நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/தகுதியும் தனி மனிதனும்

43. தகுதியும் தனி மனிதனும்

கல் விளக்கின் எண்ணெய் வறண்டு போனது. ஏட்டுச் சுவடிகளை மடித்துக் குடலையில் போட்டு விட்டுப் படுக்கையை விரித்தார் முத்துமாரிக் கவிராயர். குறிஞ்சிப்பாடி ஊர் முழுவதும் அடங்கிப் போயிருந்தது. நடுச்சாமம் வரை கண் விழித்து எழுதியும் அந்தப் பிள்ளைத் தமிழில் இருபத்தேழு பாடல்களே முடிந்திருந்தன. கையில் நரம்புகள் யாவும் ரத்தம் கட்டிப் போய் ஒரே வலி. விளக்கு, கரண்டு போய்த் திரியும் எரிந்த பின், அணைந்து விட்டது. எரிந்து போன திரியிலிருந்து கிளம்பிய சுடர் நாற்றம் புகையாகப் பரவி மூக்கை வதைத்தது. கிழிந்து அழுக்கேறிப் போயிருந்த அந்தக் கோரைப் பாய்தான் அவருக்குச் சங்கப் பலகையைப் போல உபயோகப்பட்டு வந்தது. தலைக்கு எண்ணெயேறிப் பிதிர்த்துப் போயிருந்த ஒரு தலையணை. இவைதாம் முத்துமாரிக் கவிராயரின் படுக்கை

நாகரிகம் முற்றிக் காகிதம், பேனா வந்த காலமாக இருந்தும், ஏட்டிலேயே எழுதி எழுதிப் பழகியிருந்த கவிராயர், அந்தப் பழக்கத்தை விட்டு விடாமல் கைக் கொண்டிருந்தார். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கவிராயர் குடும்பம் என்றால் அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். முத்துமாரிக் கவிராயர் காலத்தில்தான் முதல் முதலாக வறுமையின் பிடியில் அவர் குடும்பம் சிக்கியது. ஜமீன்தார்களையும், குறுநில மன்னர்களையும் அணுகி வாழ்ந்த அவருடைய முன்னோர் வாழ்க்கைத் தேவைகளுக்காக ஏங்கி வறுமையுற்றதாகச் சொப்பனத்தில் கூடக் கண்டது இல்லை. செல்வக் கொழிப்புடன் வாழ்ந்தார்கள். புலமைச் செருக்கோடு பாடித் திரிந்து புகழ் பரப்பினார்கள். அவர்கள் காலம் இன்றைக்குக் கனவாகி விட்டது: குடும்பக் கெளரவத்தை எடுத்துச் சொல்லி நான்கு பேர் சிபாரிசு செய்ததன் பேரில் ஐம்பத்தைந்தாவது வயது வரை ஜில்லா போர்டு பள்ளிக்கூடமொன்று முப்பது ரூபாய் சம்பளத்தில் அவருடைய தமிழ்ப் பணியை ஏற்றுக் கொண்டிருந்தது. அதிலிருந்து ரிட்டையராகி மூன்றரை வருடங்கள் ஆகி விட்டன. பரம்பரைப் புலமையும் நல்ல கவி சாதுர்யமும் உள்ள அவரை அதன் பிறகு எவரும் நாடுவாரில்லை. மூன்று குழி மான்னிய நிலம் இருந்தது. இந்த வருவாயைக் கொண்டு காலம் தள்ளி வந்தார்.அங்கும் இங்குமாக எப்போதாவது சிலர் பாட அழைப்பார்கள். அதில் ஏதாவது சன்மானம் கிடைக்கும். மற்ற நாட்களில் அவர் உண்டு, அவருடைய ஏடுகளும் எழுத்தாணியும் உண்டு என்று இருப்பார். அரை நொடியையும் வீணாகக் கழிக்க மாட்டார். புதிது புதிதாகப் பிரபந்தங்களை இயற்றுவார். தாமே படித்து மகிழ்வார். எப்போதாவது உணர்வு கட்டுக்கடங்காத போது தம் மனைவிக்கும் படித்துக் காட்டுவார். அந்த அம்மாளுக்கு ரசிக்கத் தெரியுமோ, தெரியாதோ மண்டையை ஆட்டிக் கொண்டிருப்பாள் .குழந்தை குட்டிகள் இல்லாத மலட்டு ஜன்மமாக வாழ்வைக் கழித்து விட்டோமே என்பது அவர் மனைவிக்கு நீங்காத மனக்குறையாக இருந்தது. கவிராயர் இதைப்பற்றி கவலைப்படுவதே கிடையாது. சில சமயங்களில், ‘இன்றைய நாகரிக உலகில் ஆதரிப்பாரற்றுப் போய் விட்டபோது வீணாக இந்தக் குறிஞ்சிப் பாடித் கவிராயர் பரம்பரை தழைத்துத் தான் என்ன செய்யப்போகிறது?’ என்று கூட அவருக்குத் தோன்றும் மான அவமானங்களுக்கு ஆளாகி, அல்லாடாமல் நம்முடைய காலம் பரம்பரைக் கெளரவத்திற்கு இழுக்கின்றி ஒருவாறு ஓடிவிட்டது. இனியும் இந்தப் பரம்பரை வளர்ந்து தான் என்ன செய்யப்போகிறது? ஒரு வேளை முடித் துணிக்கும் நாழி யரிசிக்கும் பிச்சை யெடுக்கும் பரம்பரையாக ஆனாலும் ஆகலாம்!. நல்லவேளை! இந்தப் பரம்பரை இதோடு ஒழிந்து போகட்டும் என்று தம்மை மீறிய துக்கத்தோடு சிலபோது மனதிற்குள் அலுத்துக் கொள்வார். தனி மனிதன், தகுதி, திறமை, பரம்பரை, இவைகளைக் கொண்டு வாழக்கூடியதாக எதிர்காலம் இருக்காது என்பது அவருக்குத் தெரிந்தது. ஏன்? அவர் காலத்தில் அவரே அந்த அனுபவத்தை அடைந்து விட்டாரே? எதிர்காலம் அதற்கு அப்பனாகத்தானே இருக்க வேண்டும்?

வாசலில் பன்னீர்மரம், ஆடி மாதத்துக் காற்றில் சாய்ந்து விடும்போல் ஆடிக்கொண்டிருந்தது.மணி இரவு இரண்டரை ஆகியிருக்கும்.முத்துமாரிக் கவிராயர் படுத்தவர் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார். பாழும் இருமல் அவரை ‘உலுக்கு உலுக்'கென்று உலுக்கியது. படுத்துக் கொண்டே இருமுவது அவருக்குப் பெரிய வேதனையாக இருந்தது. எழுந்து உட்கார்ந்து கொண்டார். உள்ளே கூடத்தில் அவர் மனைவி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். இந்த உயிர் வாதனைக்கு ஏதாவது வைத்தியம் செய்துகொள்ளலாம் என்றால் காலத்தை ஒட்டுவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும் போது வைத்தியம் செய்து கொள்ள அவரிடம் ஏது பணம்.? இப்போது அவருக்குச் சோமசுந்தரத்தின் நினைவு வந்தது. காலையில் அவன் தம்மைச் சந்தித்துப் பேசியபோது கூறியதெல்லாம் நினைவிற்கு வந்தன. 'அவன் சொன்னபடி நடந்தால் ஒரு வேளை இந்த நோய்க்கு ஏதாவது மருந்து சாப்பிடலாம்' என்று ஆசைப்பட்டது அவர் மனம்.சோமசுந்தரம் குறிஞ்சிப்பாடிக் கிராமக்கணக்கர் மகன். பட்டணத்தில் ஏதோ நல்ல வேலையில் இருந்தான். கவிராயரிடம் அவனுக்குப் பயபக்தி உண்டு. ஊருக்கு வந்தால் அவரைப் பார்த்து அளவளாவாமல் போகமாட்டான். கவிராயருக்கும் அந்தப் பையன்மேல் அலாதியான பற்று உண்டு. ஊருக்கு அப்போது வந்திருந்த அவன், அன்று காலை அவரைப் பார்க்க வந்திருந்தபொழுது ஒர் நல்ல செய்தியை அவருக்குச் சொன்னான். சென்னையில் பழைய ஏட்டுப் பிரதிகளைச் சேகரித்து வெளியிடும் ஸ்தாபனம் ஒன்றிருப்பதாகவும் கவிராயர், ஏற்கெனவே இயற்றி வைத்திருக்கும் சுவடிகளும் கைவசமுள்ள வேறு சுவடிகளும் அந்த ஸ்தாபனத்தில் நன்றாக விலை போகும் என்றும் சோமசுந்தரம் கூறியிருந்தான். கவிராயருக்கு ஆசை தட்டியது. ஒரு புறம் தாங்க முடியாத மனத் துயரமும் கலந்திருந்தது. அந்த ஆசையில், “கருத்தையும் கற்பனையையும் உருக்கிப் படைத்திருந்த விலையில்லாத கவிதை மாணிக்கங்களைப் பத்திர அடமானம் போல விலைக்கு விற்பதா? குடும்பப் பெருமைக்கே மாசு அல்லவா அது? ஆனால். ஊர் பேர் எழுதாமல் ஏடுகளில் வெறும் பிரபந்தங்களைத்தானே எழுதியிருக்கிறோம். அதனால் மரபுக்குக் கேவலம் ஏற்படாது. மனதிற்குத்தான் இது பெரிய வஞ்சகம் “சிராப்பள்ளிக் குறவஞ்சியும்","தெய்வநாயகியம்மை பிள்ளைத் தமிழும் போலக் கல்பகோடி காலம் தவமிருந்தாலும் எனக்குப் பின் எவனும் எழுத முடியுமா? ஆகா? எவ்வளவு அற்புதமான சந்தங்கள். பாடி முடித்ததும் “எனக்கா இவ்வளவு கவித்திறன்.” என்று என்மேலேயே நான் சந்தேகப்படும்படி இருந்தனவே அவைகள்? என் வாயால் நானே அவைகளைப் பாடிப் பலர் புகழ அரங்கேற்றம் செய்து பெருமை அடையாமல் பேவதற்குச் சென்ற பிறவியில் என்ன பெரும் பாவம் செய்தேனோ? "ஏடும் எழுத்தாணியும் எவருக்குமே இல்லாத திறமையுமிருந்தால் மட்டும்போதாது போலும்! அந்தத் தகுதிகளைப் பெற்ற தனி மனிதனைக் கைதூக்கி மேலே கொண்டு வந்து காலத்துக்கும் அது தொடர்ந்து வர வாழும் சமூகத்திற்கும் அறிமுகம் செய்ய ஒரு பாக்கியமும் வேண்டுமே?.” அந்தப் பாக்கியம் நமக்குக் கொடுத்து வைக்கவில்லை போலும். எழுத்தைப் பெயர் சொல்லாமல் “யாரோ முன்னர் எழுதியது போல நினைக்குமாறு விலைபேசி வாழவேண்டியிருக்கின்ற அந்தப்பாக்கியம் நம் தலையில் எழுதியிருக்கிறதானால் அது தானே நமக்குக் கிடைக்கும்?. ம்ம்ம்..” பலவிதமாக எண்ணி மனங்குமைந்து கொண்டிருந்தது அந்தக் கிழ ஜீவன். தூரத்தில் அவரைப் போலவே உறக்கம் வராததனாலோ என்னவோ, ஏதோ ஒரு சாமக்கோழி இரண்டு மூன்று முறை கூவிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றும் பன்னீர்ப் பூக்களின் கமகம வென்ற மணமும் பொழுது விடிய இன்னும் நான்கைந்து நாழிகைகளுக்கு மேல் இல்லை என்பதை அறிவுறுத்தின. இப்போதுதான் அவருக்குச் சற்று உறக்கம் வருவது போலிருந்தது.

மறு நாள் பொழுது விடிந்தது. கவிராயர் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்திற்கு எழுந்திருக்கவில்லை. விடிந்து வெகு நேரமானபின் எழுந்ததனால் குளித்து உண்ண நாழிகையாயிற்று. வெற்றிலைச் செல்லத்துடன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு திண்ணைக்கு வந்த அவரை அங்கே அமர்ந்துகொண்டிருந்த சோமசுந்தரம் புன்முறுவலுடன் எழுந்து வணங்கி வரவேற்றான்."அடேடே சோமுவா? வா! வா! நீ எப்பொழுது வந்தாய்?நான் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வந்தவன் உள்ளே வரக்கூடாது?..” என்று கூறிக்கொண்டே திண்ணையில் உட்கார்ந்தார் கவிராயர். சோமுவும் உட்கார்ந்து கொண்டான்.

"ஐயா! இன்று மாலை ஊருக்குப் புறப்படலாம் என்று இருக்கிறேன்” என்று அவரிடம் தான் வழக்கமாகப் பேசும் தமிழில் சோமு கூறினான்.

"அப்படியா? அப்புறம். இந்த ஏடுகளைப் பற்றி என்னவோ சொன்னாயே!?. இப்போ எதாவது செளகரியப்படுமா?"

"ஆமாம்! நானே கேட்கவேண்டுமென்று இருந்தேன் ஐயா! ஏதோ இருப்பதைக் கொடுங்கள். நான் அங்கே முயற்சி செய்து விரைவில் அச்சாகச் செய்கிறேன். நல்ல தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யலாம் ஐயா! சோமு பேசி நிறுத்தினான்.

முத்துமாரிக் கவிராயர் துணிந்துவிட்டார். உள்ளே எழுந்து சென்ற அவர் காழ்நாழிகைக்குப் பின் தெரிந்தெடுத்த சில சுவடிகளடங்கிய ஒரு சிறு மூட்டையுடன் வெளிப்பட்டார். சோமு அதைப் பெற்றுக்கொண்டான்.

"சோமு!” கவிராயரின் இந்தக் குரலில் அளவு கடந்த உருக்கம் தோய்ந்து வெளிப்பட்டது. "உப்பு புளி வியாபாரம் போல இந்த அமர காவியங்களைத் காசுக்காகக் கொடுக்க விரும்புகிறேன். இது 'என் பூர்வ ஜன்ம பாவம்!. ஏதோ இந்தக் குத்திருமல்நோக்காடு தீர ஏதாவது வைத்தியம் செய்து கொள்ளவேண்டும். அதற்காக இவைகளைப் பணயம் வைக்கிறேன் - அவ்வளவுதான் இதற்கு மேல் நான் உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது?” கண் விளிம்பில் நீர் திரள இவ்வாறு கூறினார் முத்துமாரிக் கவிராயர், சோமுவுக்கு அவர் வார்த்தைகள் என்னவோ செய்தன. அமைதியாக, 'ஆகட்டும் ஐயா! வேண்டியதை எவ்வளவு துரிதமாக முடியுமோ அவ்வளவு துரிதமாகச் செய்கிறேன். வருகிறேன் ஐயா! வணக்கம்’ என்று கூறி விடைபெற்றுக்கொண்டான். அவன் போன பின்பு உள்ளே திரும்பிய முத்துமாரிக் கவிராயருக்கு ஏதோ இழக்க முடியாத ஏன் இழக்கத்தகாத பொருள் கை நழுவிப் போவது போன்ற ஒருணர்ச்சி ஏற்பட்டது; ஆண்டாண்டுகளாக அகல் விளக்கு வெளிச்சத்தில் குளிரென்றும் பணியென்றும் பாராமல் கை ஒடிய அவர் எழுதிய கவிதா சிருஷ்டிகள் எங்கோ முன் பின் அறியாத இடத்திற்கு, விலைச் சரக்கைப் போலப் போகின்றன. பொள்ளுக்கொள்ளென்று இருமியவாறே கைவலிக்க அவர் பட்ட கஷ்டங்களை வீட்டு வாயில் திண்ணையும் எதிரே இருக்கும் பன்னீர்மரமும் வாயிருந்தால் சொல்லும், திண்ணையும் மரமும் அவை போன்ற இன்னும் எண்ணற்ற எத்தனையோ ஜடப்பொருள்களும் மற்றவர் துன்பங் கண்டு ஆறுதல் கூறும் சக்தியைப் பெற்றிருந்தால் பலர் தேறியிருப்பாரோ என்னவோ? ஆனால் தேறுதலும் ஆறுதலும் கூறிப் பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்யும் அந்த ஆற்றல் அதைச் செய்ய விரும்பாத அல்லது செய்ய முடியாத மனித சமூகத்தினிடம் அல்லவா இருக்கிறது? அப்படி இருக்கும்போது கவிராயரைப் போன்ற தகுதி பெற்ற தனிமனிதர்கள் எங்கே ஆறுதல் பெற்றுவிடமுடியும்?. ஆறுதலே, வெறும் கானல்நீர்தான் அவரைப் பொறுத்தவரையில்,

ஒன்றரை வருடம் கழிந்தது. சென்னையிலிருந்து ஏதாவது தகவல் தெரியும் என்று காத்திருந்து காத்திருந்து அலுத்து விட்டது கவிராயருக்கு. சுவடிகளை ஸ்தாபனத்தில் கொடுத்து அவருடைய விலாசத்தையும் சொல்லியிருப்பதாகப் போன ஆறு மாதம் கழித்துச் சோமசுந்தரம் கடிதம் போட்டிருந்தான். அவ்வப்போது ஸ்தாபனத் தலைவரைச் சந்தித்துத் துரிதப்படுத்துவதாகவும் கடிதம் எழுதி வந்தான். இங்கே நாளுக்கு நாள் துரும்பாக இளைத்து வந்தார் முத்துமாரிக் கவிராயர். இருமல் நோய் அவரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. அவர் படும் அவஸ்தையைக் காணக் சகிக்காமலோ என்னவோ சுமங்கலியாகவே போய்ச் சேர்ந்தாள் அவருடைய மனைவி, ஒண்டிக் கட்டையாகக் குறிஞ்சிப்பாடியில் இருக்கவே பிடிக்கவில்லை அவருக்கு அந்த நிலையில்தான் அன்று அவருக்கு ஒரு கடிதமும் புத்தகமும் தபாலில் வந்து சேர்ந்தன. ஆமாம்! பழஞ்சுவடி சேகரித்து வெளியிடும் ஸ்தாபனத் தலைவர்தான் எழுதியிருந்தார்.

...........

"அன்புடையீர்! நீங்கள் சேகரித்து அனுப்பிய பிரபந்தச் சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம். அவ்வளவும் நல்ல கவிதா சிருஷ்டிகள். மாதிரிப்புத்தகம் ஒன்று இதனுடன் அனுப்பியிருக்கிறோம். விரைவில் தங்களுக்குச் சேரவேண்டிய தொகையை நிர்ணயித்துச் 'செக்' மூலம் அனுப்புகிறோம்.

வணக்கம்”

கடிதத்திலிருந்த 'நீங்கள் சேகரித்து அனுப்பிய' என்ற வார்த்தைகள் அவருடைய நெஞ்சின் ஆழத்தில் அம்புகள் போலப் பாய்ந்தன. அந்தக் கடிதத்தையும் அதை எழுதியவரையும் கோபித்துக் கொண்டு என்ன பயன்? அவர் எந்த ஏட்டுச் சுவடியிலும் ஊர் பேர் எதுவுமே எழுதாமல், செய்யுளையும் பிரபந்தத்தின் பெயரையும் தானே எழுதியிருந்தார்.

சுற்றியிருந்த புத்தகத்தைப் பிரித்தார். சிராப் பள்ளிக் குறவஞ்சி முதல் அவர் அனுப்பியிருந்த அத்தனை பிரபந்தங்களும் நல்ல முறையில் அச்சிடப்பட்டிருந்தன. கொட்டையெழுத்துக்களில் முதல் இரண்டு மூன்று பக்கங்களில் காணப்பட்ட 'நூலாராய்ச்சி’ என்ற பகுதி அவர் கவனத்தை இழுத்தது. யாரோ ஒரு சர்வகலாசாலையில் முதன்மை வகிக்கும் நபராம். 'கேசவேசுவரனார் எம்.எ, எம்.லிட், பி.எச்டி' 'அவர்கள் கருணை கூர்ந்து எழுதியுதவிய ஆராய்ச்சியுரை என்று கீழே போட்டிருந்தது. என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்த அவர் திடுக்கிட்டார் அடுத்த கணம்.

“இந்நூல் தொகுதியில் அடங்கியுள்ள நிகரற்ற பிரபந்தங்களை இயற்றிய கவிஞர் திலகம் ஏறக்குறை மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவராக இருக்கவேண்டும். இதில் பயின்றுள்ள சில சொல் வழக்குகளையும் பிரயோகங்களையும் நோக்குமிடத்து இன்னும் முற்பட்ட காலத்தவராகக்கூட இவரைக் கருதலாம். சில கற்பனைகளையும் வருணனைகளையும் நுணுகிப் பார்க்குங்கால் 'கோலாகலக் கோவை' முதலிய பிரபந்தங்களை இயற்றிய குமரசேனக் கவிராயரும் இவரும் ஒருவரோ? என்று ஐயுற நேரிடுகிறது. நாட்டு வருணனை நகர வருணனைப் பகுதிகளில் செல்வத்தைப் பற்றி அபரிமிதமான கருத்துக்களைச் சொல்லுதல் கொண்டு சொந்த வாழ்க்கையில் இவரே ஒரு பெரிய செல்வந்தராக இருந்திருக்கலாம் என்று எண்ண முடிகிறது.” படித்துக் கொண்டே வந்தவர் மனவேதனையும் மறந்து கடகடவென்று வாய் விட்டுச்சிரித்தார், இந்த வாக்கியத்தைப்படித்தும் இன்னும் என்னென்னவோ வளைத்து எழுதியிருந்தார். ஆராய்ச்சியை படித்துப் பார்க்கப்போகிறேன் என்று அந்த அப்பாவி ஆராய்ச்சியாளர் எங்கே நினைத்திருக்கப் போகிறார்? கவிராயர் புத்தகத்தை அப்படியே ஒரு மூலையில் வீசி எறிந்தார். அவருக்கு அழுவதாசிரிப்பதா என்று தெரியவில்லை.

"நான் தான் ஐயா இவற்றை எழுதியவன்” என்று ஏட்டுச் சுவடிகளோடு அவரே பட்டினத்துக்குப் போயிருந்தால் ஒரு பயல் திரும்பிப் பார்த்திருக்க மாட்டான்.

'தகுதியோடு கூடிய தனிமனிதன் உயிரைக் கொடுத்துத்தான் தன் சிருஷ்டிகளுக்குப் பெருமை தேடிக் கொடுக்கவேண்டும் என்ற உண்மை அவருக்கு இப்போது நன்றாகப் புரிந்துவிட்டது. கலையும் திறமையும் கற்பனையும் அபாரமாக இருக்கும் தனிப்பட்ட நிகழ்காலக் கலைஞர்களைக் காட்டிலும் மண்ணோடு மண்ணாக மறைந்துபோன இறந்த காலக் கலைஞர்கள் எது செய்து வைத்திருந்தாலும் அதுதான் சமூகத்தின் பாராட்டிற்குரிய அந்தஸ்தைப் பெறத் தகுதி வாய்ந்தது போலும்.

இந்த நூலாராய்ச்சியை எழுதியுள்ள கேசவேசுவரனாரும் என்னைப் போல ஒரு தனிமனிதன்தான். தகுதி எப்படியோ? அறியமாட்டேன். பட்டமும் பதவியும் சூழ்நிலையும் தகுதியை உண்டாக்கியிருக்கின்றன. அவர் எது பேசினாலும் என்ன எழுதினாலும் இந்தச்சமூகத்திற்கு அமுதம்போல இருக்குமெனத்தெரிகிறது. தகுதியை மிகுதி செய்யும் சூழ்நிலையும் பிறவும் இல்லாதபோது என் போன்ற தனி மனிதனிடம் அது பிரகாசிக்க முடியாது? இது தெரிந்து ஆசை கேட்டுத் தொலைக்கிறதா என்ன? கொள்ளுக் கொள்ளென்று இருமியவாறே திண்ணைக்கு வருகிறார். அந்தப் பழம்பாயும் தலைக்கட்டையுமே தகுதியைக் கேட்காது அவரை ஆதரிக்கும் பொருள்கள். தலையை முழங்கையால் முட்டுக்கொடுத்துக் கொண்டே படுத்தார். குத்திக் குத்தி வெளிவந்த இருமல் அவரைப் படுக்கவிடவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டே இருமினார். காலையில் அலர்ந்த பன்னீர் மலர்களெல்லாம் தரையில் உதிர்ந்தன. அரை நாழிகையாக மூச்சைப் பிடித்துக் கொண்டு இருமினார். இடைவிடாமல் இருமினார். அதற்குப் பிறகு இருமல் ஒலி அங்கிருந்து எழவில்லை. பொட்டென்று அவர் தலை கீழே சாய்ந்துதலைகட்டையில் மோதியது. முத்து மாரிக் கவிராயர் தகுதியை உணரமுடியாத உலகிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். சாயங்காலம் யாரோ கவிராயர் வீட்டுப் பக்கம் தற்செயலாக வந்தவன் ஊருக்கு அறிவித்து நாலு பேரைக் கூட்டினான். உற்றார் உறவினரற்றவர்களுக்கு ஊரார் கூடி இடுகின்ற கோவிந்தாக் கொள்ளிதான் அவருக்கும் கிடைத்தது. நெஞ்சு வேகுமா? புண்பட்ட அந்த நெஞ்சு வேகும்படி செய்தது அள்ளி வைத்த நெருப்பு. அதற்குத் தகுதி வேண்டியதில்லையே.

“என்ன துரதிஷ்டம் பாருங்கள் உயிரோடிருக்கும்போது நாலு சருகு வெற்றிலைக்குத் திண்டாடினார் இந்த முத்து மாரிக்கவிராயர். நேற்று அவர் பிணமும் சுடுகாட்டில் வெந்து போயிற்று இன்று எவனோ சென்னையிலிருந்து அவருக்கு ஐநூறு ரூபாய்க்குச் செக் அனுப்பியிருக்கிறான்! ஏதோ ஏட்டுச் சுவடிகள் அனுப்பி வைத்திருந்தார் போலிருக்கிறது.” குறிஞ்சிப்பாடி போஸ்ட்மாஸ்டர் யாரிடமோ விசனப்பட்டுக்கொண்டே ரிஜிஸ்டர் கவரின் மேலிருந்த முத்துமாரிக் கவிராயரின் விலாசத்தைச் சிவப்பு மையினால் அடித்து ஆங்கிலத்தில் சில குறிப்புகள் எழுதி சுவடி சேகரிப்பு ஸ்தாபனத்துக்கே திருப்பி அனுப்பினார். வாழ்ந்தபோதும் அவருடைய தகுதி சிவப்பு மை அடி போலத்தான் அந்தக் கிராமத்து இருட்டடிப்பில் அமுங்கிக் கிடந்தது. இன்றும் அதே கதிதானே?
.