நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/எங்கும் இருப்பது

15. எங்கும் இருப்பது

ண்பர் சிவசிதம்பரமும், நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். படிப்புக்குப் பின் எங்கள் வழிகள் வேறு வேறு திசையில் பிரிந்து விட்டன. நான் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியராகப் போனேன். அவர் போலீஸ் இலாகாவில் வேலை பெற்று இன்ஸ்பெக்டர் பதவிக்கு வந்திருந்தார்.

மதுரை வட்டாரத்துக்குள்ளேயே ஒவ்வொரு ஊராக மாறி அவர் இன்ஸ்பெக்டராகவும், நான் ஆசிரியராகவும் வளைய வளைய வந்து கொண்டிருந்தோம்.

அந்த வருடம் எனக்குக் கோடை விடுமுறையின் போது அவர் கோடைக்கானலில் பதவி வகித்து வந்தார். எங்காவது ஒரு சாதாரண ஊரில் அவர் இருந்தாலும் மாதத்துக்கொரு முறை அவரைப் போய்ச் சந்தித்து விட்டு வராவிட்டால் எனக்குப் பொழுது போகாது.

‘என்ன நகர வாழ்க்கை? ஒரே சுழற்சி. ஒரே ஆரவாரம். தினம் விடிந்தால் பத்திரிகைகளின் முகத்தில் விழித்து ஆக வேண்டியிருக்கிறது. ஏதாவது நல்லது கண்ணில் தெரிகிறதா? ‘பெண்ணைக் கடத்திக் கொண்டு போனான், பாங்கில் மோசடி, சென்னையில் நவீனத் திருட்டு, பரீட்சையில் தோல்வியுற்ற மாணவன் தற்கொலை; மூக்குறுத்தான் பட்டியில் மூன்று கால்களோடு பிறந்த கன்றுக்குட்டி!’ சை! உலகத்தில் நல்லதாக ஒன்றுமே நடைபெறாதா?

‘சீ! சீ! தினப்பத்திரிகையும், திரையுலகத்துச் செய்திகளுமே தெரியாமல் ஏதாவதொரு மலைக்காட்டில் போய்ப் பத்துப் பதினைந்து நாட்கள் இருந்துவிட்டு வர வேண்டும்’ என்று அலுத்துப் போயிற்று. பசுமையைக் கண் நிறையப் பார்த்து மனங்குளிர, உடல் குளிர, இயற்கையை அனுபவித்து உற்சாகத்தைப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டும். கார்ச் சத்தம், இரயில் சத்தம், தார் ரோடு வெயில், காதைப் பிளக்கும் கலகலப்பு - இவற்றையெல்லாம் முழுக்க முழுக்க மறக்க வேண்டும்.

விடுமுறையைக் கழிப்பதற்கும், வெயில் காலத்துக்கும் ஏற்ற கோடைக்கானலிலேயே நண்பர் சிவசிதம்பரம் இருக்கும் போது போகாமல் இருப்பேனா? நிலப்பகுதி ஊர்களில் வெப்பம் அரசு செலுத்திக் கொண்டிருக்கும் அந்த மூன்று மாதங்களும் கோடைக்கானல் சொர்க்கந்தான். பதினைந்து நாட்கள் ஒய்வாகத் தங்கி விட்டு வரும் நோக்கத்தோடு சிவசிதம்பரத்துக்கு முன் கடிதமும் எழுதிப் போட்டுவிட்டுப் புறப்பட்டேன்.

சிவசிதம்பரம் ஆவலோடு வரவேற்றார். ஆகா! கோடைக்கானல் கோடைக்கானல்தான்! எத்தனை உயரமான மலைச்சிகரங்கள்! எவ்வளவு அருவிகள்! பல வண்ண மலர்கள், செடிகள், கொடிகள், எப்போதும் பாலாவி போல் மெல்லிய மேகங்கள் மூட்டமிட்டுக் குளிர்ச்சியாக இருக்கும் சூழ்நிலை.
“சிவசிதம்பரம்! இந்த ஊரில் இருக்கிற வரையில் நீர் கொடுத்து வைத்தவர்தான் ஐயா!” என்று வியந்து கூறினேன். சிவசிதம்பரம் அலட்சியமாக சூள் கொட்டி விட்டுச் சிரித்தார்.
“கொடுப்பதாவது வைப்பதாவது? போலீஸ் உத்தியோகத்திலிருப்பவனுக்கு எந்த இடத்தில் இருந்தாலும் ஒரே மாதிரிதான் எங்கள் வேலை துன்பம் நிறைந்தது. துன்பத்தைத் தேடிக் கொண்டு போவது. சில சமயத்தில் மட்டும் துன்பத்தைப் போக்குவது” என்று அலுத்துக் கொண்டார் அவர்.
“என்ன ஐயா இது? பணத்தைப் பணம் என்று பாராமல் செலவழித்துக் கொண்டு 'சீஸனை' அனுபவிப்பதற்கு எங்கிருந்தெல்லாமோ இங்கே வருகிறார்கள். நீரோ இந்த இடத்திலேயே இருந்து கொண்டு அலுத்துக் கொள்கிறீரே?”
“உங்களை மாதிரி ஒரு வாரம், இரண்டு வாரம் வந்து தங்கிவிட்டுப் போகிறவர்களுக்கு எல்லாம் சுகம்தான். மலையையும் பசுமையையும் பார்த்து மனம் நிறையலாம். நாங்கள் இங்கே வந்தாலும், திருடனையும், கொலைகாரனையும் தானே பார்த்துத் தேடிப் போக வேண்டியிருக்கிறது.”
“யாரை வேண்டுமானாலும் தேடிக் கொண்டு போங்கள். நான் ஊருக்குப் போனபின் அதையெல்லாம் வைத்துக் கொள்ளலாம். சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கேயாவது கிளம்பிப் போய்விடாதீர்” என்று பீடிகை போட்டுக் கொண்டேன் நான்.
கோடைக்கானலில் சிவசிதம்பரம் குடியிருந்த வீடு கோக்கலை வாக் என்ற பகுதியை ஒட்டி ஒரு மேட்டில்அமைந்திருந்தது. வீட்டைச் சுற்றி யூகலிப்டஸ் மரங்கள். பச்சைப் புல்வெளி. அதில் சித்திரக்காரன் அள்ளித்தெளித்த வர்ணங்கள் போல் பல நிற மலர்ச்செடிகள். தூரத்தில் மலைப் பள்ளத்தாக்கினிடையே இயற்கை பதித்துவைத்த பெரிய கண்ணாடியைப் போல் ஏரி. அப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் றுகொண்டு புடைத்தெழுந்த இயற்கையின் பசுமை வீக்கம் போல் மேகம் படிந்த மலைகள். மலைச் சரிவுகளில் படிப்படியாகப் பாத்தி எடுத்துக் காய்கறிகள் பயிர்செய்திருந்தார்கள்.மரங்கள் அடர்ந்துதெரிந்த பகுதிகளெல்லாம் சிலபேருடைய தலையில் அடர்ந்து 'கர்லிங்' விழுந்த மயிர்ச்சுருள்கள் போல் நெளிந்தன. ஒருவேளை மலைமகளின் கரிகுழற் சுருளோ அந்த அடர்த்தி?
“வெந்நீர் தயாராயிருக்கிறது: உள்ளே போய்க் குளித்துவிட்டு வாருங்கள்; சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பலாம். ஜீப் எடுத்துக்கொண்டு வரச் சொல்லி ஸ்டேஷனுக்குச் சொல்லிவிட்டிருக்கிறேன்” என்று சிவசிதம்பரம் துரிதப்படுதினார்.
"வாத்தியார் மாமா வந்திருக்கிறார்” என்று கூச்சலிட்டுக் கொண்டு வந்து சூழ்ந்து கொண்ட சிவசிதம்பரத்தின் குழந்தைகளுக்கு உரிய பொருள்களைக் கொடுத்து அனுப்பியபின் குளிக்கக் கிளம்பினேன். கோடைக்கானலில் குளிரில் ஆவி பறக்க உலைநீர் போல் கொதித்த வெந்நீர்கூட ஒரு சூடாக உடம்பில் உறைக்கவில்லை.

சாப்பாடு முடிந்ததும் ஜீப்பில் சுற்றிக் காட்டுவதற்காக என்னை அழைத்துக் கொண்டு கிளம்பினார் நண்பர். காலையில் பத்துப் பதினோரு மணி இருக்கும் அப்போது. நண்பகல் இரண்டு மணிக்குள் கோடைக்கானலின் கிழக்குப் பகுதி முழுவதும் நாங்கள் சுற்றிப் பார்த்துவிட்டோம்.

சில்வர்காஸ்கேட் அருவி, செண்பகனூர் பெருமாள் மலைச்சிகரம், குறிஞ்சி ஆண்டவர் கோவில், ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போதும் உலகத்து ஒசைகளே இல்லாத அந்த மலைச்சாலைகளில் சுற்றும்போதும் எத்தனை இன்பமாக இருக்கிறது!

“சிவசிதம்பரம்! மண்ணுலகத்துத் துன்பங்களே தெரியாமல் வாழ வேண்டுமானால் இந்த மலைத் தொடர்களில் எங்கேயாவது ஒரு வீடு கட்டிக் கொண்டு ஒதுங்கி வாழ வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் மெல்லச் சிரித்தார்.

“இதுவும் மண்ணுலகம்தான்! இங்கும் மண்ணுலகத்துக் கவலைகள், மோசடிகள், சூது, வாது, கொலை, கொள்ளை எல்லாம் உண்டு. என்னோடு இரண்டு நாட்கள் இருந்தால் தெரியும்” என்றார்.

“சே! சே! இந்தப் போலீஸ் ஆட்களுக்கு இயற்கையழகை அனுபவிக்கவே தெரியாதா? எங்கு போனாலும், எதைப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, மோசடிதானா? நல்ல ஆள் ஐயா! உம்மோடு சுற்றிப்பார்க்கவந்தேனே?” என்று பொய்க் கோபத்தோடு அவருக்குச்சூடுகொடுத்தேன்நான்.அவர் பதில் சொல்லாமல் சிரித்தார்.

வீட்டுக்குப் போய்ச் சிற்றுண்டி காப்பியை முடித்துக்கொண்டு மறுபடியும் ஜீப்பில் புறப்பட்டோம்.

ஏரிக்கரையில் போட் கிளப்புக்கு அருகே ஏழு ரோடுகள் பிரியுமிடத்தில் ஜீப் நின்றது. படகுத்துறைக்கு அருகில் அழைத்துப் போய் ஏரியைக் காட்டினார் சிவசிதம்பரம்.

அங்கே வைரமும் தங்கமும் இழைத்துப் பூட்டினாற்போல் ஏராளமான நகைகளை அணிந்து கொண்டு பட்டுப்பூச்சிகள் போல் இரண்டு அழகிய இளம்பெண்கள் அப்போதுதான் ஒரு படகில் கிளம்பிக் கொண்டிருந்தனர். முப்பது முப்பத்திரண்டு வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் மேனாட்டு முறையில் நாகரிகமாக உடையணிந்து அந்தப்படகின் துடுப்பை வலித்துச் செலுத்திக்கொண்டிருந்தார்.அந்தப் பெண்களில் ஒருத்தி அவருடைய மனைவியாகவும் மற்றொருத்தி அவருடைய சகோதரியாகவும் இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

“சிவசிதம்பரம்! கோடைக்கானலை என்ன மாதிரி அனுபவிக்கிறார்கள் பார்த்தீர்களா? இப்படிக் குடும்பத்தோடு இயற்கையை அனுபவிக்கப் புறப்படும் மனோபாவம் நம் நாட்டில் மத்தியதரக் குடும்பங்களில் இன்னும் பரவவே இல்லை. பெரும்பாலோருக்கு அழகுணர்ச்சி இல்லாமல் இருப்பதற்கும், நோய்களின் பெருக்கத்திற்கும் இதுதான் காரணம்”

சிவசிதம்பரம் முன்போலவே சிரித்தார். “அது சரி! அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று உங்களக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

"ஏன்? ஒன்றாக ஒரே படகில் போவதைப் பார்த்தாலே தெரியவில்லையா?”

“ஒகோ” அவர் முறுவல் பூத்தார்.

“போம் ஐயா! போலீஸ் மனத்தோடு, போலீஸ் கண்களால் பார்த்தால் உலகமே அயோக்யத்தனமாகத்தான் தெரியும்” என் கோபத்தை அவரைத் தாக்கிப் பேசித் தீர்த்துக் கொண்டேன்.

அவர் சிரித்துக் கொண்டே பேசாமல் இருந்துவிட்டார்.

“பாரும் ஐயா! நன்றாகக் கண்களைத் திறந்து பாரும். அந்தப் பெண்களை உட்கார்த்தி அந்த மனிதன் சிரமப்பட்டுப் படகை செலுத்துகிறான். சரளமாகப் பேசிக்கொண்டு போகிறான். ஒரே குடும்பமென்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?”

“நண்பரே! பதினைந்து ஆண்டுகளாக இந்தக் காக்கி உடுப்புகளில் புகுந்து கொண்டு உலகத்தைப் பார்த்து வருகிறவன் நான். என் கண் பார்வைக்குப் படுகிற மாதிரி உங்கள் பார்வையில் எதுவும் பட முடியாது”

“அதெப்படி முடியும்? உங்கள் கண் பார்வைக்கு எதுவுமே நியாயமாகப் பட முடியாதே!” நான் குதர்க்கம் பேசினேன்.

“சரி! இப்போது நமக்கெதற்கு இந்த வீண் விவாதம்? நாம் மேற்கொண்டு சுற்றிப் பார்க்கப் போகலாம். வாருங்கள்” என்று கூறி, என்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு புறப்பட்டார் இன்ஸ்பெக்டர்.

மூணாறு டாப் ஸ்டேஷன் ரோட்டில் திரும்பி ‘பில்லர் ராக்ஸ்' போகிற வழியில் ஜீப் சென்றது. வானிலை ஆராய்ச்சி நிலையம், பெய்ரி ஃபால்ஸ், கால்ஃப் லிங்க்ஸ் - எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தோம்.மனித நடமாட்டமே இல்லாத மலைப்பகுதிகள் அத்தனையும், எனக்கு நிம்மதியாக இருந்தது.

மணி ஐந்தரைக்கு மேலானதும் இருட்டியதுபோல் மூடுபனி வந்து கவிந்து கொண்டது.

"இன்றைக்குப் போதும்! மற்ற இடங்கள் நகரிலிருந்து சில மைல் தள்ளிச் சுற்றுப்புறத்தில் இருக்கின்றன. நாளைக்குக் காலையில் மறுபடியும் புறப்படுவோம்" என்று கூறினார் சிவசிதம்பரம். திரும்பிவிட்டோம்.

கடுங்குளிரோடு மூடுபனியின் மங்கலில் ஒளி மங்கிய மின்சார விளக்குகள் அங்கங்கே மின்னின.அப்போது அந்த அந்திநேரத்தில் கோடைக்கானல் பூப்பு நீராடி முடித்த கன்னிகைபோல் மிக அழகாக இருப்பதாக ஒரு கற்பனை உதயமாயிற்று எனக்கு.

வீட்டுக்குத் திரும்பியதும் கேக்கர்ஸ் வாக் மலையிலிருந்து கீழே பள்ளத்தில் இருக்கும் ஊர்களை வேடிக்கை காண்பித்தார் நண்பர். இரவில் அந்த ஊர்களின் விளக்குகள் மின்மினிப் பூச்சிகளாகத் தெரிந்தன.

ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் ஊரடங்கிவிட்டது. குளிர் தாங்க முடியவில்லை. மூச்சுப் பலமாக விட்டால் மூக்கிலிருந்து புகை வருவது மாதிரி தெரிந்தது.

சூடான இரவு உணவு வாய்க்கு ருசியாக இருந்தது. சாப்பாடு முடிந்து வெற்றிலை போட்டுக் கொண்டதும், "பேப்பர் பாருங்கள்” என்று நாலைந்து தினசரிகளைக் கொண்டு வந்து என் முன்னால் போட்டார் அவர்.

"ஐயோ! பத்துப் பதினைந்து நாட்களுக்கு இந்த சனியன்களை என் கண்ணில் காட்டாதீர்கள். இவைகளைப் பார்க்கக் கூடாதென்றுதான் இங்கு வந்திருக்கிறேன்” என்று வெறுப்போடு அவற்றை மடித்துத் தூக்கி எறிந்தேன். சிவசிதம்பரம் சிரித்துக் கொண்டே அவற்றை எடுத்து நிதானமாக ஒவ்வொன்றாகப் பாராயணம் செய்வதுபோல் படித்த பின்புதான் என் பக்கம் திரும்பினார்.

"ஏன் ஐயா, உம்மால் எப்படி இவற்றைப் பொறுமையாகப் படிக்க முடிகிறது? பக்கத்துப் பக்கம், வரிக்கு வரி கொலை, கொள்ளை, மோசடி, சோரம் போனவள், தவிர வேறு ஏதாவது நல்ல சமாசாரம் இவற்றில் இருக்கிறதா?” என்று அவரைக் கேட்டேன் நான். பதில் சொல்லாமல் எல்லா உண்மைகளும் புரிந்த வேதாந்தியைப் போல் அந்தப் பழைய சிரிப்பைக் காட்டினார் அவர்.

காலையில் நான் எழுந்திருக்கும்போது ஏழரை மணி. எனக்கும் முன்பே எழுந்திருந்து உத்தியோக உடையுடன் எங்கோ புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார் சிவசிதம்பரம்.

“என்ன? எங்கோ கிளம்புகிறார் போலிருக்கிறதே?” என்றேன்.

"ஸ்டேஷனிலிருந்து அவசரமாக ஜீப் வந்திருக்கிறது. நான் போகவேண்டும். நீங்களும் பல் விளக்கிக் காப்பியைக் குடித்துவிட்டு, உடன் வாருங்கள். அப்படியே ஸ்டேஷனிலிருந்து நாம் சுற்றிப் பார்க்கக் கிளம்பலாம்” என்றார் அவர்.

நானும் அவசர அவசரமாகப் பல் விளக்கிக் காப்பி சாப்பிட்டுவிட்டு அவரோடு புறப்பட்டேன். ஜீப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது.ஹெட்கான்ஸ்டபிள் வந்து சலாம் வைத்தார்."சார் லேக் வியூ லாட்ஜ்லிருந்து அவசரமாகப் போன் செய்தார்கள்" என்று கூறினார் அவர்.

ஜீப்பில் இரண்டு கான்ஸ்டபிள்களையும் ஏற்றிக் கொண்டு லேக்வியூ லாட்ஜுக்கு விடச் சொன்னார் சிவசிதம்பரம். பத்தே நிமிடங்களில் கார் லேக்வியூ லாட்ஜின் வாசலில் போய் நின்றது. லாட்ஜின் முதலாளி பரபரப்போடும், பதற்றத்தோடும் இன்ஸ்பெக்டரை வரவேற்றார். நானும் சிவசிதம்பரத்தோடு கூடவே சென்றேன்.

மூன்றாவது மாடியில் பதின்மூன்றாம் நம்பர் அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார் லாட்ஜ் சொந்தக்காரர். அறை வாசலில் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இரண்டு இளம் பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்கியதும் அவர்கள் இன்னாரென்று எனக்குத் தெரிந்துவிட்டது. முதல் நாள் மாலை ஏரிக்கரையில் படகில் பார்த்த பெண்கள் தான் அவர்கள். லாட்ஜ் முதலாளி இன்ஸ்பெக்டர் காதருகில் சென்று ஏதோ கூறினார்.

இன்ஸ்பெக்டர் அந்தப் பெண்களுக்கருகில் போய் நின்று கொண்டு பதவியின் கடுமையோடு அவர்களைப் பற்றி விசாரித்தார்.

அந்தப் பெண்கள் மதுரையில் ஒரு பெரிய கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்றும் கல்லூரியில் படிப்பதாகவும் தகவல் கிடைக்கிறது.

“எதற்காக இங்கே வந்தீர்கள்? யாரோடு வந்தீர்கள்?”

அந்தப் பெண்கள் ஒன்றும் பதில் கூறாமல் ஒரு ஆங்கிலத் தினசரியின் ‘கட்டிங்' தாளை எடுத்து வந்து அவரிடம் நீட்டினார்கள்.

அது ஒரு விளம்பரம் அதில் சினிமாவில் நடிக்கப் படிப்பும், புதுமைக் கொள்கைகளுமுள்ள அழகான புதுமுகங்கள் தேவையென்றும், விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தங்கியிருக்கும் எமது புரொட்யூசரையும், டைரக்டரையும் நேரில் சந்திக்கவேண்டியது என்றும் குறிப்பிட்டுக் கோடைக்கானலில் அந்த லாட்ஜின் விலாசத்தோடு நம்பரும் குறித்திருந்தது.

“அட பைத்தியங்களா? படித்திருக்கிறீர்களே? இதை நம்பிக் கொண்டு வந்தீர்களா? நீங்கள் என்று இங்கு வந்தீர்கள்? வரும்போது யார் இங்கு இருந்தார்கள்?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"நேற்று காலையில்தான் இங்கு வந்தோம். ஒரே ஒரு நடுத்தர வயது மனிதர் 13-ம் நம்பர் அறையில் இருந்தார். அவரை லாட்ஜ் காஷியருக்கும் தெரியும். தான் அந்தச் சினிமாக் கம்பெனியின் டைரக்டர் என்றும் புரொட்யூசர் இரண்டு நாட்களில் மதராஸிலிருந்து வந்துவிடுவாரென்றும் கூறி, எங்களுக்குத் தங்க வசதி செய்து கொடுத்தார் அவர்”

"அப்புறம் என்ன நடந்தது?”

"நேற்று மாலை பூராவும் அவரோடு ஊர் சுற்றிப் பார்த்தோம்.”

"அப்புறம்”

“இன்று தாலையில் எங்கள் நகைகளையும் காணவில்லை; அவரையும் காணவில்லை.

“எவ்வளவு பெறுமானமுள்ள நகைகள்?”

"இரண்டுபேருடையதும் சேர்த்துப் பத்தாயிரத்துக்குத் தேறும்! இங்கே திருட்டுப் பயம் அதிகம் என்றும் நகைகளைக் கழற்றி வைத்து விட்டுப் படுத்துக் கொள்ள வேண்டுமென்றும் நேற்றிரவு அவர்தான் சொன்னார்”

"அதை வேத வாக்காக நம்பினீர்கள், இல்லையா?” இன்ஸ்பெக்டர் இரைந்தார்.

"ஸ்டேஷனுக்கு வந்து விரிவாக ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்கள். உங்கள் பெற்றோர் விலாசம் இப்போது வேண்டும்” என்று எழுதி வாங்கிக் கொண்டார்.

“என்ன ஐயா? பார்த்துக் கொண்டீரா?” சிவசிதம்பரம் என் பக்கமாகத் திரும்பிக் கேட்டுவிட்டுச் சிரித்தார். அந்தச் சிரிப்பைச் சிரிக்கும்போது அவர் சாதாரணப் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதிரித் தெரியவில்லை. துன்பங்களைக் கேட்டுப் பார்த்து மரத்துப்போன வேதாந்தியாகவே தோன்றினார்.

லாட்ஜின் வாசலில் இறங்கி நடந்தபோது முதல் நாள் பூப்பு நீராடிய கன்னிகை மாதிரித் தோன்றிய கோடைக்கானலின் இயற்கை வனப்பு ஒரு குட்டரோகம் பிடித்த கிழவியைப் பார்த்த மாதிரி அருவருப்பாக இருந்தது.

உலகத்தில் மோசடி, ஏமாற்று இல்லாத இடமே கிடையாது போலும். மனிதக் காலடி படுகிற இடமெல்லாம் அவையும் இருக்கின்றன.

“சிவசிதம்பரம்! நான் சாயங்காலம் கடைசிக் காருக்கு ஊர்திரும்ப வேண்டும்!”

"ஏன்? பதினைந்து நாட்கள் இருக்கப் போவதாக அல்லவா சொன்னீர்கள்?”

“இல்லை. ஊரில் கொஞ்சம் வேலை இருக்கிறது!”

அவர் சிரித்தார். எத்தனையோ உலகியல் உண்மைகளைச் சீரணித்து அனுபவப்பட்ட சிரிப்பு அது.

(கல்கி, 28.6.1957)