நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/15-வது ஆண்டு அறிக்கை

66. 15-வது ஆண்டு அறிக்கை

ந்த முருகேசனைப் போல ஓர் அப்பாவி இருபதாம் நூற்றாண்டில் இருக்கக் கூடாதுதான். ஆனால் இருப்பது இவன் தவறில்லை. இவன் பிறந்து, வளர்ந்து, அழுது, சிரித்துப் படித்து வேலைக்கு வந்த சமயத்தில் இருபதாம் நூற்றாண்டுதான் நடந்து கொண்டிருந்தது. அது அந்த நூற்றாண்டின் தவறு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முருகேசனுடைய அப்பாவித்தனமும், அவனும் நூற்றாண்டுகளைக் கடந்தவர்கள். எங்கள் முருகேசனை அதாவது ‘குபேரா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ அலுவலகத்தின் டைப்பிஸ்ட் முருகேசனை, அப்பாவி என்று சொல்ல வேண்டுமானால் சாதாரணமான அப்பாவி என்று சொல்ல முடியாது. காலத்தை வென்ற அல்லது காலங் கடந்த என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பாகச் சொல்ல வேண்டிய வடிகட்டின அப்பாவித்தனம் அது!

சென்ற சனிக்கிழமை மாலை சரியாக நாலரை மணிக்கு அந்த அப்பாவித்தனம் பொங்கி வழிந்த காரியம் ஒன்று நடந்தது! நான் - அதாவது குபேரா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக டைரக்டராகவும், அந்தக் கம்பெனியின் பெயரில் ‘பிரைவேட் லிமிடெட்’ என்பதற்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டிருப்பவனாகவும் இருக்கிற நான் (கம்பெனியின் முதலாளி என்று தொழிலாளியின் பாஷையில் சொல்லப்படுகிற நான்) இந்த அப்பாவியின் சேவையைப் பாராட்டுவதற்கு ஆசைப்பட்டு என்னவோ செய்யப் போய் அது எப்படியோ முடிந்து விட்டது.

அதையேன் கேட்கிறீர்கள்! சென்ற சனிக்கிழமை மாலை இவன் நடந்து கொண்ட விதத்தைச் சாதுத்தனம் என்பதா, கோழைத்தனம் என்பதா, தியாகம் என்பதா, அல்லது கம்பெனியில் எல்லாரும் சொல்கிற மாதிரி அப்பாவித்தனம் என்பதா? என்னால் இந்த முருகேசனைப் புரிந்து கொள்ள முடியவில்லையே? ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும், சுவிட்சர்லாந்திற்கும் போய்த் தொழில் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு வந்தவனுக்குத் தன் கீழ் வேலை பார்க்கும் தொண்ணூறு ரூபாய்ச் சம்பளக்காரனான டைப்பிஸ்ட் ஒருவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியந்தான். நான் தாய் நாடு திரும்பியதும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் எல்லாரும் கூடிச் சேம்பர் பில்டிங்ஸ் ஹாலில் எனக்குக் கொடுத்த வரவேற்பில் என்னென்ன வெல்லாம் சொல்லிப் புகழ்ந்தார்கள்!

“சிவஞான சுந்தரம் (நான்) நமது தமிழ் நாட்டுத் தொழிலதிபர்கள் எல்லாருக்கும் முன்னணியில் நிற்கிறார். எத்தனையோ பேர் மேல்நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு வருகிறார்கள். ஆனால் அந்தப் பிரயாணங்களை திரும்பி வந்து முழு அளவில் இங்கே பயன்படுத்தி ஆச்சரியப்படத்தக்க விளைவுகளைச் செய்கிறவர் குபேரா கெமிகல்ஸ் அதிபராகிய நம் சிவஞான சுந்தரம் அவர்கள் தான். அண்மையில் அவர் சுவிசர்லாந்திலுள்ள பெரிய கடிகாரக் கம்பெனி ஒன்றோடு ஒப்பந்தம் முடித்திருக்கிறார். அதன் பயனாக இண்டியன் ரிஸ்ட்வாட்ச் மேக்கர்ஸ் என்ற புதுக் கம்பெனி ஒன்றை இங்கே தொடங்கப் போகிறார்.”

இதுதான் போகட்டும் ரோடரி கிளப்பில் கொடுத்த வரவேற்பில் கொஞ்சமாகவா புகழ்ந்தார்கள்? சக தொழிலதிபர்கள் புகழ்வதை எல்லாம் மெய்யாகவும் நம்புவதற்கில்லை. வியாபாரிக்கு வியாபாரி நாகரிகமாக வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதைச் சொல்வதற்குக் கெளரமான பெயர்தான் புகழ்ச்சி என்பது. இந்தப் புகழ்ச்சியிலும் வஞ்சகம் உண்டு!

நான் சுவிசர்லாந்திலிருந்து திரும்பவும், கம்பெனியின் 15-வது ஆண்டு விழா எவ்வளவு பொருத்தமாக இருந்தது? சென்ற சனிக்கிழமை எனக்கு வரவேற்பையும் ஆண்டு விழாவையும் சேர்த்தே நடத்தினபோதுதான் முருகேசன் அப்படி நடந்துகொண்டான். கம்பெனி தொடங்கின நாளிலிருந்து சர்வீஸில் இருக்கிற ஒருவரை இந்தப் பதினைந்தாவது ஆண்டு விழாவின் போது பாராட்ட வேண்டுமென்றுதான் நான் அப்படிச் செய்தேன். மேலும் இந்தப் பதினைந்தாவது ஆண்டு விழா 'குபேரா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்'டின் வரலாற்றில் சிறப்பானது. என்னுடைய நீண்டநாள் கனவான 'இண்டியன் ரிஸ்ட்வாட்ச்மேக்கர்ஸ்’ என்ற புதிய தொழில் தொடங்குவதற்கு வேண்டிய அநுமதியும் இந்த ஆண்டுதான் கிடைத்திருக்கிறது. அத்தனை பேரும் விநயமாக நடந்து கொண்டபோது அந்தக் கூட்டத்தில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவே முருகேசன் மட்டும் ஏன் அப்படி நடந்து கொண்டான்? அவ்வளவு பெரிய கூட்டத்தில் எல்லாருக்கும் முன்னால் அவமானப்படுத்தினாற் போல நடந்து கொண்டானே? ஒர் எழுத்துக்கூடத் தப்பு விடாமல் இவன் டைப் செய்கிற கடிதங்களைப் பார்த்து எனக்கு இவன் மேல் எவ்வளவு அபிமானம் ஏற்பட்டிருந்தது? எல்லாவற்றையும் சில விநாடிகளில் பாழாக்கி விட்டானே!

இவனுக்காக சுவிசர்லாந்திலுள்ள சிறந்த கம்பெனியிலிருந்து வாங்கி வந்த கடிகாரத்தைப் பரிசளிப்பதற்காக நான் ஆவலுடன் மேடைமேல் எழுந்திருந்து,"இந்தக் கம்பெனி தொடங்கிய நாளிலிருந்து டைப்பிஸ்டாக இருந்து வரும்..” என்று நீட்டி முழக்கிக் கொண்டு தொடங்கியும். இவன் கூட்டத்தின் கோடியில் கடைசி நாற்காலியில் இருந்து எழுந்து மேடைக்கு வராமல் அடித்த முளை போல உட்கார்ந்திருந்து விட்டானே!

"ஏய் முருகேசு! உன்னைத்தானப்பா..” என்று கம்பெனி மானேஜர் இவனை அழைத்துக்கொண்டுவருவதற்காக எழுந்து சென்றபோது இவன்-இந்தப்பயல் என்ன செய்தான் தெரியுமோ? யாரோ தன்னைக் கொள்ளையடிக்க நினைத்துத் துரத்துகிறாற்போல் எண்ணிக் கொண்டவன்போலக் குபீரென்று எழுந்து பக்கத்து வாயில் வழியாக வெளியே ஒடிவிட்டான். கூட்டம் முழுதும் இதைப் பார்த்துச் சிரித்துவிட்டது. எனக்குத் தலை குனிவாகப் போய்விட்டது. ஒரு நிமிஷம் என் "ஸ்டேட்டஸ்' ஆட்டங் கண்டது. 'ஸ்டேட்டஸ், ஸ்டேட்டஸ்' என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதை என் கீழ் வேலை பார்க்கும் ஸ்டேட்டஸ் இல்லாத சாதாரண ஊழியன் கூட ஆட்டங்காணச் செய்ய முடியும் என்று புரிந்தாற் போல இருந்தது. உடனே ஒரு விநாடியில் எனக்கு வேறொரு தீர்மானமும் தோன்றியது.

அப்படி இந்தப்பயல் எங்கேதான் ஓடி விடுவான்? மேடைக்கு எழுந்து வருவதற்குக் கூச்சப்பட்டுக்கொண்டு வீட்டைப் பார்க்க நடையைக் கட்டியிருப்பான்.

'காரை எடுத்துக்கொண்டு போய்த்துக்கிப் போட்டுக் கொண்டு வரச் சொன்னால் என்ன?' இப்படி நினைத்ததும் இந்த முருகேசன் பயலை அவ்வளவுக்குப் பெரிய மனிதனாக்குவதற்கு ஒன்றுமில்லை என்று அந்த யோசனையைக் கைவிட்டேன்.

“விடுங்கள் சார்! சுத்தத் திமிர் பிடித்த ராஸ்கல்! நாளைக்குக் கழித்துத் திங்கட் கிழமை ஆபீசுக்கு வருவான். 'எக்ஸ்பிளனேஷன்' எழுதிக் கேட்டு மானத்தை வாங்கிவிடுகிறேன்” என்று சீறினார் மானேஜர்.

"நோ, நோ! அதெல்லாம் செய்யப் படாது. திங்கட்கிழமை அந்த முருகேசன் வந்ததும் ‘உன்னை எம்.டி (மானேஜிங் டைரக்டர்) பார்க்கணும்னார். அவர் ரூமுக்குப் போய்ப் பார்’ என்று சொல்லி என்னிடம் அனுப்புங்கள் போதும். நான் கேட்டுக் கொள்கிறேன்.” என்று மானேஜரை சாந்தப்படுத்தினேன் நான். இந்த ஞாயிற்றுக் கிழமை 'மானுபாக்சரர்ஸ் அசோஸியேஷனில் ஒரு விருந்துண்டும், தொழிலதிபர்கள் தனிக் கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு செய்தும் புகழில் மிதந்த போது கூட என் மனத்தின் ஒரு கோடியில் அந்த முருகேசன் என்ற டைப்பிஸ்ட் என்னை மதிக்காமல் போன அணுப்பிரமாண நிகழ்ச்சிதான் உறுத்திக்கொண்டிருந்தது. என்னுடைய கண் பார்வை தன்மேல் ஒரு 'செகண்ட்'திரும்பினாலே வரம் கிடைத்த மாதிரித்துள்ளுகிற குமாஸ்தாக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? காற்றில் மிதந்து வருகிற கப்பல் மாதிரி இந்த கெடிலாக் காரில் ('கெடிலாக் காரே இந்த ஊரில் மூன்றுதான் இருக்கிறது. அந்த மூன்று காருக்கும் ஒரே உரிமையாளன் நான்தான்) நான் கம்பெனி வாசலில் போய் இறங்குகிறபோது எத்தனை கூழைக் கும்பிடுகள் என்னை வரவேற்கின்றன? அவற்றுக்கெல்லாம் மசியாமல் உண்மை உழைப்பாளி என்று நானே தீர்மானம்,செய்து 'இவனைத்தான் கெளரவப் படுத்த வேண்டும். இவனைத் தவிர வேறு யாரையாவது கெளரவப்படுத்தினால் கெளரவத்துக்கே கெளரவமில்லை’ என்று கூட்டம் தொடங்குகிற வரையில் பரம இரகசியமாக வைத்திருந்து மேடையில் திடீரென்று இந்த முருகேசனின் பெயரை நான் எழுந்திருந்து சொல்ல வந்த போது என்னையே 'இன்ஸல்ட் செய்துவிட்டானே இவன்! நான் திட்டமிட்டுப் பாராட்ட முயன்றதை இவனும் திட்டமிட்டு அவமானப்படுத்தினாற்போல் அல்லவா ஆகிவிட்டது? -

'ஆண்டு விழா மேடையில் நின்று கொண்டு முதலாளி நம் பேரைச் சொல்லி உற்சாகமாகக் கூப்பிடுகிறபோது இப்படி நழுவி ஓடுகிறோமே. நாளைக்குக் கோபித்துக்கொண்டு நம் சீட்டைக் கிழித்தால் என்ன செய்வது? என்ற பயம் கூடவா இந்தப் பயலுக்கு இல்லாமற் போயிருக்கும்? தைரியசாலியா இருந்தால் மேடை வரை வந்து எனக்கு உங்கள் பாராட்டும் பரிசும் தேவையில்லை’ என்று மறுத்திருக்க வேண்டும். அதையும் இவன் செய்யவில்லையே.

அதையும் தான் பார்க்கலாமே! திங்கட்கிழமை நாளைக்குத் தானே? நாளைக் காலை ஆபீஸ் தொடங்குமுன் 9.30 மணிக்கே நான் போய்விட வேண்டும். அப்படிப் போனால்தான் இந்த முருகேசனைத் தனியாக அழைத்து விசாரிக்க வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் இவனை அழைத்து விசாரித்தது ஆபீஸ் முழுவதும் பரவி விடும். முருகேசன் நான் போகிறபோது ஆபிசுக்கு வந்திருக்க வேண்டுமே என்ற கவலையே இல்லை. இந்தப் பதினைந்து வருடமாக அவன் சரியாக ஒன்பது மணிக்கே ஆபிஸுக்கு வந்துவிடுகிறான் என்று தெரிந்து அந்த ஒழுங்கையும் காலந் தவறாமையையும் பாராட்டுவதற்காகத் தானே ஆண்டு விழாவில் அவனுக்குப் பரிசளிக்கும் நினைவே எனக்கு வந்தது?

அப்பாடா! திங்கட்கிழமை விடிந்துவிட்டது. மணி 8-30. குளித்து உடை மாற்றிக் கொண்டு சிற்றுண்டியும் ஆகிவிட்டது. செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கிறேன். குபேரா கெமிகல்ஸ்’ ஆண்டு விழாவைப் பற்றிப் பிரமாதமாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளிலும் என் படத்தைப் போட்டு நான் தொடங்கப் போகும் புதிய கடிகாரக் கம்பெனி பற்றியும் எழுதியிருந்தார்கள். அவசரக் குடுக்கையான ஒரு நிருபர், 'குபேராகெமிகல்ஸ் ஆண்டு விழாவில் ஊழியருக்குப் பரிசு வழங்கப்பட்டது' என்றும் எழுதியிருந்தார். 'பரிசு வழங்கல்’ ‘யாருக்கு யார்' என்று போடாமல் நிகழ்ச்சி நிரலில் நான் இரகசியமாகக் குறித்திருந்ததை வைத்துத் தானாக இந்தச் செய்தியைத் தயார் செய்திருக்க வேண்டும் அந்த நிருபர்!

"டிரைவர் காரை எடு: கம்பெனிக்குப் புறப்படலாம்.”

“நேரம் ஆகலிங்களே”

“நேரம் ஆகாட்டிப் பரவாயில்லை. இன்னிக்கு நான் சீக்கிரமே அங்கே போகனும்.”

"இதோ. சார்.”
'கெடிலாக் ஒசைப்படாமல் பங்களா போர்டிகோவில் வந்து நின்றது. நான் ஏறிக்கொண்டேன். கார் புறப்பட்டது.

கார் கம்பெனிக்குள் நுழைவதற்கு ஒரு பர்லாங் முன்னால் முருகேசன் செருப்பும் இல்லாத காலோடு நடைபாதை மேல் மெல்ல நடந்து சென்றுகொண்டிருப்பதைக் காருக்குள் இருந்தே நான் பார்த்து விட்டேன்.

"டிரைவர் காரை நிறுத்து." கார் நின்றது. நான் முருகேசனைக் கை தட்டி அழைத்தேன்.என் கைதட்டுதல் பல பேரைத் திரும்பிப்பார்க்கச்செய்து ஏமாற்றியபின் முருகேசனும் திரும்பிப் பார்த்தான். பதறிப்போய் பயபக்தியோடு ஒடி வந்தான். “ஆபீஸுக்குத்தானேபோறே?. முன்னாலே ஏறி உட்கார்ந்துக்கோ.”

"நீங்க போங்க சார். நான் நடந்தே வந்திடறேன்.”

“நீ கார்லே வரமாட்டியா?”

“அதுக்கில்லே சார். உங்களோடே. எனக்குக் கூச்சமா இருக்கு சார்.”

“ஆல் ரைட் ஆபீஸ் வந்ததும் நீ என்னை ரூம்லே வந்து பாரு. டிரைவர் போ...”

கார் முன்னேறியது. கார் ஆபீஸின் முன்புறம் வந்து நின்றதும் நான் இறங்கி ஏர்க்கண்டிஷன் ரூமுக்குள் போய் முருகேசனை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.


கடிகாரத்தில் ஒன்பது அடிக்க மூன்று நிமிஷம் மீதமிருந்தது. கோவில் கர்ப்பக் கிருகத்தில் நுழைகிற மாதிரி ஸ்பிரிங் கதவை மெல்லத் தள்ளிக்கொண்டு முருகேசன் என் முன்னால் வருகிறான். நான் நிமிர்கிறேன்.

"அப்படி உட்கார்”

"பரவால்லே சார்.”
அவன் உட்காரவில்லை.

“ஆமாம். அதென்ன அன்னிக்கி ஆண்டு விழாவிலே திடீர்னு அப்படிச் செய்தே? எல்லார் நடுவிலேயும் என்னைத் தலை குனியும்படி பண்ணிட்டியே அப்பா? நீ நியாயமா நடந்துக்கிறே என்றுதான் நான் உன்னைக் கெளரவிக்க முன்வந்தேன். பதிலுக்கு நீ என்னைக் கெளரவிக்காமே.”

“ஐயையோ சார். அப்படி எல்லாம் இல்லை. இதோ இங்கே பாருங்க. இந்த நாலுமொழம் வேஷ்டி அண்ணைக்கிக் கரைக் கட்டுலே கிழிஞ்சு மேல் நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து. அசிங்கமாப் போச்சு.இரண்டு கிழிசல் நுனியையும் முடிச்சுப் போட்டுக்கிட்டு மறைச்சு உட்கார்ந்தேன். நீங்க கூப்பிட்டதும் எனக்குக் கூச்சமாயிடிச்சு. ஒடறதைத் தவிர... வேறெண்ணும் தோணலை. வேஷ்டி கிழியாம இருந்தாலும். நான் இந்தப் பரிசு, புகழ் எல்லாம் வாங்கிக்கறதை வெறுப்பவன்.”

நான் பார்த்தேன். அவன் வேஷ்டி கிழிசல், சட்டையிலும் அங்கங்கே கிழிசல்கள்.

“இப்படி எல்லாம் சிரமமாயிருந்தா எங்கிட்டச் சொல்லப் படாதோ?. நான் ஏதாவது செய்ய முடியுமோ..?”

“நமக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கும். அதை யெல்லாம் இன்னொருத்தரிடம் சொல்லி முடியுமோ? நாமேதான் சமாளிக்கணும் மற்றவர்களுடைய அநுதாபத்துக்கு ஏங்கறது கூட நாகரிகமான கோழைத்தனம்தான். எனக்கு வர கஷ்டத்தை நானே கொண்டாடனும்கிறதுதான் எங்க பெரியவங்க எனக்குச் சொன்ன பாடம்.”

நான் அயர்ந்து போனேன். இவனா கோழை?இவனா அப்பாவி? இவனா சாது?
"அது சரி. ஆனா நீ நியாயமா நடந்துக்கிறதை நான் பாராட்டறது.” “உங்கபெருந்தன்மைன்னு நினைச்சுச் சந்தோஷப்படறேன் சார்! ஆனாநியாயமா நடந்துக்கணும்கிறதை முழு மூச்சா வைச்சு உழைக்கிறவன் அது பாராட்டப் படணும்னும் எதிர்பார்க்க வேணுமா? நான் எனக்காகத்தான் ஒழுங்காயிருக்கேனே தவிர நான் ஒழுங்காயிருந்தா யாராவது அதைப் புகழலாம் கிறதுக்காக ஒழுங்கா இருக்கிறதானால் புகழுக்கும் பரிசுக்கும் அப்புறம் ஒழுங்காயிருக்கனும்கிற அவசியமில்லீங்களே.”

மெல்ல நகர்ந்தன சில நிமிஷங்கள். மெளனம்.என்னிடம் வருகிறேன் என்று கூடச் சொல்லிக்கொள்ளாமல் மெல்ல நடந்து போய் விடுகிறான் முருகேசன். அவன் போன சில விநாடிகளுக்கு எல்லாம் 'குபேரா கெமிகல்'ஸின் விளம்பர ஆலோசகர் வந்து, இந்த ஆண்டு விழாவின் அறிக்கையையும் புதிய கம்பெனியின் தொடக்கத்தையும் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் தருவது சம்பந்தமாக என்னை அணுகுகிறார். எனக்கு மனம் வேறு எங்கோ இருந்தது.

ஆண்டு அறிக்கைக்குக் கீழே வெளியிட என் படம் வேண்டுமென்கிறார். நான் சுவரில் மாட்டியிருந்த குரூப் போட்டோ ஒன்றை எடுத்து அதில் ஒரு முகத்தைச் சுட்டிக் காட்டி, "நம்முடைய பதினைந்தாவது ஆண்டு அறிக்கையின் கீழ் இந்தப் படத்தைத் தனியே பிரித்து என்லார்ஜ் செய்து போட்டு விடுங்கள்.” என்கிறேன். விளம்பர ஆலோசகர் மலைத்துப் போய்க் கேட்கிறார்.

“இது யார் படம் சார்? அறிக்கையில் போடணும்னா ஒரு ஸ்டேட்டஸ்’ வேணுமே?”

“நீங்கள் சொல்கிற ஸ்டேட்டஸ் இவனைத் தவிர வேறு யாருக்கும் இங்கே இல்லை. எனக்குக்கூட."

விளம்பர ஆலோசகர் மிரள்கிறார். அந்த 15-வது ஆண்டு 'குபேரா கெமிகல்ஸ்’ ஆண்டு அறிக்கையில் முருகேசனுடைய படம் பத்திரிகைகளில் 'ஸ்தாபனத்தின் இலட்சிய ஊழியர்' என்ற பெயரோடு வந்த காரணம் ஒருவருக்கும் புரியவில்லை.

யாரோ முருகேசனிடமே கேட்டார்கள்.

"அப்படியா? எனக்குத் தெரியாதே" என்று சர்வ சாதாரணமாகப் பதில் வந்தது அவனிடமிருந்து.

(1961)