நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மல்லன் திருவேங்கடம்
27. மல்லன் திருவேங்கடம்
தமிழ்நாட்டின் பழமையான வீரக் குடிமக்கள் அதிகமாக வசிக்கும் சிற்றூர்களில் அதுவும் ஒன்று. கிழக்கு மேற்காக ஒரே தெரு. நூறு வீடுகளுக்குக் குறையாமல் இருக்கலாம். பெரும்பாலும் குடிசைகள்தாம். இரண்டொரு காரை வீடுகளும் இருந்தன. தோப்பு, துரவு, வயல் வெளிகளோடு ஊர் அழகாகத்தான் இருந்தது.
மேலைக் கோடியில் ஆற்றோரத்தில் விசாலமான தோப்பும், அதன் நடுவே தென்னங் கீற்றுச் சார்ப்பு வேய்ந்து ஆசிரமம் போன்ற கட்டிடமுமாகத் தெரிகிறதே, அதுதான் பயில்வான் திருவேங்கடத்தின் வீடு. வீடு மட்டும் அல்ல; கோதா குஸ்திப் பள்ளிக்கூடம் எல்லாமே அதுதான். தோட்டத்து முகப்பில் தஞ்சாவூர் நந்தியைப் போலக் கொழுகொழுவென்று வளர்ந்த தோற்றத்துடன் தென்னமரத்தில் கட்டிப் போட்டிருக்கும் காளை திருவேங்கடத்தின் வளர்ப்புக் காளை, அந்தக் காளைக்கும் அவனுக்கும் அதிகமான வேறுபாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. அது நாலு காலால் நடந்து ஊரில் அட்டூழியம் பண்ணிக் கொண்டிருந்தது. அவன் இரண்டு காலால் நடந்து அதைச் செய்து கொண்டிருந்தான். குடும்பம், குழந்தை, குட்டி இந்த மாதிரிப் பிடுங்கல் எதுவும் இல்லாத தனிக் கட்டை அவன். வயது என்னவோ நாற்பதுக்குமேல் ஆகியிருந்தது. தலைமுறை தலைமுறையாக மல்லர்களை உண்டாக்கிக் கொடுத்த பயில்வான் குடும்பத்துக் கடைசி வாரிசு அவன்.
ஆனால், தட்டிக் கேட்க ஆளின்றித் தனியாக வளர்ந்த விடலைத் தனம் அவனைத் தனி மரமாக வளர்த்து விட்டிருந்தது. ஊரில் அவனை வாத்தியாராக எண்ணுவதற்குப் பத்து, இருபது முரட்டு வாலிபப் பிள்ளைகள் இருந்தனர். குஸ்தி சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் கோதாவின் புழுதி மண்ணில் அவர்களைப் புரள விட்டான் அவன். சில சமயங்களில் அவனுக்கும், அவனுடைய விடலைப் பருவத்துச் சீடர் கூட்டத்திற்கும் உற்சாகம் கிளம்பி விட்டால் பக்கத்து மலைத் தொடரில் வேட்டைக்குப் புறப்பட்டு விடுவதும் உண்டு.
மத்தளம் போல் பருத்த தோள்களும், முன் தள்ளிய பீப்பாய் வயிறும், கரளை கரளையாகச் சதை வைத்த துடைகளுமாகப் பார்த்த மாத்திரத்திலேயே பயில்வான் என்று சொல்லி விடக் கூடிய தோற்றம் அது. எப்போதும் சிவப்பு மிளிரும் குரூரமான கண்கள். சப்பை மூக்கு, நறுக்கு மீசை, முகம் காண்பதற்கு அவ்வளவு அழகு என்று சொல்லத் தகுதியற்றது. அவசலட்சணம் என்றும் சொல்லிவிடுவதற்கில்லை. ஏதோ ஒருவிதமான முகம் அது. உடல் பலத்தின் திமிரையும் தோற்றத்தின் அச்சுறுத்தும் நிலையையும், முரட்டுச் சீடர் கூட்டம் அளித்து வந்த ‘வாத்தியார்’ வீறாப்பையும் வைத்துக்கொண்டு கரையை அழித்து ஒடிச் சுற்றுப்புறத்தையும் பாழாக்கும் பொறுப்பற்ற காட்டாற்று வாழ்க்கை வாழ்ந்து வந்தான் திருவேங்கடம்.
குஸ்திப் பள்ளிக்கூட சீடர் புடைசூழத் தன் கணங்களோடு படையெடுத்து வரும் அரக்கன்போல் அவன் தெருவின் மேலைக் கோடியிலிருந்து புறப்பட்டுவிட்டான் என்றால் அன்றைக்கு கீழைக்கோடியில் யாருடைய கடை வாய்ப் பற்களோ உதிரப் போகின்றன என்றுதான் அர்த்தம். அதே மாதிரி அவனுடைய வளர்ப்புக் காளை அவிழ்த்துக் கொண்டு புறப்பட்டுவிட்டால் யாருடைய வயலில் பயிர் அழியுமோ, தெருவில் எவருடைய குழந்தை முட்டப்படுமோ; ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கு இல்லை. இரண்டு ‘காளைகளு’மாகக் கேட்பாரற்று ஊரை மேய்ந்துகொண்டிருந்தன. அவனுடைய காளையையாவது அவனே பார்த்து எப்போதாவது போனால் போகிறதென்று குஸ்திப் பள்ளிக்கூடத்து வாசலிலுள்ள தென்னைமரத்தில் கட்டிப் போட்டு வைப்பான். ஆனால், அவனை அந்த மாதிரிக் கட்டிப் போட அந்த ஊரில் அதுவரை ஆண்பிள்ளை பிறக்கவில்லை.
ஆண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் நியாய அநியாயம் தெரிந்தவர்களாக, நீதி நேர்மை உணர்ந்தவர்களாக; உள்ளத்தால் வாழ்ந்தார்கள். திருவேங்கடத்தைப் போலவே பயில்வான் குடும்பத்துப் பிள்ளைகளும் வேறு சிலர் அந்த ஊரில் இருந்தார்கள். உடலால் வாழும் வலு அவர்களுக்கு இருந்தும் முயன்று பார்த்து அவனை வெல்லமுடியாதென்று அவநம்பிக்கையடைந்து விட்டுவிட்டார்கள். அதன்பின் எல்லோரையும் போல அவர்களும் உள்ளத்தால் மட்டும் வாழத் தொடங்கிவிட்டார்கள்.
முத்துக் கொத்தனார் மகள் ஆற்றோரமாக மணல் அள்ளுவதற்குப் போனாள். திருவேங்கடத்தின் குஸ்திப் பள்ளிக்கூடத்து வேலி ஓரமாக ஒரு கூடை மணலை அள்ளிவிட்டாள். “இங்கே வந்து மணல் அள்ள உனக்கு என்ன தெம்பு?” என்று இரைந்து கொண்டே வயது வந்த பெண்ணாயிற்றே என்றும் பாராமல் தொட்டுக் கன்னத்தில் அறைந்து கூடையைப் பறித்துக் கொண்டு அவளைத் துரத்திவிட்டானாம் திருவேங்கடம்.
கோதாவில் குஸ்தி பழகும் சீடர் கும்பலுடன் நம்பியார் தோப்பில் நுழைந்து திருவேங்கடம் நாற்பது ஐம்பது இளநீரைக் காலி செய்துவிட்டான். தோப்புக்காரர் நியாயம் பேச வந்தபோது, “இந்த இளநீரைச் சீவியது பொய், உன் தலையைச் சீவப் போவது நிஜம். ஜாக்கிரதையாகப் போய்ப் பிழை!” என்று திமிராகப் பதில் சொல்லி அனுப்பினானாம்.
கிராமம் கிராமமாக ஆடிப் பிழைத்துக் கொண்டிருந்த சர்க்கஸ் கம்பெனி ஒன்று அந்த ஊரில் முகாம் இட்டிருந்தது. மலபார்க்கார நாயர் ஒருவருடைய கம்பெனி அது. திருவேங்கடத்தின் கோதா குஸ்திப் பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் ஆற்றங்கரை மணற்பரப்பில் சர்க்கஸ் கூடாரம் போட்டிருந்தார்கள். உள்ளூர்க் கூட்டமும், அக்கம் பக்கத்துக் கிராமங்களின் கூட்டமுமாகச் சர்க்கஸுக்கு நல்ல வசூல் ஆகிக் கொண்டிருந்தது. சர்க்கஸ் வந்த இரண்டு மூன்று நாள் கழித்துக் குஸ்திரு பள்ளிக்கூடத்தில் சாயங்காலம் ‘கோதா’ நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிப் பேச்சு அடிபட்டது!
“அண்னே! சர்க்கஸில் ஒரு பயில்வான் வந்திருக்கிறான் பாருங்கள், உடம்பு சும்மா தகதகவென்று தங்கம்போல மின்னுகிறது. இருநூறு பவுண்டு எடையைப் பூமாலை போடுவதுபோலத் தலைக்குமேலே தூக்கி அலட்சியமாகக் கீழே போடுகிறான்.”
திருவேங்கடம் அலட்சியமாகக் கேட்கிறவனைப்போலக் கேட்டுக் கொண்டான் இதை.
“அதெல்லாங்கூடவேடிக்கை இல்லை. தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் பாதங்களை வைத்துக்கொள்ளச் சொல்லி மோகினி போன்ற ஒரு பெண்பிள்ளையை அப்படியே அந்தரத்தில் தூக்குகிறான் அந்தப் பயில்வான். பிரமாதமான வேலை ஐயா!”
இன்னொருவன் அந்தப் பயில்வானின் பிரதாபத்தைத் தொடர்ந்தான். திருவேங்கடத்தின் கண்களில் பெறாமை மின்னியது. தன்னிடம் குஸ்தி பயிலும் சீடர்கள் தன்பெருமையைத் தவிர இன்னொருவன் பெருமையைப் பேசி அவன் கேட்டதில்லை. சீடர்கள் குஸ்தியையும் மறந்து எவன் பிரதாபத்தையோ அளப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவனைப் போல், “ஏண்டா, கோதாவில் நின்று கொண்டு குஸ்தி பழகுவதையும் மறந்து ஒரேயடியாக அளக்கிறீர்களே! அது யாரடா அவன் ;அப்படிப் பெரிய கொம்பன்.” என்றான்.
“கொம்பன்தானுங்க. நீங்கள் பார்த்தால் அப்படியே அசந்து போவீர்கள்.”
“சீ மூடு வாயை!” திருவேங்கடம் எரிந்து விழுந்தான். சீடர்கள் ‘கப்சிப்’பென்று அடங்கிப் போய் நின்றார்கள். சர்க்கஸ் கம்பெனியின் பாண்டு வாத்திய முழக்கம் அப்போதுதான் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் சர்க்கஸ் ஆரம்பமாகப் போகிறது என்பதற்கு முன்னறிவிப்பு அந்த ஒலி.
“டேய் புறப்படுங்களடா; அந்தக் கொம்பனையுந்தான் பார்த்துவிடலாமே!” ― திருவேங்கடத்தின் குரல் மிடுக்கும் கடுப்பும் கலந்து ஒலித்தது. அடுத்த விநாடியில் அரைக்குச் சல்லடம் மட்டும் தரித்துக்கொண்டிருந்த குஸ்தி உடையை நாகரிகமாக மாற்றிக்கொண்டு அந்தக் கூட்டம் சர்க்கஸ் கொட்டகையை நோக்கிக் கிளம்பிவிட்டது.
அசைந்து அசைந்து நடக்கும் மதயானைப்போல் திருவேங்கடம் முன்னால் நடக்க, சீடர் கோஷ்டி பின்தொடர்ந்தது. தூரத்திலிருந்து அதைப் பார்த்த உள்ளூர் ஆட்கள் சர்க்கஸ் கம்பெனிக்காரனுக்காக மனத்தில் அனுதாபப்பட்டுக் கொண்டு ஒதுங்கிச் சென்றார்கள்.
கொட்டகை வாசலில் டிக்கட் சரி பார்த்து உள்ளே விடுகிறவன் அந்தக்கும்பலைத் தடுத்து நிறுத்தினான். கூட்டமாகப் படையெடுத்து வருவதுபோல் இருபது முப்பது பேர் டிக்கட் வாங்காமல் உள்ளே நுழைய முயன்றால் அவன் எப்படி விடுவான்?
திருவேங்கடம் வலக்கையை உயர்த்தி மீசை துணியைத் தடவிக் கொடுத்தான். உதடுகளில் அலட்சியமான கேலிச் சிரிப்பு இழையோடியது. பார்வை முறைத்தது.
“தம்பிக்கு ஊர் வளமுறை ஒன்றும் தெரியாது போலிருக்கிறதே?”
குத்தல் நிறைந்த இந்தக் கேள்வியின் அர்த்தம் புரியாமல் டிக்கட் சரிபார்க்கிற ஆள் திகைத்தான். அவன் மலையாளி. தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் திகைப்பும் பயமும் கொண்டுமிரண்ட நோக்கால் திருவேங்கடத்தை நிமிர்ந்து பார்த்தான் அவன்.
“என்ன தம்பி, முறைத்துப் பார்க்கிறாய்?” முழுக்கைச் சட்டையின் கையை மேல்நோக்கி மடக்கிவிட்டான் திருவேங்கடம். சத்தமும் கூப்பாடும் வலுத்தன. குழப்பம் ஏற்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் கைகலப்பு ஏற்பட்டுவிடும் என்று சொல்லக்கூடிய நிலை.
அந்தச் சந்தர்ப்பத்தில் சர்க்கஸ் கம்பெனி பயில்வான் திரையை விலக்கிக்கொண்டு வாசல் பக்கமாக வந்தான். திருவேங்கடத்தைச் சிறிதுநேரம் உற்றுப் பார்த்ததும் கட்டுடலும் ஆண்மையின் அழகும் ஒருங்கு நிறைந்த சர்க்கஸ் கம்பெனிப் பயில்வானின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.
“அடேடே! வாருங்கள், வாருங்கள். நீங்கள்தானே திருவேங்கடம்? நான் உங்களைப்பற்றி இந்த ஊருக்கு வந்ததுமே கேள்விப்பட்டேன். நானாகவே வந்து உங்களைச் சந்திக்கநினைத்திருந்தேன். தற்செயலாக இருவருமே சந்தித்துவிட்டோம்.”
வேகமாக முன்னால் நடந்து வந்த திருவேங்கடத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினான் அவன். திருவேங்கடம் அசடு வழியச் சிரித்தான். அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. டிக்கெட் சரி பார்க்கிற ஆளிடம் மலையாளத்தில் ஏதோ சொல்லிவிட்டுத் திருவேங்கடத்தினிடம் நீண்டநாள் பழகிய நண்பனைப்போல் தோளில் கைப்போட்டு உள்ளே அழைத்துக்கொண்டு போய்விட்டான் சர்க்கஸ் கம்பெனிப் பயில்வான். திருவேங்கடத்தின் சீடர்கள் கூட்டத்தையும் டிக்கட் இல்லாமல் உள்ளே விட்டுவிட்டார்கள். கொட்டகைக்குள் போனதும் சீடர் கூட்டத்தைத் தரை மகா ஜனங்களோடு உட்காரச் செய்துவிட்டுத் திருவேங்கடத்தை மட்டும் தான் தங்கியிருந்த கூடாரத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றான் அந்தப் பயில்வான். வெல்வெட் மெத்தை தைத்த சோபாவில் அவனை உட்கார வைத்தான். ஒன்றும் சொல்ல, செய்ய, நினைக்க, அவகாசமின்றி அவனுடைய சிரிப்பிலும் முகமலர்ச்சியிலும் பேச்சிலும் மூழ்கிப் போனான் முரட்டுத் திருவேங்கடம்.
சர்க்கஸ் பயில்வான் உட்புறமாகத் திரும்பியாரையோ கூப்பிட்டான்.வெண்ணிற சர்க்கஸ் கவுனும், கால் அங்கியும் அணிந்த இளம்பெண் ஒருத்தி சிரித்த முகத்துடனே திரைமறைவிலிருந்து வெளிவந்து வணங்கினாள். யாரை வணங்குகிறாளோ என்று இரண்டொரு விநாடிகள் அயர்ந்து பேசாமல் இருந்த திருவேங்கடம் பின்பு தன்னைத்தான் வணங்குகிறாள் என்று தெரிந்ததும் சமாளித்துக்கொண்டு பதிலுக்கு வணங்கி வைத்தான்.
“நேற்றுக் கேள்விப்பட்டோமே; இந்த ஊர் பயில்வான் திருவேங்கடம்; அவர்தாம் இவர்.”
“இவள் என்னுடைய தங்கை ஓமனே.”
அப்போது அணிந்திருந்த சர்க்கஸ் உடையில் அவள் மின்னல் கொடி போன்றிருந்தாள். நினைவு தெரிந்த நாளிலிருந்து நாற்பது வயது வரை முரட்டுத் கல்லாகவே இறுகி வந்த திருவேங்கடத்தின் மனத்தில் அதுவரை ஏற்பட்டிராத ஒரு நளினமான நெகிழ்ச்சி பிறந்தது.
“உங்களைப் போன்ற திறமைமிக்க பயில்வான்கள் இப்படிக் கிராமத்து இருளில் மறைந்து வாழக்கூடாது. சரியான இடத்தில், சரியான பதவியில் இருந்தால் எவ்வளவோ பேரும் புகழும் பெற வேண்டியவர் நீங்கள்.” சர்க்கஸ் பயில்வான் ஆர்வத்தோடு பேசினான்.
“எங்கே நமக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது? ஏதோ ஊரோடு இருந்து நாலு பிள்ளைகளுக்குக் குஸ்தி சொல்லிக் கொடுத்துக் கொண்டு காலத்தைக் கடத்துகிறேன்.”
பயில்வானின் தங்கை இரண்டு பீங்கான் தட்டுகளில் பிஸ்கோத்தும் தேநீரும் கொண்டு வந்து வைத்தாள்.
“எடுத்துக் கொள்ளுங்கள்.”
“எதுக்குங்க… இதெல்லாம்?”
“எங்கள் அன்பை மறுக்கக்கூடாது!” திருவேங்கடத்தைப் பார்த்து இப்படி வேண்டிக் கொண்டு முல்லை அரும்பைச் சரம் தொடுத்துக்கட்டினதுபோல் சிரித்தாள் அந்தப் பெண்.
திருவேங்கடம் களித்தான். கிளாஸ்கோ பிஸ்கோத்தும் தேநீரும் இனித்தன. பவளம் பூட்டவிழ்ந்து முத்துவரிசை வெளித்தோன்றியது போன்ற செவ்விதழ் விரித்து அந்தப் பெண் சிரித்த சிரிப்போ அவன் உள்ளத்தில் இனித்தது.
“அண்ணா! இன்றைக்கு இவரை மேடையிலேயே உட்காரச் செய்து நம்முடைய ஆட்டத்தைக் காணச் செய்ய வேண்டும். ஆளைப் போக விட்டு விடாதீர்கள்!” அவள் குறும்பு மிளிரும் சிரிப்போடு அண்ணனிடம் கூறினாள்.
“ஓமனே, மேடையில் உட்கார்த்துவதோடு இவரை விடப் போவதில்லை நான். இன்றைக்கு ஆட்டத்துக்கே இவரைத் தலைமை வகித்துத் தொடங்கி வைக்கும்படி செய்யப்போகிறேன். முடிவுரையில் இவர் நமக்கு வாழ்த்துக் கூறுவார்.”
“சபாஷ் சரியான யோசனை!” சிறு குழந்தை போலக் கை கொட்டிச் சிரித்தாள் அவள். தான் மேடையில் உட்கார முடியாதென்றும் கீழேயே உட்கார்ந்து ரசித்துவிட்டுப் போவதாகவும் அவர்களிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான் திருவேங்கடம் முடியவில்லை. பயில்வானும் அவன் தங்கை ஓமனேயும் பிடிவாதமாக அவனை மேடையில் கொண்டு போய் உட்கார்த்திவிட்டார்கள். சூட்டும் பூட்ஸும் பட்டுக் குல்லாயுமாக அணிவகுத்து வீற்றிருந்த பாண்டு வாத்தியக்காரர்களுக்கு அருகில் காஸ்லைட்டுகளின் கண்ணைக் கூச வைக்கும் ஒளி வெள்ளத்தின் இடையில், கீழே தரையில் உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் பார்க்கும்படி, சோபாவில் மேடைமேல் அமர்ந்திருப்பது என்னவோ போல் இருந்தது. திருவேங்கடத்துக்கு கூட்டத்தில் இருப்பவர்களெல்லாம் தன்னையே பார்ப்பது போல, தன்னைப்பற்றியே பேசிக் கொள்வதுபோல, அவன் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று. அப்படி அங்கே வீற்றிருக்கத் தான் தகுதியில்லாதவன் போன்றதொரு தாழ்வு மனப்பான்மை அவனுள்ளேயே உண்டாயிற்று.
சர்க்கஸ் பயில்வான் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் திருவேங்கடத்துக்கு மாலை போட்டான். விழாவைத் தொடங்கி வைப்பதற்காக பேச எழுந்திருந்தபோது திருவேங்கடத்துக்கு வேர்த்துக் கொட்டியது. நடுங்கியது. ஏதோ உளறிக் குழறி ஒருவாறு பேசினான்.
ஆட்டம் ஆரம்பமாயிற்று. பயில்வானின் தங்கை ‘பார்’ விளையாடினாள். குறிவைத்து மரப்பலகையில் கத்தி எறிந்தாள். திருவேங்கடத்துக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. ‘அவள் சாதாரணப் பெண்பிள்ளைதானா? அல்லது மந்திர சக்திகள் பெற்ற தேவதையா?’ என்று பிரமித்தான் அவன்.
பயில்வான் எடை தூக்கும் கட்டம் வந்தது. அன்றைக்கு அதிகமாக ஐம்பது பவுண்டு தூக்கிக் காட்டினான் அவன். அதன்பின் கோயில் கருடவாகனம் போல இரண்டு உள்ளங்கைகளையும் முன்புறம் நீட்டிக் கொண்டு கீழே அமர்ந்தான். நீட்டிய கைகளின் மேல் அவனுடைய தங்கை பாதங்களைத் தூக்கி வைத்து ஏறினாள். அப்படியே உள்ளங்கைகளில் அவள் பாதத்தைத் தாங்கி அவளை மேலே தூக்கிக் கொண்டு எழுந்தான் பயில்வான். அந்தக் காட்சியோடு சர்க்கஸ் முடிந்தது. திருவேங்கடம் போன்ற திறமைசாலிகள் இருப்பது ஊருக்கே பெருமை என்றான் சர்க்கஸ் பயில்வான். திருவேங்கடம் தலைமை வகித்ததற்கு நன்றி கூறிப் புகழ்ந்தான். அப்போது கூட்டத்தில் இலேசாகக் கைதட்டல் எழுந்தது. திருவேங்கடத்தின் சீடர்களுடைய கைகள் அவை.
அன்றிரவு தன்னுடனேயே விருந்துண்ட பின்புதான் திருவேங்கடத்துக்கு விடை கொடுத்தான் சர்க்கஸ் பயில்வான். மறுநாள் காலையில் சர்க்கஸ் பயில்வானும், அவன் தங்கையும் திடீரென்று முன் தகவல் இல்லாமல் திருவேங்கடத்தின் குஸ்திப் பள்ளிக்கூட ‘கோதா’வுக்கு விஜயம் செய்துவிட்டனர். சீடப்பிள்ளைகளுக்குப் பெருமை தலைகால் புரியவில்லை.
சர்க்கஸ் பயில்வானின் தங்கை குஸ்திப் பள்ளிக்கூடத்து வாசலில் கட்டியிருந்த காளையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, "இது எங்கள் சர்க்கஸில் இருந்தால் இதை வைத்துக் கொண்டு நல்ல வித்தைகளைப் பழக்கிக்காட்டலாம்” என்று வேடிக்கையாகச் சொன்னாள். அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு அன்று மாலையே காளையைக் கொண்டு போய்ச் சர்க்கஸ் கொட்டகையில் கட்டிவிட்டுத்தான் திரும்பினான் திருவேங்கடம்.
அதன்பின்பு குஸ்திப் பள்ளிக்கூடத்து வகுப்புகள் காலையிலும் மாலையிலும் ஒழுங்காக நடக்கவில்லை. 'கோதா'வில் குஸ்திப் பயிற்சி அளிக்க வேண்டிய வாத்தியார் எப்போதும் சர்க்கஸ் கூடாரத்தில் வம்பளந்து கொண்டிருந்தால் பள்ளிக்கூடம் எப்படி நடக்கும்?
"வாத்தியாருடைய காளையைச் சர்க்கஸ் கொட்டகைக்குக் கொடுத்துவிட்டார். அது அங்கே பழகவேணும், பாருங்கள். அதற்காக கொஞ்ச நாளைக்குப் பழக்கிக் கொடுத்துவிட்டு வருவதற்காகப் போய் வந்து கொண்டிருக்கிறார்" என்று கேட்டவர்களுக்குப் பதில் சொல்லி வாத்தியாரின் கெளரவத்தைக் கொஞ்ச நாளைக்குக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள் சீடப்பிள்ளைகள். பின்பு அவர்களும் அலுத்துப்போய் அந்த மாதிரி பதிலைச் சொல்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
"எனக்கு அன்றைக்கே தெரியுமே; எப்போது வாத்தியார் அந்தக் காளையை அவிழ்த்துக்கொண்டு போனாரோ, அப்போதே அந்தச் சர்க்கஸ்காரி அவரை அவிழ்த்துத் தலைப்பிலே முடிந்து கொண்டாள் என்று புரிந்துவிட்டதே!" என்று மிகவும் நயமாக மற்றவர்களுக்கு விஷயத்தை விளக்கினான் ஒரு சீடன்.
ஒன்றறை மாதத்துக்குப் பிறகு சர்க்கஸ் கம்பெனி ஒரு நாள் இரவு அந்தக் கிராமத்தைவிட்டுக் குடி பெயர்ந்தது. மறுநாள் காலை திருவேங்கடத்தை ஊரில் காணவில்லை. எங்கே போயிருப்பான்? தெரிந்த விஷயந்தானே?