நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஒரு கிராமவாசி சுதந்தரதினத்தன்று சிறைப்படுகிறான்

113. ஒரு கிராமவாசி சுதந்தர
தினத்தன்று சிறைப்படுகிறான்

யனார் ஊருணியிலிருந்து நகரத்துக்குப் புறப்படும் கடைசிப் பஸ் இரவு ஏழரை மணிக்கு இருந்தது. அப்போது மணி ஏழு. வேல்சாமியின் கையில் பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காகக் கொண்டு வந்திருந்த வீச்சரிவாள் இருந்தது. அரிவாளைக் கொண்டு போய்க் குடிசையில் போட்டு விட்டுப் பஸ் ஏற நேரமில்லை. ஊருக்குள் போய் அரிவாளைக் குடிசையில் போட்டுவிட்டு வருவதற்குள் கடைசிப் பஸ் போய்விடும். அரிவாளுடனேயே நகரத்துக்குப் பஸ் ஏற அவனுக்குக் கூச்சமாக இருந்தது. நகரத்துக்குச் சென்று திரும்பும் நைப்பாசையையும் அவனால் விட முடியவில்லை. சுதந்திரதின வெள்ளி விழாவுக்காக நகரை ஒளிமயமாக அலங்கரித்திருக்கிறார்களாம். அந்த வெள்ளி விழா அலங்காரத்தின் கோலாகலத்தைப் போய்ப் பார்க்கும் ஆசையில் மாலையிலிருந்தே கிராமத்தில் பலர் நகரை நோக்கிப் பஸ் ஏறியிருந்தார்கள்.

அதிகத் தூரமில்லை. ஒரு மணி நேரப் பயணந்தான். ஏழேகால் பஸ்ஸைப் பிடித்தால் எட்டேகாலுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். சுதந்தர தினக் கோலாகலத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு இரண்டாவது ஆட்டம் படம் பார்த்த பின், பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொஞ்சம் தூங்கினால் காலை நாலரை மணிக்கு முதல் பஸ்ஸில் கிராமத்திற்குத் திரும்பி விடலாம். முடிவில் ஆசைதான் வென்றது. பனைமேட்டிலிருந்து களத்தில் குறுக்கே நடந்து மெயின் ரோட்டில் இறங்கிப் பஸ் நிற்கிற இடத்துக்கு வந்து சேர்ந்தான் வேல்சாமி. சட்டைப்பையில் மூன்று ஒரு ரூபாய்த் தாள்களும் ஐந்து பத்துப் பைசாக்களும் இருந்தன. பஸ் வந்தது; இடித்துப் பிடித்து ஏற முடிந்தும் விட்டது.

“எங்கேய்யா போவணும்? மீசையைப் பார்த்தாலே அருவா மாதிரி இருக்குது. அருவா வேறே எடுத்தாந்துட்டியே? பயமாருக்குப்பா..” என்று கேலி செய்தபடியே டிக்கட்டைக் கிழித்தான் கண்டக்டர்.

அரிவாளை வைத்துவிட்டு வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது வேல்சாமிக்கு. - “நுங்கு வெட்ட எடுத்தாந்தேனுங்க மறுபடி வூட்டாண்டே போயி வச்சிட்டு வரலாம்னா அதுக்குள்ளார பஸ்ஸை விட்டுனு போயிடுவீங்க. அதான் இப்படியே வந்திட்டேன்” என்று உள்ளே எழுகிற ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையுடன் அந்தக் கண்டக்டருக்கு அவன் பதில் சொன்னான். மனம் நகரத்தையும் அதன் விளக்கொளி அலங்காரங்களையும் காணும் ஆவலில் படபடத்தது. பஸ்ஸிலேயே பலர் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தார்கள்.

“இத்தினி ஸீரியல் ஸெட், அலங்காரங்களை இந்த இருபது வருசத்திலே நான் பார்த்ததில்லை. ஊரே ஜெகஜோதியா இருக்குது. முதல் சுதந்தர தினத்தன்னைக்குக் கூட நான் இவ்வளவு வெளக்குப் பார்க்கலை.”

“ஸில்வர் ஜூப்ளி இல்லியா? பின்னே..?”

வேல்சாமி பக்கத்துப் பிரயாணியை விசாரிக்கலானான். “ஒரு மணி நேரத்துலே பார்க்கணும்னா எதை எதைப் பார்க்கலாங்க?"

‘பஸ் ஸ்டாண்டிலே எறங்கினதும் எதிர்த்தாப்ல முனிசிபல் ஆபீஸ் பாரு. பிரமாதமா அலங்கரிச்சிருக்காங்க. அப்புறம் பக்கத்திலேயே சுதந்திர நாள் பூங்கா. ரெயில்வே ஸ்டேஷன் எல்லாம் பாரு.”

பஸ் நகரில் நுழைந்து விட்டது. நகரத்தின் விளக்கு ஒளிகளும், ஒலி பெருக்கிச் சப்தங்களும், ரேடியோ இசைகளும், ரோட்டைத் தேய்க்கும் டயர்களின் இழுவையும் ஒரே சமயத்தில் செவியைத் தாக்கின. கண்களைக் கூச வைத்தன.

வேல்சாமி பஸ் ஸ்டாண்டிலேயே ஒர் ஒட்டலில் இட்டலி, தோசை சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்க'‘கேஷ்’ கவுண்டரின் அருகே போனதும் அரிவாளை எங்கேயாவது வைத்து விட்டுத்தான் மடியிலிருந்து பணம் எடுக்க முடியும் போலிருந்தது. பணத்தை வைக்க வேண்டிய மேஜையில் அரிவாளை வைத்ததும், வாங்குகிறவன் ஒரு கணம் துணுக்குற்றான். மடியைத் திறந்து பணம் எடுத்துக் கொடுத்ததும், “நல்ல ஆளப்பா நீ! பில் கொடுக்கிற இடத்திலே அருவாளையா வைக்கிறது? என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன்” என்றான் கேஷில் இருந்தவன்.

வேல்சாமிக்கு மறுபடியும் கூச்சமாக இருந்தது. முனிசிபல் ஆபிஸ் பிரமாதமாக வண்ண வண்ணப் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீரூற்றுக்கள் கூட நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று நிறம் நிறமாகப் பீச்சிக் கொண்டிருந்தன. வெளியிலே ஒரு நடைபாதை ஸ்டுடியோக்காரன் பிரம்மாண்டமான மூவர்ணக் கொடியைக் கட்டி வைத்து அந்தக் கொடியோடு சேர்த்துப் போஸ்ட் கார்டு சைஸ் படம் எடுத்துக் கொள்ள மூன்று பிரதிகளுக்கு இரண்டு ரூபாய்தான் என்று கூப்பாடு போட்டு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தான். வேல்சாமிக்கும் அப்படி ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசையாக இருந்தும், பணம் குறைவாக இருப்பது காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிட்டான். முனிசிபல் ஆபீஸைப் பார்த்து முடிக்கிற போதே ஒன்பதேகால் மணி ஆகியிருந்தது. சுதந்திர நாள் பூங்காவைப் பார்க்கப் புறப்பட்டான் அவன். முதல் சுதந்திர தினமான 1947 ஆகஸ்டு பதினைந்தாம் தேதிதான் இந்தப் பூங்காவை முனிசிபாலிட்டியார் இந்திய சுதந்திரத்தின் நினைவாக அமைத்தார்கள். இப்போது சுதந்திரத்துக்கும் இந்தப் பூங்காவுக்கும் இருபத்தைந்து வயதாகியிருந்தது. பூங்காவில் மரங்களில், செடிகளில், கொடிகளில் எங்கும் வண்ண வண்ண விளக்குகள் பளிச்சிட்டன. அந்தப் பூங்காவின் நடு மையமாக மகாத்மா காந்தி சிலையொன்று உண்டு. மிகப் பெரிய அந்தப் பூங்காவின் எல்லாப் பகுதிகளையும் சுற்றி, பார்த்து விட்டு வேல்சாமி காந்தி சிலை அருகே வரும் போது பத்து மணிக்கும் மேலே ஆகி விட்டது. சிலையைச் சுற்றி இருட்டாக இருந்தது. தட்டி, மூங்கிற்பாய் வைத்துக் கீழ்ப் பகுதியை மறைத்திருந்தார்கள். மேலே காந்தி சிலை இருட்டாக இருந்தது. வேல்சாமி துணுக்குற்றான். அவ்வளவு ஒளிமயமாகப் பூங்காவை அலங்கரித்தவர்கள் காந்தி சிலையை மட்டும் ஏன் இருளில் மூழ்க விட்டு விட்டார்கள் என்பது புரியவில்லை. பக்கத்தில் இருவர் அவனைப் போலவே சந்தேகப்பட்டு அதைப் பற்றி விவாதித்துக் கொண்டு போனது அவன் காதில் விழுந்தது.

“இப்ப இருக்கிற முனிசிபல் சேர்மனுக்கு இந்தச் சிலையைப் பிடிக்காது. அதான் இருட்டிலே தவிக்க விட்டிட்டாரு. ஏன்னா இது பழைய சேர்மன் காலத்துலே திறந்து வச்சது.”

“எந்த சேர்மன் திறந்து வச்சதானா என்ன? சிலை யாருதுங்கறதுதான் முக்கியமே ஒழிய யார் திறந்து வச்சாங்கங்கறதெல்லாம் முக்கியமில்லை. காந்தி சிலையை அலங்கரிக்காமே ஒரு சுதந்திர வெள்ளி விழா நடக்கலாமா?”

“நடக்கிறதே?”

மூன்றாவதாக எதிர்ப்பட்டவேறொருவர் இந்த இருவரின் பேச்சில் குறுக்கிட்டார். “சே! சே! நீங்க ரெண்டு பேருமே தப்பாச் சொல்றீங்க சிலையோட கீழ்ப்பாகம் உப்புப் பரிஞ்சி ரிப்பேர் நடக்குது. ரிப்பேர் முடியலை. அலங்கரிக்காததுக்கு அதுதான் மெய்யான காரணம். இதோ கீழே தட்டி போட்டு மூடியிருக்கிறதைப் பார்த்தாலே தெரியலை?”

அதில் எது உண்மை என்று வேல்சாமிக்குப் புரியவில்லை; எது உண்மையில்லை என்றாலும் காந்தி சிலை அப்போது இருட்டில் இருந்தது என்ற உண்மையை அவன் கண்ணாரக் கண்டான்.அவன் மனம் வேதனைப்பட்டது. ஐயனார் ஊருணி கிராமத்து முச்சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அவனும் மற்றக் கிராமவாசிகளும் வெள்ளிக்கிழமை தவறாமல் அகல் விளக்கு ஏற்றி ‘ரகுபதி ராகவ’ பாடுவது உண்டு; அந்த மரியாதை கூட இந்த முனிசிபல் காந்திக்குச் சுதந்திர தின வெள்ளி விழா நாளில் கிடைக்கவில்லை என்பதைப் பார்த்த போது அவன் மனம் கொதித்தான். நகரங்களில் காந்தியை மறந்து விட்டார்களா என்று கூடத் தோன்றியது அவனுக்கு. சுதந்திரதின வெள்ளி விழாவில், சுதந்திரநாள் பூங்காவில் காந்தி இருட்டில் கிடப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இரண்டாவது ஆட்டம் படம் பார்க்கும் எண்ணத்தை அவன் கை விட்டு விட்டான்.

உடனே அந்தப் பூங்காவிலிருந்து வெளியேறிக் கடை வீதிக்குப் போனான் அவன். இரவு பதினொரு மணிக்கு அவன் அங்கே மீண்டும் திரும்பிய போது, அவன் கையில் ஒர் அகல் விளக்கு எண்ணெய் நிரப்பப்பட்டுத் திரியிடப்பட்டு இருந்தது. அதை அவன் சிலையின் பீடத்தினடியிலே மூங்கில் தட்டி ஒரமாக வைத்து விட்டுத் தீப்பெட்டியை எடுத்துப் பற்ற வைத்தான்.

வேல்சாமியின் பின்னால் பூட்ஸ் சத்தம் கேட்டது. அவன் தீக்குச்சியைக் கீழே போட்டு விட்டுத் திரும்பினான். இரண்டு போலீஸ்காரர்களும் பார்க் வாட்ச்மேனும் நின்றனர்.

“ஏண்டா காலிப்பயலே காந்தி சிலைக்கு நெருப்பு வைக்கவா பார்க்கிறே? அப்பவே ‘வாட்ச்மேன்’ வந்து சொன்னான். ‘ஒரு ஆளு அருவாளும் கையுமா காந்தி சிலையைச் சுத்திச் சுத்தி வரான், பயமாயிருக்குது’ன்னு. நடடா ஸ்டேஷனுக்கு”

“இல்லிங்க எசமான், நான்...” வேல்சாமியை அவர்கள் பேச விடவே இல்லை. பிடரியில் கையைக் கொடுத்து ஒரு தள்ளுத் தள்ளினான் கான்ஸ்டபிள். காந்தி சிலையின் கீழே கும்பிடுவது போல் தலை குப்புற விழுந்தான் வேல்சாமி.

அவனுடைய நெற்றியில் காந்தி சிலை அடித்தளத்தின் சிமிண்டு விளிம்பு மோதி இரத்தம் கசிந்தது. அவனுடைய விளக்கத்தைக் காதில் ஏற்றுக் கொள்ளாமலே போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு போய், ‘காந்தி சிலையருகே நள்ளிரவில் அரிவாளும் கையுமாக வந்து நெருப்பு வைக்க முயன்றதாக’ச் சார்ஜ் ஷீட் எழுதி விலங்கு மாட்டி அவனை உள்ளே தள்ளினார்கள் போலீஸ்காரர்கள்.

வேல்சாமி சிறைக்குள் மெளனமாக அமர்ந்து கண்ணிர் சிந்திக் கொண்டிருந்த போது முனிசிபல் கட்டிடத்தின் வாசலிலிருந்து,

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோமென்று ஆடுவோமே..."

என்று ஒலிபெருக்கியின் மூலம் பாட்டு எழுந்து ஒலிக்கத் தொடங்கியது. இருண்ட சிறையின் மூலையில் ஒர் இந்தியக் கிராமவாசி விலங்கு பூட்டிய தன் கைகளோடு குத்த வைத்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அந்தச் சுதந்திர வெள்ளி விழா நாளில் அவன் மட்டுந்தான் தனியாக அழுதானா? இல்லை! பூங்காவின் இருளில் ஒர் உத்தமனின் சிலையுங்கூட அழுதிருக்கக் கூடும், கற்களுக்கும் அழும் சக்தி இருக்குமானால்,

(கலைமகள், தீபாவளி மலர், 1972)