நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மண்ணும் மாடியும்

46. மண்ணும் மாடியும்

சிலேட்டுப் பலகையில் அங்கங்கே சாக்பீசால் சுழித்த மாதிரி அந்த மாடியிலிருந்து பார்வைக்குத் தெரிந்த வானப் பரப்பில் வெண்மேகச் சுருள்கள் நெளிந்தன. அதன் கீழே பறவைகள் பறந்தன.

ஏற்காடு மலை, பழத் தோட்டங்களும், மலைச் சிகரங்களுமாக அந்த உச்சிப் போதில் அழகாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மாடியில் நின்று கொண்டு மலையையும், வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பரிபூரணத்தின் மனத்தில்தான் அழகு இல்லை.

சுருள் சுருளாகக் கலைந்து முன் நெற்றியில் விழும் தலை முடியும் ஏறக்குறைய அதே போல் கலைந்து அடங்காத மனமுமாக நின்று கொண்டும், உலாவிக் கொண்டுமிருந்தான் பரிபூரணம். பரிபூரணத்தின் மனம் பரிபூரணமாக இல்லை அப்போது. அங்கே வந்து அந்தச் சூழ்நிலையில் எந்த எழுச்சியையும், தூண்டுதலையும், உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்று அவன் நினைத்திருந்தானோ, அவை உண்டாகவே இல்லை.

இடம் மாறி வந்த பின்னும் மனம் மாறவில்லை. பரிபூரணம் திரைப்படங்களுக்குப் பாட்டு எழுதுகிற கவிஞன். எல்லோரையும் போல ‘ஏதோ எழுதினோம்’ என்று எழுதி விடாமல் சினிமாவுக்கு எழுதினாலும் அதைக் கருத்தோடும், கவிதையுணர்ச்சியோடும் எழுதவேண்டும் என்று தனக்குத் தானே ஒர் இலட்சியம் வகுத்துக் கொண்டிருந்தான். எந்தெந்த உணர்ச்சிகளை எந்தெந்த நேரத்தில் பாட்டாக எழுத வேண்டுமோ, அவற்றைத் தானே அனுபவித்து உணர்ந்த மாதிரி அசல் தன்மையோடு எழுத வேண்டுமென்று பரிபூரணத்துக்கு ஆசை. அத்தகைய சிந்தனைக்கேற்ற தனிமையை நாடியே ஏற்காட்டுக்கு வந்திருந்தான் அவன்.

அப்போது அவன் பாட்டு எழுதிக் கொண்டிருந்த படம் ஒரு புது மாதிரியான சமூகக் கதை. கோடீசுவரனான செல்வக் குடும்பத்து இளைஞன் ஒருவன் குடிசையின் ஏழைப் பெண் ஒருத்திக்காகத் தன் செல்வங்களையும், செல்வாக்கையும், சுகபோகங்களையும் உதறி விட்டு வருகிறான். அவளுடைய காதலுக்காகக் குடிசையில் வாழ்கிறான். குறைந்த வசதிகளைப் பழகிக் கொள்கிறான். உழைக்கிறான். பணத்திலும் வசதிகளிலும், ஏழையாகி அன்பினால் செல்வனாகிறான் அவன். கதையின் தொடக்கத்தில் ஒரு சம்பவம்:-

ஒரு நள்ளிரவு. புயலும் இடியுமாக மழை பேய்த்தனமாய்ப் பெய்து கொண்டிருக்கிறது. அந்த ஏழைப் பெண் அவனைச் சந்திப்பதற்காக அவனுடைய ஏழு மாடி வீட்டின் முன்பு வந்து நிற்கிறாள். அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறாள். ஏழாவது மாடி முகப்பில் நின்று அவன் கீழே பார்க்கிறான். வானைக் கீறி ஒளிக் கோடிழுக்கும் மின்னல் ஒளியில் அவள் உருவம் சிறியதாய்த் தெரிகிறது. கிழிந்த ஆடையும், நனைந்த உடலும், நெகிழ்ந்த உள்ளமுமாக அவள் கீழே நிற்பதைக் காண்கிறான். அதைக் காண அவன் உள்ளம் உருகுகிறது. கொதிக்கிறது. 'அந்த விநாடியே ஏழு மாடிகளும் இடிந்து தவிடு பொடியாகி ஏகபோக சுக செளகரியங்களெல்லாம் இல்லாமற் போய்விடக் கூடாதா' என்று ஒரு துடிப்பு வருகிறது இளைஞனுக்கு. ஏழையாகிவிட வேண்டுமென்ற தாகம் ஏற்படுகிறது அவனுக்கு. ஏழையிலும் பரம ஏழையாக மாறிக் கீழே ஒடிப் போய் அங்கே நனைந்துகொண்டு நிற்கும் தன் காதலியின் அருகில் தானும் நின்றுகொண்டு நனைய வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது அவனுக்கு. உடனே ஏழையாக ஏழையிலும் கீழான பஞ்சைப் பராரியாக மாறிவிடவேண்டும்போல ஒர் ஏழையாகத் துடிக்கும் பசி, ஏழையாகத் தவிக்கும் தாகம் அவனை வாட்டுகிறது. அவன் கீழே இறங்குவதற்காகத் திரும்புகிறான். ஒவ்வொரு மாடிப்படியிலும் உறங்காமல் நிற்கிறார்கள் கூர்க்காக்கள். ஒவ்வொரு இடத்திலும் தடையாக ஒரு கதவு.

'இத்தனை கூர்க்காக்களையும், இத்தனை கதவுகளையும், கடந்து நான் ஏழையாக முடியாது! ஏழைக்கும், பணக்காரனுக்கும் நடுவில் இத்தனை கதவுகளா? இத்தனை காவலா? இத்தனை உயரமா? தெய்வமே என்னை இந்தக் கணமே ஏழையாக்கி விடு! என்னை மண்ணில் வாழ விடு! மழையில் நனைய விடு! இந்த மாடி வேண்டாம்' என்று மாடியில் நின்று கதறிக் கீழே நிற்கும் தன் காதலியை நோக்கிக் கதாநாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான்.

இந்தப்பாட்டை அற்புதமாகவும், உணர்ச்சிகரமாகவும் எழுதி முடிப்பதற்குத்தான் பரிபூரணம் ஏற்காட்டின் தனிமையை நாடி வந்திருந்தான். படத்தின் உச்சநிலைச் சம்பவமே கதாநாயகனின் இந்த மனமாற்றம்தான். அவன் மாடியில் நின்று ஏழையாவதற்குத் தவித்துக் கதறிக் கீழே இறங்கவும் இயலாமல் பாடுகிற பாட்டுத்தான் முக்கியமான அம்சம்.

பரிபூரணத்தோடு அந்தப் படத்தின் முதலாளியும் வந்திருந்தார். அவர் ஒரு 'நடிகை'யோடு வந்திருந்ததால் வேறு பங்களாவில் வேறு விதமாகத் தங்கியிருந்தார். அடிக்கடி வந்து அவனைச் சந்தித்துப் பாட்டு விரைவில் உருவாக வேண்டும் என்று அவசரப் படுத்திக்கொண்டிருந்தார் ."நாளைக் காலையில் நாம் பாட்டுடன் சென்னை திரும்புகிறோம். நாளைக்கு மாலையே பாட்டை ஒலிப்பதிவு செய்தாக வேண்டும். நீங்கள் வெளியே எங்கும் அலையாமல் இதே வேலையாக உட்கார்ந்து பாட்டை முடித்து விடவேண்டும்” என்று அன்று காலை கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தார் அவர்.

பரிபூரணம் தங்கியிருந்த பங்களாவின் தோட்டத்தில் ஒரு வேலைக்காரனின் குடிசை இருந்தது. அந்த வேலைக்காரனுக்கு ஒரு மகள். ஆனால் அரசகுமாரியாகப் பிறக்கவேண்டிய அத்தனை அழகு அவளுக்கு அந்த வேலைக்காரப் பெண் மட்டும் அரச குமாரியாகப் பிறந்திருந்தால் தங்களுக்கு இவ்வளவு அழகு இல்லையே என்று அரசகுமாரிகளெல்லாம் தூக்குப் போட்டுக் கொண்டு செத்திருப்பார்கள்.அப்படி ஒரு வனப்பு அந்தப் பெண்ணுக்கு.

பேதைப் பருவம். புள்ளி மான் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டுவரும் ஒர் அழகு நடை வெள்ளைச் சிரிப்பு அதில் கள்ளத்தனம் இருக்காது. வேலைக்காரன் உடல்நலம் இல்லாதிருந்ததனால் இந்தப் பெண்தான் பரிபூரணம் கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்டுக் கொண்டிருந்தாள். குளிக்க வெந்நீர் வைத்துக் கொடுப்பது, துணிமணிகளைத் தோய்த்து உலர்த்துவது, ஒட்டலிலிருந்து எடுப்புச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து பரிமாறுவது எல்லாம் இந்தப் பெண்தான். பரிபூரணத்திடம் பயமோ, கூச்சமோ, இல்லாமல் குறும்புத் தனமாகச் சிரித்துச் சிரித்துப் பேசுவாள். நெளிநெளியாகச் சுருண்ட கருங்கூந்தலினிடையே தாமரை பூத்தது போல் முகம் அவளுக்கு கருவண்டு போல் சுழலும் கண்கள். உதடுகளும், முகமும், கண்களும், கன்னங்களும் எங்குமே சிரிப்பின் சாயலைப் போல எப்போதும் மலர்ச்சி தெரிகிற ஒர் அழகு அவளுக்கு இருந்தது. முழங்கால் வரை ஏறிய அழுக்குப் பாவாடையும் கந்தல் சட்டையுமாக உற்சாகமே வடிவாக இந்தப் பெண் நடந்து துள்ளிவரும் போது பரிபூரணத்திற்குக் கவிதையே இந்த ஏழைமை அழகில் ஓடிவருவதுபோலத் தோன்றும். வாழைத் தண்டு பட்டை உரித்தமாதிரி வெண்சிவப்பு மின்னும் அந்த முழங்காலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் பரிபூரணத்திற்கு அவா உண்டாகும். கவிதைத் தேவியே கன்னிமைக் கோலம் பூண்டு அப்படி அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறாளா?

உலகத்துக்குத் தெரியுமா, இப்படி ஒர் அழகு இந்த ஏற்காட்டு மலையில் இந்தக் குடிசைக்குள் இருக்கிறதென்று? தனிக்காட்டு மல்லிகைச் செடியாய், மலைச்சாரல் புள்ளி மானாய் அவள் தோன்றினாள் கவிஞன் பரிபூரணத்துக்கு.

பரிபூரணம் சொற்களை இணைத்து இசையை உருவாக்கும் கவிதையைத் தேடி அந்த மலைக்கு வந்தான். கண்களையும், இதழ்களையும், புன்முறுவலையும், சிற்றிடையையும், சிற்றடிகளையும் இணைத்துக் கொண்டு நடமாடும் கவிதையைத்தான் அவனால் அங்கே காணமுடிந்தது. அந்தக் கவிதை வேலைக்காரனுடைய குடிசைக்குள்ளிருந்து 'பொன்னி' என்ற பெயர் சூடி வந்து போய்க்கொண்டிருந்தது.

அன்று மாலை இருட்டத் தொடங்கிய சமயத்தில் மலையில் மழை பெரிதாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. பரிபூரணம் கவிதை என்கிற பிரசவ வேதனையில் நாற்காலியில் அமர்ந்து மேஜை மேலுள்ள வெள்ளைக் காகிதத்தைப் பார்த்துத் திணறிக் கொண்டிருந்தான். மழையும், இடியும், மின்னலும் பயங்கரமாகிக் கொண்டிருந்தன. கவிதை வரவில்லை. முதலாளியோ நாளைக் காலையில் கவிதையோடு சென்னைக்குப் புறப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். நட்சத்திரேயன் மாதிரிக் காலையில் வாசலில் காரோடு வந்து நின்று விடுவார் அவர். அவன் இப்படியோசித்துக் கொண்டிருக்கும் போது மழையைக் கிழித்துக் கொண்டு கீழேயிருந்து பொன்னியின் குரல் கேட்டது. பரிபூரணம் மாடியின் பால்கனிக்கு ஒடிப்போய் அங்கிருந்து கீழே பார்த்தான்; கொட்டுகிற மழையில் நின்று கொண்டு பொன்னி அலறிக் கொண்டிருந்தாள்:

"ஐயா! கொஞ்சம் கீழே வந்து பாருங்க. அப்பாரு முகத்தைப் பார்த்தாப் பயமாயிருக்குது. மூச்சு இழைக்குது. உடம்பு தூக்கித் தூக்கிப் போடுது. பேச்சு வரலே. எனக்குப் பயமா." பரிபூரணம் ஓடினான். மாடிப்படியிறங்கும் கதவு வெளிப்பக்கம் தள்ள வரவில்லை. அழுத்தித் தள்ளினான். திறக்கவில்லை. மழையில் சிக்கிப் பிடித்துக் கொண்டிருக்குமோ என்று இழுத்தும் ஆட்டி உலுக்கியும் பார்த்தான். கதவு திறக்கவே இல்லை. சாவி நுழைகிற கதவுத் துளையில் உள்ளே இருந்து எடுத்துக் கொள்கிற மாதிரி ஒரு காதிதச் சுருள் சொருகியிருந்தது. பரிபூரணம் அதை எடுத்துப் பிரித்தான்.

“நாளைக்குள் பாட்டு ரெடி'யாகி விட வேண்டும். நீங்கள் வெளியே எங்கும் அலைந்து நேரத்தை வீணாக்கி விடக் கூடாதே என்று மாடிக் கதவை வெளியே பூட்டிக்கொண்டு போயிருக்கிறேன். காலையில் சந்திக்கிறேன். பாட்டுத் தயாராயிருக்கட்டும்’ என்று எழுதிக் கீழே படமுதலாளியின் கையெழுத்தும் இருந்தது. பரிபூரணம் தவித்தான். மறுபடி பால்கனிக்கு ஓடினான்.

பொன்னி கீழே மழையில் நின்று அலறிக் கொண்டிருந்தாள். "அப்பாரைச் சாகாமக் காப்பாத்துங்க ஐயா... நான் அநாதை உங்களுக்குப் புண்ணியமாப் போகும். மேலேயே நின்னு பார்த்துக்கிட்டிருக்கீங்களே ஐயா! கீழே இறங்கி வந்து பார்க்கப்படாதா?' பரிபூரணத்தின் மனம் துடித்தது.உணர்வுகள் பிறந்து உருகின. நான் மேலே இருக்கிறேன். அவள் கீழே வரச் சொல்லி அழைக்கிறாள். நடுவே கதவும் காவலும் இருக்கின்றன. நான் கீழே போகவேண்டும், முடியவில்லையே! என்று எண்ணினான்; எண்ணிக் கொதித்தான்.

அவனே தான் பாட்டு எழுதவேண்டிய படத்துக்குக் கதாநாயகன் ஆகி ஏழாவது மாடியில் நின்று தவித்தானே அந்தத் தவிப்பை இப்போது பரிபூரணமே உணர்ந்தான்.

அந்த உணர்வு வந்ததும் கவிதை வேகமும் தானாகவே வந்து விட்டது. பத்தே நிமிடங்களில் பாட்டு அற்புதமாக உருவாகி விட்டது. ‘என்னை மண்ணில் வாழவிடு! மழையில் நனைய விடு' என்று அந்தப் படத்தின் பணக்காரக் கதாநாயகன் ஏழாவது மாடியிலிருந்து கதறினானே - அந்தக் கதறலின் உருக்கமெல்லாம் எழுதிய பாட்டில் அப்படியே வந்துவிட்டது.

பாட்டை முடித்து விட்டுப் பரிபூரணம் மறுபடி பால்கனியில் போய்க் கீழே பார்த்தபோது குடிசையிலிருந்து பொன்னியின் அழுகுரல் கேட்டது.

"அப்பா! என்னை இப்படித் தனியா விட்டுட்டுப் போயிட்டீங்களே..” என்று கதறியழும் குரலைக் கேட்டான் பரிபூரணம்.

ஆம்! அவனுடைய இதயத்தில் கவிதை பிறந்த அதே நேரத்தில் குடிசையில் பொன்னியின் தந்தை இறந்துபோயிருக்க வேண்டும்.

'பொன்னீ! என்று இரைந்து கூவினான் பரிபூரணம்.

பதிலும் வரவில்லை. அவளும் வரவில்லை. பரிபூரணம் தலையைப் பிய்த்து விட்டுக் கொண்டான். அவனுக்கு வெறி பிடித்தது. பாடுபட்டு எழுதிய கவிதையைக் கிழித்தெறிந்தான். பேனாவை உடைத்தெறிந்தான். மாடியிலிருந்து கீழே இணைத்த தண்ணீர்க் குழாயைப் பிடித்துக் கொண்டு இறங்கிப் பொன்னியின் குடிசைக்கு ஓடினான். அவள் அவனை நோக்கிச் சீறினாள்:

"நீங்கள் மேலே இருக்கிறீர்கள்! உங்களுக்குக் கீழே இறங்கி வர மனமிருக்காது.”

"இல்லை! நான் கீழேயே வந்து விட்டேன்.இனிமேலே போகிற நோக்கம் இல்லை. மண்ணில்தான் வாழப் போகிறேன்; மழையில்தான் நனையப் போகிறேன்” என்று அந்தப் படத்தின் கதாநாயகன் பரிபூரணம் பேசினான்.

மறுபடியும் அவன் மேலே ஏறிப் போகவே இல்லை!

(தாமரை, மார்ச், 1960)