நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/கார்கால மயக்கம்

63. கார்கால மயக்கம்

றைக்கு உள்ளே எழுத்து, கற்பனை, படிப்பு எதுவுமே ஓடாத நேரத்தில் வெளிவாசல் வராந்தாவிற்கு வந்து ஒரு நோக்கமும் இல்லாமல் குறுக்கும் நெடுக்கும் நடக்கிற பல சந்தர்ப்பங்களில் எம்.எஸ்.எக்ஸ், 07423 என்ற எண்ணுள்ள இந்தச் சிறிய காரை அழகிய யுவதி ஒருத்தி தனியாக டிரைவ் செய்து கொண்டு போவதை நான் பார்த்திருக்கிறேன்.

‘நம்பர் முதற்கொண்டு குறிப்பாகப் பார்த்திருக்கிறீர்களே?’ என்று நீங்கள் பூடகமாக உள்ளர்த்தம் மறைத்துச் சிரிப்பது புரிகிறது. தற்செயலாகப் பார்த்தல் - என்பதையே தொடர்ந்து செய்கிற போது நோக்கமில்லாமலே ஒரு நோக்கம் வந்து விடுகிறது. ‘நான் விடமாட்டேன், விடமாட்டேன்’ என்று தானாகக் கண்ணிலும், மனத்திலும் வந்து பதிந்து தெலைக்கும் விஷயத்தை எப்படி உதற முடிகிறது? இந்த எம்.எஸ். எக்ஸ் 07423 விஷயமும் இப்படித் தற்செயலாக மனத்தில் இடம் பிடித்துப் பின்பு நாளாவட்டத்தில் தன்னைத்தானே ஸ்திரப்படுத்திக் கொண்டதுதான். இதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் எந்த முயற்சியும் செய்ததில்லை. நினைவு வைத்துக் கொள்ள எனக்கு வேறு எத்தனையோ விஷயங்கள்.

ஏதோ ஒரு தினத்தில் காலை ஒன்பதரை மணியிலிருந்து பத்து மணிக்குள்ளே சரியாக இன்ன நேரம் என்று சொல்ல முடியாத ஏதோ ஒரு நேரத்தில் சாலையின் தெற்குப் பக்கத்திலிருந்து வடக்குப் பக்கம் நோக்கி இந்த மோகினி எம்.எஸ்.எக்ஸ் 07423ஐச் செலுத்திக் கொண்டு போனதை முதல் தடவையாக நான் பார்த்தேன். நடப்பதற்கு ‘சான்ஸே’ இல்லாமல் கூண்டில் வைத்து இழுத்துக் கொண்டு போகப்படுகிற சர்க்கஸ் மிருகம் போலக் காரில் போகிறவர்களைக் கண்டாலே எனக்கு அனுதாபம் உண்டாகும். -

இரட்டைப் பின்னலில் இரண்டு புறமும் நிரந்து தொங்கும் மல்லிகைச்சரம். இந்த முகத்தின் கவர்ச்சி எப்படிப்பட்டதென்று சொல்ல முடியா விட்டாலும் கவர்ச்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திட்டமாகச் சொல்லி விடத் தகுந்த முகம். நீல அலையில் கயல் போலப் புரளும் கண்கள். ரோஜா மொட்டு இதழ்கள். ஊதுபத்திப் புகைச் சுருளைப் போலக் காதோரத்தில் சுருண்ட கூந்தல் இழைகள். ஸ்டியரிங் பற்றியிருக்கும் கைகளில் ஒன்றில் சிறிய பொற்கடிகாரம். மற்றொன்றிலே இரண்டு பொன் வளைகள். ஏதோ ஒரு நிறத்தில் வாயில் புடவை. அது எந்த நிறத்தினதாயிருந்தாலும், இவளுக்கு அழகாகத்தான் இருக்கும். சுபத்திரை, கைகேசி போன்ற பெண்கள் தேரோட்டியதாக இதிகாசங்களில் வருகிறதே, அந்தச் சமயங்களில் அவர்கள் எவ்வளவு அழகாயிருந்திருப்பார்கள் என்பதை இந்த எம்.எஸ்.எக்ஸ்.07423 ஐச் சாரத்யம் செய்து கொண்டு போகும் பெண்ணின் நினைவில் இருந்து கற்பனை செய்து கொள்வேன் நான். நோஞ்சானாகித் துவள்கிற மனத்துக்கு இந்தக் கற்பனை ஒரு ‘டானிக்’ மாதிரியில்லையா? கதைக்கும், நாவலுக்கும், தேவையான கற்பனைகள் ஓடாத காலத்தில் மனத்தின் வறட்சியைப் போக்கிக் கொள்ளவாவது இப்படி மோகன நினைவுகளில் மூழ்குவது உண்டு. அறைக்குள் உட்கார்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். இருந்தாற்போலிருந்து எழுதுவதைச் சிறிது நேரத்துக்கு நிறுத்திவிட்டு வேறு ஏதாவது செய்தாலென்ன என்று மனம் இன்னொன்றிலே தாவிவிடும்.

எப்போதாவது சில சமயங்களில் எதுவும் செய்யாமலிருப்பதுகூட எல்லாம் செய்ததைவிடச் சுறுசுறுப்பான ஒரு செயலாகத் தோன்றும். அப்படித் தோன்றும் சமயங்களில்தான் மற்ற நேரங்களில் என்னைக் கவர முடியாத விஷயங்களால் நான் கவரப்படுவேன்.

எம்.எஸ்.எக்ஸ் 07423ம் இதன் ஸ்டியரிங்கைப் பற்றியிருக்கும் பொன்நிறக் கைகளும், அவற்றுக்குரிய இளமையின் மோகன விழிகளும், அந்த விழிகளிலேயே பிறந்து அவற்றின் எல்லையிலே தேங்கும் நளினமும் என்னைக் கவர்ந்ததும் இப்படிப்பட்டதொரு நேரத்தில்தான். பலவீனமான நேரமா அது?

மெடிகல் காலேஜில் டாக்டருக்குப் படிக்கிற பெண் என்று தெருவில் யாரோ பேசிக் கொண்டது காதில் விழுந்தது.அதற்குமேல் அதிகமாக ஒன்றும் தெரியவில்லை.

கார்காலம் ஆரம்பிக்கும் பருவம். ஒருநாள் மழை இலேசாகத் துாறிக் கொண்டிருந்தது. எங்கோ போவதற்காகப் பையும் கையுமாக வாசல்வரை வந்தவன், போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றேன். தெற்கேயிருந்து வந்து கொண்டிருந்த எம்.எஸ்.எக்ஸ், 07423 மோகினி அங்கிருந்தே நான் நிற்கிற நிலையைப் பார்த்துக்கொண்டே வந்திருக்கிறாள் போலிருக்கிறது.

சர்ர்ரென்று எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது எம்.எஸ்.எக்ஸ் 07423. "ஏறிக்கொள்ளுங்கள் சார்!நான் கொண்டு போய் விட்டுவிடுகிறேன்” என்று சிரித்துக் கொண்டே இவள் பின்புறம் திரும்பி உள் ஸீட்டுக்கான கதவைத் திறந்துவிட்டாள். நான் சில கணங்கள் தயங்கி நின்றேன். உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் என்னுடைய கொள்கைகள் நினைவுக்கு வந்தன. நான் ஒரு எழுத்தாளன் - முற்போக்கு இதயங்கொண்ட எழுத்தாளன். எவ்வளவு வசதிகள் பெருகினாலும் வாழ்க்கையின் பங்குதாரனாக இருக்க வேண்டுமே தவிர, விஸிட்டராகப் பார்வையாளனாக இருக்கக்கூடாதென்று நினைக்கிறவன். கொஞ்சம் மார்க்ஸிய சித்தாந்த வழிபாடும் உண்டு. தெருவின்,இருபுறமும் தோன்றி மறையும் நலிவையும்,பொலிவையும் சேர்த்தே பார்த்துச் சிந்தித்துக் கொண்டே நடந்து செல்ல ஆசைப்படுகிறவன். காரில் சென்று சென்று, நடப்பதற்கே பொறுமையற்றுப் போய்விட்ட என் நண்பர்களைப் பார்த்து அனுதாபப்பட்டுக் கொண்டிருக்கிறவன். சந்து பொந்துகளிலும் நாசுக்கான பேர்வழிகள் நடப்பதற்குக் கூசுகிற பாதைகளிலும்கூட வாழ்க்கை கூசாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்காமல் விலகிப் போவதுதான் அநாகரிகம் என்று நினைத்து எழுதி, பேசி, ஸ்தாபித்து விட ஆசைப்படுகிறவனைக் காரில் அழைக்கிறாளே இவள்? என்ன தைரியம் இவளுக்கு?

“ஏன் யோசிக்கிறீர்கள் சார்? மழை பலமாக வருகிறது. உதவி செய்வதுதான் மனிதாபிமானம் என்று பக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள். உதவி செய்ய வருகிறவர்களைக் கண்டால் பயந்து தயங்குகிறீர்களே”

'அடடா! இந்தப் பெண் என்னைப் பற்றித் தெரிந்தவள் போலிருக்கிறது. இல்லாவிட்டால் என் எழுத்தைப் பற்றிப் பேசுவாளா?’ என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன்.

“ஏறிக் கொள்ளுங்கள் சார்' என்று மறுபடியும் இவள் குரல் கெஞ்சியது. இந்தக் குரல் என்னை எப்படி வசப்படுத்தியது என்று தெரியவில்லை. 'இந்த முகத்தில் ஏமாற்றத்தைப் படர விடுவது பாவம்' என்று நினைத்தோ என்னவோ காரில் ஏறிவிட்டேன். எந்த எம்.எஸ்.எக்ஸ் 07423-ஐப் பார்த்து நாள் தவறாமல் 'காரில் போகிறவர்கள் வாழ்க்கையில் எதை அனுபவிக்க முடியும்?' என்று கேலியாக நினைத்துக் கொண்டிருந்தேனோ அதில் நானே ஒசிச் சவாரி புறப்பட்டுவிட்டேன். எப்படி என் கொள்கைப் பிடியிலிருந்த நழுவினேனோ, எந்த விநாடியில் தடுமாறினேனோ அந்த விநாடி மிகவும் பொல்லாதது என்று நினைத்துக் கொண்டேன். முன் ஸீட்டிலிருந்து அவள் குரல் ஒலித்தது.

“போன மாதத்தில் புதுயுகம் இதழில் வெளிவந்த ஏழையின் குரல் என்கிற உங்கள் கதை நன்றாயிருந்தது சார்”

"ஓ! நீங்கள் புதுயுகம்கூட வாங்குகிறீர்களா? ஆச்சரியமாயிருக்கிறதே?”

“இதில் ஆச்சரியமென்ன? புதுயுகம் நல்ல அம்சங்களோடு தரமாக வருகிறது சார்”

“தரமாயிருக்கிற எதுவும் பெண்களுக்குப் பிடிக்காதென்று நைலான் எழுத்தாளர்கள் சொல்கிறார்களே, அதனால்தான் அப்படிக் கேட்டேன்.”

"அப்படி எனக்குத் தோன்றவில்லை சார். புதுயுகத்தில் வருகிற பகுதிகள் எல்லாம் மனத்தில் நிலையாகத் தங்குகின்றன. மற்றவர்கள் எப்படியோ, என்னைப் பொறுத்த மட்டில், புதுயுகத்தின் ஒவ்வொரு வெளியீடும் ஒரு கருவூலம்தான்.”

அடடா இந்த எம்.எஸ்.எக்ஸ் 07423 நங்கையைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு பெரிய தவறாக முடிந்துவிட்டது? இவள் முற்போக்கு எழுத்தை வணங்கும் இலட்சியப் பெண்ணாக அல்லவா இருக்கிறாள்? புதுயுகத்தில் நான் எழுப்பிய ஏழையின் குரல் இவள் செவிகளிலும் ஒலித்திருக்கிறதே!

நான் இறங்க வேண்டிய இடம் வந்தது.நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொண்டேன். “உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மழை காலம் முடிகிறவரை தினசரி கல்லூரிக்குப் போகும்போது என் காரிலேயே உங்களைக் கொண்டு வந்து விட்டுவிடுகிறேன் சார். இவள் குரலில் அந்தச் செயலைச் செய்வதில் உள்ள ஆர்வம் பொங்கியது.

நான் “சரி” என்று சம்மதிக்கவும் இல்லை. 'முடியாது’ என்று மறுக்கவும் இல்லை. சிரித்துக்கொண்டே விடைபெற்றேன். 'நன்றி' சொல்வது என்னும் 'தீர்த்துக்கட்டுகிற விவகாரம்’ எனக்குக் கட்டோடு பிடிப்பதில்லை. பல முதலாளிமார்கள் தங்களிடம் கூலிக்கு உழைக்கிறவர்கள் நன்றி செலுத்துவதில்லை என்று குறைப்பட்டுக் கொள்வதையே ஒப்புக் கொள்ளாதவன் நான். நீர் கொடுக்கிற சம்பளத்துக்கு உழைப்பைத்தான் தரலாம். நன்றியையும் சேர்த்துத் தந்தால் உழைக்கிறவனுக்கு அதிக நஷ்டம். தவிரவும் நன்றியைச் சம்பளத்துக்கு வாங்கவும் முடியாது - என்று மேடைகளில் பேசுகிறவன் வாய்க்கு வாய் நன்றி சொல்லிக் கொண்டிருக்க முடியுமோ? ‘நன்றி' என்பதே சுத்த ஹம்பக்

எம்.எஸ்.எக்ஸ் 07423 என்னும் காரைக் கொண்டு வந்து நிறுத்தியவுடன், “மன்னிக்கவும்; வருவதற்கில்லை, பழக்கமுமில்லை' என்று முகத்தில் அறைந்தாற்போல் மறுத்துச் சொல்லி இவள் மனத்தைப் புண்படுத்தாமல் கூட வந்ததற்கு இவள்தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டுமென்று நினைக்கிறவன் நான். நீங்கள் இதைத் 'திமிர்’ என்றுதான் சொல்வீர்கள். பரவாயில்லை. இந்த உலகத்தில் திமிர் கொள்வதற்கு உரிமையும் தகுதியும் உள்ளவர்கள் அடக்கமாக இருந்துவிட்டால், தகுதியும் உரிமையும் இல்லாதவர்கள் திமிர் கொண்டாடத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த ஆபத்து ஏற்படாமலிருக்கவாவது நாம் திமிரோடு இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. தெருவில் நடக்கும்போதே 'நடக்கிற உரிமை” நம்முடையது என்ற திமிரோடு நடக்கிறவன் நான்.

இன்னும் சிலர் பிறரிடம் பணிவாய் நடந்து கொள்வதாக நினைத்துக்கொண்டே, தங்களைத் தவிர, வேறு யாராலும் அப்படி நடந்து கொள்ள முடியாதென்பதற்காகவே திமிர்கொள்வதுண்டு.

நல்ல மழை நாளான மறுநாளும் இப்படியே நடந்தது. சொல்லி வைத்தாற்போல் நான் புறப்படும் நேரத்துக்கு எம்.எஸ்.எக்ஸ் 07423ஐக் கொண்டு வந்து என் வீட்டு வாசலில் நிறுத்தினாள் இந்தப்பெண். கூந்தலிற் சூடியிருந்த பூவின் மணம்-பெட்ரோல் நாற்றத்தை இருக்கிற இடம் தெரியாமல் செய்துவிட்டது.

"பரவாயில்லை, நான் போய்க் கொள்வேன்” என்று சொல்லி மறுத்துவிட இருந்தேன். என்ன காரணமோ, நாவு அப்படிச் சொல்லாமல் என்னை ஏமாற்றி விட்டது. நேற்றைப்போலவே ஏதோ ஒரு வினாடியில் நான் தடுமாறிவிட்டேன். இந்த அழகிய முகத்தில் ஏமாற்றத்தைப் படரவிடுவதற்குத் தயங்கியவனாக, பழக்கி ஆளாக்கிய தலைவன் திறந்துவிடும் வாசல் வழியே கூண்டுக்குள் நுழைகிற சர்க்கஸ் மிருகத்தைப் போல் காருக்குள் ஏறிக் கொண்டுவிட்டேன்.

"சார்! என்னை ஏதோ பெரிய 'கேபிடலிஸ்ட்' வீட்டுப் பெண் என்று நினைத்துப் பயப்படத் தேவையில்லை. நானும் - ப்ரக்ரஸிவ்வா (முற்போக்காக) எண்ணுகிறவள்தான்.”

இந்த வார்த்தைகளால் என் சந்தேகத்தைத் தீர்க்க முயல்கிறவள் போல் இவள் ஏதோ சொன்னாள். நானும் பதில் சொல்லலானேன் : “அதைப் பற்றி என்ன வந்தது இப்போது? எல்லாருமே 'ப்ரக்ரஸிவ்வா' இருக்கணும்ங்கிற அவசியமென்ன?”

"அவசியமிருக்கிறதென்றுதானே எழுதிக் கொண்டு வருகிறீர்கள்? பதிலுக்கு நான் பேசவில்லை. மழை மேலும் பெரிதாகவே காரின் கண்ணாடிக் கதவை மேலே உயர்த்தினேன். நனைவதிலிருந்து தப்பினேன்.

பழைய தலைப்பை விட்டு இவள் பேச்சு என்னுடைய ஏதோ ஒரு கதையைப் புகழும் முயற்சியில் திரும்பியது.அந்தப் புகழ்ச்சியில் கூட என் மனம் இலயிக்கவில்லை. தங்களைப் புகழ்கிற காரியத்தையே ஏற்றுப்பதிலுக்குப் புகழும் ஆசாமிகளையும் நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய சிந்தனை எல்லாம், இந்த இரண்டு நாட்களாக எப்படி இவள் காரில் உட்கார்கிற அளவுக்கு நான் மலிந்து போனேன்? என் மனத்தின் எந்த மூலையில் ஆசைக்கு நழுவுகிற பலவீனம் இருந்தது?’ என்பதிலேயே சுழன்று கொண்டிருந்தது. சந்தோஷமாகக் காரில் சவாரி செய்ய என்னால் முடியவில்லை.

முன்தினம் போலவே அன்றைக்கும் என்னை நான் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டுப் போகிறபோது இவள் அதே பழைய சொற்களைச்சொன்னாள் :"சார்! மழைக்காலம் முடிகிறவரை என் காரிலேயே வந்துவிடுங்கள். எனக்குப் பெருமை. உங்களுக்கு உதவி”

ஒன்றும் சொல்லாமல் நான் சிரித்துக்கொண்டே இறங்கிப் போனேன். 'நம்முடைய மனத்தில் எங்கோ 'லீக்கேஜ்' கசிவு - அநாவசியமாக இருக்கிறது. அதைச் சரிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய தவிப்பாக இருந்தது. இதற்கு முன்னால் மழைக்காலமே வராமல் இருந்ததா? நான் வெளியே நடந்து போகாமலா இருந்தேன்? இப்பொழுது மட்டும் ஏன் இந்த மாதிரி செளகரியப் பசையில் ஒட்டிக் கொண்டேன்’ என்று உள்ளத்தில் ஒரே குமுறல். இதற்கேற்றாற்போல் அன்றைக்கு ஒரு நண்பர் வேறு கேட்டுவிட்டார். “என்ன சார்? யாரோ காரில் கொண்டு வந்து விடுகிறார்கள் போலிருக்கிறது. நனையாமல் வந்து விடுகிறீர்கள்.”

மூன்றாம் நாள், நான்காம் நாள். எண்ணிக்கையின் பன்மைக்கு ஒரு பெருமை உண்டானால் பத்து நாளைக்கு நான் இவளுடைய காரில் ஏறி வந்திருப்பது அதிகமானதுதான். மழைக்கு நனையாமல் வந்திருக்கிறேன் என்பது உபரி லாபக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டியது.

'கார்' காலத்தினுடைய பதினோராவது நாள் குறிப்பிட்டநேரத்துக்கு மேலாகியும் தெற்குப் பக்கத்திலிருந்து எம்.எஸ்.எக்ஸ் 07423ன் ஒசை கேட்கவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது. எனக்கு அவசரமாகப் போக வேண்டும். போக வேண்டுமானால் குடையைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டியதுதானே? நடக்க முடியாதவனாக நான்?

ஆனால் அன்று அதுதான் என்னால் முடியவில்லை. 'இதோ வந்துவிடுவாள், இதோ வந்துவிடுவாள்' என்று தெற்கே நோக்கிக் காதைத் தீட்டிக் கொண்டு எம்.எஸ்.எக்ஸ் 07423ன் வரவை எதிர்பார்க்கிறேன். 'நடந்து போக வேண்டும்' என்று எண்ணுவதற்கே சோம்பலாயிருக்கிறது. ‘கார் வந்துவிடும்' என்று நினைக்க முடிகிறதே தவிர, 'நடந்து போய் விடலாமே' என்று நினைக்க வரவில்லை. எவ்வளவு பெரிய ஆபத்தான நிலை இது? நினைப்பதற்கே சோம்பல்.

அதோ! தெற்கேயிருந்து வேலைக்காரப் பையன் ஒருவன் மழையில் நனைந்துகொண்டு ஓடிவருகிறான். என் வீட்டுப் படியேறுகிறான். சொல்கிறான்.

“சுமதி அம்மா இன்னிக்குக் காலேஜுக்குப் போகலியாம். அவங்களுக்கு ஜூரம். உங்க கிட்டச் சொல்லிடணும்னாங்க."

இவள் எதற்காகச் சொல்லி அனுப்பியிருக்கிறாள் என்பது புரிகிறது. இலேசாக என் மனத்தின் ஒரு மூலையிலிருந்து கோபம்கூட வருகிறது. யார்மேல் யார் கோபப்படுவது? எதற்காகக் கோபப்படுவது? எனக்கே புரியவில்லை. 'எம்.எஸ்.எக்ஸ். 07423ல் பத்து நாள் சவாரி செய்ததிலேயே நான் இவ்வளவு பெரிய சோம்பேறியாக மாறிவிட்டேனே' என்பதை நினைத்தபோதுதான் 'வீக்' ஆகிப் போன இடம் எனக்குப் புரிகிறது. செயலைச் செய்வதற்குச் சோம்பல் படுகிற நிலை உலகத்தில் பலருக்கு உள்ளதுதான். ஆனால், நினைப்பதற்கே, சோம்பல் படுகிற நிலை மிகவும் பயங்கரமானது.

மீண்டும் வீட்டுக்கு உள்ளே போகிறேன். குடையை எடுத்துக்கொண்டு வருகிறேன், நடக்கிறேன், நடப்பது என்பதே அகெளரவமான காரியம்போல ஒரு மயக்கம் உண்டாகிறது. சமாளித்துக் கொண்டு மேலே நடக்கிறேன். பழைய தைரியம், பழைய திமிர், பழைய சிங்கநடை எல்லாம் மெல்ல மெல்ல என்னை வந்தடைகின்றன. இந்தத் திமிர் பத்து நாட்களாகவே எங்க போயிருந்தது?’ என்று நினைத்து மலைக்கிறேன். மறுபடியும் சமாளிக்கிறேன்.

என்னுடைய அந்தப் பழைய நடை - தெருவையே அம்பு துளைக்கிற மாதிரி துளைத்துக் கொண்டு பாய்கிற நடை எழுத்திலுள்ள 'ப்ரொக்ரஸிவ் ஸ்டைல்’ போன்ற நடை - இப்போது எனக்கு வருகிறது. திரும்ப வருகிறது.

பாய்ந்தடித்து அதிவேகமாகப் போகிற செளகயரிங்களில் ஒட்டிக் கொண்டு நினைவை மந்தமாக்கித் தவிப்பதைவிட மெதுவாகப் போகிற அசெளகரியத்துடன் விரைவாகச் சிந்திக்கிற சாதனை இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். கடந்த பத்து நாட்களாக எப்படி இந்த நினைவை மறந்திருந்தேன்?

கார்காலத்தின் பன்னிரண்டாம் நாள். எம்.எஸ்.எக்ஸ்.07423ன் ஒசை வாசலில் கேட்கிறது. "சார் ரொம்ப மன்னிக்கணும். நேற்று நீங்கள் கஷ்டப்பட்டிருப்பீங்க." இவள் குரல் கெஞ்சுகிறது.

நான் இவள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறேன். பின்பு நிதானமான குரலில் சொல்கிறேன்: "சுமதி நான் உன்னை மன்னிக்க வேண்டிய குற்றத்தைத்தான் நீ செய்திருக்கிறாய். அதாவது என்னை நடப்பது பற்றி நினைக்கவும் சோம்பல்! செய்த குற்றத்தைச் சொல்கிறேன். அதைப் பத்து நாள் செய்தது போதும், இன்னும் செய்ய வேண்டாம்.”

என்னோடு சிறிதுநேரம் வாதாடிவிட்டுச் சுமதி போய்விடுகிறாள். மழையில் நனைந்து கொண்டு உள்ளிருப்பவளை நனையாமல் காப்பாற்றியவாறு போகும் எம்.எஸ்.எக்ஸ், 07423ஐயும் பார்த்துவிட்டு எந்த மயக்கமும் இல்லாத கெட்டியான மனத்தோடு உள்ளே திரும்புகிறேன் நான்.

ஊரில் 'கார் கால மூட்டம்; - மூன்று மாதத்துக்கு இருந்ததாக எல்லாரும் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் ‘கார்’ கால மயக்கம் பத்தே நாட்களுக்கு மேல் இல்லை. இப்போது எனக்கு அந்த 'லீக்கேஜ்' மனத்தின் எந்த மூலையிலும் இல்லை.

(தாமரை, ஆகஸ்ட், 1961)