நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/செல்வாக்கு

74. செல்வாக்கு

ண் நிறைய ஆவலும், இதழ் நிறையக் குறுநகையும், உடல் நிறைய நளினமுமாக அந்தப் பெண் கதவோரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாதவன் தலையைக் குனிந்து கொண்டு தெருவில் நடந்தான். இப்படி எத்தனை கண்கள்? எத்தனை பெண்கள்? ‘சாளரத்தில் பூத்த தாமரை மலர்கள்’ என்ற கவியின் கற்பனை அவன் நினைவில் மெல்லப் படர்ந்து மறைந்தது. எதையோ நினைத்துக் கொண்டு அவன் பெருமூச்சு விட்டான்.

தெருத் திருப்பத்தில் இறங்கி வாசக சாலை இருக்கும் பக்கமாக அவன் கால்கள் நடந்தன. ஐயாயிரத்துக்குக் குறையாமல் மக்கள் தொகையும், பொய்யா வளமும் கொண்ட அந்த ஊரில் மாதவனுக்குப் பழக்கமானவர்கள் வாசக சாலையிலுள்ள புத்தகங்களும், மலையோரத்து ஒடைகளும், சோலைகளும், சாலைகளும், வயல்வெளிகளும் தவிர வேறில்லை.

மனிதர்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அனுதாபப்பட யார் கிடைப்பார்கள்? அது ஒரு இரண்டுங் கெட்டான் ஊர். நகரத்தோடும் சேர்க்க முடியாது; கிராமத்தோடும் சேர்க்க முடியாது. டாக்டர்கள், இரண்டொரு வக்கீல்கள், நிறையப் படித்துப் பட்டம் பெற்றவர்கள், எல்லோரும் இருந்து நகரத்தின் பெருமையை அதற்கு அளித்தார்கள். வறட்டுத் திமிரும், முரட்டுக் குணமும், எதையும் சிந்தித்து முடிவு செய்யாத அலட்சிய மனப்பான்மையும், அது ஒரு கிராமம்தான் என்பதையும் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டே இருந்தன.

“சார்…! உங்களைத்தான்.” கீழே பார்த்துக் கொண்டே வாசக சாலைக்குள் படியேறி நுழைவதற்கிருந்த மாதவன், குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சிரித்த முகமும் கூப்பிய கைகளுமாக நீலகண்டன் நின்றார். மாதவன் பதிலுக்கு வணங்கி விட்டு அவரருகில் போய் நின்றான்.

“சார் நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லையே…?”

“எதைக் கேட்கிறீர்கள்?”

நீலகண்டன் சிரித்தார். மாதவன் முகத்தை ஓரிரு விநாடி உற்றுப் பார்த்தார். கிருஷ்ண விக்கிரகத்தின் முகம் போன்றிருந்த சலனமற்ற - அழகிய மாதவனின் முகத்தில் உணர்ச்சியின் உயிரோட்டமில்லாத சிரிப்பு ஒன்று தோன்றி ஒடுங்கியது. சிரிக்காமலிருக்கக் கூடாதே என்பதற்காகச் சிரித்த சிரிப்பு அது.

“கலா நிலையத்தில் உங்களை வேலையிலிருந்து நீக்கி விட்டார்களாமே?”

“ஆமாம்! இரண்டு மூன்று நாட்களாயிற்று.”

“நேற்று இரவில் கூட வீட்டில் வந்து உங்களிடம் பேசிக் கொண்டிருந்தேனே;நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?”

“நல்லது நடந்தால் நாலு பேரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்! இதில் சொல்ல என்ன இருக்கிறது? சொல்லிவிடுவதால் ஆகப்போவதுதான் என்ன?”

“அப்படி இருக்கக் கூடாது சார்! நல்லதோ கெட்டதோ, ஊரில் நாலு பேருக்குத் தெரிந்தால் தான் ஆதரவோ, அனுதாபமோ பெறமுடியும்.”

நீலகண்டன் இரண்டு கைகளையும் ஆட்டி முகத்தில் உறுதி ஒளிர ஆவேசத்தோடு பேசினார்.

மாதவன் மறுபடியும் உணர்ச்சியில்லாமல் பேருக்குச் சிரித்தான்.

“நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள் சார்! உங்களுடைய இந்த அமைதியும், அடக்கமும் தருமனுக்கு இருந்தது போல் மகாபாரதத் தலைமுறையில் இருக்க வேண்டும். இந்தத் தலைமுறைக்குக் காலில் விழுந்து வணங்குகின்றவர்கள் தேவை இல்லை. கன்னத்தில் அறைகிறவர்கள் தாம் தேவை!”

“விடுங்கள் சார் பேச்சை!” மாதவன்தட்டிக் கழித்து விட்டு நீலகண்டனிடமிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வாசகசாலைக்குள் நுழைய முயன்றான். நீலகண்டன் விடவில்லை. மாதவனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.

“வர வர ஊரில் அநியாயம் அதிகமாகிவிட்டது. நீங்கள் இதைச் சும்மா விட்டுவிடக் கூடாது. உங்கள் செல்வாக்கு உங்களுக்கே தெரியாது. நீங்கள் வாயசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?”

“ஒன்றுமே நடக்காது.” - இதைக் கூறிவிட்டு மாதவன் சிரித்த சிரிப்பில் குறும்புத்தனம் இருந்தது.

“சரி இருக்கட்டும்; நான் அப்புறம் வந்து உங்களிடம் பேசிக்கொள்கிறேன்” - என்று நீலகண்டன் ஒருமட்டில் அவனை விட்டுப் போய்ச் சேர்ந்தார்.

மாதவன் வாசகசாலைக்குள் நுழைந்தான். அங்கே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த அவனுடைய பழைய மாணவர்கள் மரியாதைக்காக எழுந்து நின்றனர். மாதவன் அவர்களை உட்கார்ந்து படிக்குமாறு கையமர்த்திவிட்டு அன்றைய செய்தித்தாள் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு படிப்பதற்காக ஒரு மூலையில் அமர்ந்தான்.

சுற்றிலும் ‘கசுமுசு’ வென்று எழுந்த பேச்சுக் குரல்கள் தன்னைப் பற்றியனவாகவே இருக்க வேண்டுமென்று அவனால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. அந்த அனுமானத்திற்குச் செவிப்புலன் ஒன்றே போதுமே?

“ஆசிரியரை மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொள்ளக் கோரி மாணவர்கள் வேலை நிறுத்தம்”

அந்தச் செய்தியைப் படிக்க வேண்டுமென்று ஆவல் உண்டாயிற்று மாதவனுக்கு.

படித்து முடிந்ததும் நீண்ட பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறிக் காற்றில் கலந்தது. மாதவனுடைய மனத்தின் ஒரு கோடியில் சிறிய ஆசை ஒன்று கவிந்தது. ஆசை, பயம், அமைதி மூன்று உணர்ச்சிகளாலும் மாறி மாறி மனம் பேதலித்தது. அந்தப் பேதலிப்பினிடையே நீலகண்டன் சிதறிவிட்டுப் போன சிறு கனற்பொறி மினுமினுத்தது. அரைமணி நேரத்திற்குப் பின் மாதவன் வாசகசாலையிலிருந்து திரும்பியபோது, அந்தப் பெண்ணை மறுபடியும் கதவோரத்தில் பார்த்தான். அதே ஆவல்! அதே சிரிப்பு! அதே நளினம்!

மாதவன் அந்த வீட்டு வாசற்படியைக் கடந்து விட்டான்.

“சார்! அப்பா உங்களை உள்ளே கூப்பிடுகிறார்!”

இனிமை கொஞ்சும் இந்தச் சொற்கள் அவள் வாயிலிருந்துதான் பிறந்தன. மாதவன் நிமிர்ந்து பார்த்தான்.

“சார்! நான்தான் கூப்பிட்டேன். இப்படி உள்ளே வாருங்களேன்!” உள்ளிருந்து வயது முதிர்ந்த ஆண் குரல் ஒன்று ஒலித்தது. வாயில் சிற்றாடையின் தலைப்பு கதவுக்கு அப்பால் மறைந்தது. மாதவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.

உள்ளே ஈஸிசேரில் சாய்ந்துகொண்டிருந்த அந்தப் பெரியவரை வணங்கிவிட்டு எதிரே உட்கார்ந்தான்.

“குழந்தை இப்போதுதான் சொன்னாள். நீங்கள் இப்போது கலா நிலையத்தில் இல்லையாமே?”

“இருக்க விடவில்லை! அதனால் இல்லை!”

“வீட்டைவிட்டு வெளியேறாத மனிதர் நீங்கள். உங்கள்மேல் குறை சொல்ல என்ன இருக்கிறது?”


மாதவன் இதழ்களில் குறுநகை நெகிழ்ந்தது.

“இப்போது நீங்கள் சொன்ன குறைதான்.”

அவரும் சிரித்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பினான் மாதவன். வீட்டுத் திண்ணையில் ஒரு கூட்டம் தயாராகக் காத்திருந்தது. பலசரக்கு மளிகை சின்னச்சாமி சிட்டைப் புத்தகத்தோடு வந்திருந்தார்.

“என்ன சார்? வேலையை விட்டு விட்டீர்களாமே?”

“தப்பு வேலை என்னை விட்டுவிட்டது.”

மாதவனுக்குச் சிரிக்கவோ, பேசவோ,இன்னும் தெம்பு குறையவில்லை. “வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போகப்போகிறீர்களாமே?” இது இன்னும் ஒரு படி அதிகமான விசாரணை. மாதவனின் சிரித்த முகம் சுண்டிப்போயிற்று. சுருங்கிவிட்டது.

“யார் சொன்னார்கள் அப்படி?”

சின்னச்சாமி சொல்வதற்குத் தயங்கினார்.

“சும்மா... இப்படிப் பேச்சு வந்தது... கேள்விப்பட்டேன்.”

“ஓகோ!...” மாதவன் அதற்குமேல் அவரை வற்புறுத்தித் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.

“அது சரி! நீங்கள் வந்த காரியம்...?” மாதவன் சின்னச்சாமியிடம் பேச்சைமாற்றும் நோக்கத்துடன் இப்படிக் கேட்டான்.

சின்னச்சாமி சிட்டைப் புத்தகத்தைப் பிரித்தார். இடது கையால் தலையைச் சொரிந்தார். தயங்கினார். மாதவனை நேரே பார்க்கத் துணிவின்றி எங்கோ பார்த்துக் கொண்டு பேசினார். வார்த்தைகள் நின்று இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக வெளிவந்தன.

“நம்ம கடை பாக்கி கொஞ்சம்.” வார்த்தைகள் மெதுவாக இழுபட்டன.

“ஓ! பாக்கி கொடுக்காமல் ஊரை விட்டுப் போய்விடுவேனென்ற பயமா?”

“சே!சே! அப்படியெல்லாமில்லை. இருந்தாலும். வந்து...”

அந்த ‘இருந்தாலும் வந்து’- எவ்வளவோ பொருளை உள்ளடக்கிக் கொண்ட சொற்கள்.

விறு விறுவென்று உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து ஒரு புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டைச் சின்னச்சாமியின் கையில் கொண்டு வந்து திணித்தான் மாதவன்.

“நமக்குச் சேரவேண்டிய தொகை இருபத்து மூன்றே சொச்சம் தானுங்க.”

“பரவாயில்லை! கொண்டுபோய் உங்களுக்குச் சேர வேண்டியதை எடுத்துக் கொண்டு பாக்கியை ஒழிந்தபோது கொண்டுவந்து கொடுத்தால் போதும் எனக்கு உம் மேல் நம்பிக்கை உண்டு”

சின்னச்சாமி முகத்தில் அசடு வழியச் சிரித்தார். “பாக்கி கொடுத்து அனுப்புகிறேன்” என்று சொல்லிக் கும்பிட்டு விட்டுப் போய்ச் சேர்ந்தார். அவர் தலை மறைந்ததும், திண்ணையில் ஒரு மூலையில் அதுவரை அடக்கமாக வீற்றிருந்த பால்காரர் எழுந்திருந்து தலையைச் சொரிந்தார். அடுத்த அரைமணி நேரத்தில் அங்கிருந்து பாக்கிக்காரர்களும், பெட்டிக்குள் கிடந்த புது நோட்டுக்களும் வரிசையாக வெளியேறியாயிற்று.

மாதவன் மூன்றாம் முறையாக நெஞ்சு விரிய, நடுமார்பில் ஏதோ கிளறுவதுபோல் வலிக்க, ஒரு பெருமூச்சு விட்டான்.எதையாவது படிக்கலாம் என்று அறைக்குப் போய் ஒரு புத்தகத்தைப் பிரித்துக்கொண்டு உட்கார்ந்தான். மனம் புத்தகத்தில் சிறிது கூடப் பொருந்தவில்லை.

புத்தகத்தை மேஜைமேல் விரித்தது விரித்தபடியே போட்டு விட்டு வாசல் திண்ணைக்கு வந்து மறுபடியும் உட்கார்ந்தான். தெருவில் அவனுக்குப் பழக்கமான ஒருவர் - குடை பிடித்துக் கொண்டு நடந்தவர்- அவனைப் பார்த்து விட்டவுடன் தன் முகம் தெரியாமல் குடையைச் சாய்த்துத் தணித்துக் கொண்டு வேகமாக நடந்தார். மாதவனுடைய மனத்தில் அவர் தெருவில் மட்டும் மிதித்து நடப்பதாகப் படவில்லை. தன் நெஞ்சிலேயே மிதித்துக் கொண்டு நடப்பதாகப் பட்டது. வேலையை விடுவதற்கு முன் நாளுக்குப்பத்துத் தடவை தேடிவரும் அந்த மனிதர் இப்போது நடந்து கொண்ட விதம் அவனுக்கே விந்தையாக இருந்தது.

“எதற்காகப் பித்துப் பிடித்தது போல் திண்ணையில் உட்கார்ந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? இலையைப் போட்டாயிற்று சாப்பிட வா!” மாதவனின் தாய் அவனை உள்ளே கூப்பிட்டாள். மாதவன் எழுந்து சென்றான்.

“ஊரில் பெண்டு, பிள்ளைகள், சின்னஞ்சிறிசுகள், எல்லார் வாயிலும் இதே பேச்சுத்தான் மாதவா!”

- இலையில் பரிமாறிக் கொண்டே பேச்சைத் தொடங்கினாள் அவன் தாய்.

“எதே பேச்சு அம்மா?”

“தெரியாதது மாதிரிக் கேட்கிறாயே? எல்லாம் உன்னை வேலையை விட்டு விலக்கியது பற்றித்தான்...”

“எப்படிப் பேசுகிறார்கள்? விலக்கியது நல்லதென்றா? அல்லது...?” ... சொல்ல வந்ததை நிறுத்தித் தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“நல்ல மனிதன் இந்த ஊருக்கு ஆகாதாம் என்னிடம் சொல்லிச் சொல்லி மனம் புழுங்குகிறார்கள்.”


“எல்லாம் வாய்ச்சொல்லோடு சரிதான் அம்மா யாரால் என்ன ஆகப்போகிறது?”

“அப்படியில்லை! இத்தனை ஜனங்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டு துணிந்து உன்னைப் போகச் சொன்னான் பார்! அவனைச் சொல்லவேண்டும்.”

அம்மாவுக்குப் பதில் சொல்லாமல் பேச்சை நிறுத்திக் கொண்டு சோற்றைப் பிசைந்தான் மாதவன். ‘பெண்களும், குழந்தைகளும், விடலைப் பிள்ளைகளும், அனுதாபப்பட்டு ஆகப் போவதென்ன? அந்த அனுதாபத்துக்கு இந்த ஊரில் எவ்வளவு செல்வாக்கு என்பது தெரியாதா; என்ன?’ என்று மனத்தில் நினைத்தான் மாதவன்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தெருவில் ஏதோ பெரிதாக இரைச்சல் கேட்டது.

“அதென்னடா தெருவில் கூப்பாடு”


“நீதான் போய்ப் பார்த்துவிட்டுவாயேன் அம்மா”

அம்மா கரண்டியைக் கீழே வைத்துவிட்டு வாசற் பக்கம் போனாள். பத்து நிமிஷம் கழித்துக் கூப்பாடு ஒலி குறைந்து கிழக்குப்புறம் தெருவில் சென்று மங்கியது. அம்மா சிரித்துக் கொண்டே உள்ளே வந்தாள்.

“என்னம்மா விஷயம்” என்று மாதவன் ஆவலோடு கேட்டான்.

“எல்லாம் உன் விஷயந்தான்! கலா நிலையத்துப் பையன்களும், பெண்களும், ‘மாதவன் சாருக்கு மறுபடியும் வேலை கொடு’ என்று கூப்பாடு போட்டுக்கொண்டு தெருவில் ஊர்வலம் போகிறார்கள்.

“நிஜமாகவா? என்னைக் கேலி செய்கிறாயா?”

“பின் என்ன பொய்யாசொல்கிறேன்? உனக்குச் சந்தேகமாக இருந்தால் சாப்பிட்டு விட்டு நீயே எழுந்து போய்ப் பாரேன்!”

திடீரென்று அந்தக் கணத்திலேயே பசி தீர்ந்துவிட்டது போலிருந்தது மாதவனுக்கு. இலையில் பரிமாறிய சோற்றில் அவன் ஒரு பருக்கை கூடத் தொடவில்லை. விறுட்டென்று எழுந்து கிணற்றடிக்குச் சென்று கையைக் கழுவிவிட்டு வந்தான், மாதவன்.

“என்னடா இது? இலையில் போட்ட சோற்றை வைத்துவிட்டு...?”

“இரு அம்மா! வந்து சாப்பிடுகிறேன்” என்று மாதவன் எழுந்து தெருவுக்கு விரைந்தான். தனக்காக நடக்கும் அந்த அனுதாப ஊர்வலத்தைத் தானே பார்க்க வெட்கமாக இருந்தது அவனுக்கு. ஜன்னல் கதவுகளைத் திறந்து மற்றவர்கள் தன்னைப் பார்த்துவிடாமல் தான் அந்த ஊர்வலத்தைப் பார்க்க முயன்றான் அவன்.

பெண்களும், ஆண்களுமாகக் கூடிச் சென்ற அந்த ஊர்வலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தெரிந்த முகங்களில் இரண்டு, மாதவனின் மனத்தில் பதிந்தன. கம்பீரம் தவழும் ஆண்மை நிறைந்த நீலகண்டனின் முகம். ஆவல், சிரிப்பு, நளினம், அத்தனையும் திகழ அவனை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க விரும்பும் அந்தப் பெண்ணின் முகம்! மாதவன் தெருவில் இறங்கி நடக்கும் போதெல்லாம் கதவோரத்தில் தெரியும் அந்தக் கண்கள் உண்மையாக அவன்மேல் அனுதாபம் கொண்டவைதாம்.

ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே திரும்பினான் மாதவன். அந்த நிமிடத்தில் உலகத்திலேயே தனக்கு இணையானவர்கள் எவரும், எங்கும் இல்லை என்பது போன்றதொரு பெருமிதம் அவனுக்கு உண்டாயிற்று.

“நன்றாயிருக்கிறதடா உன் காரியம்! இலையில் போட்ட சோற்றை ஆறவைத்துவிட்டுத் தெருவில் போய் உன் பெருமையை நீயே வேடிக்கை பார்க்கிறாயாக்கும்? இப்படிக் கூச்சல் போட்டுக் கொண்டு தெருவோடு இவர்கள் ஊர்வலம் போனதால் நாளைக்கே உன்னைக் கூப்பிட்டு வேண்ல பார்க்கச் சொல்லிவிடப் போகிறார்கள் பார்!”-தாயின் இந்தப் பேச்சில் குத்தல் இருந்தது.

“வேலை யாருக்கு வேண்டும்? இந்த அன்பும் அனுதாபமும் தருகின்ற பெருமையை வேலை தர முடியுமா?” என்று கேட்டான் மாதவன். மாதவனுடைய பேச்சு அவன் தாய்க்குப் பிடிக்கவில்லை.

“நீதான் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும் உன் காரியத்தை. நான்கு நாட்களாக வேலையையும் விட்டு விட்டு இந்த ஊரில் என்ன காரியம்? இப்படியே இருந்தால் வேறு வழி பார்க்க வேண்டாமா?”

“பார்க்கத்தான் வேண்டும். வீட்டை ஒழித்துச் சாமான்களைக் கட்டு. இரண்டு நாளில் புறப்படவேண்டியதுதான்.”

தாய், மாதவனின் முகத்தை வியப்போடு பார்த்தாள். மாதவன் நிம்மதியாக அறைக்குள் வந்து மேஜைமேல் விரித்துக் கிடந்த புத்தகத்தில் ஆழ்ந்தான்.

“ஏன்டா, சாப்பிடவில்லையா?”

“இப்போது பசிக்கவில்லை. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.” கூறிவிட்டுப் புத்தகத்தின் கருத்துக்களில் மனத்தைப் பதியவிட்டான் அவன்.

மறுநாளைக்கு மறு நாள் கையில் டிரங்குப்பெட்டியும், மூட்டை முடிச்சுக்களுமாக, மாதவன் அந்த ஊரையும், வேலையையும் விட்டு விட்டுப் புறப்பட்டு விட்டான். கையில் பெட்டியோடு அவன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். நான்கடி பின்னால் அவன் தாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அப்போது கண் நிறைய ஆவலும், இதழ் நிறையக் குறு நகையும், உடல் நிறைய நளினமுமாக அந்தப் பெண்-அதே கதவோரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணின் அனுதாபமும் நீலகண்டனின் ஆவேசமும், அவன் இழந்த வேலையை அவனுக்கு வாங்கிக் கொடுக்கும் அளவிற்குச் செல்வாக்கு உடையவை இல்லை!

செல்வாக்கெல்லாம் நரைத்த தலையும், முதிர்ந்த வயதும், முதிராத மனமுமுள்ள பெரியவர்கள் கையிலிருந்தது. அதைப்பற்றி மாதவன் கவலைப்படவில்லை.

அந்தக் கண்களின் ஆவலை இறுதியாகத் தன் மனம் நிறைய ஏந்திக்கொண்டு திரும்பிப் பாராமல் தெருவில் நடந்தான் மாதவன்!

(1963-க்கு முன்)