நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/தன்மானம்

34. தன்மானம்

காற்றில் மிதந்து வரும் மோகினி போல் அழகாக அசைந்து திரும்பி வந்து நின்றது ‘பிளிமத்’ கார். அறைக்குள் கையொடிந்த நாற்காலியில் உட்கார்ந்து தெருவையும், அதற்கப்பால் ஆகாய வெளியையும், வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரம் திகைப்போடு எழுந்திருந்து வாசலுக்கு வந்தான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. பரமேசுவரா மில்லின் உரிமையாளர் திருச்சிற்றம்பலம் காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். திறந்த உடம்போடு அவர் முன் தோன்றக் கூசிய ஏகாம்பரம் விறுட்டென்று உள்ளே திரும்பிப் போய் அழுக்கா, கந்தலா என்று ஆராயாமல் கைக்குக் கிடைத்த ஒரு துண்டை எடுத்துப் போர்த்திக் கொண்டு திரும்பினான். அவன் திரும்புவதற்குள் திருச்சிற்றம்பலம் வாசலுக்கு வந்து படியேறி விட்டார்.

“வாங்க... ஏது இப்படி...?”

“எல்லாம் உங்களைப் பார்த்திட்டுப் போகலாமென்றுதான்...”

“அடடே! ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே...?”

திருச்சிற்றம்பலத்தை மரியாதையாகத் தனது அறைக்குள் அழைத்துச் சென்றான் ஏகாம்பரம். உட்காருவதற்கு நாற்காலியை எடுத்துப் போட்டான். திருச்சிற்றம்பலம் உட்கார மறுத்து விட்டார். “இல்லை! நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள் ஏகாம்பரம்! நான் இப்படி இருந்து கொள்கிறேன்” என்று விநயமாகப் பணிவோடு கூறிய திருச்சிற்றம்பலம் சிரித்துக் கொண்டே ஜன்னல் விளிம்பில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்து கொண்டார்.

வாசலில் பெரிய கார் வந்து நிற்பதைக் கண்டு வீட்டுக்குள்ளிருந்து திருமதி ஏகாம்பரமும், குழந்தைகளும் மருண்டு வெளியே எட்டிப் பார்த்தனர். வெளியே காரைச் சுற்றி வீட்டு வாயிலில் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் வியப்போடு கூடிப் பார்த்துக் கொண்டிருந்தன. கிழிசல் ஜிப்பாவும், கந்தல் புத்தகங்களுமாக அப்பாவி போல் நடமாடிக் கொண்டிருக்கும் ஏகாம்பரத்தின் வீடு தேடி அவ்வளவு அழகான புதிய கார் வந்து நின்றால் அது அந்தப் பேட்டையே ஆச்சரியப்பட வேண்டிய காரியம்தானே? அந்தக் காரும் அதற்குரியவரும் அவன் வீட்டு வாயிலைத் தேடிக் கொண்டு வந்ததால் அவனுடைய கெளரவமே திடீரென்று உயர்ந்து விட்டதாக அந்தப் பேட்டைவாசிகளுக்கு ஒரு பிரமை. அதுவும் தவிரத் தேடி வந்திருக்கிற திருச்சிற்றம்பலம் இலேசான பேர் வழியில்லையே? பெரிய மில்லுக்கு உரிமையாளர். நிறையப் படித்தவர். வருகிற நகரசபைத் தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்று, பின்பு அவரே சேர்மனாக வரலாமென்றும் ஊரில் பேச்சு நிலவியது.

தங்கப்பிரேம் பிடித்த மூக்குக் கண்ணாடியும், தும்பைப் பூக் கதருமாக, எதிரே உட்கார்ந்திருக்கும் அந்தப் பெரிய மனிதரை நிமிர்ந்து பார்த்தான் ஏகாம்பரம். பணத்தின் கம்பீரமும் கெளவரத் தோற்றமும், இணைந்த அந்த மனிதரைப் பார்க்கும்போதே தாழ்வு மனப்பான்மையும் பயமும் தன்னையறியாமலே அவனுக்கு உண்டாயிற்று. தன்னுடைய அழுக்கடைந்த அறைக் கை நாற்காலி, கந்தலும், கூளமுமாக இறைப்பட்டுக் கிடக்கும் புத்தகங்கள் எல்லாம் இருந்தாற்போலிருந்து வெறுக்கத்தக்க, கீழ்த்தரமான பொருள்களாக மாறிவிட்டது போல் அவன் மனம் அப்போது நினைத்தது. திருச்சிற்றம்பலம் என்ற செல்வச் செழிப்புக்கு முன்னால் தன் ஏழ்மையைக் காட்டிக் கொடுக்கும் அவமானச் சின்னங்களாக அவை தோன்றித் தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டதுபோல் ஒரு கசப்பு ஏற்பட்டது.

ஜன்னல் விளிம்பில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருந்த திருச்சிற்றம்பலம் ஏகாம்பரத்தின் முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்."ஏகாம்பரம்! குழந்தைகள், மனைவி எல்லோரும் சுகமா?”

“சுகம்தான் ஐயா!” வெகு நாள் பழகிய குடும்ப நண்பர்போல் அவ்வளவு ஒட்டுறவுடன் அவர் விசாரித்த வியப்புத் தாங்கிக் கொள்ள முடியாமல் கனத்தது ஏகாம்பரத்திற்கு.

“சமீபத்தில் நீங்கள் எழுதி வெளிவந்த புத்தகத்துக்குப் பேர் என்ன?” இந்தக் கேள்வியை அவரிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. அவன்தான் எழுத்தாளன் என்பதுகூட இவ்வளவு பெரிய மனிதருக்குத் தெரிந்திருக்கிறதே!

“போன மாதம் வெளிவந்ததே. அந்த நாவலைக் கேட்கிறீர்களா?”

"ஆமாம், ஆமாம்! அதுதான். என்னவோ ‘ஊழிப்புயல்’ என்று பேர் சொல்லிக் கேட்ட மாதிரி ஞாபகம். ஊரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் பற்றியே பேச்சாயிருக்கிறதே?”

“அவ்வளவு பெருமைப்படுத்திப் பேச அந்தப் புத்தகத்தில் ஒன்றுமே இல்லை. என்னவோ தோன்றியது - எழுதினேன்.”

"அப்படிச் சொல்லாதீர்கள், ஏகாம்பரம். யானைக்குத் தன் பலம் தெரியாது என்பார்கள். நீங்கள் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் மக்களிடையே கிளர்ச்சி மூட்டுகிறதென்றால் அது சாதாரண எழுத்தாயிருக்க முடியாது! ஊரறிய உங்களைக் கெளரவப்படுத்துகிறதற்கு ஏற்பாடு செய்யப் போகிறேன் நான்” .

"நான் அத்தனை தகுதியுடையவனில்லை. ஏதோ என் எழுத்தை நாலு பேர் மனமாரப்படித்து மகிழ்ந்துகொண்டிருப்பதே எனக்குக் கெளரவம்தான்” என்று கூறிக் கொண்டே எழுந்து அலமாரியருகே போய் ‘ஊழிப்புயல்’ நாவலின் ஒரு பிரதியை எடுத்துக்கொண்டுவந்து, பயபக்தியோடு அவரிடம் கொடுத்தான் ஏகாம்பரம். எழுந்து நின்று இரண்டு கைகளையும் நீட்டி மரியாதையாக அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார் திருச்சிற்றம்பலம்.அதுமட்டுமா? கோவிலில் கிடைத்த தெய்வப் பிரசாதம் போல் மதித்து இரண்டு கைகளாலும் புத்தகத்தை மேலே உயர்த்திக் கண்களில் ஒத்திக்கொண்டார்.

அவருடைய செயல்களைப் பார்த்து ஏகாம்பரம் மலைத்தான். ‘இவ்வளவு பெரிய செல்வச் சீமானுக்குத் திடீரென்று வீடு தேடி வந்து என்னைப் பாராட்டத் தோன்றியதன் காரணமென்ன? இத்தனை நாளாக என்னைப் புறக்கணித்து வந்த அதிர்ஷ்டதேவதை கண் திறந்து என் பக்கமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டாளா?’ என்று பலவிதமான நினைவுகள் அவனுக்கு உண்டாயின. வறுமை வெப்பத்தால் நம்பிக்கை வறண்டு போய்க் கிடந்த தனது நெஞ்சத் தடத்தில் யாரோ பன்னீரைத் தெளிக்கிற மாதிரி அந்தச் சமயத்தில் அவன் உணர்வுகளில் ஒருவகைக் குளிர்ச்சி பரவியது. கட்டுக்கடங்காத பெருமைக்குத் தான் ஆளாகிவிட்டதுபோல் ஒரு பூரிப்பை அவன் அவருக்கு முன் தனக்குத்தானே உணர்ந்தான்.

"ஏகாம்பரம்! வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்த மாபெரும் நாவலை எழுதிய உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப்போகிறேன். விழா இந்தப் பேட்டையிலுள்ள பள்ளிக்கூடத்து மைதானத்தில் நடக்கும். மறுக்காமல் நான் அளிக்கும் இந்த மரியாதையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

ஏகாம்பரம் தன் செவிகளில் கேட்கிற மேற்படி வார்த்தைகள் உண்மைதானா என்று ஐயமடைந்தான். திருச்சிற்றம்பலத்தின் திருவாயிலிருந்தா இந்த வார்த்தைகள் வெளிவருகின்றன? திடீரென்று அத்தி பூத்தாற்போல் வந்தார், பார்த்தார். புத்தகத்தை வாங்கிக் கண்களில் ஒத்திக் கொண்டார். இப்போது என்னடாவென்றால், “வருகிற ஞாயிற்றுக்கிழமை உனக்குப் பாராட்டு விழா” என்று சொல்லி என்னைத் திணற அடிக்கிறார்! எல்லாம் சொப்பனத்தில் நிகழ்கிற மாதிரியல்லவா வேகமாக நடக்கிறது!

"கட்டாயம் நீங்கள் இதற்கு இணங்கித்தான் ஆக வேண்டும். யோசிக்காதீர்கள். வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக இந்த நாவலைப் படித்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போகிறேன். ஊரெல்லாம் இதைப் பற்றியே பேச்சாக இருக்கிறது.”

ஏகாம்பரம் அவருடைய வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொண்டே தலையைக் குனிந்து கீழே பார்த்தான். தரை அவனைப் பார்த்து நகைத்தது. வலுவில் தேடி வருகிற சீதேவியைக் காலால் உதைக்க முடியாது. சபலம் யாரை விட்டது? நீண்டநேர வற்புறுத்தலுக்குப் பின் விழாவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டுவிட்டான் ஏகாம்பரம்.அவர் விடைபெற்றுக் கொள்ளும்போது,"ஏகாம்பரம்! ஞாயிற்றுக்கிழமை மாலையில் விழா, உங்களை அழைத்துக்கொண்டு வர கார் அனுப்புகிறேன், வந்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவ்வளவுதான்! மறுநாள் காலையிலிருந்து அந்தப் பேட்டையே அமர்க்களப்பட்டது. ‘பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்துக்குப் பாராட்டுவிழா’ என்று மூவர்ண நோட்டீஸ் சுவர்களிலெல்லாம் பெரிது பெரிதாக ஒட்டப்பட்டிருந்தன. தினப்பத்திரிகைகளெல்லாம் ஏகாம்பரத்துக்கு விழா நடத்தும் திருச்சிற்றம்பலத்தைப் பாராட்டி உபதலையங்கம் எழுதியிருந்தன. எங்கே திரும்பினாலும் ஏகாம்பரத்திற்கு விழா நடத்தப்போகும் திருச்சிற்றம்பலத்தின் பெருந்தன்மை முழங்கிற்று. திருச்சிற்றம்பலத்தின் புகைப்படத்தை எல்லாப் பத்திரிகைகளும் பிரசுரித்தன. புகழ்ந்து எழுதின. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பத்திரிகையாவது ஏகாம்பரத்தின் படத்தைப் பிரசுரிக்கவில்லை. அவனுடைய எழுத்துத்திறமையைப் பற்றியும் அதிகம் எழுதவில்லை. எல்லா இடத்திலும் திருச்சிற்றம்பலத்தின் புகழ்தான் பரவியது. மூவர்ணச் சுவரொட்டிகளில் கூட, "திருச்சிற்றம்பலம் நடத்தும் ஏகாம்பரத்தின் பாராட்டு விழா” என்று அவருடைய பெயருக்குத்தான் முதன்மை கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் ஏகாம்பரம் உள்பட எவருக்கும் இதெல்லாம் ஒன்றும் வித்தியாசமாகப் படவில்லை. ‘இவ்வளவு சிரமப்பட்டு இத்தனை பெரிய விழா நடத்துகிறவர் பேரைக்கூடப் போட்டுக்கொள்ளாமலா இருப்பார்?’ என்று எண்ணிக் கொண்டு மன அமைதி பெற்றார்கள்.

ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. விழா நிகழ இருந்த பள்ளிக்கூட மைதானத்தில் நிறையப் பணம் செலவழித்துப் பிரமாதமான பந்தல் போடப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி இசை முழங்கிற்று. ஜே!ஜே! என்று பெருங்கூட்டம். மேடையில் பிரமுகர்கள் புடைசூழத் திருச்சிற்றம்பலம் உட்கார்ந்திருந்தார். ஏகாம்பரத்தை அழைத்து வரத் திருச்சிற்றம்பலத்தின் கார் போயிருந்தது.எல்லோரும் ஏகாம்பரத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

மாலை மணிமூன்றரை.இருப்பதற்குள் கிழிசலில்லாததும், வெள்ளையானதுமான ஜிப்பா ஒன்றைப் போட்டுக் கொண்டு வீட்டு வாசலில் காத்திருந்தான் ஏகாம்பரம். அழகான அந்தப் பெரிய கார் ஒயிலாகத் திரும்பி அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது. டிரைவர் கீழே இறங்கினான். அவன் முகமலர்ச்சியோடு ஏகாம்பரத்தினருகில் வந்து, "சார்! அது நீங்க எழுதின புத்தகமா? ரொம்ப நல்லாருக்குது சார். நான் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே மூச்சிலே படிச்சு முடிச்சுட்டேன்” என்றான்.

“எந்தப் புத்தகத்தைச் சொல்றே?” என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் ஏகாம்பரம். உடனே டிரைவர் காரின் கதவைத் திறந்து தன்னுடைய ஸீட்டின் கீழிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினான். அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் ஏகாம்பரம், “ஏனப்பா இது உன்னிடம் எப்படி வந்தது? உன் முதலாளிக்கல்லவா இதை நான் அன்பளிப்பாகக் கொடுத்தேன்? நீ அவரிடம் கேட்டு வாங்கிப் படித்தாயா?” என்று திகைப்புடன் டிரைவரிடம் கேட்டான். டிரைவர் ஒரு தினுசாகச் சிரித்தான்.

“அவருக்கு இதெல்லாம் படிக்க நேரம் ஏதுங்க?. உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்தவரு இதைக் காரிலேயே மறந்து போட்டிட்டுப் போயிட்டாரு. நான் எடுத்துப் படிச்சதுலே நல்லதாப் பட்டது! வச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் அவரும் கேட்கவே இல்லை.”

சுளீரென்று நெஞ்சில் சவுக்கடி விழுந்தது போலிருந்தது ஏகாம்பரத்துக்கு. தன்மானம் கொதித்தது. நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு மேலெழும்பித் துடித்தது.

"ஐயா! உலகந் தெரியாத ஆளா இருக்கீங்களே? முனிசிபல் எலெக்ஷன் வருது. அந்தப் பேட்டையிலே முதலாளி நிக்கப் போறாரு. நாலுபேரு தன்னைப் பெரிசா நினைக்கணும்னா இப்படி யாராவது ஒருத்தரைத் தூக்கிவிடணும்னு இந்த விழா, கிழா எல்லாம் தடபுடல் பண்றாரு” டிரைவர் பேசிக்கொண்டே போனான்.

“உம் பேரரென்ன டிரைவர்”

"ஏங்க? முனிரத்னம், பாங்க”

அந்தப் புத்தகத்தை வாங்கி, “உண்மை ரசிகன் முனிரத்தினத்துக்கு அன்பளிப்பு” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, "இந்தா, இதை நீ வச்சுக்க, எனக்கு விழாவுக்கு வர ஒழியாதுன்னு உங்க முதலாளி கிட்டப் போய்ச் சொல்லிடு எப்பவாவது நீ வந்தா இன்னும் படிக்க நிறையப் புத்தகம் தரேன்.போயிட்டுவா” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்க் கதவைப் படீரென்று அடைத்துத் தாழிட்டுக் கொண்டான் ஏகாம்பரம், காற்றில் மிதந்து செல்லும் மோகினிப் போல் அழகாக அசைந்து திரும்பிச் சென்றது ‘பிளிமத்’ கார்.

(தாமரை, ஜூலை, 1959)