நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/நடுத்தெருவில் நாற்பது நிமிஷம்

13. நடுத்தெருவில் நாற்பது நிமிஷம்


து ஒரு முச்சந்தி. இரண்டு ஹைரோடுகளும் ஒரு தெருவும் சந்திக்கிற இடம் அந்த இடத்தில் ஒன்று கூடுகின்ற சந்துகளையும், முடுக்குகளையும் சொல்லிமுடியாது. ஜனக்கும்பலும், காரும் வண்டியும் ஜட்காவும், ரிக்க்ஷாவும் சதா புழங்குகிற இடம்.

இவற்றுக்கெல்லாம் முத்திரை வைப்பது போல அந்த முச்சந்தியின் நான்கு திசைகளிலும் நான்கு வேறு அம்சங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. கலகலப்புக்கும் ஆரவாரத்துக்கும் இவைகளையும் முக்கியமான காரணங்கள் என்று சொல்லலாம்.

வடக்குப் பக்கத்தில் நகரத்தின் ஜெனரல் போஸ்ட்டாபீஸ், மாடியோடு கூடிய பிரம்மாண்டமான கல் கட்டடம்; கட்டடத்தின் முகப்பை எடுத்துக்காட்டும் அழகாகக் கத்தரித்து விடப்பட்ட சவுக்குமர வேலி.

தென்புறத்தில் நகரத்திலேயே பிரபலமான ‘பாங்கு’ ஒன்றின் பெரிய கட்டடம். வெள்ளை வெளேரென்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் நான்கு மாடிக் கட்டடம். வாசலில் முறுக்கிவிட்ட கிருதாவும் கத்தியுமாக விறைத்தது விறைத்தபடியே ஒரு கூர்க்காப் பாராக்காரன் நின்று கொண்டிருக்கிறான். முன்புறம் முழுவதும் அழகான பல குரோட்டன்ஸ் செடிகள். கண்ணைக் கவரும் வண்ண மலர் குலுங்கும் பூந்தொட்டிகள். அதற்கு இப்பால் இரும்புக் கிராதியோடு கூடிய வாயில் - கேட்.

கீழ்ப்புறம் பெண்கள் படிக்கிற கான்வென்ட்ஹைஸ்கூல். அதன் கட்டடம் மஞ்சள் காவி பூசிக் கொண்டு மங்களகரமாகத் தோற்றமளித்தது. பெண்கள், புத்தகமும் கையுமாக உள்ளே போய்க் கொண்டும் வெளியே வந்து கொண்டும் இருக்கிறார்கள்.

மேல்புறம் ரயில்வே கூட்ஸ் ஷெட்டிலிருந்து சாமான்களையும், பார்சல்களையும் விலாசதாரர்கள் வாங்கிக் கொண்டு வருகிற வழியில் பிரதானமான வாசல். கை வண்டிகளும், மேலே மூடப்பெறாத திறந்த லாரிகளும், வேறு வாகனங்களுமாகக் கூட்ஸ் ஷெட்டின் வாசல் ‘ஜே ஜே’ என்றிருக்கிறது.

இந்த வியூகத்தின் நடுவே தென்புறமுள்ள ‘பாங்கு’ கட்டடத்தை ஒட்டி நகர பஸ் நிற்குமிடம் வேறு இருந்தது.

ஐப்பசி மாதத்து அடைமழையில் ஒருநாள் காலை அவசரமாகத் தபாலாபிஸுக்குப் போக வேண்டியிருந்தது. மழை, குடைக்கு அடங்குகிற தினுசாக இல்லை. வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. எப்படியோ ஒரு டாக்ஸியை வாடகைக்கு பிடித்துக் கொண்டு வந்து விட்டேன்.

என் காரியம் முடிந்த போது மழை குறைந்து தூறலாக மாறியிருந்தது. வரும்போது குடைகொண்டு வரவில்லை. நகர பஸ்ஸில் ஏறிப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டு எதிர்ப்புறம்பாங்குக் கட்டிடத்தின் ஓரமாக மழைத்துளிகள் மேலே விழாமல் ஒண்டிக் கொண்டு நின்றேன். கைக்கடிகாரத்தில் ஒன்பதரை மணி ஆகியிருந்தது. தெருவில் ஜனநடமாட்டம் மழையின் காரணமாகக் குறைந்திருந்தது. கார், பஸ் முதலியன வழக்கம்போல் போய்க் கொண்டுதான் இருந்தன. தெருவில் கணுக்கால் அளவு தண்ணிர் தேங்கியிருந்தது.

கூட்ஸ் ஷெட்டும் தபாலாபீஸும் எட்டரை மணிக்கே திறக்கப் பெற்று வேலையை நடத்திக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடத்துப் பெண்கள் காரிலும், வண்டியிலும், நடந்து குடை பிடித்துக் கொண்டும் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் வந்து கொண்டிருந்தார்கள். பாங்கு வேலை நேரம் பத்து மணி ஆகையால் அப்பொழுதுதான் கதவுகளையெல்லாம் ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டிருந்தார்கள்.

எனக்குப் பஸ் வரவில்லை! நான் இன்னமும் அங்கேதான் நின்று கொண்டிருந்தேன். தெருவிலே தண்ணீரும் என் மணிக்கட்டிலே கடிகாரமும் ஓடிக் கொண்டிருந்தன. மழையில் நனையாமல் ஒண்டி நின்றவாறே அந்த நட்ட நடுத்தெருவில் முச்சந்தியின் கலப்பில் வாழ்க்கை எந்த விதமாகப் பெருகியும், குன்றியும், வடிந்தும், தேங்கியும் ஓடுகிறது என்பதை ரசித்து நோக்கினேன். கண்களில் ஆவலும் மனத்தில் சிந்தனையும் கொண்டவனுக்கு இது ரஸமான பொழுதுபோக்கு அல்லவா?

சல்லடையில் மைதா மாவைக் கொட்டி உயரத் துரக்கிப் பிடித்தால் ‘புருபுரு’ வென்று மாவு விழுதே அந்த மாதிரி மெல்லிய சாரல் விழுந்து கொண்டிருந்தது. பாழாய்ப்போன நகர பஸ் இன்னும் வந்து சேரவில்லை. தெருவையும் கைக்கடிகாரத்தையும், பஸ் வருகிற வழியையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

தெருவைப் பார்ப்பது சலித்துப் போனால், பஸ் வருகிற வழியையும், அதுவும் சலித்துப் போனால் கைக்கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டே இருந்ததில் நேரம் கழிந்து கொண்டிருந்தது.

மணி பத்தும் ஆகி அதற்கு மேலும் ஐந்து நிமிஷம் ஆகிவிட்டது. ‘பாங்கு’ திறந்து வேலை தொடங்கிவிட்டது. பாங்கு வாசலில் ஒரு ஆட்டோ ரிக்ஷா வந்து நின்றது. சூட்டும், கோட்டும் டையுமாகக் கண்கள் தெரியாமல் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒரு பெரிய மனிதர் அதிலிருந்து கம்பீரமாக இறங்கினார். புத்தம் புதிய தோல் பை ஒன்று அவருடைய கையில் இருந்தது. ‘டக் டக்’ என்று பூட்ஸ் ஒலிக்க அவர் பாங்கு வாசற்படியில் ஏறியபோது அங்கே நின்ற கூர்க்கா ஒரு வணக்கம் செலுத்திவிட்டு ஒதுங்கி நின்று கொண்டான்.

இவர் இந்த பாங்கியின் காரியதரிசியாகவோ, மானேஜராகவோ அல்லது டைரக்டருள் ஒருவராகவோதான் இருக்க வேண்டும் என்று நானாக எனக்குள் ஒரு குருட்டு அனுமானம் செய்து கொண்டேன். அனுமானம் என்பதே அறிவின் குருட்டுத்தனம்தானே?

மணிபத்தும் பத்து நிமிஷமும் ஆகிவிட்டது.குதிகால் உயர்ந்த பூட்ஸும் ஜப்பான் பட்டுக் குடையும் ‘பாப்’ செய்த தலையுமாக ஒரு ஆங்கிலோ இந்திய யுவதி, உதட்டில் சாயம் பளபளக்க ஒய்யாரமாக நடந்து கான்வென்ட் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தாள்.

‘விர்’ரென்று வாயு வேகத்திலே ஒரு சிவப்பு வண்ண சைக்கிள் தபாலாபீஸிக்குள் போயிற்று. அதன்மேல் உட்கார்ந்திருந்த தந்திப் பியூனுக்கு ஏன்தான் அவ்வளவு தலை போகிற அவசரமோ? ஏதோ குதிரைப் பந்தயத்தில் குதிரையை ஒட்டிக் கொண்டு போகிற ‘ஜாக்கி’யைப் போல அசாத்திய வேகத்தில் ஓட்டிக் கொண்டு போகின்றான்.

மேற்கே ‘கூட்ஸ் ஷெட்’ வாசல் பார்சலில் வந்த சாமானை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வருவதற்குத் தயாராக நின்றது ஒரு கை வண்டி அதன் பக்கத்தில் மூன்று பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் பார்சலின் சொந்தக்காரர். தூரத்திலிருந்து பார்த்த என் பார்வைக்கு அசப்பில் அவர் நான் அடிக்கடி மருந்து வாங்கச் செல்லும் ஒரு மருந்துக்கடையின் சொந்தக்காரர் போல் தோன்றினார். ‘கடைக்கு ஏதாவது மருந்துச் சாமான்கள் பார்சலில் வந்திருக்கும். எடுத்துக் கொண்டு போவதற்காக வந்திருப்பார்’ என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன். மற்றும் இரண்டு பேரில் ஒருவன் கைவண்டியை முன்புறமிருந்து இழுப்பவன்.இன்னொருவன் பின்புறமிருந்து தள்ளுபவன்.

பத்து மணி பன்னிரண்டு நிமிஷம், மூன்றரை செகண்டு ஆகியிருந்தது! 'கூட்ஸ்’ ஷெட்டிலிருந்து கைவண்டி கிழக்கு நோக்கிப் புறப்பட்டது. அதேசமயத்தில் தபாலாபீஸிலிருந்த அந்தத் தந்திப் பியூன் தன் சைக்கிளை அசுரவேகத்தில் மேற்கு நோக்கிச் செலுத்தினான். பாங்கு வாசற்படியிலிருந்து ‘டக் டக்’ என்று ஆள் இறங்கி வருவதற்கு அறிகுறியான பூட்ஸ் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கறுப்புக் கண்ணாடிக்காரர் தோல் பையும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அவர் ஏறிக் கொண்டதும் ஆட்டோ ரிக்க்ஷா கிழக்கு நோக்கிக் கிளம்பியது.

கிழக்கே பள்ளிக்கூடத்து வாசலிலிருந்து அந்த லிப்ஸ்டிக் அழகி கையில் ஒரு கத்தை பைல்களுடன் குடையை ஒயிலாகப் பிடித்துக் கொண்டு தெருவில் வடக்கு நோக்கி இறங்கினாள். கிழக்கே இருந்து ஒரு போலீஸ் லாரி வந்து கொண்டிருந்தது.

திடீரென்று மழை பெரிதாகப் பெய்யத் தொடங்கிவிட்டது. ‘சடசட’வென்று மழை ஓசை கடிகாரத்தை மீண்டும் பார்த்தேன். மணி சரியாகப் பத்தே கால்!

‘படார்’ என்ற பேரிடி போன்ற ஓர் ஓசை அதை அடுத்து ‘ஐயோ’ என்ற அலறல் ஒலிகள். திடுக்கிட்டுப் போய் தலைநிமிர்ந்து பார்த்தேன்.

பார்சல் சாமான்கள் வந்த கைவண்டியும், போலீஸ் லாரியும், இவை இரண்டுக்கும் நடுவே பாங்கிலிருந்து போன கறுப்புக் கண்ணாடிக்காரரின் ஆட்டோரிக்க்ஷாவும் சிக்கிக் கொண்டிருந்தன. இந்தப் பயங்கரமான மோதலில் சிவப்பு சைக்கிள் தந்திப் பியூனோடு வடபுறம் தூக்கி எறியப்பட்டிருந்தது. கையிலிருந்த பைல்கள் தண்ணீரில் சிதறி மிதக்க உடம்பெல்லாம் சேறாகி அலங்கோலமான நிலையில் தெருவில் நின்றாள் ஆங்கிலோ இந்திய அழகி.

கறுப்புக்கண்ணாடிக்காரரின் தோல் பை திறந்து அதிலிருந்து கத்தை கத்தையான புத்தம் புதிய நோட்டுகள் சிதறின. மருந்துக் கடை பார்சலில் சாதிக்காய்ப் பெட்டி உடைந்து விட்டதனால் உள்ளே இருந்த பாட்டில்களின் நுனிவெளியே தலை நீட்டின. தந்திப் பியூனின் பையிலிருந்து தந்திகளும், தந்தி மணியார்டர் பாரங்களும், ரூபாய் நோட்டுகளும், முழு ரூபாய் நாணயங்களும் சில்லறைகளுமாக நாலா பக்கமும் சிதறி விழுந்திருந்தன.

எதுவும் சிந்தாமலும் சிதறாமலும் சேதமின்றிப் பிழைத்தது போலீஸ் லாரி ஒன்றுதான். லாரியிலிருந்து மடமடவென்று மழையில் நனைந்து கொண்டே போலீஸ்காரர்கள் இறங்குவதைக் கவனித்தேன்.

விநோதமான இந்த விபத்தை மழையில் நனைந்து கொண்டாவது மேலும் பார்க்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால் என் ஆசை அந்த பஸ்ஸுக்குத் தெரியாததனாலோ என்னவோ அது வந்துவிட்டது.

‘சரி, எங்கே போய்விடப் போகிறது? நாளைக்குப்பத்திரிகையில் விபத்தைப் பற்றித் தெரிந்து கொண்டால் போயிற்று' என்று நினைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டேன். நாற்பது நிமிஷம் நடுத்தெருவில் மழைக்கு ஒண்டிக் கொண்டு நின்றதே அதிகம். அதற்கு மேலும் நின்றால் என் நேரம் பாழாய்ப் போய்விடுமே என்ற கவலையும் ஒரு புறம். எழுத்தாளனுக்கு நேரம்தான் வியாபார முதல் அதை விரயம் செய்தால் தொழில் என்ன ஆவது?

மறுநாள் பொழுது விடிகிற வரையில் அந்த விபத்து என் மனத்தை விட்டு அகலவே இல்லை. தற்செயலாக நிகழ்ந்த ஒரு சங்கமம் போல, இயற்கையின் முறை தவறிய நாடகம் போலத் தோன்றியது.

ஐந்து பேர்களை அவர்கள் போகும் திசைக்குப் போகவிடாமல், செய்யும் செயலைச் செய்யவிடாமல் நடுத்தெருவில் தடுத்து உருட்டிய அந்த விபத்து வேண்டுமென்றே இயற்கை செய்து முடித்த சதியா? அழகான யுவதி, கம்பீரமான சீமான் ஒருவர், வேகமாகச் சைக்கிள் ஒட்டும் தந்திப் பியூன், நரம்புகள் இழுக்க வண்டி இழுக்கும் கூலி, எங்கோ போய்க் கொண்டிருந்தபோலீஸ் லாரி-ஆட்டோ.மொத்தம் ஐந்து பேர்களை, ஐந்து வழிகளை, ஐந்து லட்சியங்களை, ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் சிதறிப்போகச் செய்த விதியை எப்படித்துாற்றுவது அல்லது பாராட்டுவது?

பொழுது விடிந்தது! பத்திரிகையும் வந்தது! அதில் விபத்தைப் பற்றிய செய்தியும் வந்திருந்தது.

“இயற்கையின் விநோதமான சந்திப்பு!

போலீஸுக்கு உதவிய விபத்து!

ஜெனரல் போஸ்டாபீஸ் அருகே

அதிசயமான சம்பவம்!!!

கதைகளில்கூட நடந்திருக்க முடியாதென்று சொல்லத்தக்க ஒரு அதிசய அற்புதமான சம்பவம் நேற்று காலை பத்தேகால் மணி சுமாருக்கு ஜெனரல் போஸ்டாபீஸ் அருகே நடந்தது. நகர் முழுவதும் அகஸ்மாத்தாக நடந்த இந்தல் அதிசயத்தைப் பற்றியே பேச்சாக இருக்கிறது. மேற்கே கூட்ஸ் ஷெட்டிலிருந்து வந்து கொண்டிருந்த மருந்துக்கடைப் பார்சல் அடங்கிய கைவண்டி ஒன்றும், கிழக்கேயிருந்து வந்து கொண்டிருந்த போலிஸ் லாரி ஒன்றும், தெற்கே பாங்கியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷாவும், வடக்கே தபாலாபீஸிலிருந்து வந்து கொண்டிருந்த தந்திப் பியூன் சைக்கிளும், நேற்று காலை பத்தேகால் மணி சுமாருக்கு ஒரே சமயத்தில் மோதிக் கொண்டன. இந்த மோதலின் நடுவே கான்வென்ட் பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆங்கிலோ இந்திய யுவதி ஒருவரும் அகப்பட்டுக் கொண்டார். விபத்து நடந்தபோது மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. பாங்கிலிருந்து வந்த கறுப்புக் கண்ணாடிக்காரர், தபாலாபீஸிலிருந்து வந்த தந்தி பியூன், கைவண்டி இழுத்து வந்த கூலி, கான்வென்ட் ஸ்கூலிலிருந்து வந்த யுவதி ஆகிய நால்வருக்கும் சிறுசிறு காயங்கள் பட்டிருப்பதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்பத்திரியில் அவர்களுக்குச் சிகிச்சை முடிந்ததும் போலீஸார் அவர்களைப் புலன் விசாரித்ததில் விபத்தின் காரணமாக அற்புதமான சில உண்மைகள் வெளிப்பட்டன.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே முறையே பாங்கு, போஸ்டாபீஸ், கான்வென்ட் ஸ்கூல்,ரயில்வே கூட்ஸ்ஷெட் ஆகிய நான்கு இடங்களிலிருந்தும் நான்கு ரிப்போர்ட்டுகள் போலீஸுக்கு வந்த சேர்ந்தன. எல்லா ரிப்போர்டுகளிலுமே நேரம் பத்தேகால் மணி என்று குறித்திருந்தது.

கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் பத்தாயிரம் ரூபாய்க்குக் கள்ள நோட்டுக்களைக் கொடுத்துவிட்டு நல்ல நோட்டுக்களை மாற்றிக் கொண்டு போய்விட்டதாக பாங்கியிலிருந்தும், ஒரு கேடி தந்திப் பியூனின் உடையில் வந்து மணியார்டர் பாரங்களையும் பணத்தையும் திருடிக் கொண்டு தப்பிவிட்டதாக தபாலாபீளியிலிருந்தும், ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணி போல் வந்து ஜில்லா கல்வி அதிகாரியின் அந்தரங்கக் காரியதரிசி என்று சொல்லிப் பள்ளிக்கூடத்துப் பைல்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டதாகக் கான்வென்ட் ஸ்கூலிலிருந்தும், மருந்துக் கடைக்காக வந்த பார்சலில் சாராயப் புட்டிகள் இருக்கலாமென்று சந்தேகிப்பதாக ரயில்வே கூட்ஸ் ஷெட்டிலிருந்து - ரிப்போர்ட்டுகள் வந்திருந்தன. போலீஸார் நான்கு பேர்களையும் கைது செய்தனர். இந்த அதிசய விபத்தில் உயிர்ச் சேதமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.”

பத்திரிகை படிப்பதாகத் தெரியவில்லை. சுவாரஸ்யமாகக் கனவு காண்பது போலிருந்தது. அன்று அந்த நட்ட நடுத்தெருவில் நாற்பது நிமிஷத்துக்குள் லாரியும், வண்டியும் சைக்கிளும், ஆட்டோ ரிக்ஷாவும் மட்டுமா மோதிக் கொண்டன? நான்கு திருடர்களின் அதிர்ஷ்டமும் மோதிச் சிதறித் தூள் தூளாகிவிட்டது. நான்கு நேர்மையற்ற எண்ணங்கள் பாழ்பட்டு விட்டன.

அதிசயமான நிகழ்ச்சிகளெல்லாம் கதையில்தான் வர வேண்டுமா? கற்பனையில்தான் திகழ வேண்டுமா? வாழ்க்கையில் வரக்கூடாதா என்ன?

(கல்கி, 2.6.1957)