நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/கடல் கறுப்பா? நீலமா?
33. கடல் கறுப்பா? நீலமா?
கிழவன் சூசை நடந்து கொண்டிருந்தான். ‘சரக், சரக்’ என்று நீண்ட காலமாக உழைத்து விட்ட அலுப்பை ஒலமிடுவது போல் அவனுடைய கால்களின் பழைய செருப்புக்கள் செம்மண் சாலையின் புழுதியைக் கிளப்பி விட்டன. அத்தனை வயதான பின்பும், வேகம் குறையாமல் துள்ளிப் பாய்கிறாற் போல் அவனுக்கென்று ஒரு நடை வாய்த்திருந்தது.
முழங்காலுக்கு மேல் வரித்து கட்டிய செம்புழுதி படிந்த வேட்டி, அது இடுப்பிலிருந்து நழுவி விடாமல் பழைய காலத்துப் பாணியில் ஒரு தடிமனான பெல்ட்டு, மார்பில் அழுக்கடைந்த பனியன், கழுத்தில் ஒரு கருப்புக் கயிற்றில் முடிந்த சிலுவை.
வலது கையில் மார்பளவு உயரத்தில் பூண் பிடித்த கிளுவைக் கம்பு. இடது கையில் ஒரு பெரிய மட்டிப் பழத் தாறு. (மட்டி நாஞ்சில் நாட்டில் பிரசித்தமான ஒரு வகை வாழைப் பழம்) தலை மேல் துணியில் கட்டிய மூட்டை ஆசாரிப் பள்ளம் சந்தைக்குப் போய்ச் சாமான் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான். .
குளச்சல் உப்பளத்திலிருந்து உப்பு மூட்டைகளை ஏற்றி வரும் லாரி ஒன்று பிசாசு போல் பாய்ந்து புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்தது. குறுகலான சாலையிலிருந்து கீழே இறங்கி ஒதுங்கிக் கொண்டான் சூசை. லாரி போனதும் அவன் நடை தொடர்ந்தது. நாகர் கோவிலையும், அதன் தென் மேற்குக் கோடியிலுள்ள துறைமுகப்பட்டினமான குளச்சலையும் இணைக்கும் சாலை அது. தென்மேற்கு மூலை தொடங்கி கிழக்கு முகமாக நாஞ்சில் நாட்டை வளைத்துக் கொண்டு கிடக்கும் கடற்கரையோரத்து ஊர்களில் எண்ணற்ற மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சூசையும் அவர்களில் ஒருவன். அவனுக்கு ஊர் மணவாளக் குறிஞ்சிக்கு அருகில் கடிய பட்டினம். கிழவன் சூசை தனிக்கட்டை. பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல், அந்த ஐம்பத்தாறு வயதுக்குள் எத்தனையோ துன்பங்களுக்கு ஈடு கொடுத்து விட்டது அவன் வாழ்க்கை.
சகரியாஸ் பாதிரியாரின் ஆறுதலான அறிவுரைகளும், ஆதரவும் பேரப் பிள்ளையாண்டான் என்ற அந்த ஒரு கடைசிக் குலக் கொழுந்தும் இல்லையானால், சூசை இதற்குள் என்றைக்கோ உயிரை விட்டிருப்பான். -
சூசைக்கும், மரியாளுக்கும் திருமணம் நடந்த போது அவனுக்கு இருபத்தெட்டு வயது. மூன்று வருடங்களில் மரியாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டுப் போய்ச் சேர்ந்தாள். அந்தப் பேரிடியைத் தாங்கிக் கொண்டும் வாழமுடிந்தது.அவனால். எத்தனையோ பேர் பெண் கொடுக்க முன்வந்தார்கள். சகரியாஸ் பாதிரியார் கூட அவனை வற்புறுத்தினார். அவன் மீண்டும் மணம் செய்து கொள்ளக் கண்டிப்பாக மறுத்துவிட்டான். பெண் குழந்தையைக் கொஞ்ச நாள்தான் வைத்துக் கொண்டிருந்தான். பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு தனி ஆண் பிள்ளையால் பேணிக் காக்க முடியவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தால் வயிற்றுப் பாட்டுக்குத் தொழிலைக் கவனிக்கவேண்டாமா? காலையில் கிழக்கு வெளுக்கும் போது கட்டுமரத்தில் கிளம்பினால் அந்தி மயங்கும் நேரத்துக்குத் திரும்புகிறவன் குழந்தைக்காக வீட்டிலேயே இருக்க முடியவில்லை.
சூசை அழுது கொண்டே சகரியாஸ் பாதிரியாரிடம் முறையிட்டான். அவர் மதச் சலுகையை வைத்துக் குழந்தையைப் பாளையங்கோட்டையிலுள்ள அருள் மரியன்னை சிறுவர் விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்தார். சூசைக்குக் குழந்தையைப் பற்றிய கவலை விட்டது. அதன் பின் பதினான்கு வருடங்கள் குழந்தை பாளையங்கோட்டையிலே வளர்ந்து படித்து பெரியவளானாள். சூசை இரண்டு மாதத்துக்கொருதரம் மூன்று மாதத்துக் கொருதரம் பாளையங்கோட்டை போய் பெண்ணைப் பார்த்து விட்டுக் கடியபட்டினம் திரும்புவான்.
எல்லாம் சகரியாஸ் பாதிரியாரின் கருணை.அவர் இல்லாவிட்டால் அவனால் தன் பெண் குழந்தையை இப்படி வளர்த்திருக்க முடியாது. சீவரட்சகரான கர்த்தர் எத்தனையோ பேர்களுடைய துன்பங்களைத் தாங்கிக்கொண்டு சிலுவையில் அறைபட்டது போல், பலருடைய துன்பங்களைத் தாங்கி அவற்றில் தம்மைத் தாமாகவே அறைந்து கொண்டு வாழ்ந்து வரும் உபகாரி அவர்.
ரோஸி - அதுதான் சூசை தன் பெண்ணுக்கு இட்டிருந்த பெயர்-அவளுக்குப் பதினான்கு வயதாகியபோது எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்திருந்தாள். அதற்கு மேலும் அவளைப் படிக்க விட விருப்பமில்லை சூசைக்கு.
உள்ளூரில் உறவு முறைக்குள் யாராவது ஒரு மீனவப் பையனுக்குக் கட்டிக் கொடுத்துப் பெண்ணை வீட்டோடு வைத்துக் கொண்டால் வயதான காலத்தில் நிம்மதியாக இருக்குமென்று தோன்றியது.
சகரியாஸ் பாதிரியாரிடம் போய்த் தன் விருப்பத்தைக் கூறிக் கலந்தாலோசித்தான்.
பாதிரியார் சிரித்தார்."சூசை படித்த பெண்ணை இங்கே கூட்டிக் கொண்டு வந்து இந்தப் பட்டிக்காட்டுக்குள் எவனாவது ஒரு கையெழுத்துப் போடத் தெரியாத பையனுக்குக் கட்டிக் கொடுத்துக் கொடுக்க வேண்டாம். நீ கவலைப் படாமல் இரு. பாளையங்கோட்டையிலேயே அவளுக்குத் தகுதியான கணவனை நான் தேர்ந்தெடுக்கிறேன்” என்று கூறினார். அவருடைய வார்த்தையைச் சூசையால் மீறமுடியவில்லை. மறு மாதமே பாளையங்கோட்டையில் ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு அழகிய வாலிபனை ரோசிக்கு மணமகனாகப் பேசி முடிவு செய்தார் பாதிரியார். சூசையும் சம்மதித்தான்.திருமணம் கூடப்பாளையங்கோட்டைச் சர்ச்சிலேதான் நடைபெற்றது. சூசை, யாரோ மூன்றாவது மனிதன் போய்விட்டு வருவதுபோல் பாதிரியாரோடு பாளையங்கோட்டைக்குப் போய்விட்டு வந்தான். தன் பெண் நினைவு தெரிந்த பின் ஒரு தடவையாவது ஊருக்கு வந்து போகவில்லையே என்று நெடுநாளாக ஒரு ஏக்கம் சூசைக்கு இருந்தது. திருமணம் ஆனபின்பாவது பெண்ணையும், மாப்பிள்ளையையும் சேர்த்து ஒரு தடவை மறு வீடு அழைத்துவிட வேண்டுமென்று அவன் தீர்மானித்திருந்தான். ஆனால் மாப்பிள்ளை அவனுடைய அந்தக் குக்கிராமத்துக்கு வர இணங்கவில்லை. தன் பெண் தனக்கு எட்டாத ஊரில் குடித்தனம் நடத்துகிறாள் என்று நினைக்கும்போது அவனுக்கு வேதனையாக இருந்தது. முன்பு சோற்றுக்கும், துணிக்கும், படிப்புக்கும், பேணுதலுக்குமாகப் பாளையங்கோட்டையில் இருந்தாள். இப்போது கணவனோடு கணவன் வீட்டில் இருக்கிறாள். சூசையைப் பொறுத்தமட்டில் இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
எப்படியானால் என்ன? எங்கே இருந்தால் என்ன? ரோஸி அவனுடைய பெண். அந்த ஒரே பெருமையோடு அந்தக் கடற்கரை யேராத்துப் பட்டிக் காட்டில் உயிரை வைத்துக் கொண்டிருந்தான் அவன்.
சூசைசகரியாஸ் பாதிரியாரிடம் அடிக்கொருதரம் தன் மகளை ஊருக்கு 'மறுவீடு' அழைக்க வேண்டுமென்று உருக்கமாக வேண்டிக்கொள்வான். சகரியாஸ் பாதிரியார் அந்தப் பட்டிக்காட்டு மீனவனின் பேதைமை மிக்க பாச உணர்வைக் கண்டு தமக்குள் சிரித்துக் கொள்வார்.
ஒருமுறை ரோஸி ஊர் போவது பற்றி தன் கணவனிடம் பிரஸ்தாபித்தாள். சூசையின்மாப்பிள்ளைக்கோ கிழவனைக் கண்டாலே அருவருப்பு.
“இந்தச் செம்படவக் கிழவனுக்காக உன்னை நான் கலியாணம் செய்து கொள்ளவில்லை, ரோஸி! ஏதோ சகரியாஸ் பாதிரியார் எனக்கு வேண்டியவர் என்பதற்காக இது நடந்தது. அடிக்கடி அந்தக் கிழவனை இங்கே வந்து ஊருக்குக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்யச் சொல்லாதே. அவன் இங்கே வந்து போவதே எனக்கு அவமானமாக இருக்கிறது. பாளையங்கோட்டையில் தெரு பெருக்குகிற தோட்டிகூட அந்தக் கிழவனை விட நன்றாகச் சுத்தமாக உடை உடுத்திக் கொண்டிருப்பான்” என்று ரோஸிக்கு அந்த வார்த்தைகளைக் கேட்டபோது தாங்க முடியாத வருத்தந்தான் ஏற்பட்டது. வருந்தி என்ன செய்வது? அதற்காகக் கணவனைப் பகைத்துக் கொள்ள முடியுமா? ஊர் போவதைப் பற்றியும், தந்தையைப் பற்றியும், அன்றிலிருந்து தன் கணவனிடம் பேச்சு எடுப்பதையே விட்டுவிட்டாள் ரோஸி.
அவள் வயிறும், மாதமுமாகப் பேறு காலத்திற்குத் தயாரானாள். கடிதம் எழுத வேண்டிய முறைக்காகத் தந்தைக்கு ஒரு வரி எழுதிக் கணவனுக்குத் தெரியாமல் அதை தபாலில் சேர்த்தாள். சூசைக்கு வருகிற கடிதத்தையெல்லாம் சகரியாஸ் பாதிரியார்தான் அவனுக்குப் படித்துக் காண்பிப்பார். ரோஸியின் கடிதத்தையும் அவர்தான் படித்துக் காண்பித்தார். சூசைக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே.
"ஐயா! இப்போதே புறப்படுங்கள். பாளையங்கோட்டைக்கு இரண்டு பேருமாகப் போவோம். நீங்களும் கூட வந்தால் மாப்பிள்ளை ரோஸியை அனுப்ப மறுக்க மாட்டார். கட்டாயம் பேறு காலத்துக்கு அவளைப் பிறந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து விடவேண்டும்." அவன் பாதிரியாரைக் கெஞ்சினான். ரோஸியின் கணவனுடைய இயல்பை நன்கு அறிந்திருந்தார் சகரியாஸ் பாதிரியார். ஆனால் அதைச் சூசையிடம் சொல்லிக் கள்ளங் கபடமற்ற அவன் மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை அவர்.
"சூசை நன்றாக யோசித்துப் பார். இந்தப் பட்டிக் காட்டில் உன் பெண்ணைப் பேறு காலத்துக்குக் கூட்டிக் கொண்டுவந்து வைத்துக் கொள்வதால் என்ன நன்மை? ஒரு மருந்தா? ஒரு டாக்டரா? உன் வீட்டில் உன்னைத் தவிர ஒத்தாசைக்கு வேறு பெண் பிள்ளைகூடக் கிடையாதே பேசாமல் பாளையங்கோட்டையிலே இருந்து விட்டுப் போகட்டும். குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக முடிந்தபின் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து ஒருதரம் எல்லாருமே குடும்பத்தோடு இங்கு வந்துவிட்டுப் போக ஏற்பாடு செய்கின்றேன்."
சகரியாஸ் பாதிரியார் சமாதானப்படுத்தினார். சூசை திருப்தியோடு அதை ஒப்புக் கொண்டான்.
மறுமுறை பாளையங்கோட்டைக்குப் போனபோது சகரியாஸ் பாதிரியார் ரோஸியின் கணவனைச் சந்தித்து'தம்பி விசுவாசம்.அந்தப் பக்கம் வா. நான் இருக்கிற பக்கமெல்லாம் நீ வந்து பார்க்க வேண்டாமா? அழகிய கடற்கரையோரத்துப் பிரதேசம். அது குளச்சல் துறைமுகம், உப்பளம் மணவாளக் குறிச்சியில் ணேமணல் தோரியம் உலோகத் தொழிற்சாலை இதெல்லாம் நீ அவசியம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் அப்பா.அந்தக் கிழவன் சூசைக்காக வராவிட்டாலும் எனக்காகவாவது ஒரு முறை குடும்பத்தோடு வா" என்று அழைத்தார். அவ்னும் ஒரு மாதிரி வர ஒப்புக் கொண்டான். குழந்தை பிறந்ததும் கடிதம் போடுமாறு சொல்லிவிட்டுத் திரும்பினார் பாதிரியார்.
பத்துப் பன்னிரண்டு நாட்கள் கழிந்தன. பாளையங்கோட்டையிலிருந்து கடிதம் வரவில்லை; தந்தி பறந்து கொண்டு வந்தது. சகரியாஸ் பாதிரியார் தந்தியை வாங்கிப் படித்தார். கண்களை மூடித்தியானித்துச் சிலுவையை நெற்றிவரை கொண்டு போனார். அந்தச் செய்தியைச் சூசையிடம் எப்படிச் சொல்வதென்று தயங்கினார். அவன் ஏற்கனவே நொந்து போய்க் கிடக்கிறான்.
"ரோஸி இறந்துவிட்டாள்.ஆண் குழந்தை பிறந்து சுகமாக இருக்கிறது. இதுதான் தந்தியின் வாசகம். நீண்ட ஆறுதலுரைக்குப் பின் சர்ச்சுக்கு அழைத்துப் போய்ப் பிரார்த்தனையையும் முடித்துக் கொண்டு அவனிடம் தந்தியை விளக்கினார். கிழவன் தலையிலடித்துக் கொண்டு கதறியழுதான். அவனைத் தேற்றிப் பாளையங் கோட்டைக்கு அழைத்துக் கொண்டு வந்தார் பாதிரியார். அவர்கள் வருவதற்கும் முன்பே ரோஸியின் சவ அடக்கம் முடிந்துவிட்டது.
தான் மறுபடியும் வேறு திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சகரியாஸ் பாதிரியாரிடம் வெளிப்படையாகவே கூறி விட்டான் மாப்பிள்ளைப் பையன். பாதிரியார் அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டார். குழந்தை சூசையின் பொறுப்பில் வந்தது.
பின்பென்ன? பழைய கதைதான்.பாதிரியாருடைய தயவில் பாளையங்கோட்டை விடுதியில் பேரக்குழந்தையைச் சேர்த்தான் சூசை, பேரன் வளர்ந்து கொண்டு வந்தான் தன் பேரனை வளர்த்துப் பெரியவனாக்கித் தனது தொழிலின் வாரிசாகக் கொண்டு வந்து ஊரில் ஊன்றிவிட வேண்டும் என்று சூசையின் உள்ளத்தில் தணியாத ஆசை. பட்டுப் பட்டு நொந்து போன அவனுக்கு ஒரே நம்பிக்கை அந்தப் பேரன் உருவில் இருந்தது. தலைமுறை தலைமுறையாகக் கடலை ஆண்டு வாழும் தன் பரம்பரை தன்னோடு அற்றுப் போய்விடக் கூடாதே என்று அவனுக்குக் கவலை.
பத்துக் கட்டுமரங்கள், மூன்று பாய்மரத் தோணி, இரண்டு வள்ளம், ஏழு வலை, இவ்வளவும் சூசையின் சொத்து.
"பேரப்பிள்ளையை அதிகம் படிக்கவைக்கப்படாது. நிறையப் படித்துத் தெரிந்து கொண்டால் அப்புறம் பட்டிக்காட்டு ஊருக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடிப்பான். நம் தொழிலுக்கும் மனம் இணங்காது. பத்துப் பன்னிரண்டு வயதுக்குள் படித்தது போதும் என்று பாதிரியாரிடம் சொல்லி ஊருக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டும். அப்புறம் இரண்டு மூன்று மாதம் கூடவே கூட்டிக்கொண்டு போய்த் தொழிலில் பழக்கிவிடவேண்டும்” ஒரு நாள் நடுக்கடலில் வலையைச் சரியாக வீசாமல் தவற விட்டு விட்டதற்காகச் சூசையைச் சிறு வயதில் அவன் தந்தை முதுகை உரித்து விட்டார்.
“சே! சே! பேரப்பிள்ளையை நான் அப்படியெல்லாம் அடிக்கக்கூடாது. தாயில்லாத பயல், அரட்டல் மிரட்டலிலேயே எல்லாம் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும். பயல் பிறந்ததிலிருந்து சமுத்திரத்தையே பார்க்கவில்லை. பயத்தைப் போக்கிக் கடலுக்குள் கூட்டிக்கொண்டு போவதே மிகவும் கஷ்டமாயிருக்கும்.”
“தாத்தா யோசனை பலமோ? பராக்குப் பார்த்துக் கொண்டே நடக்கிறீர்களே?”
நடந்து கொண்டிருந்த கிழவன் சூசை சிந்தனையிலிருந்து விடுபட்டுத் திரும்பிப் பார்த்தான். பின்னால் ஆரோக்கியம் வேகமாக வந்து கொண்டிருந்தான்.
“வா அப்பா, ஆரோக்கியம்! நீயும் ஊருக்குத்தானே வருகிறாய்?”
"வேறெங்கே போக்கிடம்” என்று ஆரோக்கியம் அலுத்துக் கொள்வது போல் பதிலளித்தான்.
“ஏதேது? மட்டிப்பழமெல்லாம் வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தால் பேரப் பிள்ளையைப் பார்க்கப் போlங்க போலத் தோணுது”
"ஆமாம் அப்பா! இந்த டானியல் பயல் வலை இரவல் வாங்கிக் கொண்டு போனான். நாலு நாளச்சு, திரும்பித்தரலை. அதை வாங்கி வைத்துவிட்டுச் சாயங்காலம் பஸ்ஸில் புறப்படணும்” என்றான் சூசை
"டானியல் அண்ணாச்சி இரவல் வாங்காத ஆளு இந்த வட்டாரத்திலேயே கிடையாது. தாத்தா இரண்டு வாரங்களுக்கு முன்னாலே என்கிட்டக் கட்டு மரம் கொடுன்னு இரவல் வாங்கிட்டுப் போனான். எங்கேயோ பாறையிலே மோதிச் சீரழிச்சுத் திருப்பிக் கொடுத்தான்.
“உதவாக்கரைப்பயல் இவனுக்கு இரவல் கொடுத்துக்கெட்டுப்போக நமக்கென்ன பிள்ளையில்லாச் சொத்தா பாழ்போகுது? நாளைக்குப் பேரப் பிள்ளையாண்டான் வந்து சேர்ந்திட்டால் வலையும் கட்டு மரமும் எங்கே என்று கேட்பானே?”
“உங்க பேரனை ஊருக்குக் கூட்டிக் கொண்டு வரப்போகிறீர்களா தாத்தா?”
“அட இன்னிக்கில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் என் தொழில் நசித்துப் போகாமல் அவன்தானே ஏற்றுக் கொள்ளணும்? ஊரை மறந்து வமிசத் தொழிலை மறந்து பயலை வெள்ளை வேட்டிக்காரனாகச் சுத்த விடற எண்ணம் எனக்கில்லை; கொஞ்சம் படிச்சதும் நிறுத்திப்பிட்டு ஊருக்குக் கூட்டியாந்திடனும்னு இருக்கேன்.”
‘சகரியாஸ் பாதிரியாரு அதுக்குச் சம்மதிப்பாரா தாத்தா?
"அவரு சம்மதிக்கிறாரு சம்மதிக்கலை; அதைப் பார்த்தா முடியுமா.என் மனசிலே பட்டதைச் செய்யப் போறேன்.”
ஆரோக்கியம் பேசாமல் நடந்தான். ஊர் அருகில் வந்து விட்டார்கள் இருவரும்.
கடற்கரையில் யாரோ வற்புறுத்திக் கட்டித் தொங்க விட்டிருப்பதுபோல் அமைந்திருந்தது கடியபட்டினம் ஊர். உயர்ந்தும் தாழ்ந்தும் கடலை ஒட்டினாற் போல் தென்பட்ட பாறைகளின் இடையே சிறுசிறு குடிசைகள், சில ஒட்டடுக்கு வீடுகள், ஒன்றிரண்டு காரைக் கட்டிடங்கள் தெரிந்தன. சாலைகளோ தெருவோ அமைக்க முடியாத ஊர். அரக்கனுக்குப் பல் முளைத்த மாதிரிப் பாறைகளில் எப்படிச் சாலை அமைப்பது?
போகிற வழியில் சகரியாஸ் பாதிரியாரைச் சர்ச்சில் சந்தித்தான் சூசை.
“சூசை உன் பேரப்பிள்ளை என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கான் அப்பா' .
“என்ன எழுதியிருக்கிறான் ஐயா! படியுங்கள். கேட்கிறேன்.” .
"வேறொன்றுமில்லை. அவனுக்குச் சமுத்திரத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறதாம். சமுத்திரம் எவ்வளவு பெரிசாயிருக்கும்; எவ்வளவு ஆழமாயிருக்கும்; என்ன நிறமாயிருக்கும் என்றெல்லாம் கேட்டு எழுதியிருக்கிறான்.”
“நானே இன்று மாலை பாளையங்கோட்டைபோகலாம் என்றிருக்கிறேன் ஐயா!'
“ஏது? திடீரென்று புறப்பட்டு விட்டாய்?”
“ஒன்றுமில்லை பயலைப் பார்த்து வெகு நாட்களாயிற்று”
'‘போய் வா, ஆனால் படிப்பைக் கெடுத்து விட்டு சமுத்திரம் பார்க்க ஆசைப்பட்டான் என்று கையோடு இங்கே கூட்டிக் கொண்டு வந்து விடாதே. விடுமுறையின் போது வந்தால் போதும்”.
“இந்த வருட விடுமுறையின்போது பையனை இங்கே கூட்டி வந்தால் அப்படியே ஊரோடு வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ஐயா! இனிமேல் அவனுக்குப் படிப்பு எதற்கு? தொழிலைப் பழக்கி விட்டால் எனக்குக் கவலை இல்லை”. சூசை பாதிரியாரிடம் தன் நோக்கத்தைக் கூறினான்.
“அதைப் பற்றிப் பின்னால் யோசித்துக் கொள்ளலாம். இப்போதைக்கு நீ போய்ப் பார்த்து விட்டு வா”
சகரியாஸ் பாதிரியார் சிரித்துக் கொண்டேகூறினார். சூசை பெருமூச்சு விட்டான்.
டானியலுக்கு இரவல் கொடுத்திருந்த வலையைத் திரும்ப வாங்கிப் பத்திரமாகக் குடிசைக்குள் வைத்துப் பூட்டி விட்டுச் சூசை புறப்படும் போது மாலை மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. நாகர்கோவிலுக்கு வந்து வேறு பஸ் மாறிப் பாளையங்கோட்டையை அடைந்தபோது இரவு ஒன்பது மணி.
விடுதியில் பேரப் பிள்ளையாண்டான் தூங்கிப் போயிருந்தான். அவன் தூக்கத்தைக்கெடுத்து எழுப்பித்தன் வரவைப் புலப்படுத்தச் சூசைக்கு விருப்பமில்லை. மட்டிப்பழம் கொண்டு வந்திருக்கிறேனென்பது தெரிந்தால் பயல் இப்போதே எழுந்துவிடுவான். அந்த வாழைப் பழத்தின்மேல் பையனுக்கு அத்தனை ஆசை!
சூசையும் அங்கேயே விடுதியில் பையனுக்குத் தாத்தாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி பிடிபடவில்லை. மட்டிப் பழத்தை ஆவல் தீரச் சாப்பிட்டான்.
“தாத்தா! நான் எப்ப சமுத்திரம் பார்க்கிறது? நீ என்னைக் கூட்டிக்கொண்டு போய் காட்ட மாட்டியா?” என்று பையன் கேட்டபோது, அப்போதே அவனைக் கூட்டிக் கொண்டு போய்ச் சமுத்திரத்தைக் காட்டிவிட வேண்டும் போல் ஆசை துடித்தது சூசைக்கு. சகரியாஸ் பாதிரியார் என்ன சொல்வாரோ என்று பயந்து ஆசையை அடக்கிக் கொண்டான்.
“தாத்தா சமுத்திரம் எவ்வளவு பெரிசா இருக்கும்?”
“ரொம்பப் பெரிசா இருக்கும் கண்ணு!”
“தாமிரபருணி நதியைப் போலவா?”
"இல்லேடா, அதெல்லாம் விடப் பெரிசு!’
“நயினா குளம் போலவா?”
"ஊஹும் எல்லாத்தையும் விடப்பெரிசு”சிறுவன்தான் காணாத சமுத்திரத்தைத் தான் கண்ட ஆறு குளங்களை வைத்து அனுமானிக்க முயன்றான்.
"நீ சமுத்திரத்திலே ரொம்ப துரம் போய் மீன் பிடிப்பியாமே தாத்தா? உனக்குப் பயமாயிருக்காதா?” .”
"பழகினாப் பயமாயிருக்காது. உனக்குக்கூட வந்துவிடும். நீயும் நாளைக்கு அதெல்லாம் பழகிக்கனும்” .
"ஐயையோ! நான் மாட்டேன் தாத்தா. சுறாமீன், முதலை, திமிங்கலம் எல்லாம் கடலில் இருக்கும்னு பாடப் புத்தகத்திலே போட்டிருக்கே?”
“இருந்தா என்ன? அவை நம்மை ஒன்னும் பண்ணாது.” கடலைப் பூமியாக வைத்துக் கொண்டு பிழைக்க வேண்டிய சிறுவன் பிறந்த நாளிலிருந்து கடலையே பார்க்காமல் வளர்ந்து விட்டானே என்று ஏங்கினான் சூசை.
"இந்த வருசம் லீவிலே உன்னைக் கட்டாயம் ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன். அப்ப கடலைப் பார்க்கலாம். என் கூடக் கட்டு மரத்திலே உட்கார்ந்து கடலுக்குள்ளேயே நீ வரலாம். எல்லாம் பழக்கிக் கொடுத்திடுவேன் உனக்கு”
"அப்புறம் இங்கே படிக்கவே வரவேண்டாமா தாத்தா?”
‘'எதுக்கு வரணும் ராசா? நான்தான் உனக்காக நிறைய கட்டுமரம், வலை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேனே?”
“படிப்பை நிறுத்திட்டால் சகரியாஸ் தாத்தா கோபிக்க மாட்டாங்களா?”
“மாட்டாங்க!”
"அப்படியானால் சரி தாத்தா!'
“ஊருக்கு வரவரைக்கும் சமர்த்தாப் படிச்சிட்டிருக்கணும் கண்ணு!”
“அங்கே வந்தா தினந்தினம் சமுத்திரத்தைப் பார்க்கலாமில்லையா தாத்தா?”
“நிறையப் பார்க்கலாம்.”
சூசை சிரித்துக் கொண்டான்."ஏண்டா! நீ பாதிரியாருக்குக் கடிதாசு எழுதினியா?”
பையன் தலையைக் குனிந்து கொண்டு பதில் சொன்னான்; "ஆமாம்! சமுத்திரம் பார்க்க ஆசையாயிருக்குதுன்னு கடிதாசு எழுதினேன்.”
“எனக்கு எழுதப்படாதா நீ? அவருக்கு எதற்கு எழுதினாய்?"
சிறுவன் மெளனம் சாதித்தான். அன்று மாலை சூசை ஊருக்குப் புறப்படும்போது பேரப்பிள்ளை தாத்தாவிடம் மறுபடியும் சமுத்திரத்தைப் பற்றிப் பேச்சை எடுத்தான்.
“தாத்தா! சமுத்திரம் நீல நெறம்னு பாடத்திலெல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்க ஆனா பூகோளப் புத்தகத்தில் சமுத்திரத்தின் படம் பார்த்தா ஒரே கறுப்பா இருக்குது?”
“போட்டோவில் கறுப்பாகத்தான் விழுந்திருக்கும். நேரிலே பார்த்தால் நீலமாக இருக்கும்.”
“அது ஏன் தாத்தா நீலமா இருக்கிற சமுத்திரம் போட்டோவிலே மாத்திரம் கறுப்பா விழணும்?” சூசை பதில் கூறத் தெரியாமல் விழித்தான்.
“எனக்குத் தெரியாதுடா தங்கம்! நான் அதெல்லாம் படிக்கலை. உங்க வாத்தியாரையே கேட்டுத் தெரிஞ்சுக்க” என்று பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டான் சூசை'
“பயலுக்கு மூளைக்கூர் நிறைய இருக்குது. தொளைச்சுத் தொளைச்சில்ல கேள்வி கேட்கிறான்?” என்று மனதுக்குள் பேரப்பிள்ளையின் அறிவை மெச்சிக்கொண்டான் சூசை. அடுத்த முறை வரும்போது சமுத்திரம் பார்க்க அழைத்துப் போவதாகப் பையனுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டுக் கிழவன் ஊர் திரும்பினான்.திரும்பும்போதுதான் அந்தக் கிழவனின் மனத்தில் எத்தனை எதிர்காலக் கனவுகள்? அவனுடைய பேரன் கடலில் கட்டுமரம் செலுத்திச் செல்வதாகவும், வலை வீசுவதாகவும், திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து மகிழ்ந்தது அவன் மனம்.
சில மாதங்கள் கழிந்தது. எந்த வருடமும் இல்லாத கோடை மழை அந்த வருடம் திருநெல்வேலியில் வெளுத்து வாங்கியது. இடியும், மின்னலும் தினம் ஒரு கட்டடத்தையோ மரத்தையோ பலி வாங்கிக் கொண்டிருந்தன.
பாளையங்கோட்டையில் சிறுவர் விடுதி இருந்த பகுதியில் மாமரங்கள் அதிகம். சாயங்கால வேளையில் சிறுவர்கள் மாமரத்தடியில் விளையாடிப் பொழுது போக்குவது வழக்கம். மரக்குரங்கு, பச்சைக் குதிரை என்று அவரவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். மாமரங்கள் தணிவாகப் படர்ந்து வளர்ந்திருந்தன. அவை விளையாட ஏற்ற நிலையிலிருந்தன.
அன்றொரு நாள் மாலை சூசையின் பேரனும், இன்னும் நாலைந்து பையன்களுமாக ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு தணிவான மாமரத்தில் மரக்குரங்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். -
விளையாட்டில் பிடிக்கவேண்டிய கட்சிப் பையன்கள் கீழே இருந்து பிடிக்கவேண்டும். பிடிபடவேண்டிய கட்சியார் மரக்கிளைகளில் ஒளிந்திருப்பார்கள். சூசையின் பேரன் பிடிபட வேண்டிய கட்சி. மரத்தின் உச்சிக்கிளையொன்றில் ஏறி ஒளிந்து கொண்டிருந்தான் அவன். விளையாட்டு, கெடுபிடியாக நடந்து கொண்டிருந்தது.
அண்டமுகடு தவிடு பொடியாகி விடுவதுபோல் ஒரு பேரிடி அடுத்த கணம் கோபம் கொண்ட வாத்தியார் கரும் பலகையில் சாக்பீஸால் கோடு கிழப்பதுபோல் பளிரென்று வானில் ஒரு மின்னல் நெளிந்தது. மேலே பார்த்துக் கொண்டு மரக்கிளையில் உட்கார்ந்திருந்த சூசையின் பேரனுடைய கண்களுக்குள் நெருப்புப் பாய்ந்த மாதிரி ஒரு அதிர்ச்சி பரவியது. 'வீல்’ என்று அலறிக்கொண்டே அரக்கிளையிலிருந்து சுருண்டு கீழே விழுந்தான் பையன். கையிலும் காலிலும், உடம்பிலும் மரத்தில் சிராய்த்துக் காயங்கள் பட்டிருந்தன.
மற்ற சிறுவர்கள் அரண்டு ஒடிப்போய் விடுதி வார்டனிடம் கூறினார்கள். வார்டனும், மற்றவர்களும் ஓடிவந்து சூசையின் பேரனைத் துரக்கிக் கொண்டு போனார்கள்.
மூர்ச்சை தெளிவித்ததும் விடுதி டாக்டர் வந்தார். பையனைப் பரிசோதித்தார். வார்டனைத் தனியாக அழைத்துப் போய், "பையனுக்கு மின்னலில் கண் பார்வை போய் விட்டது” என்று கூறினார் டாக்டர். சூசைக்கும், சகரியாஸ் பாதிரியாருக்கும் செய்தியை அனுப்பினார் வார்டன். அந்தச் சிறுவனுக்கு மட்டும் தனக்கு என்ன ஆயிற்று என்பதே விளங்கவில்லை. "மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டோம்" என்பதை மட்டுமே அவன் உணர்ந்திருந்தான். சீக்கிரமே தனக்குக் கண் பார்வை வந்துவிடும் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது.“எனக்கு எப்போது சார் கண் பார்க்கவரும்?” என்று அவன் வார்டனிடம் கேட்ட போது கூட அவர்,"உனக்குக் கூடிய சீக்கிரம் கண் வந்துவிடும் தம்பி கவலைப்படாதே" என்று உறுதியாகப் பதில் சொல்லியிருந்தார். பையன் ஏமாற்ற மடைந்துவிடாமல் அவனைக் காக்கவே அவர் அப்படிப் பொய் சொல்லியிருந்தார். ஆனால் சிறு பையன். பாவம்! அதை உண்மைதான் என்றே நம்பிக்கொண்டிருந்தான்.
சூசையும், சகரியாஸ் பாதியாரும் பாளையங்கோட்டைக்கு ஒடோடி வந்தார்கள். டாக்டரும், வார்டனும் முன்னெச்சரிக்கையாக அவர்கள் இருவரிடமும், “சிறு பையனாக இருப்பதால் கூடியவரையில் அவன் குருடனாகப் போய்விட்டானென்ற’ உண்மையை அவனுக்குத் தெரியவிடாமல் கொஞ்ச நாளைக்கு மறைத்து வைத்துக் கொண்டே பழகுங்கள். அவனுக்கு முன்பே அழுதோ கதறியோ உண்மையைக் கூறி மனம் ஒடிந்து போகும்படி செய்துவிடக் கூடாது' - என்று சொல்லியிருந்தார்கள்.
சூசையும், பாதிரியாரும் அப்படியே நடந்துகொள்ள அவர்களிடம் ஒப்புக்கொண்டனர்.
பையனை விடுதியிலிருந்து சூசையோடு அனுப்பி விட்டார்கள்.
சூசை பையனை பாளையங்கோட்டையிலிருந்து ஊருக்கு அழைத்து வரும்போது பஸ்ஸில் அவன் தாத்தாவைக் கேட்டான்.
“தாத்தா எனக்குக் கண் வந்ததும் சமுத்திரம் பார்க்கணும், பூகோள புத்தகக்காரன் கடலை கறுப்பாய்ப் போட்டிருக்கான். அசல் நீல நெறக் கடலை நான் பார்க்கணும்”
கிழவன் சூசை சிறுவனுக்கு என்ன பதில் கூறுவான்? வெடித்துப் பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டான். பாதிரியார் அவன் அழுதுவிடாமல் அவனைச் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினார்.
மணவாளக் குறிச்சியில் வந்து இறங்கியபோது பஸ் நிற்குமிடத்தில் சூசை டானியலைச் சந்தித்தான்.
‘டானியல்! என்னுடைய பத்து கட்டுமரங்களையும், மூன்று பாய்மரத் தோணிகளையும், இரண்டு வள்ளங்களையும், ஏழு வலைகளையும், பழைய விலைக்கு விற்கப்போகிறேன். நீ வேண்டுமானால் வாங்கிக்கொள்:”
"ஏன்? உன் பேரப்பிள்ளை.' எதையோ கேட்க ஆரம்பித்தான் டானியல். அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டு அங்கே நிற்காமல் கையில் பேரனைப் பிடித்துக் கொண்டு சகரியாஸ் பாதிரியருடன் சர்ச்சை நோக்கி நடந்தான் சூசை.
“தாத்தா! ஏதோ ஒசை பெரிசாக் கேட்குதே சமுத்திரமா?” என்று நடந்து கொண்டே காதிற் புலனாகிய ஓசையைப் பற்றி விசாரித்தான் பேரன். சூசை பதில் சொல்லவில்லை. எதிரே எல்லையற்று விரிந்திருந்த நீலக்கடலை மிகுந்த வெறுப்போடு பார்த்தான் அந்தக் கிழவன்.