நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/சொல்லாத ஒன்று

59. சொல்லாத ஒன்று!

கரத்தின் ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த மைதானம். நாற்புறமும் இரும்பு வேலி, நடுவில் திண்ணை போல் அகன்ற, உயரமான ஒரு சிமிண்டு மேடை மைதானத்தின் பின்புறம் சேறும் சகதியுமாக இருந்த பள்ளத்தில் ஏழெட்டுக் குடிசைகள். அவைகளிலும் மனித உயிர்கள் குடியிருக்கின்ற விந்தையை உலகத்துக்குச் சொல்லுவது போலச் சமையல் செய்யும் அடுப்புப் புகைச் சுருள்கள் கூரைக்கு மேல் படர்ந்து, வெட்டவெளியில் கலந்து கொண்டிருந்தன. -

அது அந்த ஊர் நகரசபையாருக்குச் சொந்தமான மைதானமே! அந்தச் சிமிண்டு மேடை கூட நகர சபையார் கட்டியதுதான். பொதுக் கூட்டங்கள் போடுகிறவர்கள் அதற்கென்று நகரசபையார் நிர்ணயித்திருக்கும் பணத்தைக் கட்டி முன் அநுமதி வாங்கிக் கொண்டால் அந்த இடத்தில் கூட்டம் நடத்தலாம்.

அநேகமாக ஒவ்வொரு நாளும் அந்த மைதானத்தில் ஏதாவதொரு கூட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும். பல ஆயிரக்கணக்கான மக்கள் உட்கார வசதியுள்ள அந்த மைதானத்தில், எப்போது கூட்டமானாலும் ஜனக் கும்பல் நிரம்பி வழியும். மைதானத்துக்கும், குடிசைகளுக்கும் இடையே ஒரு பெரிய சாக்கடை. மைதானத்துக்கு மிக அருகே ஒட்டினாற் போல், பக்கத்தில் இருந்தது சுடலையாண்டியின் குடிசை.

சுடலையாண்டி மில் கூலி. வயதான கிழவன். ஒற்றைக் கட்டை அவனுக்கு ஒரே பெண். அவளைப் பக்கத்து ஊரில் ஒரு பஸ் கண்டக்டருக்குக் கட்டிக் கொடுத்திருந்தான். ஒரு பேத்தி பிறந்து, ஆறேழு வயதுச் சிறுமியாக வளர்ந்திருந்தாள். கிழவனைப் பார்ப்பதற்காக எப்போதாவது பேத்தியும், பெண்ணும் வந்து போவார்கள். அன்றைக்கும் கிழவனைப் பார்க்க இருவரும் வந்திருந்தார்கள்.

மாலை ஏழு மணி, கிழவன் சுடலையாண்டி பேத்தியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு குடிசை முகப்பில் உட்கார்ந்தான். மைதானத்தில் ஏதோ பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேத்திக்காக வாங்கி வந்திருந்த மிட்டாய்ப் பொட்டலத்தை அதன் கையில் பிரித்துக் கொடுத்து விட்டுச் செவிகளைக் கூட்டத்து ஒலி பெருக்கியின் குரலில் செலுத்தினான் கிழவன்.

“தாத்தா மிட்டாயி இனிச்சுக் கெடக்கு.”

“இனிக்குதா? அவ்வளவும் உனக்குத்தான் கண்ணு! நல்லாச் சாப்பிடு”

சிறுமி எதையோ கவனித்து மோந்து வாசனை தெரிந்து கொண்டவள் போல் முகத்தைச் சுளித்தாள். திடீரென்று மிட்டாய்ப் பொட்டலத்தைக் கீழே போட்டு விட்டு இரண்டு கைகளாலும் மூக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன கண்ணு? ஏன்?”

“ஒரே நாத்தமா இருக்குது தாத்தா.”

“நாத்தமாவது, ஒண்ணாவது; எனக்குத் தெரியலியே, அம்மா?”

“இல்லே தாத்தா நாறுது” பிடிவாதமாகச் சொன்னாள்.

“ஒண்னும் நாறாது. நீ மிட்டாயைத் தின்னு.”

கிழவன் மிட்டாய்ப் பொட்டலத்தைக் கீழே இருந்து சிறுமியின் கையில் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பேச்சைக் கேட்பதில் கவனம் செலுத்தினான். சொற்பொழிவாளர் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“தாத்தா தாத்தா அதோ பாரேன்!” சிறுமி அவருடைய கவனத்தை இழுத்தாள்.

“எங்கே கண்ணு பார்க்கச் சொல்றே”

"அதோ அங்கே!. சாக்கடைக்கு அந்தப் பக்கமா மைதானத்து வேலியை ஒட்டினாற்போலப் பாரு”

"அங்கே என்னவாம்? கூட்டம் நடக்குது பேசுறாங்க. உனக்குப் புரிஞ்சா நீயும் கேக்கலாம்.”

“அது இல்லே தாத்தா இன்னும் நல்லாப் பாரு' சிறுமி தன் கையை நீட்டிச் சுட்டிக் காட்டினாள். கிழவனுக்குக் கண்பார்வை கொஞ்சம் மங்கல். 'குழந்தை சொல்கிறாளே! ஒன்றுமில்லாமல் சொல்லமாட்டாள்' என்று அவளை மடியிலிருந்து கீழே இறக்கிவிட்டு நான்கைந்து அடி முன்னால் நடந்து போய் உற்றுப் பார்த்தான். அந்த இடத்தில் ஒரு பெரிய நாய் செத்துக் கிடந்தது. கிழவன் நாற்றம் பொறுக்க முடியாமல் மூக்கைப் பிடித்தான். குழந்தைக்கு இருக்கும் அறிவுக்கூர்மையை வியந்து கொண்டான்.

குழந்தை இவ்வளவு சுலபமாக இந்த நாற்றத்தை உணர்ந்து கொண்டாளே? என் மூக்கில் மட்டும் இது ஏன் இவ்வளவு நாழிகை உறைக்கவில்லை? இப்படித் தனக்குத் தானே நினைத்துக் கொண்டபோது அவனுக்கு வெட்கமாக இருந்தது. வெட்கந்தானே தவிர ஆச்சரியப்படவில்லை காரணம்? அங்கே அப்படிச் செத்துக்கிடப்பதெல்லாம் சர்வ சாதாரணம்! புதுமையும் அல்ல. நாய் என்ன பிரமாதம்? சில சமயங்களில் மனிதர்களே அந்த நிலையில் கிடப்பது உண்டு. போலீஸ் வரும்; விசாரணைகள் தடபுடல் படும். அப்படிப்பட்ட ஒரு வட்டாரம் அது. கிழவன் திரும்பி வந்து குழந்தையை முன்போல் மடியில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

“என்ன தாத்தா? பார்த்தியா அதை?”

"பார்த்தேன். நாய் செத்துக் கிடக்கு!”

"அதுதான் நாறுது, தாத்தா!

“சரி, சரி, நீ மிட்டாயைத் தின்னு; அது கிடக்குது”

குழந்தையின் பேச்சை ஒரு வழியாக அடக்கிவிட்டு, நிலையாக மேடையில் நடந்து கொண்டிருந்த சொற்பொழிவில் கவனத்தைச் செலுத்தினான் அவன்.

அது ஒரு பாராட்டுக் கூட்டம். தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரைப் பாராட்டிப் பலர் பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் ஒரே மாதிரித்தான் பேசினார்கள் அதாவது வெற்றி பெற்றவரைப் புகழ்ந்தார்கள்.

கிழவன் கூட்டம் முடிந்ததும் பேத்தியைத் தூக்கிக்கொண்டு இராச் சாப்பாட்டுக்காகக் குடிசைக்குள் போனான். சாப்பாடு முடிந்ததும் படுத்துக் கொண்டான்.

மறுநாள் மாலை. அதேபோல் கிழவன் பேத்தியோடு குடிசை முகப்பில் வந்து உட்கார்ந்தான். அன்றும் மைதானத்தில் வேறொரு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

பேத்தி முகத்தைச் சுளித்தாள். மூக்கை இறுக்கிப் பிடித்தாள்.

“தாத்தோய்.”

“என்ன கண்ணு?”

“ரொம்ப நாறுது:”

“ஒண்ணும் நாறாது சும்மா இரு!”

கிழவன் கூட்டத்துச் சொற்பொழிவில் கவனம் செலுத்தியிருந்தான். அன்று நடந்து கொண்டிருந்தது ஒரு பிரமுகரின் மரணத்துக்காக அநுதாபக் கூட்டம். அவருக்குப் பிறகு பூமியில் மனிதரே இல்லை; மனிதத்தன்மையே செத்துப்போய்விட்டது என்கிற தோரணையில் எல்லோரும் வருத்தத்துடன் பேசினார்கள். அன்றும் ஒரே புகழ்ச்சி தான்.

“தாத்தா அந்த நாயி இன்னும் அங்கேயே கெடக்கு. நாத்தம் வீட்டுலே உட்கார விடமாட்டேங்குது'

கிழவன் கவனம் கலைந்து குழந்தை கூறியது உண்மையா என்று அந்த இடத்தில் பார்த்தான். செத்த நாய் அங்கேயே கிடந்தது.

“பொறுக்க முடியலே தாத்தா! உள்ளே போயிறலாம்.”

“சரி வா. இல்லாட்டி உன் தெணதொணப்புச் சகிக்க முடியாது”

கிழவன் குழந்தையோடு குடிசைக்குள் போனான்.

மூன்றாம் நாள் மாலை. அன்று மைதானத்தில் ஒரு பிரம்மாண்டமான இலக்கியக்கூட்டம் நடைபெற்றது. சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒருவரும் திருக்குறளைப் பற்றி ஒருவரும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கிழவன் பேத்தியை எடுத்துக் கொண்டு வாயிற்புறம் வந்தான்.

“தாத்தா. நான் உள்ளே போறேன். வாந்தி எடுக்க வருது!:”

உண்மையாகவே குழந்தைக்குக் குமட்டி ஒக்காளித்தது. இரண்டு கைகளாலும் அவள் மூக்கு இருந்த இடத்தையே மூடிக் கொண்டிருந்தாள். கிழவன் பார்த்தான். செத்த நாய் அங்கேயே கிடந்தது. அவனுக்கு மட்டும் நாறாதா? ஆனால் அவனுக்கு நாற்றத்தில் இருந்தே பழக்கம். அதனால் அது ஒரு கஷ்டம் அல்ல. ஒருவேளை பழக்கமில்லாத காரணத்தால் வாசனை அந்தக் கஷ்டத்தை உண்டாக்கினாலும் உண்டாக்கலாம். அன்றும் பாதிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே குழந்தையோடு உள்ளே போய்விட்டான் கிழவன்.

நான்காம் நாள் ஒரு தெருக்கூத்து நாடகம் அந்த மைதானத்தில் நடந்தது. கிழவன் ஆவலோடு வந்தான்.பேத்தியும் வந்தாள்.பாதியிலேயே வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது சிறுமிக்கு கிழவன் மடியிலேயே வாந்தி எடுத்துவிட்டாள்.கிழவன் பார்த்தான். செத்த நாய் அங்கேயே கிடந்தது. முழுதும் பார்க்காமலே குழந்தையோடு குடிசைக்குள் போய்விட்டான் கிழவன்.

ஐந்தாம் நாள் மாலை சுகாதார வாரக் கொண்டாட்டம். மைதானத்தில் பிரம்மாண்டமான கூட்டம். 'சுத்தம் நமது பிறப்புரிமை' என்று முழங்கிக் கொண்டிருந்தார் ஒரு பேச்சாளர்.

“தாத்தா! இத்தினி பேச்சுப் பேசுறாங்களே... நாலு நாளா அந்தச் செத்த நாயி அங்கேயே கெடந்து நாறுதே பேசுறவங்க, கேக்கறவங்க யாருக்குமே அது நாறலைன்னு அர்த்தமா?” பேத்தி கிழவனைக் கேட்டாள்.

கிழவன் சிரித்தான்!

“அவங்களுக்கு அந்த நாத்தம் உறைக்கலே கண்ணு! அதனாலேதான் ஒருத்தரும் அதைச் சொல்லலே போறாங்க.போ. நீ வா. நாம் குடிசைக்குள்ளே போயிடலாம்!” கிழவன் குழந்தையோடு குடிசைக்குள் போய்விட்டான்.