நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மெய்

12. மெய்

நீதிமன்றத்திலிருந்து திரும்பி வந்து அரை மணிநேரம் ஆயிற்று. ஒரே அலுப்பாக இருந்தது. உடை மாற்றிக் கொண்டு சிற்றுண்டி காப்பி அருந்தினேன். மனத்தில் துளி நிம்மதி இல்லை. ஏதோ படுபாதாளத்தில் விழுந்து விட்டது போல ஒரு தாழ்மை மனப்பிராந்தி பிடித்து ஆட்டியது. பெருமையும், பேரும், புகழும் அன்றைய தினம் ஏற்பட்ட ஒரே ஒரு தோல்வியில் முழுகிப் போயின.

ஆம், மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு அன்று வாதாடிய வழக்கிலே என் கட்சி தோற்று விட்டது. என் கட்சி மட்டுமா? நியாயமே தோற்று விட்டது. இப்போது நினைத்தாலும் நெஞ்சு குலுங்குகிறது. கொலை செய்யாத அப்பாவி மனிதனான என் கட்சிக்காரன் நீதியின் தீர்ப்பைக் கேட்டுக் குமுறிக் குமுறி அழுது கொண்டே சிறைக்குப் போனான். உண்மையில் அந்தக் கொலையைச் செய்தவனான எதிர்க்கட்சிக்காரன் சந்தர்ப்ப சாட்சியங்களின் உதவியால் நிரபராதி என்று கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டான்.

“ஐயோ சாமீ! தர்மம் நியாயம் எல்லாத்துக்குமே கண் அவிஞ்சு போச்சுங்களா?” என்று குற்றவாளியாக்கப்பட்டவன் கதறிய போது என் நெஞ்சை யாரோ இறுக்கி அமுக்குவது போல இருந்தது.

யார் என்ன செய்யலாம்? இந்தக் காலத்தில் சத்தியத்தின் தலைவிதி, சாட்சி சொல்பவர்களின் யோக்கியதையைப் பொறுத்தல்லவா இருக்கிறது!

மனம் மேலும் மேலும் குழம்பியது. நான் படம் பார்க்கப் புறப்பட்டேன். பெயரைப் பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அரிச்சந்திரன்” - முதலிலேயே தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். எந்த மனக்குழப்பதைப் போக்கிக் கொள்ளலாம் என்றெண்ணி வந்தேனோ, அதே குழப்பத்தைச் சித்திரிக்கும் கதை.

பொறியிலிருந்து தப்புவதாக எண்ணிக் கொண்டு பொறிக்குள்ளேயே மாட்டிக் கொண்ட எலியின் நிலையை அடைந்தேன். ‘என் கதை?’ - மெய்க்கும் பொய்க்கும் ஏற்பட்ட போராட்டத்தில் பொய் வென்ற கதை அரிச்சந்திரன் கதை - அது பொய்க்கும் மெய்க்கும் ஏற்பட்ட போராட்டத்தில் பொய் தோற்ற கதை.

இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே காலம் என்ற கொத்தன் புகழ் என்ற பெரிய மதிலை எழுப்பியிருந்தான்.

அன்று கோர்ட்டில் நடந்த வழக்கில் நிரபராதியைக் காப்பாற்ற முயன்றவன் நான். என் கட்சி மெய்யின் கட்சி. ஆனால் அது தோற்று விட்டது. பிரதிவாதிக்காக வாதாடிய வக்கீல் ஒரு கொலைகாரனை நிரபராதி என்று நிரூபிக்க முயன்றார். அவர் கட்சி பொய்யின் கட்சி; ஆனால் அது வென்றுவிட்டது! இதுதான் இந்த யுகத்தின் தர்மமா?

திரையில் படம் ‘விறு விறு’ என்று ஒடிக் கொண்டிருந்தது. விசுவாமித்திரர் அரிச்சந்திரனை எப்படியாவது ஒரு பொய் சொல்ல வைத்துவிட வேண்டும் என்று பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்.

“கண்ணுக்குத் தெரியாததெல்லாம் பொய்யானால் பகுத்தறிவும் பொய்தான், கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் மெய்யானால் கானல் நீரும் மெய்தான்; எது மெய்? எது பொய்? விஷய ஞானத்தின் தெளிவுதான் மெய்யா-பொய்யா என்பதற்கு அளவு கோல், காட்சியும் காணாமையும், மெய் பொய்களுக்கு இலக்கணமல்ல” - படத்தில் வசனகர்த்தா தன் சாமர்த்தியத்தையெல்லாம் அள்ளித் தெளித்திருந்தார். ‘பளிச் பளிச்’சென்று மின்வெட்டுப் போல அங்கங்கே வசனத்தில் தத்துவக் கருத்துக்களும் தர்க்க நியாயங்களும் மின்னின.

எல்லா நட்சத்திரங்களுமே தத்ரூபமாக நடித்திருந்தார்கள். படத்தைத் தயாரித்தவர்களுக்கு நல்ல வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அரிச்சந்திரன் நாடு இழந்தான், மனைவி, மகன், இருவரோடும் காட்டுக்குப் போகிறான். அலைகிறான், கஷ்டப்படுகிறான்; அப்போது நட்சத்திரேயன் வந்து மிரட்டுகிறான். அந்தச் சத்தியபுருஷன் கடனுக்காக மனைவியை விலைக்கு விற்கிறான். சுடுகாட்டுப் பறையனாகிறான். லோகிதாசனைப் பாம்பு கடிக்கிறது. சந்திரமதி நள்ளிரவில் பிள்ளையின் பிணத்தோடு சுடுகாட்டுக்கு வருகிறாள்.

“முனிசிரேஷ்டரே! நாட்டை இழந்தேன், அரசை இழந்தேன், மனைவியை இழந்தேன், மகனை இழந்தேன், என்னையுங்கூட இழந்தேன், உயிரையே இழக்க நேர்ந்தாலும் சரி, சத்தியத்தை இழக்கத் தயாராயில்லை!” - அஞ்சா நெஞ்சுடனே அரிச்சந்திரன் விசுவாமித்திரரை எதிர்த்துப் பேசுகிறான்.

சோதனை முடிகிறது. தேவர்கள் மலர் மாரி பொழிகின்றனர். விசுவாமித்திரர் அரிச்சந்திரனை வணங்கி மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறார்.இழந்தவற்றையெல்லாம் பெறுகிறான் அரிச்சந்திரன். கதை சுபமாக முடிகிறது. அரிச்சந்திரன் வென்றான்; சத்தியம் வென்றது.

படம் முடிந்தது.

நான் சென்ற ஆட்டோ ரிக்ஷா அத்துமீறிய வேகத்தில் ஒடிக் கொண்டிருந்தது.

"மெல்ல ஒட்டுப்பா அகப்பட்டுக் கொண்டால் வம்பு”

"நீ சும்மா வா ஸாமீ! நம்ப கையிலே வாகனத்தைப் பிடிச்சா புஷ்ப விமானங் கணக்கா பறக்கணுமுங்க.

‘சரி, இவன் நிஜமாகவே சுயநினைவில் இல்லை’ என்று தெரிந்து கொண்டேன். தொடர்ந்து அவனிடம் பேசவுமில்லை. கடவுள் புண்ணியத்தில் எப்படியாவது வீடு போய்ச்சேர்ந்தால் போதுமென்று மனத்தில் தியானம் செய்துகொண்டிருந்தேன்.

“எங்கே ஸாமீ போகணும்னு சொன்னீங்க?"

"அதுக்குள்ள மறந்துட்டியா? மைலாப்பூர் - மந்தைவெளி”

“மறப்பேனா சாமி? சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்!”

ஸம்ஸ்க்ருத காலேஸ், ராமகிருஷ்ணமடம் ஒவ்வொன்றாகக் கடந்தன. பி.எஸ். ஹைஸ்கூல் வாசலில் ஒரு பிச்சைக்காரன் ஆலமரத்தடியிலிருந்து புறப்பட்டுச் சாலையின் நடுவே நடந்து கொண்டிருந்தான்.

“ஹாரன் கொடப்பா, குருடனோ என்னவோ?”

"சும்மா இரு ஸாமீ. அந்தப் பய உயிரை மதிக்கல்லே, நமக்கென்ன?.”

"ஐய்யோ-அப்பா!...” குரூரமான ஒர் அலறல் ‘ஆட்டோ’ நின்றது.அது அவன்மேல் ஏறி விட்டது. எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. டிரைவர் மலங்க மலங்க விழித்தான்.

தூரத்தில் ஒருபோலீஸ் கான்ஸ்டபிள் ஓடி வருவதைக் கண்டதும் எனக்கு உடம்பு ‘வெட வெட’ வென்று நடுங்கியது. ஒடிவிடலாமா என்றுகூடத் தோன்றியது. ஆனால் அப்படிச் செய்யவில்லை.

"கொஞ்சம் இருங்க, ஒரு தந்திரம் செய்றேன்” என்று அவன் குபீரென்று ஒடி ஆட்டோ ரிக்ஷாவுக்குள் அடியிலிருந்து ஏதோ சீசாவை எடுத்தான். சக்கரத்தின் அடியில் அடிபட்டுக் கிடந்த பிச்சைக்காரனின் கையில் அதைத் திணித்துவிட்டு நின்று கொண்டான். விளக்கொளியில் அது ஒரு பிராந்திபாட்டில் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது.

இரண்டே நிமிஷத்தில் கூட்டம் கூடிவிட்டது. போலீஸ்காரர்களும் இரண்டு மூன்று பேர் வந்துவிட்டார்கள்.

எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல அவமானமாக இருந்தது. சமூகத்தில் பேரும் புகழும் பெற்ற ஒரு வக்கீல் இந்த மாதிரிச் சில்லறை விபத்தில் மாட்டிக் கொண்டால் பத்திரிகையிலே தலை உருளுமே..? என் மனம் வெட்கத்தால் குன்றியது!

“ஸார் பாருங்க ஸார்!. பயல் நிறையச் குடிச்சிட்டுத் தன் நினைவில்லாமல் தெருவிலே நடந்து வந்தான். கை வலிக்கிறாப்பலே ஹாரன் அடிச்சேன். பாவிப் பய காதிலேயே போட்டுக்கலை சார். இதோ பாருங்கள். கையிலேகூடப்பிராந்திப் புட்டி வச்சிருக்கான்...!”

டிரைவருடைய நாடகத்தை அந்தக் கூட்டம் உண்மையாகவே நம்பியது.

ஆம்புலன்ஸ் வந்தது. போலீஸ் ஜீப்பும் வந்தது. காரில் அடிபட்டு விழுந்தவனை அதே நிலையில்-பிராந்திப் புட்டியும் கையுமாகப் போட்டோ எடுத்தார்கள். கால் மணி நேரத்தில் பத்திரிகை நிருபர்கள் வேறு காமிராவும் கையுமாக ஓடிவந்துவிட்டார்கள். அடிபட்டவனை ஆம்புலன்ஸ் ஏற்றிக் கொண்டு போயிற்று. நானும் டிரைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்டோம். சப்-இன்ஸ்பெக்டர் எனக்கு ஜாமீன் வேண்டுமென்றார். நான் ஒரு மனிதரை போனில் அழைத்து ஜாமீன் கொடுக்கச் செய்தேன்.அவர் ஸ்டேஷனுக்கு வந்து ஜாமீன் கொடுத்தார். ஆட்டோ டிரைவரை ‘ரிமாண்டில்’ வைத்துவிட்டார்கள். அடிபட்டவன் ஸ்தலத்திலேயே மாண்டிருப்பதாக ஆஸ்பத்திரியிலிருந்து போலீசுக்குச் செய்தி வந்தது.

"நீங்கள் போகலாம். சம்மன் வரும்போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும்” என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.

‘அந்த டிரைவருக்கு ஜன்ம தண்டனை விதிச்சு, இனி ஆட்டோ ரிக்ஷாவையே தொட முடியாமல் செய்ய வேண்டும்’ என்று நான் முடிவு செய்தேன்.

எதை எதிர்பார்த்துப் பயந்தேனோ அது வீண் போகவில்லை. மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்த விபத்துச் செய்தி வந்துவிட்டது. ஆனால் ஒர் அதிசயம். விபத்து டிரைவரின் அஜாக்கிரதையால் நிகழ்ந்ததென்றோ, அவன்தான் விபத்துக்குக் காரணம் என்றோ, ஒரு பத்திரிகையாவது எழுதவேயில்லை!

‘விபத்துக்குள்ளான பிச்சைக்காரன் குடிபோதையில் இருந்ததால் ‘ஆட்டோ’ முன் விழுந்துவிட்டான்’ என்ற பல்லவியை எல்லாப் பத்திரிகைகளும் பாடியிருந்தன. சில பத்திரிகைகளில் சாராயப் புட்டியோடு கூடிய அடிபட்டவனின் படம்கூட வெளியாகியிருந்தது.

“மேற்படி வாடகை ஆட்டோவில் பிரயாணம் செய்து கொண்டிருந்தவர் மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல வக்கில் ஸ்ரீ...... என்பது குறிப்பிடத்தக்கது!” இந்த வரிகளைப் படிக்கும்போது மட்டும் என் மனம் அடித்துக் கொண்ட வேகம் சொல்லி முடியாது.

அன்று மாலையில் அந்த டிரைவரும் ஜாமீனில் வெளிவந்துவிட்டான். வந்ததும் வராததுமாக நேரே என்னிடம் ஓடிவந்தான்.

"சாமீ. நீங்கத்தான் காப்பத்தானும், நிசத்தை வெளியிட்டுட்டீங்கன்னா நான் அகப்பட்டுக்கிடுவேன். பிள்ளை குட்டிக்காரன் மேலே இரக்கம் காட்டுங்க”

“நீ ஒரு ராட்சஸன். உன்னை என்ன செஞ்சாலும் தகும். உனக்கு இரக்கம் ஒரு கேடா?”

“ஐயையோ அப்படிச்சொல்லாதீங்க.நான் சரியானபடி சாட்சியங்களை எல்லாம் தயார்ப்பண்ணிட்டேனுங்க.எல்லாரும் என்வழிப்படி சொல்லச் சம்மதிச்சிட்டாங்க... நீங்களும்...”

"நான் உண்மையைத்தான் சொல்வேன்.”

"ஐயோ சாமீ!....மடத்தனமாகக்குடிச்சிட்டுஅன்னிக்கி அப்படி நடந்துக்கிட்டேன். நடந்ததை எல்லாம் மறந்து மன்னிச்சிடுங்க. பணத்தைப் பணம்னு பாராமே செலவழிச்சு வக்கீலுக்கும் சாட்சியங்களுக்கும் கொடுத்திருக்கேனுங்க.."

"நீ செய்த துரோகம் உனக்கே நன்றாக இருக்கிறதா? ஒரு அப்பாவிப் பிச்சைக்காரனை...”

"துரோகந்தானுங்க, ஆனா என்ன செய்யிறது? எனக்காக மட்டுமா செஞ்சேன்? உங்க கெளரவமும் சம்பந்தப்பட்டிருந்ததே? ஏதாவது தந்திரமாகச் செய்தால்தானே தப்பிக்கலாம்? அதான் அப்படிச் செய்தேனுங்க”

“சரி, எப்படியாவது தொலை”

“எப்படியோ, உள்ளதை வெளியிட்டிடாதீங்க, காலிலே விழுந்து கும்பிடறேன்.” அந்த டிரைவர் உண்மையாகவே என் காலில் விழுந்துவிட்டான்.

அவனது பொய்யில் என் கெளரவமும் உள்ளடங்கியிருப்பதாக அவன் சொன்ன சொல் என்னைத் திகைக்கச் செய்தது!

“நான் காட்டிக் கொடுக்கவில்லை, போ..!"

அன்று, என் கண் முன்னேயே நீதி செத்தது. இன்றோ, உண்மைக் கொலைகாரன் யார் என்ற மெய் எனக்குத் தெரியும். தெரிந்து என்ன பிரயோசனம்? என் கெளரவம் அந்த மெய்யைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. ஒர் அப்பாவிப் பிச்சைக்காரன் மேல் ஆட்டோரிக்ஷாவை ஏற்றிக் கொன்ற அந்த டிரைவரை நான் நினைத்தால் காட்டிக் கொடுக்க முடியும். ஆனால், அந்த விபத்து நடக்கும்போது அவனுடன் நானும்கூட இருந்திருக்கிறேன். உண்மையைச் சொன்னால் கேஸ் என் பேரிலும் தொடருமே?

விசாரணை நாள் வந்தது. கோர்ட்டில் ஒரே கூட்டம். பிச்சைக்காரனுக்கு யார் வக்கீல்? - ஒருவருமே கிடையாது. சர்க்கார் தரப்பு வக்கீலும் டிரைவரின் வக்கீலும் காரசாரமாக விவாதித்தனர்.

‘டிரைவர் மேல் குற்றமே இல்லை. பிச்சைக்காரன் குடித்துவிட்டு ரோட்டில் அசையாமல் நின்றான். அதனால்தான் விபத்து ஏற்பட்டது!’ என்பதற்கு ஐந்தாறு பேர் சாட்சி கூறினார்கள்.

“பிச்சைக்காரனுக்குக் குடிப்பழக்கம் உண்டு!” என்று அவனைச் சேர்ந்த வேறு சில பிச்சைக்காரர்கள் வந்து சாட்சி கூறினார்கள். எல்லாம் டிரைவரின் பணம் செய்த வேலை.

‘பிச்சைக்காரனின் மரணத்திற்கு அவனே காரணம். அவன் குடித்துவிட்டு வேண்டுமென்றே ஆட்டோரிக்க்ஷாவுக்கு முன்னே வந்து விழுந்ததால்தான் இறக்க நேர்ந்தது. டிரைவர் நிரபராதி!’ என்று சட்டம் தீர்ப்பு வழங்கியது!

சாயங்காலம் அந்த டிரைவர் வந்தான். பழம், மாலை முதலியனவும் அவனுடன் வந்தன.

அவனுடைய பரிசுப் பொருள்களைக் காலால் உதைத்தேன். நான் விம்மினேன்.

ஆம்! அன்று மெய்க்கு மனிதன் பயந்தான்; இன்று மனிதனுக்கு மெய் பயப்படுகிறது. அன்று சத்தியம் மனிதனை ஆண்டது. இன்று சத்தியத்தை மனிதனின் சட்டம் ஆளுகிறது.

(உமா, மே, 1957).