நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/ஸ்டேட்டஸ்

65. ‘ஸ்டேட்டஸ்’

ந்த உலகம் இருக்கிறதே - உலக-ம் இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் கூடக் கவலை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, நானும், என் கவலைகளும் சேர்ந்தால் அதுவே ஒரு பெரிய உலகம். இரண்டு, நான் எதை எதைப் பற்றிக் கவலைப்படுகிறேனோ, அதைப்பற்றி இந்த உலகத்தில் வேறு எவரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. வேறு எவரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. ஆகவேதான் சொல்கிறேன், மறுபடியும் அடித்துச் சொல்கிறேன் உம்மையல்ல - நான் சொல்கிற விஷயத்தைத்தான்; நானும் என் கவலைகளுமே ஒரு தனி உலகம். அல்லது வேறு பலர் சொல்கிற மாதிரி ஒரு ‘தனி ரகம்’.

‘உலகம் தெரியாத பிள்ளை இத்தனை லட்சங்களைக் கட்டிக் காத்து எனக்குப் பின்னால் எப்படித்தான் ஆளப் போகிறதோ?’ என்று ரொம்ப ரொம்பப் பெரிய பணக்காரராகிய என் அப்பா என்னைப் பற்றி அடிக்கடி ரொம்ப ரொம்பக் குறைப்பட்டுக் கொள்கிறார்.

‘உலகம் தெரியாத பிள்ளை’ என்று இந்த அப்பா என்னைச் சொல்கிறாரே அது எந்த உலகத்தைப் பற்றி என்றுதான் நான் என் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறேன். ஏனென்றால் நான் தெரிந்து கொண்டிருக்கிற உலகத்தைப் பற்றி அப்பாவுக்குத் தெரியாது. அப்பா தெரிந்து கொண்டிருக்கிற உலகத்தை எனக்குப் பிடிக்காது. அப்பா தெரிந்து கொண்டிருக்கிற உலகத்தில் பணம்தான் பெரிசு. நான் தெரிந்து கொண்டிருக்கிற உலகத்தில் எதுவுமே பெரிசு இல்லை. அதிலே எல்லாவற்றையும் இனி மேல்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிசு பண்ணணும், இதுவரை எல்லாம் சின்னதாகத்தான் இருக்கு.

இதை நிஜமாக - ரொம்ப ரொம்ப நிஜமாகத்தான் சொல்கிறேன் நான். என் உலகத்தில் நான் யார் யாரைப் பற்றி, எதை எதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேனோ அவைகளைப் பற்றி எனக்கு முன்னாலும் சிலர் கவலைப்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கவலைப்பட்டவர்களைப் பற்றித்தான் சரித்திரம் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறதே. என்னைப் பற்றி அப்படி யாரும் பிற்காலத்தில் எழுதக் கூடாது என்பதுதான் என் ஆசை. சரித்திரப் புத்தகத்தில் எழுதப்படுவதால், பரீட்சைக்குப் படிக்கிற பையன்களுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும். ஞானியாக இருக்கலாம். ஆனால் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்படுவதற்காக மட்டும் ஞானியாக இருப்பதில் நிறையக் கஷ்டங்கள் உண்டு.

நான் இருக்கிறேனே - நான், ஞானியுமில்லை, கத்தரிக்காயுமில்லை. உங்கள் பாஷையில் அதாவது இதயத்தை இதயம் உணர முடிந்த பாஷையில் மக்கள் பாஷையில் சொல்லப் போனால், ‘நான் ஒரு லூஸ்’. அதையே மற்றவர்கள் என்னைக் குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரிச் சொன்னால், 'அவன் ஒரு சுத்த லூஸ் பயல் சார்’ என்றுதான் சொல்லவேண்டும்.இதில் எனக்குத் திருப்தியளிக்கிற ஒரே அம்சம் வெறும் 'லூஸ்’ என்று மட்டும் சொல்லிவிடாமல் 'சுத்த லூஸ்' என்று சேர்த்துச் சொல்கிறார்களே அதுதான் லூஸாக இருப்பதிலும் சுத்தத்துடன் லூஸாக இருப்பது பெரிய காரியம்தானே? லூஸாயிருந்தால் எதிலும் சுத்தமாயிருக்க முடியாது. சுத்தமாயிருந்தால் எதிலும் லூஸாக இருக்க முடியாது. நான் லூஸா இருந்து கொண்டே சுத்தமாகவும், சுத்தமாயிருந்து கொண்டே லூஸாகவும் இருப்பது விசேஷம்தானே?

எங்கள் - என் அப்பா இருக்கிறாரே, அவர் இந்த மெட்ராஸில் ரொம்ப ரொம்பப் பெரிய, "ஸ்டேட்டஸ் உள்ளவர். இரண்டு பெரிய 'கேடிலாக்' கார் வைத்திருக்கிறார். 'சாந்தோம் பீச்' அருகே பெரிய பங்களா. கடற்காற்று ஜிலுஜிலு என்று எப்போதும் பால்கனியில் வீசிக் கொண்டிருக்கும். இந்தப் பட்டினத்தில் சமுத்திரமும் அதன் காற்றும்கூட என் அப்பாவைப் போல பணக்காரர்களுக்குத்தான் - 'ஸ்டேட்டஸ்’ உள்ளவர்களுக்குத்தான் சொந்தம். நான் ஸ்டேட்டஸ் கொண்டாடத் தெரியாத லூஸாக இருக்கிறேனே என்பதில் என் அப்பாவுக்கு மிகவும் வருத்தம் பெண்களுக்குக் கற்பு மாதிரிப் பணக்காரனுக்கு 'ஸ்டேட்டஸ்' வேணும்டா! 'ஸ்டேட்டஸ்' - என்று அப்பாவாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்களைப் பொறுத்தமட்டில் 'கற்பு’ எவ்வளவு நிச்சயமோ 'அவ்வளவு' நிச்சயம்தான் இந்த "ஸ்டேட்டஸும்' என்று லூஸ் பயலாகிய எனக்குத் தோன்றுகிறது. இப்படி எனக்குத் தோணாதது சரியோ தப்போ, தெரியலை சார். நான் இருக்கேனே எனக்கு வயசு இருபத்திரண்டு. ஒரு காலேஜில் படிக்கிறேன். எந்தக் 'காலேஜ்' என்று கேட்காதீர்கள். குப்பையில் எந்தக் குப்பையானால் என்ன? எல்லாம் ஒன்றுதான். 'படிப்புத்தான் நிஜமான 'ஸ்டேட்டஸ்' என்று என்னுடைய புரொபஸபர் சொல்கிறார். பணம்தான் நிஜமான 'ஸ்டேட்டஸ்' என்று என் அப்பா சொல்கிறார். சிகரெட் பிடிக்கிறது, பாண்ட், டை, இதெல்லாம் அணிகிறது, சினிமா பார்க்கிறது போன்ற நாகரிக விவகாரங்கள் தான் 'ஸ்டேட்டஸ்' - என்று என் சினேகிதன் பெர்ணான்டோ சொல்கிறான். இதுலே யார் சொல்றது நிஜம்? யார் சொல்றது பொய்?

ஆக மொத்தத்தில் உண்மையாக எதுதான் 'ஸ்டேட்டஸ்' என்று எனக்கு இன்னும் புரியலே. ஒருவேளை ஸ்டேட்டஸைப் புரிஞ்சுகிற ஸ்டேட்டஸ் எனக்கு இல்லையோ என்னவோ? இந்த உலகத்திலே அதாவது நான் கவலைப்படற உலகத்திலே பல விவரங்களைப் பற்றி நான் யோசனை பண்ணிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியலை அல்லது ஒரு முடிவும் தெரியலை அல்லது வேறே விதமாகச் சொல்லப் போனால் ஒன்றுக்குப் பதில் பல முடிவு தெரியறது. யோசனையில் ஒரே ஒரு முடிவு தெரியாததுக்குக் குழப்பம் என்று பேரானால் பல முடிவு தெரியறதும் குழப்பம்தான் -இல்லையா சார்?

ஆக (1) நான் ஒரு லூஸ், (2) நான் ஒரு குழப்பம், (3) நான் ஒரு காலேஜ் மாணவன். இதுக்கு மேலே ஒண்ணுமே எழுத வேண்டாம்னு தோணறது. ஆனாலும் கைவிட வில்லை. மேலே மேலே எழுதிக் கொண்டே போகிறது என் கை. எனக்கு ரொம்ப ரொம்பப் பேராசை உண்டு.அது இந்த உலகத்தில் எல்லாருக்கும் இருக்கிற மாதிரிப் பேராசை இல்லே. அப்படி இருந்தால்தான் என் அப்பா சந்தோஷப்பட்டிருப்பாரே! நான் சொல்ற பேராசை - நான் கவலைப்படுகிற உலகத்துக்கு மட்டும்தான் லாயக்கு என் அப்பா கவலைப்படற உலகத்திலே அது செல்லுபடியாகாது சார்.

காலம் கார்த்தாலே ஒன்பதரை மணிக்கு பீச் ரோடிலே ஜிலுஜிலுனு சமுத்திரக் காற்றை அனுபவித்துக்கொண்டு ‘கேடிலாக்' கார்லே என்னைக் காலேஜுக்குக் கொண்டு போயி விடறான் டிரைவர். அத்தனாம் பெரிய கார்லே நான் ஒத்தனே ஒத்தன்தான் தனியாப் போறேன். அனலாக வாட்டிப் பிழியற சமுத்திரக் கரை வெய்யில்லே - எதிர் வெய்யில்லே பஸ்ஸுக்குக் காத்திண்டிருக்கிறவர்களை எல்லாம் ஏத்திக் கொண்டு போய் அவரவர்கள் போக வேண்டிய இடத்திலே விடச் சொல்லிவிட்டு நான் இறங்கி நடந்துடனும்போல எனக்குத் தவிப்பாயிருக்கு. இந்த டிரைவர் அப்படிச் செய்ய ஒப்புக்கமாட்டான். இவன் அப்பாவுக்குப் பதில் சொல்லனுமே, அப்புறம்?

இப்படி எனக்கு எத்தனையோ ஆசை! பேராசை பீச்சிலே உடம்பிலே துணியில்லாமே மணல்மேலே புரள்கிற செம்பவடக் குழந்தைகளை எல்லாம் எங்க வீட்டுக்கு அழைச்சிண்டு போய் பிரிஜிடோரைத் துறந்து அதிலேருக்கிற ஐஸ்கிரீம், ஆப்பிள் பழம், வெண்ணெய் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக் கொடுத்துட்டு அந்தக் குழந்தைகள் பயந்து கொண்டே சாப்பிடறதைப் பார்த்து நான் மனசு குளிரணும். இப்பிடியும் எனக்கு ஒரு பேராசை உண்டு சார் என் உலகம் இருக்கிறதே அதில் இதுதான் நியாயமான பேராசை என்று எனக்குப் படறது. நீங்க ஒப்புக் கொள்ளாவிட்டால் உங்க உலகம் வேறேதான். அம்மைத் தழும்பு மூஞ்சியும், பீப்பாய் உடலுமாகப் பாக்கறதுக்கு விகாரமாகக் காரில் ஏறிக் கொண்டு போற பணக்கார மாமிகளை எல்லாம் காரை நிறுத்திக் காதைப் பிடிச்சுத் திருகிக் கீழே இறக்கிவிட்டுட்டு அதே ரோடுமேலே பஸ்ஸுக்குத் தவம் பண்ணிக் கொண்டும் அதே சமயத்தில் காலிகளின் 'கண்வெட்டில்' சித்திரவதைப் பட்டுக் கொண்டும் நிற்கிற அழகிய ஏழைப் பெண்களை எல்லாம் அந்தக் காரில் ஏறச் செய்து அவரவர்கள் வீட்டிலே கொண்டு போய் விட்டுடனும்னு எனக்கு ஒரு பேராசை உண்டு சார்!

ஏன் தெரியுமோ? அந்த அழுமூஞ்சி மாமி நடந்து போறதுனாலே எந்தக் காலிப் பயலும் அவளைப் பார்த்து இளித்துக் கொண்டு பின் தொடரப் பேர்வது இல்லை. இந்தப் பெண்கள் நிற்பதனால் இவர்களுக்கு அத்தகைய ஆபத்துக்கள் நிறைய உண்டு சார்! காரணம் அதுதான்.

அசட்டுத்தனமா இப்படி எத்தனையோ பேராசை சார் எனக்கு. இதிலே ரெண்டு; ஒண்ணை மற்றவங்ககிட்டச் சொல்லிப் பார்த்ததிலே என்னை "அசடன்’னு சொல்றாங்க சார் நான் என்ன பண்றது? இப்போ என்னோட புகழை எல்லாம் ஒவ்வொண்ணாகக் கூட்டி எண்ணுங்கசார் (1) நான் ஒரு லூஸ், (2) நான் ஒரு குழப்பம் (3) நான் ஒரு காலேஜ் மாணவன் (4) நான் ஒரு அசடு-இப்போதைக்கு இவ்வளவுதான். இந்த கேடிலாக் கார்லே ஏறிப் போறதுக்கே ஒரு ஸ்டேட்டஸ் காரியத்தின் அவசரம்னுதான் எனக்குத் தோண்றது. அந்த அவசரம் ஏழைக்கும் இருக்கு. பணக்காரனுக்கும் இருக்கு சார்! சொல்லப் போனா ஏழைக்குத்தான் பணக்காரனைவிட அதிகமான அவசரங்கள் இருக்கு. ஆனா இந்த 'அவசரம்’கிற, தேவையைத் தவிர வேறு எதையோதான் 'ஸ்டேட்டஸ்’ன்னு அப்பா சொல்றார் சார் அப்பிடி அவர் சொல்றப்போ நான் அவரை மறுத்துச் சொன்னா, “நீ உருப்படப் போறதில்லே! குட்டிச் சுவராத்தான் போகப் போறே! ருஷ்யாவிலே பிறந்திருக்கணும்டா நீ.” என்று குத்தலாகப் பதில் சொல்றார் சார் அப்பா. இதுவும் எனக்குப் புரியலே சார் நிஜத்தைச் சொல்றதுக்கு அதாவது நான் வாழற உலகத்து நிஜத்தை நான் சொல்றதுக்கு நீ அங்கே பிறந்திருக்கணும், இங்கே பிறந்திருக்கணும் அப்படீன்னு அப்பா எதிர்ப்புப் பேசறதும் எனக்குப் பிடிக்கலே சார். இதுக்கெல்லாம் அடிப்படையான தகராறு இந்த ஸ்டேட்டஸ்'தான். நான் வாழற உலகத்துலே இருக்கிற 'ஸ்டேட்டஸ்’ங்கிற வார்த்தைக்கு எது அர்த்தமோ அது அப்பா வாழற உலகத்திலே இருக்கிற அர்த்தத்துக்கு மாறுபடறது சார்! அதனால்தான் சார் வம்பு ஒரு வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் இருக்கலாம். ஒரு அர்த்தத்துக்கு ரெண்டு தொனி இருக்கப்படாது சார்!

மறுபடி இப்ப எண்ணுங்கோ சார்: (1) நான் ஒரு லூஸ் (2) நான் ஒரு குழப்பம் (3) நான் ஒரு காலேஜ் மாணவன் (4) நான் ஒரு அசடு (5) நான் ஒரு குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறேன் (6) நான் இங்கே இந்த நாட்டில் பிறந்திருக்கக்கூடாது.உலகத்திலே எல்லாரோட கஷ்டத்துக்கும் விடிவு வரணும்னு வெறுங்காலோடராத்திரிலே நடந்து புறப்பட்டதுக்காக நாம் புத்தருக்குச் சரித்திரத்தில் பெருமை எழுதிப் படிக்கிறோம் சார் சொல்லுங்கோ உண்டா, இல்லையா? அதே விஷயத்தை நான் இப்பச் சொன்னா, அப்பா 'நீ இந்த நாட்டிலே பிறந்திருக்கப்படாது'ங்கிறார் சார். ஒரு விஷயத்தைச் சொல்றதுக்குகூட ஸ்டேட்டஸ் வேண்டியிருக்கோ என்னவோ, தெரியலே எல்லா உயிர்களிலேயும் நான் இருக்கேன்’னு கீதையிலே கண்ணன் சொன்னதையேதான் நான் இன்னிக்கு அதே அர்த்தத்திலே இன்னும் தெளிவாகவே சொல்றதாக எனக்குப் படறது சார், ஆனா என்னை உருப்படாமல் போகிற பயல்’ என்று திட்டுகிறார்கள் சார். இது என்ன உலகமோ? எனக்கு வர வர ஒண்ணுமே புரியலை; ஒண்ணுமே பிடிக்கலை. ஒண்ணுமே தெரியலை, எங்க வீட்டிலே எங்கப்பாவே அவரோட அழுகிப்போன கொள்கைகளுக்கு என்னை அடிமையாக்கிடனும்னு பார்க்கிறார் சார். பிள்ளையை அடிமையாக்கி மகிழனும்னு ஆசைப்படற அப்பாக்கள்தான் சார் இந்த தேசத்துலே இன்னிக்கு ஆஸ்திகான்னு பேர் வாங்கறா.நீங்க என்ன நினைக்கிறீங்களோ, தெரியலை

எனக்கு இன்னொரு பேரையும் இப்பக் கூட்டிச் சேர்த்துக் கொண்டு நீங்க எண்ணிக்கலாம் சார் (1) நான் ஒரு லூஸ், (2) நான் ஒரு குழப்பம், (3) நான் ஒரு காலேஜ் மாணவன், (4) நான் ஒரு அசடு, (5) நான் ஒரு குட்டிச் சுவர், (6) நான் இங்கே இந்த நாட்டில் பிறந்திருக்கக்கூடாது. (7) நான் ஒரு உருப்படாத பயல். இப்படி என் உலகத்து விஷயங்களை நான் வாய்விட்டுப் பேசினதுக்காக எனக்கு நிறையப் பட்டங்கள் எல்லாம் கிடைச்சிருக்கு இப்படி முட்டாள் பட்டங்கள் கிடைச்சதைப் பத்தி நான் கவலைப்படலே சார். ஏன்னா நான் நிஜமாகவே ஞானின்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு சார்.

அது சரி-நான்தான் இந்த உலகத்தைப் பத்தியே கவலைப்படலேன்னு முதல்லேயே சொல்லிவிட்டேனே. நான் கவலைப்படறதுக்கு வேற உலகம் இருக்கு சார்! ஆனால் நான் படற கவலையை என்னோடு சேர்ந்து படறதுக்கு வேறே மனிதர்கள் இருக்கிறதாகத்தான் தெரியவில்லை சார்! அதனாலும் பரவாயில்லை. பெரிய பெரிய விஷயங்களைப் பத்திக் கவலைப்படறவன் தன்னோடு துணைக்குக் கவலைப் படுகிறவர்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது. சரித்திரத்திலே இப்படிக் கவலைப்பட்ட வாளைப் பத்தி எழுதியிருக்கிறதை எல்லாம் படிச்சபோது அவாளும் என்னை மாதிரி ஆரம்பத்திலே தனித்தனியாகத்தான் கவலைப்பட்டதாகத் தெரிறயது சார்! நான்தான் சரித்திரத்துக்காகக் கவலைப்படவில்லையே! இந்து தேசசரித்திரம் என்ற பெயரையே 'இந்து தேச தரித்திரம்’னு மாற்றினால் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறவன் சார் நான். இதை ஒரு நாள் என் புரொபஸரிடம் வேடிக்கையாகச் சொன்னேன் சார்! அவர் என்னோடு சண்டைக்கே வந்துவிட்டார். 'நீ ஒரு அயோக்கியன்’ என்று என் மேல் எரிந்தும் விழுந்தார்.அதையும் நான் மறுக்கவில்லை.நான் சொன்ன விஷயத்தைச் சொல்வதற்குத் தகுந்த 'ஸ்டேட்டஸ்' எனக்கு இல்லை என்று அவர் கோபப் பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது சார்!

அவரிடம் இப்படிக் கேள்வி கேட்டதற்காகத் தாம் என்னை மன்னிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.

(1) நான் ஒரு லூஸ், (2) நான் ஒரு குழப்பம், (3) நான் ஒரு காலேஜ் மாணவன், (4) நான் ஒரு அசடு, (5) நான் ஒரு குட்டிச்சுவர், (6) நான் இங்கே பிறந்திருக்கக்கூடாது, (7) நான் ஒரு உருப்படாத பயல், (8) நான் ஒரு அயோக்கியன், (9) என்னை யாராலும் மன்னிக்கவே முடியாது. (10) பத்தாவது பேராகிய இதை இங்கே யாரும் சொல்லவில்லை - நானே எனக்குச் சொல்லிக் கொள்கிறேன். 'நான் ஒரு ஸ்டேட்டஸ் இல்லாதவன்'. அவ்வளவுதான் சார் என்ன சார்! இவ்வளவும் சொன்னதற்கு அப்புறம் என்னை நீங்களே இப்படி ஒரு தினுசாகப் பார்க்கிறீர்கள்?

................

புரிகிறது. சாந்தோமில் பங்களா உள்ளவருக்கு இரண்டு ‘கேடிலாக் கார்களின் சொந்தக்காரருக்கு மெட்ராஸிலேயே ஸ்டேட்டஸ் மிகுந்தவருக்கு - இப்படி சுத்த "லூஸாக' ஒரு பிள்ளை வாய்த்ததே என்று எண்ணிக் கொண்டுதானே பார்க்கிறீர்கள்? நீங்கள் இப்படித் தான் நினைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். தெரிந்துதான் இவ்வளவும் சொன்னேன் சார் நீங்கள் என்னைச் 'சுத்த லூஸ்' என்று சொல்லாமல் புத்திசாலி என்று சொல்லியிருந்தால்தான் எனக்கு ஆச்சரியமாயிருக்கும். என்னை "லூஸ்' என்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை சார்! ஆனால் சொல்லும்போது ‘சுத்த லூஸ்' என்பதை மட்டும் நீங்கள் மறக்காமல் சொல்ல வேண்டும். நான் லூஸாயிருப்பதோடு சுத்தமாகவும் இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.