நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/அனுதாபக் கூட்டம்

121. அனுதாபக் கூட்டம்

தியாகி கந்தப்பப்பிள்ளை அமரராகி ஏழு நாட்கள் கழிந்து விட்டன. பாவி மனிதர் இன்னும் நாலைந்து மாதங்கள் இருந்து விட்டுப் போயிருந்தால், 200 ரூபாய் பென்ஷனைச் சிறிது காலமாவது வாங்கியிருக்கலாம். பென்ஷன் அறிவித்து வந்த முதற்பட்டியலிலேயே அவர் பெயரும் வந்து விட்டது. பத்திரிகையில் அந்த அறிவிப்பைப் பார்த்த மறுதினம் அவர் காலமாகி விட்டார். உள்ளூர் தேச பக்தர்கள் அவருக்குச் செய்த இறுதி மரியாதை என்பது அவர் சடலத்தின் மேல் போர்த்திய மூவர்ணக் கொடி மட்டும்தான். ஊரிலிருந்த ஒரு சில தேச பக்தர்களும், பத்துப் பன்னிரண்டு கதர் ஜிப்பா ஆட்களும், இரண்டு மூன்று சிறுவர்களும்தான் கந்தப்பப் பிள்ளையின் அந்திம ஊர்வலத்தில் உடன் சென்றவர்கள். எல்லாருக்கும் போய் விட்டார் என்பதில் இருந்த வருத்தத்தைவிட அறிவிக்கப்பட்ட பென்ஷனை வாங்காமலேயே போய்விட்டாரே என்பதில்தான் அதிக வருத்தம். லாபம் வரும்போது பார்த்தா மனிதர் இறப்பார்?

80-வது வயதில் ஒருவர் இறப்பது என்பது அப்படி ஒன்றும் அசாதாரணமானதில்லை; சாகிற வயதுதான் என்றாலும், குடும்பத்தினரும் மற்றவர்களும் துயரப்படுவதற்குக் காரணங்கள் இருந்தன. அவை மெய்யான காரணங்கள :

தியாகி கந்தப்பப் பிள்ளை இந்த உலகில் இருந்து புறப்பட்டுப் போகும் போது எதையும் கொண்டு போகவில்லை. என்றாலும், குடும்பத்தினருக்குப் பாரமாக நிறைய விஷயங்களை விட்டுச் சென்றிருந்தார். இந்தத் தேசத்தின் பொருளாதாரத்தை விடப் படுமோசமான பொருளாதார நிலையில் உள்ள குடும்பம் அது. இன்னும் கலியாணமாகாத வயது வந்த இரண்டு பெண்கள் ஏராளமான கடன் சுமை. வீட்டு வாடகைப் பாக்கி; எல்லாவற்றையும் விட்டுச் சென்றிருந்தார் கந்தப்பப் பிள்ளை; சிரமத்துக்கு இவை போதாதா?

அவருக்கு மொத்தம் ஆறு பெண்கள். முதல் நான்கு பெண்களுக்கு அவர் அதிக மூப்படைவதற்கு முன்பே திருமணமாகி அவர்கள் கணவர் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள். காலமாவதற்கு முன் கடைசி இரண்டு பெண்களுக்கும் திருமணம் நடத்த அலைந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவரது சாவுக்கே அந்தக் கவலையும், மனவேதனையும்தான் காரணம் என்று அக்கம் பக்கத்தாரும், உறவினரும் பேசிக் கொண்டார்கள். கந்தப்பப் பிள்ளையின் மனைவி கோமதியம்மாள் கூடத் துக்கத்துக்கு வந்தவர்களிடம் அப்படித்தான் சொன்னாள். உண்மையும் அதுதான் என்பதை யாரும் மிகச் சுலபமாகவே ஊகித்துக் கொள்ளலாம். கந்தப்பப் பிள்ளை காலமான தினத்தன்று உள்ளூர்ப் பெரிய மனிதரும், பிரமுகரும் பஞ்சாயத்துத் தலைவருமான மாவடியாப் பிள்ளை ஊரில் இல்லை. ஏதோ பஸ் தேசிய மய விஷயமாகச் சென்னையிலுள்ள வக்கீலைக் கலந்து பேசப் போயிருந்தார். அவருக்கு ஒரு பஸ் ரூட் இருந்தது. ‘ஃப்ளீட் ஒனர்களில்’ அவரும் ஒருவர்.

தியாகி கந்தப்பப் பிள்ளையைப் போல் உப்பு சத்தியாகிரகம், தனி நபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்டுப் போராட்டம் எதிலும் எதற்காகவும் சிறை செல்லவோ, அடி உதைபடவோ செய்யவில்லை என்றாலும், மாவடியா பிள்ளை1950க்குப்பின் கதர்ச் சட்டையை மாட்டிக் கொண்டு, தேர்தல் நிதிகளுக்குத் தாராளமாக நிதி உதவி செய்ததன் மூலம் முன்னுக்கு வந்து விட்டவர். ஊரில் தியாகி கந்தப்பப்பிள்ளைக்கு வராத செல்வாக்கும், சமூக அந்தஸ்தும் மாவடியாப் பிள்ளைக்கு வந்து விட்டது. பதவி வந்தது. பஸ் ரூட் வந்தது. கட்சியும் கைக்கு வந்தது. ஒன்பதாண்டுச் சிறை வாசம் செய்த கந்தப்பப் பிள்ளைக்கும் கிடைக்காத வசதிகள் எல்லாம் சுதந்திரம் கிடைத்த பின், தேசபக்தராக மாறிய மாவடியாப் பிள்ளை குடும்பத்துக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில், மாவடியாப் பிள்ளையின் தந்தை ஜஸ்டிஸ் கட்சி, சுதந்திரம் கிடைத்த பின் ஒரு மகனைக் காங்கிரஸில் உறுப்பினராக்கி வைத்தார் அவர். மற்ற மகன்களை வேறு கட்சிகளில் நுழைத்து விட்டார்; இன்று இந்த நாட்டில் உள்ள பல பணக்காரக் குடும்பங்களுக்கு எந்தக் கட்சி ஆள வந்தாலும், யார் அதிகாரிகளாக வந்தாலும் கவலை இல்லை. ஏனெனில், அவர்கள் மிகவும் முன் ஜாக்கிரதையோடு தங்கள் குடும்பத்தில் ஒவ்வொருத்தரை ஒவ்வொரு கட்சியில் பிரமுகராக்கி வைத்திருக்கிறார்கள். ஏழைகளும், மத்திய தர வர்க்கத்தினருமே அப்பாவித்தனமாக ‘ஒன்றே - கொள்கை - ஒருவனே தலைவன்’ என்று நம்பிக்கைக் கொண்டு தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்; மாவடியாப் பிள்ளையோ, அவருடைய குடும்பத்தினரோ எந்தக் காலத்திலும், எதற்காகவும் இப்படித் திண்டாடியதில்லை. அவர்களுக்கு இங்கிதம் தெரிந்திருந்தது.

சென்னையிலிருந்து திரும்பியதும், கந்தப்பப் பிள்ளை காலமான செய்தி அறிந்த மாவடியாப் பிள்ளை உடனே கந்தப்பப் பிள்ளையின் குடும்பத்தினரைப் பார்த்துத் துக்கம் கேட்கச் சென்றார். ஒரு பெரிய அனுதாபக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தார். கந்தப்பப் பிள்ளை குடும்பத்துக்கு நிதி உதவிக்கு ஒரு குழுவும் அமைத்தார். அனுதாபக் கூட்டத்துக்குத் தான் நேரில் போக முடியாத கந்தப்பப் பிள்ளையின் மனைவி, மணமாகாமல் வீட்டில் இருந்த பெண்கள் இருவரையும் அனுப்பி வைத்திருந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு அனுதாபக் கூட்டம் என்று விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. டவுன் ஹாலில் கூட்டம் நடக்கும் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஆறு மணிக்குத்தான் கொஞ்சம் கூட்டம் சேர்ந்திருந்தது. “ஹால் நிறையக் கூட்டம் சேர்ந்ததும் எனக்கு போன் பண்ணு. அப்புறம் நான் வர்ரேன்” என்று கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும் மாவடியாப் பிள்ளை, செயலாளரிடம் சொல்லி வைத்திருந்தார். மற்றப் பேச்சாளர்கள் எல்லாம் கூட வந்தாயிற்று: ஆறரை மணிக்குத்தான் மாவடியாப் பிள்ளை ஒரு பெரிய காரில், சில்க் ஜிப்பா மினுமினுக்க விரல்களில் வைர மோதிரங்கள் மின்ன வந்து இறங்கினார்; எதிர்ப்பட்ட கூழைக் கும்பிடுகளுக்குப் பதில் கும்பிடு போட்டபடி அவர் உள்ளே நுழைந்து, தலைவர் ஆசனத்தில் அமர்ந்தார். உடனே கதர் ஜிப்பா அணிந்த ஒல்லியான ஆள் ஒருவன்-அப்போதுதான் முதல் முதலாக மைக்கில் பேசுகிறானோ - என்னவோ மைக்கையே வாயால் கடித்து விடுவது போல் அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டு பேசினான்!

“பொது மக்களே! நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வள்ளல் மாவடியாப் பிள்ளை அவர்கள் வந்து விட்டதால் கூட்டம் தொடங்குகிறது” என்று அறிவித்து விட்டு, “மறைந்த தியாகி கந்தப்பப் பிள்ளைக்கு அஞ்சலி செய்வதற்காக எல்லாருமே இரண்டு நிமிஷம் மெளனமாக எழுந்து நிற்க வேண்டும்” என்று கூட்டத்தினரை நோக்கி வேண்டினான் அவன். உடனே எல்லாரும் எழுந்திருந்து மெளனமாக நின்றார்கள். இரண்டு நிமிஷங்கள் ஆனதும், முதலில் கூட்டத் தலைவர் மாவடியாப் பிள்ளை தம் இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து மற்றவர்களும் அமர்ந்தார்கள். மாவடியாப் பிள்ளையைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கச் சொல்லி ஒருவன் முன்மொழிய, மற்றொருவன் வழி மொழிந்த பின் கூட்டம் தொடங்கியது. முதலில் பஸ் அதிபர் மாவடியாப் பிள்ளை பேசினார் :

“நண்பர்களே! எனக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது. கந்தப்பப் பிள்ளை சிறநத தேச பக்தர். அவரைப் போன்றவர் இன்னும் சிறிது காலம் வாழ என் உயிரையும் கூட நான் அளித்திருப்பேன். என் முன்னேற்றத்தைக் கண்டு பூரித்த பெருமகன் அவர். அவர் ஆசியோடு முன்னேறியவன் நான். அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட இதோ இந்த கூட்டத்திலேயே பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அறிவிக்கிறேன்” என்று கூறி, அவர் பேச்சை முடித்தார்.அதற்குப் பின் பேசிய யாரும் கந்தப்பப் பிள்ளை இறந்தது பற்றி பேசவோ, வருந்தவோ இல்லை. எல்லாருமே பஸ் அதிபர் மாவடியாப் பிள்ளையின் தாராள குணத்தை வியந்தும், அவர்ப் பத்தாயிரம் ரூபாய் தருவதாக அறிவித்ததைப் புகழ்ந்துமே பேசினார்கள். கடைசிப் பேச்சாளர் வரை மாவடியாப் பிள்ளையின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்துதான் பேசினார்கள். அது கந்தப்பப் பிள்ளை இறந்ததற்காக நடத்தப்பட்ட அனுதாபக் கூட்டம் என்பதை விட மாவடியாப் பிள்ளையைப் பாராட்ட நடத்தப்பட்ட கூட்டம் என்பது போல நடந்து முடிந்து விட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த கந்தப்பப் பிள்ளையின் மகள்கள் இரண்டு பேரும் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்து கேட்டு விட்டு அவசரம் அவசரமாக வீடு திரும்பினார்கள்.

“என்னடி? என்ன பேசினாங்க? பண உதவிக்கு எதினாச்சும் வழி உண்டா? மானமா உங்களைக் கட்டிக் கொடுத்துப் புருசன் வீட்டுக்கு அனுப்ப முடியுமா?” என்று திருமதி கந்தப்பப் பிள்ளை அவர்களைக் கேட்ட போது,

“அங்கே முதல்லே பேசினவரு அப்பா பெயரிலே மண்டபம் கட்டப் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை தரேன்னு சொன்னாரு. அவ்வளவுதான். அதுக்கப்புறம் பேசினவுங்க யாருமே அப்பாவைப் பற்றி எதுவுமே பேசலை. நன்கொடை தரேன்னு சொன்னவரைப் பத்தித்தான் உசத்தியாப் புகழ்ந்து பேசினாங்க. அப்புறம் கடைசி வரை அப்பா பேரே வரலை. கூட்டம் முடிஞ்சிட்டுது. புறப்பட்டு வந்துட்டோம்” என்று அவர்களிடமிருந்து தாயை நோக்கிப் பதில் வந்தது.

“குடும்பத்துக்கு உதவி செய்ய நிதி உதவிக் குழு அமைக்கப் போறதா அந்த மாவடியாப் பிள்ளை இங்கே துக்கத்துக்கு வந்தப்பச் சொல்லியிருந்தாரே; அதைப் பற்றி ஒண்ணும் அங்கே பேசினவங்க சொல்லலியா?”

“சொன்னாங்க. ‘நிதி உதவி செய்யறதை விட அவர் பேரும், புகழும் என்னைக்கும் நிலைச்சி நிற்கிற மாதிரி ஒரு நினைவு மண்டபம் கட்டிடறதே நிலைத்த சின்னமாக அமையும்’னு வரவேற்புரை கூறினவர் யோசனை கூறினார். அந்த யோசனைப்படியே தலைவர் பேசினார். மற்றவர்களும் அதையே ஆதரிச்சுப் பேசிட்டாங்க. அதுக்கப்புறம் யாரும் குடும்பத்தைப் பத்தியே எதுவும் சொல்லலே”

“குடும்பம் நடுத்தெருவில் நிற்கும்னு நினைச்சாங்களா?”

“என்ன நினைச்சாங்களோ தெரியலை, எல்லாருமா அந்த மாவடியாப் பிள்ளையை இந்திரன் சந்திரன்னு புகழ்ந்தே பேசிக் கூட்டத்தை முடிச்சுப்பிட்டாங்க”

“அப்டீன்னா, இங்கே வா! நான் எழுதறாப்ல அந்த மாவடியாப் பிள்ளைக்கு உடனே ஒரு லெட்டர் எழுது. உயர்திரு மாவடியாப் பிள்ளை அவர்கள் சமூகத்துக்கு, இறந்த தியாகி கந்தப்பப் பிள்ளையின் மனைவி கோமதியம்மா எழுதுவது. தாங்கள் என் கணவர் பெயரில் கட்ட இருக்கும் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் தோண்டியதும், எங்களுக்குத் தகவல் தெரிவித்தால் நானும் என்னுடைய மணமாகாத இரு பெண்களும் அங்கு வருகிறோம். எங்களை உள்ளே தள்ளி மூடி விட்டு அதன் மேல் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் போடுவதுதான் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். தயவு செய்து அப்படியே செய்யக் கோருகிறேன்.”

“அம்மா! அம்மா! ஏம்மா இவ்வளவு ஆத்திரப்படறே?”

“ஆத்திரப்படாமே என்னடி செய்யச் சொல்றே? உங்கப்பா தியாகியாகச் சாகாமல் ஒரு தொழிற்சாலைக் கூலியாகச் செத்திருந்தால் கூட பி.எஃப். அது இதுன்னு ரெண்டாயிரம், மூவாயிரம் கைக்கு வரும். தியாகியாகச் செத்ததினாலே அனுதாபக் கூட்டம் போட்டது தவிர வேறென்ன மிச்சம்” என்று கைகளைச் சொடுக்கினாள் கோமதி ஆச்சி. அவளுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பெண்களால் முடியவில்லை. அவர்கள் ஒன்றும் பேசத் தோன்றாமல் கண்கலங்கி நின்றார்கள்.

(1975-க்கு முன்)