நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/கோலாட்டம்

26. கோலாட்டம்

ப்பசி மாதக் கடைசிப் பருவம் மழை தூறிக் கொண்டிருந்தது. அறையினுள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுவதற்கு இதமான சூழ்நிலை. எழுதிக் குவித்த தாள்கள் மேஜையின் மேல் குவிந்து கிடந்தன. தடங்கவில்லாமல் எழுத்து வளர்ந்து கொண்டிருந்தது. இந்த மழைக் காலத்தைப் போல், எழுத்தாளனுக்கு வசதியான காலம் வேறு இருக்க முடியாது. வெளியிலிருந்து தேடி வருகிறவர்கள் இருக்க மாட்டார்கள். வெளியில் புறப்பட்டுச் செல்லவும் தோன்றாது.

இவ்வளவு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மழையை வாழ்த்திக் கொண்டே இலக்கியப் படைப்பை நடத்திக் கொண்டிருந்தேன். பத்திரிகை ஆசிரியர் ‘கெடு’ வைத்து விட்டார்.இன்னும் பதினைந்து நாட்களில் அந்த நாவலை முழுமையாக முடித்துக் கொடுக்க வேண்டும். இதோ அவருடைய அவசரக் கடிதம் கூட மேஜை மேல் கிடக்கிறது. எந்தக் காரியத்தையுமே சொந்தமாக நன்கு உணர்ந்து செய்வதைக் காட்டிலும் இன்னொருவர் பின்னாலிருந்து தூண்டிக் கொண்டிருந்தால் வேகம் ஏற்படத்தான் செய்யும்! அந்த வேகத்தில் எதையும் மறந்து, எதற்கும் துணிந்து செயல்படும் ஒருவித முனைப்பு உண்டு. அத்தகைய முனைப்போடு குனிந்த தலை நிமிராமல் வெள்ளைக் காகிதத்தில் கற்பனையை வளர்த்து, உருவாக்கிக் கொண்டிருந்தேன். ஆற்று வெள்ளம் போல் கதை போய்க் கொண்டிருந்தது. மழையோடு மழையாக நனைந்து கொண்டே தெருவில் என் வீட்டு வாசலில் பத்துப் பன்னிரண்டு பெண்கள் கோலாட்டம் போட வந்து சேர்ந்தார்கள். நான் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த அறையின் ஜன்னல், தெருவை ஒட்டி அமைந்திருந்தது.

குனிந்து எழுதிக் கொண்டிருந்தவன், பட்டுப் பாவாடைகளின் சலசலப்பு, வளையல்களின் ஒலி, மல்லிகைப் பூவின் நறுமணம் இவற்றால் கவரப்பட்டுத் தலை நிமிர்ந்தேன். ஜன்னலுக்கு வெளியே தெருவோரமாக அப்பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அத்தனை பேருமே பெதும்மைப் பருவத்துப் பெண்கள்தாம். அவர்களுடைய வளை குலுங்கும் இளங்கரங்களில், பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று பல நிறக் கோலாட்டக் குச்சிகள் காட்சியளித்தன. வட்டமாக ஒரு ஒழுங்கில் நின்று கோலாட்டம் போடத் தயாராகிவிட்டார்கள். மழை அவ்வளவாக வலுத்துப் பெய்யவில்லை. தெருவில் அது ஒரு மையமான இடம். கழைக் கூத்தாடி முதல், புடவை ஏலம் போட வருகிற துணி வியாபாரி வரையில் தொழிலைத் தொடங்குவது அந்த இடம்தான். கோலாட்டம் போட வந்த பெண்களும் தெருவுக்கு மையமான அந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து விட்டார்கள். இனி நான் எழுதி உருப்பட்டாற்போலத்தான். இதோ அவர்களுடைய கோலாட்டமும் தொடங்கிவிட்டது. குச்சிகள் அடிபடும் ஓசை! கும்பலாகச் சேர்ந்து பாடும் பாட்டின் ஒலி; இரண்டும் செவிகளில் புகுந்து கவனத்தைக் கவர்ந்தன.

கால் மணியாயிற்று, அரை மணியாயிற்று; கோலாட்டம் நிற்கிற வழியாது; காணோம். மழையும் நின்றுவிட்டதால் அந்தப் பெண்கள் உற்சாகம் அடைந்து விட்டனர். ஆளுக்கு ஒரு பாட்டுப் பாடிக் கொண்டு சிரிப்பும், கேலிப் பேச்சுமாக்க் கும்மாளமிடத் தொடங்கிவிட்டனர். எழுத்து துப்புரவாக ஓடவில்லை. பேனாவை மூடி மேஜைமேல் வைத்தேன். எழுதியும் எழுதாமலும் தாறுமாறாகக் கிடந்த காகிதங்களை அடுக்கி வைத்துவிட்டு மறுபடியும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. முன்பு பத்துப் பன்னிரண்டு பெண்கள் நின்ற இடத்தில் இப்போது ஏறக்குறைய இருபது பெண்களுக்கும் மேலாக நின்று கொண்டிருந்தனர்.கோலாட்ட ஒலியும், பாட்டொலியும் அவர்களின் தொகைக்கேற்ப அதிகரித்திருந்தன.

பலத்த ஓசை உண்டாகும்படியாக, உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்னுக்கு நகர்த்திவிட்டு எழுந்திருந்தேன். வேகமாக நடந்து தெருவில் இறங்கினேன். “இந்த இடம்தான் உங்களுக்கு அகப்பட்டதோ? எதற்காக என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுகிறீர்கள்? நீங்கள் கோலாட்டம் போடவில்லை என்று இங்கே யார் ஏங்கி அழுதார்கள்? பேசாமல் இப்போதே இங்கிருந்து போகிறீர்களா? தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டட்டுமா?”

தெருவில் போய் நின்று கொண்டு அதட்டிக் கூப்பாடு போட்டேன். என் சத்தம் அவர்களிடையே அசாதாரணமானதொரு அமைதியை உண்டாக்கியது. கோலாட்டக்குச்சி ஒன்றோடொன்று அடிபடும் ஓசைநின்றது. பாடிக் கொண்டிருந்த வாய்கள் அடைத்துப் போயின. அந்தப் பெண்கள் மிரண்டு போய் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்கள் போடுகிற சத்தத்தில் உள்ளே உட்கார்ந்து ஒரு வரிகூட எழுத முடியவில்லை. இந்த இடம்தான் உங்களுக்கு அகப்பட்டதா? வேறெங்கேயாவது போகக்கூடாதோ?”

தங்களுக்குள் கசுமுசுவென்று மெல்லிய குரலில் ஏதோ பேசிக் கொண்டார்கள் அந்தப் பெண்கள். இரண்டொரு சொற்கள் என் செவிகளிலும் அரைகுறையாக விழுந்தன.

“அடியே! மாமா கதை எழுதுகிறார் போல் இருக்கிறதடி.”

“நாம் இங்கிருந்து வேறே எங்கேயாவது போய்விடலாமடி.”

“வழக்கமாகக் கோலாட்டம் போடுகிற இடத்தை விட்டுவிட்டால் கூட்டம் கூடாதே?” இப்படி இன்னும் பல குரல்கள் என்னென்னவோ தங்களுக்குள் பேசிக் கொண்டன.

அந்தக் கூட்டத்தில் உயரமாக, நீலச் சிற்றாடை அணிந்து கொண்டிருந்த ஒரு பெண் தயங்கித் தயங்கி நடந்து கெஞ்சும் பார்வையோடு முன்னால் வந்து நின்றாள். அவள்தான் அங்கிருந்த சிறுமிகளுக்குள் பெரியவள். கோலாட்டத்துக்கு வந்திருந்த பெண்களுக்கெல்லாம் தலைவியைப் போலத் தோன்றினாள்.

“மாமா கோபித்துக் கொள்ளமாட்டீர்களே? இன்றைக்குத்தான் நல்ல நாள் பார்த்து முதல் முதலாகக் கோலாட்டம் தொடங்குகிறோம். காலையிலே பசுவனுக்கு மண் எடுத்தாயிற்று… வந்து… வந்து… வருஷா வருஷம் வழக்கமாக இந்த இடம்தான்…”

“இதோ பார்! நீங்கள் மண் எடுத்தால் என்ன? கல்லெடுத்தால் என்ன? அதனால் எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. இந்தக் கெஞ்சுதலுக்கெல்லாம் மசிகிற பேர்வழி நான் இல்லை. மூச்சுவிடாமல் இங்கிருந்து போய்விட வேண்டும்! இல்லாவிட்டால்……?”

அந்தப் பெண் தலையை நிமிர்த்தி, இமைக்காமல் என் முகத்தை உற்றுப் பார்த்தாள். பளிங்கு வட்டத்தில் பதித்த கருநாவற்கனிகளைப்போன்ற அவள் விழிகள் என்னை உடுருவின.

“என்ன முறைத்துப் பார்க்கிறாய்? தலையைக் கிள்ளி விடுவாயோ?”

“இங்கிருந்து நாங்கள் போகாவிட்டால் என்ன செய்வீர்களோ?” அந்தப் பெண் திடமான குரலில் என்னைக் கேட்டாள். பின்னாலிருந்து வேறு சில குரல்களும் அவளுடன் ஒத்துப் பாடின; “அப்படிக் கேளடி,சொல்கிறேன், இந்த மாமா என்னவோ நம்மை ரொம்பத்தான் மிரட்டுகிறார்!”

“நாம் இங்கேயே கோலாட்டம் போடுவோம். இவர் என்னதான் செய்ய முடியுமென்று பார்த்து விடுவோமே!”

“வருஷத்துக்கு ஒரு தடவை வருகிற நல்ல காரியம்.இதற்குக்கூட இப்படியெல்லாம் வம்பு செய்கிறாரே!”

இடையில் அந்தக் கூட்டத்திலேயே வயதில் சிறியவளும் மழலை மாறாத பேச்சையுடையவளுமான ஒரு சிறுமி முகத்தை அழகு காட்டும் பாவனையில் வைத்துக் கொண்டு எனக்கு எதிரே வந்தாள். “ஐயே! நாங்க கோலாட்டம் போடுகிற தனாலேதானே மழை பெய்யறதாம்! இல்லாவிட்டால் பெய்யுமோ? மழை பெய்யாட்டா வயலெல்லாம் விளையாதே…” என்று மழலைச்சொற்களைக் குவிந்த சிறு உதடுகளிலிருந்து குத்திக் காட்டும் தோரணையில் வெளியிட்டாள்.

உடனே கொல்லென்ற சிரிப்பொலி எழுந்தது. அத்தனை பெண்களும் ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டவர்கள் போலச் சிரித்தனர். அந்தச் சிரிப்பொலி என் உடலின் ஒவ்வோர் அணுவிலும் நெருப்பைப் பாய்ச்சினாற் போலிருந்தது.

வீட்டுக்குள் வருவோர் கால் கழுவிக் கொண்டு துய்மையாக வருவதற்காக என் மனைவி வழக்கமாக வாசற்படிக்கு அருகில் ஒரு பெரிய வாளி நிறையத் தண்ணீர் கொட்டிவைத்திருப்பாள். தெருவில் இறங்கி நின்று கொண்டிருந்தவன் ஆத்திரத்தோடு வாசற்படிக்குப் பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். கொஞ்சங்கூடக் குறையாமல் வழிய வழியத் தண்ணீரோடு வாளி அங்கே வைக்கப்பட்டிருந்தது. குபீரென்று பாய்ந்து அந்த வாளியைக் கையில் எடுத்தேன்.அவர்கள் சிரித்த ஒலி இன்னும் அடங்கக்கூட இல்லை.

“என்ன செய்வேனா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்” என்றுசொல்வித கொண்டே ஒரு வாளித் தண்ணீரையும் எதிரே நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் தலையில் வீசிக் கவிழ்த்தேன்.

“ஓடுங்கள்! இன்னும் ஒரு விநாடி இங்கு நின்றீர்களோ! உங்கள் எல்லோர் தலைக்கும் இந்த மாதிரி அபிஷேகம்தான் கிடைக்கும்…”

என் எச்சரிக்கையைக் கேட்டும் ஒரு பெண்ணாவது நகரவில்லை. அப்படியேதான் நின்று கொண்டிருந்தார்கள். அந்தத் துணிச்சல்காரி சொட்டச் சொட்ட நனைந்து போய் அப்போதுதான் குளத்தில் முழுகி எழுந்திருந்தவள் மாதிரி நின்றாள். அதே வெட்டுப் பார்வை! அதே அழுத்தம்! குளிர்ந்த தண்ணீர் பட்ட உடல் வெடவெடவென்று நடுங்கியது. கையில் பிடித்துக் கொண்டிருந்த சிவப்பு நிறக் கோலாட்டக் குச்சிகள் நடுக்கத்தினால் தாமாகவே ஒன்றோடொன்று மெதுவாக அடித்துக் கொண்டன. அவள் பார்வை என் முகத்தை விட்டு விலகவே இல்லை. விருட்டென்று பின்னால் திரும்பினாள். “அடியே! ஒருத்தியாவது நகராதீர்கள். எல்லோரும் இப்படி வரிசையாக வந்து முன்னால் நின்று கொள்ளுங்கள். இந்த மாமாவால் எத்தனை வாளி தண்ணீர் தூக்கிக் கொண்டு வந்து கொட்ட முடியுமோ கொட்டட்டும். பார்த்து விடலாம். நமக்கும் பிடிவாதம் பிடிக்கத் தெரியும்!” ரோஷம் நிறைந்த குரலில் அவள் இப்படிக் கட்டளையிட்டபோது மளமளவென்று அத்தனை பெண்களும் முன்னால் வந்து நின்றனர்.

எனக்கு ஏற்பட்ட வியப்புக்கு ஓர் அளவேயில்லை! இந்த ஒரு பெண்ணின் வார்த்தைக்கு இவர்களிடையே இவ்வளவு சக்தியா? என்ன பிடிவாதம்! எவ்வளவு நெஞ்சழுத்தம்? கேவலம், பேதைப் பருவத்து அறியாமை மாறாத இந்தப் பிஞ்சு மனங்களில்கூட இப்படி ஒரு வைராக்கியமா?

அந்தப் பெண்களிடம் சமாதானமாகப் பணிந்து போகவும் ஆண்மையும் கெளரவமும் இடம் அளிக்கவில்லை. “இதோ பார்! இந்தச் சண்டித்தனத்துக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. மறு பேச்சுப் பேசாமல் இங்கிருந்து போகிறீர்களா? அல்லது உங்களுக்கு அடி உதை வேண்டுமா?” என்று அதட்டினேன்.

“முடிந்தால் அடியுங்கள் உதையுங்கள் இன்றைக்கு மட்டுமில்லை; இனிமேலும் பத்தாவது நாள் பசுவனைக் குளத்தில் போட்டு ஜோத்திரை முடிகிற வரையில் இந்த இடத்தில் தான் நாங்கள் கோலாட்டம் போடப் போகிறோம்!” அந்தப் பெண்தான் திமிராகப் பேசினாள். பேசினதோடு நிற்கவில்லை. உடன் நின்றவர்களை மறுபடியும் முன்போலவே வட்ட வியூகத்தில் நிறுத்திக் கொண்டு பிழியப் பிழிய நனைந்த உடம்புடனே கோலாட்டம் போடத் தொடங்கி விட்டாள். அந்தப் பெண் கோலாட்டக் குச்சிகளை அடிப்பதாகத் தோன்றவில்லை. என் நெஞ்சையே அடித்து நொறுக்குவது போல் தோன்றியது.

“யாரோடு இவ்வளவு கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள், வாசலில்? ― எழுதுவதையும் விட்டு விட்டுச் சண்டை போடுகிறீர்களே?” என்று கேட்டுக் கொண்டே என் மனைவி உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தாள்.

“நீயே வந்து பார் இந்த அநியாயத்தை! உள்ளே உட்கார்ந்து நிம்மதியாக ஒரு வரிகூட எழுத முடியவில்லை. இந்த நாவலை இன்னும் நாலு நாட்களில் அனுப்பியாக வேண்டும். கோலாட்டம் போடுகிறோம் என்று இந்தப் பெண்கள் அப்போதிருந்து கூச்சல் போட்டு எழுத முடியாமல் சதி செய்கிறார்கள். இங்கேதான் வழக்கமாம். அதனால் இங்கேதான் போடுவார்களாம். நீயாவது கொஞ்சம் வந்து சொல்லேன். உன் வார்த்தையையாவது கேட்கிறார்களா, பார்ப்போம்!” நான் அவளைச் சமாதானத்துக்கு அழைத்தேன்.

பெண்ணுக்குப் பெண் சொன்னால் சமாதானமாகக் கேட்டுக் கொண்டு வேறு இடத்துக்குப் போய்விடுவார்கள் என்பது என் நினைப்பு. ஆனால் அவள் வாசலுக்கு வந்ததும் வராததுமாக அந்தப் பெண்கள் ஓடிவந்து அவளைச் சூழ்ந்து கொண்டு என்னைப் பற்றி முறையிடத் தொடங்கிவிட்டார்கள்.

“மாமீ! மாமீ! உங்கள் வீட்டு மாமா என் மேலே ஒரு வாளி நிறையத் தண்ணீரை அப்படியே கொட்டிவிட்டார்” என்று நனைந்து போயிருந்த தன் உடம்பையும் காலியாயிருந்த வாளியையும் சுட்டிக் காட்டினாள் அந்தத் துடுக்குக்காரப் பெண்.

“மாமீ! மாமீ! நீங்க சொல்லுங்க… நாங்கள் கோலாட்டம் போடுகிறதுனாலேதானே மழை பெய்கிறது” என்று விரியாத மாதுளை மொட்டுக்களைப் போன்ற உதடுகள் குவிய மழலை மிழற்றியது அந்தக் குழந்தை.

“வழக்கமாக இங்கேதானே கோலாட்டம் போடுவோம்? உங்களுக்குத் தெரியாதா, மாமீ?” என்று அனுபவ பாத்தியதை கொண்டாடினாள் மற்றொரு சிறுமி. அவ்வளவையும் கேட்டுவிட்டு என் மனைவி என்னையே திருப்பிக் கொண்டாள்.

“இதென்ன கூத்து? உங்களுக்கே நன்றாயிருக்கிறதா இது? இந்தப் பெண் தலையிலே ஒரு வாளி பச்சைத் தண்ணீரைக் கவிழ்த்திருக்கிறீர்களே? கோபம் வந்தாலும் மனிதனுக்கு இப்படியும் நிதானம் தெரியாமல் வருமா?”

“என் எழுத்து வேலையைக் குட்டிச்சுவராக்கிவிட்டார்களே! அதில் இந்தப் பெண்தான் ரொம்பப் பொல்லாதவள். மற்றவர்களையெல்லாம் தூண்டி விடுகிறவளும் இவள்தான். எனக்கு என்ன கோபம் வருகிறது தெரியுமா?” என்றேன்.

“போதுமே சமர்த்து இவளுடைய அப்பா அம்மா தேடிக் கொண்டு வந்து, ‘ஏனய்யா நீ ஒரு மனுஷன்தானா? இப்படிச் செய்திருக்கிறாயே?’ என்று கேட்டால் தெரியும் வழியை விடுங்கள்; உள்ளே போய் அவளுடைய தலையைத் துவட்டி வருகிறேன்!” என்றாள்.

அவளைத் தொடர்ந்து தெருவில் நின்று கொண்டிருந்த அத்தனை சிறுமிகளும் உள்ளே நுழைந்துவிட்டனர்.

‘சரி! இனிமேல் அவள் பாடு: எப்படியாவது சமாதானமாகச் சொல்லி அந்தப் பெண்களை வேறு இடத்தில் போய்க் கோலாட்டம் போடச் செய்துவிடுவாள்’, என்றெண்ணிக் கொண்டு அறைக்குள் நுழைந்தேன். எழுதுவதற்காகப் பேனாதுை; கையில் எடுத்தேன்.

ஆனால், அதற்குள் வீட்டின் கூடத்திலிருந்தே கோலாட்டச் சத்தம் கிளம்பியது “கோலே நல்ல கோலே” என்று பாட்டொலியும் எழுந்தது. கணீர் கணீர் என்று குச்சிகள் அடிபடும் ஓசையோடு என் மனைவியின் குரல் பாடியது காதில் விழுந்தது.

எனக்கு இப்போது வந்த ஆத்திரம் சொல்லி மாளாது. பேனாவை முடி மேஜைமேல் எறிந்து விட்டு உள்ளே போனேன். உள்ளே கூடத்தில் கண்ட காட்சி என் கோபத்தைப் பன்மடங்கு வளர்த்தது. தெருவில் எந்த வியூகத்தில் நின்றார்களோ, அதே வியூகத்தில் நின்று அந்தப் பெண்கள் கூடத்தில் கோலாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆட்டத்துக்குப்பதம் பாடுகிறவள்போல் என் மனைவி தனியே நாற்காலியில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

“இதென்ன? வீடா? சத்திரமா? நான் இந்த நாவலை எழுதவிடக்கூடாதென்ற எண்ணமா? இவர்கள் வீதியில் கோலாட்டம் போட்டாலே எழுதுவதற்கு இடையூறாக இருக்கிறது. நீ என்னடாவென்றால் வீட்டுக்குள்ளேயே…?”

“நிறுத்துங்கள்! உங்களுக்கு வருஷம் முந்நூற்றறுபது நாளும்தான் ஏதாவது எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக ஊர், உலகத்தில் ஒரு நல்லது நடக்காமல் போய்விடுமா! இன்னும் பத்து நாட்களுக்கு இவர்கள் தெருவில், நம் வீட்டுக்கு அருகேதான் கோலாட்டம் போடப் போகிறார்கள். உங்களுக்காக ஊர் வழக்கம் நின்றுவிடாது. நீங்கள் வேண்டுமானால் எங்காவது கண்காணாமல் தோப்பு, துரவு என்று ஊருக்கு வெளியே போய் எழுதிக் கொண்டிருங்கள்.”

“ஓகோ! உரிமையைவிட வழக்கத்துக்கு அவ்வளவு உறவா?”

“உங்கள் தத்துவப்பேச்செல்லாம் எனக்குப் புரியாது. இந்த இடத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும்!”

பேசாமல் அறைக்குத் திரும்பி வந்தேன். உள்ளே மறுபடியும் கோலாட்டம் ஓசை கிளம்பியது. ஒரு தபால் கார்டை எடுத்தேன். “அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கடுமையான நிமோனியாக் காய்ச்சலால் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதால் உங்களிடம் ஒப்புக் கொண்டபடி நாவலை முடித்து அனுப்ப இயலாமற் போய்விட்டது. இன்னும் பதினைந்து நாட்கள் அவகாசமளித்தால் ஒருவேளை முடித்து அனுப்பிவிடலாமென்று எண்ணுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.”

முகவரி எழுதிய பின்பு கடிதத்தை நாலு வீடு தள்ளித் தெருவில் ஒரு வேப்ப மரத்தடியில் இருந்த தபால் பெட்டியில் கொண்டு போய்ப் போட்டு விட்டு வந்தேன். மனைவி உள்ளேயிருந்து வந்தாள்.

“உங்களைத்தானே?.”

“என்ன?”

“ஒரு ஐந்து ரூபாய் பணம் வேண்டும்!”

“எதற்காக?”

“பத்துநாட்களும் இந்தப் பெண்கள் நம் வீட்டு வாசலில்தானே கோலாட்டம் போடப் போகிறார்கள். கன்னிப் பெண்களை வெறுங்கையோடு அனுப்பலாகாது. தினம் கொஞ்சம் கல்கண்டும் வெற்றிலை, பாக்கு, மஞ்சளும் வைத்துக் கொடுக்கலாமென்றிருந்தேன்.”

“செய்! இந்தா ரூபாய்…” மறு பேச்சுப் பேசாமல் டிராயரைத் திறந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். அவள் வாங்கிக்கொண்டாள்.

“கோபமா உங்களுக்கு?”

“இல்லை!” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி முடித்தேன். அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

காரியத்தைச் சாதிக்கும் திறன், முரண்டு, பிடிவாதம், இதெல்லாம் வயதும், அனுபவமுமுள்ள பெரியவர்களால்தான் முடியுமென்று நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் எனக்கு இருந்தது. இப்போது அந்த எண்ணம் உள்ளே பன்னிரண்டு பெண்கள் இருபத்து நான்கு கோலாட்டக் குச்சிகளில் எழுப்பிய ஒலியில் சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது!

(கல்கி, 12.1.1958)