நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/தனி ஒருவனுக்கு
44. தனி ஒருவனுக்கு
நண்பர் பரபரப்பாக ஓடி வந்தார். ‘கேட்டீர்களா செய்தியை? அந்தப் பயல் முத்துக்காளைக்காக அன்று அவ்வளவு பரிந்து கொண்டு வந்தீர்களே? கடைசியில் அவன் பண்ணையார் வீட்டு வைக்கோல் படைப்பில் நெருப்பை வைத்து விட்டு ஒடியிருக்கிறான்.’
திருவடியா பிள்ளை வியர்க்க விறுவிறுக்க இந்தச் செய்தியை ஒடி வந்து சொன்ன போது, இரவு எட்டரை மணி. அப்போதுதான் இராச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வாசல் குறட்டில் வந்து உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலைப் பெட்டியை இன்னும் திறக்கக் கூடஇல்லை. அதற்குள் அவர் கொண்டு வந்த செய்தி, ஆளைத் தூக்கி வாரிப் போட்டது. திடுக்கிட்டேன்; அதிர்ச்சியடைந்தேன்.
‘யார்? நம்முடைய முத்துக்காளையா? எப்போது செய்தான்?’ நம்ப முடியாமல் சந்தேகத்தோடு, மறுபடியும் அவரைத் தூண்டிக் கேட்டேன்.
“உம்முடைய முத்துக்காளையேதான். பொழுது மயங்கி இருட்டியதோ இல்லையோ, சொக்கப்பனை கொளுத்துகிற மாதிரிக் கொளுத்திவிட்டுப் போய் விட்டான். இதோ பாரும் கிழக்கே நாற்பது வண்டி வைக்கோல் எரிகிற அநியாயத்தை.”
நான் குறட்டிலிருந்து இறங்கித் தெருவில் நின்று கொண்டு, கிழக்கே திரும்பிப் பார்த்தேன். கிருஷ்ண பட்சத்து அமாவாசை இருளில் கிழக்கே பண்ணையார் வீட்டுக் கொல்லையில் செக்கச் செவேலென்று சோதிப் பெரு வெள்ளமாய் வானம் வெளி வாங்கியிருந்தது. படைப்பு எரிவது நன்றாகத் தெரிந்தது. தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன.
‘இப்போது என்ன சொல்கிறீர்? உம்முடைய கருணைக்குப் பாத்திரமான அந்த மகானுபாவன் முத்துக்காளையின் கைங்கரியம்தான் இது!’ என்றார் திருவடியா பிள்ளையும், தெருவில் என்னருகே வந்து நின்று கொண்டு. எனக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. ஏழையாயிற்றே என்று இரக்கப்பட்டதற்குக் கை மேல் பலனா? நாளைக்குப் பண்ணையார் முகத்தில் எப்படி விழிக்கப் போறேன்? ஐயோ! இந்த வம்பில் நான் எதற்காக மாட்டிக் கொண்டேன்? முத்துக்காளையின் குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? இந்தத் தெருவிலுள்ள ஐம்பது வீட்டுக்காரர்களும் பேசாமல் இருந்தார்களே; அதைப்போல் நானும் பேசாமல் இருந்து தொலைந்திருக்கக் கூடாதா? முரட்டுப் பயல் என் பெயரைக் கெடுத்து விட்டுப் போய்விட்டானே?திருவடியா பிள்ளை வந்து கூறிய செய்தியைக் கேட்டுத் தவியாய்த் தவித்தது என் உள்ளம். முத்துக்காளை அப்படிச் செய்திருப்பான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்! இன்னும் - அதாவது இந்த விநாடி வரை நம்ப முடியவில்லை.
‘என்ன ஐயா; மலைத்துப் போய்த் தெருவிலேயே நின்று விட்டீர்? பண்ணையாரிடம் போய் ஆறுதலாக நாலைந்து வார்த்தைகள் சொல்லிவிட்டு வரவேண்டாமா? சமாசாரத்தைக் கேள்விப்பட்ட பிறகும், நீர் போகாமல் இருப்பது நன்றாயில்லை.”
"ஆமாம் முத்துக்காளை எங்கோ ஒடிப் போய் விட்டானென்கிறீர்களே. அவன் தீ வைத்துவிட்டு ஓடினதைக் கண்ணால் நேரில் பார்த்தவர்கள் யாராவது உண்டா?'
'யானை பார்க்க வெள்ளெளுத்தா? அந்தப்பயலைத் தவிர வேறு யாராவது இதைச் செய்திருக்க முடியுமா?'
"ஆள் அகப்பட்டு விட்டானா?
'பயல் அகப்படாமல் எங்கே போகிறான்? தேடிக் கொண்டு போயிருக்கிறார்கள்.'
‘சரி; அது போகிறது. படைப்பு எரிவதைப் பார்த்தவுடன் தண்ணீரைத் தூக்கி அணைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்தார்களோ, இல்லையோ?”
‘முழுவதும் எரிந்து சாம்பலாகப் போனாலும் சரி, போலீசார் வந்து பார்க்கிறவரை படைப்பில் ஒரு பொட்டுத் தண்ணீர் சிந்தக் கூடாதென்று பண்ணையார் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். அதனால் யாரும் எதுவும் செய்யவில்லை. நன்றாக அடியிலிருந்து நுனிவரை பற்றி எரிகிற படைப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.”
'அட பாவி மனிதா அவ்வளவு வைக்கோலும் வீணாக எரிந்து சாம்பலானால், அதனால் யாருக்கு என்ன ஆயிற்று?'
'அதென்னமோ? சும்மா எரியட்டும்! இந்த நாற்பது வண்டி வைக்கோல் மீந்ததனால் நான் குபேரனாகிவிடப் போவதில்லை என்று பண்ணையார் ஜம்பமாகச் சொல்லிவிட்டார். யாருக்கென்ன வந்தது; அவரே அப்படிச் சொல்லும் போது? என்று வாளியும் கயிறுமாகத் தீயை அணைக்க வந்த அக்கம்பக்கத்து ஆட்களும் திரும்பி விட்டார்கள்.
'இதோ வந்து விட்டேன். வெற்றிலைப்பெட்டி திண்ணையில் கிடக்கிறது. உள்ளே எடுத்து வைத்துவிட்டுக் கதவைத் தாழிட்டுக் கொள்ளும்படி மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு வந்து விடுகிறேன். நாம் கேட்க வேண்டிய முறைக்கு, போய் கேட்டுவிட்டு வந்துவிடுவோம்’ என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றேன்.
‘சுருக்க வாருங்கள்! உங்கள் தலையைப் பார்த்தால், பண்ணையார் திட்டித் தீர்த்துவிடப் போகிறார்' என்றாள் அவள்.கையில் டார்ச் லைட்டுடன் வெளியே வந்தேன். வாருங்கள் போகலாம் என்று நண்பர் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு, கிழக்கே பண்ணையார் வீட்டுக் கொல்லையை நோக்கி நடந்தேன்.
நாலைந்து நாட்களுக்கு முன் நான் முத்துக்காளைக்காகப் பண்ணையாரிடம் பரிந்துகொண்டு போக நேர்ந்த அந்தச் சம்பவம், மீண்டும் என் நினைவிற் படர்ந்தது.
முத்துக்காளை, அடிநாளில் நிலங்கரைகளோடு எங்கள் குடும்பம் செல்வம் கொழித்தபோது, வீட்டோடு இருந்த பண்ணை ஆள். அந்தக் காலத்தில் நான் சிறு பிள்ளையாக இருந்தபோது என்னை எத்தனை முறை உப்பு மூட்டை சுமந்து' காட்டியிருக்கிறான் அவன்? சின்ன ஐயா சின்ன ஐயா!' என்று என் மேல் உயிராக இருந்திருக்கிறான். பிற்காலத்தில் கடனும் உடனும் பட்டு எங்கள் குடும்பம் சீரழிந்தபோது, அப்பா நிலங்கரைகளை ஒவ்வொன்றாக விற்றதும், குடும்பத்தில் நொடிப்பு ஏற்பட்டதும் பெரிய கதை. அந்தச் சமயத்தில்தான் முத்துக்காளை எங்கள் வீட்டில் பார்த்து வந்த பண்ணையாள் உத்தியோகத்தை இழந்து வெளியேற நேர்ந்தது. ஊரில் எங்கோ ஒரு மூலையில் அவனுக்குக் கால்வேலி நிலமிருந்தது.அதில் பாடுபட்டுக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான். அதன் பின் நான் தலையெடுத்ததும், படித்ததும், சொந்த ஊரிலேயே பஞ்சாயத்து போர்டு நிர்வாக ஆபீஸர் என்று ஒரு உத்தியோகத்தைத் தேடிக் கொண்டதும் இங்கே விவரிக்க வேண்டாதவை.
நான் உள்ளூரிலேயே வீட்டோடு இருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் முத்துக்காளை எப்போதாவதுதான் அபூர்வமாகக் கண்ணில் தட்டுப்படுவாள்.
"சின்ன ஐயா! செளக்கிமா இருக்கீங்களா? அப்பாரு காலத்தோடு ஊரு விட்டது என்று எங்கேயாச்சும் போயிடாமல், நம் ஊருக்கே வந்தீங்களே சந்தோசம்; என்பான்.
நாலைந்து நாட்களுக்கு முன்னால் ஒருநாள் காலை முத்துக்காளை வீடு தேடிக்கொண்டு என்னைப் பார்க்க வந்து சேர்ந்தான். 'வா முத்துக்காளை! என்ன சங்கதி? இவ்வளவு அதிகாலையிலே வந்தாய் என்றேன்.அவன் கூறிய செய்தியிலிருந்து அவனுடைய இக்கட்டான நிலை எனக்குப் புரிந்தது.
போனவருஷம் கோடையில் பண்ணையாரிடம் புரோநோட்டு எழுதிக்கொடுத்து முன்னூறு ரூபாய் கடன் வாங்கினானாம். அது இந்த வருஷம் ஆரம்பத்தில் வட்டியும் முதலுமாக முந்நூற்றெழுபத்தைந்து ஆகிவிட்டதாம். மகளைக் கலியாணங் கட்டி கொடுப்பதற்காக இன்னும் இருநூறு ரூபாய் வாங்கினானாம். ஆகக்கூடி இன்றையக் தேதியில் அறுநூறு ரூபாய் வரை முத்துக்காளை பண்ணையாரிடம் கடன் பட்டிருந்தான். ஒரு வாரத்துக்கு முன்னால் பண்ணையார் கூப்பிட்டு விட்டாராம், போய் என்னவென்று கேட்டானாம். உன்னாலே எப்ப ரொக்கம் கொடுத்து என் கடனை அடைக்க முடியப் போகிறது? பேசாமல் இன்னம் நூறோ, இருநூறோகையில் தருகிறேன். வாங்கிக்கொண்டு, உன்னுடைய நிலத்தைக் கிரய சாசனம் செய்து கொடுத்துவிடு நீயாகச் செய்து கொடுக்க மறுத்துவிட்டால், அதை நான் கோர்ட்டு மூலமாகச் செய்துகொள்ள முடியும்' என்று பயமுறுத்தினாராம். முத்துக்காளை அரண்டு போய்விட்டான். ஒரு வாரமாகப் பணத்துக்கு அலைந்திருக்கிறான். வேறு எங்கேயாவது கைமாற்றாக வாங்கியாவது பண்ணையார் கடனை அடைத்துத் தப்பித்தால் போதுமென்று ஆகிவிட்டது அவனுக்கு, வயிற்றுக்குக் கஞ்சி வார்த்துக் கொண்டிருக்கும் கால் வேலி நிலத்தையும் கபளீகரம் செய்யப் பார்த்தால், யாருக்குத்தான் ஏற்படாது பயம்?
கடைசியில் என்னிடம் ஒடி வந்திருக்கிறான். நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்று காலைப் பிடிக்காத வண்ணம் கெஞ்சினான்.
'முத்துக்காளை! என்னிடம் பணம் இல்லை. வேறு எங்கேயும் சொல்லி வாங்கித் தரவும் வழியில்லை. எனக்குத் தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் எல்லோரும் பண நிலைமையில் அநேகமாக என்னைப் போன்றவர்கள்தான். ஆனால் ஒரு உதவி உனக்கு நான் செய்ய முடியும். ஊர்ப் பஞ்சாயத்து ஆபீஸர் என்ற வகையில், நாலு பேரிடம் செல்வாக்கு இருக்கிறது. நாளைக் காலையில் நீ இங்கே வா. நானும் இன்னும் இரண்டு மூன்று முக்கியமான புள்ளிகளும் உன்னைப் பண்ணையாரிடம் அழைத்துக் கொண்டு போய்ச் சுமுகமாக ஒரு நல்ல முடிவு ஏற்பட வழி செய்கிறோம். உன் நிலம் பறிபோகாதபடி ஒரு மத்தியஸ்தம் பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லி அனுப்பினேன். அவன் நம்பிக்கையோடு போனான். பஞ்சாயத்து ஆபீஸ் மூலம் எத்தனையோ பெரிய காரியங்களுக்கெல்லாம் பண்ணையார் என் தயவை எதிர்பார்க்கிறார். ஆகவே முத்துக்காளை விஷயத்தில் என் வார்த்தையை அவர் தட்டமாட்டாரென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
உண்மையில் மறுநாள் நான் நினைத்தபடியே நடந்தது .முத்துக்காளையும், நண்பர் திருவடியாபிள்ளை போன்ற இரண்டொரு ஆட்களையும் கூட்டிக் கொண்டு போய்ப் பண்ணையாரிடம் மத்தியஸ்தம் பேசினேன். என்னைத் தவிர மற்ற யாரும் முத்துக்காளையைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
'சார்! இந்தப் பயல்கள் சொன்னால் சொன்னபடி நாணயமாக நடந்துகொள்ள மாட்டார்கள். முரட்டுத்தனமாக ஏதாவது பேசுவார்கள். அடாபிடிக் காரியங்களில் இறங்குவார்கள். இவர்களுக்காகப் பரிந்துகொண்டு வந்து, உங்கள் கெளரவத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று நெருங்கிய நண்பரான திருவடியா பிள்ளையே தடுத்துப் பார்த்தார்.
'இல்லை சார்! எங்கள் முத்துக்காளையை எனக்குத் தெரியாதா? அவன் தங்கமான மனிதன்' என்று சொல்லி அவரை மறுத்தேன் நான்.
கடைசியில் மாதத்திற்கு இவ்வளவென்று முத்துக்காளை தவணை தவணையாகப் பண்ணையாரின் கடனை அடைத்து விடுவதென்றும், பண்ணையார்வாள் நிலத்தைக் கைப்பற்றுவதில்லை என்றும் சமாதானமாக ஏற்பாடு செய்து விட்டு வந்தேன். நான், நண்பர் பிள்ளை, இன்னொரு உள்ளூர் பிரமுகர் ஆகிய மூன்று பேரும் பக்கத்திலிருந்துதான் பண்ணையாரை இதற்கு இணங்கச் செய்தோம். இந்த ஏற்பாட்டைச் செய்து உருப்படியாக நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படி நடந்துவிட்டதென்றால், நம்பக்கூடியதாகவா இருக்கிறது?' அடக்க ஒடுக்கமாக என் வீட்டில் வந்து கெஞ்சிய முத்துக்காளையா இப்படிப் பண்ணையார் வீட்டு வைக்கோல் படைப்பில் தீயை வைத்து விட்டான்' என்று நம்பமுடியாத மனத்தோடு நடந்து கொண்டிருந்தேன்.
"ஏன் சார்? இந்த முரடன் ஏதாவது அர்த்தத்தோடு செய்திருக்கிறானா பாருங்கள்? அவருடைய வைக்கோல் படைப்பு எரிந்துவிட்டால், இவன் தரவேண்டிய கடனைக் கேட்காமலிருந்து விடுவாரா?
'அதுதானே எனக்கும் சந்தேகமாக இருக்கிறது! எல்லாவற்றையும் சமாதானமாக முடித்து வைத்தபின் இவன் இப்படி எதற்காகச் செய்தான்?' - இருவரும் பேசிக் கொண்டே பண்ணையார் வீட்டை அடைந்தோம்.
அகலமும், நீளமும், உயரமுமாகக் கொல்லைப் பிரதேசம் முழுவதும் அடைத்துக் கொண்டிருந்த பிரம்மாண்டமான வைக்கோற் படைப்பு இன்னும் அணையாமல் எரிந்து கொண்டுதான் இருந்தது.
கொல்லைப் புளிய மரத்தைச் சுற்றிக் கூட்டமாக இருந்தது. போலீஸ் தலைகளும் தெரிந்தன. பண்ணையாரின் கூப்பாடும், சுளிர் சுளீரெனப் புளிய விளாரினால் அடிவிழும் ஒசையும் கேட்டன.
'முத்துக்காளை பிடிபட்டு விட்டான் போலிருக்கிறது' என்றார் நண்பர். இருவரும் பரபரப்போடு கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே சென்றோம்.
முத்துக்காளையைப் புளியமரத்தோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏதோ அதட்டிக் கேட்டுக் கொண்டே புளிய விளாரினால் அடித்துக் கொண்டிருந்தார். பண்ணையார் பக்கத்தில் நின்று கூப்பாடு போட்டு அவனை வைதுகொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் முத்துக்காளை ஓவென்று அலறினான்.'சின்ன ஐயா! இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா? வீட்டிலே உறங்கிக் கிட்டிருந்தவனை எழுப்பிக் கொண்டு வந்து நீதான் வைக்கோல் படைப்புக்குத் தீ வைத்தாய்’ என்று சொல்லிக் கட்டி வைத்து அடிக்கிறாங்களே!’
டேய்! சும்மா இருக்கிறாயா? உதை கேட்கிறதா? இன்ஸ்பெக்டர் அதட்டிக்கொண்டேபுளிய விளாரை ஓங்கவே, என்னைக் கண்டதும் பெருகிப்பாய்ந்த தன் உணர்ச்சியை அவன் அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. -
'பாரும் ஐயா இந்த அக்கிரமத்தை' அன்றைக்கு உம்முடைய வார்த்தைக்காகத்தான் இந்தப் பயல்மேல் அனுதாபம் காட்டினேன். கடனைத் தவணைதவணையாக வாங்கிக் கொள்ளச் சம்மதித்தேன். இன்றைக்கு இவன் என் வீட்டுப் படைப்பிலேயே தீ வைத்து விட்டான். வண்டி பத்து ரூபாய் வீதம் விற்றிருந்தாலும் நானூறு ரூபாய்க்குப் போயிருக்கும்’ என்று என்னிடம் வேதனையோடு குறைப்பட்டுக்கொண்டார் பண்ணையார் எனக்கு அவருடைய வார்த்தைகள் என்னைக் குத்திக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்டவைபோல் தோன்றின.
முகத்திலும் கண்களிலும் சினமும் ஆத்திரமும் பொங்க, மரத்தில் கட்டிப் போட்டிருந்த முத்துக்காளையை ஏறிட்டுப் பார்த்தேன்.
‘ஏண்டா எவ்வளவு நாளா என் பெயரைக் கெடுக்க வேண்டுமென்று இப்படிக் காத்துக் கொண்டிருந்தாய்?'
"ஐயோ! சாமீ! நீங்களுமா இதை நான் செய்திருப்பேன்னு நம்புறீங்க? சத்தியமா, தெய்வ சாட்சியா, இதை நான் செய்யலீங்க. வீட்டிலே கிடந்தவனை இழுத்துக்கொண்டு வந்து 'நீதான்' என்று கட்டிப் போட்டு அடிக்கிறாக, அந்த ஆகாசவாணி, பூமிதேவிக்குக் கண் இருந்தால், அவள் கேக்கணும்' என்று அலறினான் அவன்.
'செய்றதையும் செய்துவிட்டு ஏண்டா இந்த அரிச்சந்திர வேஷம் போடுகிறாய்” என்றார் பண்ணையார்.
"ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் உதைக்கிற விதமாக உதைத்தால் 'நான்தான் தீ வைத்தேன்’ என்று உண்மையைக் கக்கிவிடுவான் சார்!’ என்றார் இன்ஸ்பெக்டர்.
எனக்கு அந்த இடத்தில் அதற்குமேல் நிற்பதற்கே வேதனையாக இருந்தது. 'பண்ணையார்வாள்! என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாத்தனமாய் இவனுக்காக உங்களிடம் பரிந்துகொண்டு வந்து விட்டேன்.இவன் இவ்வளவு அக்கிரமமாக நடந்து கொள்வானென்று நான் எதிர்பார்க்கவில்லை என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு திரும்பிவிட்டேன். திருவடியா பிள்ளை அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு, அவருடைய வீட்டுக்குப் போய்விட்டார். "சே! இன்றைய சமூகச் சூழ்நிலையில் எவனும் இளகிய மனதுள்ளவனாக இருக்கக் கூடாது. அனுதாபத்துக்குக் கிடைக்கிற பலன் ஆபத்துத்தான். முத்துக்காளைக்குக் கருணை காட்டப் போக ஊரில் கெளரவமான பெரிய மனிதர் ஒருவரிடம் எனக்கிருந்த மதிப்பைக் கெடுத்துக் கொண்டேன். 'எவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? என்று பேசாமல் இருந்திருந்தால், இந்த வம்பெல்லாம் வந்திருக்குமா?' பண்ணையார் வீட்டுக் கொல்லையிலிருந்து இருளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது என் மனத்தில் இத்தகைய விரக்தியான எண்ணங்கள் குழம்பின.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் திருவடியா பிள்ளை மறுபடியும் என்னைத் தேடிக்கொண்டு வந்தார்.
'போலீஸ் ஸ்டேஷனில் அடியும் உதையும் பொறுக்க முடியாமல் முத்துக்காளைப் பயல் உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டானாம், 'நான் தான் தீ வைத்தேன் என்று'.
'தொலைகிறான். விட்டுத் தள்ளுங்கள் அந்தக் காலிப் பயல் பேச்சை' என்று வெறுப்பாகக் கூறினேன் நான்.'அத்தோடு இன்னொரு செய்தி தெரியுமா உங்களுக்கு? பழைய கடன் பாக்கி அறுநூறு ரூபாக்கும், வைக்கோல் படைப்பு எரிந்ததற்காக நஷ்ட ஈடாக நாநூறு ரூபாக்குமாகப் பண்ணையார் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்துவிட்டாராம்:
'ஊம். அப்புறம்?'
அப்புறமென்ன? வழக்கு வெற்றியாவதில் தடையில்லை. கோர்ட்டில் 'டிகிரி' வாங்கினதும், அந்தக் கால் வேலி நிலத்தைச் சுவாதீனம் செய்து சுவீகரித்துக் கொள்வார்.’
‘அதைத்தானே அவர் செய்ய முடியும்?'
'பின்னென்ன? பணத்தைக் கடன் கொடுத்தவன் தலையில் முட்டாக்குப் போட்டுக்கொண்டு சும்மா போவானா? கொடுத்த கடனுக்கு எதையாவது வாங்கித்தானே ஆகவேண்டும்?'
'ஆமாம் ஆமாம்! நன்றாகச் செய்து கொள்ளட்டும். நமக்கென்ன வந்தது? என்று அசுவாரஸ்யமாகப் பதில் சொன்னேன் நான். நண்பர் கேட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்தார். இது நடந்த சில நாட்களுக்குப் பின்பு முத்துக்காளை ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்று ஜெயிலுக்குப் போனதாகவும், அவன் தரவேண்டிய கடன் பணத்துக்காகப் பண்ணையார் கோர்ட்டில்'டிகிரி' வாங்கி, அவனுடைய கால் வேலி நிலத்தைச் சுவீகரித்துக் கொண்டதாகவும் அறிந்து கொண்டேன்.
என் மனதில் அப்போது சிறிதும் அனுதாபமோ இரக்கமோ ஏற்படவில்லை. 'அயோக்கியப்பயல் ஒழுங்காக இருந்து தவணை தவறாமல் பண்ணையாருக்குக் கடன் பணத்தைக் கட்டியிருந்தானென்றால் இப்படிச் சீரழிய நேர்ந்திருக்குமா?’ என்றுதான் நினைத்தேன்.
பண்ணையாரின் வைக்கோல் படைப்பு எரிந்த அமாவாசைக்கு அடுத்த அமாவாசையன்று, முன்னிரவு நேரத்தில் ஆபீஸ் காரியமாகப் பக்கத்துக் கிராமம் ஒன்றிற்குப் போய்விட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தேன்.பொழுதோடு ஊர் திரும்ப முடியாததால், அமாவாசை இருட்டில் கையில் டார்ச் லைட்கூட இல்லாமல் மேடும் பள்ளமுமான வாய்க்கால் வரப்புப் பாதைகளில் குறுக்கு வழியாகத் தட்டுத் தடுமாறி நடந்து வரவேண்டியிருந்தது.
மணி ஏழு, ஏழே காலுக்கு மேலிருக்காது என்றாலும், வானம் மழைக்கோப்பாக மப்பு மந்தாரத்தோடு இருந்ததாலும், அமாவாசையினாலும், இருள் அப்போதே கனத்திருந்தது.
எப்படியோ, ஊரை நெருங்கிவிட்டேன். பண்ணையார் வாழைத் தோட்டத்திற்குள் செல்லும் வரப்பின்மேல் சென்று கொண்டிருந்தேன்.அதைக் கடந்து கிழக்கே கால் பர்லாங் தூரம் நடந்தால் ஊர்தான். வாழைத் தோட்டத்துக் கிணற்றடியில் பண்ணையார் எவருடனோ பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்டது. வரப்புப் பாதையை ஒட்டினாற்போலக் கிணறு. இருட்டினாலும் வாழை மர அடர்த்தியினாலும் பாதையில் நடக்கிற ஆளைக் கிணற்றடியிலிருந்து கண்டு கொள்ள முடியாது. அதேபோல் கிணற்றடியில் நிற்கிறவர்களையும் பாதையிலிருந்து பார்த்துவிட முடியாது. ஆனால் பேச்சுக் குரலைக் கேட்க முடியும்.
நான் தயங்கி நின்றேன். பண்ணையார் பேசிக்கொண்டிருந்தது வேறு யாரோடும் அல்ல. அவருடைய சொந்த மைத்துனர் பரமசிவத்தோடுதான் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
‘என்னப்பா பரமசிவம்! மாடு கன்றுகளுக்குத் தீவனம் இல்லாமல் சங்கடமாக இருக்கிறது. எங்கேயாவது ஒரு பத்து வண்டி வைக்கோல் விலைக்கு வந்தால் பாரேன் - இது பண்ணையாரின் குரல்.
"அத்தான்! நீங்கள் அன்றைக்கே அந்தப் படைப்பைப் பாதியில் அனைத்திருந்தால் எரிந்தது போகப் பத்துப் பன்னிரண்டு வண்டி வைக்கோலாவது மீந்திருக்கும். நான் எவ்வளவோ சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை.' இது அவர் மைத்துனரின் குரல்.
'அடே, பரமசிவம்! இன்றைக்குத் தெரிந்துகொள், அந்த இரகசியத்தை அன்றைக்குப் படைப்பு எரிந்ததே, அது ஒரு நாடகம். உண்மையில் படைப்புக்குத் தீ வைத்தது யார் தெரியுமா?'
'யார்?'
'நானேதான்!”
‘என்ன அத்தான், விளையாடுகிறீர்களா?'
'விளையாடவில்லை நிஜமாகத்தான் சொல்கிறேன். இன்றைக்குத் தான் இந்த மர்மத்தை என் நெஞ்சிலிருந்து இரண்டாவது மனுஷனுக்குத் திறந்து சொல்கிறேன்!”
‘அத்தான்! 'பகலில் பக்கம் பார்த்துப் பேசு. இரவிலே அதுவும் பேசாதே' என்பார்கள். கொஞ்சம் மெல்லவே பேசுங்க”
இருவருடைய பேச்சுக் குரலும் தணிந்தது. ஆனாலும் பாதையில் வரப்பின் மேல் நின்றுகொண்டிருந்த எனக்குத் தெளிவாகக் கேட்டது.
'இந்தப் பஞ்சாயத்துப் போர்டு ஆபீஸர் இருக்கிறானே, இவனுக்காகத் தவணை வாரியாகக் கடனை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி வைத்தேன். இல்லையானால் எப்படியும் அந்தக் கால் வேலி நிலம் நம் கைக்கு வந்திருக்க வேண்டியது. கடைசியில் ‘என்னடா வழி' என்று பார்த்தேன். இந்த வேலையைச் செய்தேன். நாற்பது வண்டி வைக்கோல் போனதனால் எனக்கு ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. தலைக்கால் பாசனத்தில் அயனான நிலம் கால் வேலி கைக்கு வந்துவிட்டது.”
'அப்படியானால் அந்தப் பயல் எப்படிப் போலீஸில் தானே தீ வைத்தாக ஒப்புக் கொண்டான்?'
'அவனாகவா ஒப்புக் கொண்டான்? கொடுத்த அடியும், உதையும், நகக் கண்களில் ஏறிய ஊசியும், சேர்ந்தல்லவா அவனை அப்படி ஒப்புக் கொள்ள வைத்தன!'. அத்தான்! என்ன இருந்தாலும் நீங்கள் எமகாதகப் பேர்வழிதான்! -மைத்துனரின் பாராட்டுக் குரல் மெதுவாக ஒலித்தது.
கேட்டுக்கொண்டு நின்ற என் நெஞ்சம் குமுறிக் கொதித்தது. எனக்குத் தெரிந்துவிட்டது. உண்மை தெரிந்துவிட்டது! ஆனால், நான் என்ன செய்ய் முடியும்? "சட்டமும், நியாயமும், நீதியும், போலீஸும், தனி மனிதனுக்குப் பயன்படாதவரை இந்தச் சமூகம் இப்படித்தான் குட்டிச் சுவராகப் போய்க் கொண்டிருக்கப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டே, அதற்கு மேலும் அங்கு நிற்கத் திராணியின்றி ஊரை நோக்கி வேகமாக நடந்தேன். என்னைச் சுற்றிலும் நிறைந்திருந்த கனமான இருளைப் போலவே, அந்த உண்மையையும் ஒரு இருளாகத்தான் எண்ண வேண்டியிருந்தது. யாரிடம் சொல்ல முடியும்? சொன்னால் யார்தான் நம்புவார்கள்?
ஆறு மாதத்துக்குப் பின்பு ஒரு நாள் இரவு பதினொன்றரை மணிக்குமேல் இருக்கும். இன்ஸ்பெக்ஷனுக்காகக் கணக்குகளையும், லெட்ஜர்களையும், அரிக்கேன் லாந்தரின் மங்கிய ஒளியில் புரட்டிச் சரிபார்த்துக் கொண்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். திருவடியாபிள்ளை கிழக்கேயிருந்து அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்தார்.
'அந்தப் பயல் முத்துக்காளை இன்று காலையில்தான் விடுதலையாகி வந்தான். வந்ததும் வராததுமாகப் பண்ணையார் வீட்டிலேயே நெருப்பு வைத்துவிட்டான்.வீடு பற்றி எரிகிறது. வாருங்கள். அக்கம் பக்கத்திலும் நெருப்புப் பரவிவிடுமோ என்று பஞ்சாயத்து போர்டு தலைவர் அஞ்சுகிறார். உங்களை உடனே கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.’
நான் பதில் பேசவில்லை. திருவடியா பிள்ளை பதறினார்.
'பிள்ளை அவர்களே! இந்த நெருப்பு பண்ணையார் வீட்டில் வைத்த நெருப்பு அல்ல. உங்கள் சமூக நீதியிருக்கிறதே, அதன் அழகான மூஞ்சியில் முத்துக்காளை என்ற ஒரு ஏழை வைத்த நெருப்பு! அந்த நெருப்பை இனி யாராலும் அணைக்க முடியாது. போய் வாருங்கள்! இப்போது நான் வர முடியாது’ என்று நிர்த்தாட்சண்யமாகச் சொன்னேன்.