நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வெறும் புகழ்

72. வெறும் புகழ்

சிரியர் குறிப்பு:”எழுத்தாளருக்குப்பணம் எதற்கு? புகழ் இருந்தால் போதாதா? அதைத்தான் நாம் வாங்கித் தருகிறோமே!” என்று சில புத்தகக் கம்பெனிக்காரர்கள் எண்ணுகிறார்கள்.

பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளை பொருளாதார எம்.ஏ. பட்டதாரியான படியாலும், ஏறக்குறையக் கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக அதைக் கல்லூரி வகுப்பறைகளில் கற்பித்துக் கற்பித்துத் தழும்பேறிப் போயிருந்ததாலும் ஏதோ ஒரு புத்தகக் கம்பெனிக்காரன் ‘நோட்ஸ்’ வெளியிடுவதற்காக அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தான். இதை இப்படிச் சொல்வதை விட வலை போட்டுத் தேடிப் பிடித்து விட்டான் என்று சொல்வது நன்றாகவும் பொருத்தமாகவும் இருக்குமென்றாலும், பேராசிரியருடைய கெளரவத்துக்கும், கால் நூற்றாண்டுக் கால ஸர்வீஸஸுக்கும் இழுக்காகுமே என்று கருதி அப்படிச் சொல்லக் கூடாதுதான். வாசகர்கள் மன்னிக்க வேண்டும்.

பேராசிரியரிடம் இரண்டு விதமான சாமர்த்தியங்கள் நிரந்தரமாக உண்டு. ஒன்று பொருளாதாரம், மற்றொன்று அப்பாவித்தனம். பொருளாதாரத்துக்காக ஏதோ ஒரு சர்வ கலா சாலை அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க முன் வரப் போவதாகக் கேள்வி. அப்பாவித் தனத்துக்காக டாக்டர் பட்டம் வழங்க உலகத்தில் எந்தச் சர்வ கலா சாலையும் தயாராக இருக்க முடியாதாகையினால், அந்தச் சாமர்த்தியத்துக்காக என்று எவரிடமிருந்தும் எந்தப் பாராட்டையும் திருவாளர் கள்ளப்பிரான் பிள்ளை எதிர்பார்க்கக் கூடாதுதான். அப்பாவியாக இருப்பது கூட ஒரு சாமர்த்தியமா? என்று நீங்கள் கேட்கலாம்.நிச்சயமாக அதுவும் ஒரு சாமர்த்தியந்தான். ஏனென்றால் எல்லோராலும் அப்பாவியாக இருக்க முடியாது என்பது உறுதியானது. மார்ச் - செப்டம்பர் பரீட்சைக்கு மாறி மாறிப் போகிற பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்குப் பொருளாதார நோட்ஸ் ஒன்று வெளியிட்டு கடைத் தேற்ற வேண்டுமென்று அந்தப் புத்தகக் கம்பெனிக்காரன் நினைத்ததற்குக் காரணம் பொருளாதார சாஸ்திரம் என்ற பண வித்தை - அல்லது காகிதத் தத்துவம் உலகத்தில் பரவ வேண்டும் என்பதற்காகவோ, திருவளார் கள்ளப்பிரான் பிள்ளையைப் பிராபல்யப்படுத்த வேண்டுமென்பதற்காகவோ அன்று,பொருளாதார சாஸ்திரத்தைப் படித்து விட்டுக் கள்ளப்பிரான் பிள்ளை அவர்களைப் போலப் பொருளாதாரப் பற்றாக்குறையால் மாதக் கடைசி வாரம் கஷ்டப்படுவதை விடப் பொருளாதார சாஸ்திரத்தை மலிந்த விலைக்கு அச்சுப் போட்டு விற்றுப் பயனடையலாம் என்றுதான் அந்தப் புத்தகக் கம்பெனிக்காரன் அவரிடம் வந்திருந்தான். பொருளாதாரத்தைக் கற்பதையும், கற்பிப்பதையும்விட அச்சிடுவதும் விற்பதும் லாபகரமான காரியம் என்பது அவனுக்குப் புரிந்தது. நாலைந்து பரீட்சையாகக் கள்ளப்பிரான் பிள்ளை கோடி காட்டுகிற பகுதியிலேயே கேள்விகள் வருவதாக நம்பியதனால் மாணவர்களிடையே அவருக்கும் தெரியாமலே அவர் மேல் ஒரு ‘ஸ்டார் வேல்யூ’ ஏற்பட்டுத் தொலைந்திருந்தது. கள்ளப்பிரான் பிள்ளைக்கே தெரியாத இந்த இரகசியத்தை அந்தப் புத்தகக் கம்பெனிக்காரன் எப்படியோ தெரிந்து கொண்டிருந்தான். ஆக மொத்தம் இத்தனை காரணங்களாலும் அவன் வீடு தேடி வந்து கள்ளப்பிரான் பிள்ளையைச் சந்தித்த விவரம் பின் வருமாறு-

ஆகஸ்டு மாதம் முதல் வாரம் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை பத்து மணி சுமாருக்கு ‘டிப்டாப்’பாகக் காரில் வந்து இறங்கிவிட்டு வாயிலில் ஒவ்வொரு படியாக ஊன்றி ஏறிய விதத்திலேயே ‘நான் ஒரு கெளரவமான வியாபாரி’ என்பதை நிரூபிக்க முயல்வது போல் நடந்து வந்து கள்ளப்பிரான் பிள்ளையை வணங்கினான் அந்தக் கம்பெனிக்காரன். அவன் காரிலிருந்து இறங்கிய விதமும், படியேறிய தினுசும், சரிகை அங்கவஸ்திரத்தைச் சுழற்றிக் கையிலெடுத்து, ‘இது சரிகை அங்கவஸ்திரந்தான்’ என்பதை எதிராளிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறவனைப் போல் மறுபடி தோளில் போட்டுக் கொண்டு கைகூப்பிய பாணியும் எல்லாமாகச் சேர்ந்து கள்ளப்பிரான் பிள்ளையை அயர்ந்து போகச் செய்துவிட்டன. கள்ளப்பிரான் பிள்ளையும் அவனைப் பதிலுக்கு வணங்கினார்.

“பி.ஏ. எகனாமிக்ஸ் பாடத்துக்கு இதுவரை ஒரு நல்ல நோட்ஸ் யாருமே வெளியிடலை. பரீட்சைக்குப் போறவங்க ரொம்பச் சிரமப்படறாங்க. உங்களைப் போல தகுதியுள்ள பெரியவர்கள் மாணவருலகத்துக்கு ஏதாவது சேவை செய்யனும்” என்று அவன் பேச்சை ஆரம்பித்த விதமும் கெளரவமான முறையில்தான் இருந்தது; அதாவது திருவாளர் பிள்ளைக்குக் கொளரவமாக இருந்தது. உடனே பதில் சொல்ல முடியாதபடி திக்குமுக்காடிப் போகும் விஷயம் எதையாவது எதிராளியிடமிருந்து கேட்டுவிட்டால் கள்ளபிரான் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜை மேல் வைத்துவிட்டுக் காதோரமாகத் தலையைச் சொறிந்துவிட்டுச் சில விநாடிகள் இடைவெளி கொடுத்த பின்பே பதில் சொல்வது வழக்கம். அன்றும் அப்படியே நடந்தது.

“புத்தி என்பது தானே சுயமாக வளர வேனும், தூக்கமருந்து சாப்பிட்டுத் தூங்குகிற மாதிரி ‘நோட்ஸ்’ படித்தப் பரீட்சை பாஸ் பண்ணுவது கெடுதலான காரியமாயிற்றே!” என்று தம்மைத் தேடி வந்த காரணமே ஆட்டம் காணும்படி பதில் சொன்னார் கள்ளப்பிரான்பிள்ளை. வந்தவனும் விடவில்லை. இரண்டாவது தடவையாகச் சரிகை அங்கவஸ்திரத்தைச் சுழற்றித் தோளில் போட்டுக் கொண்டு இந்த மனிதரை எந்தக் கோடியில் எந்தப் பேச்சால் பலவீனப்படுத்தி விழச் செய்யலாம் என்று தேர்ந்த வியாபாரியின் சிறந்த புத்திசாலித்தனத்தோடு பேச்சைத் தீர்மானம் செய்ய முயன்றான். தீர்மானமும் செய்துவிட்டான். “உங்களைப் போன்றவர்களே இப்படிப் பற்றுதல் இல்லாமல் பேசிவிட்டால் அப்புறம் நாங்களெல்லாம் என்ன செய்வது? உங்களைப் போல் பொருளாதார சாஸ்திர வித்தகர்கள் இருப்பது தேசமே பெருமைப்படற விஷயம்.”

“ஐயையோ! அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. நான் ரொம்ப சாதாரணம் ஏதோ நாலு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறதிலே ஒரு சந்தோஷம்.”

“நீங்க சொல்லிவிட்டாப்பிலே ஆச்சுங்களா? நீங்களே சாதாரணம்னு சொன்னா அப்புறம் விசேஷமாச் சொல்றத்துக்கு இந்த நாட்டிலே ஒருத்தனுமே இல்லைன்னுதான் அர்த்தம்.”

“அதெல்லாம் இல்லை! ஏதோ உங்களுக்கு இருக்கிற அபிமானத்திலே என்னை ரொம்பப் புகழறீங்க.”

“இல்லவே இல்லை! நீங்க ‘நோட்ஸ்’ எழுதினால்தான் பிரயோஜனமாயிருக்குமுன்னு மாணவர்களே அபிப்ராயப்படறாங்க. இந்த ஊரிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்குமாகப் பதினாலு கலைக் கல்லூரிகள் வேறு. எல்லா இடத்திலேயும் ‘எகனாமிக்ஸ்’கு உடனே உங்க பேரைத்தான் சொல்றாங்க.”

“அப்படியா? ஆச்சரியமாயிருக்கே?”

“இதுலே ஆச்சரியத்துக்கு என்ன இருக்குதுங்க”

பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளை இரண்டாவது தடவையாக மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுக் காதோரமாகத் தலையைச் சொறிந்தார். சில விநாடிகளுக்குப் பின்பு பேராசிரியர் பேசத் தொடங்கிய பேச்சின் ஆரம்பம் வந்தவருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

“நோட்ஸ் போடறதாயிருந்தா எத்தனை ஆயிரம் பிரதிகள் அச்சிடலாம்னு நினைச்சிருக்கீங்க?”

“நீங்க எப்படிச் சொல்றீங்களோ, அப்படியே செய்யிறோம் ஸார்.”

“செய்யிறதைப் பற்றி ஒண்னும் இல்லே. ‘நோட்ஸ்’ படிச்சுப் பரீட்சை எழுதறதே கேவலம்னு நினைக்கிறவன் நான் என்னையே ‘நோட்ஸ்’ எழுதச் சொல்றீங்களேன்னு பார்த்தேன்.” என்று மறுபடியும் தலையைச் சொறிந்தார் பேராசிரியர். ‘இந்தக் கள்ளப்பிரான் பிள்ளை நிச்சயமாக ஓர் அப்பாவிதான்’ என்பதை இதற்குள் தீர்மானம் செய்து கொண்டு விட்டான் வந்தவன்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் வரை அப்படியும் இப்படியுமாகச் சுற்றி வளைத்துப் பேசிய பிறகு, வந்தவனுக்குத் தாம் விரும்புவதைத் தெரிவிக்கும் அறிகுறியாக வீட்டுக்குள்ளிருந்து ஒரு கப் காபியும் வரவழைத்து அவனுக்குக் கொடுத்துவிட்டார் கள்ளப்பிரான் பிள்ளை ஆள் தன் பக்கம் சாய்ந்துவிட்டார் என்பது அவனுக்குப் புரிந்தது.

வந்திருந்த புத்தகக் கம்பெனிக்காரன் புத்திசாலியாக இருந்தான். கள்ளப்பிரான் பிள்ளை அரைகுறை மனத்தோடு இருக்கிறார் என்பதையோ, அவர் இன்னும் ‘நான் உங்களுக்கு நோட்ஸ் எழுதிக் கொடுக்கிறேன்’ என்று அதிகார பூர்வமாகச் சம்மதிக்காததையோ புரிந்து கொள்ள மறுத்தவனாக, அவர் சம்மதித்து ஒப்புக் கொண்டு விட்டதாகவே வைத்துக்கொண்டு, தொடர்ந்து பேச்சுக்களை நடத்தினான், அந்தக் கம்பெனிக்காரன். அப்பாவிகளிடம் எப்படிப் பழகுவது என்பது அந்தப் புத்திசாலிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

“நோட்ஸுக்கு, கள்ளப்பிரான்ஸ் கைடு எகனாமிக்ஸ்னு பேர் வச்சிடலாம்னு பார்க்கிறேன். உங்களுக்கு ஒண்னும் ஆட்சேபணை இருக்காதே?”

“ஆட்சேபணை ஒண்னும் இல்லே. நம்ப பேரை நாமே டமாரம் தட்டிக்கிறது நல்லாயிருக்குமான்னு தயங்கறேன்” என்ற சொற்களை இழுத்துப் பேசித் தலையைச் சொறிந்தபோது, கள்ளப்பிரான் பிள்ளையின் முகத்தில் அசட்டுத்தனமான வெட்கம் தெரிந்தது. ஆள் தலைகுப்புறச் சரிந்து விழுந்து கொண்டிருக்கிறார் என்பதை வந்தவன் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டான்.

“கண்டிப்பா அந்தப் பேர்லேதான் ஸார் நோட்ஸ் வெளி வரணும். உங்க பேருக்கு ஒரு மெளவுஸ் உண்டு. நோட்ஸ் விற்பனையாகிறதுக்கு அந்தப் பேர் துணை புரியும்” என்று அவருடைள சபலமும் நைப்பாசையும் தெரிந்து பேசினான் வந்தவன். கள்ளப்பிரான் பிள்ளைக்கு மேலும் அசடு வழிந்தது.

“அப்படி செய்யிறதுதான் சரி என்று நீங்க அபிபராயப்படறதாயிருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை. இந்த விஷயத்துலே நான் உங்களுக்கு என்ன யோசனை சொல்றதுக்கு இருக்கு?”

“ரொம்ப நல்லதுங்க. ‘ஸ்கிரிப்ட்’ என்னிக்கித் தருவீங்க? எப்போது அச்சுக்குக் கொடுக்கலாம்? இந்த வருஷம் பரீட்சைக்குப் போற பிள்ளைகள் நிறையப் புண்ணியம் பண்ணியிருக்கணும். நீங்க நோட்ஸ் எழுதறேன்னு ஒப்புக் கொண்டது அவங்க அதிர்ஷ்டம்.”

“இதென்னது? நிறைய ஸ்தோத்ரம் பண்ணறீங்களே, எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. புகழ்ச்சிக்கு நான் கூசறவன்” என்று பேராசிரியர் சொல்லித் தலையைச் சொறிந்தபோது.சொற்கள்தாம் புகழ்ச்சியை வெறுப்பதாகப் பேசினவே தவிர, முகம் அதற்கு மலர்ந்திருந்தது. இப்போதும் அவருடைய முழு அப்பாவித்தனமும் ஒன்று சேர்ந்து முகத்தில் தெரிந்துவிட்டது.

இதற்கு அப்புறம் அடுத்த ஞாயிற்றுக்கிழமையை புத்தகக் கம்பெனிக்காரன் அவரிடம் வந்து ‘ஸ்கிரிப்ட்’ வாங்கிக் கொண்டுபோனதும், நோட்ஸ் அச்சிடத் தொடங்கியதும், அச்சிட்டு முடிந்தவுடன் அழகிய மூவர்ண அட்டையோடு ‘கள்ளபிரான்ஸ் கைட் டு எகனாமிக்ஸ்’ என்ற பெயரோடு அது வெளிவந்து விற்பனையானதும் மிக விரைவாக நடைபெற்ற காரியங்கள்.

உள்ளூர்க் கல்லூரி மாணவர்களும், வெளியூர்க் கல்லூரி மாணவர்களும், சகல விதத்திலும் தங்கள் புத்தியைக் ‘கள்ளப்பிரான் காட்டிய வழி’யில் செலுத்திப் பொருளாதாரத் தேர்வில் வெற்றி பெற முயன்று கொண்டிருந்தார்கள். பொருளாதாரப் பரீட்சையைப் பொறுத்த மட்டிலே கள்ளப்பிரானுடைய கருணையை எல்லாரும் வியந்தார்கள். ‘நோட்ஸ்’ முடிவில் ஐயாயிரம் பிரதிகள் விற்பனையாகிப் பிறகு போதாமற் போய் மீண்டும் ஐயாயிரம் அச்சிட்டு, அதுவும் பற்றாமல் மூன்றாவது முறையாக மேலும் ஐயாயிரம் அச்சிட்டு விற்பனையாகித் தீர்ந்து போய்விட்டது.

தாம் வாய் விட்டுக் கேட்காமல் கம்பெனிக்காரர்களாகவே ஏதேனும் பணம் கொண்டு வந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார் கள்ளப்பிரான்பிள்ளை. நோட்ஸைப் புகழ்ந்து கிடைத்துக் கொண்டிருந்த கடிதங்கள் மட்டும் நாள் தவறாமல் புத்தகக் கம்பெனியிலிருந்து ஒழுங்காக ரீ டைரெக்ட் ஆகி வந்து கொண்டிருந்தன. அந்தத் ‘தபால் புகழ்’ ஏற்படுத்தியிருந்த பொய்க் கெளரவத்தில், ‘பணத்தைப் பற்றிப் பேசுவதே அகெளரவம்’ என்று எண்ணிக் கள்ளப்பிரான் பிள்ளை கொஞ்ச நாட்களுக்குப் பேசாமல் கெளரவமாகக் கல்லூரிக்குப் போய் வந்து கொண்டிருந்தார். எங்கே பார்த்தாலும் பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளையைப் பற்றியே பேச்சாக இருக்கும் போது, பணத்தைப் பற்றி யாராவது கவலைப்படுவார்களா? பொருளாதாரப் பேராசிரியர் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பின் வேறு யார் கவலைப்படுவது என்று உங்களுக்குச் சந்தேகமாக இருக்கலாம். ஆனால் கள்ளப்பிரான் பிள்ளையின் தத்துவமே வேறு. அவர் எதைப் பற்றியுமே கவலைப்படுவதில்லை. அதை நினைத்துத் தான் அவர் குடும்பத்தார் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்களே, போதாதா அது?

“என்ன, நோட்ஸ் எழுதிக் கொடுத்தீர்களே! ஏதாவது பணத்துக்கு வழி உண்டோ, இல்லையோ?” என்று ஒரு நாள் சாயங்காலம் வீட்டுச் செலவுக்குக் கஷ்டமாக இருந்ததைப் பற்றிப் பிரஸ்தாபித்த சூட்டோடு விசாரித்தாள் பூரீமதி கள்ளப்பிரான் பிள்ளை. அப்போதுதான் முதல் தடவையாக, புத்தகக் கம்பெனிக்காரனிடம் பணம் கேட்டால் என்ன என்பதைப் பற்றி அவர் யோசிக்கத் தொடங்கினார். சட்டையை மாட்டிக் கொண்டு புத்தகக் கம்பெனிக்காரனைத் தேடிப் புறப்படுவதற்கு இறங்கினவர், நடந்துபோய் அந்தப் புத்தகக் கம்பெனிக்குள் நுழைவது கெளரவம் அல்ல என்று எண்ணியவராய்த் தெருவில் போய்க் கொண்டிருந்த சைக்கிள் ரிக்‌ஷா ஒன்றைக் கைதட்டிக் கூப்பிட்டார். அதில் ஏறிக் கொண்டு அவர் ‘நோட்ஸ்’ வெளியிட்டிருந்த புத்தகக் கம்பெனிக்குப் புறப்பட்டபோது மாலை ஆறு மணி இருக்கும். போய்க் கொண்டிருக்கும் போது எத்தனை எத்தனையோ இனிய கற்பனைகள்! ‘நோட்ஸ்’ வெளிவந்த பிறகு இப்போதுதான் முதல் முதலாக அந்தக் கடைக்குப் போகிறோம். கம்பெனிக்காரனுக்கு நம்மை அங்கே பார்த்ததும் தலைகால் புரியாது. ஓடியோடி விழுந்து விழுந்து உபசரிக்கப்போகிறான். கடையையும், அச்சிடும் இடத்தையும் சுற்றிக் காண்பித்து அங்கே வேலை செய்பவர்களை எல்லாம் கூப்பிட்டு அறிமுகப்படுத்தப்போகிறான். சும்மாவா பின்னே? கள்ளபிரான்ஸ் கைட் டு எகனாமிக்ஸின் ஆசிரியரே விஜயம் செய்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்?

பேராசிரியருக்கு வரவேற்பு மிகவும் தடபுடலாகத்தான் இருந்தது. யாரோ நாலைந்து இளம் பெண்கள் நாற்காலிகளில் உட்கார்ந்து சிரிப்பும் கும்மாளமுமாகப் புத்தகக் கம்பெனிக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் “ஸார் வரணும் வரணும் இவங்க எல்லாம் உங்க பக்தர்கள். உங்க எகனாமிக்ஸ் நோட்ஸைப் படிச்சுட்டு நம்ம கடையைத் தேடி வந்திருக்காங்க. ஸாரைக் கொண்டே இங்கிலீஷூக்கும் ஒரு நோட்ஸ் போட்டா என்னன்னு கேக்கறாங்க” என்று புத்தகக் கம்பெனிக்காரன் அவர்களை அறிமுகப்படுத்தியபோது பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளை மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜைமேல் வைத்துவிட்டுத் தலையைக் காதோரமாகச் சொறிந்தார். அந்தப் பெண்கள் குலுக்கலும் மினுக்கலுமாக எழுந்து நின்று, ‘நமஸ்தே புரெபஸர் ஸார்’ என்றபோது மறுபடியும் தலையைச் சொறிந்தார் பேராசிரியர். கடைப் பையன் காபி சிற்றுண்டிவாங்கிவந்தான்.“இதெல்லாம் எதுக்கு? வீட்டிலேயே காபி, டிபன் எல்லாம் முடிச்சாச்சே!” என்று பிகுபண்ணிக்கொண்டார் கள்ளப்பிரான் பிள்ளை.

கடைக்காரன் விடுவானா? “நீங்க அப்பிடிச் சொல்லவே கூடாது. முதல் முதலா இப்பத்தான் நம்ம கடைப்படி ஏறி வந்திருக்கீங்க” என்று அவன் உபசாரம் செய்து குழைந்தான். “எடுத்துக்குங்க ஸார்” என்று தன் அழகான பல்வரிசை தெரியக் கிண்கிணிச் சிரிப்போடு வந்திருந்த பெண்களில் ஒருத்தியே உபசரித்தபோது பேராசிரியருக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. மூன்றாவது தடவையாக மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் தலையைச் சொறிந்தார். பின்பு சிற்றுண்டி சாப்பிடத் தொடங்கினார். மானசீகமாக அவரையே சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தான் புத்தகக் கம்பெனிக்காரன். இந்த உலகத்தில் அப்பாவிகளுடைய பலவீனங்கள் என்ன என்ன என்பது அவனுக்கு அத்துப்படி.

கள்ளப்பிரான் பிள்ளையும் காத்துக் காத்துப் பார்த்தார். அந்தப் பெண்கள் எல்லாரும் எழுந்து போனபின் தனிமையில் கம்பெனிக்காரனிடம் பண விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்கலாம் என்று நாகரிகமாக இருந்தார். தம்மைப் புகழ்கிற நாலு பேருக்கு முன்னே தமக்குத் தற்சமயம் பணத் தேவை இருக்கிறது என்று சொல்வதற்குக் கூசினார். ‘அவர் ஏதோ சொல்லிக் கேட்பதற்குக் கூசிக் கொண்டிருக்கிறார்’ என்பது கம்பெனிக்காரனுக்கும் புரிந்துவிட்டது. அப்படிப் புரிந்ததனால்தான் அவர் புறப்படுகிற வரையில் தன்னைச் சுற்றி யாராவது இருக்கும்படி செய்து கொண்டிருந்தான். கடையே அமைதியாக மாறித் தாம் மட்டும் தனியாக இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டாலன்றி அவர் வாய்விட்டுப் பணம் கேட்கக் கூசுவார் என்பது அவனுக்குத் தெரிளவாய்த் தெரிந்துபோய்விட்டது.அப்பாவிகள் என்ன பேச இருக்கிறார்கள் என்பதைக் கண்டு பிடிப்பது புத்திசாலிகளுக்குப் பெரிய காரியம் அல்லவே! ஏற்கனவே உட்கார்ந்து கொண்டிருந்த நாலு பெண்கள் போதாதென்று இளைஞர்களில் சிலர் வேறு கடைக்குள் நுழைந்து உட்கார்ந்துவிட்டார்கள். பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளை அதிகக் கூச்சம் அடைந்து பணத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமலே புறப்பட்டு விட்டார்.

கம்பெனிக்காரனுக்குப் பரம சந்தோஷம். பண விஷயமாக வந்தவர் அதைத் தன்னிடம் சொல்லிக் கேட்க முடியாத சூழ்நிலை கடையில் இயல்பாகவே உண்டாகியிருந்ததே என்று பெருமைப்பட்டுக் கொண்டான். கள்ளப்பிரான் பிள்ளை, “அப்ப நான் இப்படி வரட்டுமா? அப்புறம் பார்க்கிறேன்” என்று புறப்பட்டபோது கூடவே எழுந்திருந்த கம்பெனிக்காரன் வாயிற்படி வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தான். வரட்டுமா என்பதோடு போய்த் தொலையக் கூடாதோ? அப்புறம் பார்க்கிறேன் என்று வேறே சொல்லிவிட்டுப் போகிறாரே! ஒரு வேளை நாளைக்கும் பண விஷயமாகப் பிரஸ்தாபிக்க வரப்போகிறாரோ? என்று எண்ணி, நாளைக்கு இவரை எப்படிச்சமாளிப்பது? என்ற சிந்தனையை இன்றைக்கே ஏற்படுத்திக் கொண்டு கடைக்குள்ளே திரும்பிச் சென்றான், புத்தகக் கம்பெனிக்காரன். கள்ளப்பிரான்பிள்ளை அவர்கள் பொருளாதாரம் + அப்பாவித்தனம் + அசட்டுத்தனம் எல்லாம் நிறைந்தவர் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்ததனால், ஊம்! இவர் ஒரு சுண்டைக்காய், இவரைத் தண்ணீர் காட்டி அனுப்புவதா எனக்குப் பிரமாதம்? என்று நினைத்து, கள்ளப்பிரான்பிள்ளையின் மறுநாள் விஜயத்தைப் பற்றிய பிரச்னையை எண்ணி இவ்வளவு கவலைப்படுவதே தன் தகுதிக்குக் குறைவு என்று தீர்மானமாய் அதை மறந்து போக முயன்றான். மறுநாள் சைக்கிள் ரிக்‌ஷாவுக்குக் காசு இல்லையாதலால் கள்ளப்பிரான் பிள்ளை நடந்தே புத்தகக் கம்பெனிக்குப் புறப்பட்டார்.

ஒரே பாடாக ஆளே இல்லை. விசாரித்ததில், “முதலாளி வெளியிலே போயிருக்காக, அவுக வர்ரதுக்கு எந்நேரமாகும்னு தெரியல்லே” என்றான் கடைப் பையன். “கொஞ்சம் இருங்க ஐயா! காபி வாங்கியாரேன்” என்று பையன் தம்ளரை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, “இல்லை தம்பி! வேண்டாம்” எனக் கள்ளப்பிரான் பிள்ளையே மறுத்துவிட்டார். பையனும் போகவில்லை. தாம் சொன்னவுடனே, “இல்லிங்க, கண்டிப்பாகக் காபி குடிக்கனும் என்று வற்புறுத்தாமல் அந்தப் பையன் உடனேயே பேசாமல் இருந்துவிட்டதை அந்தரங்கமாக அவரே வெறுத்தார். அந்த வெறுப்புடன் அங்கு உட்காரப் பிடிக்காதவராய், “தம்பி, நான் வந்திருந்தேன்னு மட்டும் உங்க ஐயா கிட்டச் சொல்லு” என்று கூறிவிட்டுக் கிளம்பினார். பையன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டு கைகளைப் பெரிதாய்க் கூப்பிக் கும்பிடு போட்டான். ஒரு மணி நேரத்துக்குப்பின் கம்பெனிக்கார முதலாளி கடைக்கு வந்ததும் பையன் பேராசிரியருடைய விஜயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தான்.

“புறப்பட்டுப் போயிட்டாரில்ல? ரொம்ப நல்ல காரியம் பண்ணனே நீ” என்று சொல்லிவிட்டு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுகமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைக்கலானான். அந்தப் புகையில் பேராசிரியர் கள்ளப்பிரான் பிள்ளையின் ஞாபகமும் சேர்ந்தே புகைந்து போய்விட்டது.

அடுத்து மூன்றாம் நாள் சாயங்காலம் கள்ளப்பிரான்பிள்ளை வந்த போது கடையிலே ஒரு சினிமா நட்சத்திரமும், அவருடைய கணவரென்று உலகத்தாரால் ஒப்புக் கொள்ளப்பட்ட புருஷ ஜன்மமும், மூன்று கல்லூரி மாணவிகளும் இருந்தார்கள். கடை வாசலில் சினிமா நட்சத்திரத்தின் காரைச் சுற்றி ஒரு விடலைக் கும்பல் கூடியிருந்தது. இந்த நிலையில் கடைக்குள்ளே நுழைவதற்கே கூசிய கள்ளப்பிரான் பிள்ளை தயங்கித் தயங்கி உள்ளே நுழையவும், கம்பெனிக்காரன் தன்னிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு எழுந்து ஓடிவந்து திருவாளர் பிள்ளையை ஆர்வத்துடன் வரவேற்று முதலில் சினிமா நட்சத்திரத்துக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அப்புறம் அவளுடைய ‘இவருக்கு’ அறிமுகப்படுத்தியபின் வந்து கூடியிருந்த மாணவிகளுக்கும் அறிமுகப்படுத்தி முறையே அந்த மூன்று அறிமுகங்களாலுமே அவரை வீழ்த்திவிட்டபின் காபி சிற்றுண்டியும் அருந்தச் செய்தாயிற்று. பாவம்! பேராசிரியரான திருவாளர் கள்ளப்பிரான்பிள்ளை மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜையில் வைத்துவிட்டுக் காதோரமாகத் தலையைச் சொறிந்தார். அதைப் பார்த்து, நிலைமை அபாயகரம் ஆள் வாய்விட்டுக் கேட்டுத் தொலைத்துவிடுவான் போலிருக்கே! என்ற பயத்தோடு, “புரொபஸர் ஸார்! நானே நாளைக்கு உங்களை வீட்டிலே வந்து பார்க்கலாமின்னு இருக்கேன். வீட்டிலே இருப்பீங்களில்ல?” என்று கேட்டான் கம்பெனிக்காரன்.

பேராசிரியர் மலர்ந்து போனார். ‘இவனே நாளைக்குக் கொண்டு வந்து கொடுத்திடறதாக இருக்கான் போலிருக்கே! வாய்விட்டுக் கேட்டு நம்மைக் குறைச்சுப்பானேன்?’ என்ற பிரமையான நம்பிக்கையோடு, “அப்ப நான் வர்றேன். நாளை வீட்டிலேயே இருக்கேன்” எனக் கூறி விடைபெற்றார் கள்ளப்பிரான்பிள்ளை. கம்பெனிக்காரன் நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டான். கள்ளப்பிரான் பிள்ளையும் நிம்மதியாகத்தான் வீடு போனார். அவர்தாம் இரண்டு சாமர்த்தியங்களுக்கு உரிமையாளராயிற்றே! அப்பாவியாக இருக்க எல்லாராலும் முடிந்துவிடுமா என்ன?

(கலைமகள், தீபாவளிமலர், 1962)