நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/பேதைமை
75. பேதைமை
ரங்கு அக்காவை ரேழியில் எடுத்து விட்டிருந்தார்கள். காலை ஏழரை மணி.
“அக்கா அக்கா சாதம் போடு அக்கா.”
“…”
“பசியாயிருக்கு அக்கா…”
“…”
“நீ இன்னும் தூங்கறியேஅக்கா? என்னிக்கும் நீ சீக்கிரமா எழுந்து விடுவியே! இன்னிக்கு மட்டும் ஏன் அக்கா இன்னும் தூங்கறே?”
“…”
“களைப்பா இருக்கா?”
“…”
“இவாள்ளாம் ஏன் ஒன்னைச் சுத்தி உக்காந்து அழறா?”
“…”
“சொல்ல மாட்டியா அக்கா?”
“…”
“இவாளுக்கும் பசிக்கிறதா?” குழந்தை ராமுவின் கேள்விக்குத் தரையில் படுத்துக் கிடந்த ரங்கு அக்கா பதிலே சொல்லவில்லை.
ராமுவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு, அக்காவின் தலையைத் தன் பிஞ்சுக் கைகளால் பிடித்து ஆட்டத் தொடங்கினான்.
அக்காவைத் தூக்கத்திலிருந்து எழுப்பிச் சாதம் போடச் சொல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம்.
அக்காவின் தலை, இரண்டு பக்கத்திலும் அவன் தள்ளியபடியெல்லாம் புரண்டு விழுந்தது. சுற்றி அழுது கொண்டிருந்தவர்களில் வயதான ஒரு அம்மா, “ஏண்டா தொணதொணன்னு பேசிண்டு…? அக்கா இனி மேல் எழுந்திருக்கவே மாட்டாடா! அந்தண்டே போ” என்றாள்.
ராமு விடவில்லை!
“அக்கா ஏன் எழுந்திருக்க மாட்டா?”
“அவ செத்துப் போயிட்டாடா!”
“எதுக்காகச் செத்தாளாம்? அவ மட்டும் ஏன் சாகனும்?”
“அவளை சுவாமி அவர்கிட்ட அழச்சிண்டுட்டார். அதுனாலே அவ செத்துப் போயிட்டா!”
“சுவாமி ஏன் அக்காவை மட்டும் அழச்சுக்கணும்? என்னையும் கூட்டிக்கப் படாதோ?”
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அந்த அம்மாளுக்குத் தெரியவில்லை. தூரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ராமுவின் அப்பா வேங்கடராம ஐயருக்குக் கண்களில் நீர் தேங்கிவிட்டது. மேல் வேஷ்டியால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
ராமுவின் பிடிவாதம் அதிகமாயிற்று. கீழே கிடத்தப்பட்டிருந்த ரங்கு அக்காவை எழுப்புவதற்காக ஆட்டி அசைத்துத் தொந்தரவுகள் செய்யலானான். சுற்றி உட்கார்ந்து தலைவிரி கோலமாக அழுது கொண்டிருந்த பெண்களால் அவனை அடக்கவோ கண்டிக்கவோ முடியவில்லை.
வேங்கடராம ஐயர் எழுந்திருந்து வந்தார். அழுது கொண்டிருந்தவர்கள் அடக்க ஒடுக்கமாக ஒதுங்கி நின்று வழி விட்டார்கள்.
“அக்கா எழுந்திரு அக்கா!”
“சாதம் போட நாழியாச்சு எனக்குப் பள்ளிக்கூடம் போகணும்” ராமு அனத்திக் கொண்டிருந்தான். அங்கே வந்த வேங்கடராம ஐயர் அவனை வாரி எடுத்துத் துக்கிக் கொண்டு போனார்.
பெண்கள் கசமுசவென்று அழுகைக்கிடையே பேசிக் கொண்டார்கள்.
“ரங்குதான் தினம் இந்தப் பிள்ளைக்குக் காலங்கார்த்தாலே எழுந்ததும் சாதம் பிசைஞ்சு போடுவாள். இந்த ரெண்டரை வருஷமா அவ கையாலே பழையது சாப்பிட்டுப் பழக்கம் இதுக்கு.”
“ஐயோ பாவம், பசலைதா”னே? அவதூங்கறான்னு நினைச்சிண்டிருக்கு!”
“குழந்தைதானே! ஏதோ அஞ்ஞானம்! பழக்கம் அப்படி; அவ போயிட்டான்னு தெரியலே அதுக்கு”
“பாவிப் பெண்! புருஷன் வீட்டிலேதான் பூவும் மஞ்சளுமா வாழக் கொடுத்து வைக்கலேன்னா, இங்கே வந்து இப்படியா அல்பாயுசா போகனும்”
“வேங்கட்ராமன் ஏற்கெனவே ஆத்துக்காரியை எமன் கையில் விட்டுட்டுக் கஷ்டப்பட்டு நாளைக் கடத்திண்டிருந்தான். இந்தப் பிள்ளை ராமுவைப் பிரசவிச்சுட்டுச் செத்தா அவ! இப்போ வீட்டோட அடைஞ்சு கிடந்த பெண்ணும் இப்பிடிப் போயிட்டா.”
“குழந்தைக்கு வயசு போறாது ஒத்தனா இருந்துண்டு எப்படி வச்சுக் காப்பாத்தி ஆளாக்கி விடப் போறானோ?”
“எல்லாம் இந்தப் பிள்ளை பிறந்த வேளைதான்! இதைப் பெத்த மூணாம் நாள் பெண் அறுத்துட்டு வந்து நின்னா! அதே ஏக்கம். ஏழாவது நாள் அவ விதவைப் பெண்ணையும் இந்தக் குழந்தையையும் அவனையும் விட்டுட்டுப் போய்ச் சேர்ந்தா.”
பெண்களின் இந்த சம்பாஷணைகள் எல்லாம் கையில் ராமுவைப் பிடித்துக் கொண்டு சற்றுத் தொலைவில் நின்ற வேங்கடராம ஐயருக்கும் கேட்டன.
பெண் வாழாவெட்டியாக வந்து விட்டாளே என்ற கவலை ஒரு புறமிருந்தாலும் வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளும் அவரைக் கைவிட்டுப் போய்விட்டாள்.
‘நாள் தவறாமல் காலையில் அவள் கையால் சாதம் சாப்பிட்டுப் பழகிப்போன இந்தக் குழந்தை ராமுவுக்குக் கூட அவள் செத்துவிட்டாள் என்பதை நம்ப முடியவில்லை. நானும் அப்படி இருந்துவிட முடியுமா?’ - என்று அவர் தமக்குள் சிந்தித்தார்.
மனிதர்கள் பெரியவர்களாவதன் பலன், துக்கத்தை உணர்கின்ற அறிவைப் பெறத்தானா? செத்தவனைத் தூங்குகிறான் என்றெண்ணிக் கொண்டு, உரிமையோடு எழுப்பிச் சாதம்போடக் கூப்பிடுகிறது இந்தக் குழந்தை. பாசமும் உறவுமுள்ளவர் செத்துப் போனாலும், இவனைப் போல அந்தச் சாவை உணராத பேதைமை எல்லா மனிதர்களுக்கும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
“அப்பா! ரங்கு அக்காவை நீயாவது எழுப்பு அப்பா! வயித்தைப் பசிக்கிறது. பழையது பிசிஞ்சு போடச் சொல்லணும்” என்று ராமுவின் அனத்தல் பழையபடி ஆரம்பித்து விட்டது. அவருடைய சிந்தனை கலைந்தது.
“ரங்கு அக்கா செத்துப் போயிட்டாடா ராமு! நீ சமர்த்தோ இல்லையோ? இப்படி அழுது மொரண்டு பண்ணப்படாது. உனக்கு வேறே யாரையாவது போடச் சொல்றேன்.”
“வேண்டாம் போ... நீ பொய் சொல்றே. ரங்கு அக்கா ஒண்ணும் செத்துப் போகலை, அவ தூங்கறா - வேணும்னா நான் எழுப்பறேன்...”
ராமு மறுபடியும் ரங்கு அக்காவின் சடலத்தை நோக்கி ஓடினான்.
பரபரவென்று அவன் கையைப் பிடித்து இழுத்து வந்து உட்கார்த்தினார் அவர். தம் மனத்தையாவது சமாதானப்படுத்தி அடக்கிக் கொள்ளலாம் போலிருந்தது; ராமுவை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது தான்.அவருக்குப் புரியவில்லை.
யாரோ ஒருவர் பக்கத்திலிருந்த ஹோட்டலுக்குப் போய் இரண்டு இட்டிலி வாங்கிவந்தார். வேங்கடராம ஐயர் பாதி நயமாகவும் பாதி பயமுறுத்தியும் அவனைச் சாப்பிடச் செய்துவிடலாம் என்று எண்ணினார்.
“இது எனக்கு வேண்டாம் போ!ரங்கு அக்கா ஈயக் கச்சட்டியிலே பிசிஞ்சி போடுவாளே, அந்தப் பழய சாதந்தான் வேணும். அக்காவை எழுப்பு.”
குழந்தை இட்டிலிப் பொட்டலத்தைக் காலால் எத்தி உதைத்துவிட்டான். துக்கம் நிறைந்த மன நிலை, சகிப்புத் தன்மை, எல்லாவற்றையும் மறந்து ஒரே ஒரு கணம் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் அவர்.
பளீரென்று அடுத்தடுத்து அவனுடைய முதுகில் இரண்டு அறைகள் விழுந்தன. ராமு. கீழே விழுந்து காலை உதைத்துக் கொண்டே வீறிட்டு அழுதான்.
“அக்கா ரங்கு அக்கா! ... அப்பா அடிக்கிறா, அக்கா... நீ ஏந்திருந்து வந்து பார்க்கமாட்டியா?”
திடீரென்று எழுந்திருந்து ஓடியவன் அக்காவின் சடலத்தருகே சென்றுவிட்டான். தலை மயிரைப் பிடித்துப் பிய்த்து இழுத்து அவளை எழுப்ப முயன்றான்.
“அடராமா! குழந்தையை இப்படிக் கிட்டே விடுவாளோ? ஆகாத காரியம்னா?” என்று அலுத்துக்கொண்டே வயதான பாட்டியம்மாள் ஒருத்தி மீண்டும் குழந்தை ராமுவை எடுத்து இழுத்து வந்து அவரருகில் விட்டாள்.
வேங்கடராம ஐயர் திமிறி ஒட முயல்கிற குழந்தையைக் கைகளால் இறுக்கிப் பிடித்துக்கொண்டார்.
“நீங்களே குழந்தையை வைத்துக் கொண்டிருந்தா மேலே காரியங்களைச் செய்ய வேண்டாமா? யாரிட்டவாவது சமாதானப் படுத்தி விட்டுட்டு வாங்கோ காரியங்கள் நடக்கணுமில்லையா? நாழிகை ஆயிண்டே இருக்கு!”. புரோகிதர் அவசரப்படுத்தினார்.
இதற்குள் அங்கிருந்த ஒருவர் தந்திரமாக ஒரு காரியம் செய்து குழந்தை ராமுவை விலக்கிக் கூட்டிக்கொண்டு போக முன்வந்தார்.
“ராமு! கடைக்குப்போய் நிறையப் ‘பப்பெர்மிட்’ வாங்கிண்டு வரலாம். ரங்கு அக்காவுக்குக் கூடக் கொஞ்சம் கொடுக்கலாம்.”
"கொடுத்தா ரங்கு அக்கா எழுந்திருந்து சாதம் போடுவாளா?”
“கட்டாயம் போடுவா! அவளுக்கு மிட்டாய் கொடுத்தியானா உன்மேலே ரொம்பப் பிரியம் உண்டாகும்.”
“நிசம்மாவா?”
“ஆமாம் ராமு, நிசம்மாத்தான்.”
“அப்ப வா, கடைக்குப் போகலாம்.”
“நீங்க காரியத்தைப் பாருங்கோ. நான் இவனைக் கொண்டுபோய்க் கவனிச்சுக்கிறேன்” என்று ஜாடையாக வேங்கடராம ஐயரிடம் கூறிவிட்டுக் குழந்தை ராமுவைத் தூக்கிக்கொண்டு போனார் அந்த சாமர்த்தியக்காரர்.
அன்றைக்குக் காரியங்கள் ஒருவழியாக முடிந்து விட்டன. வேங்கடராம ஐயர் மயானத்திலிருந்து வீடு திரும்பும்போது மணி நாலுக்குமேல் ஆகிவிட்டது.
குழந்தை ராமுவைக் கொண்டுபோன மனிதர் ஏழு மணி சுமாருக்குத் திரும்பக் கொண்டுவந்து விட்டார்.அப்போது அவன் தூங்க ஆரம்பித்திருந்த சமயம். அதனால் வேங்கடராம ஐயர் அதிகச் சிரமம் இன்றி அப்படியே படுக்கையில் வாங்கி விட்டுவிட்டார்.
ஓர் உயிரைப் பறிகொடுத்த துக்கம்! விடிய விடிய உறக்கம் அவரை அண்டவில்லை. குழந்தை ராமுவோ விடிகிற வரை நிம்மதியாகத் தூங்கினான்.
பொழுது விடிந்தது. விடிகிற சமயத்தில்தான் அவருக்கு இலேசாகக் கண்களைச் சொருகிற்று. அந்தச் சமயம் பார்த்துத்தான் குழந்தை ராமு விழித்துக் கொண்டான்.
“ரங்கு அக்கா எங்கேப்பா? எழுந்திருக்கிலியா?”
“ரங்கு அக்கா இல்லேடா நீ தூங்கு”
“அக்கா எங்கேப்பா?”
“தூங்கித்தொலைடா! என் பிராணனை வாங்கறே.அவ செத்துப் போயிட்டாடா.”
“செத்துப் போறதுன்னா என்ன அப்பா?”
“சீ. கழுதை! தூங்கறியா, உதை வேணுமா?”
“ரங்கு அக்கா வேணும். எனக்கு அக்காவைப் பார்க்கணும். உம் ஊம் ஊம்.” குழந்தை ராமு மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டான்.
ராமுவை அந்த வருடம்தான் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாங் கிளாளபில் சேர்த்திருந்தது. வீட்டில் அவனைச் சமாதானப்படுத்துவது கஷ்டம் என்று மெல்ல எப்படியோ அக்காவைப் பற்றி மறக்கச் செய்து அவனைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிவிட்டார் அன்று.
அவன் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டதனால் அன்று காலையில் செய்ய வேண்டிய இரண்டாம் நாள் சஞ்சயனக் கிரியைகளைத் தடங்கலில்லாமல் நேரத்தோடு அவரால் செய்ய முடிந்தது.
அதே தெருவிலிருந்து இரண்டாம் கிளாஸ் படிக்கிற பையன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்குப் போனான். அவன் ராமுவின் மேல் வீட்டுக்காரப் பையன். ராமுவை விட ஒரு வயது பெரியவன். அவனோடுதான் ராமுவைச் சமாதானப்படுத்திப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியிருந்தார் அவனுடைய அப்பா.
அந்தப் பையன் பெயர் கோவிந்தன். ராமு அவனைக் ‘கோந்து’ என்று கொச்சையாகக் கூப்பிடுவது வழக்கம். அன்று பள்ளிக்கூடம் போகும்போது ராமு ‘கோந்து’விடம் சில கேள்விகளைக் கேட்டான்.
“ஏன்டா கோந்து, ஒன்னை ஒண்ணு கேக்கறேன், பதில் சொல்லுவியோ?”
“என்னடா வேணும்? கேளு! சொல்றேன்.”
“செத்துப் போறதுன்னா என்னடா? உனக்குத் தெரியுமாடா?”
கோவிந்தனுக்குச் செத்துப்போவதைப் பற்றிய ஒரே ஓர் அனுபவம்தான் இதுவரை தெரியும் அவனுடைய அத்தை ஒருத்தி விளிம்புச் சுவர் இல்லாத கிணற்றில் தண்ணீர் தூக்கும்போது காலில் தாம்புக்கயிறு பின்னி உள்ளே விழுந்து செத்துப் போனாள். இதுதான் செத்துப் போவது பற்றிக் கோவிந்தனுக்குத் தெரிந்த ஒரே ஓர் அனுபவம்.
எனவே, இந்த அனுபவத்தை அனுசரித்தே ராமுவின் கேள்விக்கு அவன் பதில் கூறினான்.
“செத்துப்போறதுன்னா... கிணத்திலே விழுந்துடனும்டா, அதுதான் செத்துப் போறது... எங்க அத்தை அப்படித் தாண்டா செத்துப்போனா.”
“அப்போ கிணத்திலே விழுந்தா நிச்சயமா செத்துப் போயிடலாமாடா?”
“ஆமாண்டா!”
“அப்படியானா எங்க ரங்கு அக்கா கிணத்துலே விழவே இல்லியே. அவ செத்துப்போயிட்டான்னு அப்பா சொல்றாரே! அது எப்பிடிடா கிணத்துலே விழாமே சிெத்துப் போக முடியும்?”
“அதென்னமோ எனக்குத் தெரியாதுடா.”
“அப்பா பொய்தாண்டா சொல்றார்.”
“பொய் இல்லேடா! உங்க ரங்கு அக்கா நெசமாகவே செத்துப் போயிட்டாடா. நேத்துச் சுடுகாட்டிலே கூடக் கொண்டு போய் நெருப்பை வச்சுட்டாளே.”
“அய்யய்யோ, அக்காவுக்குச் சுடாதோ?”
“அதென்னமோ எங்க அத்தை செத்துப் போனபோது கூட இப்படித்தான் நெருப்பை வச்சா.செத்துப்போயிட்டா அவாளுக்கெல்லாம் சுடாது போலிருக்குடா!”
“ஏன்டா கோந்து! செத்துப்போனா அவாளை அப்பறம்பாக்க முடியாதோடா?”
“செத்துப் போனவாளைச் செத்துப் போனவாதாண்டா பாக்க முடியும்.”
“அப்போ, நீ செத்துப்போனா இப்பவே உங்க அத்தையைப் பார்க்கலாம். நான் செத்துப்போனா உடனேரங்கு அக்காவைப் பார்க்கலாம். இல்லியாடா கோந்து?”
“பாக்கலாண்டா.”
“சத்தியமா?”
“பாக்கலாண்டான்னா.”
அன்று பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருந்த நேரம் முழுவதும் செத்துப் போவதைப் பற்றிய சிந்தனையிலேயே முழுக்க முழுக்க ஆழ்ந்து போயிருந்தான் குழந்தை ராமு.
கோவிந்தனோ ராமுவுடன் பேசி முடித்ததுமே அந்தப் பிரச்னையை மறந்துவிட்டான்.
குழந்தையுள்ளம் பேதைமை நிறைந்தது. நன்மையோ, தீமையோ, கேட்பன வெல்லாமே அங்கு நம்பிக்கைக்குரிய உண்மைகளாகப் பதிந்துவிடுகின்றன. செத்துப் போவதைப் பற்றிக் கோவிந்தன் கூறிய ‘உண்மைகளும்’ இப்படித்தான் குழந்தை ராமுவின் மனத்தில் பதிந்துவிட்டன.
பகல் பன்னிரண்டரை மணிக்குப் பள்ளிக்கூடம் விட்டார்கள். ராமு பையை எடுத்துக்கொண்டு கோவிந்தனின் துணையை எதிர்பார்க்காமலே வீட்டுக்கு ஓடினான்.
வீட்டு வாசல் திண்ணையில் இரண்டாம் நாள் காரியங்களை முடித்துவிட்டு யாரோ துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தார் வேங்கடராம ஐயர்.
ராமு பள்ளிக்கூடத்திலிருந்து வந்து உள்ளே சென்றதை அவர் கவனிக்கவில்லை.
பத்து நிமிஷங்கள் கழிந்தன. கொல்லைப்புறம் கிணற்றிலிருந்து தண்ணீரில் கல்லைத் தூக்கிப் போட்ட மாதிரி ஓர் ஒசை வந்தது. வேங்கடராம ஐயரருகில் இருந்த இருவரும் திடுக்கிட்டனர். “அது என்ன சார்? கொல்லையில் சப்தம் கேட்கிறது?” என்று வந்தவர்கள் திகைப்போடு கேட்டனர். சிறிது நேரத்தில் மூவரும் எழுந்திருந்து கொல்லைப்பக்கம் சென்று கிணற்றை எட்டிப் பார்த்தனர்.
ராமு தண்ணீரை விழுங்கி விழுங்கி, உடல் மேலும் கீழுமாகப் போய்வர, நீர்ப்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தான். வேங்கடராம ஐயர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு பதறியழுதார். பக்கத்தில் இருந்தவர்களில் ஒருவர் கயிற்றைக் கட்டிக் கொண்டு அவசர அவசரமாகக் கிணற்றுக்குள் இறங்கினார்.
குழந்தை ராமு கிணற்றில் நிறையத் தண்ணீரைக் குடித்திருந்தான். உடம்பு ஊதி வெளுத்திருந்தது. வயிற்றிலிருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றிப் பிரக்ஞை உண்டாக்குவதற்கே மாலை ஆறு மணி ஏழு மணிக்குமேல் ஆகிவிட்டது.
பிரக்ஞை வந்தும் அவன் தன்நினைவோடு பேசவில்லை. ‘குழந்தை ஏன் இப்படிச் செய்தான்? தவறிப்போய்க் கிணற்றில் விழுந்தானா அல்லது வேண்டுமென்றே விழுந்து விட்டானா?’ என்பது தெரியாமல் தவித்தார் வேங்கடராம ஐயர்.
மறுநாள் காலையில்தான் ராமு பிரக்ஞையுடன் தெளிவாகப் பேசவும் செய்தான். அவன் வாயிலாகவே விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காக மெல்ல அவனைக் கேள்விகள் கேட்டார் அவர்.
“ஏன்டா கிணற்றில் விழுந்தாய்?”
“விழவில்லை! நானாகவே வேண்டுமென்றுதான் குதித்தேன்.”
“ஏன் குதித்தாய்?”
“செத்துப் போகறதுக்காக.”
“அதுக்கு இப்போ என்ன அவசரம்?”
“செத்துப்போனாத்தான் செத்துப் போனவாளைப் பார்க்கலாமாம். எனக்கு உடனே ரங்கு அக்காவைப் பார்க்கணும். அதுனாலேதான் செத்துப் போறத்துக்காகக் கிணத்துலே குதிச்சேன்.”
“செத்துப்போறதுன்னாக் கிணத்திலேதான் குதிப்பாளோடா?”
“அப்படித்தானே அடுத்தாத்துக் ‘கோந்து’ சொன்னான்!”
வேங்கடராம ஐயர் அடுத்த வீட்டுக் கோவிந்தனைத் தனியே அழைத்து மிரட்டி விசாரித்தார். அவன் காலையில் பள்ளிக்கூடம் போகும்போது ராமு தன்னிடம் கேட்ட கேள்விகளையும் தான் அவற்றிற்குக் கூறிய பதில்களையும் ஒன்று விடாமல் அப்படியே சொல்லிவிட்டான். எல்லாவற்றையும் கேட்டபோது அவருக்குச் சிரிப்புத்தான் வந்தது.
பெண்ணைப் பறிகொடுத்த துயரையும் மறந்து, ஒரு விநாடி அவர் தமக்குள் சிரித்துக்கொண்டார்.
‘இந்த உலகத்தில் அறிந்து உணர்ந்து அனுபவங்கள் பெறுவதில் உண்மையான இன்பமில்லை. ஒன்றையும் அறியாமல் இருக்கிறதே குழந்தை; அதனுடைய பேதைமையில்தான் இன்பம் இருக்கிறது!’ என்று மனப்பூர்வமாகத் தோன்றியது அவருக்கு.
ராமு ஏதோ கேட்க ஆரம்பித்தான்.
“அப்பாவ்!”
“என்னடா?”
“ரங்கு அக்காவைச் சுடுகாட்லே கொண்டுபோய் நெருப்பெ வச்சு எரிச்சுட்டேளாமே அப்பா?”
“யார் சொன்னாடா?”
“கோந்து தாம்ப்பா சொன்னான்.”
“இன்னும் என்ன சொன்னான்.”
“செத்துப்போனவாளுக்கு நெருப்புச் சுடாதுன்னு கூடச்சொன்னான் அப்பா”
“உம்ம்ம்..”
அவருக்குத் திரும்பவும் சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். குழந்தை தப்பாக நினைத்துவிடக் கூடாதே, அதற்காக
(1963-க்கு முன்)