நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வேப்பம் பழம்

40. வேப்பம் பழம்

கிழக்கு வானத்தில் பகல் பூத்துக் கொண்டிருந்த நேரம். மண்ணுலகத்து இன்பமெல்லாம் ஒன்று சேர்ந்து காற்றாய் வீசுவது போல் வேப்பமரத்துக் காற்று வீசிக் கொண்டிருந்தது. காகம் கரையும் ஒலி, மேல் வீட்டுப் பாகவதர் பூபாளம் பாடும் அழகு, பக்கத்து வீட்டு மாட்டுக் கொட்டத்தில் பால் கறக்கும் ஒலி, தெரு வாசலில் சாணம் தெளிக்கும் ஓசை, இடையிடையே வாசலில் கோலம் போடும் பெண் கரங்களின் வளைக் குலுங்கல், கோவில் விசுவ ரூப மணியோசை, காற்றில் மிதந்து வரும் நாதம்.

அடாடா! அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் வைகறைப் போது எவ்வளவு அழகாயிருக்கிறது? உழவு மாடு ஓட்டிக் கொண்டு போகும் உழவன், காய்கறிக்காரன், தயிர்க்காரி, பால்காரன் என்று தெருவில் மனிதர்கள் நடமாடுகிற உயிர்த் துடிப்பில் எத்தனை எழில்? கிழக்கே தெரு முடியும் இடத்துக்கு அப்பால் தென்னை மரக் கூட்டத்தில் சூரியோதயத்தில் ஒளி பரவும் அழகைப் பார்த்துக் கொண்டே வேப்ப மரத்தடியில் நின்றிருந்தார் பேராசிரியர் சிற்சபேசன். கிராமத்தின் அழகிலும், தூய்மையும், அமைதியும் நிறைந்த அந்தக் காலை நேரத்துச் சூழ்நிலையிலும் தோய்ந்து நின்ற அவர் மனத்தில் வளமான சிந்தனைகள் உண்டாயின.

பின்னால் யாரோ நடந்து வருகிற ஓசை கேட்டுத் திரும்பினார் சிற்சபேசன். கையில் கூடையும், விளக்குமாறுமாக ஒரு சிறுமி வந்து கொண்டிருந்தாள். அவர் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்தடியை நோக்கித்தான் வருவதாகத் தோன்றியது.

“மாமா...! நீங்கள்தான் இந்த வீட்டுக்குப் புதிதாகக் குடி வந்திருப்பதாகச் சொன்னாங்க. நான் வீடெல்லாம் தெளித்துப் பெருக்கிச் சுத்தமா வைத்துக் கொள்வேன். வீட்டிலே சமையலுக்கு உதவியா எடுபிடிக் காரியமெல்லாம் செய்து கொடுப்பேன். சம்பளம்னு பெரிசா ஒண்ணும் கேட்க மாட்டேன். ஏதோ உங்களாலே முடிஞ்சதைக் கொடுத்தால் திருப்தியா வாங்கிக்குவேன். எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை. ஒரு தம்பி இருக்கான். எலிமெண்டரி ஸ்கூல்லே அவன் மூணாங் கிளாஸ் படிக்கிறான். நான் உழைச்சுத்தான் காப்பாற்றியாகணும்.”

சிற்பசேனுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு பணிவான குரலில் கூறினாள் அந்தச் சிறுமி. அழுக்குச் சிற்றாடையும் கிழிந்த தாவணியுமாக ஏழ்மைக் கோலத்தில் நின்ற அந்தச் சிறுமியை நன்றாய்ப் பார்த்தார் சிற்சபேசன்.

பதின்மூன்று அல்லது பதினாலு வயது மதிக்கலாம். வயதுக்கு மீறின வளர்த்தி, குச்சி போல் வளர்ந்திருந்தாள். எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தது போன்ற முகத் தோற்றம். ஆனாலும் பார்த்தவுடன் மனத்தில் பதிந்து விடக் கூடிய ஒரு சோகக்  களை அந்த முகத்தில் இருந்தது.அந்த வயதுக்கு இருக்கவேண்டிய கூச்சமும், நாணமும் அற்றுப்போய், ஏதோ பெரிய பொறுப்பைச் சுமந்து கொண்டு வாழ்கிறாற்போல் கண்களில் ஒர் ஒளி அமைந்திருந்தது. பேச்சில் காரியத்தைச் சாதித்துக் கொள்கிற ஒட்டுறவு சொற்களில் ஏழைமையின் குழைவு. நம்பிக்கையோடு சிற்சபேசனின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.அந்தச் சிறுமி. வானத்தில் மேகத்தைத் தேடும் வறண்ட நிலத்து உழவனின் முகம் போல் அந்த முகத்தில் ஒர் ஆசைத் துடிப்பு மிதந்தது. சிற்சபேசன் வாய் திறந்தார்.

"உன் பேர் என்ன குழந்தை?"

“பட்டுன்னு சொன்னாத் தெரியும், சார் இந்த ஊர்லே நான் வேலை செய்யற வீடுகளிலே கேட்டுப் பாருங்கள் சார் என்னைப் பற்றி நல்லபடியாச் சொல்லுவாங்க.”

“அதிருக்கட்டும்! நீ பள்ளிக்கூடத்தில் படிக்கலியா?”

“எப்படி சார் படிக்க முடியும்? நான் சின்னவளா இருக்கப்பவே அம்மா போயிட்டா. அப்பாவுக்குச் சமையல் வேலை. கல்யாணம் கார்த்திகைன்னு முக்கால்வாசி நாள் வெளியூருக்குச் சமையல் வேலைக்குப் போயிடுவார்.தம்பி அப்போ சின்னக் குழந்தையா இருந்தான்.நான்தான் வீட்டோடு இருந்து பார்த்துக்கனும் தம்பி பெரியவன் ஆகி நெனைவு தெரியற சமயத்திலே அப்பாவும் செத்துப்போயிட்டா. அப்போ எனக்குப் பதினோரு வயது. பொறுப்பெல்லாம் என் தலையிலே விழுந்துடுத்து.”

"அதிலேயிருந்து இப்படித்தான் காரியம் செய்து சம்பாதிச்சுக் குடும்பத்தைக் காப்பாத்தறாயாக்கும்?”

"ஆமாம், சார்! எங்களுக்கு வேறே யாரும் இல்லே. மாமான்னு ஒருத்தர் மெட்ராஸ்லே இருக்கார். பேருக்குத்தான் அவர் மாமா. அவராலே உபகாரம் ஒண்ணுமில்லே. அப்பா போனப்போ கடிதம் எழுதினேன். அவர் திரும்பிக்கூடப் பார்க்கலே”

“வேறு யாரும் உறவு இல்லையா?”

“இந்த ஊரிலே இல்லே, எங்கெங்கேயோ இருக்கா. யாருமே எட்டிப் பார்க்கலே, பணம் காசு, சொத்து சுகம்னா எட்டிப் பார்ப்பா. நாங்க ஏழைப்பட்டவான்னு இளப்பம். யாரும் இருக்கியா, செத்தியான்னுகூட்க் கேட்கவரலை. இந்த ஊர்க் கிராம முன்சீப் இருக்காரே, ரத்னம் பிள்ளைன்னு ஒல்லியா சிவப்பா சந்தனப்பொட்டு வைச்சிண்டு சாவடி வாசல்லே உட்கார்ந்து கணக்கெழுதிண்டிருப்பாரே அவர்தான் ஒரு வழியா என்னைத் தைரியப்படுத்தினார். என்னைக் கூப்பிட்டார். 'குழந்தை! நீ தைரியமா இருக்கணும். தம்பியைப் படிக்க வைச்சுப் பெரியவனாக்கிறவரை நான் சொல்ற படி செய், ஊர்லே நாலு வீட்டிலே எடுபிடி காரியம், பெருக்கத் தெளிக்க ஏற்பாடு செய்யறேன். அதிலே கிடைக்கறதை வச்சிட்டு மானமாப் பிழைக்கலாம் - அப்படின்னு ஒரு வழி பண்ணிவிட்டார். அப்பா சொத்து, சுகம்னு ஒண்னும் வைச்சிட்டுப் போகலேன்னாலும், ஒண்டிக்கிறதுக்கு ஒரு சின்ன ஒட்டு விடு கையகலத்துக்கு வைச்சிட்டுப் போயிருக்கார். மேலக்கோடியிலே சின்னதா பித்தல் நார்ப்பெட்டி மாதிரி ஒர் ஒட்டுக்குச்சு - நீங்ககூடப் பார்த்திருப்பிங்க வாசல்லே எருக்கஞ்செடி மொளைச்சிருக்கும். தம்பியும், நானும் அதுலேதான் காலத்தைத் தள்ளிண்டு வரோம்.”

“சாப்பாடு?”

“நானே சமைச்சுக்குவேன். எனக்கு எல்லாம் தெரியும் சார்.!

“அது சரி! நான் இந்த வீட்டுக்குக் குடி வந்திருக்கேன்னு உனக்கு யார் சொன்னாங்க?”

“அதுவா? நேத்துச் சாயங்காலம் கிராம முன்சீப் சொன்னார். பட்டு! அந்த வேப்பமரத்தடி வீட்டுக்குப் பட்டணத்திலிருந்து ஒரு புரொபஸர் ரிட்டையராகி வந்திருக்கார். நாளைக் காலையிலே போய்ப் பாரு' என்றார். அதான் வந்தேன் சார்”

“எல்லாம் சரி. எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு எங்க வீட்டிலேயும் நீயே வேலை செய்யலாம். காலையிலே சுத்தமா வாசலைப் பெருக்கித் தெளிச்சிக் கோலம் போட்டுடனும். அப்புறம் உள்ளே மாமிக்கு ஒத்தாசையாச் சமையலுக்கு நாலு குடிம் தண்ணீர் இரைத்துக் கொடுக்கணும். சாயங்காலமும் ஒரு தரம் வீடு பெருக்கணும். இவ்வளவுக்குமாக மாசத்துக்கு உனக்கு என்ன சம்பளம் வேணும்...?”

"அதுதான் நான் அப்பவே சொன்னேனே, சார் சம்பளம்னு பெரிசா ஒண்ணும் கேட்கமாட்டேன். நீங்க கொடுத்ததைத் திருப்தியா வாங்கிப்பேன். சம்பளமா பெரிசு? மனுஷாள்தான் வேணும்?"

சிற்சபேசன் அதிசயித்தார். ஏழைமை அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு விநயமாகப் பேசும் பழக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்று எண்ணியபோது, அவருக்கு வியப்பாயிருந்தது. உலகத்தைப் புரிந்து கொண்டு சுற்றியிருப்பவர்களையும், சூழ்நிலையையும் நன்றாகத் தெரிந்து கொண்டு அந்தக் கசப்பை அங்கீகரித்துவிட்ட ஒரு தெம்பு அந்தச் சிறுமியிடம் தென்பட்டது. 'நமக்கு இதுதான் வாழ்வு - இதைக் கொண்டுதான் சமாளித்துக் கொள்ள வேண்டும்’ என்கிற மாதிரி ஒரு நிறைவை அவளிடம் காணமுடிந்தது.

“சரி, குழந்தை இன்னியிலிருந்து காரியத்தைப் பாரு, நான் பாத்துக் கொள்கிறேன்” என்றார் சிற்சபேசன். பட்டு நெடுநாட்கள் அந்த வீட்டில் பழகிய வேலைக்காரியைப் போல், சிற்றாடை நுனியை இழுத்துச் செருகிக்கொண்டு வாசலைப் பெருக்க ஆரம்பித்தாள்.

சிற்சபேசன் வீட்டுக்குள் போய்க் காப்பி குடித்துவிட்டு, மனைவியிடம் வேலைக்காரச் சிறுமி கிடைத்த பெருமையை அளந்தார். மறுபடியும் திரும்பி அவர் வாசற்பக்கம் வந்தபோது தரையில் விளக்குமாறு புரளும் பெருக்கல் ஒசை கேட்கவில்லை. வேப்பமரத்தடியில் குனிந்து எதையோ பொறுக்கி எடுத்து ஒவ்வொன்றாக வாயில் போட்டுச் சுவைத்துத் துப்பிக் கொண்டிருந்தாள் பட்டு.

“எதையோ பொறுக்கிச் சாப்பிடுகிறாயே..? அதென்னது?”

“வேப்பம் பழம் சார்! எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த மரத்தடியிலே நிறைய உதிர்ந்திருக்கு."

“வேப்பம் பழமா?. ஐயையே. கசக்காதோ உனக்கு?”

“கசப்பு உடம்புக்கு நல்லதாம் சார்; எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். காயா இருக்கறப்போ இது விஷமாகக் கசக்கும். பழுத்திட்டால் தகதகன்னு தங்கம்போல் ஒரு நிறம் வரும். அப்போ சாப்பிட்டாக் கசப்பே தெரியாது. அசட்டுத் தித்திப்பா ஒரு இனிப்பு இருக்கும். மென்னு கடிச்சு முழுங்கிடப்படாது. இலேசாச் சப்பிச் சுவைத்து விட்டுத் துப்பிடணும்.”

“எங்கே, இப்படி ஒண்ணு கொடு; பார்க்கலாம்.” சிற்சபேசன் பட்டுவுக்கு முன்னால் வந்து கையை நீட்டினார்.

“வேண்டாம், ஸார்! பழக்கமில்லாட்டாக் கசப்பு ஒட்டாது. குடலைக் குமட்டிண்டு வாந்தியெடுக்க வரும்.”

"கொடேன். பார்க்கலாம்.”

பட்டு சொன்னது மெய்யாகிவிட்டது. பழத்தை வாயில் போட்டுக் கொண்ட மறுகணமே, குமட்டலோடு காறித் துப்பினார் சிற்சபேசன். “நல்ல காப்பி சாப்பிட்ட மணத்தையெல்லாம் கெடுத்து வாயை நாற அடித்துவிட்டதே. இந்தப் பாழும் வேப்பம் பழம்" என்றார்.

“நான்தான் மொதல்லேயே சொன்னேனே, சார்! பழகாட்டாக் கசப்பு ஒட்டாதுன்னு. எனக்கு ரொம்ப நாட்களாகவே இந்தப் பழத்தைச் சாப்பிட்டுப் பழக்கம். ஒரே சமயத்திலே பத்துப் பன்னண்டுகூடச் சாப்பிடுவேன்.”

வேப்பம் பழத்தைச் ‘சாக்லேட்'டாக விழுங்கும் அந்த அதிசயச் சிறுமியின் பழக்கத்தை வியந்து கொண்டே, வாயைக் கொப்பளிக்க உள்ளே சென்றார் சிற்சபேசன். வாயைக் கொப்பளித்துக் கழுவிய பின்னும் அந்தக் கசப்பும், கமறல் நாற்றமும் போகவில்லை. வெகு நேரம் காறித் துப்பிக் கொண்டே இருந்தார். வாசல் தெளித்துக் கோலம் போட்டு வீடு பெருக்கித் தண்ணிர் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பட்டு போய்விட்டாள். போகும் போது "வரேன் மாமி, வரேன் சார்” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்துச் சொல்லிக் கொண்டு போனாள். அந்தக் குரலில் ஒடியாடி வேலை செய்த களைப்பின் சலிப்போ, அலுப்போ இல்லை. யாரோ உறவுக்காரப் பெண், பார்க்க வந்துவிட்டுச் சொல்லிக்கொண்டு போகிற மாதிரி ஒரு தன்மையான சுபாவமான இனிமை இருந்தது.

சிற்சபேசனிடமும், ஶ்ரீமதி சிற்சபேசனிடமும் பட்டு நல்ல பேரெடுத்துவிட்டாள். "இந்தப் பொண்ணைப் பற்றி ஊரில் யாரைக் கேட்டாலும் பெருமையாத்தான் சொல்றா. சின்ன வயசிலேயே குடும்பக் கஷ்டம் தெரிஞ்ச பொண்ணாம். அப்பா, அம்மா, ஒருத்தர் இல்லாமே ஒண்டியாத் தானும் பிழைத்துக்கொண்டு, நாலு வீட்டிலே காரியஞ் செஞ்சு தம்பியையும் காப்பாத்தறதாம்” என்று முதல்நாளே பட்டுவைப் பற்றி அக்கம்பக்கத்திலே கேள்விப்பட்ட பெருமையைக் கணவனிடம் கூறினாள் ஶ்ரீமதி சிற்சபேசன்.

பட்டுவுக்கு ஊர் முழுதும் நல்ல பேர்தான். யார் எந்தக் காரியம் சொன்னாலும் தட்டமாட்டாள். அவள் முகத்தில் கடுகடுப்பையே பார்க்க முடியாது. யாரிடமும் எதற்காகவும் அலுத்துக்கொள்ளமாட்டாள்.

நாலைந்து நாட்கள் கழித்து ஒருநாள் சாயங்காலம் வீடு பெருக்க வரும்போது ஒரு சிறு பையனையும் அழைத்துக் கொண்டு சிற்சபேசன் வீட்டுக்குள் நுழைந்தாள் பட்டு.

“இவன்தான் சார் என் தம்பி. விசுவநாதன்னு பேரு. செல்லமா 'விச்சு'ன்னு கூப்பிடுவேன்.இவனை என்னாலே முடிஞ்ச மட்டும் ஒரு 'ஸ்கூல் பைனல்' வரையாவது படிக்க வைச்சி ஆளாக்கி விட்டுடனும்னு இருக்கேன். அதுக்காகத்தான் இத்தனை பாடு படறேன்” என்று சிற்சபேசனிடம் அந்தச் சிறுவனைக் காட்டிச் சொன்னாள் பட்டு. சிற்சபேசன் சிரித்தார். “ஏன் சார் சிரிக்கிறீங்க? என்னாலே முடியுமான்னு தானே?”

"இல்லே!'ஸ்கூல் பைனல்’னா இன்னும் ஆறேழு வருஷங்களாவது படிக்கனுமே. அதுவரை நீ இப்படியே சின்னப் பொண்ணா வீடு வீடா ஏறி இறங்கிக் காரியம் செய்ய முடியுமான்னு நினைச்சேன். சிரிப்பு வந்தது.”

"அப்படிநினைக்காதீங்க சார். என்னாலே கண்டிப்பா முடியும்.நான் நினைச்சா அதைச் செய்யாம விடமாட்டேன். எப்பாடு பட்டாவது தம்பியைக் கண்டிப்பாய்ப் படிக்க வைச்சுடுவேன் சார்.”

இதைச் சொல்லும்போது பட்டுவின் இடுங்கிய கண்களில் ஒளி மின்னியது.

“பட்டு உனக்கு நம்பிக்கை ரொம்ப இருக்கு. நீ செய்தாலும் செய்வே.”

“செய்யத்தான் போறேன், சார்! நீங்க நெறையப் படிச்சுப் பெரிய காலேஜிலே எத்தனையோ வருஷம் புரொபஸ்ரா இருந்துட்டு வந்திருக்கீங்க! உங்களோட எல்லாம் வாதாடிப் பேச எனக்குத் தெரியாது. ரத்னம் பிள்ளை அடிக்கடி முயற்சி திருவினையாக்கும் என்று ஏதோ தமிழ் வசனம் சொல்வார்.அதுலே எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை”-பதின்மூன்று வயதுப்பட்டு பேச ஆரம்பித்துவிட்டால் அந்தப் பேச்சில் நூறு வயது அனுபவம் தொனிக்கும். அப்படி ஒரு முதிர்ச்சி. அப்படி ஒரு தெளிவு.

ஒருநாள் சிற்சபேசன் தெரு வழியே போகும்போது மேலக்கோடியில் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பட்டு பார்த்துவிட்டாள்.

"சார்! சார்!...” என்று கத்தி அழைத்தாள். சிற்சபேசன் திரும்பிப் பார்த்தார்.

பக்கத்தில் வந்தார்."இதுதான் நீ இருக்கிற இடமா, பட்டு?” என்று கேட்டார்.

"ஆமாம், சார்! இதுதான் எனக்கு அரண்மனை. ஒட்டுக் கூரை வெயிலுக்குக் காயும்; மழைக்கு ஒழுகும். என்ன செய்வது? அப்பாவச்சிட்டுப் போன சொத்து விடலாமோ”

“கிழக்கேயும் மேற்கேயும் வீடில்லால் இடிமனைகளாகக் கிடக்கிறதே...? தனியாப் பயமில்லாமே இதிலே உன்னாலே எப்படியிருக்க முடியறது?”

“எப்படியோ இருக்கேன், சார்! எனக்கென்ன பயம்? விச்சு துணைக்கிருக்கான். பணமா? காசா; பயப்படறதுக்கு?”

"ஆமாம்! ஊர்க்காரங்க வீடெல்லாம் வாசல் தெளிச்சுக் கோலம் போடறியே, உன் வீட்டிலே மட்டும் வாசலெல்லாம் எருக்கஞ் செடியா முளைக்க விட்டிருக்கியே!”

“அதுக்கு நேரம் ஏது சார்? எனக்குத்தான் கோழி கூப்பிடறதுக்கு முன்னேயிருந்து இருட்டறவரை வாடிக்கைக்காரங்கவீட்டு வேலை சரியா இருக்கே இங்கே தம்பிக்கும் எனக்கும் சாப்பாடு வேறே சமைக்கணுமே?” என்று சரியாகக் காரணம் சொல்வாள் பட்டு.

பேராசிரியர் சிற்சபேசன் அந்தக் கிராமத்தில் குடியேறி ஒரு வருடம் ஒடிவிட்டது. பட்டுவின் தம்பி இப்போது நாலாங்கிளாஸ் படிக்கிறான். வீடு பெருக்குகிற வேலைக்காரப் பெண்ணாக இருந்தாலும், அவள் மேல் தனி அனுதாபம் அவருக்கு உண்டு. ஒருநாள் காலை பட்டு வாசல் தெளித்து கோலம் போட வரவில்லை. விடிந்து வெகு நேரமாகிவிட்டது.


“இந்தப் பெண்பட்டு வரலியா இன்றைக்கு” என்று தம் மனைவியிடம் கேட்டார் சிற்சபேசன்.

"அந்தப் பெண் இனிமேல் வராது:”

"ஏன் அப்படி?”

பதில் சொல்லாமல் அர்த்த புஷ்டியோடு சிரித்தாள் அவர் மனைவி.

“என்ன சிரிக்கிறே?”

"ஒண்ணுமில்லே” என்று சொல்லிக் கொண்டே, கணவன் பக்கத்தில் நெருங்கி வந்து தணிந்த குரலில், “பட்டு பெரிசாயிருக்கா” என்றாள் அவள்.

சிற்சபேசனுக்குத் திகைப்பு ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம். இரண்டையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அந்தப் பெண்ணுக்கு இந்த ஊரில் ஏனென்று கேட்கக்கூடத் தன் மனிதர் என்று யாருமே இல்லையே! ஒண்டியா என்னசெய்யறதோ? பாவம்.” என்று தம் மனைவியை நோக்கிச் சொன்னார்.

“எனக்கே இது தெரியாது! நேற்று இராத்திரி பெருமாள் கோவிலுக்குப் போயிட்டுத் திரும்பி வரபோது, அந்தப் பெண்ணோட வீட்டு வாசல்லே ஒரே பெண்கள் கூட்டமாக இருந்தது. என்னன்னு போய் விசாரித்தேன். பட்டு பெரிசாயிருக்கான்னு தகவலைச் சொன்னா. உள்ளே போய்ப் பார்த்தேன். அது ஒரு முலையில் தலையைக் குனிஞ்சிண்டு உக்கார்ந்திருந்தது.'என்னடீ பட்டு'ன்னேன்.பதில் சொல்லாமே என்னைப் பார்த்து சிரிச்சுது. அதைப் பார்க்கறபோது எனக்கு மனசு கஷ்டமா இருந்தது. பெத்தவ இருந்தா இப்படி ஒரு மங்களமான காரியம் நடந்ததைப் பெருமையான நாலு பேருக்குச் சொல்லுவா. வாசல்லே கோலம் போட்டுக் கொண்டாடித் தலைவாரிப் பூ வைச்சுப் பிட்டும், உருண்டையும் பண்ணி நாலு பெண்களைக் கூப்பிட்டுக் கொடுப்பா. யார் இருக்கா இதுக்கு அதெல்லாம் செய்ய? அனாதையா அழுக்குச் சித்தாடையைக் கட்டிண்டு மூலையிலே உட்கார்ந் திண்டிருக்கு.”

"ஐயோ பாவம்! நீயும் இந்த ஊர் அசல் மனிதர்களைப் போலப் பேசாமல் இருந்துவிடாதே. சாயங்காலமா யூசுப் ராவுத்தர் ஜவுளிக் கடையிலேயிருந்து ஒரு சீட்டிச்சிற்றாடை வாங்கிட்டு வந்து தரேன். வாசல்லே பூக்காரன் வந்தால் கொஞ்சம் பூவும் வாங்கிவைச்சுக்கோ.போய் ஏதோ முறையாய்ச் செய்வதை செஞ்சிட்டு வா.அது குளித்து வருகிற வரையில் அந்தச் சின்னப் பையனை இங்கே வந்து சாப்பிடச் சொல்லிவிட்டு வா. பட்டுவுக்கும் கொண்டு போய் போட்டுடு” என்று பரிவோடு சொன்னார் சிற்சபேசன்.

அவர் கூறியபடியே நடந்தது. சாயங்காலம் அவர் மனைவி ஒரு பழுக்காத் தாம்பாளத்தில் புதுச்சிற்றாடையும், பூவும் மஞ்சள் குங்குமமும் ஒரு டஜன் கண்ணாடி வளையலும் எடுத்து வைத்துப் புடவைத் தலைப்பால் மூடிக் கொண்டு பட்டுவின் வீட்டிற்குச் சென்றாள்.

போனவள் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது.

“என்ன? பட்டு என்ன சொல்றாள்?” என்று விசாரித்தார் சிற்சபேசன்.

"அதை ஏன் கேக்கறேள்? நான் புதுச்சித்தாடையும் பூவுமாய் போய் நின்னதும் அந்தப் பெண் ஒரே பிடிவாதமா 'இதெல்லாம் வேண்டாம் மாமி’ன்னு அடம் பிடித்தது.'நான் பிறந்து வளர்ந்த சீருக்கு இதெல்லாம் இல்லைன்னு ஒரு குறையா? நீங்க ஏன் வீணா சிரமப்படனும்?' என்று சிரிச்சுண்டே சொல்லிற்று. அதுக்கில்லையடி பெண்ணே! இதெல்லாம் வழக்கம்டி! ஆயிரம் கஷ்டமானாலும் முறையை விடப்படாது. நல்லது நாளைக்கு வருமா?’ என்று நானாக வற்புறுத்திச் சொல்லி, எல்லாம் செய்துவிட்டு வந்தேன்” என்றாள் அவர் மனைவி.

“என்னவோ, இதிலே நமக்கு ஒரு திருப்தி அவ்வளவுதான்” என்று மனநிறைவோடு சொன்னார் சிற்சபேசன்.

“இத்தனை நாட்கள் முகத்தைச் சுளிக்காமல் உழைச்சுது, சம்பளம்னு ஏதோ கொடுத்தோம். ஆனால் அது உழைச்சதுக்கு நீங்க கொடுத்த நாலைந்து ரூபாய் காசு காணவே காணாது. பெரிசாப் போனப்புறம் இன்னமே எங்கே வீடு வீடா வாசல் பெருக்க வரப்போறது?’ என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டாள் சிற்சபேசனின் மனைவி.

"அப்படியானால் இனிமேல் பட்டு வேலைக்கு வரமாட்டாள் என்கிறாயா?” "அப்படி அவள் சொல்லலையானாலும் எனக்குத் தோண்றது” என்றாள் அவர் மனைவி. சாயங்காலம் சாவடியில் தற்செயலாகக் கிராம முன்சீப் ரத்னம்பிள்ளையைச் சந்தித்தார் சிற்சபேசன். பட்டுவைப் பற்றி ஏதோ பேச்சு வந்தது.

“எனக்கு அந்தப் பெண் பேரிலே தனி அனுதாபம் சார்! இதுவரை எப்படியோ நாலு வீட்டில் காரியம் செய்து தன்னையும் தன் தம்பிப் பயலையும் காப்பாத்திக் கிட்டுது. இனிமே அது முடியற காரியமில்லையே? துக்கிரிப்பய கிராமம், ஏழைப்பட்ட பெண்ணைப் பற்றி என்ன வேணாலும் பேசும் பெரிசான பொண்ணு வீடு வீடா நுழைஞ்சு வேலை செய்யறது நல்லா இருக்காது. இனிமே எப்படிக் காலம் தள்ளப் போகுதோ?” என்று ரத்னம்பிள்ளை ஏக்கம் நிறைந்த குரலில் சிற்சபேசனிடம் சொன்னார். "எனக்கும் அதுதான் யோசனை" என்றார் சிற்சபேசன்.

ஆனால் பட்டு இந்த மாதிரி எதையுமே யோசிக்கவில்லை என்பது நாலாவது நாள் விடிந்ததும் தெரிந்தது.

இருள் பிரியும் நேரம். காலைக் குளிர் நீங்கவில்லை. மப்ளரை இழுத்துக் கட்டிக் கொண்டு வாசல் பக்கம் வந்த சிற்சபேசன், வேப்ப மரத்தடியில் விளக்குமாறும் கையுமாக நின்று கொண்டிருந்த பட்டுவைப் பார்த்துத் திகைத்துப்போனார்.

நீராடிய கூந்தலை அவள் அள்ளிச் செருகிக் கொஞ்சம் செவந்திப்பூ வைத்திருந்தாள். கைகளில் அவர் மனைவி கொடுத்த புதிய கண்ணாடி வளையல்கள் குலுங்கின. புதிய சீட்டிச் சிற்றாடையும் கட்டிக் கொண்டிருந்தாள்.

‘ரத்னம்பிள்ளைகூட அப்படிச் சொன்னாரே! ஒருவரையும் கலந்து யோசனை கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பெண் இன்னும் இப்படி விளக்குமாறும் கையுமாக வந்து நிற்கிறதே?' என்ற சிந்தனையோடு வேப்பமரத்தடிக்குப் போனார் சிற்சபேசன்.

“சார்! உங்க வீட்டிலேயிருந்து மாமி வந்து என்னை ரொம்பப் பெருமைப்படுத்தினாங்க என்னாலே வீண் கஷ்டம். நாலு நாளா நான் வராமல் வாசல் பெருக்க முடியாமல் சிரமமாயிருந்திருக்கும். குப்பை சுமந்து போச்சு” என்று வழக்கமாகப் பேசுவதுபோல் ஆரம்பித்தாள் பட்டு.

"அது சரி, பட்டு! நான் ஒண்ணு கேக்கணும் உன்னை. தப்பா நினைச்சுக்க மாட்டியே!”

“என்ன சார்?” “இனிமே நீ இப்படி வீடு வீடா வாசற் பெருக்க வர முடியுமா? பெரிய பெண்ணாயிருக்கே. ரத்தனம்பிள்ளைகூட எங்கிட்டச் சொன்னார். ஊரார் நாலு தினுசாப் பேசறவங்கன்னு.”

பட்டு பெருக்குவதை நிறுத்திவிட்டு அவர் முகத்தைப் பார்த்துச்சிரித்தாள்.அந்தச் சிரிப்புக்குத்தான் எத்தனை அர்த்தம்?

“சார் எனக்கெல்லாம் இப்படிப் பெருமை கொண்டாடிட முடியுமா? உழைச்சு வயிறு நிரப்பியாகணும். தம்பியைப் படிக்க வைக்கணும்னு நான் வைராக்கியம் எடுத்திண்டிருக்கேன். ஊரார் எப்பவுமே நாலு விதமாய்ப் பேசறவங்கதான். பட்டினி கிடந்தா ஏன்னு கேட்க இந்த ஊராருக்குத்துப்பு இருக்கா? அவங்க என்ன பேசினாலும் கேட்க நான் தயாரில்லை.”

“சரி! நான் எனக்குப் பட்டதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு வேப்பமரத்தடியிலிருந்த சிமண்டு மேடையில் உட்கார்ந்தார் சிற்சபேசன். வழக்கம்போல் கிழக்கே சூரியோதயக் காட்சி கிராமத்துக்கே உரிய அசல் அழகோடு தெரிந்துகொண்டிருந்தது. பட்டு வேகமாகப் பெருக்கத் தொடங்கியிருந்தாள். சிறிதுநேரம் கழித்து வீட்டுக்குள்ளே போவதற்காக அவர் எழுந்திருந்தபோது பட்டு பெருக்கி முடித்துவிட்டு மரத்தடியில் வேப்பம் பழம் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

“இந்த வேப்பம்பழம் தின்கிற கெட்ட பழக்கம் இன்னும் உன்னிடமிருந்து போகவில்லையே? உன் பழக்கமே உலகத்தோட ஒட்டாமே தனியா இருக்கு! எல்லாருக்கும் வாய்க்கு ருசியா ஏதாவது பழம் பிடிக்கும்னா உனக்கு மட்டும் வாயை நாற அடிக்கிறதுலேயே பிரியம்” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே கேட்டார் சிற்சபேசன்.

“என்ன சார் செய்யறது? சின்ன வயசிலேயிருந்தே எனக்கு இந்தக் கசப்பிலே ஒரு பிரியம். இந்தப் பழத்தைச் சாப்பிட்டுப் பழகிட்டேன்.இந்தப் பழத்தினோட கசப்பிலே ஒர் அசட்டுஇனிப்பும் இருக்கு சார்?' என்றாள் நிஷ்களங்கமாகச் சிரித்துக் கொண்டே

பட்டு சொன்ன வார்த்தைகளை அவள் ஒரே அர்த்தத்தை நினைத்துக் கொண்டுதான் சொல்லியிருக்க முடியும்! ஆனால், சிற்சபேசனுக்கு எத்தனையோ அர்த்தங்கள் அந்த வார்த்தைகளிலிருந்து கிடைத்தன.

“பட்டுவுக்கென்ன? கசப்பாயிருக்கிற எதுவுமே அவளுக்குச் சின்ன வயசிலிருந்தே பழக்கம்! பழகினால் கசப்பைப் போல் சுவை வேறே இல்லை” என்று தமக்குள் மெல்ல முணுமுணுத்துக்கொண்டார் சிற்சபேசன்.
(கல்கி, 15.11.1959)