேங்யூ சார்.”
டெலிபோனை வைத்துவிட்டு மறுபடியும் குறுக்கும் நெடுக்கும் உலவுகிறார். 'அவன் சொல்லிவிட்டுப் போனபடி தான் செய்யணும். திருமகள் புரொடக்ஷன்ஸாகவா இருக்கிறது இது? மூதேவி புரோடக்ஷன்ஸ் மாதிரிதான் ஆகிவிட்டது என்று எரிச்சலோடு முணுமுணுத்துக் கொள்கிறார். ஒரே தலைவலி, மண்டை வெடித்துவிடும்போல் குடைகிறது. காலையிலிருந்து ஒவ்வொன்றாகப் புளுகியிருக்கிற எல்லாப் பொய்களும் ஒன்று சேர்ந்து மண்டையில் போய்ச் சுமந்துகொண்டு கனக்கிற மாதிரி ஒரு வேதனை. ஒரே ஒரு நிமிஷம் யாராவது அந்தரங்கமான மனிதரிடம் உண்மையை எல்லாம் சொல்லி அழுதுவிட்டால்தான் கனம் குறையும்போல ஒரு தவிப்பு உள்ளே உறுத்துகிறது. பன்னிரண்டு வருஷத் திரையுலக வாழ்வில் முதல் முறையாக ஏற்படுகிற பலவீனம் இது இப்படி ஒரு தவிப்பு கடந்த பன்னிரண்டு ஆண்டில் ஒரு விநாடிகூட கனவில்கூட அவருக்கு வந்தது இல்லை. எப்போதும் தைரியம்தான். எப்போதும் சமாளிக்கிற ஆற்றல் குன்றியதில்லை. கையில் பைசா இல்லாமல் வார்த்தைகளை அள்ளி வீசியே ஆட்களை வசப்படுத்தி இலட்சம் இலட்சமாகக் கறந்து படங்களை முடித்து வெற்றிவாகை குடியிருக்கிறார். இன்று முதல் தடவையாக மயங்கி, மருண்டு, மலைக்கிறது அவர் உள்ளம்.
முதல் முதலாக இலட்சுமி படத்தை நோக்கிக் கதறுகிறது அவர் மனம்,
“பூவை மட்டும் மிதி என் மனத்தை மிதிக்காதே, என்னால் பொறுக்க முடியாது.”
"சார்...!” பையன் தலையை நீட்டுகிறான்.
"யாரோ ஒரு கிழவர் கொஞ்ச வயசுப் பெண் ஒருத்தியையும் இட்டுக்கினு வந்திருக்காரு உங்களைப் பார்க்கணுமாம்."
"யார்ராது?”
"தெரியலீங்க.”
பொன்னுரங்கமே ஏர்கண்டிஷன் அறைக்குள்ளிருந்து வெளியே வருகிறார். அழகான இளம் பெண் ஒருத்தி நன்றாக அலங்கரித்துக் கொண்டு நிற்கிறாள். பக்கத்தில் கிழிசல் சட்டையும் முதுமைக் கோலமுமாக ஒரு கிழவர் நிற்கிறான். அவரைக் கண்டதும் பயபக்தியோடு கைகூப்பி வணங்குகிறார்கள் இருவரும். பெண் நல்ல களை. தெய்வீக இலட்சணம். உள்ளறையிலிருக்கும் இலட்சுமி படமே பெரிதாகி உயிரும் வடிவும் பெற்று வந்து எதிரே நிற்கிறாற்போல் அவள் நின்றாள். பொன்னுரங்கம் அதட்டிக் கேட்கிறார் :
"என்ன வேணும்? எங்கிருந்து வர்ரீங்க"
"சார் கொஞ்சம் தயவுபண்ணுங்க.நீங்க கண்திறந்தா எங்க குடும்பத்துக்கு விடியும். மதுரையிலிருந்து ரயில் சார்ஜுக்குக் கடன் வாங்கிட்டு நம்பிக்கையோடு வந்திருக்கோம் உங்க நண்பர் சிபாரிசுக் கடிதம் கொடுத்திருக்கார்"
பொன்னுரங்கம் அலட்சியமாகக் கடிதத்தை வாங்கிப் பிரிக்கிறார். கடிதம் அவருக்குப் பல முறை பண உதவி செய்திருக்கும் ஒரு பெரிய மனிதரிடமிருந்து கொடுக்கப் பட்டிருந்தது. .
'இந்தக் கடிதம் கொண்டு வரும் கந்தசாமி என்பவர் மிகவும் ஏழை. பெரிய குடும்பஸ்தர். எட்டுப் பெண்களுக்குத் தகப்பன். சிரம ஜீவனம் நடத்துகிறார். இவருடைய மூத்த பெண்ணுக்கு டான்ஸ், பாட்டு, எல்லாம் நன்றாக வரும் பார்க்கவும் லட்சணமாயிருப்பாள். இங்கே சில நாடகங்களில் கூட நடித்து நல்ல பேர் வாங்கியிருக்கிறாள். எனக்காக இந்தப் பொண்ணுக்குச் சினிமாவில் நடிக்க ஒரு சான்ஸ் கொடுத்து முன்னுக்குக் கொணர்ந்தாயானால் பெரியதும் உபகாரமாயிருக்கும்’ என்று சிபாரிசுக் கடிதம் கொடுத்திருந்தார் பொன்னுரங்கத்தின் நண்பர். அவருக்கு அதைப் படித்தும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
அந்தப் பெண்ணை மீண்டும் பார்க்கிறார். அவள் அழகாகச் சிரிக்கிறாள், இலட்சுமி படமே சிரிக்கிற மாதிரி.
காலையிலிருந்து பொய் பொய்யாகச் சொல்லி வறண்டு போயிருந்த அவர் உள்ளத்தில் சொல்ல முடியாத தவிப்புச் சேர்ந்து சுமந்து போய்க் கனத்ததே, அந்தக் கனத்தை எல்லாம் தன் சிரிப்பினால் கரைக்கிறாளா இந்தப் பெண்?
பொன்னுரங்கம் தமக்குள் சிரித்துக் கொள்கிறார். “பெரியவரே! ஒரு நிமிஷம் நீங்கள் மட்டும் இப்படி என்னோடு உள்ளே வாருங்கள்” என்று கிழவனை மட்டும் அழைத்துக் கொண்டு பொன்னுரங்கம் ஏர்கண்டிஷன் அறைக்குள் போகிறார். கிழவனுக்கு முகம் கொள்ளாமல் சிரிப்பும் குழைவும், நம்பிக்கையும் தோன்றி மலர்கிறது.
"அப்படி உட்காரும்.”
கிழவன் உட்காருகிறான். குளிர்சாதன அறைக்குள் நுழைவது கிழவனின் வாழ்வில் அதுவே முதல் தடவை.
“பெரியவரே இந்த நிமிஷம் நான் சொல்கிற உண்மையை உயிருள்ள வரையில் மறக்க மாட்டேன் என்று சபதம் செய்வீரா?”
கிழவன் மருள்கிறான். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"நீங்க எது சொன்னாலும் சரிங்க...."
“உம் பெண்ணைச் சினிமாவில் சேர்க்கிற எண்ணத்தை விட்டு விடும். ஊருக்குத் திரும்பிப் போய் நாலு வீட்டில் வேலை செய்து பிழைக்க விடுவதுகூடத் தப்பில்லை. இந்தத் தொழில் ஒரே பொய் மயமானது. என்னையே எடுத்துக் கொள்ளும். இன்று இந்த நிமிஷம் நான் வெறுங்கையன். சுற்றி ஒரே கடன். புதிதாகக் கடன் கொடுக்க ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் இந்த உண்மையை வெளியே சொன்னால் என் மானம் போய்விடும்.” பொன்னுரங்கத்தின் கண்களில் அழுகை வருவதுபோல் நீர் முட்டுகிறது.
கிழவர் மெல்ல எழுந்திருக்கிறார். “ஊர் திரும்ப பஸ் சார்ஜுக்குப் பணம் இருக்கிறதா?”
கிழவர் பதிலுக்கு உதட்டைப் பிதுக்கிறார். பொன்னுரங்கம் மணிபர்ஸைத் திறந்து கொட்டிப் பார்க்கிறார். அப்போதைக்கு அவருடைய ஆஸ்தி 47 ரூபாய் எட்டணாத் தேறுகிறது. முப்பது ரூபாயைக் கிழவனிடம் நீட்டுகிறார்.
“ஊருக்குப் போயி மானமாகப் பிழையும். இந்த நிமிஷம் நான் சொன்ன உண்மையை யாரிடமும் சொல்ல வேண்டாம்.போய் வாரும்.” கிழவர் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு கும்பிட்டுவிட்டுப் போகிறார். மனத்தின் உண்மையை விண்டு வைத்த அந்த ஒரு விநாடியில் ஆயிரங்காலத்து நிம்மதி கிடைத்தாற்போல் ஒரு சாந்தி நிலவுகிறது பொன்னுரங்கத்துக்குள்ளே.
டெலிபோன் மணி கிணுகினுக்கிறது. எடுக்கிறார். “ஹலோ! யாரு? பொன்னுரங்கமா? ஒரு நல்ல பைனான்ஷியர் கிடைச்சிருக்கான். ஒரு லட்சம் வரை புரளும். உன் படம் இரண்டாயிரத்துச் சொச்சம் அடி முடிஞ்சிருக்குன்னு சொன்னா பணம் புரளாது. கொஞ்சம் பொய் சொல்லித்தான் ஆகணும். பதிமூணாயிரம் அடி முடிஞ்சதாகச் சொல்லிவிட்டால் பணம் புரளும் உன் நிலைமை எனக்குத் தெரியும். அதான் உடனே சொன்னேன். என்ன, பொய் சொல்லலாம் இல்லே?" - நண்பரின் குரலைக் கேட்டு அவர் முகம் மலருகிறது.
“ஒ! பேஷா, கொஞ்சம் என்ன? நிறையவே பொய் சொல்லலாம். வரட்டுமா?” என்று நண்பருக்குப் பதில் சொல்கிறார் பொன்னுரங்கம்.
“ஆல் ரைட்! வந்து சேர்... ஒரு மணிக்கு உட்லண்ட் ஸுக்கு வா. பேசிக்கலாம்.”
“வரது சரி. ஆனால் எதுலே வரதுன்னுதான் தெரியலே. என் காரை ஒரு ஃபிரண்டுக்கு இரண்டு நாள் கொடுத்துவிட்டேன். கொஞ்சம் உன் 'பிளிமத்' காரை அனுப்பலாமே?” என்றார் பொன்னுரங்கம்.
“அனுப்பறேன்! இதுக்கு ஏன் பொய் சொல்றே? உன் கார்தான் செர்வீஸஸுக்குக் கொடுத்திருக்கியே! ஃபிரண்டுக்குன்னு ஏன் புளுகணும்.? பில் கட்டப் பணம் இராது...! பரவாயில்லை. என் வண்டியை அனுப்பறேன். வந்து சேரு”
“பொய்தான் சொன்னேன்! உனக்கு எப்படியோ நிஜம் தெரிஞ்சிருக்கு. ஆனால் இப்ப சொன்ன பொய்க்குப் பிராயச் சித்தமாகக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஒரு நிமிஷம் உண்மை பேசியிருக்கேன்; தெரியுமா?”
“ரைட்டோ! வண்டி அனுப்பறேன். வந்து சேரு, உன்னை முழுகிடாமக் கரையேத்திடறேன்.”
டெலிபோனை வைக்கிறார் பொன்னுரங்கம். எதிரே லட்சுமி படம் சிரிக்கிறது. உண்மைக்கும் ஒரு நிமிஷம் கிடைத்ததே என்று உணர்ந்த சிரிப்பா அது?