நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஒரு கவி இந்த வழியாகத்தான் நடந்து செல்வான்

114. ஒரு கவி இந்த வழியாகத்தான்
நடந்து செல்வான்

காதல் பிறந்த பின் கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்களா அல்லது கடிதங்களைப் பரிமாறிக் கொண்ட பின்தான் காதலே பிறக்குமா என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது. அவளைப் பொறுத்த வரை கடிதம் பிறந்த பின்புதான் காதல் பிறந்தது. பனியும் இருளும் பிரியாத ஒரு மார்கழி மாதத்து வைகறையில் சாக்கடையும், அசுத்தமும் நிறைந்த தங்கள் வீட்டு முகப்பில் அவள் கீழே குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்த போது கோலத்தின்மேல் பூ உதிர்வது போல் அந்தக் கடிதம் உதிர்ந்தது. நிமிர்ந்து பார்த்தால் அவன் திரும்பி நோக்கிச் சிரித்து விட்டுப் போனான். அவனை அவளுக்குத் தெரியும். ஆனால் அவன் இப்படி ஒரு காரியம் செய்கிற அளவு துணிந்தவன் என்பது இதுவரை அவளுக்குத் தெரியாது. “கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுச் சினிமாவுக்குப் பாட்டு எழுதப் போகிறேன் பேர்வழியே என்று சுற்றிக் கொண்டிருக்கிறான்” என்று அவள் தந்தை ஒரு நாள் அவனைப் பற்றி அம்மாவிடம் தெருவைச் சுட்டிக்காட்டிச் சொல்லி விமர்சித்ததை அவள் கேட்டிருந்தாள்.

ஆனாலும் அவன் மேல் அவளுக்கு என்ன காரணத்தாலோ ஓர் அநுதாபம். அது அநுதாபமா, தாபமா, பரிவா என்பதெல்லாம் முதலில் அவளுக்குப் புரியவில்லை. ஒல்லியாக, சிவப்பாக, உயரமாக ஒளி மின்னும் கண்களும் கூரிய நாசியும், லெனின் தாடி போல் முகத்தில் குறுந்தாடியுமாக அவன் தெருவில் வரும் போதெல்லாம் தன் அறை ஜன்னல் வழியே அவள் அவனைப் பார்த்திருக்கிறாள். அப்படி அவனை அவள் பார்த்த இரண்டொரு வேளைகளில் அவன் பார்வையும் அவளைச் சந்தித்ததுண்டு. அதன் பின்புதான் ஒரு நாள் அந்தக் கடிதத்தை எழுதி அவன் அவளுடைய கோலத்தின் மேல் போட்டுவிட்டுப் போனான்.

“சாக்கடை நீரும் சேறும் சகதியுமான இந்தச் சந்தில் உன் தந்த நிறக் கைகளால் நாள் தவறாமல் கோலம் போட்டுப் பூப்பறித்து நடுகிறாயே, இதெல்லாம் யாருக்காக என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று நடுவாக ஒரு கேள்வி மட்டுமே எழுதியிருந்தது அந்தத் தாளில் அதை ஒரு கடிதம் என்று கூடச் சொல்ல முடியாது. கையெழுத்து இடப்படாதது எப்படிக் கடிதமாக முடியும்! மறுநாள் அவளும் அதேபோல ஒரு தாளை எடுத்து அதில்: “ஒரு கவி நடந்து போகிற பாதையை அலங்கரிக்க வேண்டாமா? அதனால் தான் நாள் தவறாமல் கோலம் போடுகிறேன்” - என்று எழுதி மடித்துக் கோலப் பொடி டப்பாவில் எடுத்துச் சென்று அவன் அந்தப் பாதையாக வரும் போது அவன் பார்வையில் படும்படி கோலத்தின் மேல் வைத்தாள். அவனும் சிரித்தபடியே குனிந்து, கவனமாக அதை எடுத்துக் கொண்டு போனான்.

அதற்கு அடுத்த நாள் காலையில் மீண்டும் அவன் ஒரு துண்டுத் தாளில் ‘ஒரு கவி நடந்து போகும் தெருவைச் சாக்கடையும் சேறும் சகதியும் அலங்கரிப்பதை விட அதிகமாக நீ அலங்கரித்து விட முடியும் என்றுகூட நினைக்கிறாயா?’ என்று எழுதிப் போட்டு விட்டுப் போனான். இதற்கு என்ன பதில் எழுதுவதென்று அவளுக்குத் தெரியாததால், அவள் ஒன்றும் எழுதவில்லை. மறுநாள் காலை அவளுடைய கோலத்தையே பார்த்துக் கொண்டு தெருவில் நடந்து வந்து அவன் ஏமாந்து போனான்.

அதற்கு அடுத்த நாளன்று அவன் அவளுக்காக எழுதிப் போட்ட துண்டுத் தாளில், ‘தெருவில் எழுத நேரம் இருக்கிறதே; எனக்கு எழுத நேரம் இல்லையா, மனம் இல்லையா?’ என்று இருந்தது.

“தெருவில் எழுதுவதே உங்களுக்காகத்தான். ஒரு இளங்கவி நடந்து போகும் பாதை இது! இதைச் சூனியமாக விட்டுவிடக் கூடாதென்றுதான் நான் கோலமே போடுகிறேன்” என்று அதற்குப் பதில் எழுதி மடித்து அவனை அடையச் செய்தாள் அவள.

நாலைந்து நாள் கழித்து ஒரு நாள் இருந்தாற் போலிருந்து வீட்டுக் கூடத்தில் அப்பாவும் அவனும் பேசிக் கொள்ளும் குரலைக் கேட்டு எட்டிப் பார்த்தாள் அவள். அவள் பார்க்கும் போது அப்பா அவனுக்கு ஏதோ அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். “இதோ பார் ரகு! நீ படிப்பைப் பாதியிலே நிறுத்தினது எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. கனவுலகத்திலே வாழ முடியாது. நீ இன்னும் கொஞ்சம் ‘ப்ராக்டிகலா’ இருக்கணும். இந்தக் கவிகள் மகாநாடு, இலக்கியக் கூட்டம், இதையெல்லாம் வேற யாராவது வசதியா இருக்கறவங்ககிட்டே விட்டுடு”

“வசதியாயிருக்கறவங்க இதையெல்லாம் எங்கே மாமா கவனிக்கிறாங்க? உங்க மாதிரி என் மாதிரி இந்தச் சாக்கடைச் சந்திலே குடியிருக்கிற மத்தியதர வர்க்கம்தான் வீட்டுக் கவலைகளோடு இந்தக் கவலையையும் சேர்த்துப்பட வேண்டியிருக்கு”

“நல்லாப் பேசறே நீ! இத்தனை சாமர்த்தியமும் தொடர்ந்து மேலே படிக்கிறதுக்குப் பயன்பட்டிருந்தால், நான் சந்தோஷப்படுவேன். உனக்குப் படிக்கணுங்கற ஆசை ஏன் இல்லே? இப்ப என் பெண் ராஜி இருக்கா, அவ படிப்பை நான் எஸ்.எஸ்.எல்.ஸி.யோட நிறுத்திட்டேன். ஏன்னா என்னிக்கிருந்தாலும் அவள் கல்யாணமாகி இன்னொருத்தன் வீட்டுக்குப் போகப் போறவள். நீ அப்பிடி இல்லை பாரு? உங்க அப்பா இன்னும் ரெண்டு வருஷத்திலே ரிடையர் ஆயிடுவார். அதுக்குள்ளே நீ ஒரு வேலைக்குப் போகலேன்னா உங்க குடும்பம் கஷ்டப்படும்.”

“உலகமே ஒரு பெரிய கஷ்ட ஜீவனக் குடும்பம்தான் மாமா! அதை நினைத்துக் கொண்டே நாம் ‘வீப்பிங் பிலாஸபி’ அதாவது அழுகுணிச் சித்தர் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.”

இந்த இடத்தில் தன் அறையிலிருந்தபடியே அவனுக்காக ஒரு கரகோஷமே செய்யலாம் போலிருந்தது ராஜிக்கு அவன் பயப்படாமல் எதிர்த்துப் பேசினான். வயது. மூப்பு என்று தயங்காமல் மனத்தில் பட்டதை எல்லாம் பளிச் பளிச்சென்று சொல்லி அப்பாவை மேலே பேசவொட்டாமல் திணற அடித்துக் கொண்டிருந்தான் அந்தக் கோபக்கார இளங்கவிஞன்.

அவன் பேச்சைக் கேட்கக் கேட்க ராஜிக்குக் கூடத் துணிச்சல் வந்தது. மெதுவாகத் தன் அறையிலிருந்து நழுவிச் சமையலறைக்குப் போய், “ஒரு காபி கலந்து குடும்மா! இந்த அப்பாவுக்குக் கொஞ்சம் கூட இங்கிதமே தெரியலை. இத்தனை நாழியாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, ‘ஒரு காப்பி சாப்பிடேன்’ என்று சொல்கிறாரா, பாரேன்!” என்று அம்மாவிடம் சொல்லிக் காபி கலந்து வாங்கிக் கொண்டு போய் அப்பாவுக்கும், அவனுக்கும் நடுவிலிருந்த ஸ்டூலில் வைத்து விட்டு அவனை நோக்கி இரகசியமாக அவனுக்கும் மட்டும் புரியும் அர்த்தத்தில், ‘இந்த வீட்டில் உன்னை மதிக்கவும் உனக்காக உருகவும் உனக்காக ஏங்கவும்கூட ஒரு ஜீவன் இருக்கிறது’ என்று புன்னகை மூலம் புலப்படுத்தி விட்டுத் திரும்பினாள் ராஜி.

மறுநாள் அதிகாலையில் அவள் எதிர்பார்த்தது போலவே அவளுடைய கோலத்தின் மேல் அவன் மடித்துப் போட்ட தாள் விழுந்தது.“நாளைய உலகத்துக்குக் காப்பியம் பாடப் போகும் எனக்குக் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்ததற்கு நன்றி. உன் கையால் காபி சாப்பிட்ட அதிர்ஷ்டமோ என்னவோ, நேற்று என்னுடைய பாடல் ஒன்று ஒரு படத் தயாரிப்பாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அடுத்த வாரம் ரேடியோவில் என் கவிதைகள் சிலவற்றை நானே சொல்லி விளக்கப் போகிறேன். ஞாயிறு இரவு எட்டேகால் மணிக்கு அதை நீ கேட்கலாம். கேட்க வேண்டும். கேட்டால் நான் சந்தோஷப்படுவேன்.”

அன்றிலிருந்து அடுத்த வாரம் என்பது ஞாயிற்றுக் கிழமையாகவே அவளுக்குள் மாறியிருந்தது. அடுத்த வாரத்திலிருந்து ஞாயிற்றுக் கிழமையைத் தவிர மற்ற எல்லாக் கிழமைகளுமே தொலைந்து தவிர்ந்து போய் விடக் கூடாதா என்று கூட அவள் எண்ணினாள். அந்த ஒரு வாரத்துக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை ஒன்றே கிழமையாயிருக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.

அந்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. ரேடியோ அடியிலேயே பழி கிடந்து அந்தக் கவிதைகளைக் கேட்டாள் அவள். அதில் ஒரு கவிதை தெருவில் கோலமிடும் பெண்ணைப் பற்றி இருந்தது. தன்னை நினைத்து அவன் அதை எழுதியிருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதில் ஒரு பாடலில் பல வரிகள் திரும்பத் திரும்பச் சொல்லி அவளுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன.

“ஞாலம் எழும் தனி வேளையிலே ஒரு
ஞாயிறு கிழக்கினில் முளைக்கையிலே
காலம்எனும் தேர்ச் சாலையிலே ஒரு
காலை புலர்ந்து புவி மலர்கையிலே

கோலம் இடும் பெண்ணிவள் கைகளினால்
கூட்டி இழுத்தே வரைகின்றாள்
நீலமுகில் தரு நீளவிசும்பிற் கதிரவனே
நீ வரவேணும் நீ வரவேணுமென்றே”

அவளோடு அமர்ந்து அதே கவிதையைக் கேட்ட அவள் தந்தை. “பயல் நன்றாகத்தான் பாடியிருக்கிறான். ஆனால் வயசுக்கு மீறின கற்பனை. இந்தக் காலத்திலே எல்லாமே இப்படித்தான் பிஞ்சில் பழுக்கிறதுகள்” என்றார். அவர். அவனை எவ்வளவுக்கு எவ்வளவு கிண்டல் செய்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவளுக்கு அவன் மேல் பிரியம் ஏற்பட்டது. மறுநாள்.அவள் அவனுக்கு எழுதினாள்.

“உங்கள் கவிதைகளை - உங்கள் குரலை ரேடியோவில் கேட்டேன். என்னைப் பற்றிக் கூடப் பாடினர்கள். அந்தக் கோலமிடும் பெண் நான்தானே?”

அவன் அவளுக்குப் பதிலும் எழுதினான்:“கோலமிடும் பெண் மட்டுமில்லை. என் கவிதைகளிலும், வாழ்விலும் எதிர்ப்படும் ஒரே பெண் நீதான். ஒவ்வோர் இளைஞனையும் யாராவது ஒரு பெண் கவியாக்கி விடுகிறாள். என்னை நீ கவியாக்கியிருக்கிறாய். உனக்குத் தெரியுமோ தெரியாதோ, ஜன்னல் வழியே தெரியும் பூர்ண சந்திரிகை போன்ற உன் குறுகுறுப்பான முகத்தை, கண்களை, இதழ்களை, புன்னகையை, கோலமிடும் கைகளை, நீ குனியும் அழகை, நிமிரும் நேர்த்தியை, அவ்வப்போது நேரும் அவயவங்களின் வனப்பை ரசித்து ரசித்தே நான் கவியானேன். நான் கவியாயிருக்கிறேன் என்பதை விட என்னுள் நீ கவியாக வந்து தங்கியிருக்கிறாய் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். உன்னால் எனக்குக் கவிதை வருகிறது. உன் அப்பாவால் என் கவிதைகள் போய் விடுகின்றன. ‘வாட்டர் ப்ரூஃப்’ கடிகாரம் என்பதுபோல் ‘கவிதை ப்ரூஃப்’ மனம் அவருக்கு.”

அவன் பாடல் எழுதிய அந்தப் படம் ரிலீஸானதுமே, அவள் போய்ப் பார்த்து விட்டு வந்தாள். டைட்டில்கள் காண்பிக்கும் போது அவன் பெயரையும் காண்பித்த போது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. அம்மாவும் அந்தப் படத்துக்கு அவளோடு வந்திருந்தாள். “வசந்தகாலத்துப் பின்னிரவுகளே, நீங்கள் மீண்டும் மீண்டும் வர வேண்டும்” என்ற அவனுடைய அந்த ஒரு பாட்டு மட்டுமே அந்தப் படத்திலேயே சிறப்பாக அமைந்திருப்பதாய் அதைப் பார்த்த போது அவளுக்குத் தோன்றியது. அந்தப் படம் ரீலீஸான மறு ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் யாரோ எதிர்பாராத விதமாக அவளைப் பெண் பார்க்க வந்தார்கள், சாதாரணமாக ஒரு மத்திய தரக் குடும்பத்துப் பெண் எப்படித் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள முடியுமோ, அப்படியே அவளும் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டாள். பெண் பார்க்க வந்தவர்கள் பாடச் சொன்னார்கள், பாடினாள். வந்தவர்களுக்கு அவளைப் பிடித்திருந்தது. தொடர்ந்து சில வாரங்களுக்குள் கல்யாணம் நிச்சயமும் ஆகிவிட்டது. அந்தக் கல்யாணம் நிச்சயமான பின் வீட்டில் அவளை அதிகம் வெளியே நடமாட விடவில்லை. கல்யாணத் தேதிக்குள் அவனை எப்படியும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவளுக்கு தினம் காலையில் கோலம் போட அவள் போக முடியாதபடி அம்மாவே முன்னால் எழுந்திருந்து வாசல் தெளித்துக் கோலத்தைப் போட்டு முடித்துக் கொண்டிருந்தாள். நடுவே ஒரு மூன்று நாள் அவள் கோலம் போடப் போக முடியாதபடி அறையிலேயே இருக்க வேண்டியதாயிற்று. கல்யாணத் தேதிக்கு இடையூறின்றி முன்கூட்டியே அவள் உட்கார்ந்ததில் அம்மாவுக்குப் பெரிய நிம்மதி.

அவள் குளித்த தினத்தன்று காலை அறையில் ஈரத்தலைக்குச் சாம்பிராணிப் புகை போட்டுக் கொண்டிருந்தாள். கல்யாண வேலைகளுக்காக ஒரு மாதம் ஆபீஸுக்கு லீவு போட்டிருந்த அப்பா பிரஸ்ஸிலிருந்து அச்சடிக்கக் கொடுத்திருந்த திருமணப் பத்திரிகைகளை வாங்கி வரப் போயிருந்தார். அம்மா தெருக்கோடியிலிருந்த கறிகாய்க் கடைக்குப் போயிருந்தாள். ஏனோ இன்னும் திரும்பவில்லை.

கால் மணி கழித்து அம்மா திரும்பி வந்த போது தற்செயலாக ராஜியிடம் அந்தச் செய்தியைச் சொன்னாள்.:

“ராஜி, சமாசாரம் தெரியுமோ? அந்தப் பிள்ளை ரகு - அதான் கவி கி.வி எழுதிண்டிருக்குமே, அது இன்னிக்குக் காலம்பர மெயின் ரோட்டில் ஏதோ யோசனையிலே பராக்குப் பார்த்திண்டே போயிருக்கு. பஸ் மோதி அங்கேயே உயிர் போயிடுத்தாம். ரொம்பக் கண்ணராவி. அவா வீட்டிலே ஒரே அழுகுரல். பால்யச் சாவோல்லியோ? யாருக்குத்தான் தாங்கிக்க முடியும்?”

அவள் இதயமே நின்று விடும் போலிருந்தது. நல்ல வேளையாக அவள் தலை விரிகோலமாக முகத்தை மறைத்துக் கொண்டு புகைகாட்டியபடி இருந்ததால் கண்களில் நீர் சுரப்பதை அம்மா பார்த்து விடாமல் மறைத்துக் கொள்ள முடிந்தது.

“அவா வீட்டு முன்னாலே தெருவே கூடியிருக்கு இன்னம் ஆஸ்பத்திரியிலேர்ந்து கொண்டு வரலியாம்.”

அம்மாவுக்கு அவள் பதிலே சொல்லவில்லை. அவளையும் மீறி ஒரு விம்மல் வெளியேறப் பார்த்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். கண்களில் நீர் மல்குவது மட்டும் நிற்கவே இல்லை. உலகின் வெளிப்படையான போர்வைகளும், மரபுகளும், கற்பிதங்களும் குறுக்கிட்டுத் தடுக்க முடியாத அவளுடைய உள்ளந்தரங்கத்தில் தான் அந்தக் கணமே விதவையாகி விட்டாற் போல் தோன்றியது. ஆம்! கல்யாணத்துக்கு முந்தியே விதவையாகிcவிட்டது போல உணர்ந்தாள் அவள். அந்த உணர்வை அவளால் அப்போது தவிர்க்க முடியவில்லை.

(சுதேசமித்ரன், தீபாவளி மலர், 1972)