நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/ஒரு மதிப்பீடு

57. ஒரு மதிப்பீடு

ன்றைக்குக் காலையில் பத்து மணி சுமாருக்குத் திருவாளர் பொன்னம்பலம் அவர்களுடைய மனத்தில் என்ன இருந்ததென்று அனுமானம் செய்ய முயன்றால், இரண்டே இரண்டு சந்தேகங்கள் மட்டுமே இருந்தன என்பது தெளிவாகப் புலப்படும்.

அநேகமாகச் சந்தேகங்களைத் தவிர அவருடைய மனத்தில் வேறொன்றும் இருப்பதில்லை என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத முடிவானாலும், அப்போது சத்தியமாக அந்த மனத்தில் இருந்த சந்தேகங்கள் இரண்டுதான் என்பதை வரையறை செய்வது ஒன்பதே முக்கால் மணி வரை முடியாமலிருந்தது. பத்து மணிக்கு அது உறுதியாகத் தெரிந்து விட்டது.

முதலாவது சந்தேகம் : இந்த டியூஷன் வாத்தியார் நரசிம்மன் என்கிற எம்.ஏ.பி.டி. தன்னை ஏன் மதிப்பதில்லை என்பது.

இரண்டாவது சந்தேகம்: முழங்காலுக்கு மேல் மண் படிந்த வேட்டியும், வேர்வை நாறும் அழுக்கடைந்த பனியனுமாய் வெறும் பாமரனாய் நிற்கிற தோட்டக்கார முனியனை இந்த வாத்தியார் ஏன் மதித்துப் பேசுகிறான் என்பது!

இரண்டு சந்தேகங்களும் ஒரே காரணத்திலிருந்து பிறந்தவை என்றாலும், அவை ஒன்றில்லை என்பது எவ்வளவுக்கு நிச்சயமோ அவ்வளவுக்கு நிச்சயம் இரண்டுதான் என்பதும். பொன்னம்பலம் இலட்சாதிபதி. கூடிய விரைவில் கோடீஸ்வரராகிவிட முயன்று கொண்டிருப்பவர். ஆனால் இதில் ஒரே ஒரு துரதிர்ஷ்டம் செளகரியங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பெருகிக் கொண்டிருந்தனவோ அவ்வளவுக்கவ்வளவு அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் அவர் மனத்தில் பெருகிக் கொண்டிருந்தன. சிறிய விஷயங்களுக்காகக் கூட அவர் மனத்தை அலட்டிக் கொள்வார். அவருடைய மனம் ரொம்ப ஏழை. அவருடைய இரும்புப் பெட்டியைப் போலத் திடமாகவோ, நிறைந்தோ இருந்ததில்லை அந்த மனம்.

உலகத்தில் தன் எதிரே வந்து நிற்கிற அத்தனை பேரும் நிச்சயமாகத் தன்னை மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர் அவர். இப்படி ஆசைப்படுகிற ஏழை மனம் உடையவர்கள் யாராயிருந்தாலும் பரிதாபத்துக்குரியவர்கள்தாம். தன் மதிப்பினாலும், தன்மானத்தினாலும், சந்தனக் கட்டைக்குள் செறிந்திருக்கும் மணத்தைப் போல் தனக்குள்ளேயே உள்முகமாக ஆழ்ந்து சுகம் காணும் வீரம் எல்லாருக்கும் வாய்க்காதுதான். அப்படி வாய்க்கா விட்டாலும் பொன்னம்பலத்தைப் போல சிறு அதிர்ச்சியைக் கூடத் தாங்கி நிற்க முடியாது பூஞ்சை மனத்தைப் பெற்றிருக்கக் கூடாது. அப்படி மனம், அதை உடையவருக்கே வறுமை.

நரசிம்மன் எம்.ஏ.பி.டி. என்கிற இருபத்தேழு வயது இளைஞன் அவருடைய திருக்குமரன் முருகேசனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க நியமிக்கப்பட்டு இன்னும் அதிக நாட்கள் ஆகிவிடவில்லை. ஆனால் பொன்னம்பலம் அவர்களுடைய மனத்தில் அந்த டியூஷன் வாத்தியாரைப் பற்றிய கோபதாபங்கள் அதிகமாகிவிட்டன. கோபதாபங்கள் ஏற்படும்படியாக நரசிம்மன் நடந்து கொள்ளவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமலே பிறர் மனத்தில் அவர்களைப் பற்றி உருவாகி விடுகிற கோபதாபங்களும் உண்டு.பொன்னம்பலம் அவர்களைப் போல் பஞ்சை மனம் படைத்தவர்களுக்கும் இத்தகைய கோபதாபங்களுக்கும் நெருக்கம் அதிகம்.

நரசிம்மன்மேல் அவர் கோபித்துக் கொண்டதற்குத் தெளிவான காரணம் ஒன்றுமில்லையானாலும் தெளிவற்ற காரணங்கள் பல இருந்தன.

அந்த டியூஷன் வாத்தியார் போகிறபோது, வருகிறபோது தன்னிடம் நிறையச் சிரித்துப் பேசவேண்டுமென்று அவருக்கு ஆசையாயிருந்தது. நரசிம்மனுக்கு, அப்படி ஒரு முகராசி. இந்தப் பிள்ளை நம்மோடு கொஞ்சநேரம் சிரித்துப் பேசிவிட்டுப் போகமாட்டானா?” என்று மற்றவர்களை நினைத்து ஏங்க வைக்கும் ஏதோ ஒரு கவர்ச்சி அவனிடம் இருந்தது.

சந்தனக் குழம்புபோல் நிறம். எப்போதுமே மெளனமாகச் சிரித்துக் கொண்டிருப்பதைப் போன்ற முகம். அந்த முகத்தில் எப்போதாவது அபூர்வமாகத் திறந்து மெல்லப் பேசும் சிவந்த உதடுகள். கைவீசி நடந்து வருகிறபோது பரிசுத்தமே எதிரே வருவதுபோல் ஒரு தூய்மை, எந்த உபகாரத்துக்காகவும் எவரிடமும் கூசி நின்று தலையைத் தாழ்த்தாமல் நிமிர்ந்த நிலை, இவை எல்லாம் ஒன்று சேர்ந்த ஒர் அபூர்வ குணச் சித்திரம்தான் நரசிம்மன். யாரோ சிநேகிதர் சிபாரிசு செய்தார் என்பதற்காக இவனை டியூஷன் வாத்தியாராக எடுத்துக் கொண்டார் பொன்னம்பலம். யாருமே சிபாரிசு செய்ய வேண்டாத குணங்கள் பல இவனிடம் இருப்பது பின்னால் அவருக்கே தெரிய வந்தது.

“என்ன வாத்தியார் சார்? இங்கே வேலை செய்யிறது பிடிச்சிருக்கா.நம்ம பையன் எப்படியிருக்கான்?....உருப்படறத்துக்கு ஏதாவது வழி உண்டா?” என்று வாத்தியார் வந்த மூன்றாவது நாளோ, நான்காவது நாளோ,பொன்னம்பலம் அவரை விசாரித்தார்.

அவர் அப்படி விசாரித்தபோது இவ்வளவு கொச்சையான பேச்சை இதற்கு முன்னால் என்றுமே தான் கேட்டதில்லை என்று நாணி நின்றாற்போல இரண்டு கணங்கள் நின்றுவிட்டு, சிரித்துக் கொண்டே நடந்து மேலே போய்விட்டான் நரசிம்மன்,

இன்னொரு நாள் நரசிம்மன் டியூஷன் சொல்லிக் கொடுப்பதற்காக பங்களாவுக்குள் நுழைந்து வந்து கொண்டிருந்தபோது பொன்னம்பலம் முன் ஹாலில் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார். நரசிம்மன் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் இன்றைக்காவது இந்த ஆளிடம் பத்து நிமிஷம் நேருக்கு நேர் கலகலப்பாய்ச்சிரித்துப்பேசிவிடவேண்டுமென்ற ஆவலோடு"இந்தா தவசிப்பிள்ளே! சாருக்கும் ஒரு காபி கொண்டா” என்று உள்ளே திரும்பித் தவசிப்பிள்ளைக்கு உத்தரவு கொடுத்துவிட்டு, “உட்காருங்க சார்.” என்று டியூஷன் வாத்தியாரை உபசரித்தார் பொன்னம்பலம். ஆனால் நரசிம்மன் என்ற அந்தச் சுந்தர இளைஞனோ, இப்போதும் அவரை ஏமாற்றிவிட்டான்.

“மன்னிக்கணும் எனக்குக் காப்பி குடிக்கிற பழக்கம் இல்லை” என்று கத்திரித்தாற் போலச் சொல்லிவிட்டு நேரே டியூஷனுக்குக் காத்துக் கொண்டிருந்த பையனை நோக்கிப் போய்விட்டான்.

பொன்னம்பலம் அவர்களுக்கு முகத்தில் அறைந்தாற்போலிருந்தது. இலட்சாதிபதி, பங்களாவாசி, பெரிதாக நாலைந்து கார் வைத்துக் கொண்டிருப்பவர் என்ற காரணங்களுக்காக எல்லாம் மதிக்காமல் தொலைந்தாலும் தொலையட்டும், மாதம் முதல் தேதி பிறந்தால் சுளையாக நூறு ரூபாய் சம்பளம் எண்ணிக் கொடுக்கப் போகிறவர் என்பதற்காகவாவது இவன் நம்மை மதிக்க வேண்டாமோ? உலகத்தின் சுகங்களையும், செல்வாக்கையும், முழுமையாக அநுபவித்தறியாத இந்த இருபத்தேழு வயது இளைஞன் மனிதர்களை எந்த அளவு கோலால் அளந்து பார்த்து மதிக்கிறான் என்பதை அவராலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. ‘எப்படி வேண்டுமானாலும் மதித்துத் தொலைத்துவிட்டுப் போகட்டும். நமக்கென்ன வந்தது? மகனுக்கு ஒழுங்காக "டியூஷன்' சொல்லிக் கொடுத்தால் சரிதான்!” என்று விட்டுவிடவும் அவரால் முடியவில்லை. தாழ்வு மனப்பான்மை என்று மட்டும் சொல்வதா? அல்லது நரசிம்மனிடம் இருந்த கவர்ச்சிதான் காரணம் என்று சொல்வதா? மொத்தத்தில் அந்த டியூஷன் வாத்தியார் தன்னை எதற்காகவோ அலட்சியம் செய்வதுபோல் உணர்ந்து உள்ளுக்குள்ளேயே வேதனைப்பட்டார் பொன்னம்பலம். இது ஒர் அந்தரங்கமான தாழ்வு மனப்பான்மை. இந்தவிதமான தாழ்வு மனப்பான்மையைப் பணத்தினாலும் செல்வாக்கினாலும்கூடப் போக்கிக் கொண்டுவிட முடியாது.

காபி டம்ளரை மேஜை மேலே அழுத்தி ஓசை எழும்படி வைத்துவிட்டு வேகமாக எழுந்து நடந்து போய்த் தோட்டத்தில் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்கார முனியனை மடக்கினார் பொன்னம்பலம்.

“ஏண்டா முனியா...! நீ தோட்டக்காரனா இலட்சணமா இருக்கமாட்டே போலிருக்கே?... போறபோதும், வரபோதும், டியூஷன் வாத்தியாரோடே உனக்கென்னடா பேச்சு?.”

“நா ஒண்னும் பேசறதில்லீங்க. அவரா வந்து ஆசையோட விசாரிக்கிறாரு. பூவுங்க. செடிங்க. இதுகளைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதிலே ரொம்ப ஆசையா இருக்காரு.... முந்தாநாள்கூட ரெண்டு பிச்சிப்பூக் குடுன்னு கேட்டு வாங்கிச் சட்டைப் பையிலே போட்டுக்கிட்டாருங்க”....

அவருக்கு அந்தத் தோட்டக்காரன் மேலே பொறாமையாயிருந்தது. தன்னோடு பேசுவதற்கே விரும்பாததுபோல் முகத்தைக் குனிந்து கொண்டு போய்விடுகிற அந்த டியூஷன் வாத்தியார் தோட்டக்காரனிடம் போய்ச்சிரித்துப் பேசுவதும், பூக்களையும், செடிகளையும் பற்றி விசாரிப்பதும் தெரிந்தபோது, மிகவும் வேதனையாயிருந்தது. இந்த வாத்தியார் என்னிடமும் சிரித்துப் பேசினால் என்ன? ஒருவேளை என்னிடம் பேசுவதற்கே பயப்படுகிறானோ என்றும் தோன்றியது. ஆனால் அடுத்த கணம் நிதானமாக அவன் வந்ததிலிருந்து நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தபோது அவன் பயப்படுகிற ஆளாகவும் தெரியவில்லை. ஆள் நடந்து வருகிற தினுசையும், நிமிர்ந்து நின்று பதில் சொல்லுகிற விதத்தையும் பார்த்தால் ரொம்பப் பெரிய மானஸ்தனாகத் தோன்றியது.இப்படி மானம் உள்ள மனிதர்களைச் சந்திக்கும்போது கோழைகளுக்கும் பக்தி ஏற்பட்டுவிடுகிறது. 'இப்படிப்பட்ட மானம் உள்ளவர்கள்தான் உலகத்தின் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!' என்று ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு பொன்மொழி படித்ததை நினைத்துக் கொண்டார் பொன்னம்பலம்.

இது நடந்து சில வாரத்துக்கு அப்புறம் அவர் ஒருநாள் இரவு வெள்ளைக்கார பாணியில் நடத்தப்படும் ஹோட்டல் ஒன்றில் ஏதோ விருந்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தபோது சாலை ஒரமாக அந்த வாத்தியார் எங்கோ போய்விட்டு நடந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

காரை நிறுத்தும்படி டிரைவரிடம் சொல்லிவிட்டு "மிஸ்டர் நரசிம்மன். உங்களைத்தானே? ஏறிக்குங்க. வீட்டிலே கொண்டு போய் விட்டுடறேன்” என்று அவர் முகம் மலர்ந்து கூறியபோது, "பரவாயில்லே!. இந்த வயசிலேயே எங்களையெல்லாம் சோம்பேறி ஆக்கிடாதீங்க. நடக்கறதிலே ஒரு சுகம் இருக்கே” என்று ரொம்ப அசுவாரஸ்யமாக இந்த உலகத்தையே தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் சிரிப்பதுபோல் சிரித்துக் கொண்டு பதில் சொன்னான் நரசிம்மன். இப்போதும் அவர் முகத்தில் ஒர் அறை விழுந்தது போலாயிற்று.

அடுத்த கணத்தில் அவருடைய மனத்தில்,"இவன் ஏன் நம்மை இலட்சியம் செய்து மதிக்க மாட்டேனென்கிறான்?’ என்ற ஏக்கத்தை இன்னும் ஒரு படி பெருக்கிவிட்டு விட்டுச் சாலை முழுவதையுமே தனக்கென்று பட்டா எழுதி வாங்கிக் கொண்டவன் போல நரசிம்மன் வீசி நடக்கத் தொடங்கிவிட்டான். இப்போதும் பொன்னம்பலம் ஏழையாகித் தவித்தார். அதே கேள்வி, மிகவும் அந்தரங்கமான அந்தப் பழைய கேள்வி. அவர் மனத்தில் அந்த மனத்தின் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு விசுவரூபமெடுத்து நின்றது.

'உலகத்தின் சுகங்களையும் செல்வாக்கையும் முழுமையாக அநுபவித்தறியாத இந்த இருபத்தேழு வயது இளைஞன் மனிதர்களை எந்த அளவுகோலால் அளந்து பார்த்து மதிக்கிறான்?'

இது அவர் படவேண்டிய கவலை இல்லையானாலும், இந்தக் கவலையைத் தவிர வேறு எதுவும் இப்போது அவருடைய மனத்தில் இல்லை. மறுநாள் காலையில் எழுந்திருந்ததும் முதல் வேலையாகப் பையன் முருகேசனைக் கூப்பிட்டு டியூஷன் வாத்தியார் நரசிம்மனைப் பற்றித் துருவித் துருவி விசாரித்தார்.

“என்னடா வாத்தியாரைப் பிடிச்சிருக்கா உனக்கு?”

பையன் தலையைச் சொறிந்து கொண்டு நாணி நின்றான்.

இந்தக் கேள்வியை வேறுவிதமாக மாற்றிப் 'படிப்பைப் பிடிச்சிருக்காடா உனக்கு?” என்று கேட்டிருந்தால் பையன் ஒரே வார்த்தையில் பதில் சொல்லியிருப்பான்.கேள்வி வாத்தியாரைப்பற்றியதாக இருந்ததனால் கொஞ்சம் தயங்கினான்.

“என்னடா தலையைச் சொறியறே? வாத்தியார் எப்படி இருக்காரு?"

‘பிடிச்சிருக்குப்பா. சிரிக்கச் சிரிக்கப் பேசறாரு. ரொம்ப நல்லா. மனசிலே பதியறாப்பிலே பாடமெல்லாம் நடத்தறாரு.”

“சிரிக்கச் சிரிக்கப் பேசறார்னா சொல்றே? உங்க வாத்தியாருக்குச் சிரிக்கறதுக்கும், பேசறத்துக்கும்கூடத் தெரியுமா?” என்று கேட்கத் தொடங்கி நடுவிலேயே உதட்டைக் கடித்துக் கொண்டு இந்தக் கேள்வியைப் பையனிடம் கேட்டிருக்கக்கூடாதென்று உணர்ந்தவராய் அடக்கிக் கொண்டார்.

இந்த வாத்தியார் தன்னைத் தவிர மற்ற எல்லாரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதாய்த் தோன்றியது அவருக்கு ஏதோ கரணத்துக்காகத் தன்னை மட்டும் ஒதுக்கி வைத்து அலட்சியப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு வேதனைப்பட்டார் அவர்.

எப்படியாவது இந்த டியூஷன் வாத்தியாரைச் சரிப்படுத்திவிட வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. மறுநாள் டியூஷன் வாத்தியார் காம்பவுண்டுக்குள் நுழைந்தபோது கொஞ்சம் தைரியமாகவே அவன் எதிரே போய் நின்றுகொண்டு,

“வாத்தியார் சார். இப்படி ஒரு நிமிஷம் நின்று நான் சொல்றதைக் காதிலே வாங்கிட்டுப் போங்க. இந்த ஊர்லே நா ஒரு பெரிய மனுஷன். எனக்கு ஒரு "ஸ்டேட்டஸ்' இருக்கு. நீங்க என் பையனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கிறதுக்காக வந்து போlங்க. இப்பிடி வேர்க்க விறுவிறுக்க நடந்து வரவேண்டாம். கார் அனுப்பிடறேன். நாளையிலேர்ந்து கார்லே வந்து போய்க்கிட்டிருங்க. அதுலே ஒண்ணும் குறைஞ்சிடாது.”

டியூஷன் வாத்தியார் நரசிம்மன் பதில் சொல்லாமல் சிரித்தான். சிரிப்போடு அந்த முகத்தில் கொஞ்சம் யோசனையும் தெரிந்தது.

“இப்போதைக்கு நான் செய்து கொண்டிருக்கிற ஒரே "எக்ஸர்சைஸ்” நடக்கிறதுதான்.அதையும் விட்டு விடுகிறதற்கில்லை. பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே நடந்து மேலே போய்விட்டான் நரசிம்மன்.

இதைச் சாக்கு வைத்தாவது சிறிதுநேரம் அவனோடு நின்று பேசலாம் என்று அவர் எதிர்பார்த்தது வீணாயிற்று. மறுபடியும் அதே கேள்வி அவர் மனத்தில் எதிரொலித்தது.

'உலகத்தின் சுகங்களையும், செல்வாக்கையும் முழுமையாக அனுபவித்தறியாத இந்த இருபத்தேழு வயது இளைஞன் மனிதர்களை எந்த அளவுகோலால் அளந்து பார்த்து மதிக்கிறான்?'

நரசிம்மன் ஒவ்வொரு முறை தன்னெதிரே நிற்கும்போதும் அவன் எதற்காகவோ தன்னைத் துச்சமாக மதிப்பதுபோல் எண்ணிக் கொண்டு கூசியது அவர் மனம், தம்முடைய பணம், பவிஷு, செல்வாக்கு, எதனாலும் தவிர்க்க முடியாத இந்தக் கூச்சத்தைப் பொறுத்துக் கொண்டு நிம்மதியாய் நிற்க முடியாமல் தவித்தார் அவர்.

இன்னொரு நாள் அவர் ரொம்பக் கலகலப்பாகச் சிரித்துக் கொண்டே டியூஷன் வாத்தியாருக்கு எதிரே போய், "பையனும் ரொம்ப ஆசைப்படறான். வாத்தியாரை ஒரு நாளைக்கு இங்கேயே சாப்பிடச் சொல்லணும்னு. இன்னிக்கு நீங்க இங்கேயே சாப்பிட்டுடுங்க..” என்றார் பொன்னம்பலம்.

“அதுக்கென்ன? இன்னொரு நாளைக்கிப் பார்க்கலாமே” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டு நடந்துவிட்டார் வாத்தியார். இப்போதும் அந்த இருபத்தேழு வயது இளைஞனால் அவர் ஏமாற்றப்பட்டார்.!

தன்னிடம் இப்படிச் சொல்லிவிட்டு நடந்து போன வாத்தியார், நேரே தோட்டக்கார முனியனிடம் போய்ப் பதினைந்து நிமிஷம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்புவதையும் அவரே தம் கண்களால் பார்த்தார். அவர் மனம் மிகவும் வேதனைப்பட்டது.

'கேவலம் நூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற இந்த டியூஷன் வாத்தியாருக்கு இவ்வளவு திமிர் ஆகுமா? என்று ஒரு கணம் பெரிதாகக் கோபம் மூண்டது அவர் மனத்தில் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்ததில் நரசிம்மனிடம் இதற்காக மட்டும் கோபப்படுவது நியாயமில்லை என்றும் தோன்றியது.

‘ஒரு மனிதன் தன்மானத்தோடும் தன்னடக்கத்தோடும் நிமிர்ந்து நின்று சிரிப்பதைத் திமிர் என்று எப்படிச் சொல்ல முடியும்?'

இன்னொரு சமயம் சரியான கோடைவெயிலில் நடுரோட்டில் வேர்க்க விறுவிறுக்க நடந்து போய்க்கொண்டிருந்த நிலையில் நரசிம்மனைச் சந்தித்துக் காரில் ஏறிக் கொள்ளும்படி வேண்டினார் அவர்.

“நீங்க வழக்கமாகத் தட்டிக் கழிக்கிறாப்போல இப்பவும் தட்டிக் கழிக்க முடியாது. இந்த நேரத்துலே நடந்து போறது எக்ஸர்சைஸாகவும் இருக்க முடியாது. யோசனை செய்யாமே ஏறிக்குங்க. சொல்றேன். எங்கே போகணுமோ கொண்டு போய் விட்டுடறேன்.”

"வேறே எங்கேயும் ரொம்ப துரத்துக்குப் போய்க் கொண்டிருக்கவில்லை. இதோ, பக்கத்திலே 'மெடிகல் ஸ்டோர்ஸ்' வரை போகணும் இங்கேயிருந்து இன்னும் பத்தடி தூரம். வீணாக உங்களுக்குச் சிரமம் எதுக்கு.? நடந்தே போயிடறேன்....”

இப்படிச் சொல்லிக் கொண்டே நடந்துவிட்டான் அவன். இப்போதும் அவன் அவரை ஏமாற்றிவிட்டான். தன்னை அந்த டியூஷன் வாத்தியார் மிகவும் கேவலமாகவோ, அலட்சியமாகவோ மதிக்கிறான் என்று உறுதியாக நம்பிக் கொண்டு அதற்காகக் குழம்பியது அவர் மனம்,

இந்த உலகத்தில் இதுவரை எத்தனையோ காரணங்களுக்காக எத்தனை பேர் அவரை மதிக்காமல் போயிருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர் இவ்வளவு கவலைப்பட்டதில்லை. என்ன காரணமென்று சொல்லத் தெரியவில்லை. இவன் மட்டும் தன்னை மதிக்க வேண்டும்; தன்னோடு சிரித்துப் பேச வேண்டுமென்று அவருக்கே ஆசையாயிருந்தது. ஆனால் இந்த டியூஷன் வாத்தியாரோ அவர் நெருங்க நெருங்க அவரை விட்டு விலகி விலகிப் போகத் தொடங்கினான்.

இந்தப் புதிர் கடைசியில் ஒருநாள் அவிழ்ந்தது. ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை. பொன்னம்பலம் அடையாறில் நாலைந்து பெரிய மனிதர்களைச் சந்தித்து விட்டுத் திரும்புகிறபோது கொஞ்சம் காற்றாடலாம் என்று 'பீச்' ரோட்டில் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டிக் காரை ஓரமாகப் 'பார்க்' செய்துவிட்டு இறங்கிப் போன சமயத்தில் நாலைந்து இளைஞர்கள் கும்பலாக உட்கார்ந்திருந்த ஒர் இடத்திலிருந்து அந்த வாத்தியாருடைய குரலும் ஒலித்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் அவர்கள் பேச்சுக் காதில் விழுகிறாற்போலப் பத்துப் பன்னிரண்டு அடி தள்ளி முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர் ஆவேசம் வந்தவன் போல் அந்த வாத்தியார் கொதித்துக் கொதித்துப் பேசும் சொற்கள் அலை அலையாக வந்து அவர் காதில் விழுந்தன.

“இந்த மனுஷன் வீட்டுக்கு நான் டியூஷன் சொல்லிக் கொடுக்கப் போறதைப் பார்த்தே அக்கம் பக்கத்து நல்லவங்க பத்துப்பேர் என்னை வாயிலே வந்தபடி கன்னாப் பின்னான்னு பேசறாங்க..இந்த இலட்சணத்துலே.இவர் என்னடான்னா என் கார்லே ஏறிக்கோன்னு வேறே குழையறாரு... இவரோட கார் வேளை கெட்ட வேளையிலே எங்கேயெங்கே எல்லாமே போகுது வருது. நாளைக்கொரு நட்சத்திரத்து வீட்டு வாசலே நிக்கிது. கூட ஏறிப் போறவனோ பொய்ச் சாட்சி சொல்றவன், கருப்பு மார்க்கெட் பணக்காரன், ஈவு இரக்கம் தெரியாதவன்னு. விதவிதமான அயோக்கியனுகளாயிருக்காங்க. நான். ஏழை. பாமரன். ஆனாலும் என்னைப் பத்தி நாலுபேர் என்னிக்கும் நல்லபடியாப் பேசணும்னு மட்டும் ஆசைப்படறவன். ஒருத்தனுக்குப் பணமும், வசதிகளும் இருக்கிறவரை மதிக்கிற மதிப்பை, அதெல்லாம் போயிட்ட அப்புறம் நாளைக்கு உலகம் மறந்து போயிடலாம். கருணை, இரக்கம், நேர்மை இப்படிக் குணங்களால்தான் மனிதர்கள் நிலையாகக் கணிக்கப்படுகிறார்கள். ஏதோ வயிற்றைக் கழுவணும்னு எங்கே எங்கேயோ இருக்கோம். சுயகெளரவத்தையும் காப்பாத்திக்க வேண்டியிருக்கு.”

இதற்குமேல் கேட்டுக் கொண்டிருக்கப் பொறுக்காதவராய் பொன்னம்பலம் வேகமாக மணலிலிருந்து எழுந்து நடந்தார். அப்படி நடக்கும்போது அவர் மிகவும் ஏழையாகிப் போயிருந்தார். அவருடைய நெடுநாள் சந்தேகத்துக்கு இன்று விடை கிடைத்துவிட்டது.

'உலகத்தின் சுகங்களையும், செல்வாக்கையும் முழுமையாக அனுபவித்தறியாத இந்த இருபத்தேழு வயது இளைஞன் மனிதர்களை எந்த அளவுகோலால் அளந்து பார்த்து மதிக்கிறான்? என்று அவர் மனம் பல நாளாக அறிந்து கொள்ளத் தவித்த கேள்விக்கு அன்று விடை கிடைத்துவிட்டது. ஆனால் அந்த விடை அவரை இவ்வளவு பெரிய ஏழையாக்கியிருக்க வேண்டியதில்லை.

(1960)