நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/உறியடி

24. உறியடி

ன்னிய நத்தம் ஆதி நாராயணப் பெருமாள் கோவில் வாசலில் எள் போட்டால் எள் விழ இடமில்லை. அவ்வளவு கூட்டம், வாணவேடிக்கைகள் என்ன, பொய்க்கால் குதிரை விளையாட்டென்ன, சதிர்க் கச்சேரிகளென்ன, சங்கீதக் கச்சேரிகளென்ன, ஊர் திருவிழாப் பட்ட பாடு பட்டுக் கொண்டிருந்தது. ஆதி நாராயணப் பெருமாளின் உறியடித் திருவிழா என்றால் அக்கம் பக்கம் இருபது கல் சுற்றளவிலுள்ள எல்லாச் சிற்றூர்களுக்கும் பிரசித்தமான விஷயம் அது.

ஆவணி மாதம் கண்ணன் பிறப்புக்கு மறுநாள் ஆண்டு தோறும் உறியடித் திருநாள் நடப்பது வழக்கம். அன்று இரவு எட்டு, எட்டரை மணிக்குப் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். பெருமாள் கோயிலைச் சுற்றி பிரகார வழியே புறப்பட்டு உறியடிக்காகத் தயிர்ச் சட்டிகளைக் கட்டித் தொங்க விட்டிருக்கும் மரத்துக்கு எதிரே வந்ததும் உறியடி நடை பெறும். உறியடிக்காகவே பரம்பரையாகக் கோயில் மானியம் பெற்று வரும் கரையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமியை வணங்கி விட்டு அர்ச்சகர்கள் செய்யும் வழக்கமான மாலை, பரிவட்ட மரியாதைகளுக்குப் பின் உறிச் சட்டிகளை அடிக்க ஆரம்பிப்பார்கள். சட்டிகளை அடிப்பதற்காக எட்டு ஒன்பதடி உயரமுள்ள கருங்காலி மரக்கழிகளை வைத்துக் கொள்வதுண்டு.

உறியடி நிகழ்ச்சி பார்ப்பதற்கு மிகவும் ரஸமான காட்சியாக விளங்கும். ஒன்பது சிறு மண் கலயங்களில் பசுவின் தயிரை நிரப்பி ஒரு மூங்கில் சட்டத்தில் வரிசையாகக் கட்டித் தரையில் ஊன்றிய இரண்டு மரங்களுக்கு நடுவே தொங்க விட்டு விடுவார்கள். உறிக் கலயங்கள் தொங்கும் சட்டத்தின் நடுவே ஒரு கயிற்றைக் கட்டி அதன் நுனியைப் பிடித்துக் கொண்டு பின்புறம் ஒருவன் நிற்பான். அருகே, மஞ்சளும் சுண்ணாம்பும் கரைத்த தண்ணீரைப் பீச்சாங்குழலில் அடைத்துக் கொண்டு மற்றோர் ஆள் நிற்பான். உறியை அடிக்கும் கரையாளன் பத்து கெஜ தூரத்துக்கு முன்னாலிருந்தே ஓடி வந்து தரையிலிருந்து எழும்பிக் குதித்துக் கம்பை ஓங்கி அடிப்பதற்கு முயல்வான். சரியாக அதே நேரத்தில் பின்புறம் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவன் உறிச் சட்டத்தை விறுவிறுவென்று மேலே தூக்கி விடுவான். பீச்சாங்குழல்காரன் சுண்ணாம்பு நீரைச் ‘சர்ர்’ரென்று கரையாளனின் முகத்தைக் குறி வைத்துப் பீய்ச்சுவான். கயிறு இழுக்கப்பட்டதால், உறிச் சட்டம் ஓங்கிய கம்பின் குறியை மீறிக் கொண்டு மேலே உயர்ந்து விடும்.அதே சமயம் பாய்ச்சப்பட்ட சுண்ணாம்பு நீர் முகத்திலும் கண்களிலும் வழிந்து கண் பார்வையை மறைக்கும். கரையாளன் ஏமாறுவான். அப்போதெல்லாம் கூட்டத்தில் அலையலையாகச் சிரிப்பொலிகள் கிளம்பும். இவ்வளவு இடையூறுகளையும் பொறுத்துக் கொண்டு எந்தக் கரையாளன் சீக்கிரமாக ஒன்பது மண் கலயங்களையும் அடித்துக் கீழே நொறுக்கித் தள்ளுகிறானோ, அவனைக் கூட்டம் முழுவதும் கொண்டாடிப் போற்றும். இதுதான் உறியடித் திருவிழா என்பது.

கரையாளன் கம்பை ஓங்கி வேகமாக ஓடிவரும்போது திடீரென்று உறி எட்டாத உயரம் போவதும், அவன் அடிக்க முடியாமல் சுண்ணாம்பு நீர் கண்ணைக் கரிக்கத் திணறிக்கொண்டிருக்கும்போது, உறி எட்டுகின்ற உயரத்திற்கு வருவதும், வேடிக்கையாக இருக்கும்.

‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்று பழமொழி சொல்வார்களே - அந்த மாதிரி எட்டும்போது அடிக்க முடிவதில்லை. அடிக்க முடிகிறபோது எட்டுவதில்லை. இதில் ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவமே பொதிந்து கிடப்பதுபோல் எனக்குத் தோன்றியது. வருஷா வருஷம் உறியடித் திருவிழாவின்போது அந்தத் தத்துவம் என் சிந்தனையில் வியாபித்துவிடும்.

‘வாழ்வில் எட்டுவதுபோலத் தோன்றும் எதுவும் உண்மையில் எட்டுவது இல்லை. எட்டாதது போலத் தோன்றுவது எதுவும் உண்மையில் எட்டாதது இல்லை. இப்படி நடந்துவிடும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டிருப்பது அப்படி நடக்காமல் போய்விடுகிறது. இப்படி நடக்காது என்று கணக்கிட்டு முடிவு கட்டிவைத்திருப்பது அப்படியே நடந்துவிடுகிறது!’

இந்த உண்மையை உலகத்திற்கு விளக்குவதற்காகத்தான் ஆதிநாராயணப் பெருமாள் வருஷந் தவறாமல் உறியடித் திருநாள் கொண்டாடுகிறாரோ, என்னவோ? அன்றும் உறியடியாகையினால் மனத்தில் மேற்கண்ட சிந்தனைகள் நிழலாட வேறு பொழுதுபோகாமல் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.ஆறாவது ஆவர்த்தனமான வெற்றிலைப் பெட்டியைத் திறந்து வெற்றிலைபோடத் தொடங்கிய சமயத்தில் திருவடியாப்பிள்ளை வந்து சேர்ந்தார்.

“வாருங்கள், வாருங்கள்! உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... உறியடி அமர்க்களப்படுகிறதே!...”

"ஆமாம்! அமர்க்களத்துக்குக் கேட்பானேன்? அதுவும் இந்த வருஷம் பீஷ்மக் கரையாளன் உறியடி வெளுத்துக் கட்டிவிடுவான். பயல் குறி வைப்பதில் எம்டன்!”

“என்ன, பீஷ்மக்கரையாளனா? கேள்விப்படாத பெயராயிருக்கிறதே? அப்படிக் கூடவா அந்தச் சாதியில் பெயர் வைக்கிறார்கள்?”

“அது அவன் சொந்தப் பெயர் இல்லை. சேது ராமலிங்கக் கரையாளன் என்பது இயற் பெயர். இப்போது அவனுக்கு ஐம்பத்திரண்டு வயது. இன்னும் கலியாணமாகவில்லை. ஆள் ஒற்றைக் கட்டைதான். பிடிவாதமாக ஏகாங்கியாயிருக்கிறான். அதனால்தான் ‘பீஷ்மக் கரையாளன்’ என்று அவனுக்குப் பேர் ஏற்பட்டுவிட்டது.”

“என்ன காரணம்? அவன் இத்தனை வயது வரை கலியாணம் செய்து கொள்ளாதது ஏன்? உங்களுக்குத் தெரிந்திருக்குமே.”

“எல்லாம் இந்த உறியடியாலே வந்த வினைதான். அன்றைக்குச் செய்த சத்தியம்தான் ஆள் இதுவரை வேறு பெண் முகத்தைக்கூட ஏறிட்டுப்பார்த்ததில்லை” - திருவடியாபிள்ளை பெருமூச்சுவிட்டார்.

மழைக்காற்று அடித்தால் அருகே எங்கோமழை பெய்து கொண்டிருக்கிறதென்று அனுமானிக்க முடிவதுபோல் திருவடியாபிள்ளை ஒரு விஷயத்தைப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கூறினார் என்றால் அதற்குள் ஒரு கதை பதுங்கிக் கிடக்கிறதென்று நான் கண்டு கொள்வேன்.

“விவரமாக எல்லாவற்றையும் சொல்லுங்கள்? நான் பிள்ளையவர்களைத் தூண்டித் துருவிக் கேட்டேன். இடது கன்னத்தைப் பந்துபோல உப்பச் செய்திருந்த புகையிலைச் சாற்றைக் கீழே இறங்கித் துப்பிவிட்டுத் திரும்பவும் பிள்ளை சொல்லத் தொடங்கினார்.

அந்தக் கதை :

சேது ராமலிங்கத்திற்கு அப்பொழுது இருபத்தைந்து வயது. வாலிபப் பருவத்திற்கேற்றாற் போல் ‘நிகுநிகு’ வென்று வளர்ந்திருந்தான். கருகருவென்று வளர்ந்திருந்த கட்டுக் குடுமியை அள்ளி முடிந்து கொண்டு சிவந்த நெற்றியில் கால் துட்டு அகலத்துக்கு விளங்கும் குங்குமப் பொட்டோடு தெருவில் இறங்கி நடந்து வந்தானானால் காமன் பண்டிகையில் மன்மத வேடம் போடும் இளம்பருவத்து ராஜபார்ட்காரனைப் போல இருக்கும். பூசணிக் கொடியில் நுனிப்பகுதி சுருண்டு மினுமினுப்பதுபோல் காதோரங்களில் குடுமியிலிருந்து பிரிந்த கேசச் சுருள் வளைந்து வளைந்து காட்சியளிப்பது, அவனுடைய முகத்தின் அழகிற்குத் தனிக் களையைக் கொடுக்கும்.

அவன் நிறம் குங்குமச் சிவப்பு. அவனுடைய அழகிய புஜங்களைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமானால் ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று கம்பர் சொல்லுவதைத்தான் சொல்ல வேண்டும்.அவ்வளவு கவர்ச்சிகரமான புஜங்கள் அவை. அளந்து அளந்து படைத்ததுபோல் வனப்பு நிறைந்த அங்கங்களைக் கொண்ட கட்டுமஸ்தான சரீரம் அவனுக்கு. சதா சிரிப்பு கொஞ்சும் அவனுடைய மலர்முகத்தை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். தாமரை இதழ்களைப்போல அகன்ற பிரகாசமான அவன் விழிகளில் தனிப்பட்ட ஒரு கவர்ச்சி தளும்பும்.

இப்படிப்பட்ட அழகான பிள்ளை தன்னுடைய கலியான விஷயமாகத் தகப்பனுடன் முரட்டுத்தனமாகச் சண்டை போட்டுக் கொண்டான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

சேதுராமலிங்கம் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனுடைய தகப்பனார் சண்முகவடிவேலுக் கரையாளர் தான் அவனை வளர்த்துப் பெரியவனாக்கி விட்டிருந்தார். தகப்பனாரிடம் அளவற்ற மரியாதையும் விசுவாசமும் உள்ளவனாயிருந்தும் கலியான விஷயமாக அவர் பார்த்திருந்த பெண் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு எந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருந்ததோ அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் சண்முகவடிவேலுக் கரையாளர் குடும்பத்திற்கும் ஜன்மப்பகை. இதனால் இருவருக்கும் பெருத்த மனஸ்தாபம் ஏற்பட்டது.

“அடே சேது, நீ என்னிடம் முரண்டுபிடிக்கிறது நியாயமில்லே. உன்னைப் பெற்ற அப்பனை உனக்கு மதிக்கத் தெரியணும். உனக்குப் பார்த்திருக்கிற பொண்ணு கருப்பு, அழகில்லை என்கிறதற்காக நீ மறுக்கிறது சரியாகாது. வருகிற ஆவணி மாதம் உறியடித் திருநாளைக்கு மறுநாள் முகூர்த்தம்கூடப் பார்த்துட்டு வந்தாச்சு!”

“நல்லாப் பாருங்க! எனக்கென்ன? தாலி கட்டப்போறவன் நானா இருந்தாத்தானே?”

“அது முறைப்பொண்ணு. கண்டிப்பாக நீதான் தாலி கட்டணும். உனக்கு என்றே பிறந்த பொண்ணை அல்லாட விடக்கூடாது.”

“சூர்ப்பனகை மாதிரி ஒரு அவலட்சணத்தைக் கொண்டாந்து என் தலையிலே கட்டணும்னு சதி செய்றீங்க நீங்க. எனக்கும் வீம்பு, முரண்டு எல்லாம் தெரியும்.”

“சீ! நிதானிச்சுப் பேசுடா கழுதை. உன்னை அந்தப் பொண்ணு கழுத்திலே தாலிகட்ட வைக்கலேன்னா நான் சண்முகவடிவேலுக் கரையாளன் இல்லை. பார்த்துக்கிட்டே இரு.”

சேது ராமலிங்கம் பதில் சொல்லவில்லை. தகப்பனாரோடு மேலும் எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தால், அவருடைய கோபம் எல்லை மீறிக் கையிலகப்பட்டதைத் துரக்கிவிடுவார் என்பது அவனுக்குத் தெரியும். பேசாமல் அவர் முன்னால் நிற்காமல், வேறெங்கோ சென்றுவிட்டான். ஆனால் தான் அவ்வாறு வெளியே சென்றதைத் தன்னுடைய சம்மதமாக அவர் எடுத்துக் கொள்வார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

பையனை எப்படியாவது வற்புறுத்தியோ, அரட்டி மிரட்டியோ தாம் பார்த்திருந்த சம்பந்தத்தை முடித்துவிடுவது என்று பிடிவாதமாக இருந்தார் சண்முக வடிவேலுக் கரையாளர். கலியாணத்தை நிச்சயம் செய்து உறவின் முறையார்களைக் கூட்டி வெற்றிலை பாக்குக்கூடக் கொடுத்துவிட்டார்."என்னய்யா பெரிய கரையாளரே! உம்ம பையன் இந்தப் பெண் வேண்டாம்னு முரண்டு செய்யறானாம், நீர் என்னடா வென்றால் உம் பாட்டுக்கு வெற்றிலை பாக்கு மாற்றி முகூர்த்த நாளும் பார்த்துவிட்டீரே?” என்று சிலர் தம்முடைய சந்தேகத்தை அவரிடம் கேட்டனர்.

“விடலைப் பயல்தானே? இப்ப அப்படித்தான் சொல்லிக்கிட்டிருப்பான். நான் சரிப்படுத்தி விடுவேன். எப்படியும் நம்ம ஆதிநாராயணப் பெருமாள் உறியடித் திருநாளுக்கு மறுநாள் இந்தக் கலியாணம் நடந்தாகணும்.” என்றார் அவர்.

“என்னமோய்யா! உம்ம மகன் இணங்கமாட்டான் என்று ஊரெல்லாம் ஒரே ‘கசமுசலா’ இருக்கு பார்த்துச் செய்யும். சின்னத்தனமாச் சமயத்திலே காலை வாரி விட்டுடப் போறான்” என்று எச்சரித்துவிட்டுப் போனார்கள் அவர்கள்.

எப்படியானால் என்ன? பெரிய கரையாளருக்கும் அவர் மகன் சேது ராமலிங்கத்திற்கும் கலியான விஷயமாக மனஸ்தாபம் ஏற்பட்டுப் பெரிய வாய்ச்சத்தம் வரை முற்றிவிட்டதென்று ஊராருக்குப் பராபரியாகத் தெரிந்திருந்தது. பெரிய கரையாளர் பார்த்திருந்த பெண் ‘அழகில்லை’ என்பதற்காகச் சேதுராமலிங்கம் அந்தப் பெண்ணை வெறுத்துக் கொண்டிருக்கும் விஷயமும் பரவியிருந்தது.

சேதுராமலிங்கத்தின் ஆசையை எல்லாம் கொள்ளை கொண்டிருந்தவள் நாராயணக் கரையாளர் மகள் பூங்காவனம். ஆனால் நாராயணக் கரையாளருக்கும் சண்முக வடிவேலுக் கரையாளருக்கும் குடும்பப் பகை முற்றியிருந்தது. பூங்காவனமும் சேது ராமலிங்கமும் தனிமையில் குளக்கரை மாந்தோப்பில் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருக்கும் விவரம்கூட இரண்டு கரையாளர்களுக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் நாராயணக் கரையாளர் தம் மகளை மென்னியைத் திருகிப் போடக்கூடத் தயங்கமாட்டார். அதேபோல் பகையாளி மகளோடு உறவாடும் குற்றத்துக்காகச் சண்முக வடிவேலுக் கரையாளரும் தம் மகனை அடித்து நொறுக்கியிருப்பார்.ஆனால் இந்தப் பரம்பரை வைரிகளுக்கு கொஞ்சமும் தெரியாமல் இவர்களுடைய காதல் வளர்ந்து அருகே நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்தனர். அன்பு செய்கின்ற விந்தையை மனிதன் எப்படி அளவிடமுடியும்? பூங்காவனமும், சேதுராமலிங்கமும் பிரிக்க முடியாதபடி மனமொருமித்து நெருங்கிப் பழகிவிட்டார்கள். அதனால்தான் தகப்பனார் பார்த்த முறைப்பெண்ணை மணந்து கொள்ள முடியாதென்று மறுத்து முரண்டு பிடித்துக்கொண்டிருந்தான் சேதுராமலிங்கம். இதைப் புரிந்து கொள்ளாமல் தாம் பார்த்து வைத்திருக்கும் பெண் கறுப்பாக இருப்பதனால்தான் அவன் மறுக்கிறான் என்றும் கடைசியில் எப்படியும் அவனைச் சரிக்கட்டி விடலாமென்றும் பகற் கனவு கண்டவாறே கலியாண ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தார் சண்முக வடிவேலுக் கரையாளர்.

ஆனால் சேதுராமலிங்கமோ வேறு விதமாகத் திட்டம் போட்டிருந்தான். கடைசி வரை தகப்பனாருடைய ஏற்பாட்டிற்கு சம்மதிப்பவன் போல் பேசாமல் இருக்க வேண்டியது. முகூர்த்தத்துக்கு முதல்நாள் உறியடி விழா முடிந்ததும் இரவோடு இரவாகப் பூங்காவனத்தையும் அழைத்துக் கொண்டு எங்காவது அக்கரைச் சீமைக்கு ஒடி விடுவதென்று தீர்மானித்திருந்தான். அவனைத் தன் உயிரினுமினியவனாகக் கருதியிருந்த பூங்காவனமும் அதற்கு இணங்கியிருந்தாள். நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.

வன்னிய நத்தத்தில் நாளை விடிந்தால் உறியடித் திருநாள். அதற்கு மறுநாள்தான் தம் மகனுக்கும் வளர்த்து வைத்திருந்த பெண்ணுக்கும் கலியாணம்.ஆகையால் அதில் முழு நேரத்தையும் ஈடுபடுத்தியிருந்தார் பெரிய கரையாளர்.

போதாத குறைக்கு அந்த வருடம் உறியடி முறையும் அவருடையதாக இருந்தது. ஆனால் அதற்காக அவர் ஒன்றும் கஷ்டப்படவில்லை.

“இந்தா சேது! இந்த வருஷ உறியடி முறை நமக்குத்தான். நாளைக்குக் கலியான காரியமா எனக்கு அங்கே இங்கே நாலு இடத்துக்கு அலையனும். நீயே உறியை அடிச்சுட்டுக் கோவில் மரியாதையை வாங்கிட்டு வந்துடு. கலியாணத்துக்கு முதல்நாள் பெருமாளுக்குப் பணி செய்து ஆசி பெற்றது போலவும் ஆகும்” என்று மகனிடம் கூறியிருந்தார்.

“சரி அப்பா! நானே உறியடிக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று அவனும் சம்மதித்திருந்தான். ‘கடைசி நாள், ஊரை விட்டே கண்காணாத சீமைக்கு ஒடப் போகின்றோம். போவதற்கு முன் பெற்ற தகப்பனை ஏமாற்றினாலும் பெருமாளையாவது திருப்திப்படுத்திவிட்டுப் போவோம்’ என்றுதான் அவன் அதற்குச் சம்மதித்திருந்தான். உறியடித்து முடிந்ததும் நேரே குளக்கரை மாந்தோப்புக்குப் போனால், அங்கே பூங்காவனம் ஒடுவதற்குத் தயாராகக் காத்திருப்பாள்.அவளோடு இரவோடு இரவாகவே போய்விட்டால் நாளைக் காலை தூத்துக்குடி சென்று கொழும்புக்குக் கப்பலேறிவிடலாம்.

எல்லாவற்றையும் ஒழுங்காகத் திட்டமாக நடைபெறத்தக்க விதத்தில்தான் நினைத்திருந்தான் அவன். ‘எண்ணங்களை எண்ணுவதுதான் மனிதர்களால் ஆகமுடிவது. எண்ணங்கள் நிறைவேறுவது தெய்வசித்தத்தால் ஆவது’ என்று அவன் கண்டானா என்ன?

உறியடி விழாவின் கோலாகலம் ஊரில் உற்சாகமாகப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அந்தி நேரம் ஆயிற்று. சண்முக வடிவேலுக் கரையாளர் மகனை அழைத்து உறியடிக் கழியைக் கையில் கொடுத்துக் கோவிலுக்கு அனுப்பினார்.

“ஏ அப்பா! விடிஞ்சாக் கலியாணம். உறியடியை முடிச்சிட்டுப் பெருமாளைப் நல்லபடியா வேண்டிக்கிட்டு வா. பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிக்கிறேன் என்று வீணா உடம்பை அலட்டிக்கிடாதே.நான் போய் மேளகாரனுக்குச் சொல்லிவிட்டு ரங்காநாத உடையாரு கடையிலே நாலு கட்டு வெத்திலை எடுத்தாரணும். அப்புறம் பந்தலுக்கு வாழைமரம் தோரணம் கட்டணும்” என்று அவனுக்கு விடைகொடுக்கிற சாக்கில் கலியான ஏற்பாடுகளின் பெருமையை அளந்தார்.

'செய்யுங்கள்; செய்யுங்கள்! நாளைக் காலைவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாளை இந்நேரம் உங்கள் மகனும் நாராயணக் கரையாளர் மகளும் கொழும்புக் கப்பலிலே போய்க் கொண்டிருப்பார்கள்’ என்று மனத்தில் கறுவிக் கொண்டே கிளம்பினான் அவன்.

“அடே அப்பா சேது! வாசல்லே நல்ல சகுனம் ஆகுதான்னு பார்த்துக்கிட்டுப் புறப்படு!”

“ஊம்! ஊம்! எல்லாம் நல்ல சகுனந்தான் ஆகுது. நான் வரேன்!” வேண்டாவெறுப்பாகக் கூறிவிட்டுச் சென்றான் சேதுராமலிங்கம். கிழவர் உட்புறம் சென்றார்.இன்று போலவே அன்றும் கோவில் வாசலில் உறியடியைக் காண்பதற்காக ஏராளமான ஜனங்கள் கூடியிருந்தார்கள். மரங்களுக்கு இடையே மூங்கில் சட்டத்தில் உறிக் கலயங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. உறிக் கலயங்களுக்குக் கீழே ஒருபுறம் பெண்களும் மற்றொருபுறம் ஆண்களுமாகப் பார்ப்பதற்குக் காத்திருந்தார்கள். ஆதிநாராயணப் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வீதிப் புறப்பாடு முடிந்தபின் உறிமரத்துக்கு முன்னால் குதிரை வாகனம் வந்து நின்றது. சேதுராமலிங்கம் கம்பும் கையுமாகப் பயபக்தியுடன் வாகனத்தடியில் போய் அடக்கு ஒடுக்கமாக நின்றான். அர்ச்சகர் அவன் கழுத்தில் மாலை போட்டு விட்டுத் தலையில் பரிவட்டம் கட்டினார். அவன் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து பெருமாளை வணங்கினான். பின் அடிக்கும் கழியை வலது கையில் மாற்றிப்பிடித்துக் கொண்டு உறிமரத்தை நெருங்கினான். கூட்டம் இருபுறமும் ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. உறியடிக்கப் போகிறான் என்ற ஆவலால் கூட்டத்தில் சப்தம் குறைந்து அமைதி நிலவியது.

மஞ்சளையும் சுண்ணாம்பையும் கரைத்துப் பீச்சாங் குழாயில் அடைத்துக் கொண்டு ஒருவன் வந்து நின்றான்.இன்னோர் பக்கம் உறிச் சட்டத்தை இழுத்து உயரே தூக்கும் கயிற்று நுனியைப் பிடித்துக் கொண்டு இன்னொருவன் நின்றான். பெண்கள் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு முன்புறம் நின்றவளைப் பார்த்தபோது சேதுராமலிங்கம் முகத்தைச் சுளித்தான்.

மறுநாள் எந்த ‘அவலட்சணத்திற்கு’ அவன் மாலையிட வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்ததோ அந்த ‘அவலட்சணம்' கையில் ஒரு சிறுமியைப் பிடித்துக் கொண்டு முன்புறம் நின்று கொண்டிருந்தது. தன் கணவனாக வரப் போகிறவனின் தீரத்தைக் கண்டு மகிழ்வதற்காக வெட்கத்தையும் மறந்து வந்திருந்தாள் அவள். தீவட்டிகளின் வெளிச்சத்தில் அவளுடைய அட்டைக்கரி நிறத்தைப் பார்த்தபோது அருவருப்பாக இருந்தது. அந்த வெறுப்பில்தான் முகத்தைச் சுளித்தான் அவன்.

‘உன் லட்சணத்துக்கு இதைப் பார்க்க வேறு வந்திட்டியா பெண்ணே?’ என்று எண்ணிக் கொண்டே உறியை எப்படிப் பாய்ந்து அடிக்கலாமென்று குறி பார்த்தான் சேதுராமலிங்கம்.

கம்பை இரண்டு கைகளிலுமாகத் தாங்கிக் கொண்டு துள்ளி ஓடிவந்து மேலெழும்பி அடித்தான். முதல் தடவை அடிபடவில்லை. கயிற்றுக்காரன் உறிச்சட்டத்தை மேலே இழுத்துவிட்டான். பீச்சாங்குழல்காரன் முகம் நிறையச் சுண்ணாம்புத் தண்ணீரைப் பீச்சி விட்டான். சுண்ணாம்பு கண்ணைக் கரித்தது. எரிச்சலாக இருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டான். கூட்டம் உறிக்காரன் அடிக்க முடியாமல் ஏமாந்துவிட்ட காட்சியை ரஸித்துக் குலுங்கக் குலுங்கச் சிரித்துக்கொண்டிருந்தது.

இரண்டாம் முறையாக அவன் குறி வைத்துப் பாய்ந்து கம்பை ஒங்கிக் கொண்டு ஓடிவந்தான். இந்தத் தடவை சேதுராமலிங்கத்திற்குத்தான் வெற்றி. கயிற்றைப் பிடித்தவனும், பீச்சாங்குழல்காரனும் ஏமாந்துவிட்டனர்.ஒன்பது கலயங்களில் மூன்று கலயங்களை அடித்துக் கீழே தள்ளிவிட்டான் சேதுராமலிங்கம். கூட்டத்தில் ‘சபாஷ்’, ‘பிரமாதம்’ ‘அப்படியடிடா ஆம்பிளைச் சிங்கம்’ என்று பல்வேறு தினுசான பாராட்டுக் குரல்கள் எழுந்தன.

மூன்றாம் தடவை அவன் அடிக்க ஓடிவரும்போதுதான் அந்த விபரீதமான சம்பவம் நடந்துவிட்டது. ‘சற்றுமுன் அவனுக்கு ஏமாந்து போய்விட்டோமே’ என்ற ரோஷத்தினால் கயிறு, பீச்சாங்குழலை வைத்துக் கொண்டிருந்த ஆட்கள் உஷாராக இருந்தனர். அவன் துரத்திலிருந்து ஓங்கிய கம்புடன் துள்ளிப் பாய்ந்து ஓடிவந்தான்.

அப்போது அவனுக்காக அவன் தகப்பன் பார்த்து வைத்திருந்த அந்தப் பெண்ணின் கைப்பிடியிலிருந்த சிறுமி மெல்ல நடந்து உறிக்கு நேரே குறுக்கே ஓடி நின்றுவிட்டாள். சேது ராமலிங்கம் புலிப் பாய்ச்சலில் கனவேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான். குழந்தை அவன் வழியின் குறுக்கே நின்றது.

“ஐயோ! குழந்தை… நடுவிலே ஓடிப்போய் நிக்கிதே!”அந்தப் பெண் ― அவனுடைய எதிர்கால மனைவி ― அலறிக் கொண்டே குழந்தையை எடுப்பதற்காகக் குறுக்கே பாய்ந்தாள். கூட்டத்தில் பலவிதமான குரல்களும், பரபரப்பும், குழப்பமும் உண்டாயிற்று. அப்போது அந்தப் பாழாய்ப் போன பீச்சாங்குழற்காரன் சும்மா இருந்து தொலைக்கக்கூடாதா?… ஓடி வந்து கொண்டிருந்த சேதுராமலிங்கத்தின் கண்களில் சுண்ணாம்புநீரைப் பீச்சிவிட்டான். கண் பார்வை மறையவே எதிரே இருப்பது தெரியாமல் உறியைத்தான் அடிக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு பலங்கொண்ட மட்டும் கம்பை ஓங்கி ஒரு போடு போட்டான் அவன். அடுத்த விநாடி “ஐயோ!” என்று வீரிட்டு அலறிக் கொண்டு கீழே சாய்ந்தாள் அந்தப் பெண். உறியின் மேலே விழ வேண்டிய அடி குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஓடிவந்த பெண்ணின் மண்டையில் விழுந்துவிட்டது. குழந்தை எப்படியோ தப்பிவிட்டது. அதற்கு ஒரு விபத்தும் இல்லை. ஆனால் அந்தப் பெண்…?

அலறலைக் கேட்டுச் சுண்ணாம்பு நீரின் எரிச்சலையும் பொறுத்துக் கொண்டு திடுக்கிட்டுப் போய்க் கண்களைத் திறந்தான் அவன், அவன் மணக்க இருந்த ‘அவலட்சணம்’ மண்டை நட்ட நடுவில் இரண்டாகப் பிளந்து இரத்தம் ஒழுகக் கீழே விழுந்து கிடந்தாள். கூட்டத்திலிருந்தவர்களுக்கு விஷயம் புரிய கொஞ்ச நேரம் பிடித்தது.

ஒரே கலவரம். உறியடித் திருநாள் அலங்கோலமாக அரைகுறையாக முடிந்தது. சேதுராமலிங்கத்தின் கண்முன் உலகமே சுழல்வது போலிருந்தது. யாரோ ஓடிப்போய் வண்டி கொண்டு வந்தார்கள். அந்தப் பெண்ணைத் தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வைத்தியர் வீட்டுக்குப் போனார்கள். வைத்தியர் பார்த்தார். தேங்காயை உடைக்கிற மாதிரி நட்டநடு மண்டையை இரண்டாக உடைத்துப் பிளந்திருந்தது. அந்தப் பெண் அதற்குமேல் எந்த சிகிச்சையாலும் பிழைக்கும் என்று அவரால் நம்ப முடியவில்லை. ஆனாலும் வந்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மண்டையில் ஏதோ மருந்து வைத்துக் கட்டினார். விதி பெரியதாக இருந்தால் மருந்தும் மாயமும் என்ன செய்யும்? நோய்க்குத்தான் மருந்துண்டு. விதிக்குக்கூடவா மருந்து உண்டு? அந்தப் பெண் அன்றிரவே இறந்துவிட்டாள்.

அவளுடைய தகப்பனை யாரோ கிளப்பிவிட்டு விட்டார்கள்.

“உன் மகளைக் கட்டிக் கொள்ள அந்தப் பயல் சேது ராமலிங்கத்திற்கு இஷ்டமே இல்லை. ‘அவலட்சணம்’ ‘அவலட்சணம்’னு கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் அதுனாலே இது தற்செயலா நடந்தது இல்லை. அந்த அயோக்கிய ராஸ்கல் வேணும்னே மண்டையைப் பிளந்திருக்கிறான். தற்செயலா விழுந்த அடியானால் இப்படி உயிர் போகிறவரை ஆகுமா?”

காய்ந்த வைக்கோற் போரில் எங்காவது ஒரு மூலையில் நெருப்பை அள்ளிவைத்தால் பற்றாமலா போகும்? தன் மகளைக் கட்டிக் கொள்ளப் பிடிக்காததனால் அவன் வேண்டுமென்றே உறியடிக்கிற பாவனையில் மண்டையைப் பிளந்து கொன்றுவிட்டான் என்றே அவர் நம்பினார்.

“எங்கே அந்த நாய்ப் பயல்? பிடி சொல்றேன். கழுத்தைச் சீவிக் கையிலே கொடுத்திடலாம். பெண்ணைப் பிடிக்கலேன்னாக் கட்டிக்க இஷ்டமில்லைன்னிட்டுப் போகட்டுமே? அதுக்காகப் படுகொலை செஞ்சிருக்கானே?”―பெண்ணின் தகப்பனும் அவனைச் சேர்ந்தவர்களும் அரிவாளும் கம்புமாகக் கைக்கு வந்ததை எடுத்துக் கொண்டு சண்முகவடிவேலுக்கரையாளர் வீட்டின் மேல் படையெடுத்துவிட்டார்கள்.

பாவம்! பெரிய கரையாளருக்கு அதுவரை சமாசாரம் எட்டவில்லை. அவர் மறுநாள் நடக்க இருந்த கலியாணத்துக்காகப் பந்தற்கால்களில் வாழைமரம் கட்டிக் கொண்டிருந்தார். சம்பந்தியாகப் போகிற மனிதன் கத்தியும் கம்புமாக யுத்தத்துக்கு வருகிறமாதிரி வந்தபோது அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

“வாங்க அண்ணாச்சி! வாழை மரம் நானே வெட்டியாந்து கட்டிட்டேனே? நீங்க வேறே அரிவாளை எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டிங்களே? அப்படித் திண்ணையிலே குந்துங்க” என்று சம்பந்தியைச் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

“வே! பெரிய கரையாளரே! வாழைமரத்தை வெட்ட அரிவாள் கொண்டாரல்லே. உம் மவன் வம்சத்தையே வெட்டக் கொண்டு வந்திருக்கேன்! எங்கே உம்ம மகன்?”

“ஏன்? என்ன நடந்திச்சு? அவன் இன்னும் உறியடியிலேருந்து திரும்பியே வரலியே!”

“ஓகோ, அப்படியா சேதி? கொலை பண்ணிட்டு ஓடித் தப்பிச்சுடலாம்னு நினைச்சானா?”―மீசை துடிதுடிக்க நெருப்புப் பழமெனச் சிவந்த கண்களை உருட்டி விழித்துக் கொண்டே கத்தினார் பெண்ணைப் பறி கொடுத்தவர்.

அதற்குள் ஒருவன் நடந்ததைச் சுருக்கமாகக் கிழவருக்குக் கூறினான்.

“அண்ணே! சேது குளத்தங்கரை பக்கமா ஓடிக் கொணடிருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னே நான் பார்த்தேன்!” என்றான் ஒருவன். உடனே அத்தனை பேரும் திமுதிமுவென்று குளத்தங்கரைப் பக்கம் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.

அங்கே குளக்கரை மாந்தோப்பில் ஓடுவதற்குத் தயாராயிருந்த பூங்காவனமும் சேதுவும் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டனர்.

“ஏண்டாலே! இந்தப் பூங்காவனத்து மேலே இருக்கிற ஆசையாலே என் மகளை அடிச்சுக் கொன்னிட்டு இவளோடே ஓடலாமின்னு பாத்தியா?” ― அவர் இரைந்து கூப்பாடு போட்டார்.

“நான் வேணுமின்னு ஒண்னுஞ் செய்யலை. அவ குறுக்கே வந்திருக்கா. அது எனக்குத் தெரியாது. அந்த நேரம் பார்த்து மஞ்சள் தண்ணிக்காரன் கண்ணிலே பிச்சிப்பிட்டான். உறி மேலே அடிக்கிறதாக நினைச்சுக்கிட்டு அடிச்சிட்டேன். அது இப்படி ஆகும்னு எனக்குத் தெரியுமா? சத்தியமா சாமி சாட்சியா நான் வேணுமின்னு செய்யலிங்க…” அவன் கெஞ்சினான்.

“கொலைக்காரப் பயலே நாடகமா ஆடுறே!” ― அரிவாளை ஓங்கி வெட்டப் போனார் அவர்.

“வேண்டாங்க அண்ணாச்சி! இவனைக் கொன்னிட்டு நீங்க செயிலுக்குப் போகணுமா? இப்படியே இவனைப் போலீசுலே பிடிச்சுக் கொடுத்திடுவோம்?” என்று சொல்லி அவர் கையைப் பிடித்துத் தடுத்தார் விவரம் தெரிந்த ஒருவர். இதற்குள் நாராயணக் கரையாளர் வீட்டில் தம் மகளைக் காணாமல் தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார்.

பெண்ணைப் பறி கொடுத்தவரும், பெண்ணைப் பறி கொடுக்க இருந்தவருமாகச் சேர்ந்து சேதுராமலிங்கத்தைப் போலீஸில் பிடித்து ஒப்படைத்தார்கள். தம் மகளை ஏமாற்றி அக்கரைச் சீமைக்குக் கடத்திக் கொண்டு போக முயன்றதாக நாராயணக் கரையாளரும், உறியடித்திருநாளின்போது தம் பெண்ணை வேண்டுமென்றே மண்டையைப் பிளந்து கொன்றதாக மற்றவரும், சேதுராமலிங்கத்தின் மேல் ‘கிரிமினல்’ வழக்குத் தொடர்ந்தார்கள்.

வழக்கு முடிவில் சேதுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் தீவுக்குக் கொண்டு போகப்பட்டான் அவன். மகனால் ஏற்பட்ட அவமானம் தாங்காது சில நாட்களில் சண்முகவடிவேலுக் கரையாளர் உயிர் துறந்தார். நாராயணக் கரையாளர் பூங்காவனத்தை யார் யாருக்கோ கட்டிக் கொடுத்துவிட முயன்றார். சேதுவுக்கும் அவளுக்கும் முன்பிருந்த தொடர்பைப் பற்றி ஊரில் செய்தி தெரிந்திருந்ததனால் கெளரவமானவர்கள் யாரும் அவளைக் கட்டிக் கொள்ள முன்வரவில்லை. கடைசியில் பணத்தின் மேலும் சொத்துச் சுகங்களின் மேலும் ஆசை காட்டி ஒரு ஏழைப் பையனை அவளுக்குக் கணவனாக்க ஏற்பாடு செய்தார்.மணந்தால் சேதுராமலிங்கத்தைத் தவிர இந்த ஜன்மத்தில் வேறெவரையும் மணப்பதில்லை என்ற திடமனத்தோடு இருந்த பூங்காவனம் கலியாணத்திற்கு முதல் நாளிரவு மயில்துத்தத்தைச் சாப்பிட்டு இறந்தாள்.

காலப் பெருந்தருவிலிருந்து வருஷ இலைகள் பழுப்பேறி பழுப்பேறி உதிர்ந்து கொண்டிருந்தன. பல வருஷ காலத்துக்குப் பின் இந்தியக் குடியரசு தினத்தன்று பாரத சுதந்திர சர்க்கார் கைதிகளுக்கெல்லாம் பரிபூரண விடுதலை அளித்தனர். அப்போது சேதுராமலிங்கமும் விடுதலையாகி வந்தான்.

ஊருக்கு வந்ததும் தகப்பனார் காலமானதும், பூங்காவனம் தற்கொலை செய்து கொண்டதும் அவனுக்குத் தெரியவந்தன. கோவிலில் அவனுக்கு உறியடி பாத்தியதை கிடையாது என்றார்கள். நாலைந்து வருஷமாகக் கோவிலாரோடு கோர்ட்டில் வழக்குத் தொடுத்துப்போராடி இறுதியில் மீண்டும் உறியடிப்பாத்தியதை உண்டு என்று செய்து கொண்டான்.

பழையவற்றை மறந்து ஊரில் வேறு சிலர் அவனுக்கு அத்தனை வயதிற்கு மேலும் தங்கள் பெண்ணைக் கொடுக்க முன் வந்தனர்.அவனோ,“பூங்காவனத்திற்கு பின் நான் வேறு யாரையும் மணக்க விரும்பவில்லை” என்று சத்தியம் செய்திருப்பதைக் கூறி மறுத்துவிட்டான்.

கோர்ட்டில் தீர்ப்பான பின்பு இதுதான் அவன் அடிக்கிற மூன்றாவது உறியடி முறை. இன்னும் கலியாணமே செய்து கொள்ளாமல் ‘பீஷ்மக் கரையாளன்’ என்ற பெயருக்கு இலக்கியமாகவே இருக்கிறான். காலம்கூட அவனை மாற்ற முடியவில்லை.

திருவடியா பிள்ளை கூறி முடித்தார். ஒரு நீண்டபெருமூச்சோடு கதைக்கு முத்தாய்ப்பு வைத்தார்.

பல நாட்களாக நான் சிந்தித்துக் கொண்டிருந்த தத்துவம் அன்றைய தினம் எனக்கு நன்றாக விளங்கிவிட்டது.

எட்டுவதுபோல தோன்றி எட்டாமல் போவதும், எட்டாதது போல் தோன்றி எட்டுவதும், நடப்பதுபோல், தோன்றி நடக்காமல் போவதும், நடக்காதது போல் தோன்றி நிச்சயமாக நடப்பதும் உறியடி விழாவில் மட்டும் அல்ல; வாழ்க்கையிலும் அப்படி உண்டு போலிருக்கிறது!

(உமா, டிசம்பர், 1957)