நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/நினைவில் இருந்து

60. நினைவில் இருந்து...
1.

“இதோ பாருங்கள்! இன்றைக்கு நீங்கள் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகவில்லையானால்…”

“என்ன செய்து விடுவாயாம்...”

“ஒரு பெரிய புரட்சி நடக்கத்தான் போகிறது...”

“நீ ஒரு புரட்சிக்காரன் தங்கைதானே? அந்த வாசனை போய் விடுமோ?”

ராஜம் பதில் சொல்லவில்லை. உடனே அவள் கண்கள் கலங்கி விட்டன. நான் பேசியதென்னவோ விளையாட்டிற்காகத்தான். ஆனால், சந்தர்ப்பம் என் பேச்சைப் புண்ணில் கோல் விட்டுக் கிளறியது போல மாற்றி அமைத்து விட்டது. என் எதிரே தூணைப் பிடித்துக்கொண்டு நின்றவள், கலங்கிய கண்களோடு மோட்டு வளையை வெறித்துப் பார்த்தாள். அப்படியே அசந்து போய் உட்கார்ந்து விட்டாள்.

காகிதத்தில் குத்துவதற்காகக் குண்டுசியை எடுத்துத் தவறுதலாகக் கையில் குத்திக் கொண்டது போலாயிற்று என் நிலை. அவள் என்னோடு இணைய நேர்ந்த அந்தப் பழைய சம்பவம் இப்போதும் அவள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். விளையாட்டாகக் கூறுவதாக எண்ணிக் கொண்டு, அதை நினைவு மூட்டி விட்டது என் தப்புத்தான்!

என்ன செய்யலாம்? வாய் போன போக்கில் விட்டு விட்டால் அப்படித்தான். குப்பையைக் கிளறிய போது பூரானோ, தேளோ கிளம்புகிற மாதிரிச் சில சமயங்களில் பேச்சிலும் நாம் விரும்பாத அபத்தங்கள் வந்து விடுகின்றன.

“ராஜம்! இதென்ன அசட்டுத்தனம்? நான் ஏதோ விளையாட்டுக்குச் சொல்லி விட்டேன் என்றால், அதற்காக இப்படியா அழுவார்கள்? அசடு. திரும்பத் திரும்ப அதை நினைக்காதே. நினைத்தால் துன்பந்தான். மறந்து விடு.”

“...”

“அழாதே பைத்தியம். பகல் ஆட்டத்துக்கே போகலாம், எழுந்திருந்து வா. கண்ணைத் துடைத்துக் கொள்:”

என் சமாதானம் பலிக்கவில்லை. அவள் அந்தப் பழமையின் மோன மூட்டத்தில் சிக்கிச் சோக இருளில் ஒதுங்கி விட்டாள்.

வேறு வழியில்லை! அவளோடு அவளாக நானும் அந்த இருளில் ஒதுங்கினேன்! நினைவிலிருந்து அந்தக் கரையைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன்.

2

ஒரு வகையில் அது அனுபவம் இன்னொரு வகையில் அவஸ்தை. நான் மட்டும் ஸி.ஐ.டி.யாகப் பதவியேற்றுச் சரித்திரப் பிரசித்திபெற்ற அந்த ஆகஸ்டுப் பேராட்டத்தின் போது அரசாங்க சேவகம் புரிந்திராவிட்டால், இதோ இந்த அழகி ராஜம் எனக்கு மனைவியாக வாய்த்திருக்க மாட்டாள்.

எனக்கு அப்போது இருபத்தாறு வயது. 'இன்டர்' பாஸ் செய்துவிட்டுப் போலீஸில் எபி.ஐ.டி.இலாகாவில் நுழைத்திருந்தேன். வயதான தாய், நான், இருவரும்தான் என் குடும்பம். கலியாணத்தைப்பற்றி அம்மா அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்தாள். நான்தான் பிடி கொடுக்காமல் கடத்திக் கொண்டே வந்தேன்.

மூலைக்கு மூலை தேசபக்தர்களின் சதிக் கூட்டங்கள், ரயிலுக்கு வெடி, பாலத்துக்கு வெடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு நெருப்பு என்று எங்கு பார்த்தாலும் ஒரே பயங்கரம். ஒரு விநாடி ஒய்வு கிடையாது எங்கள் இலாகாவுக்கு. ஒய்வு ஒழிவின்றி அலைச்சலும் சுற்றலும், உளவு வேட்டையுமாக வாயில் ஈ புகுந்தது தெரியாமல் ஒடிக்கொண்டிருந்தோம். போலீஸ் இலாகாவுக்கு அது ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த காலமாக வாய்த்திருந்தது என்று பயப்படுமளவிற்கு நிலைமை மோசமாக இருந்தது. உயிரைத் திரணமாக மதித்து வெள்ளைக்காரனுக்கு ஊழியம் புரிந்தோம். அந்தச் சமயத்தில் நான் மணியாச்சி போலீஸில் ஸி.ஐ.டி. இன்ஸ்பெக்டராக இருந்தேன்.

இன்று, இப்போது நினைத்துப் பார்த்தால், அந்தத் தேசீய இயக்கமும் புரட்சியும் புனிதமான சுதந்திர வேள்வியாகத் தோன்றுகிறது. அன்று வெள்ளைக்காரன் ஏவிய வேட்டை நாய்களாக இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, வெட்கமாகக்கூட இருக்கிறது.

ஆகஸ்டு மாத நடுவில் ஒரு நாள். இப்பேது தாழையூற்றுக்கும் திருநெல்வேலிக்குமிடையே கம்பீரமாக சிமெண்ட் தொழிற்சாலைகள் நிமிர்ந்து நிற்கும் பிரதேசம் அந்தக் காலத்தில் ஒரே கரிசல் காடு. கருவேல மரங்களும் உடை மரங்களும் பகலிரவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி அடர்ந்து, காடு மண்டிக் கிடந்தன. அது கந்தக பூமி. ஒரே வெப்பும் வெடிப்புமாக இருக்கும். அது அசல் ஜாதி கருநாகங்கள் வசிப்பதற்கு இதமான பூமி.

மேற்படி கருவேலங்காட்டின் இடையே தேசபக்தர்களின் சதிகளுக்கு உபயோகப்படும் நாட்டு வெடிகுண்டுகளைச் செய்து வருவதாக ஒரு உளவு கிடைத்திருந்தது. கடம்பூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், இதில் முக்கியஸ்தனாகப் பொறுப்பேற்றுக்கொண்டு கருவேலங்காட்டிலேயே தங்கி, வசித்து வருவதாகவும் நம்பத் தகுந்த ஆள் மூலம் தகவல் எட்டியிருந்தது. இலாகா மேலதிகாரி, இதன் முழு விவரங்களையும் அறிந்து வரவேண்டிய பொறுப்பை என் தலையில் கட்டினார். நான் துணைக்கு ஒரு கான்ஸ்டபிளையும் அழைத்துக்கொண்டுபோனேன்.தாழையூற்றுக்கு அருகிலுள்ள குமிழங்குளம் கிராமத்தில் 'கங்கை கொண்டான்' ரூரல் ஸ்டேஷனைச் சேர்ந்த வேறு ஒரு கான்ஸ்டபிளும் ‘மஃப்டியில்' காத்திருந்தான். அவன் அந்தப் பிராந்தியத்தில் போக வர வழி விவரங்கள் தெரிந்தவனாகையால், எங்களுக்கு உதவி செய்வதற்காக அனுப்பப்பட்டிருந்தான்.

காலை பதினொரு மணி சுமாருக்குக் குமிழங்குளத்திலிருந்து கருவேலங்காட்டிற்குப் புறப்பட்டோம்.

“ஏனப்பா! கருநாகம் அதிகமென்கிறார்களே? பத்திரமான வழியில் கூட்டிக்கொண்டு போ! புற்றும் பொந்துமாக இருக்கிற வழி வேண்டாம்” என்று கங்கை கொண்டானிலிருந்து வந்தவனைப் பார்த்துக் கூறினேன், நான்.

“கருநாகத்துக்குக்கூட அவ்வளவாகப் பயப்படவேண்டியதில்லை சார்! அந்தக் கடம்பூர்ப் புரட்சிக்காரன் எமகாதகப் பேர்வழி! சர்க்கார் கண்ணில் மண்ணைத் தூவுவதில் பலே ஆள் சார் அவனுக்குத்தான் இப்போது நாம் பயப்பட வேண்டும்” என்றான் அவன்.

“அது சரி, அந்தக் கடம்பூர் ஆசாமியைப் பற்றி உனக்கு வேறு விவரங்கள் தெரியுமா? தெரியுமானால், மறைக்காமல் என்னிடம் சொல்லு!”

“தெளிவாகத் தெரியாது சார்! ஆனாலும் இன்னாராகத் தான் இருக்க வேண்டும் என்று என் வரையில் ஒரு அனுமானம் இருக்கிறது.”

"அந்த அனுமானத்தைத்தான் எனக்கும் கொஞ்சம் சொல்லேன்

“கடம்பூரில் பழம் பெருமை வாய்ந்த ஒரு பெரிய மிராசுதார் குடும்பம் இருந்தது. நாராயணய்யர் என்று பேர் சொன்னால் தெரியும். மனுஷன் கடைசிக் காலத்தில் குடி, கூத்தி, சீக்கு என்று சொத்தையெல்லாம் பாழாக்கிவிட்டுப் போய்ச் சேர்ந்தார். அவர் மனைவியும் பன்னிரண்டு வயதுப் புதல்வன் வேங்கடகிருஷ்ணனும், ஏழு வயதுப் பெண் ராஜம்மாளும் நிராதரவாகப் போயினர். மிச்சம் மீதியை விற்றுக் கடம்பூர் ரயில்வே ஸ்டேஷனருகில் ஒரு பலகாரக் கடை வைத்தாள் அந்த அம்மாள். தாயும் பெண்ணுமாகச் சுடச் சுடப் போளி, வடை, சுண்டல் என்று கண்ணாடிப் பெட்டியை நிரப்பிக் கொடுப்பார்கள். வேங்கடகிருஷ்ணன் ரயில்வே ஸ்டேஷனுக்குள் போய் விற்றுவிட்டு வருவான். ஜீவனம் இந்த வழியில் நடந்துகொண்டிருந்தது.பெண்ணையும் பிள்ளையையும் எப்படியாவது ஆளாக்கி விட்டுவிட வேண்டுமென்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைச் சோதிக்கும் பலகாரக் கடைத் தொழிலில் ஈடுபட்டிருந்தாள் விதவைத் தாய்.”

“என்னப்பா, வெடிகுண்டு செய்யும் பேர்வழியைப் பற்றிக் கேட்டால் நீ ஏதோ கதை அளக்கிறாய்?”

“கதை இல்லை சார், அவனைப் பற்றித்தான் சொல்கிறேன். போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்.கொஞ்சம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு வாருங்கள்.”

"சரி சொல் பார்ப்போம்”

“இந்த வேங்கடகிருஷ்ணனுக்கு வயது ஆக ஆகப் பழக்க தோஷத்தால் சுதேசிப் போராட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. கடைக்கு அடிக்கடி சாப்பிட வந்து போகும் சில தேசபக்தர்கள், அவன் ஆர்வத்தை இந்த வழியில் திருப்பி விட்டுவிட்டார்கள். நாளடைவில் பெரிய பெரிய தேசபக்தர்களுடன் கூட அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. 1932-இல் அவனைக் கைது செய்து, இரண்டு மாத காலம் ரிமாண்டில் வைத்திருந்து விட்டுவிட்டோம். கொஞ்ச நாளில் அவன் தாயார் காலமானபின் பலகாரக் கடை நின்று விட்டது. தங்கையை ஒர் உறவினர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு, ஆள் தலைமறைவாக இருக்க ஆரம்பித்தான். பெரிய பெரிய சதி வேலைகளிலெல்லாம் வேங்கட கிருஷ்ணன் முக்கியப் பொறுப்பு வகித்திருக்கிறான்.”

“இந்த வெடிமருந்துச் சதியிலும் அவன்தான் முக்கிய ஆளாக இருந்து வேலை செய்கிறான் என்பது உன் அபிப்பிராயம்; அப்படித்தானே?”

"ஆமாம் சார்! இந்தச் சந்தேகத்துக்கு ஒன்றிரண்டு தடையங்களும் கிடைத்திருக்கின்றன.அந்தப் பையனின் தங்கை ராஜம் இப்போது இங்கே தாழையூத்து அக்கிரகாரத்தில்தான் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இன்னும் கலியாணமாகவில்லை. பதினெட்டு வயது. குதிரை மாதிரி மளமளவென்று வளர்ந்துவிட்டாள். அவன் அடிக்கடி இந்தக் கருவேலங் காட்டிற்குள் சாப்பாடு கொண்டு போய்விட்டு வருவதைக் காண்கிறேன். இதனால் இதெல்லாம் வேங்கடகிருஷ்ணன் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது சார்”

கான்ஸ்டபிள் கூறிய விவரங்களைக் கேட்டதும், என் மனம் வேங்கடகிருஷ்ணனைப் பற்றி சிந்தனைகளில் ஈடுபட்டது. அப்போது மூவரும் கருவேலங்காட்டிற்குள் போகும் ஒற்றையடிப் பாதை மேல்தான் நடந்து கொண்டிருந்தோம்.

“சார் சார்! எங்கே பராக்குப் பார்த்துக்கொண்டே நடக்கிறீர்கள்?. காலடியில் பாம்புப் புற்று சார் வழியைப் பார்த்து நடந்து வாருங்கள். யோசனையை அப்புறம் வைத்துக் கொள்ளலாம்.”

நல்ல சமயத்தில் அவன் எச்சரித்தான்.நான் ஒரு பாம்புப் புற்றை மிதிக்க இருந்தேன். அவன் குரல் என்னை எச்சரித்து வழிமேல் நடத்தியது.

ஒற்றையடிப்பாதையில் எதிரே ஒரு யுவதிடிபன்ஸெட்டும் கையுமாக வரவே, நான் வழி விலகினேன். நல்ல அழகிதான். அந்த மாதிரித் தோற்றமுள்ள ஒரு பெண் அந்த நேரத்தில் அந்தக் காட்டில் தனியாக வரக் கண்டது எனக்கு வியப்பளித்தது. ஆடம்பரமில்லாத தோற்றமானாலும் அதியற்புதமான செளந்தரியக் கவர்ச்சி அவளிடம் இருந்தது.துவளத்துவள அவள் அந்த நடைநடந்துசெல்லும் காட்சியைத் தணிக்க முடியாத ஆவலோடு மீண்டும் திரும்பிப் பார்த்தேன். அவளும், பயமும் மருட்சியும் தோன்றும் கண்களால், என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

 அவள் எங்களைக் கடந்து பத்தடிதான் மேலே சென்றிருப்பாள். “பார்த்தீர்களா, சார்?.இவள்தான். கங்கை கொண்டான் கான்ஸ்டபிள் என் காதருகே மெல்ல முணு முணுத்தான்.

"வேங்கடகிருஷ்ணன் தங்கை ராஜமா?" "அவளேதான் சார்! அந்தப் பயலுக்குச்சோறு கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருகிறாள் போலிருக்கிறது."

“இருந்தாலும் இருக்கலாம். இவளை இப்போது ஒன்றும் செய்ய வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்வோம். மேலே போகலாம்” என்றேன் நான்.

மூவரும் மேலே நடந்து சென்றோம். அந்தப் பெண் ராஜத்தின் உருவமும் அழகும் என் மனத்தில் பதிந்து விட்டன.

கருவேலங்காட்டின் நடுவே ஒரு கீற்றுக் கொட்டகை, சட்டிபானைகள், களிமண், வெடிமருந்துச் சாமான்கள், பிற சாதனங்கள் எல்லாம் குடிசையின் உட்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.ஆனால், குடிசையில்தான் ஆள் ஒருவரும் இல்லை. குடிசை மகா சாமர்த்தியமாக அமைக்கப் பட்டிருந்தது. வெளிப் பார்வைக்கு ஒன்றுமில்லாத வெற்றுக் குடிசையைப் போலத்தான் தோன்றியது. வெளியே மேட்டுப் பாங்காகவும் குடிசையின் உட்புறக் கூடம் இருபதடி ஆழம் தரை மட்டத்திற்குக் கீழேயும் அமைந்திருந்தது. அங்கே தான் வெடி மருந்து தயார் செய்யும் சாமான்களும் சாதனங்களும் வைக்கப்பட்டிருந்தன. மிகக் கொஞ்சநேரத்திற்கு முன்பு யாரோ ஒருவர் சாப்பிட்டுக் கை கழுவியதற்குரிய அடையாளங்கள் குடிசை வாயிலில் இருந்தன.

“என்னப்பா, விஷயத்தைக் கண்டு பிடித்தாகிவிட்டது; ஆள் சிக்கவில்லையே?”

"அவசரப்படாதீர்கள் சார் ஆளும் சிக்கிவிடுவான்; கொஞ்சம் பொறுத்திருந்தால் பிடித்து விடலாம்.”

பொறுத்திருந்தும் பயனில்லை: பகல் இரண்டு மணிவரை ஒருவரும் வரவில்லை. "நீங்கள் இருவரும் இங்கேயே பதுங்கி இருங்கள். நான் ஊருக்குள் போய் உங்களுக்குச் சாப்பாடு அனுப்புகிறேன். வேங்கடகிருஷ்ணன் வந்தால், பிடித்துவிடுங்கள். ஊருக்குள் அவன் தங்கை ராஜம் வேலை செய்கிற வீட்டில் போய் மிரட்டிப் பார்க்கிறேன்.” என்று இரண்டு கான்ஸ்டபிள்களையும் அந்தக் குடிசையிலேயே இருக்கச் செய்துவிட்டு, நான் ஊருக்குள் திரும்பினேன்.

ராஜம் வேலை செய்து கொண்டிருந்த வீட்டுக்கு உரியவரிடம் நான் சி.ஐ.டி என்று கூறியதுமே, வெவெலத்துப் போய்விட்டார் அவர்.

"என்ன் வேண்டும்? எது வேண்டும்? நீங்கள் இங்கே வந்த காரியம் என்ன?” என்று பதறினார் அவர்.

"உங்கள் வீட்டில் கடம்பூர் வேங்கடகிருஷ்ணனின் தங்கை- ராஜம் என்ற பெண் வேலை செய்து வருகிறாளா? இல்லையா?”

"ஆமாம்! அவளுக்கு என்ன?”

"அவள் அண்ணன் வேங்கடகிருஷ்ணன் தேசீயப் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து, சர்க்காருக்கு எதிராக வேலை செய்கிறான். அதைப் பற்றிய சில செய்திகளை விசாரித்துப் போக வந்திருக்கிறேன் நான்” என்றேன்.

வீட்டுக்காரர் பதறிப் போய், ராஜத்தை என் முன் கொணர்ந்து நிறுத்தினார்.

வேட்டைக்காரனுக்கு முன்னால் மிரண்டு நிற்கின்ற பெண்மானைப் போலக் குனிந்த தலை நிமிராமல் கால் கட்டை விரலால் தரையைக் கீறிக்கொண்டே என் முன் வந்து நின்றாள் அவள் வீட்டுக்குரிய எஜமானர் அவளை எரித்து விடுவது போலப் பார்த்துக்கொண்டு அருகில் நின்றார். என் மனத்தில் கடமையை மீறி ஒரு குறுகுறுப்பு. அந்த வாளிப்பான கட்டழகு, சுழலும் விழிகள், எச்சில் விழுங்கினால் கழுத்திலே தெரியும் என்று சொல்லத்தக்க கண்ணாடிப்பொன் நிறம்: ராஜம் கன்னியாகுமாரி அம்மனின் தெய்வச் சிலைபோல் என் முன் நடுங்கிக்கொண்டு நின்றாள்.

“என்ன சார்? நீங்கள் விசாரிக்க வந்ததை விசாரியுங்கள். உங்களுக்காக நானும் காத்துக் கொண்டு நிற்கிறேன். கழுதையை இன்றோடு தொலைத்துத் தலைமுழுக வேண்டியதுதான். கெளரவமான வீட்டில் வேலைக்காரியைத் தேடிப் போலீஸ்காரன் வந்தால், வீடு உருப்பட்டாப் போலத்தான்” வீட்டுக்காரர் இரைந்தார் . நான் அந்த அழகைப் பருகும் பிரமையிலிருந்து விடுபட்டு, விசாரணையைத் தொடங்கினேன்.

“உங்கள் தமையன் வேங்கடகிருஷ்ணன் இப்போது எங்கே இருக்கிறார்?” “எனக்குத் தெரியாது.”

“பொய் சொன்னால் போலீஸில் சும்மா விடமாட்டோம். தமையனின் இருப்பிடம் உங்களுக்குத் தெரியும். இன்று காலையில்கூட நீங்கள் உங்கள் அண்ணனைச் சந்தித்திருக்கிறீர்கள். வேண்டுமென்றே எங்களிடம் தெரிந்ததை மறைக்கக்கூடாது.”

"நிஜமாகவே எனக்கு ஒன்றும் தெரியாது.” அந்தப் பெண் கன்னங்கள் ஜிவ்வென்று சிவக்க விசித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அழுகை பீறிக்கொண்டு வந்தது.ஒரு பக்கம் கோபம், இன்னொரு பக்கம் அனுதாபம் இரண்டுடிற்குமிடையில் தவித்தேன் நான். அவள் அழுதுகொண்டே முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு உள்ளே ஒடிவிட்டாள்.

"சார் எதற்கும் இவளை இன்னும் சில நாட்கள் உங்கள் வீட்டிலேயே வேலைக்கு வைத்துக் கொண்டிருங்கள். கோபத்தின் பேரில் அவசரப்பட்டுத் துரத்திவிடாதீர்கள். அப்படிச் செய்து விட்டீர்களானால், ஒரு நல்ல உளவாளி தப்பிவிட நேரும். இன்னொரு நாள் சாவகாசமாக வந்து விசாரிக்கிறேன்” என்று வீட்டுக்காரைத் தனியே அழைத்து எச்சரித்துவிட்டுத் திரும்பினேன்.

3

அங்கிருந்து கங்கைகொண்டான் ரூரல் ஸ்டேஷனுக்குப் போய் வேறொரு கான்ஸ்டபிள் மூலம் கருவேலங்காட்டிலிருந்தவர்களுக்கு எடுப்புச் சாப்பாடு அனுப்பினேன். நானும் குளித்துவிட்டுச் சாப்பிட்டேன்.

குட்டி உறக்கம் ஒன்று போட்டுவிட்டு, நாலரை மணிக்கு எழுந்திருந்தேன். நான் எழுந்திருந்தபோது ஸ்டேஷன் வாசலில் ஒரே கூச்சலும் கூப்பாடுமாக இருந்தது.

“வந்தே மாதரம்”

“தியாகி வேங்கடகிருஷ்ணன் வாழ்க’

"அமரன் வேங்கடகிருஷ்ணனுக்கு ஜே!”

ஒன்றும் புரியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டே, தூக்கக் கலக்கத்தோடு ஸ்டேஷன் வாசலுக்குச் சென்றேன். வாசலில் கதர்க் குல்லாய்க்காரர், சாதாரண ஜனங்களுமாக 'ஜே ஜே' என்று இமைக்க முடியாமல் கூடியிருந்தது கூட்டம். நடுவில் ஒரு இரட்டை மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது.

சாப்பாடு கொண்டு போனவனைச் சேர்த்து மூன்று கான்ஸ்டபிள்களுமாக வண்டியைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

“என்னப்பா இது? என்ன சமாச்சாரம்? இதென்ன வண்டி? இவர்கள் ஏன் கூச்சல் போடுகிறார்கள்?”

ஒரு கான்ஸ்டபிள் என்னருகே வந்து, நடந்ததை எனக்குக் கூறினான். அவன் மணியாச்சியிலிருந்து என்னுடன் வந்தவன்.

“சார், நீங்கள் அங்கிருந்து வந்தபின், கொஞ்சநேரம் நாங்கள் இரண்டு பேரும் அந்தக் குடிசையிலே உட்கார்ந்திருந்தோம். ஒருவரும் வரவில்லை. எனக்குத் தண்ணிர்த் தாகம் பொறுக்க முடியவில்லை.என்னோடு மஃப்டி'யில் இருந்த கங்கைகொண்டான் ஆளிடம் 'ஏனப்பா பக்கத்திலே கிணறு ஏதாவது இருக்கா என்று கேட்டேன். இதே ஒற்றையடிப் பாதையிலே தெற்கே கால்பர்லாங் போனால் ஒரு இறங்கு கிணறு இருக்கு. போய்க் குடிச்சிட்டு வா’ என்றான் அவன். நான் போனேன். கிணற்றடியிலே ஒரு மனோரஞ்சிதச் செடி புதராகப் படர்ந்து கிடந்தது. அந்தப் புதரின் கீழே ஒரு ஆள் குப்புற விழுந்து கிடந்தான். நான் அருகில் போய் உடம்பைப் புரட்டி மூக்கருகில் கைவைத்துப் பார்த்தேன். மூச்சு இல்லை. உடம்பு நீலம் பாரித்திருந்தது. உடனே தண்ணிர்கூடக் குடிக்காமல் ஓடிவந்து கங்கை கொண்டான்காரனைக் கூட்டிச் சென்று காண்பித்தேன்.

“அடேடே இவன்தானப்பா நாம் தேடிக்கொண்டிருக்கும் வேங்கடகிருஷ்ணன்! இவனை நாம் தேடிக்கொண்டிருக்க, இவன் யமனைத் தேடிக்கொண்டு போய்விட்டானே? சாப்பிட்டுவிட்டுத் தண்ணிர் குடிக்க வந்திருக்கிறான். ஏதோ பாம்பு போட்டுத் தள்ளிவிட்டது.இதோ உடம்பில் விஷம் ஏறி, நீலம் பரவியிருப்பதைப் பார் என்று ஆச்சரியப் பட்டுக் கூவினான். இந்தச் சமயத்தில் நீங்கள் எடுப்புச் சாப்பாடு கொடுத்தனுப்பிய ஆளும் வந்து சேர்ந்தான். மூவருமாகச் சேர்ந்து குமிழங்குளத்திலிருந்து ஒரு வாடகைவண்டி பேசிச் சவத்தை இங்கு கொண்டு வந்துவிட்டோம். வர வழியிலே சமாச்சாரம் பரவி, இந்தக் காந்திக் குல்லாய்க்காரர்களும் கூப்பாடு போட்டுக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டார்கள்.”

"அந்தக் குடிசையிலிருந்த வெடிமருந்துச் சமான்களை என்ன செய்தீர்கள்?"

“அவற்றையும் வண்டியிலேயே கொண்டு வந்துவிட்டோம் சார்”

“ஆல் ரைட்! நீ போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வா. ஏய்! 'கங்கை கொண்டான்!' இந்தக் கூட்டத்தை எல்லாம் கலைத்து அனுப்பு. உனக்கு அந்தப் பெண் வேங்கட கிருஷ்ணனின் தங்கை ராஜம் வேலை செய்கிற வீடு தெரியுமில்லையா? நீ போய் அவளை இங்கே ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு வா” என்று பரபரப்போடு உத்தரவிட்டேன்.

டாக்டர் வந்தார். பரிசோதித்துப் பார்த்தார். 'விஷப்பாம்பு கடித்து மரணம் - என்று மெடிக்கல் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

ராஜத்தைத் தேடிப் போனவன் வெறுங்கையோடு திரும்பி வந்தான். “சார்! மத்தியானம் நீங்க வந்ததுமே அந்தப் பெண்ணை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்களாம், அவள் ரயிலுக்குப் போய்விட்டாளாம். இனிமேல் இந்த ஊர் எல்லைக்குள் அகப்படமாட்டாள் என்று தெரிகிறது சார்” என்றான் வந்தவன்.

‘ரயில்வே ஸ்டேஷனில் இருந்தாலும் இருப்பாள். அங்கேயும் பார்த்துவிட்டு வந்துவிடு!” - அவனை ஸ்டேஷனுக்குத் துரத்தினேன். பிரேதத்தை யாரிடம் ஒப்புவிப்பது? அவள் அகப்படவில்லை என்றால், இலாகா செலவில் அல்லவா தகனம் செய்ய வேண்டியிருக்கும்? என்ன செய்வதென்று புரியாமல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனவனை எதிர் பார்த்துக் காத்திருந்தேன்.

“சார்! அவள் நாலுமணி வண்டியிலேயே போய்விட்டாளாம். ஸ்டேஷன் மாஸ்டரிடம் அடையாளங்களைச் சொல்லி விசாரித்ததில், அவள் மணியாச்சிக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு போனதாகத் தெரிகிறது” என்றான் திரும்பி வந்த ஆள். என் கவனத்திலிருந்து அந்தப் பெண் தப்பிவிட்டதை அறிந்தபோது, இரண்டு விதமான கவலை எனக்கு ஏற்பட்டது. செத்துப்போன தமையனைப் பற்றித் தெரியாமல், அவன் முகம் காணவும் கொடுத்து வைக்காமல் போய் விட்டாளே என்பது ஒன்று. இன்னொன்று.? ஊஹும்.... அது என் கவலை! அதை இப்போது சொல்ல மாட்டேன்!

வேறு ஒருவழியும் தோன்றாமற் போகவே இலாகாவின் பொறுப்பிலேயே கங்கை கொண்டான் மயானத்தில் வேங்கடகிருஷ்ணனின் அந்திமக்கிரியை நடைபெற்றது. சுதேசிப் போராட்டத்தைச் சேர்ந்த இரண்டொருவர் மயானத்திற்கு வந்து மாலைகள் போட அனுமதிகோரினர்.அதை நான் மறுத்து விட்டேன்.கடமை வேறு அனுதாபம் வேறு. நான் என்ன செய்வது? இது நடந்த பின்பும் நாலைந்து நாட்கள் நானோ என்னோடு மணியாச்சியிலிருந்து வந்திருந்த கான்ஸ்டபிளோ, ஊர் திரும்பவில்லை. இறந்து போன வேங்கடகிருஷ்ணனைத் தவிர அந்த வெடிமருந்துத் தயாரிப்பு வேலையில் சம்பந்தப்பட்டிருந்த வேறு சில பயங்கரவாதிகளைத் தேடி அலைந்தோம். தலைமறைவாக இருந்த அவர்களைக் கண்டுபிடிக்கக் கோவில்பட்டி, கடம்பூர், ஏழாயிரம் பண்ணை என்று ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தோம்.

அரிய முயற்சி செய்து ஒரு வழியாகப் பெரும்பான்மையான ஆட்களைக் கைது செய்துவிட்டோம். ஒரு வாரம் கழித்து மணியாச்சிக்கு வந்தேன். மேலதிகாரியைச் சந்தித்து எல்லா விவரங்களையும் கூறினேன்.அவர் என் சாதனையைப் பாராட்டினார். கூடிய சீக்கிரமே பதவி உயர்வுக்குச் சிபார்சு செய்வதாகவும் கூறினார

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். இரவு பத்து மணிக்கு மேலாகியிருந்தது. என் வரவு அம்மாவுக்குத் தெரியாது. வீட்டில் சாப்பாடு வைத்திருக்கிறார்களோ இல்லையோ? ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் போய்விடலாம் என்றெண்ணினேன். சினிமாக் கொட்டகை வாசலிலிருந்த ஒரு ஹோட்டலில் சாப்பாடு முடிந்தது. வீட்டை நோக்கி நடந்தேன்.

கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அம்மா வந்து கதவைத் திறந்தாள்.

“எப்படா வந்தே? சாப்பிட்டாச்சா?”

"சாயங்காலம் வந்தேன். சாப்பாடு ஹோட்டலில் ஆயிற்று.” பதில் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தவன், எதிரே பார்த்ததும் அப்படியே திகைத்துப் போய் நின்று விட்டேன்.

கூடத்து விளக்கொளியின் மங்கலில், வஞ்சிக்கொடிதுவண்டு கிடப்பதுபோல ஒரு இளம் பெண் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஒருக்களித்துப் படுத்திருந்ததனால் முகம் தெரியவில்லை.

"அம்மா.”

“என்னடா?”

“இது யார்? இங்கே படுத்துக் கொண்டிருக்கிறது:”

“அதுவா? நீ உன் படுக்கையை எடுத்திண்டு வாசல் திண்ணைக்கு வா! எல்லா விவரமும் சொல்கிறேன்.”

நான் மெதுவாக நடந்துபோய், என் படுக்கையை எடுத்துக்கொண்டு அம்மா பின்தொடர, வாசல் திண்ணைக்குப் போனேன்.

“யாரம்மா அது?”

“படுக்கையை விரிச்சுக்கோ. சொல்றேன்.” யாரோ அனாதைப் பொண்ணு. பெரிய குடும்பத்திலே பிறந்து நொடிச்சுப் போனது.இன்னும் கன்னி கழியலே.அண்ணா ஒருத்தன் இருக்கானாம். ஏதோ காந்திக் கட்சியிலே சேர்ந்து ஜெயிலுக்கெல்லாம் போனவனாம்! இவளுக்கு அவனாலே ஒரு உதவியும் கிடையாதாம். நாலு வீட்டில் காரியம் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்கிறதாம் இந்தப் பெண். தாழையூற்றிலே ஒரு பணக்காரர் வீட்டிலே வேலை செஞ்சு சாப்பிட்டிண்டிருந்ததாம். அவா, திடீர்னு வேண்டாம்னு அனுப்பிட்டாளாம். ஒரு வாரத்துக்கு முன்னே ஒரு நாள் ராத்திரி இங்கே வந்து கேட்டுது. எனக்குப் பரிதாபமா இருந்தது. வீட்டுக்கு ஒத்தாசையாக இருக்கட்டும் என்று இருக்கச் சொல்லிட்டேன். தங்கமான குணம் சொன்ன காரியத்தை.உடனே செய்யறது. வயசு காலம். எனக்கும் தள்ளலை. இருந்திட்டுப் போகட்டும். சம்பளமா, ஒண்ணா? சோறும் துணியும்தானே? ஒரு கன்னிப் பெண்ணைக் காப்பாத்தின புண்ணியமாக இருக்கட்டுமே!.”

அம்மா மூச்சு விடவில்லை. பேசிக்கொண்டே போனாள்.

“பேர் என்னம்மா?”

"ஏன்? ராஜம்’னு சொன்னா”

உள் மனம் குறுகுறுத்தது. வெளி மனம் பரபரத்தது. எண்ணங்கள் சிறகடித்துப் பறந்தன.

“என்னடா? பேசாமே உட்கார்ந்துட்டே? உனக்கு இஷ்டமில்லேன்னாப் போகச் சொல்லிடறேன்.”

“இஷ்டமில்லாமே என்னம்மா? உனக்கும் ஒத்தாசைக்கு ஒரு ஆள் வேண்டியதுதானே?”

“சரி அலைஞ்சிட்டு வந்திருக்கே தூங்கு நான் உள்ளே போறேன்.”

அம்மா உள்ளே போனாள்! கதவு தாழிடும் ஒசை! கண்களை மூடினேன். உறக்கம் வரவில்லை. நினைவுகள்! நினைவுகள்! இனிய நினைவுகள். கண்களை மூடி நினைவு மயக்கத்தில் கள்ளத் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தேன். .

மணி பன்னிரண்டுக்குமேல் இருக்கும். உள் கதவை யாரோ மெல்லத் திறக்கும் ஒசை அரைகுறை உறக்கத்தில் இருந்த என் காதுகளில் விழுந்தது. நான் விழித்துக்கொண்டேன். எழுந்திருக்காமலே கண்களை முடியிருப்பவன்போல் சாய்ந்த நோக்கில் கவனித்தேன்.

கதவு ஒசையின்றி மெல்லத் திறக்கப்பட்டது. அந்தப் பெண் வெளியே வந்தாள். அவள் கையில் துணி மூட்டை போல ஏதோ ஒன்று இருந்தது. விஷயம் எனக்கு அரைகுறையாகப் புரிந்தது.

வாசற் கதவை மெல்லச் சாத்தினாள். படியிறங்கித் தெருவில் விறுவிறு என் நடந்தாள். என் பக்கமாக நாலைந்து விநாடிகள் தயங்கியது அவள் பார்வை. நான் உறங்குவதாக நடித்தேன்.மீண்டும் நடந்தாள். நடையில் தப்பி ஓடுகிற கைதியின் வேகம். அவள் நோக்கம் இப்போது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. "ஏய்! நில்.” திண்ணையிலிருந்து ஒரே தாவாகத் தெருவில் தாவினேன். உள்ளே அம்மா நிம்மதியாகக் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தாள். நான் வருவதைக் கண்டதும் அவளுடைய நடை சாதாரண ஒட்டமாக மாறியது. நானா விடுவேன்? நாலே எட்டில் அவள் தலைச் சடையைப் பிடித்துவிட்டேன்.

“எங்கே போகிறாய்? இந்த நள்ளிரவில் சொல்லாமல் கொள்ளாமல்?”

“இது உங்கள் வீடு என்று எனக்குத் தெரியாது.” எங்கோ பார்த்துக் கொண்டு பேசினாள். வார்த்தைகள் தயங்கித் தயங்கி வெளிவந்தன.

“எப்போது தெரிந்து கொண்டாய்”?.

“நான் துங்குவதாக நினைத்துக்கொண்டு, நீங்களும் அம்மாவும் வாசல் திண்ணையில் பேசிக் கொண்டிருந்த போது.”

“இது என் வீடு என்று தெரிந்தால் உனக்கென்ன? நீ ஏன் ஒடவேண்டும்?” .

“நீங்கள் போலீஸ்காரர். எனக்குப் பயமாயிருக்கிறது.”

“போலீஸ்காரர் என்றால் கடித்து விழுங்கிவிடுவேனா உன்னை?”

-----------

"அது சரி: தாழையூற்றிலிருந்து ஏன் ஓடி வந்தாய்”?

“நான் ஒடி வரவில்லை. நீ இனிமேல் இருக்கக் கூடாது; உடனே ஏதாவது வெளியூருக்குப் போய்விடு' என்று அந்த வீட்டுக்காரர் துரத்திவிட்டார்.”

“இப்போதாவது சொல்! நீ வேங்கடகிருஷ்ணன் தங்கை தானே? அவன் எங்கே இருக்கிறான் சொல்?”

அதே பழைய பதில், “எனக்குத் தெரியாது.”

இந்தப் பதிலிலிருந்து வேங்கடகிருஷ்ணன் பாம்பு கடித்து இறந்தது அவளுக்கு இதுவரை தெரியாதென்பதை அறிந்து கொண்டேன்.

“ராஜம் அதிர்ஷ்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்; அசட்டுத்தனமாக இங்கிருந்து ஓடாதே. வா என்னோடு வா. எங்கள் வீட்டில் அம்மாவுக்குப் பின் விளக்கேற்று”

நான் அவள் கையைப் பிடித்தேன். கண்களில் புத்தொளி பரவ அவள் என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.அப்படியே அழைத்துக்கொண்டு போய் வீட்டுக்குள் அனுப்பிக் கதவை வெளிப்புறமும் தாழ்ப்பாள் இட்டுக் கொண்டேன். சில மாதங்கள் வரை வேங்கடகிருஷ்ணன் மறைவை அவளிடம் கூறுவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அது நான் என் சுயநலத்துக்காகச் செய்து கொண்டே சங்கல்பம்.

மறு நாள் பொழுது விடிந்தது. அம்மாவிடம் என் கருத்தைக் கூறினேன். “நன்றாயிருக்குடா இது? என்ன குலமோ, கோத்திரமோ? ஆள் பார்க்க லட்சணமாக இருந்தால் மட்டும் போதுமா?’'-

“எல்லாம் நம்ம குலந்தான். இந்த ராஜம் இல்லாட்டா இந்தப் பிறவியிலே வேறே கல்யாணம் எனக்கு இல்லை. நான் சொன்னா சொன்னதுதான்.”

“சரி. செஞ்சுக்கோ.!

தை மாதமே திருச்செந்துர் முருகன் சன்னதியில் என் உள்ளங் கவர்ந்தவளை உரியவளாக்கிக் கொண்டேன்.ஆடிமாதம் பூச்சூட்டலின் போது வேங்கடகிருஷ்ணன் இறந்து போன உண்மையைச் சொன்னேன். ராஜம் மூன்று நாள் சாப்பிடவில்லை. என்னுடன் பேசவில்லை. சதா மூலையில் உட்கார்ந்து மெளனமாகக் கண்ணிiர் வடித்துக்கொண்டே இருந்தாள். கடைசியில் காலம்தான் அவள் துயரத்துக்கு மருந்தாயிற்று. அதை மறக்கத் தொடங்கினாள். எதையெல்லாம் மறக்கின்றோமோ, அதையெல்லாம் சீக்கிரமே மீண்டும் நினைக்க நேருவதுதான் மறதியிலுள்ள ஒரே ஒரு தொல்லை!

4

'‘ராஜம்! தெரியாமல் அந்த வார்த்தை வந்துவிட்டதடி புறப்படு; சினிமாவுக்குப் போகலாம்.”

“இல்லை! இன்றைக்கு வேண்டாம். இன்னொரு நாள் பார்க்கலாம்”.

"ஏன்! இன்றைக்கே போக வேண்டுமென்று நீதானே பிடிவாதம் செய்தாய். இப்போது நீயே.?”

“வர முடியாதென்றால் வர முடியாது.”

எனக்கு அவள் ஒரு புதிர்.அவள் என்னுடையவளாகிய அந்தப் பழைய நிகழ்ச்சியை நினைவிலிருந்து புரட்டும்போதெல்லாம் ஆயிரமாயிரம் சினிமாப் பார்த்து முடிந்தது போலிருந்தது.

(1961-க்கு முன்)