நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/நாமொன்று நினைக்க..!

23. நாமொன்று நினைக்க...!
(உள்ளொன்று வைத்து)

“சார்! உங்களை இன்று டிஸ்சார்ஜ் செய்து விட்டோம். நீங்கள் போகலாம். அழைத்துக் கொண்டு போக யாரும் வரவில்லை போலிருக்கிறதே?”

அன்று காலையில் முதன் முதலாக வார்டினுள் நுழைந்ததும் இராமநாதனிடம் வந்து டாக்டர் இப்படிக் கூறினார். டாக்டருக்கு மரியாதை செய்கிற பாவனையில் எழுந்து நின்ற இராமநாதன், “பரவாயில்லை சார்! பஸ் ஸ்டாப் ஆஸ்பத்திரி வாசலில்தானே இருக்கிறது. நானாகவே பஸ் ஏறி வீட்டுக்குப் போய் விடுவேன்.” என்று அவருக்குப் பதில் கூறினான்.

“சரி! அப்படியே செய்யுங்கள். வீட்டுக்குப் போன பின்பும், நான்கு நாள் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் ஒய்வாகவே இருங்கள்.” என்று கூறி விட்டு டாக்டர் போய் விட்டார்.

குடலில் ‘அல்ஸர்’ (ஒரு வகைப் புண்) ஏற்பட்டு ஒரு மாத காலம் ஆஸ்பத்திரி வார்டில் நோயாளியாகப் படுத்துக் கிடந்த இராமநாதன் அன்றுதான் சூரிய வெளிச்சத்தைக் கண்ணால் பார்க்கப் போகிறான். ஆஸ்பத்திரி வார்டிலிருந்து வெளியேறி ஒளியும், ஆரவாரமும் நிறைந்த வெளியுலகத்து மண்ணை மிதிக்கப் போகிறான்.

“என்ன சார் வீட்டுக்குக் கிளம்பியாயிற்றா” வார்டின் நர்ஸ் இனிய குரலில் புன்முறுவலோடு அவனை விசாரித்தாள்.

“ஆமாம் நர்ஸ்! போய் வரட்டுமா? மறந்துவிடாதீர்கள்.” சம்பிரதாயமாக அவளிடம் விடைபெற்றுக் கொண்டான் அவன்.

“உங்கள் மனைவி வரவில்லையா, அழைத்துக் கொண்டு போவதற்கு”

“அவளால் எங்கே வர முடியப்போகிறது நர்ஸ்? நானாகத்தான் பஸ் ஏறிப் போக வேண்டும்”

- உடனிருந்த மற்ற நோயாளிகளிடமும் விடை பெற்றுக் கொண்டு இராமநாதன் அங்கிருந்து வெளியேறினான். ஆஸ்பத்திரி வாயிலை ஒட்டினாற் போன்றிருந்த பஸ் நிறுத்தத்தில் வந்து நின்று கொண்டான். பஸ்ஸிற்குக் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை நேரம். நகரத்திற்கே பொதுவான பெரிய சர்க்கார் ஆஸ்பத்திரி வாசல். நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்களும், போகிறவர்களுமாகக் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்?

நோயால் பலவீனமுற்றிருந்த இராமநாதனின் உடல் காலை வெயிலைத் தாங்கிக் கொண்டு நிற்கமுடியாமல் சிறிது தள்ளாடியது. கார்களின் ஹரான் ஓசை, ரிக்‌ஷாக்களின் குரல், தெரு நடமாட்டம், எல்லாவற்றையும் ஒரு மாதத்துக்குப் பின் மீண்டும் கேட்டபோது, திடீரென்று கலகலப்பு நிறைந்து வேகமாக இயங்கும் புதிய உலகம் ஒன்றிற்கு வந்துவிட்டாற்போல் தோன்றியது.

“என்ன சார் உடம்புக்குத் தேவலையா?” குரலைக் கேட்டு இராமநாதன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய ஆபீஸ் ஹெட்கிளார்க் ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். கேட்டவருக்குப் பதில் சொல்லாமல் இருக்க முடியுமா?

“தேவலை சார்! இன்றைக்குத்தான் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி, வீட்டுக்குப் போகிறேன்.”

“நல்லது! உங்களை ஆஸ்பத்திரியில் வந்து பார்க்க வேண்டுமென்று எண்ணம். ஒருநாள்கூட வரமுடியவில்லை.தற்செயலாக இன்றைக்கு வேறொரு காரியமாக இங்கே வந்தேன். உங்களையும் சந்தித்துவிட்டேன். வரட்டுமா?”

“சரி. போய் வாருங்கள்…” ஹெட்கிளார்க் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். இராமநாதன் மனம் சிந்தனைகளால் குழம்பியது.

“நோயாகக் கிடக்கும்போதுதான் ஒரு மனிதனுக்கு அனுதாபமும் ஆறுதலும் தேவை. அப்போது அவற்றை அளிக்காமல் உடல் தேறி எழுந்து வந்தபின் அனுதாபப்படுவது போல் நடிப்பதும், ‘உங்களைப் பார்க்க வரவேண்டுமென்று நினைத்தேன்; முடியவில்லை’ என்று சொல்வதும் யாருக்கு வேண்டும்? சே! சே! ஒவ்வொரு மனிதனும் நெஞ்சில் ஒன்றை நினைக்கிறான். வாயில் ஒன்றைப் பேசுகிறான். நெஞ்சார அனுதாபம் இல்லாதவன்கூட அனுதாபப்படுவது போல நடிப்பதைத்தான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.”

பஸ் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டே இருந்தது. உடலின் தளர்ச்சி காரணமாகக் கூட்டத்துடன் சேர்ந்து முண்டியடித்துக் கொண்டு ஏறத் தயங்கினான் இராமநாதன். கூட்டம் குறைந்ததும் ஒரு பஸ்ஸிலாவது வசதியாக இடம் கிடைக்குமென்பது அவன் நம்பிக்கை.

வீட்டைப் பற்றிய நினைவு வந்தது, அவனுக்கு ‘இன்றைக்கு ‘டிஸ்சார்ஜ்’ ஆவது தன் மனைவிக்குத் தெரியுமோ, தெரியாதோ? தெரிந்தால்தான் என்ன? அவளால் வந்து கூட்டிக் கொண்டு போக முடியாதே! வயிறும் பிள்ளையுமாக நிறை மாதத்தில் இருப்பவள் எப்படி வரமுடியும்?’ என்று நினைத்து மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டான். ரொட்டி, பால், தக்காளி என்று ஆஸ்பத்திரி உணவுகளைச் சாப்பிட்ட உடல் தளர்ந்திருந்ததில் வியப்பில்லை. வயிற்றில் பசி, மனத்தில் வெளி உலகத்தின் போலி அனுதாபத்தைப் பற்றிய வெறுப்பு, உடலில் தளர்ச்சி… இவற்றோடு பஸ் நிறுத்தத்தில் கழிந்து கொண்டிருந்தது அந்த மாஜி நோயாளியின் நேரம்.

“ஹல்லோ மிஸ்டர் இராமநாதன்! செளக்கியமா? பஸ்ஸிற்காக நின்று கொண்டிருக்கிறீர்களோ?…”

இராமநாதன் மறுபடியும் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பழைய நண்பர் ஒருவர் நின்றார்.

“செளக்கியந்தான்! வாருங்கள். எங்கே இப்படி? இந்தப் பக்கமாக” இராமநாதன் அவரை வரவேற்றான்.

“சும்மாத்தான் இப்படி வந்தேன். அது சரி… உங்களுக்கு ஏதோ “அல்ஸர்” வந்து ஒரு மாதமாக ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருந்தீர்களாமே?”

“ஆமாம்! என்ன செய்வது? போதாத வேளை”

“அடாடா பாருங்கள்… உங்களுக்கு உடம்பு சுகமில்லை என்ற விஷயமே எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் சார். வந்து பார்க்க வேண்டும் என்றிருந்தேன், முடியவில்லை… இப்போது தேவலைதானே?”

“ஊம்! தேவலைதான்.” இராமநாதனுக்கு ஒரே எரிச்சலாக வந்தது. இந்த மாதிரி விசாரணையை இன்னும் நான்கு பேர் செய்தால் போன நோய் திரும்பி வந்துவிடும் போல் தோன்றியது. செத்துப் போனவனிடம் போய், ‘நீங்கள் செத்துப் போய்விட்டீர்களாமே!…’ என்று கேட்பதுபோல் பொருத்தமில்லாமல் இருந்தது இந்த விசாரணை.

“நான் வரட்டுமா? உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் சார்!…”அவர் கிளம்பினார்.

இராமநாதன் பொம்மையைப் போல் தலையை அசைத்தான்.அவன் மனத்தில் ஒரு குமுறல்!

‘முப்பது நாட்களாக ஏங்கினேன், எதற்கு? யாராவது நண்பர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், பார்க்க வருவார்கள்; அனுதாபமாக நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போவார்கள்’ என்று நாள் நாளாக நிமிஷத்திற்கு நிமிஷம், மணிக்கு மணி ஏங்கினேன். ஒரு பயல் எட்டிப் பார்க்கவில்லை. ‘சார் இருக்கிறீர்களா? செத்துவிட்டீர்களா?’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. பார்க்கப் போனால் மனிதனுக்கு மனிதன் என்ன இருக்கிறது? பரஸ்பர அனுதாபத்தை உண்மையாகச் செலுத்தும் உரிமைகூட இல்லாவிட்டால் நெஞ்சில் சுயநலம்; உதட்டில் எல்லோருக்காகவும் அனுதாபப்படுவதுபோல் விசாரணைகள்.

“சீ! மானங்கெட்ட பயல்கள். இவர்கள் விசாரிக்கவில்லையென்று எவன் அழுதான்? வரவேண்டுமென்று நினைத்தார்களாம். வரமுடியவில்லையாம்… பொய்! அவ்வளவும் பொய்! நினைத்திருந்தால் செய்வதற்கா அதிக நேரமாகி விடும்? பசித்தவனுக்குத்தானே சோறு வேண்டும்? நோயாயிருக்கும்போது தரவேண்டிய அனுதாபத்தை இப்போது காட்டி உயிரை வாங்குகிறார்களே!…” இராமநாதன் கீழே காறித் துப்பினான்.அவன் மனப்புகைச்சல் இன்னும் அடங்கவில்லை. நோயாய் கிடந்து எழுந்தவனுக்கு இப்படி ஒரு மன உளைச்சல் பிறரை வெறுக்கும் அளவு இருப்பது இயற்கை. இராமநாதனும் அத்தகைய மனநிலையில்தான் இப்போது இருந்தான்.

கால் கடுக்க நின்று கொண்டிருந்ததுதான் மிச்சம். ‘பஸ்’ இன்னும் கிடைக்கவில்லை. அவனுடைய கவலை ‘பஸ்’ கிடைக்கவில்லையே என்பதற்காக அல்ல. இந்த இடத்தில் நின்று கொண்டிருந்தால் இன்னும் யாராவது தெரிந்தவர்கள் வந்து அனுதாப விசாரணையைத் தொடங்கிவிடுவார்களோ என்று அஞ்சினான். பேசாமல் வீட்டுக்கு ஓடிச் சென்று கதவை அடைத்துக் கொண்டு யாரையும் பார்க்காமல் ஆத்திரம் தீர அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு ‘அல்ஸருக்கு’ சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு மாத வீவுக்கு விண்ணப்பம் அனுப்பியபோது வீவு சாங்ஷன் செய்ய மறுத்த அதே ஆபீஸ் ஹெட் கிளார்க் இப்போது அனுதாபம் விசாரிக்கிறான். இந்த அனுதாபத்துக்கு என்ன விவஸ்தை இருக்கிறது? செயலில் காட்ட முடியாமல் வாயளவில் காட்டும் அனுதாபம் யாருக்கு வேண்டும்?

‘ஆஸ்பத்தியில் ஒரு மாதமாகப் படுக்கையில் கிடக்கிறேன். கையில் செலவுக்கு வறட்சி. ஒரு ஐம்பது ரூபாய் கைம்மாறாகக் கொடுத்து அப்புறம் வாங்கிக் கொள்’ என்று எழுதிக் கொடுத்துவிட்ட கடிதத்துக்குப் பதில் சொல்லாமலே திருப்பி அனுப்பிய நண்பர், “உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படி…” இப்போது எனக்கு அறிவுரை கூறுகிறார்.

‘ஐயோ! பாழாய்ப் போன பஸ் கிடைக்கமாட்டேனென்கிறதே. இவர்கள் முகத்திலெல்லாம் முழிக்காமல் வீட்டுக்கு எப்போது போய்ச்சேருவோம்?’ என்று எண்ணி மனம் புழுங்கியவாறு நின்று கொண்டிருந்தான் இராமநாதன். கடந்து போன அந்த ஒரு மாதமாக அவன் கடுமையான நோயுடன் ஆஸ்பத்திரியின் வார்டே கதி என்று கிடந்திருக்கிறான். ஆனால் அதற்காக உலகத்தின் எந்த மூலையிலும் எவரும் உண்மையாக அனுதாபப்பட்டதாக அவனுக்குத் தெரியவில்லை. உலகம் முழுவதுமே இப்படித்தான் போலிருக்கிறது! அடுத்தவன் செத்துக் கொண்டிருந்தாலும் திரும்பிப் பாராமல் தன் வழியில் நடக்கத் தயங்காத மிருகக் குணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் மறைந்திருக்கிறது. நாகரிகப் போர்வையால் வெளியே அனுதாபப்படுவதுபோல் அதை மறைத்துக் கொண்டு வாழ ஒவ்வொருவனும் நடிக்கிறான். உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்கிறான். நெஞ்சில் நஞ்சு குமுற நினைத்துக் கொண்டே வாயில் தேன் சுரக்கப் பேசுகிறான்.

“ஐயா செளக்கியங்களா? பஸ்ஸுக்கு நிற்கிறீங்க போலிருக்கு?” இராமநாதனின் ஆபீஸ் பியூன் முனியப்பன் கையில் ஒரு பிளாஸ்குடன் வந்தான். இன்னொரு கையில் பழக்கூடை இருந்தது.

"எல்லாம் செளக்கியந்தான் எங்கே இப்படி வந்தே?”

“மானேஜர் வீட்டு அம்மா உடம்புக்குச் சுகமில்லாமே இந்த ஆஸ்பத்திரியிலே இருக்காங்க இந்தப் பிளாஸ்கையும் பழங்களையும் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வரச்சொல்லி ஐயா உத்தரவு…”

“அப்படியா? சரி. போய்க் கொடுத்துவிட்டு வா… பார்வை நேரம் முடிந்துவிடப் போகிறது.”

“ஒரு மாதமாச் சுகமில்லாமல் இருந்தீங்களாம். வந்து ஒரு வாட்டி பார்க்கக்கூட முடியவில்லை. என்னங்க செய்யிறது? அடிமைப் பய வேலை.”

‘சரிதான் போய்ச் சேர்! நீ வந்து பார்க்கவில்லை என்று ஏங்கி நான் செத்துப் போய்விடவில்லை.’ என்று சொல்லத் துடித்தது இராமநாதன் நாக்கு. ஆனால் சொல்லவில்லை. முகத்தைச் சுளித்தான். உதட்டைக் கடித்துக் கொண்டான்.

“அப்போ நான் வருகிறேனுங்க…”

“ஆகா! பேஷாகப் போய்விட்டு வா! மானேஜர் வீட்டு அம்மாள் காத்துக்கொண்டிருப்பாள்…”

அவன் போய்விட்டான். ‘பாவம்! இவனைச் சொல்லி என்ன குற்றம்? இவனை அதிகாரம் செய்கிறவர்கள் யாரோ அவர்கள்மேல்தான் இவன் அனுதாபத்தைக் காட்ட முடியும்.’ இராமநாதன் தனக்குள் நினைத்துக் கொண்டான். ஏனோ தெரியவில்லை! இந்த உலகத்தின் சபிஸ்தமான சகல உயிர்களும் எதை நோக்கியோ, எதற்காகவோ, மனத்தை மறைத்து வேஷம் போடுவதாக எனக்குத் தோன்றியது. உணர்வுக்கு மட்டுமே புலனாகக்கூடிய ஓர் சலனம் அவனிடத்தில் ஏற்பட்டுவிட்டது.

‘இந்த மாலையை ஒரு பெரிய தலைவருக்குப் போடுவதற்காகக் கொண்டு வந்தோம்.அவர் இன்றைய ரயிலில் வரவில்லை.அதனால் உங்களுக்குப் போடுகிறோம்’ ― என்று சொல்லிக் கொண்டே மற்றோர் சிறிய தலைவருக்கு அந்த மாலையைப் போட்டால் அவர் மனத்தில் எவ்வளவு அருவருப்பு உண்டாகுமோ, அவ்வளவு அருவருப்பு இராமநாதன் மனத்தில் உண்டாயிற்று. அவன் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே நோய்ப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்தபோது ஒருவராவது அவனைப் பார்க்க வரவில்லை. இப்போது வந்து அனுதாபம் விசாரிக்கிறவர்களும் ஏதோ தற்செயலாக அவனை வழியில் சந்தித்துவிட்ட குற்றத்திற்காக ‘கேட்டு’ வைப்போமே ― என்று கேட்டுவிட்டுப் போகிறார்கள். அவன் ஆண்மகன்! தன்மானமுள்ளவன். உள்ளத்திலிருந்து பிறக்கின்ற உண்மையான இரக்கம்தான் அவனுக்கு வேண்டும்.

‘போனால் போகிறது’ என்பதுபோல் கேட்கும் வாய் அனுதாபம் அவனுக்குத் தேவையில்லை. அந்த அனுதாபத்தைப் பொறுத்துக் கொள்வதைவிட முதுகில் நாலு விழுந்தால்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.

“என்னா சாமீ? பஸ் இப்போதைக்குக் கிடைக்காது. நம்மவண்டியிலே போகலாம். எட்டனா கொடு போதும்” ஒரு ரிக்‌ஷாக்காரன்.

“வேண்டாமப்பா!”

மேலும் பத்து நிமிஷம் கழிந்தது. “இந்தாருங்கள்! இதென்ன நோயாய்க் கிடந்த உடம்போடு வெயிலில் நின்று கொண்டு?…” இராமநாதன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். மேலும் திடுக்கிட்டான்.

அவன் மனைவி ராஜம் காபிக் கூஜாவுடன் மெல்ல அசைந்து நடந்து அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

“இதென்ன அசட்டுக் காரியம் செய்தாய் ராஜம்? நிறை மாதத்தில் வயிறும் பிள்ளையுமாக இப்படி வரலாமா? எனக்கு வர வழியா தெரியாது” அவன் அவளைக் கடிந்து கொண்டான்.

“எல்லாம் வரலாம்! வந்தால் ஒன்றும் குடி முழுகி விடாது. இந்தாருங்கள் இந்தக் காபியைக் குடியுங்கள் முதலில்…”அவன் வாங்கிக் குடித்தான்.

“பஸ்ஸில்தானே வந்தாய்?”

“இல்லை. பஸ்ஸே கிடைக்கவில்லை, நடந்துதான் வந்தேன்.”

“அடி பாவி!” - அவன் இரைந்து கத்திவிட்டான்.

“உஷ்! இங்கே இரைச்சல் போடாதீர்கள். நான் வராவிட்டால் நீங்கள் பசியோடு பஸ்ஸிற்கு எவ்வளவு நாழி காக்க வேண்டியிருக்கும்?”

அவன், வயிற்றின் தாய்மை முகத்தில் பொலியும் தன் மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். “இந்த அன்பும் அனுதாபமும் பொய்யில்லை. உரிமை இருந்தால் உண்மையான அனுதாபம் பிறக்க முடியும்” - என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

(சமூக ஊழியன், 15.11.1957)