நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/புதிய ஆயுதம்

52. புதிய ஆயுதம்

கையில் கடிகாரத்தையும், மடியில் பணத்தையும், மனத்தில் பேராசையையும் கட்டிக் கொண்டு நவநாகரிக ஆடவரும் பெண்டிரும் அந்த அகலமான வீதியில் கூட்டமாக நடமாடிக் கொண்டிருந்தனர். -

கண்ணைப் பறிக்கும் விதவிதமான மின்சார விளக்குகள், கருத்தைக் கவரும் கல்லூரிக் குமரிகளின் கூட்டம், பொருளையும் தர்மத்தையும் சேர்ந்தாற் போல் விற்றுக் காசைச் சேர்க்கும் கடைகள், டிராம், பஸ், ரிக்ஷா, ஜட்கா, டாக்ஸி - பட்டணத்து வீதிக்கு வேண்டிய எல்லாத் தகுதிகளும் அந்தத் தெருவுக்கு இருந்தன.

‘இந்த மனிதப் பயல்களுக்கு வெளிச்சம் போடுகிறவன் நான்’ என்று நிமிர்ந்து நின்று சொல்வது போல் வரிசை வரிசையாக மின்சாரக் கம்பங்கள். டெலிபோன் தூண்கள், உயரமான கட்டிடங்களின் உச்சந்தலையில் ஏறி மிதித்துக் கொண்டு நிற்கும் ரேடியோ ‘ஏரியல்’ கம்பங்கள்.

வீடுகளில்தான் எத்தனை வகை? இரண்டு மாடி, மூன்று மாடி, நான்கு மாடி - இன்னும் பல மாடிகள். எல்லாம் பிரமாதம்தான்! பட்டணமில்லையா; பிரமாதமில்லாத எதுவும்தான் பட்டணத்தில் இருக்க முடியாதே.

அதோ! அந்த ஆடம்பரமான வீதியில் கிழக்குக் கோடியிலிருந்து வரிசையாக ஏழு வீடுகள் இருக்கின்றனவே. அவற்றில் ஏழாவது வீட்டைத் தவிர மற்ற ஆறும் செல்வச் செழிப்பின் பிரதிபிம்பங்களாக நிற்கின்றன. ஏழாவது வீடு மட்டும்… பாவம்…! பெட்டி போல் ஒரு சிறிய ஓட்டடுக்கு வீடு அது! ஓடு சரிந்து விழுந்து விடுமோ என அஞ்சத்தக்கதாக இருந்தாலும், அஞ்சாமல் குடியிருப்பவனுடைய மனவலிமைக்குப் பயந்தோ என்னவோ வீடு விழாமல் நின்று கொண்டிருந்தது.

முதல் ஆறு வீடுகளில் யார் யார் குடியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா நீங்கள்? வரிசையாகச் சொல்கிறேன், கேளுங்கள்:

முதல் வீட்டில் ஒரு பிரபல சினிமா நடிகர் இருக்கிறார். வாசலில் நாலைந்து புத்தம் புதிய கார்களும், விடலைப் பிள்ளைகளும், பள்ளிச் சிறுவர்களும் கூடி நிற்பதிலிருந்தே இதை நீங்களே தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே? ஆமாம்! இப்போதே சொல்லி விடுகிறேன். நல்லதோ, கெட்டதோ, எதையும் பிறர் கூறாமலே அனுமானித்துத் தெரிந்து கொள்ளுகிற ஞானம் பட்டணத்துக்கு மிகவும் அவசியமான தேவை.

அந்த நடிகர் ஏராளமான படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். பழைய காலச் சரித்திரத்தில் இத்தனை போர்களில் காயம் பெற்றவர் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிற மாதிரி இப்போது இத்தனை வருட அனுபவம் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்.

இருபத்தைந்து வருடமானால் வெள்ளிவிழா. நூறு வருடமானால் நூற்றாண்டு விழாவாம். ஐந்து, பத்து, பதினைந்து, போன்ற குறைவான வருடங்களுக்கு என்ன விழா கொண்டாடுவதென்று எனது ஏழை நண்பர்கள் கேட்கலாம். முறையே இரும்பு விழா, பித்தளை விழா, செம்பு விழா என்று வைத்துக் கொண்டால் போகிறது. இந்தக் கணக்குப்படி செம்பு விழா எடுக்க வேண்டிய அவ்வளவு அனுபவமுள்ள நடிகர் அவர். நாலு கார், பதினாறு வீடு, நிறையக் கையிருப்பு - இவ்வளவுமுள்ள செழிப்பான கலைஞர்.

இரண்டாவது வீட்டில் ஒரு பெரிய டாக்டர் வசித்து வருகிறார். வைத்திய சம்பந்தமாக உலகத்திலுள்ள எந்தெந்த சர்வகலாசாலைகளில் என்னென்ன பட்டங்கள் உண்டோ அவ்வளவும் வாங்கினவர். அவர் கைப்பட்டாலே நோய் பறந்துவிடும் என்கிற அளவுக்குத் திறமைசாலி.

நோயாளிகளைப் பார்த்து இன்ன நோய் என்று சொல்வதற்கே நிறையப் பணம் வாங்கிவிடுவார். டாக்டர்களுக்கும், வக்கீல்களுக்கும் இலவசத் தொண்டு செய்தால் புகழ் எங்கே வருகிறது? எவ்வளவு அதிகமாகப் 'பீஸ்' வாங்குகிறார் என்பதைக் கொண்டுதானே பெரிய டாக்டர், பெரிய வக்கீல் எல்லாம் உருவாக்கப்படுகிறார்கள்?

அந்த வகையில் இரண்டாவது வீட்டு டாக்டர் இணையற்றுத் திகழ்ந்தார். ஒரு தடவை கழுத்தில் "ஸ்டெதஸ்கோப்பை' மாட்டிக் கழற்றினால் கோட்டுப் பைக்குள் நூறு ரூபாய் சேர்ந்துவிடும். டாக்டரிடம் ஒரு பெரிய காரும், இரண்டு சிறிய கார்களும் இருந்தன. பெரிய கார் அவருக்கு சிறிய கார்களில் ஒன்று அவர் மகள் மெடிகல் காலேஜுக்குப் போகவர உபயோகப்பட்டது. மற்றொன்று திருமதி டாக்டர் லேடீஸ் கிளப்புக்கும் கடை, கண்ணி, கோயிலுக்கும் போகப் பயன்பட்டது. பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களைச் சொன்னாலே நகரிலுள்ள அத்தனை பேருக்கும் தெரிந்துவிடக்கூடிய டாக்டராக இருந்தார் அவர்.

மூன்றாவது வீடு யாருடையதென்று அதன் முன்புறமுள்ள பெயர்ப்பலகையைப் பார்த்தவுடனே உங்களுக்குத் தெரிந்துவிடும். பார்-அட்லா பெற்ற ஒரு வக்கீலுடைய வீடு அது. டாக்டருக்கு வீட்டைத் தவிர ஆஸ்பத்திரி என்று தனியாக வேறொரு கட்டிடம் இருந்ததனால் வீட்டில் போர்ட்டு மாட்டவில்லை.

வக்கீலுக்கு அப்படிக் கிடையாது. வருகிறவன் வீட்டைத் தேடித்தானே வர வேண்டும்? அதனால் பெரியதாகப் பெயர்ப்பலகை எழுதித் தொங்கவிட்டிருந்தார்.

வக்கீல் தொழிலே பலகையால் விளங்க வேண்டிய ஒன்று. அதாவது பல பேருடைய கைகளால் என்று சிலேடைப் பொருளாக வைத்துக் கொண்டாலும் சரிதான். டாக்டரைப் போலவே இவரும் பெரிய வக்கீல். இவருடைய வீட்டிலுள்ள அவ்வளவு சட்டப் புத்தங்களையும் வாரிக் கொண்டு போய்க் கொட்டினால் மெரினாவுக்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவு கடலைத் தூர்த்துத் தரையாக்கிவிடலாம்.அத்தனை பெரிய வக்கீல். கொலை செய்தவன் நிரபராதியாகவும், நிரபராதியைக் கொலை செய்தவனாகவும் மாற்றிக் கேசை ஜெயிக்க வைப்பதில் நிபுணர்.

நான்காவது வீடு ஒரு வியாபாரியுடையது. ஒரு மில்லுக்கும், இரண்டு பாங்குகளுக்கும், ஆறு கம்பெனிகளுக்கும் டைரக்டரான அந்த வியாபாரி வருடந்தோறும் இலட்சக்கணக்கில் வருமானவரி கட்டுகிறார். ஊரிலுள்ள எல்லா இலக்கியச் சங்கங்களுக்கும், மன்றங்களுக்கும், கழகங்களுக்கும், தாராளமாக நிதியுதவி செய்து கெளரவப் பாதுகாவலராய் விளங்குகிறார். ஏதாவது ஒரு மகாநாடு நடத்தச் செலவுக்குப் பணமில்லையென்றால் அவரையே தலைவராகப் போட்டு அவரிடமே மகாநாட்டுச் செலவை நிதியாக வாங்கிவிடும் தந்திரம் சில மகாநாடுகளை நடத்துகிறவர்களுக்குத் தெரிந்திருந்தது.

அந்த வியாபாரியைச் சுற்றி எப்போதும் சமயம், மதம், புலமை சம்பந்தமான ஆட்கள் கூடியிருப்பார்கள். சமயத் தலைவர்களுக்குப் பாதகாணிக்கைகளும், பொன்னாடையும், சன்மானமுமாக வியாபாரி செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தார். எதிலும் குறைவில்லாத போகத்தை அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர் அவர் எதெதிலோ தஷிணப் பிரதேசம் வேண்டுமென்று தெரியாதவர்கள் சொல்லிக்கொண்டு கிடக்கிறார்கள். அந்த வியாபாரியினுடைய அந்தப்புரத்தில் இருக்கிறது.ஐயா தஷிணப் பிரதேசம்! புரியவில்லையா? ஒரு தெலுங்குப்பாட்டுக்காரி, ஒரு மலையாளத்து நாட்டியக்காரி, ஒரு கன்னட நடிகை இத்தனை பேரும் அவர் வீட்டில் இருந்தார்கள். 'வீட்டில் இருந்தார்கள்' என்று மொட்டையாகச் சொன்னால் என்ன அர்த்தம்? அர்த்தமாவது மண்ணாங்கட்டியாவது? அர்த்தம் சொல்லியா இதெல்லாம் புரிய வேண்டும்? அடுத்த வீட்டைப் பார்க்கலாம்.

ஐந்தாவது வீடு ஒரு காலேஜ் புரொபஸருடையது. உயரமான தோற்றமும், மூக்குக் கண்ணாடி அணிந்து அறிவொளி திகழும் முகமுமாக இவர் நடப்பதே கல்வியின் பெருமிதத்தைக் காட்டும். டக் டக் என்று பூட்ஸ் கால்கள் ஒலிக்க நடந்து மோட்டார் சைக்கிளில் ஏறி இவர் காலேஜுக்குக் கிளம்பும் அழகே அழகு. நடிகரையும், டாக்டரையும், வக்கீலையும், வியாபாரியையும் போல இவர் கொழுப்பு நிறைந்த வாழ்க்கை வாழ முடியாவிட்டாலும், போதுமான வசதிகளுடன் சுகமான வாழ்க்கை வாழ்ந்தார். சுயநலமும், உலகத்தில் சராசரி மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாத திமிரும் இவரிடம் நிறைய இருந்தன.

மணிபர்ஸில் பணமிருந்து மண்டையில் மூளையில்லாத ஆட்களைப் பிடித்துச் சங்கங்களை ஆரம்பிக்கச்செய்து பொன்னாடையும், பூமாலையும் போட்டுக் கொண்டு மேடைக்கு மேடைபழம் பெருமை பேசி இன்று உள்ள ஏழைகளின் தொல்லைகளைப் பற்றியே நினைவின்றிக் கோவில் காளைபோல் சுற்றி வந்தார் இவர் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும் எல்லாக் கூட்டங்களிலும் போய்ப் பேசினார். அதிகம் 'பவர்’ உள்ள லென்ஸோடு கூடிய இவரது மூக்குக் கண்ணாடியின் ஆராய்ச்சிப் பார்வையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எல்லாம் பளிங்கு போல் தெரிந்தன.

ஆனால் கண்முன் பசியால் செத்துக் கொண்டிருப்பவனும், குழந்தையை விலைக்கு விற்றுக் கொண்டிருக்கும் தாயும், வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் வாலிபனும், பசிக் கொடுமையால் காசு கொடுத்தவர்களுக்கெல்லாம் மனைவியாக மாறும் பெண்ணும் தெரியவேயில்லை. இவர் நன்றாக உண்டு, நன்றாக உடுத்தி, கல்லூரியில் எதிர்கால மனிதர்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

ஆறாவது வீடு அரசாங்கத்தில் பெரும் பதவி வகிக்கும் ஒரு 'கெஸ்ட்டெட்' ஆபீசருடையது. இவர் ஆங்கிலம் மளமளவென்று பேசுவார். பேச்சில் எப்போதும் அதிகார மிடுக்கு இருக்கும். வீட்டு வாசலில் பித்தளை பில்லையை மார்பில் தாங்கிய டவாலி சேவகனும், அல்சேஷியன் நாய்க்குட்டியும் நிற்பார்கள். நாய்க்கும், டவாலிக்கும் ஒரு வித்தியாசம். நாய் சமயா சமயங்களில் வீட்டு எஜமானியம்மாளின் மடியில் ஏறி உட்கார்ந்து கிளாஸ்கோ பிஸ்கோத்தைச் சாப்பிட்டுக் கொண்டே காரில் சவாரி போகும். 'டவாலி'யால் அது முடியாது.

சிவப்பு நாடாவினால் இறுக்கிக் கட்டிய பைல்களின் ஆதிக்கம் இவர் கையில்தான். வெறும் காகிதங்களோடு பழகிப் பழகி இவருடைய மனம் மரத்துப் போய்விட்டது. இவர் ஆபீசுக்குப் போகும்போது பெரிய பைகள் தைத்த கோட்டை போட்டுக்கொண்டு போவார். திரும்பிவரும்போது இரண்டு பையும் நிறைந்து கலகலக்கும். புரிகிறதா? மேலதிகாரிகளை - மந்திரிகளை சட்டசபை உறுப்பினர்களை குளிப்பாட்டிக் குல்லாப் போடுவதில் மனிதர் மகா நிபுணர். இவருடைய மனைவி எல்லாப் பொது விழாவிலும் பரிசு வழங்குவதற்குப் போவாள். இவரும் சில கூட்டங்கள், திறப்பு விழாக்களுக்குத் தலைமை வகிக்கப் போவார். டென்னிஸ்கிளப், சங்கீத சமாஜம் எல்லாவற்றிலும் இவருக்கு ஒர் முக்கிய அங்கம் உண்டு.

ஏழாவது வீடு - அந்தத் தெருவிற்கே திருஷ்டிப் பரிகாரம் போலிருந்தது. வாயிற்புறத்து இருண்ட அறையிலிருந்து யாரோ காசநோக்காட்டுக்காரன் போல லொக்கு லொக்கென்று இருமிக் கொண்டிருந்தான். இதற்கு மேல் இப்போதைக்கு அந்த வீட்டைப் பற்றி வேறொன்றும் சொல்வதற்கில்லை. பாவம்! அந்த வீட்டிலிருப்பவன் அப்பாவிப் பயல் போனால் போகிறதென்று விட்டுவிடுவோம்.

கண்ணுக்கு எட்டாத இடத்தில் பரமண்டலங்களின் மேலான மண்டலத்திலிருந்து கொண்டு உலகைப் படைத்த கடவுள் ஒருநாள் தமது அந்தரங்கக் காரியதரிசியைக் கூப்பிட்டு,

"அப்பனே! பூவுலகத்திலுள்ள நகரங்களில் இப்போது வாழ்க்கை நிலை எப்படி இருக்கின்றது? யார் யார் பணக்கஷ்டமில்லாமல் வசதியாக வாழ்கிறார்கள்? உலகில் ஒழுக்கமும், அறமும் நலிந்து மக்களுக்குச் சத்தியத்தில் நம்பிக்கை குன்றி வருவதாக நான் அறிகிறேன். உலகத்தைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு புதிய ஆயுதம் தேவை! அதை எங்கேயிருந்து, யாருடைய கையிலிருந்து நாம் தயாரிக்கலாம்?” - என்று பரபரப்போடு கேட்டார்.

‘சுவாமி! இப்போது கிராமங்களெல்லாம் இடிந்த நலிந்து இருண்டு போய்விட்டன. நகர வாழ்க்கைதான் ஒளிபெற்று ஓங்கியிருக்கிறது. முற்காலத்தில் கோவில் வாசலில் நின்ற கூட்டத்தைப்போல் நான்கு மடங்கு கூட்டம் இப்போது சினிமாக்கொட்டகைகளின் வாசலில் நிற்கிறது. கவிகள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், விவசாயிகள், நெசவாளிகள் எல்லோரும் பட்டினி கிடந்து திண்டாடுகிறார்கள். விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலர்தான் வசதியாக வாழ்கிறார்கள்.

"மொத்தத்தில் சூழ்நிலை திருப்திகரமாக இல்லை; அப்படித்தானே?”

“திருப்திகரமாக இல்லாததோடு பணவளம் சில இடங்களிலேயே தொடர்ந்து தேங்கிப் போய் அழுகி நாற்றமெடுக்க ஆரம்பித்துவிட்டது. போட்டி, பொறாமை, வஞ்சகம், ஏமாற்று, சுயநலம், புகழ்வேட்டை, பதவிப்பித்து, எல்லாம் எல்லாருக்கும், எல்லா ஊர்களுக்குள்ளும் அதிகரித்துவிட்டன. உலகம் இதே நிலையில் போய்க் கொண்டிருந்தால் பட்டப் பகலில் நட்ட நடுத்தெருவில் காட்டு மிருகங்களைப்போல ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்துத் தின்ன ஆரம்பித்துவிடுவான். ஒரு புதிய ஆயுதம் - உலகத்தைச் சீர்திருத்தும் ஆயுதம் வேண்டியதுதான்.

“புதிய ஆயுதம் வேண்டுமென்பதைத்தான் நானும் சொல்கிறேன். அதை எங்கே கண்டுபிடிப்பது?”

"தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், தன் வீட்டில் இல்லையே என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், உலகத்திலுள்ள ஏழைகளுக்காக நினைத்துப் பேசி, உழைக்க ஒரு மனமும், வாயும், இரண்டு கைகளும் தேவை! அந்தக் கைகள்தாம் உலகத்தைச் சீர்திருத்தும் புதிய ஆயுதம்”.

“நல்லது! ஆனால் அந்தக் கைகளை நான் எங்கே போய்த் தேடுவேன்?”

கடவுளிடமிருந்து இந்தக் கேள்வி பிறந்தவுடனே அவருடைய அந்தரங்கக் காரியதரிசி பூவுலகத்தில் பட்டணத்தில் நாகரிகம் சுழித்தோடும் அந்த அகலமான வீதியிலிருந்த முதல் ஏழு வீடுகளையும் தப்பு! தப்பு! ஆறு வீடுகளையும் ஏழாவது குடிசையையும் சுட்டிக் காட்டினார்.

"அங்கே என்ன இருக்கிறது? கடவுள் ஏமாற்றத்தோடு கேட்டார்.

"இன்றைய சமுதாய அமைப்பின் தவிர்க்க முடியாத ஏழு உறுப்பினர்கள் அந்த ஏழு வீடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் ஏழு பேரில் யாராவது ஒருவரிடம் உங்களுக்குத் தேவையான சமதர்ம உலகைப் படைக்கும் புதிய ஆயுதம் கிடைத்தாலும் கிடைக்கலாம். போய்த் தேடிப் பாருங்கள்.”

"ஐயோ! என்னைப் பட்டணத்துக்கா போகச் சொல்கிறாய்?" என்று பயந்து நடுங்கிக்கொண்டே கேட்டார் கடவுள்.

"ஏன் பயப்படுகிறீர்கள்? பட்டணத்திலும் நீங்கள் படைத்த மனிதர்கள்தானே வாழ்கிறார்கள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி,

கடவுள் வேறொருவர் காணாமல் உலகத்து உலாவும் மாய வடிவோடு புதிய உலகைப் படைக்கும் புதிய ஆயுதத்தைத் தேடிக் கொண்டு பட்டணத்துக்குப் புறப்பட்டார். உயரமான ஆறு மாடி வீடுகளும் ஒரு குச்சு வீடும் இருந்த அந்த வீதிக்குள் ஆவலோடு நுழைந்தார்.

நடிகர் வீட்டுக்குள் அவர் நுழைந்தபோது, “கடவுளாம், கடவுள் சுத்த மூடநம்பிக்கை” என்று ஏதோ ஒரு சினிமா படத்திற்கான வசனத்தை நெட்டுருச்செய்து கொண்டிருந்தார். கடவுள் பயந்து போய் இந்த இடத்தில் நமக்கு வேலை இல்லை என்று ஓடிவந்துவிட்டார்.நடிகருடைய வசனத்தைக் கேட்டு அவருக்கே பயம் உண்டாகிவிட்டது. அங்கே புதிய உலகைப் படைக்கும் ஆயுதம் கிடைக்காது என்று அவருக்குத் தோன்றிவிட்டது.

இரண்டாவதாக டாக்டரின் வீட்டுக்குப் போனார். டாக்டரின் கழுத்தில் தொங்கிய ஸ்டெதஸ்கோப்பைக் கண்டதும், "ஆ!, கண்டுபிடித்துவிட்டேன். புதிய உலகைப் படைக்கும் புதிய கருவி கிடைத்துவிட்டது” என்று வியப்போடு கூவினார் கடவுள்.

ஆனால் அந்தோ பரிதாபம்! அருகில் நெருங்கிப் பார்த்தபோது, உயிர் அல்லாத அந்த இரப்பர்க்குழாயில் பல உயிர்களின் மரணச்சுவடுகள் பதிந்து கிடந்தன."இதுவும் புதிய உலகைப் படைக்காது” என்று ஏமாற்றத்தோடு வெளியேறினார் கடவுள்.

மூன்றாவதாக வக்கீல் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த தடிமன் தடிமனான சட்டப்புத்தகங்களைப் பார்த்தபோது புதிய உலகத்தைப் படைக்கும் ஆயுதம் இந்தப் புத்தகங்களில் இருக்கலாம் என்று கடவுளுக்குத் தோன்றியது. ஒரு புத்தகத்தைப் பிரித்துப் படித்தார்."உயிர்களைக் கொலை செய்வது இத்தனாவது பிரிவின்படிகுற்றம்’' என்று எழுதியிருந்த பக்கத்துக்குள்ளேயே மூன்று பாச்சை, நாலு ஈ, ஒரு பல்லிக்குட்டி எல்லாம் நசுக்கப்பட்டுக் காகிதத்தில் ஒட்டிக் கொண்டிருந்தன. கடவுள் அந்தப் புத்தகத்தை வீசி எறிந்துவிட்டுக் கோபமாக வெளியேறினார்.

வியாபாரியின் வீட்டுக்குப் போனார். அவருடைய தராசு முள் நிரந்தரமாக ஒரே பக்கம் வளைந்து கிடந்தது.அவர் ஏழைகளின் இரத்தத்தைப் பன்னீராக மாற்றித் தனது காதலிமார்களுக்குப் பூசிக் கொண்டிருந்தார்.

அங்கேயும் கடவுளுக்குப் புதிய உலகம் படைக்கும் ஆயுதம் கிடைக்கவில்லை.

புரொபஸரின் மூக்குக் கண்ணாடியைப் பார்த்ததுமே கடவுளுக்கு நம்பிக்கை போய்விட்டது. "இவர் சொந்தக் கண்களால் உலகத்தைப் பார்க்கத் தெரியாதவர். புத்தகங்களைத் தெரிந்த அளவு யதார்த்த வாழ்க்கை தெரியாது. இவரிடமும் புதிய ஆயுதம் இல்லை” என்று வெளியேறினார் கடவுள்.

சர்க்கார் உத்தியோகஸ்தர் யாரோ பெரிய வியாபாரியை இரகசியமாக வரச் சொல்லி வாசல் கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்ததனால் கடவுள் அந்த வீட்டுக்குள்ளேயே போகாமல் வாசலிலேயே காறித் துப்பிவிட்டுத் திரும்பினார். புதிய உலகைப் படைக்கும் புதிய ஆயுதம் முதல் ஆறு வீடுகளிலும் கிடைக்கவேயில்லை. நடிகரின் கலையில், டாக்டரின் ஸ்டெதஸ்கோப்பில், வக்கீலின் சட்டப் புத்தகத்தில், வியாபாரியின் தராசில், புரொபஸரின் முக்குக் கண்ணாடியில், சர்க்கார் உத்தியோகஸ்தரின் பையில் எங்கும் அந்த ஆயுதம் கிடைக்கவே இல்லை. ஏமாற்றம் என்ற உணர்ச்சியை எந்தக் கடவுள் படைத்தாரோ அவருக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. கடைசியாக அந்தக் குச்சு வீட்டின் வாசலுக்குப் போனார். இருமல் சத்தம் காதைத் துளைத்தது. உள்ளே ஒரு மெலிந்த உருவம் குனிந்து உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். மறைந்து நின்று கவனித்தார். எழுதுகிறவனுக்கு முன்னால் அவரது மனைவி வந்து நின்று கூச்சல் போட்டாள்.

"பானையில் அரிசி இல்லை, டப்பாவில் காப்பிப் பொடி இல்லை, அஞ்சறைப் பெட்டியில் கடுகு இல்லை. மணி பர்ஸில் துட்டு இல்லை.”

“பேனாவில் மை இன்னும் கொஞ்சம் இருக்கிறது” என்று நறுக்கென அவளுக்குப் பதில் கூறிவிட்டு நிமிர்ந்து பாராமலே எழுதிக் கொண்டிருந்தான் அவன்.

“என்ன எழுதுகிறீர்களாம் அப்படி?”

“ஏழைகளின் துன்பத்தைப் பற்றிக் கவி எழுதுகிறேன்!”

மறைந்திருந்த கடவுள் சிறு குழந்தைபோல உணர்ச்சி வசப்பட்டுக் கை கொட்டினார்; சிரித்தார்; துள்ளிக்குதித்தார். “கண்டுபிடித்துவிட்டேன்! புதிய உலகைப் படைக்கும் புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்! அது இந்த நோஞ்சான் பயலுடைய கையில் அல்லவா இருக்கிறது!” - என்று வியப்பு மேலீட்டால் கூவிக் கொண்டே சிறிது சிறிதாகக் கரைந்து நீல நிற மையாக மாறி அந்த ஏழைக் கவிஞனுடைய பேனாவுக்குள் புகுந்து கொண்டார். கவி ஆவேசம் பிடித்தவனைப் போல் ஏழைகளின் துன்பத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருந்தான். அவன் மனைவி அடுப்படியில் பசியோடு சுருண்டு விழுந்து கிடந்தாள். புதிய உலகைப் படைக்கும் புதிய ஆயுதம் வெள்ளைக் காகிதத்தைக் கறுப்பாக்கிக் கொண்டிருந்தது.

(தாமரை, 1960)