நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை
56. விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை!
சுப்பையா எங்கள் வீட்டிற்கு வழக்கமாகக் காய்கறிகள் விற்கும் வியாபாரி. காலையில் வீட்டு முன்புறத்தில் உட்கார்ந்து நான் எழுதிக் கொண்டிருப்பேன். சரியாக எட்டரை மணிக்குக் காய்கறிக் கூடையோடு சுப்பையா வந்து விடுவான். ஆள் சுறுசுறுப்பானவன். யாரோடும் கலகலவென்று சிரித்துப் பேசும் சுபாவம் அவனுக்கு உண்டு. வயது கூட அதிகமில்லை; இளைஞன் என்றே சொல்லலாம்.இருபத்தெட்டுக்கு மேல் மதிக்க முடியாது. அவனுடைய தோற்றம் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
இத்தோற்றமும் எதைப் பற்றியும் யாரிடமும் மனம் விட்டுப் பேசுகிற இயல்பும்தான் அவனுக்கு நல்ல பெயர் தேடிக் கொடுத்திருந்தன. அரசியலில் தொடங்கி, அன்றைய கத்தரிக்காய் விலை வரை என்னிடம் விவாதித்துப் பேசுவான் அவன். கல்லூரியில் எண்ணற்ற மாணவர்களுக்குப் பேசியே அறிவை வளர்த்து வரும் பேராசிரியனாகிய நான் சுப்பையாவின் பேச்சை அலுக்காமல் சலிக்காமல் கேட்கத் தொடங்கி விடுவேன். ஒரு விதமாகச் சிரித்துக் கொண்டே அவன் கையை ஆட்டி ஆட்டிப் பேசுவதைக் காண விநோதமாக இருக்கும். ஒரு நாள் நான்,”இப்படி எல்லாம் பேசுகிறாயே? பள்ளிக்கூடத்தில் எது வரை படித்திருக்கிறாய்?” என்று சுப்பையாவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.
“என்ன பள்ளிக்கூடத்துப் படிப்பு வேண்டியிருக்குதுங்க? நானும் ஐந்தாம் பாரம் வரையிலே படிச்சேன். ஐந்தாவது பாரத்திலே ஒரு வருஷம் உட்கார்ந்திட்டேனுங்க! எங்க அப்பாரு படிப்பை அதோட நிறுத்திட்டாருங்க. அதிலேருந்து இந்த வியாபாரந்தான்!”
“பலே! ஐந்தாவது பாரம் வரை படித்திருக்கிறாயா? நீ பேசுகிற பேச்சின் விமரிசையைப் பார்ததால், எம்.ஏ. படித்தவன் உன்னிடத்தில் பிச்சை வாங்க வேணும், போ”
“ஐயா, என்னை ஒரேயடியாத் தூக்கிவிட்டுப் பேசுறீங்க, ஏதோ அனுபவத்திலே கண்டதைச் சொல்வேனுங்க”
“அப்படியில்லை, சுப்பையா. இயற்கையாகவே எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் உனக்கு நன்றாகப் பேச வருகிறதப்பா, இது ஒரு வரப் பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.”
“சரியாப் போச்சுப் போங்க”“எங்கள் காலேஜில் நான் நின்று பேசவேண்டிய அதே இடத்தில் 'டிப்டாப்'பாகக் கொண்டு போய் உன்னை நிறுத்தினால்கூட வெளுத்துக் கட்டிவிடுவாய் போலிருக்கிறதே, சுப்பையா!
“என்னங்க நீங்க? என்னைக் கேலி பண்ணுறீங்களா!
“அட, அதற்குச் சொல்ல வரவில்லை அப்பா!. சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டாயே?”
"சொல்லுங்க. ஐயா!”
"தெருத் தெருவாய்க் காய்கறி சுமந்து விற்கிற வியாபாரத்தை நீ இன்றோடு விட்டுவிடு. இந்த மாதிரி சாதாரணமான காரியத்துக்கு உன்னைப்போல் ஒரு நல்ல விநயஸ்தன் வேண்டும் என்பது இல்லை”
"அது சரிங்க, இந்த வியாபாரத்திலே உங்களுக்கு எதுங்க அப்படிக் கேவலமாப் படுது..?
"இதிலே என்னென்ன கேவலம் இருக்கிறதென்று நான் வரிசையாக வருணிக்க வேறு வேண்டுமென்கிறாயா?”
“அது இல்லிங்க வந்து.எனக்கு உங்க கருத்து விவரமாப்புரிய வேண்டாமுங்களா? அதுக்காகத்தான் கேக்கிறேன்.வேறே ஒண்ணும் தப்பாக நினைச்சுக்கிட வேணாமுங்க”
"தெருத் தெருவா நடந்து தலைகனக்கக் கூடை சுமக்க வேணும். 'கத்தரிக்காய், வாழைக்காய், வெண்டைக்காய்’னு தொண்டை கிழியக் கத்த வேணும். இப்படியெல்லாம் செய்தும் 'பேரம்' பேச வருகிறவர்கள் நாவில் ஈரமின்றி விலை கேட்பார்கள். இது என்ன வேலை? வேலையற்றவனுக்கு வியாபாரம்’னு சொல்வதுண்டு அதுவும் இப்படித் தெரு வீதியிலே தினம் தினம் கூவி விற்கிற வியாபாரம் இன்னும் அதிக மோசம்!”
"அப்படின்னா என்னை என்ன செய்யச் சொல்றீங்க?”
சுப்பையாவின் இந்தக் கேள்வி கொஞ்சம் அமுத்தலாகவே இருந்தது. அவன் இப்படிக் கேட்ட தோரணையில் ஏதோ மறைந்து நிற்பது போலவும் தோன்றியது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவனுக்கு மறுமொழி கூறினேன்.
“செய்கிறது என்ன? நீ படித்த பழைய பள்ளிக்கூடத்து ‘சர்டிபிகேட்டுக்களை' எல்லாம் கொண்டு போய்க் காட்டி உன் பேரை “எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்'சில் பதிந்து கொள். ஏதாவது 'கிளார்க்', 'அட்டெண்டர்' வேலைகள் வந்தால் 'ஆர்டர்’ அனுப்புவார்கள். அப்புறம் உன் பாடு யோகம்தான்.!”
“நல்லதுங்க, ஆனா ஒரே ஒரு சந்தேகம் உண்டாகுதுங்க!”
என்ன, சுப்பையா?
"கிளார்க் வேலையும் 'அட்டெண்டர் வேலையும்கூட ஒரு விதத்திலே பார்த்தா வியாபாரந்தானுங்களே?” நான் திடுக்கிட்டேன். அம்பின் கூர்மை அவனுடைய இந்தக் கேள்வியில் நிறைந்திருந்தது. சற்றுமுன் அவன் அமுத்தலாகக் குழைந்து குழைந்து பேசியதன் தாத்பரியம் எனக்கு விளங்கியது. விவாத மேடையிலும் ஆட்டுக்கிடாய்ச் சண்டையிலும் எதிரி பின் வாங்கினால் நல்லதில்லை என்பார்கள். அதுமாதிரித்தான் சுப்பையாவின் குழைவு. அவன் சரமாரியாகப் பேசத் தொடங்கப் போகிறான் என்பதற்கு அறிகுறிதான் இந்தக் குழைவு.
"உன்னுடைய தத்துவ விளக்கம் எனக்குத் தேவையில்லை, சுப்பையா! நீ இந்தத் தெரு வியாபாரத்திலே இருக்கிற நிலைமையைவிடக் கொஞ்சம் அந்தஸ்துடனே கட்டின வேட்டி கசங்காமல் வாழலாம். அதற்காகத்தான் சொன்னேன். இல்லையென்றால் எனக்கு என்ன வந்ததப்பா... அவ்வளவு அக்கறை உனக்கே இல்லாதபோது?”
“அடடே! ஐயா இதுக்குள்ளாரக் கோபிச்சுக்கிடுறியளே?. நான் இதெல்லாம் வஞ்சகமாக் கரவடமாப் பேசறதில்லிங்க. ஏதோ ஒரு பேச்சுக்குச் சொல்ல வந்தேன். மனசு புண்படுமின்னா வேண்டாமே!”
“இல்லை சுப்பையா, உன் விளக்கத்தையும் சொல்லித்தான்ஆக வேண்டும். நான் கோபப்படவில்லை. நீ நிறுத்திப்பதறாமல் சொல்லேன் கேட்கிறேன்!.”
அவன் மறுமொழியால் மனங்குளிர்ந்த நான் என் சினத்தை மாற்றிக் கொண்டு, அவனுடைய விளக்கத்தைக் கேட்கத் தயாரானேன்.
"ஐயா, கோபப்படாமக் கேளுங்க.தப்பிதமா நினைச்சிக்கிடாம என் கேள்விக்கும் கொஞ்சம் பதில் சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும்!”
“என்ன கேட்க வேண்டுமோ, கேள், சொல்கிறேன் சுப்பையா?”
"ஐயா, எதுவரைக்கும் படிச்சிருக்கிறீங்க?. கேள்வியை வித்தியாசமா எடுத்துக்கிடாதீங்க!”
“எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கிறேன், சுப்பையா!
"அதுக்கு எத்தனை வருஷம் படிக்கனுமுங்க?”
"ஹைஸ்கூல் படிப்புக்குமேல் ஆறு வருஷம் படிக்க வேண்டும் அப்பா
“உங்களுக்கு என்ன செலவு ஆயிருக்குமுங்க?”
"நீ எதற்காக வளைத்து வளைத்துக் கேட்கிறாய்?...பத்தாயிரம் ரூபாய்க்குமேல் என் காலேஜ் படிப்புக்கு மட்டும் செலவாகியிருக்கும்'!
"நீங்க அவ்வளவு செலவழிச்சி ஏனுங்க அந்தப் பட்டப் படிப்பு வரை படிச்சீங்க? அதுக்கு இப்போ என்ன பிரயோசனமுங்க?”
"அதென்ன சுப்பையா அப்படிக் கேட்டுவிட்டாய்? அந்தப் பட்டப் படிப்பு படிக்கவில்லை என்றால் இப்போது நான் காலேஜில் புரொபஸராக எப்படி இருக்க முடியும்? மாதம் ஐந்நூறு, அறுநூறு என்று சம்பளம் எப்படிக் கிடைக்கும்? உன் கேள்வியே அர்த்தமில்லாமல் இருக்கிறதே? ஏதோ வாய்க்கு வந்ததைக் கேட்கிறாயே..?”
"இல்லீங்க, அர்த்தத்தோடேதான் கேட்கிறேன். நான் காலேஜிப் படிப்புப் படிக்கலீங்க ஆனா எதைப் பத்தியும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவேனுங்க. அதைக் கொண்டு பேசுவேனே தவிர, நானா வாயில் வந்ததைப் பேசமாட்டேனுங்க”
“சுப்பையா, உன் பேச்சு ஒரு தினுசாகப் போகிறதே...? என்னையே தாக்கத் தொடங்கிவிட்டாய்?. பரவாயில்லை அப்பா. பரவாயில்லை. தேர்ச்சிதான்.சொல்ல வேண்டிய விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடு. உன்னிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறதோ? குறையையும் கேட்டு விடுகிறேன்!”
“பார்த்தீங்களா, பார்த்தீங்களா, ஆத்திரப்படுறியளே?. என் மேலே கோவம் ஏனுங்க? கருத்திலே பிழையில்லையானா என் மேலே சினந்துகிட்டு என்ன ஆவப்போவுதுங்க?”
“சரியப்பா சரி, சொல்லியழு. போயும் போயும் காலை நேரத்திலே உங்கிட்டே வாயைக் கொடுத்தேனே? நீ என்றைக்கும் போலப் 'பழைய சுப்பையாதான்’னு எண்ணியிருந்தேன். இன்றைக்கு என்னவோ நீ ஒரு மாதிரிப் பேசறே? என்றைக்குமே அடைந்திராத வெறுப்பை அன்றைக்கு அடைந்தவனாகச் சலித்துக்கொண்டே அவனைக் கேட்டேன் நான்.
“தப்புங்க தப்பு. இந்தப் பேச்சை உங்க மேலே இருக்கிற ஆத்திரத்தினாலே நான் பேசலீங்க. உங்க கருத்து மேலே இருக்கிற ஆத்திரம்தானுங்க. 'கத்தரிக்காயும், வாழைக்காயும் சுமந்துக்கிட்டுத் தெருவிலே 'காய்கறி, காய்கறீ'ன்னு கூவி விக்கிற வியாபாரம் இழிவு. கிளார்க்கோ, அட்டெண்டரோ ஆகி அறுபது ரூபாக்காசுக்கு முழு நேரத்தையும் கூவாமலே விற்கும் அடிமை வேலை உயர்வு' அப்படிங்கிற கருத்து உங்ககிட்டே இருக்குங்க. இந்தத் தவறான கருத்தை நினைச்சாத்தான் எனக்கு ஆத்திரம் பத்திக்கிட்டு வருதுங்க!”
“அது சரி சுப்பையா. நீ எப்படியிருந்தால் எனக்கென்ன? என்னைக் கேள்வி கேட்டாயே அந்தக் காரணம்தான் எனக்கு விளங்கவில்லை! பெருமூச்சொன்று என்னிடமிருந்து வெளிப்பட்டது.அப்போது அந்த ஆவேசநிலையில் சுப்பையாவைப் பார்ப்பதற்கே எனக்குப் பயமாக இருந்தது.
அவன் மறுமொழி கூறலானான்.
“உங்களைப் பத்திக் கேட்டதுங்களா?. வேண்டாமுங்க. அதை விட்டுடுங்க. நீங்க இதுக்கே இப்பிடி ஆத்திரப்படுறீங்க. நான்.அதையும் கூறிட்டாப் பிறகு நீங்க 'உன் வியாபாரமுமாச்சு, நீயுமாச்சு நாளை முதல் இந்த வீட்டு வாசப்படி ஏறப்படாது. நட வெளியே!'ன்னுசொன்னாலும் சொல்லிடுவிங்க. அப்புறம். அப்புறம் எனக்குத்தானுங்களே ஒரு வாடிக்கை வீடு நஷ்டமாப் போவும்:” “அட, சரிதான் சொல்லித் தொலையப்பா! உன்னை விட்டா இங்கே வேறே காய்கறிக்காரன் எவன் வரப்போறான்?”
“சரிங்க. சொல்றேன், என் மேலே கோவப்படாதீங்க என் கருத்து உங்களுக்குப் பிடிக்கலேன்னா அதுமேலே கோவப்படாதீங்க. படிச்சவங்ககிட்டே இதுதான் இன்னைக்கு இல்லாத குணமுங்க. கருத்து மேலே ஆத்திரப்படாம, அதைச் சொன்னவன் மேலேயே கோபப்படுறீகளே?”
“சரியாப் போச்சு! நீ எங்கேயோ வேறே பேச்சைத் தொடங்கிட்டியே? நான் கேட்டதற்குப் பதில் சொல்லப்பா!'
"ஹைஸ்கூலிலேயும் காலேஜிலேயுமாகப் பதினேழு வருஷம் ஆயிரக்கணக்கிலே செலவழிச்சு ஒரு வழியாப் படிப்பை முடிச்சுப் பட்டம் வாங்கினிங்க இப்போ என்ன செய்யறீங்க? புரொபஸ்ராயிருக்கீங்க, தற்சமயம் ஐந்நூத்துக்கு மேலே சம்பளம் வாங்குறிங்க எண்ணூறு வரை உயரும்னு நம்பிக்கிட்டிருக்கீங்க இல்லீங்களா? நீங்க சம்பளம் கட்டி ஒரு காலேஜிலே படித்துப் பட்டதை வாங்கின பிறகு, இப்போ சம்பளத்தை வாங்கிட்டுப் படிப்பைச் சொல்லிக் கொடுக்கிறீங்க. இதுவும் ஒரு வகை 'வியாபாரம்'தானுங்களே?”
"ம்...!"
“சரி; இதை விட்டுடுங்க. வக்கீல்களைத்தான் பாருங்களேன். நீதியை விற்றுப் பிழைக்க வேண்டியிருக்குது. டாக்டர்கள் படித்த கலையினாலே மருந்தையும் திறமையையும் விற்றுப் பிழைக்க வேண்டியிருக்குது. உலகத்திலே பார்க்கப் போனா மனுசன் வாழுகிறதே ஒரு வியாபாரம்தானுங்க. நீங்க படிக்காத தத்துவத்தை நான் எங்கேருந்து சொல்லப்போறேனுங்க? என்ன வித்தியாசம்னா, நாங்க தெருவிலே வந்து கூவி விற்க வேண்டியிருக்குது. வக்கீலும், டாக்டரும், புரொபஸரும் தெருவிலே வந்து கூவாமலே, அதை நாகரிகமா, கெளரவமர் விற்கிறாங்க!”
"ம்!"
என்னிடம் ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.
"அடேடே. ஏதேதோ பேசி உங்க மனசைப் புண்படுத்திட்டேனுங்க.இந்த எளவுப் பேச்சு வெறி வந்திருச்சின்னா எனக்குத் தலைகால் புரியறதில்லிங்க. இந்தப் பழக்கத்துலேருந்து விடுபடவும் முடியறது இல்லை. நான் வரட்டுமுங்களா? நாளைக்குக் காசு வாங்கிக்கிறேனுங்க நான் எதினாச்சியும் எசகுபிசகா உளறியிருந்தா மன்னிச்சிருங்க. உங்க சுப்பையாதானே?”அவன் குரல் குழைந்து இருந்தது.
"சரி, சுப்பையா!'
அவன் கூடையை எடுத்துக்கொண்டு அடுத்த வீட்டு வாசலை நோக்கி நடந்தான். அவன் செல்லும் திசையையே நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எம்.ஏ. படித்து புரொபஸராயிருக்கும் எனக்கு விளங்காத 'தத்துவத்தை' இந்தக் காய்கறிக்காரன் எவ்வளவு சுலபமாக விளக்கிவிட்டான்!'வாழ்க்கை அப்படியே ஒரு வியாபாரம்' என்பது உண்மைதான்! சுப்பையாவுக்கு விளங்கிய இந்த அற்புதமான தத்துவமெய், தத்துவம் படித்த எனக்கு ஏன் விளங்கவில்லை?
- "இரு வேறு உலகத் தியற்கை திருவேறு
- தெள்ளியர் ஆதலும் வேறு!"
இந்தத் திருக்குறள்தான் அதற்கு விடை சொல்லவேண்டும். நான் பேனாவை மூடி வைத்துவிட்டு எழுந்திருந்தேன். தொலைவில் எங்கிருந்தோ, “காய்கறீ! காய்கறீ! வாழைக்காய்! கத்தரிக்காய்!” என்று ஒலி சன்னமாக என் செவிகளில் விழுந்தது. சற்றுமுன் என்னிடம் பேசிவிட்டுச் சென்ற சுப்பையாவின் குரல்தான் அது.
காற்றில் மிதந்து வந்த அந்த மெல்லிய ஒலி, “நாங்கள் தலையிற் சுமந்த கால்கள் தேயத் தெருவில் நடந்து கூவி விற்கிறோம். ஆனால் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழும் டாக்டர்கள், வக்கீல்கள், புரொபஸர்கள் என்று வரிசையாக இருக்கும் நீங்களோ..?” என்று எதிரொலி பரப்பி என் செவிகளில் எதையோ கேட்பது போலிருந்தது.
- “விற்றுப் பிழைப்பதுதான் வாழ்க்கை - இங்கு
- விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை;
- கற்றுப் படித்தது ஏன்? வாழ்க்கை - என்றும்
- விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை!"