நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மினிஸ்டர் வருகிறார்

53. மினிஸ்டர் வருகிறார்

வ்வளவு பெரிய பாக்கியத்தைத் தாங்கிக் கொள்ளுவதற்கு வாழவந்தான்புரம் ஒரு மேஜர் பஞ்சாயத்து ஊர் கூட அன்று மிகச் சிறிய மைனர்ப் பஞ்சாயத்து கிராமம் அது! மினிஸ்டர் வருகிறார், ஐயா மினிஸ்டர்! எங்கே? எங்கேயாவது? வாழவந்தான் புரத்துக்குத்தான்.

‘வரட்டுமே! மினிஸ்டர் என்ன பெரிய கொக்கா?’ - என்று நீர் கேட்கலாம். பழைய காலத்து மனிதர் நீர்! தேர், திருவிழா, சாமி வருவதுதான் பெரிய பாக்கியம் என்று எண்ணுகிற தலைமுறையைச் சேர்ந்தவர் நீர். இந்தக் காலத்துக்கு அரசியல்தான் ஐயா பெரிய மதம். மினிஸ்டர் வருகிறாரென்றால், அதுவே ஒரு திருவிழா, தெரிந்து கொள்ளும்! என்ன, விழிக்கிறீர் இப்படி!

வாழவந்தான் புரத்துக்கு நாளைக்கு மினிஸ்டர் வருகிறார் ஐயா, மினிஸ்டர்! அதோ பஞ்சாயத்து போர்டுத் தலைவர் நாராயண பிள்ளை நெல்லுக் குதிர் உருள்கிற மாதிரித் தெருவில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாரே! அவருக்கு எத்தனையோ ஏற்பாடுகள். மினிஸ்டர் வருகிறார் என்றால் லேசுப்பட்ட காரியமா, என்ன? மேடு பள்ளமும், சேறும் சகதியும் நிறைந்த வாழவந்தான்புரத்துத் தெருக்களெல்லாம் அவசரம் அவசரமாகச் செப்பனிடப்பட்டன. வீதியில் ஏதோ திருமணம் நடக்கப் போவது போல் புது மணல் பரப்பினார்கள். தெருவெல்லாம் மாவிலைத் தோரணம், கொடிகளின் தோரணம் ஆகிய அலங்கார எற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பத்தடித் தொலைவுக்கு ஒன்று வீதம் பிரம்மாண்டமான ஆர்ச் வளைவுகள் ‘மினிஸ்டரை’ வரவேற்க நின்றன. ‘தன்னலங் கருதாத் தலைவரே வருக’ ‘சிந்தனைச் செல்வரே வருக’ ‘மக்கள் தொண்டரே வருக’ என்று இவ்வாறு ‘லோக்கல் பெயின்டர்’ பரமசிவத்தின் இலக்கிய ஞானத்தில் உருவான நாலைந்து வரவேற்பு வாக்கியங்கள் நடுத்தெருவில் பல்லிளித்துக் கொண்டிருந்தன.ஆம்! நடுத் தெருவில் தான்.

கனம் மினிஸ்டர் வருகிற வரை அந்தப் பாதையில் நுழைந்து வருகிற கழுதை கூட அந்த வரவேற்பைத் தனக்கென்று எடுத்துக் கொள்ளலாம். வாழவந்தான் புரத்தில் இருந்த ஒரே ஒரு சிறிய பூக்கடையில் முதல் நாளிலிருந்தே பூவுக்குக் கிராக்கி எற்பட்டு விட்டது. பஞ்சாயத்து போர்டுத் தலைவரிலிருந்து பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் கள் வரை மினிஸ்டருக்குப் போட மாலைகள் வாங்கினார்கள். இன்னும் பிரமுகர்கள், ஏதோ ஒரு விதத்தில் மினிஸ்டருக்கு வேண்டியவர்கள், ‘மினிஸ்டருக்கு மாலை போட்டுவிட்டு வந்தேன்’ என்று பின்னால் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டவர்கள்-எல்லாருமே பூக்கடையில் முற்றுகையிட்டு விட்டால், பூ எப்படி மீதமிருக்கும்! பூக்கடை என்று பேர் சொல்லி மணக்க ஒரு பூக்கூட மீதமில்லை அங்கே,

தன் பேத்தி பெரிதாகிச் சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்த சன்னாசிப படையாச்சியும், பெண்ணுக்குப் பூச்சூட்டு ஏற்பாடு செய்திருந்த சீமாவையரும், பூக்கடைக்குப் பூ வாங்க வந்துவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பும்போது தங்களுக்குள் மினிஸ்டரை ஒரு பாட்டம் திட்டிக் கொண்டு போனார்கள்.

‘ஐயரே! இந்த 'மினிஸ்டன்' இன்னிக்குப் பார்த்தா வந்து தொலைக்கணும். ஊர்லே ஒரு நல்லது கெட்டதுக்குப் பூ இல்லாமலே எல்லாயிழவும் மாலை மாலைன்னு கொண்டு போயிடறாங்களே?”

படையாச்சிக்கு இருந்த கோபத்தில் 'மினிஸ்டர்’ என்பதை அப்படியே சொன்னால் மரியாதை வந்துவிடும் என்று கருதி மினிஸ்டன்’ என்று ஆக்கி மரியாதையைக் குறைத்து அச் சொல்லைப் பிரயோகம் செய்தார்.

"இறைந்து பேசாதீர் ஐயா! உம்மை எவனாவது திட்டப் போகிறான்! முதல் தடவையாக வாழவந்தான்புரத்துக்கு மினிஸ்டர் வருகிறார்.” என்ற சீமாவையரை இடைமறித்து,

“அதுதானே? மழைகூட இனிமே நின்னுப்பிடும்! மினிஸ்டர் வந்திடுறாரில்லே?" என்று கிண்டலில் இறங்கினார் படையாச்சி.

அப்புறமென்ன? பூ இல்லாமலே ஐயர் வீட்டில் பூச்சூட்டு நடந்தது. கண்ணுக்குக் கண்ணான அருமைப்பேத்திக்கு ஒருச்சாண் பூக்கூட வைக்க முடியாமல் பூப்புச் சடங்கு நடந்தது படையாச்சி வீட்டில்,

சும்மாவா? மினிஸ்டர் வருகிறார் ஐயா, மினிஸ்டர் வருகிறார். முதல்நாள் இரவு பஞ்சாயத்து போர்டு கட்டிடத்தில் மினிஸ்டரை எப்படி வரவேற்பது என்பது பற்றி ஒர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஊர்ப் பிரமுகர்களும், முக்கியமான ஆட்களும், கூட்டத்துக்கு வந்தார்கள். ஊர் எல்லையில் மினிஸ்டரின் கார் நுழைகிறபோதே பூரண கும்பத்தோடு எதிர்கொண்டு வரவேற்க வேண்டும் என்றார் கோவில் குருக்கள். "பூரணகும்பம்’ என்கிற ஒர் அம்சத்தினால்தான் தாம் மினிஸ்டருக்கு மிக அருகிலே போய்ச் சில விநாடிகள் நிற்கலாம் என்பது குருக்களின் எண்ணம்.

மினிஸ்டர் பேசும் இடத்தில் கூட்டம் அதிகம் காணப்படவேண்டும் என்பதற்காகவும் மினிஸ்டருக்குப் பூக்கள் துரவி வரவேற்பதற்காகவும் பள்ளிச் சிறுவர் சிறுமியரை ஏற்பாடு செய்திருந்தார்கள். புது வாத்தியாரும், பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும்தான் வெயிலில் திணறினார்கள். நேரம் வளர்ந்து கொண்டே இருந்தது.

மினிஸ்டர் அவர்களும் வரவில்லை. வெயிலும் குறையவில்லை. புது வாத்தியார் மிகவும் நல்லவர்.அவர் துணிவாக ஒரு காரியம் செய்தார்.ஹெட்மாஸ்டரிடம் போய், "சார் வெயில் கொடுமை தாங்க முடியவில்லை. குழந்தைகளெல்லாம் கால் பொரிகிறதென்று நிற்கமாட்டாமல் தவிக்கிறார்கள்” என்றார். இதைக் கேட்டு முகத்தைச் சுளித்து, “நாம் என்ன செய்யலாம்? மினிஸ்டர் இன்னும் வரவில்லையே!” என்று பதில் சொன்னார் ஹெட்மாஸ்டர். புது வாத்தியார் மேல் ஹெட்மாஸ்டருக்கு அவ்வளவாகப் பிரியம் கிடையாது. காரணம், புது வாத்தியார் இளைஞர் உயரமாகச் சிவப்பாகப் பார்க்க இலட்சணமாயிருப்பார். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்வார். அதனால் அவருக்கு மாணவ மாணவிகளிடம் ஹெட்மாஸ்டருக்கு இருந்ததைவிட அதிக மதிப்பு இருந்தது. புது வாத்தியார் மேல் ஹெட்மாஸ்டருக்குப் பொறாமை இருந்ததற்கு இதுதான் காரணம். ஹெட்மாஸ்டர் கிழடு. 'சிடுசிடு' என்று முன் கோபத்தில் எரிந்து விழுவார். பார்க்கவும் இலட்சணமாக இருக்கமாட்டார் . இதற்குள் ஒரு சிறு பெண் குழந்தை வெயில் பொறுக்க முடியாமல் மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டது. புது வாத்தியார் ஒடிப்போய் ஏதோ இறவைக் கிணற்றில் மேல் துண்டை நனைத்துக் கொண்டு வந்து தண்ணீரை முகத்தில் பிழிந்து மயக்கம் தெளிவித்தார். வெயில் என்றால் அப்படி இப்படி இல்லை. மினிஸ்டருக்காகவே காய்கிற மாதிரிக் கடுமையான வெயில் தகித்தது.

பகல் மணி பன்னிரண்டு. மினிஸ்டர் இன்னும் வரவில்லை. புது வாத்தியார் மறுபடியும் ஹெட்மாஸ்டரை அணுகிக் கேட்டார். “பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் குழந்தைகள் வருகின்றன, மந்திரியைப் பார்க்க அல்ல” என்று கடுமையாகச் சொன்னார்.

“உம்மை யாரும் கேட்கவில்லை மினிஸ்டர் வருவதற்கு முன் ஒரு அடிகூட நகர முடியாது. பேசாமல் போய்க் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு நில்லும்” என்று ஹெட்மாஸ்டர் புது வாத்தியாரிடம் சீற்றத்தோடு எரிந்து விழுந்தார்.

புது வாத்தியார் துணிச்சல்காரர். அவருக்கு மட்டும் ரோஷம் வராதா, என்ன?

“நீங்கள் வேண்டுமானால் நின்று கொண்டிருங்கள். என் வகுப்புக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நான் பள்ளிக்கூடத்துக்குப் போகிறேன். என்னால் இந்தப் படுபாதகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.”

“நீர் அத்துமீறிப் பேசுகிறீர்! உம்மைத் தொலைத்துவிடுவேன் தொலைத்து!

'தவறு சார்!நான் அத்துமீறிப் பேசவில்லை. நியாயத்தைச் சொல்கிறேன். பச்சைக் குழந்தைகள் தண்ணீர்த் தாகத்தோடு கால் பொரிந்து கொப்புளமாகும்படி வெயிலில் நிற்கின்றன. ஆசிரியன் மந்திரியின் வேலையாள் இல்லை, குழந்தைகளின் தந்தை

“உம்முடைய தத்துவத்தை உடைப்பில் கொண்டு போய்ப் போடும்.”

“கோபித்துக் கொண்டு பயனில்லை சார்! நாம் படிப்புச் சொல்லிக் கொடுக்கத்தான் இந்தக் குழந்தைகளை வரவழைக்கிறோம். மந்திரிக்குக் கூட்டம் வரவில்லையே என்பதற்காக இழுத்துக் கொண்டு வந்து நிறுத்துவதற்கு அல்ல!

ஹெட்மாஸ்டர் புது வாத்தியாரை எரித்துவிடுவது போல் முறைத்துப் பார்த்தார்.

புது வாத்தியார் பயப்படவில்லை.பையன்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்குப் போய் விவரத்தைச் சொல்லிப் பள்ளிக்கூடத்துக்குத் திரும்புமாறு அழைத்தார். தன்னுடைய கிளாஸ் பிள்ளைகளை மட்டும்தான் அவர் கூப்பிட்டார். ஆனால் ஏறக்குறைய எல்லாருமே வந்துவிட்டார்கள். “போகாதீர்கள்! போனிர்களோ தொலைத்துவிடுவேன்” என்று ஹெட்மாஸ்டர் மிரட்டினார். அவருடைய மிரட்டலைப் பையன்கள் பொருட்படுத்தவில்லை. புது வாத்தியார் பின்னால் பையன்களில் முக்கால் வாசிப் பேர் நடந்துவிட்டார்கள். பயந்த சுவாவமுள்ள சில பையன்களும், பெண்களும், மட்டும் நின்றுகொண்டிருந்தனர்.

“என்ன சார் இது? பையன்களெல்லாம் திரும்புகிறார்கள். கூட்டம் இல்லாவிட்டால் மினிஸ்டரை அவமானப்படுத்தின மாதிரி இருக்குமே?” என்று ஹெட்மாஸ்டரிடம் கேட்டார் பஞ்சாயத்துத் தலைவர்.

“இந்தப் புதுவாத்தியார் அயோக்கியன் சார்! என்னமோ சொல்லிப் பையன்களை அழைத்துக் கொண்டு போகிறான்.இவனைத் தொலைத்தால்தான் ஸ்கூல் உருப்படும்!” ஹெட்மாஸ்டர் கொதிப்புற்ற குரலில் அங்கே கூடியிருந்த எல்லாப் பிரமுகர்களுக்கும் கேட்கும்படி இவ்வாறு பஞ்சாயத்துத் தலைவருக்குப் பதில் கூறினார். எல்லோரும் புதுவாத்தியார் மேல் தாங்க முடியாது கோபமுற்றனர். அவன். ஸ்ட் கட்சிப் பயலாம் சார்' என்று மேலும் வெடி வைத்தார் ஹெட்மாஸ்டர். புது வாத்தியாரை அடித்து நொறுக்க வேண்டும் போல் எல்லோருக்கும் கோபம் குமுறிற்று.

ஒரு வழியாக மினிஸ்டர் வந்தார். பூரண கும்பத்தை வாங்கினார். அவர் அதற்கு முன் பூரண கும்பம் வாங்கிப் பழக்கமில்லையாதலால் குடத்துக்கு மேலிருந்த தேங்காயைத் துக்கிப் பார்த்தார். அவருக்கு எதையும் உள்ளே திறந்து பார்த்துத்தான் வழக்கம். 'மினிஸ்டர்’ என்றால் பின் வேறு என்ன அர்த்தமாம்?

எல்லாம் தடபுடலாக முடிந்தன. வாழவந்தான்புரத்தில் சூரியன் அஸ்தமிக்கிறபோது மினிஸ்டரைப் பார்த்துவிட்ட பெருமிதத்தோடு அஸ்தமித்தான்.

சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பின அம்பியை அம்மா கேட்டாள் : “என்னடா மந்திரி வந்தாராமே, என்ன விசேஷம்?”

“போம்மா! மினிஸ்டர் இனிமே இந்த ஊருக்கு வரவே வேணாம். மினிஸ்டர் வந்தார்; புது வாத்தியாரை டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். புது வாத்தியார் ரொம்ப நல்லவர் அம்மா” என்று அழுதுவிடுகிறாற்போன்ற குரலில் சொன்னான் அம்பி. ஆம்! அன்று ஒவ்வொரு பையனும் புது வாத்தியாருக்காக வாழவந்தான்புரத்தில் அழுதிருப்பான்.