நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/மறுபடியும் ஒரு மகிஷாசுர வதம்
120. மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம்
மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அரசுப்பட்டியில் ஒரு புதிய அரசாங்கப் பெண்கள் கலைக் கல்லூரிக்கான விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களைக் கோரிப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளிவந்திருந்தன.
அந்தக் கல்லூரி புதிதாக மே மாதம் பதினைந்தாம் தேதி மாண்புமிகு அமைச்சரொருவரால் திறந்து வைக்கப்பட இருந்தது. ஏப்ரல் 10ந் தேதி விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுக்க இண்டர்வியூக்கு நாள் குறித்திருந்திருந்தார்கள். கட்டிடங்கள் போதுமான அளவு உருவாகவில்லை என்றாலும், கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட நாற்பது ஏக்கர் நிலத்தில் சில கூரை ஷெட்டுகளை அவசர அவசரமாக அமைத்துக் கல்லூரியைத் தொடங்க இருந்தார்கள். இந்த அவசரத்திற்குக் காரணம் ஜூலை மாத நடுவில் அந்த வட்டாரத்தில் பாராளுமன்ற உபதேர்தல் ஒன்று நடக்க இருந்தது. அந்த உபதேர்தலில் வெற்றி பெறக் காரணமாக, அங்கே தாங்கள் சாதித்திருக்கும் சாதனைகளின் பட்டியலில் இந்தப் பெண்கள் கல்லூரியும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தான் அரசாங்கம் இதற்கு இவ்வளவு தவித்துப் பறந்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அந்த வட்டாரத்தில் அதிகமாக வசித்த ஒர் இனத்தையும் அந்த இனத்தின் ஏராளமான வாக்காளர்களான பெண்கள் ஒட்டையும் கவருவதற்காக முன்கூட்டியே இது திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் மட்டும் வரவில்லை என்றால், அங்கே அவ்வளவு அவசரமாகக் கல்லூரி வந்திருக்காது. இண்டர்வியூவை எதிர்பார்த்து விண்ணப்பித்திருந்தவர்களில் மாயாண்டி அம்பலத்தின் பேர்த்தி முத்தம்மாளும் ஒருத்தி, அவள் முந்திய ஆண்டுதான் பக்கத்தில் அறுபது மைல் தொலைவிலுள்ள பெரிய நகரின் பெண்கள் கல்லூரி ஒன்றில் படிப்பை முடித்துத் தமிழ் எம்.ஏ. தேறி அரசுப் பட்டிக்கு வந்து ஒரு வருடகாலம் வேலையில்லாமல் இருந்தாள்.
முத்தம்மாள் தாத்தாவிடம் வளர்ந்தவள். முத்தம்மாளுக்கு ஐந்து வயதாயிருந்தபோது அவள் தகப்பன் இரவில் பருத்திக் காட்டுக் காவலுக்குப் போயிருந்த இடத்தில் வரப்பு மேட்டில் வைத்து இரவோடிரவாகச் சில ஜன்ம விரோதிகளால் தூங்கும் போது வெட்டிக் கொலை செய்யப்பட்டான். அதனால் விதவையான மாயாண்டி அம்பலத்தின் ஒரே மகள் குழந்தையோடு தகப்பன் வீடு வந்து சேர்ந்தாள்.ஒரே மகள் வயிற்றுப் பேத்தியைச் செல்லமாக வளர்த்துப் படிக்க வைத்தார். முத்தம்மாள் தைரியத்தில் தன் தந்தையைக் கொண்டிருந்தாள். அவளுடைய பள்ளிப் பருவத்தில் ஒரு நாள் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது வழியில் கண்ட நல்ல பாம்பு ஒன்றைப் பயப்படாமல் துரத்தி அடித்துக் கொன்று மூங்கில் கழி நுனியில் அடித்த பாம்புடன் தாத்தாவுக்கு முன் தோன்றி பாராட்டுப் பெற்றிருக்கிறாள் அவள். சிறு வயதில் பயம் என்பதே என்னவென்று அறியாமல் வளர்ந்தவள் அவள்.
“அப்பனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது. ஆனால், பெண்ணாகப் பிறந்திருக்கே” என்று தாத்தா மாயாண்டி அம்பலம் வாய்க்கு வாய் அவளைப் பற்றிச் சொல்லி வியப்பது வழக்கமாயிருந்தது.
“அதுதான் எனக்கு பயமாயிருக்கு அப்பா! அவரு அத்தினி அடாவடித்தனமா நிமிர்ந்து இருந்ததுனாலேதான் பருத்திக் காட்டிலே தூங்கறப்போ நாலஞ்சு பேராச் சேர்ந்து சதி பண்ணிக் கொன்னுட்டாங்க. இந்தப் பெண்ணுக்கும் அதே தைரியம் இருக்குதே, எப்படி ஆகுமோ, என்ன ஆகுமோன்னு எனக்கே பயமாயிருக்குது அப்பா” என்பாள் முத்தம்மாளின் தாய்.
பருவம் அடைந்த பின்பு முத்தம்மாளுடைய அழகும், தைரியத்தோடு போட்டி போட்டுக் கொண்டு செழித்திருந்தது. பாயத் தயாராக நிற்கும் அரபிக் குதிரை மாதிரி மதமதவென்று வளர்ந்து விட்டாள் முத்தம்மாள். நல்ல உயரம். வாளிப்பான அங்கங்கள். குறுகுறுப்பான விழிகள். துறுதுறுப்பான முகம். வெள்ளை வெளேரென்ற அளவான பல் வரிசை. கணீரென்ற குரல், அவளைப் பார்க்கிற எந்த ஆண் பிள்ளையும் இன்னொரு முறை திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போக வேண்டுமென்ற நப்பாசையைத் தவிர்க்கவே முடியாது. நடந்து வரும் போதோ அவள் அழகைச் சொல்லி மாளாது. அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரோ, கோபுரமோ புறப்பட்டு வருவது போல எடுப்பாக இருக்கும். முடிந்தாலும், அவிழ்ந்து தொங்கினாலும் எடுப்பான நீண்ட கருங்கூந்தல், ஆற்றில் அலையோடி வற்றிய இடத்துக் கருமணல் போல், எண்ணெய்ப் பளபளப்புடன், நெளிநெளியாக மின்னும் அவள் கூந்தற் கருமை மனத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மையை உடையது. ஏற்பட இருந்த அரசப்பட்டி அரசினர் பெண்கள் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள் அவள். ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி இண்டர்வியூவிற்கு முன்பே பிரின்ஸிபாலாக கல்வி மந்திரிக்கு மிகவும் வேண்டியவரென்று சொல்லப்பட்ட ஓர் அம்மாள் நியமிக்கப்பட்டு விட்டார்.
மற்றப் பதவிகளுக்கு இண்டர்வியூ செய்ய மூவர் கொண்ட குழு ஒன்றை அரசாங்கம் நியமித்திருந்தது. பிரின்ஸிபாலாக நியமிக்கப்பட்டிருந்த அம்மாள் தவிர, அரசுப்பட்டி வட்டார எம்.எல்.ஏ. அரசை, அத்தியழகன், பல்கலைக்கழகப் பிரதிநிதியாக ஒருவர் ஆக மூவர் ஏப்ரல் 10ந் தேதி அரசப்பட்டி டிராவலர்ஸ் பங்களாவில் அந்த இண்டர்வியூவை நடத்தினர். காலை பத்து மணிக்கு இண்டர்வியூ தொடங்கியது. ஏப்ரல் மாதம் ஆகையால் வெய்யில் கடுமையாக இருந்தது வெளியேதான். உள்ளே அந்த டிராவலர்ஸ் பங்களாவில் இரண்டு முறை முதலமைச்சர் வந்து தங்கியிருந்ததனால், அவருக்காக சர்க்கார் செலவில் அது ஏர்க்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தது.முதலில் மற்ற மற்றப் பாடப்பிரிவுகளுக்கான விரிவுரையாளர்களின் இண்டர்வியூ முடிந்ததும், பதினொன்றரை மணிக்குத் தமிழ் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். மொத்தம் பதினாறு பெண்கள், அதற்காக விண்ணப்பித்திருந்தனர். அந்தப் பதினாறு பேரிலும் பார்க்க எடுப்பாக அழகாக இருந்தவள் முத்தம்மாள் மட்டும்தான். மற்றப் பதவிகளுக்கு இண்டர்வியூ முடிந்து வெளியே வந்தவர்கள் சொன்ன அபிப்பிராயத்திலிருந்து பிரின்ஸிபால் அம்மாளுக்கோ, பல்கலைக்கழகப் பிரதிநிதியாக வந்திருந்த முதியவர் ஒருவருக்கோ அதிகம் செல்வாக்கு இல்லை என்றும் எம்.எல்.ஏ.வான அரசை அந்தியழகன்தான் அதில் செல்வாக்குள்ள புள்ளி என்றும் எல்லாரும் பேசிக் கொண்டார்கள். அரசை அந்தியழகன் சிபாரிசு செய்கிற நபருக்கு வேலை நிச்சயமாகக் கிடைக்கும் என்று தெரிந்தது. அதை ஒட்டி அரசை அந்தியழகனை எப்படி திருப்திப்படுத்துவது என்ற முணுமுணுப்பான பேச்சுக்கள், விமரிசனங்கள் வெளியே காத்திருந்தவர்களிடையே சில கணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
ஒவ்வொருவராகக் காத்திருந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். முதலில் உள்ளே போய் விட்டு வந்த பெண் வெளியே திரும்பி வந்ததும் சொன்னாள் : “எம்.எல்.ஏ. சார் ஒண்ணுமே கேட்கலை. பிரின்ஸிபால் அம்மாள் ஒரு கேள்வியும், பல்கலைக்கழகப் பிரதிநிதி ஒரு கேள்வியுமாக இரண்டு கேள்வி கேட்டு விட்டுப்போகச் சொல்லி விட்டார்கள்” - இரண்டாவதாக உள்ளே போய் விட்டு வந்த பெண், “எம்எல்ஏ. சார் வகுப்புக்கு எப்படிக் கவர்ச்சியாக உடையணிந்து செல்வீர்கள்?” என்று ஒரு கேள்வி கேட்டார். “நீங்க எப்படி அணிந்து போகச் சொல்றீங்களோ, அப்படி அணிந்து கொண்டு போகிறோம் சார்” என்று நான் பணிவாகப் பதில் சொல்லிவிட்டு வந்தேன்” என்றாள்.
முத்தம்மாள் உள்ளே போன போது அரசை அந்தியழகன் அவளையே வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல் பார்த்தான். மற்ற இருவரும் ஏதேதோ கேள்விகள் கேட்டார்கள். முத்தம்மாள் பதில் சொன்னாள். அரசை அந்தியழகன்,”உங்கப்பா பேரு என்னம்மா? அவரு என்ன செய்யிறாரு?” என்று முத்தம்மாளை ஒரே கேள்வி மட்டும் கேட்டான்.
“எங்கப்பா இல்லே. இறந்து போயிட்டாரு. அம்மாவும் தாத்தாவும்தான் இருக்காங்க” என்றாள் அவள்.
அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை. அவள் அவனைப் பார்த்து ஓரளவு அருவருப்பு அடைந்தாள். அவன் முகம் எருமை மாட்டின் மூஞ்சியைப் போலிருந்தது. மேலே தலை சிறுத்துக் கீழே வர வரப் பீப்பாய் போன்ற உடலுடன், எருமைத் தலையைப் பீப்பாயில் ஒட்ட வைத்து, அதற்குக் கையும் காலும் முளைக்கச் செய்தது போல இருந்தான் அரசை அந்தியழகன். இண்டர்வியூ முடிகிற வரை அவனுடைய மாட்டு முழிகள் இரண்டும் அவளது உடலிலேயே லயித்திருந்தன. இண்டர்வியூ முடிந்து, அவள் வெளியேறும் போதும், “நீ கொஞ்சம் வெளியே இரும்மா! போயிடாதே, உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று அவளிடம் சொன்னான் அந்தியழகன்.
அவள் நம்பிக்கையோடு வெளியே வந்து காத்திருந்தாள். அப்படிக் காத்திருந்த போது தனக்கு அந்த வேலை கிடைக்காது என்று தானே நினைக்கும்படியாகச் சில விஷயங்கள் அவளுக்குத் தெரிந்தன. தன்னோடு இண்டர்வியூ செய்யப்பட்ட பிற பதினைந்து பேரில் மூன்று முதல் வகுப்பு எம்.ஏ.க்களும், ஆறு இரண்டாம் வகுப்பு எம்.ஏ.க்களும் இருக்கும் போது சாதாரணமாக மூன்றாம் வகுப்பில் எம்.ஏ. தேறியிருந்த தனக்கு அது கிடைக்குமா என்ற சந்தேகம் அவளுக்கே வந்து விட்டது. ஆனாலும், எம்.எல்.ஏ. இருக்கச் சொல்லி வேண்டியிருப்பது அவளுக்கு நம்பிக்கையூட்டியது. தன் குடும்பமும், தாத்தாவும், அம்மாவும் இருக்கிற கஷ்ட நிலைமையில் ஐநூறு ரூபாய்க்கு மேலாக வருமானமுள்ள ஓர் உத்தியோகம் உள்ளூரிலேயே தனக்குக் கிடைத்தால், எவ்வளவு செளகரியமாக இருக்கும் என்று எண்ணினாள் அவள்.
இண்டர்வியூ அநேகமாக முடிந்தது. மற்றவர்கள் ஒவ்வொருவராகப் புறப்பட்டு விட்டனர். எம்.எல்.ஏ. அரசை அந்தியழகன் வெளியே வந்தான்.
முத்தம்மாளை மட்டும் தனியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்று சிரித்துச் சிரித்து நயமாகப் பேசினான் எம்.எல்.ஏ. அவள் என்ன சாதி என்பதை விசாரித்தான். சாதியைச் சொன்னவுடன், “அடேடே! நீ நம்ம வகையறாவைச் சேர்ந்த பொண்ணுன்னு சொல்லு, கவலையே படாதே. இண்டர்வியூ எல்லாம் சும்மா கண்துடைப்புக்குத்தான். நான் சொல்ற ஆளுக்கு இங்கே ஆர்டர் போடுவாங்க. நீ இன்னிக்குச் சாயங்காலமே ஏழு ஏழரை மணிக்கு இங்கே வந்து ஆர்டரை நேரே வாங்கிப் போய் விடு. எங் கையாலேயே உங்கிட்டத் தர்ரேன்.”
“தபால்லே அனுப்பிடுங்களேன் சார்.”
“அட நீ வாம்மா. கரும்பு தின்னக் கூலியா?”
“அப்போ நாளைக்கு காலையிலே நேரே வந்து வாங்கிக்கிறேனே சார்”
“நாளைக்கா? நாளைக்கு என்னை நீ இங்கே பார்க்கவே முடியாது. இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணி ரயில்லே நான் மெட்ராஸ் போயாகணும். நாளைக்கு அசெம்பிளி இருக்கு”
“இன்னிக்கே கண்டிப்பா வரணுமா சார்”
“ஆமாம், இன்னிக்கு ராத்திரி ஏழு மணிக்கு, இதே டிபியிலே இண்டர்வியூ நடந்த இதே ஏ.ஸி. ரூம்லே ஆர்டரோட நான் உனக்காகக் காத்துக்கிட்டிருப்பேன்.”
“சரி சார் வரேன், நீங்கள் இவ்வளவு நிச்சயமா சொல்றப்ப நான் எப்பிடி சார் தட்ட முடியும்?”
முத்தம்மாள் எம்.எல்.ஏ.யிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.அரசுப்பட்டி டிராவலர்ஸ் பங்களா ஊர் எல்லையிலிருந்து ஒதுக்குப்புறமாக இருந்தது. அதிலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு மேட்டில்தான் காலேஜ் அமையப் போகிற காம்பஸ் இருந்தது. ஆர்டரை ஏன் காலேஜில் வைத்துக் கொடுக்காமல் டிபிக்கு வரச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று எம்.எல்.ஏ. சொல்கிறார் என்பது சந்தேகப்படத்தக்கதாக இருந்தது முத்தம்மாளுக்கு. அந்தச் சந்தேகத்தை அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தொலைவு சென்று, மீண்டும் திரும்பிப் போய் எம்.எல்.ஏ.யிடம் கேட்ட போது. “அட நீ என்னம்மா, பயித்தியக்காரப் பொண்ணாயிருக்கே? ஏழு மணிக்கு நீ இங்கே வர்ரப்போ பிரின்ஸிபால் அம்மாளும் இங்கேதான் எங்கூட இருப்பாங்க” என்றார் எம்.எல்.ஏ. பிரின்ஸிபால் அம்மாளும் உடன் இருப்பார்கள் என்று அறிந்தவுடன், முத்தம்மாளின் சந்தேகங்கள் அகன்றன. அவள் நிம்மதியாக வீடு திரும்பினாள். தாத்தாவிடமும், அம்மாவிடமும் நடந்தவற்றைச் சொன்னாள்.
“அதான் பிரின்ஸ்பால் அம்மாளும் கூட இருப்பாங்கன்னு சொல்லியிருக்காரே, போயி ஆர்டரை வாங்கிட்டு வா…” என்றார் தாத்தா.
மாலையில் ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டமுத்தம்மாள், அரசுப்பட்டி ஊரெல்லையில் இருந்த முத்தாலம்மன் கோவிலில் சூடம் கொளுத்தி, அம்மனைக் கும்பிட்டு விட்டு, டிராலர்ஸ் பங்களா காம்பவுண்டில் போய் நுழையும் போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. டி.பி.காம்பவுண்டில் எம்.எல்.ஏ. அந்தியழகனின் கார் நின்றது. கார் ஓரமாக பீடியைப் புகைத்தவாறு டிரைவர் நின்று கொண்டிருந்தான். “ஐயா இருக்காங்களா?” என்று அவள் டிரைவரைக் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு, உட்புறமாகக் கையைக் காண்பித்தான். அப்போது டிராவலர்ஸ் பங்களா காம்பவுண்டில் அந்தக் காரையும், டிரைவரையும் தவிர ஈ காக்காய் இல்லை; அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது.
அவள் தயங்கியபடியே ,ஏ.ஸி. அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். சிகரெட் புகையும், வேறு ஏதோ வாடையும் நெட்டித் தள்ளியது. உள்ளே மேஜையில் நாலைந்து சோடா புட்டிகளும், கண்ணாடிப் புட்டிகளும் கிளாஸ்களும் இருந்தன. பிரின்ஸிபால் அம்மாளைக்காணவில்லை. எம்.எல்.ஏ. ஆடை அவிழ்ந்தது தெரியாமல் மார்பில் பணியன் கூட இன்றிப் படுக்கையில் நிலை குலைந்து சாய்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும் எழுந்து வந்தார் அவர்.
“சார்! பிரின்ஸிபால் அம்மா இன்னும் வரலியா?”
“இதோ அவங்க பக்கத்து அறையில்தான் இருக்காங்க. கூப்பிடறேன். எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லே. நீ உட்காரும்மா” என்று பிரின்ஸிபால் அம்மாளைக் கூப்பிடப் போகிறவரைப் போல் வாயிற் கதவு வரை சென்று குபீரென்று கதவை உட்புறமாகத் தாழிட்டார் எம்.எல்.ஏ. துணுக்குற்ற முத்தம்மாள், கதவை நோக்கி ஓடினாள். எம்.எல்.ஏ.யின் எருமை போன்ற முரட்டு உடல் அவளை நோக்கித் தாவிப் பாய்ந்தது.“பயப்படாதே தங்கம்! இப்படிஆர்டர் வாங்கிக் கொடுக்கிறதுக்கு ஒவ்வொருத்தன் ரெண்டாயிரம் மூவாயிரம்னு பணமா லஞ்சம் கேட்டு வாங்கறான். எனக்கு அதெல்லாம் வேணாம்! இது போதும்” என்று முத்தம்மாளின் செழிப்பான பூப்போன்ற தோள் பட்டைகளில் தன்னுடைய எருமைக் கரங்களை அழுத்திப் பிடித்தான் எம்.எல்.ஏ.
முத்தம்மாள் கூச்சலிட முயன்றாள். வாய் பொத்தப்பட்டது. பின் சாமர்த்தியமாக அங்கே கூச்சலிட்டுப் பயனில்லை என்று உணர்ந்து கூச்சலிடாமல் எம்.எல்.ஏ.க்கு. இணங்குவது போல் போக்குக் காட்டி, அவனைப் படுக்கை வரை அழைத்துச் சென்று கட்டிவில் தள்ளினாள். அவன் நம்பிக்கையோடு சாய்ந்ததும் சரேலென்று திரும்பிய அவள் இரண்டு கைகளிலும் இரண்டு காலி சோடாபாட்டில்களுடன் கட்டிலின் மீது பாய்ந்தாள். நீண்ட நாட்களுக்கு முன் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும்போது தன்னைக் கடித்து விடுமோ என்று அஞ்சிய ஒரு நல்ல பாம்பை அடித்த போது, என்ன உணர்ச்சி வேகம் அவளை ஆட்கொண்டதோ அதே உணர்ச்சி வேகம் இப்போதும் அவளை ஆட்கொண்டது.
பதினைந்தே நிமிஷங்களில் அரசை அந்தியழகனின் மண்டை இரத்தக் களரியாகிவிட்டது. லாரியில் அறைபட்டதொரு நாய் போல் படுக்கையில் கிடந்த அவன் உடலைப் பார்த்து வெறி தணியாமல் நுனி உடைந்த சோடாபாட்டில்களால் தாக்கிக் கொண்டே இருந்தாள் அவள். ஏ.ஸி. அறையாகையினால் யாருடைய கூச்சலும் வெளியே கேட்கவில்லை.
அரை மணிக்குப் பிறகு அவள் வெளியேறிய போது டி.பி. வாசலில் காரருகே பீடி குடித்துக் கொண்டிருந்த டிரைவரையும் காணோம். கையிலிருந்த இரத்தம் குழம்பிய சோடா புட்டியை வீசி எறியவும் தோன்றாமல், மகிஷாசுரமர்த்தினி போல் வீடு நோக்கி நடந்தாள் முத்தம்மாள்.
கொல்லைப்புற வழியாக வீட்டுக் கதவைத் தட்டிய முத்தம்மாளை முதலில் எதிர் கொண்டவர் தாத்தா மாயாண்டி அம்பலம்தான். அப்போது முத்தம்மாளின் அம்மா வீட்டில் இல்லை.
“என்னம்மா கண்ணு? ஏன் கொல்லை வழியாக வந்தே? ஆர்டர் கிடைச்சுதா?”
தாத்தாவுக்குக் கண் பார்வை கொஞ்சம் மங்கல். பேத்தி முத்தம்மாள் இப்போது கொஞ்சமும் பதறாமல், அவருக்குப்பதில் சொன்னாள்.
“தாத்தா ரொம்ப நாளைக்கு முன்னே நான் ஸ்கூல்லே படிக்கறப்போ ஒரு நாகப்பாம்பை அடிச்சுக் கொண்டாந்தேனே, நினைவிருக்கா?”
“அதெப்படிம்மா மறக்கும்? நல்லா நினைவிருக்கு. ரொம்ப நல்லா நினைவிருக்கு.”
“அதைவிடப் பெரிய கருநாகத்தை இன்னிக்கி ரெண்டு கையாலேயும் அடிச்சுக் கொன்னுப் போட்டு வந்திருக்கேன்…”“எங்கேம்மா? தோலுக்காவும்னு செத்த பாம்பைக் கொண்டாந்துட்டியா?”
“இல்லே தாத்தா! பெரிய பாம்புன்னாலே தூக்கிக் கொண்டாற முடியலை என்னைக் கொத்தப் பார்த்திச்சு. கொத்தறதுக்குக்குள்ளார அடிச்சுத் தீர்த்துப் போட்டேன்…”
முன்னால் வாயிற்புறம் கதவு பலமாகத் தட்டப்பட்டது. பூட்ஸ் கால்கள் தரையை மிதிக்கும் ஒசைகள் கேட்டன.
“வாசல்லே யாரோ கதவைத் தட்டுறாங்கம்மா வா.போகலாம்” என்றார் தாத்தா.
“நீங்க இருங்க தாத்தா! நான் போய்த் திறக்கிறேன்” என்று அவள் அவரை முந்திக் கொண்டு வாயிற்புறம் விரைந்தாள்.வந்திருப்பவர்கள் போலீஸ்காரர்கள்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.இனி வரவிருப்பதை நினைத்தும் அவள் கால்களோ, நெஞ்சமோ சிறிதும் நடுங்கவில்லை. ஏனெனில், தான் எந்தத் தவறும் செய்ததாக அவளுக்குத் தோன்றவில்லை. அன்றொரு நாள் ஆதிபராசக்தி மாகாளி துர்க்கை மஹிஷாசுரனை மிதித்துக் கொன்றது தவறு என்றால்தானே இன்று இவள் செய்ததும் தவறாகும்.
(தீபம், தீபாவளி மலர், 1974)