நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/புதிய விளம்பரம்

41. புதிய விளம்பரம்


ராகமூத்தி தம் அருமைப் பெண் பத்மாவைக் கடிந்து கொண்டார்.

“ஏனம்மா, நீ என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா? நான் நாலு ‘செட்’ தைத்து அனுப்பியிருப்பேனே...? ‘கம்பெனி கீப்’ பண்ண வேணுமோல்லியோ? உன் தோழிகளெல்லாம். ‘பாட்மிட்டன் கோர்ட்’டுக்குப் போற போது ‘யூனிபாரமா’ இந்த ‘டிரஸ்’தான் உபயோகிக்கிறேன்னா, நீயும் ஏன் போட்டுக்க ப்படாது…?”

வராகமூர்த்தியின் பெண் கையில் பூப்பந்து மட்டையோடு தன் தோழிகளுடன் விளையாடப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் மேற்படிபிரச்னை எழுந்தது. பூப்பந்து விளையாடப் பெண்களுக்கென்று அந்தக் ‘கண்டோன்மெண்ட்’ பகுதியில் இருந்த அழகிய புல் தரையோடு கூடிய விளையாட்டுக் கூடத்துக்குத்தான் அவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பேரிலும் கர்நாடகமாகக் காட்சியளித்தவள் வராகமூர்த்தியின் பெண் பத்மாதான்.

மற்றப் பெண்கள், உடம்பை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆணுடையில் காட்சியளித்தனர். மார்புக்கு மேலே சிவப்பும் கீழே வெண்மையுமாக இரு வண்ணத்தில் விளையாட்டு உடை பாணியில் அது இறுக்கமாகவும், பிடித்தமாகவும் இருந்தது. அரையில் முழுக்கால் சட்டை ‘பாப்’ செய்த தலையேயானாலும், ஆறு கஜம் ஜார்ஜெட் சேலையும், முழங்கை தொடும் சோளியுமாக அவள் அந்தப் பெண்கள் கூட்டத்தில் தனிப்பட்டவளாகக் காட்சியளித்தாள். ரோஜாப் பூக்களின் குவியலுக்கு நடுவே எப்படியோ தப்பித் தவறி ஒர் அரளிப் பூவும் விழுந்து கிடப்பது போல் அவளுடைய கோலம் அங்கே மாற்றுக் குறைந்து, பொருத்தமின்றி விளங்கியது.

அதைத்தான் வராகமூர்த்தி மகளிடம் குறிப்பிட்டுச் சொல்லிக் கடிந்து கொண்டிருந்தார். “எனக்கெதுக்கு அப்பா இதெல்லாம்?” என்று சொல்லி விட்டுப் புள்ளி மான் குதித்தோடுவது போல் பந்தாடும் மெல்லிய மட்டையைச் சுழற்றிக் கொண்டே தோழிகளோடு குதித்து ஓடி விட்டாள் பப்பி.

‘அவள் வேண்டாம்’ என்று சொன்னதற்காக வராக மூர்த்தி சும்மா இருந்து விடுவதா, என்ன? அப்புறம் அவருடைய கெளரவம் என்ன ஆவது? எந்தப் பரதைப் பயல் வீட்டுப் பெண்களெல்லாமோ நாகரிகம் கொண்டாடுகிற போது ஊரிலேயே பெரிய ஜவுளிக்கடைக்குச் சொந்தக்காரரான என் பெண்ணுக்கு ஏன் குறை வைக்க வேண்டும்? லட்சாதிபதிகள், இரண்டு மூன்று கோடீசுவரர்கள் உள்பட அந்தஸ்தை வெளிக்காட்ட முயலும் தகுதி உள்ளவர்கள் வசிக்கின்ற இடமாயிற்றே அது? ‘பாரீஸ் நாகரிகத்’தைப் பச்சையாகக் கடைப்பிடிக்கின்ற இடம் இல்லையா அது?

'பணத்தின் அடித்தளத்தின் மீதிருந்த பாவனை' என்கின்ற பீடு ஒரு காலத்தில் பணக்கார ஆண் பிள்ளைகளின் பெருந்தன்மையில் நிலவியிருந்திருக்கலாம். அதெல்லாம் பழைய விவகாரம். இப்போதெல்லாம் அது பணக்கார வீட்டுப் பெண் பிள்ளைகளின் ஆடையிலும், உயர் குதிச் செருப்பிலும் அடங்கிப் போய்விட்டது. நட்புக்கு உரியவர்களுடன் இருக்கும்போது ஒரே வகைத் தோற்றம் கொண்டு அமைய வேண்டியது பட்டணக் கரைக்கு மிக இன்றியமையாத ஒரு விவகாரம்!

எத்தனையோ விலையுயர்ந்தரகத் துணிகள் குவிந்து கிடக்கும் பிரம்மாண்டமான ஜவுளிக் கடையின் சொந்தக்காரரானவராக மூர்த்தியிடம் தையல் தொழிலில் பட்டம் வாங்கின ஆறு தையற்காரர்கள் அவர் கடையில் வேலை பார்க்கிறார்களே! மறுநாள் சாயங்காலம் பப்பி விளயாடக் கிளம்புவதற்கு முன்பே நாலு இணை காற் சட்டையும் விளையாட்டு மேலங்கியும் தயாராகி விட்டன!

அவள் அதை அணிந்துகொண்டு 'கம்பெனி கீப்' பண்ணுகிற அழகைப் பார்ப்பதற்காக வராகமூர்த்தி ஜவுளிக் கடையிலிருந்து வீட்டுக்குக் கிளம்பினார்.

"பப்பீ, ரொம்பவும் பிரமாதம்மா கிளப்பிலிருந்து திரும்பறபோது நினைவாக ஸ்டுடியோவுக்குப் போய் ஒரு போட்டோ எடுத்துக்கோ. 'காபினட்' அளவில் உடனே ஒரு காப்பி போட்டுத் தரச் சொல்லு. வீட்டுக்கு அழகாகக் கண்ணாடி போட்டு மாட்டிக்கிடுவோம்” என்று கூறி வியந்தார் வராக மூர்த்தி.

மூன்று நாட்கள் கழித்து, வராகமூர்த்தியின் வீட்டு முன்புற ஹாலில் பப்பியின் அந்தக் கோலம் கண்ணாடிக்குள் சட்டமிடப்பட்டு அழகு பூத்துக் கொண்டிருந்தது. கையில் ஒயிலாக ஓங்கிய பூப்பந்து மட்டையோடு அந்த விளையாட்டு உடைகளில், அவளைக் கவர்ச்சிகரமாகப் பிடித்திருந்தான் புகைப்பட நிபுணன்.

பப்பி அன்றிலிருந்து தொடர்ந்து தோழிகளுடன் இணைந்திருந்து ஒர் ஒருமைப்பாட்டை உண்டு பண்ணிக்கொண்டு வந்தாள். வராகமூர்த்தி மனம் பூரித்துக்கொண்டு வந்தார்.

பப்பி பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றாள். உள்ளுரிலும்’ வெளியூரிலும் 'விளையாட்டுப்பத்திரிகைகள்' அவளைப் பிரமாதப்படுத்திப் புகழ்கிற அளவுக்கு விளையாட்டிலே முன்னேற்றம் அடைந்துவிட்டாள். முன்னேற்றத்திற்குத் தக்கபடி ஒரு வெளித் தோற்றமும் முன்னேறிக் கொண்டு வந்ததில் வியப்பில்லையல்லவா?

ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு இரண்டு மாதம் இருக்கும்போது, தம் ஜவுளிக் கடையின் முகப்பில் இருக்கும் அலங்கார விளம்பரக் கண்ணாடிக் கூண்டில் ஏதாவது, புதுக்கவர்ச்சியான விளம்பர முறையைக் கையாண்டு கூட்டத்தைக் கவர்வது வராகமூர்த்தியின் வழக்கம். திரைச் சந்தையில் பேருள்ள 'நட்சத்திரம்' மாதிரி 'பிளைவுட்' பலகையில் சித்திரம் எழுதிப் பெரிதாக அலங்கரித்துக் கண்ணாடியில் வைப்பார் பக்தி பூர்வமாக, கிரஷ்ண பரமாத்மா கோபிகா ஸ்திரீகளின் வஸ்திரத்தைக் கவருவதுபோல் அரங்கமைப்பு செய்து புன்னைமரக் கிளையில் தம் கடைப் புடைவைகளைத் தொங்கவிட்டிருப்பார். இப்படி எத்தனை எத்தனையோ புதுக் கவர்ச்சி முறைகளைக் கொண்டு தீபாவளி வியாபாரத்தை அபிவிருத்தி செய்வார். ஆனால் கவர்ச்சி என்கிற அம்சம் காய்ச்சின பாலைப் போல் என்பது வராகமூர்த்திக்கு நன்றாகத் தெரியும்.சீக்கிரம் திரிந்துவிடும் அல்லது புளித்துப்போகும்.பின் மறுபடியும் புதுப் பால் கறந்து காய்ச்சினால்தான் உண்டு. நேற்று எது ஜனங்களைக் கவர்ந்ததோ அதனுடைய கவரும் ஆற்றல் நேற்றோடு தீர்ந்தது. இன்றைக்குப் புதிதாகவும் அதிக வேகமாகவும் கவர வேறு ஒன்று வர வேண்டும். நாளைக்கு அதைவிட ஆற்றலுள்ள வேகமுள்ள புதிய அம்சம் வரவேணும். 'விளம்பரம்' என்கிற தத்துவம் இதுதான். 'அலங்காரக் கண்ணாடிப் பெட்டி' விளம்பரத்திற்கு இந்த ஆண்டு அதிகக் கவர்ச்சியுள்ள அம்சம் வேண்டுமென்று நினைத்தார் வராகமூர்த்தி.கல்கத்தாவிலிருந்து விளம்பரக் கம்பெனிகள் பலவற்றுக்கு ஆலோசகரான பிரெஞ்சு நாட்டுச் சித்திரக்காரனை வரவழைத்தார்.

அவன் தன்னோடு கல்கத்தாவில் இருந்து ஏராளமாகப் படங்கள், பத்திரிகைக் கத்தரிப்புகள், மாதிரி விளம்பரச் சித்திரங்கள் எல்லாம் வாரிக் கொண்டுவந்திருந்தான். பெரிய பெரிய விலையுயர்ந்த பலகைகளை அளவாகக் கத்தரித்து பின்புறம் சட்டமடித்து இணைத்துக்கொண்டு சித்திர வேலையைத் தொடங்கினான். தன்னைத் தவிர வேறு யாரையும் மேற்படிப் பெட்டிப் பக்கம் நெருங்கவிடவில்லை. அவன் தனிமையில் இல்லாவிட்டால் அவனுக்கு வேலை ஒடாதாம்; அவன் புதுப்பித்துக் காட்டப் போகும் கவர்ச்சிகரமான புருமையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் வராகமூர்த்தி.

"வெகு நாட்களாக என் மனத்திலிருந்த ஒரு அதியற்புத அழகை உங்கள் 'ஷோ கேஸி'ல் உருவாக்கிக் காட்டப் போகிறேன்!” என்று புதிர் வேறு போட்டிருந்தான் அந்த அபூர்வ ஒவியன். பதினைந்து நாட்களை முழுமையாக எடுத்துக் கொண்டான் அவன்.

“வேலை முடிந்து விட்டது. நாளைக்கு ஷோ கேஸைத் திறந்து விடலாம்” என்று முக மலர்ச்சியோடு வந்து சொன்னான் ஒவியன். "நீயும் வா பப்பீ; ரொம்பத் திறமையான ஒவியர். பிரமாதமான ஏதோ செய்திருக்கிறார்; பார்க்கலாம்” என்று தம் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்தார் வராக மூர்த்தி.

வராக மூர்த்தியையும், அவர் பெண்ணையும் அலங்காரக் கண்ணாடிப் பெட்டிக்குள் கூட்டிச் சென்றார் ஜவுளிக்கடை மானேஜர்.

உள்ளே போய், பலகையில் சட்டமடித்து நிறுத்தியிருந்த படத்தைப் பார்த்தவுடன், மூன்று பேரும் திகைத்து விட்டனர்.

வராகமூர்த்தி ஒன்றும் புரியாமல் விழித்தார்.

பப்பி விளையாட்டுடையில் பூப்பந்து மட்டையை ஓங்கிக் கொண்டு ஒயிலாக நிறுத்திய கோலத்தில் எடுத்த படம் பெரியதாக்கப்பட்டு அந்தப் பிளைவுட் பலகையில் இருந்தது. மூக்கு முழி முகம் எல்லாம் அச்சாக அவளேதான்!. விளம்பரக் கவர்ச்சிக்காகத் திருத்தம் செய்திருந்தான் ஒவியன்.

"அப்பா என்ன காரியம் இது? ஏன் இப்படிச் செய்தீர்கள்?"

"ஐயோ!. எனக்கு ஒரு மண்ணும் தெரியதம்மா!.... நான் செய்வேனா இப்படி?” என்று மகளைச் சமாதானப்படுத்தி விட்டு “எங்கே அந்த அக்கிரமக்கார ஒவியன்?” என்று கூச்சலிட்டார் வராக மூர்த்தி,

"நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள் அப்பா! உங்களுடைய முகத்தில் விழிக்கவே சங்கடமா இருக்கிறது எனக்கு!' என்று அழுகையும் விசும்பலுமாகக் கூறி, அவரை நம்ப மறுத்து, வீட்டுக்கு ஓடி விட்டாள் பப்பி.

மகளே நம்ப மறுத்துத் தம்மேல் குற்றம் சாட்டி விட்டு ஓடியதைப் பார்த்தபோது, வராக மூர்த்தியின் கொதிப்பு அதிகமாயிற்று.

ஒவியனை அழைத்தார். ஆத்திரம் வளர்ந்தது!

ஒவியன் வந்து நின்றான். பளீரென்று கன்னத்தில் ஒர் அறை வைத்து விட்டுக் கேட்டார். "எதைப் பார்த்து இதை வரைந்தாயடா ராஸ்கல்? உள்ளதைச் சொல்லி விடு!”

அவன் பேசாமல் 'விளையாட்டுப் பத்திரிகை'யை எடுத்துக் காண்பித்தான். இரண்டு வருஷத்துக்கு முந்திய இதழ் அது. அதில் அவர் பெண்ணின் அந்தப் படம் அதே கோலத்தில் வெளியாகியிருந்தது.

“முட்டாள். இது என் மகள் படமடா! பிழைத்துப் போ!” அந்தப் பலகைப் படத்தைச் சுக்கு நூறாக உடைத்து விட்டு வெந்நீர் அடுப்புக்கு அனுப்பி வைத்தார் வராகமூர்த்தி.

“அந்த ஏற்பாடு தானாகச் செய்ததில்லை. ஸ்போர்ட்ஸ் இதழொன்றில் வந்திருந்த அவள் படம் நல்ல கவர்ச்சிகரமான அமைப்பில் இருந்ததினால், விளைந்த வம்பு!” என்று பப்பியை நம்பச் செய்து, தாம் நல்லபிள்ளையாவதற்கு மிகவும் சிரமப் பட்டார் வராக மூர்த்தி,

“என்ன ஐயா வராக மூர்த்தி! இந்த வருஷம் உம் ஷோகேஸில் ஒண்ணுமே இல்லையே?. இருண்டு வழிகிறது! கம்பெனி கீப் பண்ணவாவது ஏதாவது வைக்கப் படாதோ..?” என்று பக்கத்து ஜவுளிக் கடைக்காரர் ஒரு நாள் கேட்டார்.

"கம்பெனி கீப் பண்ணற விவகாரத்தையே விட்டுட்டேன். நாம இருக்கிறபடி இருந்தாப்போதும்” என்று வராக மூர்த்தியிடமிருந்து அழுத்தமாகப் பதில் வந்தது!