நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வழிகள் பிரிகின்றன

51. வழிகள் பிரிகின்றன

“நீ போ அம்மா! மணவறையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூட்டு நேரம் நெருங்கி விட்டது. இவனைச் சமாதானப் படுத்த உன்னால் முடியாது. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மகளை அவசரப் படுத்தினார் நல்ல குற்றாலம் பிள்ளை.

புதுப் புடைவையும் பூச்சூட்டுமாக மணக் கோலத்தில் நின்று கொண்டிருந்த அவருடைய மகள் தயங்கினாள். கீழே விழுந்து கை கால்களை உதைத்துக் கொண்டு அழும் தம்பியைப் பார்த்துக் கலங்கி நின்றாள் மணப்பெண்.

“கண்ணா, அழாதே! நீ சமர்த்துப் பையனில்லையா? நான் இன்னும் கொஞ்ச நாழிகையிலே இங்கே வந்திடுவேன். அப்புறம் உன்னோடேயே இருப்பேன். உனக்கு எல்லாம் சொல்லுவேன். அக்காவுக்குக் கலியாணத்தன்னிக்கி நீ அழலாமா? அக்கா பாவமில்லையா?” - மணப்பெண் காந்திமதி கீழே பையனின் பக்கத்தில் உட்கார்ந்து அவனுடைய பிஞ்சுக் கைகளைப் பற்றியவாறு ஆறுதலாகச் சொல்லிப் பார்த்தாள்.

“வேண்டாம் போ; நானும் உன் கூட மணவறைக்கு வருவேன். நீ என்னை ஏமாத்திட்டுப் போகப் பார்க்கிறே. எனக்கு மட்டும் கண்ணு தெரிஞ்சா நீ இப்படி எல்லாம் செய்வியா அக்கா?” பையன் கதறிப் புரண்டான்.

“ஏலே குருட்டு மூதி, உதை கேக்குதா இப்பம்? நேரம் காலம் தெரியாமே அழுது முரண்டு பிடிக்கிறே!” என்று சினத்தோடு கையை ஓங்கினார், நல்ல குற்றாலம்.

“அடிக்காதீங்கப்பா, கண்ணன் நான் சொன்னால் கேட்பான். கண்ணா! நீ சமர்த்துப் பையனில்லையா? அழாமல் இருக்கணும்” என்று மறுபடியும் பையனின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கெஞ்சினாள் காந்திமதி.

“வே அத்தான், நேரங் கழிஞ்சுக்கிட்டிருக்குது; மணவறையிலே கூப்பிடுதாக...” என்று அவசரப்படுத்திக்கொண்டு வந்தார் பலவேசம்.

“பலவேசம் நீதான் இந்தப் பயலைக் கொஞ்சம் பார்த்துக்கவேன். தாலியைக் கட்டி முடிஞ்சிடட்டும்.”

“காந்தி! நீ அப்பா கூடப் போம்மா, நான் இவனைப் பார்த்துக்கிறேன்” என்று பலவேசம் எழுந்து, திமிறி ஓடாமல் பையனைப் பிடித்துக் கொண்டார். கண்ணன் வீறிட்டு அழுதான். பலவேசத்தின் இரும்புப் பிடிகளையும் தகர்த்துக் கொண்டு, “அக்கா காந்தியக்கா; என்னை விட்டிட்டுப் போகாதே; நானும் மணவறைக்கு வருவேன்” என்று வீறிட்டான்.

“குருட்டுப் பயலே! நீ அங்கே போய் என்னத்தைப் பார்க்கப் போறே! அதான் பொறக்கும் போதே அவிச்சுக்கிட்டுப் பொறந்திருக்கியே? இன்னும் பார்க்க என்ன வச்சிருக்கு உனக்கு?" என்று முதுகில் இரண்டு சாத்துச் சாத்தினார் பலவேசம் பையனுடைய அழுகை நாதசுவர ஒசையிலும் மேளத்திலும் கலந்து கரைந்தது. மணவறையில் கெட்டிமேளம் முழங்கிற்று.

வீடு முழுவதும் சந்தனம் மணத்தது. பன்னீர் கமகமத்தது. தலையில் பூச்சூடிக் கொண்டிருக்கிற பலர் கூடினால் நிறைகிற ஒரு மணம் - கல்யாண மணம்- வீடெங்கும் பரவி இருந்தது. காலையிலிருந்து கொட்டுமேளம் முழங்குகிறது. விடிந்ததும் ஈயப் பாத்திரத்தில் வெந்நீர்ப் பழையதும், ஆவக்காய் ஊறுகாயும் எடுத்துக்கொண்டு, 'கண்ணா பல் விளக்கலாம், வா, பழையது எடுத்திட்டு வந்திருக்கேன்' என்று கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டுபோக வரும் காந்திமதி அக்கா வரவில்லை. கண்ணன் மாடியறையிலேயே இருந்தான். வீடு நிறையக் கூட்டமும், கோலாகலமுமாக, ஏதோ புதிதாக நடப்பதை அவன் செவிகள் உணர்ந்தன. யார் யாரோ வருகிறார்கள், போகிறார்கள். வள்ளியூரிலிருந்து பலவேசம் மாமா வந்திருக்கிறார் போலிருக்கிறது. அவருடைய குரல் கேட்கிறது.ராதாவரத்துப் பெரிய அத்தை குரலும் கேட்கிறது.ஏதோ ஒரு குதூகலத்திற்காக வீடே மணக்கிறது, மகிழ்கிறது, நிறைந்து பொலிகிறது; அவன் செவிகள் உணர்கின்றன. கண்கள் பார்க்க முடியவில்லை.

“டேய் நீ இங்கேயே இரு; எங்கேயும் நீயா எந்திரிச்சி வந்து தடுமாறி விழுந்து வைக்காதே." என்று அப்பாவந்து குரல் கொடுத்துவிட்டுப்போனார். சிறிது நேரத்தில் யாரோ ஒர் இலையில் இட்டிலி கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள்.

“இந்த இட்டிலி யாருக்கு வேணும்? காந்தி அக்கா வெந்நிப் பழையது கொண்டு வருவா. நான் பல் வெளக்கிட்டுச் சாப்பிடுவேன்” என்று இட்டிலியை ஒதுக்கித் தள்ளினான் கண்ணன். - “காந்தியக்கா இன்னிக்கி வரமாட்டா. அவளுக்குக் கலியாணம். கீழே கிணத்தடியிலே ஒரே கூட்டம் நீ கண்ணு தெரியாத பையன்-வந்து பல் விளக்குறதுக்கு முடியாது. இன்னிக்குப்பல் விளக்காட்டிப் பரவாயில்லே இட்டிலியைச் சாப்பிடு”

“நா ஒண்ணும் பல்லு வெளக்காமச் சாப்பிட மாட்டேன். அக்கா வந்து என்னையைக் கீழே விழுகாமல் கையைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போகும்” என்று இட்டிலி கொண்டு வந்தவரை மறுத்து, அடம் பிடித்தான் சிறுவன். தன்னை வஞ்சித்து ஏமாற்றி விட்டு அந்த வீடு முழுவதும் ஏதோ ஒரு பெரிய கோலாகலத்தில் மூழ்கியிருப்பது போல் அவன் மனம் உணர்ந்து ஏங்கியது. ஏங்கி என்ன பயன்? மாடியறையில் காலையில் எந்தப் படுக்கையில் தூங்கி எழுந்திருந்தானோ அந்தப் படுக்கையிலிருந்து நகராமல் வீற்றிருந்தான் அந்தக் குருட்டுச் சிறுவன். அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்குப் பக்கமாகக் கல்யாணத்துக்கு வந்திருந்த சில சிறு பையன்கள் ஏதோ வேடிக்கையாகச் சிரித்துப் பேசிக்கொண்டே போனார்கள் போலிருக்கிறது.அந்த இளங் குரல்களையும், அவற்றிலிருந்த கும்மாளத்தையும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் அவன் கேட்டான். . “டேய் இது யாருடா, இந்தத் தூங்கு மூஞ்சிப் பையன்? படுக்கையிலேயே கையைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்!'

"கல்யாணப் பொண்ணோட தம்பிடா பாவம், குருட்டுப் பையண்டா!.”

"குருட்டுப் பையனா? ஐயோ பாவம்!

இந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்த கண்ணனுக்கு மனத்தில் ஏதோ தைத்தது. என்னவோ குமுறியது. நெருப்பில் விழுந்த பூ மாதிரி அவனுடைய பிஞ்சு நினைவு தாங்க முடியாத ஏதோ ஒரு முரட்டு வெம்மை அவன் மனத்தைக் கசக்கிப் பிழிந்தது. அந்த வீட்டில் அப்போது ஏதோ ஒரு மகிழ்ச்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தில் கலந்து கொள்ள விடாமல் - குடை ராட்டினத்திலிருந்து கீழே தள்ளப்பட்டது போல் தன்னைப் பிரித்து விட்டதாக அவன் இளம் உள்ளம் கொதித்தது. இரைந்து அழ வேண்டும் போலிருந்தது. காற்றில் அசைகிற ரோஜா மொட்டு மாதிரி அவன் உதடுகள் துடித்தன. வாய் கோணியது. கேவிக் கேவி அழுதான்.

“ஏண்டா அழுவறே? உனக்கு என்ன வேணும்? சொல்லு” என்று அந்தப் பையன்களில் ஒருவன் பக்கத்தில் வந்து கேட்டான்.

“காந்தி அக்காவை வரச் சொல்லணும். நான் மாடியிலே இருக்கேன். காலைலேருந்து பல் வெளக்கலே, பழையது சாப்பிடலே.”

“போடா, நீ சுத்த 'லூஸ்' பையனாயிருக்கியே. உங்க அக்காவுக்குத்தான் இன்னிக்குக் கலியாணமாச்சே! அவ எப்படி உனக்குப் பல் வெளக்கிவிட வருவா?” என்று கொஞ்சம் திமிரோடேயே பதில் சொன்னான், கேட்ட பையன்.

"நீ போய்ச் சொல்லு! எல்லாம் வருவா. அக்காவுக்கு என்மேலே ரொம்பப் பிரியம்.”

அந்தப் பையன்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் அவனைக் கேலி செய்துவிட்டுப் போய் விட்டார்கள். வீடெல்லாம் கேட்கும்படி ஓவென்று கையையும் காலையும் உதறிக் கொண்டு அழுதான் கண்ணன். வீடே இரண்டு பட்டது அந்த அழுகையில்.

மணவறைக் கூடத்துக்கு நேர் மேலே மாடி ஜன்னல் பையன் அழுத குரல் கீழே அக்காவுக்குக் கேட்டது. மை தீட்டிய கண்களும், மாலையிட்ட கழுத்தும், புதுவளைகள் பொங்கும் கரங்களுமாக மணமேடையிலிருந்து எழுந்து விடுவிடுவென்று மாடிப்படி ஏறினாள் காந்திமதி.

“ஏ காந்தீ அவன் கத்தினாக் கத்தட்டும்; திருப்பூட்டு நேரம் போனால் வேளை தப்பிடும்.” என்று அவள் தந்தை நல்ல குற்றாலமும் பின் தொடர்ந்தார்.

"இதென்னடாது! பூனையை மடியிலே கட்டிக்கிட்டுச் சகுனம் பார்த்த கணக்கால்ல இருக்குது முரண்டுக்காரப் பையன்னா முன்னேற்பாடா எங்கேயாச்சும் பிரிச்சு வைக்கப்படாதோ?” என்று மணவறையில் மாப்பிள்ளைக்கு உறவினர் ஒருவர் முணுமுணுத்தார். "அதில்லை ஐயா!'ந'னாக்கு'னாவுக்குச் சம்சாரம் காலமான நாளிலேருந்து இந்தப் பொண்ணு காந்திதான் தம்பியைக் கவனிச்சு வளர்த்தது. இவ புருசன் வீடு போயிட்டால் அந்தக் குருட்டுப் பையனைக் கவனிக்க இங்கே யாரிருக்கா?” என்றார் ஒருவர். மாடியில் குருட்டுப் பையனைச் சமாதானப்படுத்தப் போன தந்தையையும் மணமகளையும் துரிதப்படுத்த அத்தான் பலவேசம் ஓடினார்.

பெண்ணும், பெண்ணைப் பெற்றவரும் மணவறைக்கு வந்தார்கள். பையனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பலவேசத்தின் கையிலே ஒப்படைக்கப்பட்டது. திருப்பூட்டு முடிகிற வரை பையனைப் பார்த்துக் கொண்டார் அவர்.

காந்திமதி மத்தியானம் ஒரு மணிக்கு மேல் மணவறைச் சடங்குகளெல்லாம் முடிந்துமாடிக்குப் போனாள்.கீழே முதல் பந்தி, இரண்டாம் பந்தி என்று சாப்பாட்டுக் கலகலப்பு ஆரம்பமாகி விட்டது.

“கண்ணா! நீ தங்கமான பையன். மத்தியானம் அப்படி அழலாமா? அக்காவுக்குக் கலியாணம்னா தம்பி சந்தோஷமா இருக்க வேண்டாமா?”

"அக்கா! உனக்குக் கலியாணம்னு எங்கிட்ட நீ சொல்லவேயில்லியே? இப்பிடி நீ என்னையை ஏமாத்தலாமா? கண்ணன் விசும்பினான்.

"உன்னை ஏமாத்துவேனாடா கண்ணு? எனக்குக் கலியாணம்னு நானே சொல்லிக்கலாமா?”

“ஏன் எங்கிட்டே சொன்னா என்னவாம்?”

“சொல்லாதது தப்புத்தாண்டா, மன்னிச்சிடு.”

"இனிமே நீ இந்த வீட்டிலே இருக்க மாட்டியா அக்கா?”

“ஏண்டா இப்படிக் கேட்கறே?”

“இல்லேக்கா, இங்கே யாரோ பேசிக்கிட்டாங்க நான் கேட்டேன்.”

காந்திமதிக்குக் கண்களில் ஈரம் கசிந்தது. புதுப் புடவையால் துடைத்துக் கொண்டாள். ஏதேதோ நினைவுக்கு வந்தது அவளுக்கு.தாயின் மறைவு, நினைவறியாப் பருவத்திலிருந்து அந்தக் குருட்டுத் தம்பியைத் தாங்கித் தாங்கிச் செல்லமாக வளர்த்த நாட்கள், வீட்டில் தங்கி வீட்டைக் கவனிக்க வசதியில்லாமல் ஊரூராக அலைய வேண்டிய தந்தையின் தொழில் எல்லாவற்றையும் நினைத்து பார்த்த் போது அவளுக்கு வேதனையாக இருந்தது.அன்று வரை கண்களில்லாத அந்தக் கண்ணனுக்கு அவளே கண்களாக இருந்து வளர்த்து விட்டாள். பல் தேய்த்து விட்டு வெந்நீர்ப் பழையது பிசைந்து போடுவதிலிருந்து, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது வரை எல்லாம் பொறுமையோடு பாசத்தோடு செய்து வளர்த்து விட்டாள். . ‘இனிமேல் யார் செய்வார்கள்? - நினைக்கவே இயலாத கேள்வியாக இருந்தது. இது.

"அக்கா! நானும் உன்னோடேயே வந்திடுவேன். இப்பல்லாம் அப்பா ரொம்பக் கோபிக்கிறாங்க.. காலைலே நீயுங் கேட்டுக்கிட்டிருந்தியே, ஏலே குருட்டு மூதி'ன்னாங்களே. சொல்லும்போதே பேச்சுத் தடைப்பட்டு விக்கிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான் கண்ணன்.

காந்திமதி கழுத்தில் பொன் வார்ந்து கயிறாய் வடிந்தது போல் நெளிந்த மங்கலச் சரட்டைத் தொட்டுப்பார்த்துக் கொண்டாள். மடியில் தலையைச் சாய்த்துக் கொண்டு 'உலகமே அக்காவின் மடி மேலிருக்கிறதென்ற' நம்பிக்கையுடன் அழும் குருட்டுத் தம்பியையும் பார்த்தாள்.இரத்தத்தோடு வந்த ஒரு உறவை இழந்து இன்னொரு உறவில் கலந்துவிட இருப்பதை நினைக்கும்போது துக்கமாக இருந்தது அவளுக்கு.

'வாழ்க்கைப்பட்ட இடத்துக்குத் தம்பியையும் கூட்டிக்கொண்டுபோய் வைத்துக் கொள்கிற அளவுக்கு மாமியாரும் நாத்திமார்களும் விடுவார்களா? அப்பாவாலும் இந்தக் குருட்டுப் பிள்ளையை வைத்துக் கட்டிக் காக்க முடியாது! நானும் கூட்டிக் கொண்டுபோக முடியாது.இவனுக்கு என்ன வழி?-காந்திமதிக்குப் புரியவில்லை ஒரு வழியும்.

"அக்கா! அப்பாஎன்னைக் கோபிக்காம வெச்சுக்கமாட்டாங்க.தனியா விட்டிட்டு ஊரூராப் போயிடுவாங்க பலவேசம் மாமாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கலை "பொறக்கும்போதே அவிச்சிட்டுப் பொறந்தியேடா, மூதேவின்னு அறைஞ்சிட்டாரு காலைலே. ராதாவரத்து அத்தையும் என்னை வச்சுக்கிட மாட்டாங்க. நீயும் கூட்டிட்டுப் போகாட்டி நான் எங்கே அக்கா போறது?.”

என்ன பதில் சொல்லித் தம்பியை ஆற்றுவதென்றே தெரியவில்லை அவளுக்கு பையன் அழுதான்.

“அழாதேடா கண்ணு; அப்பா உனக்கு ஏதாவது வழி செய்வார்” என்றாள் காந்திமதி. கோவில்பட்டிக்கும், தூத்துக்குடிக்கும் கூப்பிடு தூரமில்லையே? நினைத்தால் வண்டி கட்டிக் கொண்டு புறப்படச் சொல்லி வந்து தம்பியைப் பார்த்துவிட்டுப் போகமுடியாதே? கோவில்பட்டியில் தான் குடியிருக்க வேண்டுமென்ற அவசியம் இனிமேல் அப்பாவுக்கு ஏது? மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி என்று சரக்குக் கொள்முதலுக்கு ஊரூராய் அலைகிறவருக்கு இந்தக் குருட்டுப் பையனை எப்படி வைத்துக் கட்டிக் காக்கிறது என்று மலைப்பாகத்தான் இருக்கும்.

காந்திமதி சாயங்காலம் அப்பாவைக் கேட்டாள்.

“காந்தீ கலியாணம் கட்டிப் புருசன் வீட்டுக்குப் போறவ இனிமே அவனைப் பத்தி நெனைச்சுக்கிட்டிருந்தா முடியுமா? எனக்குத்தான் வீட்டுலே தங்கி வச்சுக் காப்பாத்த முடியுமா? பலவேசம் ஒரு வழி சொன்னான். அப்படிச் செஞ்சிடலாமின்னு இருக்கேன்.”

“என்ன வழியப்பா அது?

“பாளையங்கோட்டையிலே ஏதோ குருடர் பள்ளிக்கூடமின்னு இருக்குதாம்மா. பலவேசமும் கூட வரேன்னிருக்கான். அங்கே கொண்டு போய்ச் சேர்த்திட்டு வந்திடலாம்னு இருக்கேன். வேறே வழி இல்லே”

“விவரந் தெரியாத பிள்ளையாச்சே!. அங்கே சரியாக் கவனிப்பாங்களா?”

“உன் தம்பி ஒருத்தன் மட்டுந்தானா? எத்தனையோ குருட்டுப் பையங்க படிக்கிறாங்களாமே அங்கே?”

லியாணம் முடிந்த மூன்றாவது நாள் வீடே பிரயாணப் பரபரப்பில் மூழ்கியிருந்தது. காந்திமதியை அழைத்துக்கொண்டு அவள் புருஷன் வீட்டினர் புறப்படப் போகிறார்கள். அவள் புருஷன் வீட்டாருக்குத் தூத்துக்குடி கண்ணனை அழைத்துக்கொண்டு பலவேசத்தோடு பாளையங்கோட்டைக்குப் புறப்பட இருந்தார் நல்ல குற்றாலம். அப்பா அவனைப் பாளையங்கோட்டைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் போவது பற்றி அவனிடமே விவரமாக எல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்தி வைத்திருந்தாள் காந்திமதி.

காந்திமதி அன்றைக்கு அதிகாலையில் எழுந்து குருட்டுத் தம்பியைக் கிணற்றடிக்குக் கூட்டிக்கொண்டு போனாள். பல் விளக்கி நன்றாகக் குளிப்பாட்டி விட்டாள். பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஆசையோடு வெந்நீர்ப் பழையது பிசைந்து போட்டாள்.

“கண்ணா! இன்னிக்கி நாமெல்லாம் ரயில்லே ஏறி ஊருக்குப் போறோம். நான் எங்க வீட்டுக்காரரோடு தூத்துக்குடி போறேன். நீ அப்பாவோட பாளையங்கோட்டை போறே. சமர்த்தா இருக்கணும்; அழப்படாது. எங்கேயோ இருந்தாலும் அக்கா உன்னையே நினைச்சுக்கிட்டிருப்பேன். இந்தா, இதை உனக்கே உனக்கு வச்சுக்க." என்று முழு ஒரு ரூபாயை.அவன் கையில் வைத்து அழுத்தி விட்டுச் சட்டைப் பையில் போட்டாள். எதையோ உணர்ந்து, எதையோ இழந்து, எதற்கோ ஏங்கி நின்றான் பையன். சிறு குழந்தை போல் அவனை வாரித் தழுவிக் கொண்டாள் காந்திமதி. அந்த அணைப்பு ஆறுதலாக இருந்தது சிறுவனுக்கு. அவன் அறிந்த தாய்மை அரவணைப்பு அது ஒன்றுதான்.

"அக்கா, இனிமே நீ வரவே மாட்டியா?”

“வராமே என்னடா? நானும் எங்க வீட்டுக்காரரும் ஆடிக்கு வருவோம். அப்பாகிட்டச் சொல்லி அப்ப உன்னையும் பள்ளிக்கூடத்திலேருந்து ஊருக்குக் கூட்டியாற ஏற்பாடு செய்கிறேன்.”

“நெசம்மாச் செய்வியா அக்கா?”

"கட்டாயம் செய்வேண்டா கண்ணா!

பையன் நிம்மதியடைந்தது போல் தன் கண்களால் காணாத அந்த அக்காவுக்கு முன் தலையை ஆட்டினான். எல்லோரும் ஒரே வண்டியில் போவதென்றும் மணியாச்சியில் போய் வண்டி மாறிக்கொள்வதென்றும் ஏற்பாடாயிற்று.

யில் ஜன்னலோரமாகத் தம்பியைப் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டு அமர்ந்தாள் காந்திமதி. அவளுக்கு மறுபக்கம் அவளைக் கைப்பிடித்த கணவன் உட்காந்திருந்தன். மாப்பிள்ளை வீட்டு மற்ற ஆட்கள், பலவேசம், நல்ல குற்றாலம் எல்லோரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்தார்கள்.

முதல் முதலாக இரயிலேறி உட்கார்ந்த குதுகலத்தில் இருந்தான் கண்ணன்.

“இந்த இரயிலுங்கற வண்டி எப்படியக்கா இருக்கு? என்னாலேதான் பார்க்க முடியல்லையே! நீ சொல்லேன்.”

காந்தி தன்னால் முடிந்த மட்டும் சொன்னாள். இரயில் புறப்பட்டது. ஒவ்வொரு ஸ்டேஷன் பேராக்க் கேட்டுக் கொண்டு வந்தான் கண்ணன். குருமலை ஸ்டேஷனில் வெள்ளரிப் பிஞ்சு கூடை கூடையாக வந்தது. தம்பிக்கு வாங்கிக் கொடுத்தாள் காந்தி, கடம்பூர் வந்தது. 'போளி போளி' என்று ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒலித்த குரல் கண்ணன் காதில் 'கோழி' என்று விழுந்தது போலிருந்தது.

"கோழியைக் கூட ரயில் டேசன்லே விக்கிறாங்களா அக்கா?”

"கோழியில்லேடா போளின்னு ஒரு பணியாரம்” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே, போளிக்காரரைக் கூப்பிட்டு இரண்டு போளி வாங்கித் தம்பியிடம் கொடுத்தாள் காந்திமதி. ரயில் கடம்பூரை விட்டு நகர்ந்தது. மணியாச்சி நெருங்க நெருங்க அவள் மனம் துக்கமாக எதையோ உணர்ந்தது. மாப்பிள்ளை வீட்டார் தங்கள் மூட்டை முடிச்சுக்களைத் தனியே பிரித்து இறக்குவதற்குத் தயாராக வைத்துக் கொண்டனர்.

‘போய்ச் சொகமாகச் சேர்ந்ததுக்குக் கடிதாசு போடுங்க. இனிமே அவ உங்க வீட்டுப் பொண்ணு மாதிரி, பார்த்துப் பரிமளிச்சு வச்சுக்கணும். நான் வியாபாரக்கார மனுஷன் அடிக்கடிவரப்போக வாய்க்காது.” என்று விடைபெறுகிற சம்பிரதாயத்தை ஆரம்பித்தார் நல்ல குற்றாலம்.

"அம்மா, காந்தீ! நீ விவரம் தெரிஞ்ச பொண்ணு; தம்பியை நல்லாப் பாத்துக்குவோம். புகுந்த வீட்டுக்கு நல்லபடியா நடந்துக்க. நீ ஆடிக்கு வரப்போ தம்பியைப் பார்க்கலாம்” என்றார் பலவேசம்.

"அக்கா தூத்துக்குடி வந்திரிச்சா” - காதில் விழுந்த பேச்சுக்களிலிருந்து ஏதோ அநுமானம் செய்துகொண்டு தானாகக் கேட்டான் தம்பி கண்ணன்.

"இல்லே! தூத்துக்குடி இந்த லயனிலே வராது. மணியாச்சி வருது. அங்கே இறங்கி வேறே ரயில் மாறித் தூத்துக்குடிக்குப் போகணும்.”

"ஏன் மாறணும்? இந்த ரயில்லியே போனாத் தூத்துக்குடி போகாதா?”

“போகாது மணியாச்சியிலே தூத்துக்குடிக்கு வழி பிரிகிறது.”

"பாளையங்கோட்டைக்கு”

"அதுக்கு வேறே லயன், இதுக்கு வேறே லயன். இந்த வண்டி நேரே திருநெல்வேலி போகும்.நீ இதுலேயே போய்ப் பாளையங்கோட்டை போவலாம். நாங்க மட்டும் தான் இங்கே இறங்கி ரயில் மாறணும்.”

வண்டி மணியாச்சி ஜங்ஷனின் கலகலப்பில் கலந்து நின்றது. பார்சலுக்காக ஒலைப் பாயில் கட்டிக் கிடந்த மீன் பொதிகளின் நாற்றம் மூக்கைத் துளைத்தது. கூட்டம், பரபரப்பு, வரவேற்கும் குரல்கள், விடைகொடுக்கும் குரல்கள், அண்ணாச்சி சொகந்தானா?” என்றது போன்ற விசாரணைகள், ரயில் என்ஜின் கூவல்கள் எல்லாவற்றையும் கண்ணன் கேட்டான். உணர்ந்தான். காண முடியவில்லை.

மாப்பிள்ளை வீட்டார் மூட்டை முடிச்சுக்களை இறக்கிக் கொண்டு ஒவ்வொருவராக இறங்கினர். மரியாதைக்காகப் பலவேசமும், நல்ல குற்றாலமும் கூட இறங்கிப் பிளாட்பாரத்தில் நின்றார்கள்.

கண்களில் நீர் மல்கக் கண்ணனை ஏறிட்டு நோக்கினாள் காந்தி. அவள் இன்னும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. உதட்டோரம் வெள்ளரி விதையும் போளியும் பொறுக்குலர்ந்து, சாப்பிட்ட அடையாளம் தெரிய உலகத்திலுள்ள பேதைமை எல்லாம் முகம் காட்ட இரயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தான் அந்தக் குருட்டுத் தம்பி.

'அக்கா இதான் மணியாச்சியா? இங்கேதான் நம்ம வழி பிரியுதா?”

காந்தியின் கண்களிலிருந்து நீர் முத்துக்கள் உதிர்ந்தன.

“ஆமாடா கண்ணு! இங்கே நம்ம வழி பிரியுது! நா வரேன்; அக்காவை மறந்திடாதே. எப்பவும் உன்னையே நினைச்சிக்கிட்டிருப்பேன்.”. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் அவள்.

“நீ அழுவுறியா அக்கா?.”

“இல்லே! வரேண்டா கண்ணு.

காந்தி இறங்கிக் கணவனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள். கார்டு விசில் ஊதினார். மணி அடித்தது. பலவேசமும், நல்ல குற்றாலமும் வண்டிக்குள் ஏறிவிட்டார்கள். இரயில் நகர்ந்தது. தூத்துக்குடிக்கு வழி பிரிஞ்சிருக்கும்” என்று பையன் தனக்குள் மெல்லச்சொல்லிக் கொண்டான்.ஆம்! மணியாச்சியிலிருந்து தானே தூத்துக்குடிக்கு வழிகள் பிரிகின்றன!