நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/தர்மோபதேசம்

73. தர்மோபதேசம்

ர்மத்தைப் பற்றி உபதேசம் பண்ணுவதும், எழுதுவதும் ஒரு தொழில் என்று நீங்கள் நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்; நானும் ஒப்புக் கொள்வதற்கில்லை. ஏன், இந்த உலகத்தில் எவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ முகுந்தராம தீட்சிதர் அவர்களுக்குத் தொழில் தர்மோபதேசம்தான். தர்மத்தைப் பற்றி நினைப்பதும், பேசுவதும், ஒரு தொழில் என்று நிரூபித்து அதன் மூலம் ஆயிரம் ஆயிரமாகப் பணம் புரட்டிக் கொண்டிருக்கிறவர் அவர். அதோ கிருஷ்ண நகர் கண்டோன்மென்ட் மைதானத்தில் பக்த சிரோன்மணிகள் பல்லாயிரம் பேருக்கு ஸ்ரீமத் பாகவதத்தை அவர் பிரவசனம் செய்து கொண்டிருக்கிற கம்பீரத்தைக் கேளுங்கள். மாதிரிக்குக் கொஞ்சமாவது கேளுங்கள். ஒரு சுவாரஸ்யமான கட்டம் வருகிறது. “கோபிகா ஸ்திரீகள் அத்தனை பேரும் சுவர்ண விக்ரகம் போல பிறந்த மேனியா நதி தீரத்திலே நிக்றா... அவளோடவஸ்த்ரங்களைக் காணலே. நதிக்கரையிலே எல்லா எடத்திலேயும் தேடிப் பார்த்தாச்சு. ஐயோ. மானமில்லாம, லெச்சையில்லாம. இப்படி நிக்கறோமேன்னு. அவாளோட மனசெல்லாம் தவிக்கிறது. அப்போ கரைமேலே புன்னை மரத்துலேர்ந்து கலகலன்னு சிரிக்கறார் பகவான். கோபிகா ஸ்திரீகள்ளாம் ரொம்பக் கூச்சத்தோட தங்களோட பருத்த ஸ்தன்ய பாரங்களை ரெண்டு கைகளாலேயும் மூடிக் கொண்டு மேலே நிமிர்ந்து பகவானைப் பார்க்கறா.” மாதிரிக்கு இத்தனை போதும் பிரம்மஸ்ரீ தீட்சிதருடைய கதையில் ‘ஸெக்ஸ்’அம்சமும் உண்டு. ‘செக்ஸ்’ அம்சமும், விளம்பரங்களும் ரொம்ப விற்பனையாகிற பத்திரிகைக்கு எத்தனை அத்தியாவசியமோ அத்தனை அத்தியாவசியமாகத் தீட்சிதரின் கதைக்கும் தேவைப்பட்ட விஷயங்களாயிருந்தன. புராணமானால் என்ன? இதிகாசமானால் என்ன? எந்த இடத்தில், எதைக் கலந்து எப்படிப் பிரவசனம் செய்ய வேண்டுமென்பது தீட்சிதருக்கு நன்றாகத் தெரியும். பத்திரிகைகளில் கால் பக்கம், அரைப் பக்கம், ஒரு கலர், இரண்டு கலர், விளம்பரங்கள் எல்லாம் இருக்கிற மாதிரி தீட்சிதருடைய கதையில் கூட விளம்பரங்கள் உண்டு. தீட்சிதருடைய உபன்யாச உபதேசங்களில் நடுநடுவே பெரிய மனிதர்கள், வசதியுள்ளவர்கள், எல்லாரையும் பற்றிய புகழுரைகள் இருக்கும்.நிறையவே இருக்கும்.

புனிதமான இராமாயணக் கதையில் ஸ்ரீமத் வால்மீகி பகவான் தசரத சக்ரவர்த்தியின் வள்ளன்மையைப் பற்றிச் சொல்லியிருக்கிற இடம் வரும் போது, எதிரே உட்கார்ந்து உபன்யாசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் மைலாப்பூர்ப் பிரமுகரையோ, நீதிபதியையோ, மந்திரியையோ, தொழிலதிபரையோ தூக்கி வைத்துப் புகழ ஆரம்பித்து விடுவார் அவர்.

“வால்மீகி பகவான் அந்த நாளிலே தசரத சக்ரவர்த்தியைப் பற்றிச் சொல்லியிருக்கிற குணங்கள்ளாம் இன்னிக்கு இவாகிட்ட அப்படியே பொருந்தியிருக்கு. இவாள் மகாக்ஞாதாள். ரொம்ப ச்ரேயஸ் உள்ளவா. பரம பக்தாள்... நல்ல சித்திரை மாசத்து வெயில்லே ஒருநாள் உச்சி வேளைக்கு இவாள் க்ருஹத்துக்குப் போயிருந்தேன்...அப்பப் பாருங்கோ... இவா தன் கையாலேயே நல்ல காபூல் மாதுளம் பழமாப் பார்த்து எடுத்து ஜூஸ் பிழிஞ்சு கொடுத்தா. எதுக்குச் சொல்ல வந்தேன்னா... இவா அப்படி ஒரு ஆஸ்திகப் பற்றுள்ளவா...” என்று நடுவிலேயே தசரதச் சக்ரவர்த்தியை நிராதரவாகவோ, நிர்க்கதியாகவோ, விட்டுவிட்டு எதிரே உள்ள பிரமுகருக்கு டபிள் கலர் விளம்பரம் இரண்டு பத்தி நாலு காலம் போட்டு வைப்பார். அவர் தர்மோபதேசம் - அதாவது இந்தக் கலியுகத்திலே தர்மத்தை இரட்சிப்பதற்காக உபதேசம் செய்கிறவர் என்பதைவிட, உபதேசம் செய்வதற்கு இதுதான் வழி என்று தாமாகவே ஒரு தர்மத்தைப் படைத்துக் கொண்டிருப்பவர் என்பதே பொருத்தமாயிருக்கும் என்பேன் நான்.

இங்கே இதுவரை சொன்னவற்றைக் கதாநாயகர் பற்றிய அறிமுகமாக நீங்கள் வைத்துக் கொண்டால் இனிமேல்தான் கதை ஆரம்பமாகிறது என்று சொல்ல வேண்டும்.

ஸ்ரீரீமத் தீட்சிதர் அவர்கள் தம்முடைய உபன்யாசங்களுக்கு நடுவே அடிக்கடி உத்தமமான மக்கள் அனுசரிக்க வேண்டிய குணங்களைப் பற்றியும் தர்மங்களைப் பற்றியும் நிறையச் சொல்லுவார். தர்மங்களை உபதேசம் செய்வதென்றால் அவருக்கு அபாரமான உற்சாகம் பிறந்துவிடும். நியாயமாகக் கடைப்பிடிக்க வேண்டியவை என்று வேதங்களும், சாஸ்திரங்களும் கடைப்பிடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறவற்றை எடுத்துக் கூறுவதைத் தமது மேலான கடமையாகக் கொண்டிருந்தார் அவர். யதார்த்த உலகத்தின் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒத்து வராத தர்மங்களை உபதேசம் பண்ணிக் கொண்டும், ஒத்துவருகிற தர்மங்களைச் செய்ய மறந்தும் எப்படிஎப்படியோ வாழுகிற பாபாத்மாக்களை இரட்சிக்கும் பொறுப்பு தீட்சிதரிடமிருந்தது. அவர் அடிக்கடி உபதேசம் பண்ணுகிற தர்மங்களில் ஒன்றுதான் ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்குப் புடவை தானம் பண்ணுவது.

“வேத தர்மங்கள்ளாம் நசிச்சுப் போயிண்டே வரது... கலி காலத்துலே நாம ரொம்பக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிட்டோம். சின்னஞ்சிறுகள் எல்லாம் தலையெடுத்து என்னென்னவோ பேசறதுகள்... வெள்ளிக்கிழமையில் ரெண்டு மஞ்சள் கிழங்கும், வெற்றிலை, பாக்கும் வைத்து ஏழைச் சுமங்கலிக்கு ஒரு வஸ்த்ரம் தானம் பண்ணினால் சோமயாகம் செய்த பலன் இருக்கும். இந்த நாளிலே யார் இதெல்லாம் செய்யறா..? ரெண்டு ரூபாயும் மூன்று ரூபாயும். கொடுத்து டிக்கட் வாங்கிச் சினிமாவுக்குப் போறதுகள். தர்மம் தானத்தைப் பற்றிக் கவலைப்படறவா குறைஞ்சு போயிட்டா. லோகத்திலே ஆஸ்திகாள் க்ஷீணிச்சுப் போயிருக்கா” என்று மனம் நொந்து போன துயரமான குரலில் ஸ்ரீமத் தீட்சிதர் அவர்கள் தமது உபன்யாசங்களுக்கு நடுவே தர்மத்தை ஞாபகப்படுத்துவார். அது அவர் கடமை.

பிரம்மஸ்ரீ தீட்சிதருடைய கதைகளில் இராமாயணம், பாகவதம், பாரதம், எல்லாம் நிறைவடைகிற பட்டாபிஷேக தினங்களில் நாற்பது ஐம்பது ஜோடி புது வேஷ்டிகளும், புதுப்புடவைகளும் குவியும். இந்த விதமாகக் கதாகாலட்சேபம் செய்கிறவர்களில் இவருக்குத்தான் ‘ஸ்டார் வால்யூ’ அதிகமாகையினால் வருமானமும் அதிகம். தர்மத்தை நினைப்பதற்கும் பேசுவதற்கும் எல்லா உபன்யாசகர்களாலும் முடியும் என்றாலும் தர்மத்தைச்சார்ந்து புகழும் பெருமையும் அடையச் சிலரால்தான் முடியும். ‘தர்மத்தை உணர்ந்து கடைப் பிடிக்கிறவர்கள் ஒரு வருமானமும் அடைய முடியாது; தர்மத்தை உபதேசம் மட்டும்தான் செய்யனும். இந்த இரகசியம் ஸ்ரீமத் தீட்சிதர் அவர்களுக்குப் புரிந்திருந்ததைப் போல மற்ற உபன்யாசகர்களுக்குப் புரியவில்லை. அதனால் அவர்கள் எல்லாம் தங்கள் தொழிலில் ‘ஸ்டார்’ ஆகவும் முடியவில்லை. ஒளிபரப்பவும் முடியவில்லை. ஒரு தேங்காய் மூடிக்குப் புரந்தர தாஸரின் கதையைச் சொல்லிக் கொண்டும் ஐந்து ரூபாய்ப் பிரயோசனத்துக்காகத் துருவன் சரித்திரத்தை விவரித்துக்கொண்டும் அவர்கள் எல்லாம் ‘ஸ்டார் வால்யூ’ இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் பிரம்மஸ்ரீ தீட்சிதருடைய புகழில் பொறாமையுண்டு. இருந்தும் என்ன? பொறாமைப்படத் தெரிந்தால் மட்டும் போதுமா? கெட்டிக்காரன் புகழை அடைவது எப்படி என்பதை யோசிக்க வேண்டுமே ஒழியப் பொறாமைப்படுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது! புரிகிறதா?’

ஸ்ரீமத் தீட்சிதருடைய உபன்யாசங்களுக்கு நாள் தவறாமல் விஜயம் செய்து கொண்டிருந்த பெருமக்களில் இளைஞனாகிய முத்துசாமியும் ஒருவன். இன்றைய நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு முடிவு தேட இப்படி மந்தமான கதாகாலட்சேபங்களும், சாதி முறைகளை நினைவூட்டக்கூடிய மேற்கோள்களும் நிச்சயமாகப் பயன்படமாட்டா என்று தெரிந்திருந்தும் முத்துசாமி வேண்டுமென்றே ஒரு காரணத்துக்காக இந்தக் கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ஒரு விஷயத்திலுள்ள குற்றங்குறைகளை அணுகித் தெரிந்து கொள்ளாமல் கேலி செய்யவோ, இகழவோ கூடாதென்று நினைக்கிற கொள்கையுடையவன் முத்துசாமி.


நடைமுறையில் யதார்த்த உலகத்திலுள்ள கஷ்டங்களுக்கு விடிவு தேடாமல் மேடைத் தர்மோபதேசம் செய்கிறவர்களைக் கண்டுபிடித்துக் களையெடுக்க வேண்டியது நாம் செய்கிற நற்பணிகளில் ஒன்று என்று நம்புகிறவன் முத்துசாமி. அப்படிக் கண்டுபிடிக்கிற வாய்ப்பும் விரைவில் அவனுக்கு ஏற்பட்டது.

அன்று தீட்சிதருடைய கதையில் பட்டாபிஷேக தினம். கதை நிகழ்ந்த மேடையில் பட்டுப் புடவைகளும், நூற்புடவைகளும் (சரிகைக் கரையிட்டவை) வேஷ்டிகளும், பழக்கூடைகளுமாக நிரம்பியிருந்தன. பிரமுகர்களும், பணக்காரர்களும், ஆஸ்திகப் பெருமக்களும், சூட்டிய மாலைகள் வேறு மலை மலையாகக் குவிந்து கிடந்தன. உபன்யாசகரான தீட்சிதர் புறப்படப் போகிறார். அவர் ஒரு காரிலும், அவருக்குக் கிடைத்திருந்த புடவைகள், புது வேஷ்டிகள், பழக்கூடைகள் வேறொரு காரிலுமாகச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது. மேடைக்குப் பின் பக்கமாக அப்படியே நாலைந்து கெஜ தூரம் நடந்து வந்து ஏறிக் கொள்கிற மாதிரி இரண்டு கார்களையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். தீட்சிதரின் அருகில் வாய் புதைத்துப் பவ்யமாக உடன் வரும் பெரிய மனிதர்கள் புடைசூழக் காரை நோக்கி அவர் நடந்து வரும் வேளையில் எவரும் எதிர்பாராத விதமாய் முத்துசாமி அவருக்கு முன் பிரவேசித்து விநயமாக வணங்கினான்.அவனுக்குப்பின்னால்பரட்டைத்தலையும் பஞ்சடைந்த கண்களோடு கூடிய முகமும், கிழிசல் புடவையுமாகப் பத்துப் பன்னிரண்டு சேரிப் பெண்களும், குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள்.

“சுவாமி ஒரு விண்ணப்பம். உங்களுடைய உபன்யாசங்களில் அடிக்கடி சுமங்கலிகளுக்கு வஸ்திரதானம் செய்வதைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். இதோ இவர்கள்தான் இன்று இந்த தேசத்தில் நிராதரவான சுமங்கலிகள். பத்து மணிக்கு ஒரு பட்டுப்புடவை. மூன்று மணிக்கு ஒரு பட்டுப்புடவை. இரவு ஒன்பது மணிக்கொரு பட்டுப்புடவை என்று கட்டும் பணக்கார சுமங்கலிகளைத்தான் நீங்கள் அதிகமாகச் சந்தித்திருப்பீர்கள்.ஆனால் அவர்கள் தொகை இந்த நாட்டில் மிகவும் குறைவு. இதோ இப்போது என் பின்னால் நின்று கொண்டிருக்கிறார்களே இவர்களைப் போன்ற சுமங்கலிகள்தான் இந்தத் தேசத்திலே இருண்ட குடிசைகளில் ஆயிரம் ஆயிரமாக இருக்கிறார்கள்.இவர்களுக்கு உபகாரம் செய்வதைவிட ஸ்ரீமந் நாராயணமூர்த்திக்குத் திருப்தி தருகிற செயல் வேறொன்றும் இருக்க முடியாது” என்று நிமிர்ந்து நின்று தைரியமாக வேண்டிக் கொண்டான் முத்துசாமி. தீட்சிதரைச் சூழ யக்ஞோபவீததாரிகளாய்ச் சட்டையில்லாமல் (எதையும் சட்டை செய்யாமல்) பக்தி செய்தபடி நின்று கொண்டிருந்த பெரிய மனிதர்கள் முத்துசாமியை முறைத்துப் பார்த்தார்கள்.

“நீங்க என்ன சொல்றேள்?... எனக்குப் புரியறாப்லே இன்னொரு தரம் சொல்லுங்கோ...” என்று முத்துசாமியைக் கேட்டார் தீட்சிதர்.

“சுமங்கலிக்கு வஸ்திரதானம் பண்ணினா சோமயாகம் செய்த பலன் சித்திக்கும்னு நீங்க தினம் சொல்லியதைக் கேட்டேன். இவர்களும் சுமங்கலிகள்தாம். மானத்தை மறைக்கக்கூடத் துணியில்லாமல் கிழிசலும் கந்தையுமாகக் கஷ்டப்படுகிறார்கள்...”

“நா சொன்னது உத்தம ஜாதி ஸ்திரீகளா உள்ளவாளைப் பத்தின்னா...அதம ஜாதி ஸ்திரீகளுக்குத் தானம் செய்தா சோமயாகப் பலன் கிடைக்காதோன்னோ?...”

முத்துசாமி சிரித்தான்! அவனுடைய சிரிப்பில் ஏளனம் ஒலித்தது.

“மன்னிக்கனும் சுவாமி! வறுமையாலும், வாழ்க்கை வேதனைகளாலும் கஷ்டப்படுகிறவர்களுடைய கஷ்டங்களைப் புரிந்துகொண்டு இரங்குவதுதான் மிகப் பெரிய ஆஸ்திகத்தன்மை, தர்மத்தைப் பற்றி மேடையில் பேசிவிட்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கூசுகிறவர்கள்தான் இன்றைய சமூகத்தில் நாஸ்திகர்கள்... நீங்கள் ஒரு நாஸ்திகர்... கண்டிப்பாக நீங்கள் ஓர் அப்பட்டமான நாஸ்திகர்...” என்று முத்துசாமி இரைந்து கூச்சலிட்டபோது தீட்சிதருக்கு பக்கத்திலிருந்தவர்கள் பயந்து போய்ப் ‘போலீஸ்... போலீஸ்’ என்று கூட்டத்தைக் கண்ட்ரோல் செய்ய வந்திருந்த கான்ஸ்டபிளைக் கூப்பிடத் தொடங்கி விட்டார்கள். தீட்சிதருக்கு எதுவும் ஆகிவிடலாகாதே என்று அவர்களுக்குப் பயம்.

“போலீஸுக்கு அவசியம் ஒன்றுமில்லை! ஆஸ்திகத்தைக் காக்க ஆண்டவனை அழையுங்கள்! போலீஸை அழைக்காதீர்கள். நீங்கள் அழைத்தால் ஆண்டவன் வரமாட்டான். போலீஸ்காரன்தான் வருவான்” என்று சொல்லிவிட்டு அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றான் முத்துசாமி.

இரவு பதினொரு மணிக்குத் தீட்சிதர் பெல்லி பெத்தசாமி செட்டி பட்டுக்கடை வாசலில் பெரிய டாக்ஸி ஒன்றில் போய் இறங்கியதையும் பட்டாபிஷேகத்தில் கிடைத்த புது வேஷ்டி புடவைகளை அப்படியே மடிப்புக் கலையாமல் இரண்டு இரண்டு ரூபாய் குறைத்து அந்தக் கடையில் (ஒரு கதவை மட்டும் இரகசியமாய்த் திறந்து) கொடுத்துப் பேரம் முடித்துத் திரும்பியதையும், முத்துசாமி தன் கண்களாலேயே பார்த்தான். மனம் நொந்து பெருமூச்சு விட்டான். மனிதனுடைய கஷ்டநஷ்டங்களுக்கு நெகிழாமல், கோவிலுக்கும், சாஸ்திரங்களுக்கும் மட்டுமே நெகிழ்கிற ஆஸ்திகத்தினால் தெய்வமே திருப்தியடையாது என்பதை இந்த நாட்டிலுள்ள பாமரர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? அப்படிப் புரிய வைக்கிறவரை தர்மத்தை உணரவும், கடைப் பிடிக்கவும் தவறி வெறும் உபதேசம் செய்கிறவர்கள் மட்டும்தான் ஆஸ்திகர்களாகப் புகழப்படுவார்கள். என்னைப்போல் தர்மோபதேசத்தைவிடத் தர்மகர்த்தாவாக இருப்பது மேல் என்று கருதி உணர்ந்து செயல்பட்டு அதற்காகப் போராடுகிறவர்கள் நாஸ்திகர்களாக இகழப்படுவார்கள். ஆனாலும் கவலை இல்லை! நான்தான் நிஜமான ஆஸ்திகன் என்ற பெருமிதம் என் மனச்சாட்சிக்கு உண்டு. ‘அது போதுமே நான் பெருமைப்படுவதற்கு’ என்று எண்ணினான் முத்துசாமி மனிதனை மதிப்பதன் மூலமாகத் தெய்வத்தை மதிப்பவன் அவன். மனிதன்தான் நடமாடு கோவில் என்று நம்புகிறவன் அவன். மனித குலத்தைத் தவிக்க விட்டு வேறு எதையோ பக்தி செய்து கொண்டிருக்க அவனுக்குத் தெரியாது. மனிதனை இலட்சியமே செய்யாமல் வாழ அவனால் முடியாது. காரணம்? அவன் உபன்யாசம் செய்து சம்பாதிப்பதில்லை. உழைத்துச் சம்பாதிக்கிறான். தர்மோபதேசம் செய்ய அவனுக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம்.தெய்வத்தை மட்டும் மதிப்பதன் மூலம் மனித குலத்தை அலட்சியம் செய்ய அவனுக்குத் தெரியாது!

(தாமரை, அக்டோபர் , 1962)