நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/செருப்பு

62. செருப்பு.

டைத்தெருவில் கலகலப்பு ஆரம்பமாகி விட்டது. எல்லாக் கடைகளின் முன்பும் கூட்டம்தான். எல்லாருக்கும் எல்லாக் கடைகளிலும், எல்லா நாட்களிலும், வாங்குவதற்கு என்னதான் இருக்குமோ? வாங்கினவர்கள் வெளியேறவும், வாங்க வந்தவர்கள் உள்ளே நுழையவுமாக நெருக்கடி நிறைந்த கடைத் தெருவில் சுறுசுறுப்பு களை கட்டியிருந்தது. மறுநாள் ஏதோ ஒரு பண்டிகை. அதற்காக முதல் நாளும் அரசாங்க விடுமுறை போல் இருக்கிறது. இல்லாவிட்டால் காலை வேளையிலேயே இப்படித் திருவிழாக் கூட்டம் கூடாது. குமரகுரு அவசரம் அவசரமாகக் கடையைத் திறக்க விரைந்தான்.

அந்தத் தெருவிலேயே குமரகுரு ஒருவன்தான் அன்று தாமதமாகக் கடையைத் திறந்து கொண்டிருந்தான். செருப்புக் கடைதானே? விடிந்ததும் விடியாததுமாக விற்கா விட்டால் வாடிப் போய் விடுமென்பதற்கு வாழைக்காயா, கொத்துமல்லி, கறிவேப்பிலையா? கடையைத் திறந்ததும் குப்பென்று தோல் நாற்றம் மூக்கைத் துளைத்தது. அந்த நாற்றத்தோடு கடைக்குள் அடைந்து கிடந்த நேரத்தில் சேர்ந்திருந்த வெக்கையும் வாட்டி எடுத்தது. வெக்கையும், நாற்றமும் குறையட்டும் என்று மின் விசிறியைச் சுழலச் செய்து விட்டு, ஸ்டூலை எடுத்துக் கொண்டு கடையின் போர்டைத் துடைப்பதற்காக வாசலுக்கு வந்தான் குமரகுரு.

ஸ்டூலைக் கீழே போட்டுக் கொண்டு ஏறி நின்று ‘இப்ராஹிம் ஷூ மார்ட்’ என்ற போர்டைப் பளிச்சென்று துடைத்தான். அவனுடைய முதலாளிக்கு எல்லாமே பளிச்சென்று இருக்க வேண்டும். தெருவிலோ தூசி அதிகம். ஒவ்வொரு நாளும் துடைத்தாலும், போர்ட்டில் தூசி படியத்தான் செய்யும். துடைக்கா விட்டால் முதலாளிக்கு வருகிற கோபம் பிரமாதமாயிருக்கும். வியாபாரத்தில் லாபம் பிரமாதமாக வருகிறதோ, இல்லையோ, கோபம் பிரமாதமாக வந்து கொண்டிருந்தது அவருக்கு. லாபம் எப்படி வரும்? பொழுது விடிந்தால், பொழுது போனால் அவருடைய ‘சிநேகிதிகளுக்கு’ மாட்டி விடுகிற ஓசிச் செருப்புக்களே நாலைந்து ஜோடிக்குக் குறையாதே! பெரிய முதலாளி இப்ராஹிம் சாயபு இருந்த போது இந்தக் கடையை எவ்வளவுக்கெவ்வளவு அவர் மகன் சலீம் பாழாக்கிக் கொண்டிருக்கிறார் என்பது வேலைக்காரன் குமரகுருவுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர் காலத்திலும் அவன் இந்தக் கடையில் வேலை பார்த்தான். இப்போது அவர் மகன் காலத்திலும் வேலை பார்க்கிறான். -

அவன் இப்ராஹிம் ஷூ மார்ட்டில் என்ன வேலை பார்க்கிறான் என்று ஒரு பதவிப் பெயருக்குள் சுருக்கமாக வரம்பு கட்டி விட முடியாது. வருகிறவர்களை உட்கார வைத்துக் காலில் செருப்பு மாட்டிக் கழற்றுவதிலிருந்து, பில் போடுவது, பணம் வாங்குவது, கணக்கு எழுதுவது, எல்லாம் குமரகுருதான். சில சமயங்களில் கூட்டமில்லாதிருக்கும்போது, நாலைந்து ஜோடிக்குப் பாலிஷ் போட்டு 'ஷோகேஸில்' அடுக்குவதும் உண்டு. செருப்புக் கடையில் வேலை பார்க்கிறவனுக்கு எது உயர்வு? எது தாழ்வு? எல்லாமே உயர்வுதான்!

பெரிய முதலாளி காலமான பின் சின்னவர் சலீம் கடைப்பக்கமே அதிகமாக வருவதில்லை. கடையைத் திறப்பதிலிருந்து இரவில் சாவிக்கொத்தும் விற்பனைப் பணமும் கொண்டு போய்க் கொடுப்பதுவரை எல்லாம் குமரகுருதான் பார்த்துக் கொண்டான். சின்னவர் உல்லாச புருஷர், ரோட்டரி கிளப், டென்னிஸ் கிளப், காஸ்மாபாலிடன் கிளப் என்று ஊரிலுள்ள நவநாகரிக கிளப்புகளில் எல்லாம் சலீமுக்குத் தொடர்பு உண்டு. சலீம் வியாபாரத்தைக் கவனிப்பதற்காகத் தினசரி கடைக்கு வராவிட்டாலும் அந்த வழியாகக் காரில் போகிறபோது வருகிறபோது ‘போர்டு' பளிச் சென்று இருக்கிறதா என்பதை நோட்டம் பார்க்கத் தவறமாட்டார். போர்டு பளிச்சென்று இராவிட்டால் அவருக்குக் கோபம் வரும்.

சலீம்பத்து நாளைக்கொருதரம் திடுதிடுப்பென்று நாலைந்து ஆங்கிலோ இந்தியப் பெண்களுடன் காரில் வந்து இறங்குவார். சிரிப்பும், கும்மாளமுமாகக் கடையே அமளி துமளிப்படும். எல்லார் கால்களுக்கும் புதிய செருப்புக்கள் மாட்டப்படும். முதலாளி சலீம் கடைசியில் குமரகுருவைத் தனியே அழைத்து, “குமரகுரு இதோ பாரு. இவங்கள்ளாம் நமக்கு ரொம்ப வேண்டியவங்க. இதுக்கெல்லாம் பில் போடாதே. பிரஸன்டேஷன் மாதிரி இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு, வந்ததுபோலவே அவர்களைக் காரில் அடைத்துக் கொண்டு திரும்பவும் கிளம்பிவிடுவார்.

அப்புறம் குமரகுரு ஏன் வாய் திறக்கிறான்? தோலோடு பழகிப் பழகி ரொம்ப விஷயங்களில் மரத்துப் போயிருந்தான் அவன். இவ்வளவெல்லாம் தாராளமாக இருக்கிற அதே சலீமிடம் தன் கால்களுக்கு இனாமாக ஒரு ஜோடி செருப்புக் கேட்கப் பயந்து கூசினான் குமரகுரு. நவநாகரிகமான உயர்தரச் செருப்புக்களைப் பளபளவென்று மின்னுகிறார் போல வரிசையாக அடுக்கியிருக்கிற அந்தக் கடையில் வேலை பார்க்கும் அவன் அணிந்து கொண்டிருந்த செருப்போ மிகவும் சாதாரணமானது. கருங்கல்லைப் போல் கனத்தோடு கோணல் மாணலாக அறுத்துத் தைத்திருந்த பழைய டயர் செருப்புக்களை வீதியில் மாட்டிக் கொண்டிருந்தான் குமரகுரு. ஆனால் நாள் தங்கி உழைக்கும் சக்தி அவற்றுக்கு உண்டு.

அந்தச் செருப்புக்களை அவன் கால்களில் அணிந்து கொண்டிருக்கும்போது பார்த்தாலும் அழகாயிராது. கழற்றிய பின்பு தனியாகப் பார்த்தாலோ அழகாயிராததோடு அசிங்கமாகவும் இருக்கும்.

ஒருநாள் கடைக்குள் நுழைகிற இடத்தில் அதைக் கழற்றி வைத்துவிட்டுச் சலீமிடம் அவன் பட்டபாடு போதும் போதும் என்றாகிவிட்டது.

“ஏண்டா குமரு, இதென்ன செருப்பா, பாறைக் கல்லு உடைச்சு வச்சிருக்கியா? இதை இங்கே கழட்டிவச்சுக் கடைக்குத் திருஷ்டி கழிக்கவாணாம். மறைவா எங்காவது தூக்கி எறி” என்று சலீம் கூறியதிலிருந்து அந்தச் செருப்புக்களைக் கழற்றி முன்புறம் வைப்பதை நிறுத்திவிட்டுக் கடையின் பின்புறம் பழைய சாமான்களைக் குப்பைப் போல அடைத்திருக்கும் ஒரிடத்தில் போட்டுவிட்டு, போகும்போது நினைவாகக் காலில் மாட்டிக் கொண்டு போகப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் குமரகுரு.

சலீமுக்கு எல்லாம் 'பளிச்' சென்றிருக்க வேண்டும். 'பளிச்' சென்றிருக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும்.குமரகுருவுக்கும் 'பளிச்' சென்றிருக்க ஆசைதான்! ஆனால் 'இப்ராஹிம் ஷூ மார்ட்'டில் கிடைக்கிற நாற்பத்தைந்து ரூபாய்க் காசில் பளிச்சென்றிருக்க முடியுமா? இப்ராஹிம் ஷு மார்ட்டைப் பளிச்சென்று வைத்துக்கொள்ள அவனால் முடியும். அது வேறு விஷயம்; ஆனால் தன்னைப் பளிச்சென்று வைத்துக் கொள்ளப் போதுமான பொருளாதார வசதி அவனுக்கு இல்லை.

அந்தக் கடையிலிருக்கிற உயர்தரச் செருப்புக்களில் ஒரு ஜோடி ஒசியாகக் கிடைத்தால் குமரகுருவும் பளிச்சென்று இருக்கலாம். ஆனால் அப்படி ஒசிச் செருப்பு ஏற்கனவே 'பளிச்' சென்று இருக்கிறவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்ததே தவிர, அவனைப்போல் இனிமேல் பளிச்சென்று இருக்க விரும்புகிறவனுக்குக் கிடைக்கிற வழியாயில்லை. தானாக வாய் திறந்து கேட்க அவனுக்கும் தெம்பில்லை. எனவே நவநாகரிக ஷு மார்ட்டாகிய இப்ராஹீம் ஷு மார்ட்டில் வேலை பார்த்துக் கொண்டு கரடு முரடான டயர்ச் செருப்பில் நடந்து கொண்டிருந்தான் அவன். அதுதான் சொன்னேனே தோலோடு பழகிப் பழகி ரொம்ப விஷயங்களில் அவன் மரத்துப் போயிருந்தான்.

அந்தக் கிளப்பிலும் இந்தக் கிளப்பிலும் பழகிய யுவதிகளோடு சலீம் கடைக்கு வந்து அட்டகாசம் செய்யும்போது குமரகுருவுக்குச் சில சமயங்களில் அவமானமாக இருக்கும். ஆனால் அவன் அந்த அவமானங்களை மறந்துவிடப் பழகிக் கொண்டிருந்தான்.

சலீம் தான் உடனழைத்து வரும் பெண்களை உட்காரச் செய்துவிட்டுக் குமரகுருவை நோக்கி, “ஏண்டா அசடு மாதிரி நிற்கிறே? இவங்க காலுக்கு 'மாட்ச்' ஆகிய மாதிரி ஜோடியாகப் பார்த்து எடுத்து மாட்டு” என்று அதட்டுவான்.

இளம் பெண்களுக்கு முன்னால் கண்டபடி பேசினால் அவருக்கும் ரோஷமாகத்தானே இருக்கும்? அதுவும் குமரகுரு கலியாணமாகாத வாலிபன், கலியாணத்தைப் பற்றிக் கற்பனைகள் செய்திருக்கும் மனநிலையுள்ள பருவத்தினன். சுரணையற்ற தோலுக்குத்தானே தோற்கடையில் மதிப்பு? குமரகுருவும்.அப்படித்தான். ஆகியிருந்தான்.ஆனால் சமயாசமயங்களில் 'தானும் மனிதன் தனக்கும் மனம், மானம் எல்லாம் இருக்கிறது' என்பது அவனுக்கு நினைவு வந்து தொலைத்தது. அப்படி நினைவு வரும்போதெல்லாம் அந்த நினைவைக் கஷ்டப்பட்டு அடக்க முயன்று கொண்டிருந்தான் குமரகுரு பளிச்சென்று வாழமுடியாவிட்டாலும் பசியைத் தீர்த்துக் கொண்டாவது வாழ வேண்டுமே! இந்த வேலையை விட்டுவிட்டால் வயிறும் அல்லவா காயும்? அழுக்கு வேஷ்டியும் காலர் கிழிந்த சட்டையும், பழைய டயர்ச் செருப்பும், எந்த விதத்திலும் கேவலமில்லை. ஆனால் அதை யாராவது கேவலமென்று சொல்லிக் காட்ட முன்வருகிறபோது வேதனையை உணரவேண்டியிருக்கிறது. 'கேவலம்தானோ' - என்று சந்தேகமும் ஏற்படுகிறது.

தன்னோடு கடைக்கு வருகிற இளம் பெண்களிடமெல்லாம். ஏதோ வேடிக்கையாகப் பேசுவதுபோல், “நம் குமரு ஒரு ஜோடி செருப்பு வைத்திருக்கிறான்! அதைப் பார்த்தீர்களோ? உங்களுக்குச் செருப்புப் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற ஆசையே போய்விடும்” என்று சலீம் தன்னைச் சுட்டிக்காட்டிச் சிரித்துக்கொண்டே கூறும்போது குமரகுரு குன்றிப்போவான்.வேடிக்கையாகப் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது சலீம் தன்னுடைய டயர்ச் செருப்பைப் பேச்சுக்கு விஷயமாக எடுத்துக்கொண்டு வம்புக்கு இழுப்பது ஏன்?' என்று புரியாமல் தவித்தான் குமரகுரு.

‘விடாமல் இப்படிச் சொல்லிச் சொல்லிக் கேலி செய்கிறாரே? இவர்தான் கடையிலிருந்து ஒரு ஜோடி.நல்ல செருப்பு எடுத்து பிரஸண்ட் செய்யட்டுமே!’ என்று நினைப்பான் குமரகுரு. ஆனால் கேட்கத் துணிவு வராது. ஆனாலும் என்றாவது ஒருநாள் சலீமிடம் அந்தக் கேள்வியைக் கேட்டு அதன் பயனையும் தான் அடைந்துவிடலாம் என்று நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருந்தது. எத்தனையோ பேருக்கு ஒசிச் செருப்பு வழங்கிய உல்லாசப் பேர்வழி தனக்கு ஒரு ஜோடி அன்பளிப்பாக நல்ல செருப்புத் தரத் தயங்கமாட்டார் என்று எண்ணினான் அவன்.

குமரகுரு எதிர்பார்த்த சந்தர்ப்பம் விரைவில் வாய்த்தது. அன்று சலீம் தன் ஜமாவோடு கடைக்குள் நுழைந்தபோது இரண்டாவது முறையாகக் குமரகுரு வாசற்புறம் தவறிப்போய்க் கழற்றி வைத்திருந்த டயர்ச் செருப்பு அவன் பார்வையில் தென்பட்டுவிட்டது; அவ்வளவுதான். வந்தது வினை!

“ஏண்டா இதை நீ இன்னும் இங்கே தான் கழற்றி வைக்கிறாயா? உனக்கு எத்தினி நாள் படித்துப் படித்துச் சொல்லுறது? சொல்லிப் பிரயோசனமில்லே. இதோ இப்படிச் செய்தாத்தான் உனக்குப் புத்தி வரும்’ என்று சொல்லிக் கொண்டே டயர்ச் செருப்புக்களை நடுத்தெருவில் போய் விழும்படி தன் காலால் "புட்பால்’ உதைப்பது போல் எற்றிவிட்டான் சலீம், குமரகுருவுக்கு இது அவமானமாயிருந்தாலும் ஒருவிதத்தில் திருப்தியாயிருந்தது.

'இதுதான் சரியான சமயம்! இன்றைக்கு இவரிடம் கேட்டு விட வேண்டியது தான்' என்ற எண்ணத்துடன் “நான் இனிமேல் டயர்ச் செருப்புப் பக்கமே போகவில்லை. எனக்கு ஒரு ஜோடி நல்லதாச் செருப்புக் கடையிலிருந்தே கொடுத்து விடுங்கள்” என்று கேட்டுவிடத் தயாரானான் குமரகுரு.

தான் வாய் திறந்து கேட்டால் உல்லாசப் பேர்வழியான முதலாளி மறுக்கமாட்டாரென்று நினைத்துக் கொண்டிருந்தான் அவன். வாய் திறந்து கேட்டும் அவர் மறுத்துவிட்டால் அவமானமாயிருக்குமே என்றும் தயங்கினான். அப்படி அவர் தரமறுத்துவிட்டால் மேலே என்ன செய்யலாம் என்றும் அவன் யோசித்தான். "நீயுமாச்சு, உன் கடையுமாச்சு, நீயே உன் கடையைக் கட்டிக் கொண்டு அழு” என்று சொல்லிவிட்டு அப்படியே தெருவில் போய் அங்கே விழுந்து கிடக்கும் தன் டயர்ச் செருப்புக்களை மாட்டிக் கொண்டு நடந்து விடலாமா என்று சிறுபிள்ளைத் துடிப்போடு ஒரு யோசனை குமரகுருவுக்கு உதயமாயிற்று.

அப்படிச் செய்தால்தான் என்ன?

வேறென்ன? வேலை போகும்; வயிறு காயும்? வயிறு காயட்டுமே! வேலை போகட்டுமே! ஒரு நிமிஷம் ரோஷத்தோடு, மானத்தோடு துணிவோடு வாழ்ந்திருக்கிறோம் என்ற திருப்தியாவது கிடைக்குமே?

கடைசியில் குமரகுரு துணிந்து கேட்டேவிட்டான்.

"நீங்கள்தான் ஒரு ஜோடி நல்ல செருப்பாக எனக்குப் பிரஸண்ட் செய்யுங்களேன் முதலாளி”

“பிரஸண்ட் செய்கிற முகரையைப் பார் முகரையை; உனக்கு அது ஒரு கேடா” என்று அவன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான பதில் சலீமிடமிருந்து வந்தது. சலீமுக்குத்தான் 'பிரஸண்ட்' செய்கிற ஆள் உள்பட எல்லாமே பளிச்சென்று இருக்கவேண்டுமே!

குமரகுரு அதிர்ந்து போனான். 'யோசனைப்படி இப்போதே இந்த வேலையை விட்டு வெளியேறிவிட வேண்டியதுதான் என்ற எண்ணம் அவன் மனத்தில் உறுதிப்பட்டது. ஒரு கணம் தயங்கினான்.முதலில் செருப்பை எடுத்துக்கொண்டு வந்து அப்புறம் பேசிக் கொள்ளலாமென்று தோன்றியது. எப்படியானால் என்ன? குமரகுருவுக்குத் துணிச்சல் உண்டாகிவிட்டது. இத்தனை நாட்களாகத் தன்னை அவமானப்படுத்தி வாட்டி எடுத்திருக்கும் முதலாளி சலீமைச் சரியானபடி காய்ச்சி எடுக்க அவனுக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது! கடைக்குள்ளிருந்து வேகமாக நடந்து தெருவுக்கு வந்தான் குமரகுரு. அங்கொன்னும் இங்கொன்றுமாக, விழுந்திருந்த டயர்ச் செருப்புக்களைக் கால்களில் மாட்டிக் கொண்டு திரும்பினான். சலீமின் அதிகாரக் குரல் அவனை அழைத்தது.

“டேய் குமரு! அந்த 'ஐசுவரியம்' தெருவிலே கிடந்தா எவனும் கொண்டு போயிடமாட்டான். உள்ளே கொண்டு போய் எறிஞ்சிட்டு இங்கே வா. வந்து இவங்க காலுக்கு 'சப்பல்ஸ் எடு”

குமரகுரு மறுபேச்சுப் பேசாமல் கடைக்குள் புகுந்து செருப்பை வழக்கம்போல் உட்புறம் குப்பைக் குவியலுக்கருகே கழற்றி எறிந்துவிட்டுத் திரும்பி வந்தான். வந்திருப்பவர்களின் காலுக்கு அளவான செருப்புக்களைத் தேடி எடுக்கலானான். அவனுடைய கொதிப்பு அந்த ஒரு கணத்தில் எப்படியோ அடங்கிவிட்டது. சலீமை எதிர்த்துக் கேட்க ஏனோ அவனுக்கு நாழ எழவில்லை."எதிர்த்துக் கேட்கலாம்’ என்று நினைப்பது சுலபமாக இருந்தது. கேட்பதற்கு மட்டும் முடியவில்லை. ஏதோ நாவைத் தடுத்தது. ஏதோ தொண்டையைக் கட்டுப்படுத்தியது. சொல்ல வரவில்லை. சீற்றமும் வரவில்லை. சுரணையில்லாத தோலோடு பழகிப் பழகி அவன் ரொம்ப விஷயங்களில் மரத்துப் போயிருந்தான்.