நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மண் குதிரை

45. மண் குதிரை

ண்ணன் சிரித்தார். பல் தேய்க்கிற பிரஷ்ஷின் நுனியிலிருந்து பறித்து ஒட்ட வைத்த மாதிரி நரைத்த நறுக்கு மீசை. அதற்குக் கீழே வெற்றிலைக் காவி ஏறிய உதடுகளின் நடுவே இரண்டு தங்கப் பற்கள் உட்பட எல்லாப் பற்களும் தெரிகிறாற் போல ஒரு வியாபாரச் சிரிப்பு. யார், யாரைச் சந்தித்தாலும் அந்த விநாடி வரை அவர்களுக்காகவே தாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல் எண்ணச் செய்து விடுகிற முகத் தோற்றமும், பேச்சும், குழைவும், அண்ணனுக்கு உண்டு; அண்ணனுக்கு மட்டும்தான் உண்டு!

அண்ணன் வியாபாரி. தொழிலால் மட்டும் அன்று, பேச்சு, சிரிப்பு நட்பு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் அவர் வியாபாரி. வியாபாரம்தான் அண்ணனுக்கு வாழ்க்கை அதாவது வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் வியாபாரத்துக்காக என்று நினைக்கிறவர் அண்ணன். கடை வாசலில் அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பத்து மணியிலிருந்து ஏழரை மணிக்குள் உலகத்தை விற்றுக் கொள்முதல் பண்ணி விடுகிற சாமர்த்தியமுள்ளவர் அண்ணன்.

“அடேய் பையா, ஐயா வந்திருக்காங்க பார், ஒரு நாற்காலி கொண்டு வந்து போடு.”

நாற்காலி வந்தது. உட்கார்ந்தேன்.

“வெற்றிலை போடுறீங்களா...? காப்பி வாங்கி வரச் சொல்லட்டுமா?” என்ற வார்த்தைகளும் அண்ணன் வாயிலிருந்து வந்தன. யார் வந்தாலும் வெற்றிலையும், காப்பியும்.வாங்கி வரத் துடித்துக் கொண்டிருப்பது போல் அண்ணன் ஆர்வத்தோடு விசாரித்து விடுவார். ஆனால் அண்ணனுடைய ஆர்வமெல்லாம் விசாரிப்பதோடு சரி. இந்த விநாடி வரை யாருக்கும் அண்ணன் எதுவும் வாங்கித் தந்தது இல்லை என்று நாற்பதாயிரம் கோயில்களில் சத்தியம் செய்து கூறத் தயார். அண்ணனுடைய குழைவெல்லாம் விசாரிப்பில் மட்டும் தான் உண்டு. கடை நிறையக் கூட்டம் பொங்கி வழியும். அண்ணனுக்குப் பட்டுப் புடவை வியாபாரம்; கடையைக் கவர்ச்சியாக வைத்துக் கொள்வதில் அண்ணன் கை தேர்ந்தவர். மூலைக்கு மூலை மின் விசிறிகள் சுழல, ஒளி விளக்குகள் மின்ன, அந்தக் கையகல இடத்தை மதன் மாளிகையாக்கி யிருந்தார். கடைக்குள் எந்த நேரமும் ஊதுவத்தி மணக்கும். ஆம்! அண்ணனுக்கு வத்தி வைப்பதில் எப்போதுமே ஆசை அதிகம். -

கடையிலுள்ள நயம் பட்டுப் புடவைகள் மட்டுமல்ல, அண்ணனுடைய பேச்சும் வழுவழுவென்றுதான் இருக்கும். கடையில் வேலை பார்க்கும் பையன்களைப் பம்பரமாக ஆட்டி வைத்து விடுவார் அண்ணன். நிற்கவும் விட மாட்டார்; உட்காரவும் விட மாட்டார்.

"அடேய் அந்தம்மாவுக்கு கொள்ளை காலத்தை' எடுத்துக் காட்டு, புதுசாக நேற்று வந்த தினுசுகளெல்லாம் காண்பி.

“சுப்பையா! நீ பத்துக் காஞ்சீவரம் பட்டுப் புடவையைக் கொண்டு போய் முதலியார் வீட்டிலே காட்டிவிட்டு வா. அவங்க வீட்டிலே நேத்தே சொல்லி யனுப்பிச்சிருந்தாங்க”

"அடேய் அப்பா துரைசாமீ. அதா பாரு எம்.எல்.ஏ. வீட்டு அம்மா காரிலே வாராங்க போய்க் கார்க் கதவைத் திறந்து அழைச்சுக்கிட்டு வா. கடைக்கு வர்றதாக இப்பத்தான் அந்தம்மா 'போனிலே' சொன்னாங்க.”

எதிர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் என்னோடு உரையாடும்போதே நான்குபுறமும் சுழலும் வியாபாரக் கண்களால் இத்தனை காரியத்தையும் சமாளிப்பார் அண்ணன். அந்த சமாளிக்கும் திறமையைக் கண்டு வியந்து கொண்டிருப்பேன் நான். அண்ணன் டெலிபோனில் பேசுகிற அழகைச் சொல்லாமல் விட முடியாது. நேரில் பார்க்கிறபோது பேசுகிற அதே குழைவு நெளிவை டெலிபோனிலும் காட்டுவார். அண்ணனுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் முக்கியமான ஆங்கில வார்த்தைகள் தெரியும். நாற்காலியில் அட்டகாசமாகச் சாய்ந்து கொண்டே,'டெலிபோனை' எடுப்பார். 'எஸ். ஸ்பீகிங்' இந்த இரண்டு வார்த்தைகளை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுப் பின்பு தமிழில் பேசுவார். "அப்படீங்களா... பரவாயில்லே... அனுப்புங்க. தரேன். நம்ம பணத்துக்கென்ன? வசதிபோலக் கொடுங்க. அதுக்கென்ன?. வணக்கம்” என்று பேசி போனை வைத்துவிடுவார்.

"தறுதலைப் பய; மாசம் எண்ணுறு ரூபாய் சம்பளம் வாங்கிறவன் புடவையைக் கடனாக் கொடுடாங்கிறான். எவன் வீட்டு முதலோ, தெரியலை” என்று போனை வைத்த சூட்டோடு எதிரே உட்கார்ந்திருக்கும் என்னிடம் சீறுவார் அண்ணன்.

“வியாயாரம் என்றால் நாலு விதமும்தான் இருக்கும்” என்று பொதுவாக மறுமொழி சொல்வேன் நான்.

'நாலாவது, விதமாவது! இந்த பெரிய மனுசங்க பழக்கத்தாலே கடனும், ஒசியும் கொடுத்திட்டு வருசத்துக்குப் பத்தாயிர ரூபாய் எங்கடையிலே நஷ்டக்கணக்கு எழுதறேன். யார் கிட்டப் போய்ச் சொல்றது? அத்தனை பேரும் நாணயமில்லாதவங்க, வெளியிலே பேரும் புகழும் வாங்கிடறாங்க. டாக்டர் பொன்னம்பலம் போன வருசம் 600 ரூபாய்க்கு மூணு பட்டுப்புடவை எடுத்தாரு. ஒரு வாரத்திலே "செக்” அனுப்பறேன்னிட்டுப் போனாரு இன்னும் அனுப்பப் போறாரு பார்லிமெண்ட் மெம்பர் பா.சு.ப. மகள் கலியாணத்துக்கென்று மூவாயிர ரூபாய்க்கு ஜவுளி கொண்டு போனாரு இன்னும் பாக்கி வந்தபாடில்லை. வீட்டுக்குப் போனா ஆள் அகப்படறதில்லை. 'டெல்லி போயிருக்காரு'ங்கிறாங்க டெல்லியிலிருந்து திரும்பினா வேறெங்கியாவது திறப்பு விழா, மூடுவிழான்னு ஊர் மேலே போயிடறாரு அட இவங்கதான் இப்படி இருக்காங்கன்னா இந்தச் சீர்திருத்தக் கழகச் செம்மல்னு ஊரெல்லாம் புகழ் பாடுறாங்களே 'செங்கமல வண்ணனார்' அவரும் இங்கே நம்ம கடைக் கடன் பேரேட்டில் பல்லிளிச்சிட்டிருக்காரு” என்று அண்ணன் குறைபட்டுக் கொண்டதை நான் முழுவதும் நம்பத் தயாராயில்லை. உண்மையிலேயே பெருந்தன்மையும், நாணயமும் உள்ளவர்களை ஒரு மனிதன் குறைபடுத்திப் பேசுகிறானென்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். குறைத்துப் பேசுகிறவன் தன்னைக் குறுக்கு வழியில் பெரிய மனிதனாக்கிக் கொள்ள விரும்புகிறான் என்பதுதான் அந்தக் காரணம். இந்த மாதிரி நாகரிகமாகப் பொய்கள், புரட்டுக்கள் அண்ணனிடம் சற்று அதிகமாகவே உண்டு.

அண்ணனுக்கு என்னிடம் அந்தரங்கமான நம்பிக்கை.சில சமயங்களில் என்னிடம் அவர் சொல்வார்:

"இதெல்லாம் எதுக்கு மனசுவிட்டு உங்ககிட்டச் சொல்றேன் தெரியுமா? நீங்க கதை, நாவல்னு நாலு விதமும் எழுதறவங்க. பெரிய மனுசனின்னு பேர் பண்ணிட்டிருக்கிறவங்க எப்படி எப்படியிருக்காங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணும் பாருங்க."

இதைக் கேட்டு மனத்துக்குள் சிரித்துக் கொள்வேன் நான். அண்ணனிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவரைத் தேடி வேறு யாராவது முக்கியமான ஆட்கள் வந்தால் எனக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிற விதமே தனியாக இருக்கும். . "நீங்க விழுந்து விழுந்து படிக்கிறீங்களே அந்தக் கதை அதும் பேரென்ன?. எனக்கு நினைவில்லையே. அதை எழுதறவரு இவருதான். எப்ப வந்தாலும் இங்கே நம்ம கடையிலே தான் ஆளைப் பாாக்கலாம். நமக்கு ரொம்ப வேண்டியவரு”

அண்ணனுடைய அறிமுகம் முறையாக இருக்காது. ஒரு பக்கம் சொல்லி இன்னொரு பக்கத்தைப் பற்றிச் சொல்லாமலே இருந்திடுவார். இரண்டு பக்கமுமே எல்லாவற்றையும் சொல்லிவிட்டுப் பேர்களை மட்டும் சொல்ல மறந்துவிடுவார்.

நான் வேறு வேலையே இல்லாமல் அவருடைய கடையே கதியென்று பழி கிடப்பது போலவும் - என்னைப் போலவே வெளியில் பேர் பெற்ற ஆட்களெல்லாம் அவர் மட்டில் சுட்டு விரலை அசைத்தால் ஓடி வந்து கும்பிடும் கூலிக்காரர்கள் போல் தான் என்று தோன்றும்படியும் - அண்ணன் மற்றவர்கள் முன் சொல்லிக் கொள்ளவும் நடந்து கொள்ளவும் காட்டிக் கொள்ளவும் ஆசைப்படுவார். புதிது புதிதாகத் தீப்பெட்டிப்படங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சிறுவன், பிற சிறுவர்களிடம் ஆணவத்தோடு காட்டிக் கொள்ள ஆசைப்படுவது போலத்தான் அண்ணனின் பழக்கம்.

வெளியே பெரிய பெரிய ஆட்களெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு படிக்கும் என் நாவல்களின் பெயர்கள் கூடத் தமக்கு நினைவிருப்பதில்லை என்று காட்டிக் கொள்வதில் தம் பெருந்தன்மையை நிலைநாட்ட முயல்வார். உண்மையில் அண்ணனுக்கு அந்தப் பெயர்கள் நன்றாக நினைவிலிருக்குமென்பது எனக்குத் தெரியும்,

'பெரிய மனிதன்' ஆவது என்றால் இலேசுப்பட்ட காரியமா அது? எத்தனையோ தெரிந்தவற்றைத் தெரியாதது போலவும், தெரியாதவற்றைத் தெரிந்தது போலவும் காட்டிக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கும். யாராவது பெரிய மனிதர்கள் தேடி வந்துவிட்டால் அவர்களை 'ஆகா ஒகோ' என்று கொண்டாடுவார். அவர்கள் தலை கடை வாயிற்படியிலிருந்து மறைந்த அடுத்த கணத்தில், அதே ஆட்களைத் துக்கி எறிந்து கேவலமாகப் பேசத் தொடங்கிவிடுவார். இந்த மாதிரிப் புறம் பேசுகிற குணம் அண்ணனுக்கு மிக அதிகம்.

“இந்த நாட்டிலே அத்தனை பேரும் அயாக்கியங்க. அத்தனை பேரும் நன்றி கெட்டவங்க! இதோ இப்ப மந்திரியா இருக்காரே. கே.எஸ். ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்திரண்டிலே காலிலே ஆபரேஷன் ஆகி ஆஸ்பத்திரியிலே கிடந்தாரு, ஒரு பயல் ஏனின்னு கேட்கவில்லை. நம்ம கடையிலேருந்து டிபன் செட்டிலே சோறு அனுப்பினேன். இன்றைக்கு என்னடான்னா அவரு நம்மைப் பார்த்தால் பேசவே மாட்டேங்கறாரு” என்று திடீரென்று ஆவேசத்தோடு சொல்வார்.

அவர் சொல்கிற எதையும் நான் அப்படியே நம்பி விடுவதில்லை. தாம் சோறு போட்டதாகவும் புடவை கடன் கொடுத்ததாகவும், அண்ணன் வாய் கூசாமல் யார் யாரைக் கூறுகிறாரோ அவர்களெல்லாம் சொந்தத்தில் ஒன்றுக்கும் வக்கில்லாதவர்களல்லர். செல்வமும், செல்வாக்கும் செழிப்பாக உள்ளவர்கள். அண்ணன் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. 'உலகமே தம் ஒருவருடைய தயவில்லாமல் வாழ முடியாது’ என்று பாமரர்களை நம்ப வைப்பதற்காக அண்ணன் இந்தப் பொய்மையை மேற்கொண்டிருந்தார். எப்படியோ ஏற்பட்டு நிலைத்துவிட்ட பழக்கத்தையும், நட்பையும் விட்டொழிக்க முடியாமல் அண்ணனுடைய பொய் புரட்டுக்களைப் பொறுத்துக்கொண்டு பேசாமலிருப்பது வேடிக்கையாகிவிட்டது எனக்கு. என்னைப் பற்றியோ, என்னுடைய செயல்களைப்பற்றியோ, அண்ணன் யாரிடமும் புறம் பேசவோ, கேவலமாகச் சொல்லவோ மாட்டார் என்பதில் மட்டும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.நான் அண்ணனிடம் அருவருப்போ, அச்சமோ கொள்ளாமல், பழகியதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். வேறு அளவு கடந்த பற்று எதுவும் என்கு அண்ணனிடமில்லை. வியாபாரி என்னும் தத்துவமே தனிப்பட்டது. தான் செய்கிற அத்தனை தவறுகளும் அறமாகப்படும்.அதே தவறுகளை மற்றொருவன் செய்வதற்கு மனம் பொறுக்கமாட்டான் வியாபாரி. தன்னைத் தவிர உலகத்திலுள்ள மற்ற அனைவரும் நாணயமாக வாழ வேண்டுமென்று ஆசைப் படுகிறவர் அண்ணன். ஆனால் உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தம்மைப் போலவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அண்ணனுக்குத் தெரியுமா?

திடீரென்று ஒருநாள் ஏதாவதொரு சங்க ஆண்டு விழாவுக்கு வசூல் என்று இன்னும் நாலு பேரையும் தூக்கிப் போட்டுக் கொண்டு "வசூல் நோட்டோடு’ கிளம்பிவிடுவார் அண்ணன். அவருக்கு எந்தச் சமயத்தில் எந்த வேலை வந்து சேருமென்று சொல்ல முடியாது.

அண்ணனிடம் எவ்வளவோ மாபெரும் குறைகள் இருந்தன. அவையெல்லாம் உலகத்துக்குத் தெரியாமலில்லை. தெரிந்த பின்னும் அண்ணனை மன்னித்துக் கொண்டிருந்தது. அத்தனை குறைகளையும் மூடி மறைக்கும் ஆற்றலுள்ள ஏதோ ஒரு கவர்ச்சியும் அண்ணனிடம் இருந்தது.

"இதோ பாருங்க. இந்த ஆண்டுவிழாவை அமோகமாக நடத்திப்பிடறதுன்னு நான் பொறுப்பு எடுத்துக்கிட்டேன். எனக்காக விட்டுக் கொடுக்காமல் நீங்க கூட இருந்து பரிமளிச்சிடனும்” என்று தன்னை முதலாக வைத்து வேண்டிக் கொள்வார் அண்ணன். அவருக்கு எப்போதுமே தன்னம்பிக்கை அதிகம்.

அண்ணன் பேச்சிலும், நடையிலும், முகத்திலும், வேகமாக அமுக்கி அடித்த பந்துபோல் ஏதோ ஒரு துள்ளல் இருக்கும். ஏதோ ஒர் அநியாயமான அவசரம் - வேண்டாத அவசரம் - அந்த முகத்தில், அந்தப் பேச்சில் அந்த நடையில் தெரியும்.

"அத்தனை ரயில் ஸ்டேசன்லேயும் சாப்பாட்டுக் கிளப்பை மூடிட்டானா என்னன்னு தெரியலை. இந்தப் பாதையா ரயில்லே போறவங்களுக்கு எல்லாம் சாப்பாடு கொண்டு போக நான் தானா ஆளு?” என்று என்னைப் பார்த்ததும் முன்பின் தொடர்பில்லாமல் புத்தகத்தை நடுப்பக்கத்தில் பிரித்துப் படித்த மாதிரியில் பேச்சைத் தொடங்குவார் அண்ணன்.

“என்ன சங்கதி? அண்ணன்கோபத்திலே இருக்கிறாப் போலிருக்கிறது” என்பேன் நான்.

“அதுக்கில்லே. இந்தச் செஞ்சொல் மாரியார் திருவரங்கனார் இந்தப் பாதையா ரயில்லே பட்டினம் போறாராம், டிபன் செட்டிலே சாப்பாடு கொண்டாந்து ரயில்லே கொடுக்கணுமாம். வேறே வேலை இல்லை” என்று சலித்துக்கொள்வார் அண்ணன்.

"லெட்டர் எழுதியிருக்கிறாரா?”

"லெட்டரா எழுதியிருக்காரு? சும்மா வரிஞ்சு தள்ளியிருக்காரு போனதடவை இங்கே வந்தப்ப நம்ம வீட்டிலே சாப்பிட்ட சாப்பாட்டை வரிஞ்சு வரிஞ்சு வருணிச்சிருக்காரு.”

நான் மனத்துக்குள் சிரித்துக்கொண்டேன். முக்கியமான பெரிய மனிதர்கள் அந்தப் பாதையாக ரயிலில் போகிற விவரம் தெரிந்து கொண்டு அவர்கள் தயவையும் அவர்களைப் போற்றும் பொதுமக்கள் தயவையும் பெறுவதற்காக அண்ணனே வலுவில் போய் உபசாரம் செய்துவிட்டு வருவார். ஆனால் அதை மற்றவர்களிடம் சொல்லும்போது அந்தப் பெரிய மனிதர்களே கடிதம் எழுதியதாகச் சொல்லுவார். பெரிய மனிதர்கள் அண்ணன் வாயில் புகுந்து புறப்படுகிற தொல்லையைப் பார்த்த பின்பு, நான் பெரிய மனிதனாக வேண்டும் என்ற ஆசையையே விட்டுவிட்டேன். சிறியவர்களுக்கு நடுவில் பெரிய மனிதனாக இருப்பது துன்பமான காரியம்தான். அண்ணனுடைய கடைக்குப் போவதையும் அவரோடு போய் அரட்டை அடிப்பதையும் விட்டுவிட வேண்டுமென்று பலமுறை முயன்றும், நெடுங்காலம் பழகிய பின்பு காப்பி குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாததைப் போலவே அதுவும் வெற்றி பெறாத முயற்சியாகவே இருந்தது.

‘என்னைப் பொறுத்தவரையில் அவர் புறம் பேசுவதில்லை, கடன் கொடுத்ததாக மற்றவர்களிடத்தில் பொய் சொல்லுவதில்லை என்று எண்ணியே அந்தப் பழக்கத்தை நீடிக்க விட்டுக் கொண்டிருந்தேன். பழக்க மிகுதி காரணமாக எத்தனையோ கெட்ட வாடிக்கைகளை விட முடிவதில்லை. மற்றவர்களுக்கு யோசனை சொல்வதிலும் அண்ணன் கெட்டிக்காரர்.

“வாங்க; என்ன ஒரு மாதிரிச் சோர்வாத் தெரியிறீங்களே. உடம்புக்கு ஏதாவது.” என்று ஒருவரை வரவேற்பார் அண்ணன். உண்மையிலேயே வந்தவருக்கு உடம்பிற்கு ஒன்றும் இல்லையானாலும், அண்ணன் விசாரிக்கின்ற விதத்தில் நலக்குறைவு இருப்பதாகச் சொல்லிவிடுகிற அளவுக்குப் பந்தம் உண்டாகிவிடும்.

“அசீரணக் கோளாறா? நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். பேசாமல் நான் சொல்கிறபடி செய்யுங்க. குருசாமி மூப்பனார் கடையிலே சுத்தமான மலைத்தேன், பாட்டில் பாட்டிலா விக்கிறாங்க. ஒரு பாட்டில் வாங்குங்க. தினசரி இராத்திரிப் படுக்கிறதுக்கு முன்னாடி 'கால் அவுன்ஸ்’ குடிச்சிட்டுப் படுத்தாப் போதும். பத்துநாளிலே உடம்பு சரியாகலேன்னா என்னைக் கேளுங்கள்.” என்று உத்தரவாதம் கொடுப்பார் அண்ணன். பார்க்கிறவர்களுடைய துன்பங்களை எல்லாம் இப்படி விசாரித்து அவர்களைத் தம் மனிதர்கள் போல் தழுவிக் கொண்டு அவர்கள் துன்பங்களுக்கு மருந்து சொல்கிற பழக்கம் அண்ணனிடம் அதிகம். வைத்தியருக்கு வைத்தியம் மட்டும்தான் தொழில் வக்கீலுக்குச் சட்டம் மட்டும் தான் தொழில். ஆனால் வியாபாரம் எல்லாம் கலந்த ஒரு தொழில், எல்லாம் தெரிந்ததாக நடிக்க வேண்டிய தொழிலும்கூட உதட்டுக்கு வெளியே பிறந்து உதட்டுக்கு வெளியே போய்விடக்கூடிய வெறும் அனுதாபத்தினாலேயே உலகத்தைத் தன் பக்கம் இழுக்கிறவன் வியாபாரி.

இவ்வளவு சாமர்த்தியமாக இருக்கக்கூடிய அண்ணன் தடுமாறிப் போய் அசடு வழிகிற சமயங்களும் எப்போதாவது ஏற்படும். ஆங்கில வார்த்தைகள் வரும்போது அண்ணன் குழறி விடுவார். ஒருமுறை அண்ணனுக்கு நண்பர் ஒருவர் தம்முடைய மைத்துனரை அண்ணனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்."இவர் என் 'ஒய்பி'னுடைய "ஒன்' பிரதர்” என்று தூய தமிழ் பேசிப் பழகாத குற்றத்தினால் ஆங்கிலமும் தமிழும் கலந்து அறிமுகப்படுத்தினார் நண்பர்.

அறிமுகம் முடிந்ததும் பதிலுக்கு ஏதாவது கேட்க வேண்டுமென்று வாய் குழறி ஒரு கேள்வி கேட்டார் அண்ணன். உங்கள் 'ஒய்ஃபின் ஒன் பிரதரா?' என்று கேட்பதற்குப் பதில் வாய் தடுமாறி, "உங்கள் 'ஒன் ஒய்ஃபா?' என்று கேட்டுவிட்டார் அண்ணன். சுற்றியிருந்த அத்தனைபேரும் அடக்கிக் கொள்ள முடியாமல் சிரித்துவிட்டார்கள். அண்ணன் ஆங்கில அறியாமையால் விளைந்த மானக்கேடு என்னைப்போல் அப்போது அருகிலிருந்தவர்களுக்குச் சகித்துக் கொள்ள இயலாததாக இருந்தது. ஆனால் அதற்குப் பின்பும் அண்ணனோடு பழகுவதை விட்டுவிடவில்லை. 'அண்ணன்' வழக்கம் போல் எனக்கு ‘அண்ண'னாகத்தான் இருந்தார்.

அவர் ஆயிரம் புறம் பேசினாலும், குறளை சொன்னாலும் அவனுக்குச் சோறு போட்டேன். இவனுக்குப் புடவை கடன் கொடுத்தேன் என்று புளுகினாலும், என்னைப் பொறுத்தமட்டில் ஒரு வம்பும் வைத்துக் கொள்வதில்லையே! நான் ஏன் அவர் பழக்கத்தை விட வேண்டும்?

அண்ணன் இன்று தினசரி வழக்கம்போல் வாய் நிறைய 'வாங்க' என்று என்னை வரவேற்றார். உட்காருவதற்குப் பையனை நாற்காலி கொண்டு வந்து போடச் சொல்கிறார். 'வெற்றிலை பாக்கு காப்பி ஏதாவது வாங்கி வரச் சொல்லவா’ என்று (வாங்கி வராவிட்டாலும்) கேட்கிறார். உலகத்தில் எத்தனை கெட்ட மனிதர்களும் யாராவது ஒருவருக்காவது நல்லவராக நாணயமானவராக நடந்து கொள்கிறார்களே! அப்படி அண்ணன் என்னை மட்டும் அந்தரங்கமாக வைத்துக் கொண்டு போற்றி வருவதாக எனக்குள் ஒரு திடமான நம்பிக்கை.

அன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக மாலைப் பொழுதைக் கழிக்க முற்றுகை போடுகிற இடமான 'அண்ணன் கடை' அன்றைக்கு விடுமுறை. பொழுதைக் கழிக்க என்ன வழி என்று தெரியாமல் ஆறுமணிமாலைக் காட்சிக்கு ஒரு திரைப்படத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். போகும்போது தாமதமாகி விட்டதால் படம் ஆரம்பித்து ஒடிக் கொண்டிருந்தது. படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குத் திரையை மறைக்காமல் ஒர் இடத்தில் போய் அமர்ந்தேன். நல்ல படம் அது. இடைவேளையின் போது விளக்கை அனைத்து விட்டு விளம்பரச் சிலைடுகள் காண்பித்தார்கள். அப்போது நான் உட்கார்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் எனக்குப் பழக்கமான குரல்கள் பேசிக் கொள்கிற ஒலி கேட்டது. நான் அந்தப் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினேன்.

"அவர் இந்த வாரம் ஒரு கதை எழுதியிருக்கிறாருங்க. பிரமாதமாக இருந்தது. நீங்க கட்டாயம் அதைப் படிக்கணும்”

“என்ன பிரமாதமா எழுதி என்ன பிரயோசனம்? வயிற்றுப் பாட்டுக்குத் தாளம் போடறாரு தினசரி எப்படா பொழுது விடியப் போகுதுன்னு காத்திருந்தாப்போல நம்ம கடைக்கு வந்து பஞ்சப் பாட்டுப் பாடறாரு நானும் என்னாலே முடிஞ்சதை ஒண்ணோ ரெண்டோ கையிலே கொடுத்து அனுப்பிகிட்டுத்தான் இருக்கேன்.”

"அப்படியா? அவரு நல்ல வசதியோட இருக்குறாரின்னில்ல நான் கேள்விப்பட்டேன்?”

"ஏன் இருக்க மாட்டாரு? மகாலட்சுமி ஜவுளி ஸ்டோர்ஸ் கல்லாப் பெட்டியிலிருந்து ஐயா பணத்தைப் பணமின்னு பாராமல் தினம் கொடுத்துக் கிட்டிருக்கிறாருங்கிறதை வெளியிலே நாலு பேருக்கிட்டேச் சொன்னா ஊர் சிரிச்சுப்பிடும். நான் இதெல்லாம் வலது கை கொடுக்கிறது இடது கைக்குத் தெரியப்படாதுங்கிற மாதிரி செய்துவிடுவேன். நானும் சொல்றதில்லே; வாங்கிக்கிறவனையும் சொல்ல விடறதில்லை.”

சிலைடுகள் காண்பித்து முடிந்து விளக்குகள் எரிந்தன. அந்தத் தியேட்டரில் மட்டும் அப்படி ஒரு வழக்கம். சிலைடுகள் காண்பித்த பின்தான் இடைவேளை,

அண்ணன் எழுந்திருந்தவர் - நான் பின் வரிசையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டார். அவர் முகம் பேயறை வாங்கியதுபோல் சுருங்கிச் சிறுத்தது. அவருடனிருந்தவரும் என்னைப் பார்த்துவிட்டார்.அண்ணன் தயங்கிநின்றதெல்லாம் சில வினாடிகள்தான். உடனே சமாளித்துக் கொண்டார். வியாபாரிக்கு எந்த நிலையிலும் சமாளிக்கத் தெரியும்.

“வாங்க இப்பக்கூட இவரு உங்க கதையைப் பற்றித்தான் புகழ்ந்து சொல்லிக்கிட்டிருந்தாரு நான் ரொம்பச் சந்தோஷப்பட்டேன்!” அண்ணன் நெகிழ்ந்தார்.

எனக்கோ உள்ளும், புறமும் ஒரே கொதிப்பு.நீண்டநாட்களாக இருந்த நம்பிக்கை உடைந்த எரிச்சல் ஒருபுறம்: 'நமக்கும் அண்ணன் அண்ணன்தான்” என்று அறிந்த குமுறல் மறுபுறம்.

“வாங்க இப்படி இங்கே உட்காரலாம். இவருக்கு உங்க கதைன்னா கொள்ளை ஆசை.”

“என்ன எழுதிப்பிட்டேன் அப்பிடிப் பிரமாதமா? எல்லாம் மகாலட்சுமி ஜவுளி ஸ்டோர் முதலாளி கொடுத்த பிச்சைக் காசு இல்லையா?” என்று சாட்டையை ஓங்கிச் சுழற்றிக் கொடுத்தேன். அண்ணன் அசந்துபோய் நின்று விட்டார். எனக்கு அத்தனை கோபமும் வரமுடியும் என்பது அண்ணனுக்கு அப்போதுதான் தெரிந்திருக்க முடியும். அண்ணன் தலையைக் குனிந்துவிட்டார். சுற்றிச் சிறு கூட்டம் வேறு கூடிவிட்டது.

“கவனமா இருங்க. இன்னொரு தடவை இப்படிப் பேசினதாக எங்கேயாவது கேட்டேனோ, கன்னத்தைப் பேர்த்திடுவேன். ஏதோ பழகின பழக்கத்தை விட முடியாமே உங்க கடைக்கு வந்து போயிட்டிருந்தா, என்ன வேணுமானாலும் பேசிடலாங்கிற நெனைப்பா..?”

அண்ணன் தலை இன்னும் குனிந்தது. என் தலை மேலும் நிமிர்ந்தது. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு தியேட்டரிலிருந்து பாதிப் படத்தைப் பார்க்காமலே வெளியேறினேன்.அதனாலென்ன? எத்தனையோ காரியத்தைப் பாதிக்கு மேல் செய்ய முடிவதில்லை.

அண்ணன் மண் குதிரை! என்னுடைய பயமுறுத்தல் அவரை ஒன்றும் செய்யப்போவதில்லை. மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முடியாது! நான் கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தது பிரமை அல்லது என்னுடைய சொந்த முட்டாள்தனம் என்று வைத்துக் கொண்டாலும் எனக்கு மறுப்பில்லை!.